பின்பற்றுபவர்கள்

27 அக்டோபர், 2012

டிவிட்டர் சுட்ட...தடா !


இராஜன் விவகாரம் ஊதி வெடித்தப் பிறகு டிவிட்டரில் முனைப்பாக செயல்பட்ட டிவிட்டர்கள் கணக்கை மூடிவிட்டு ஓடிவிட்டனர். எனக்கு நெருங்கிய டிவிட்டர்/பதிவர் ஒருவரிடம் கேட்டேன், 'இங்கே இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லைண்ணே அதனால் மூடிவிட்டேன்' என்கிறார், பெரும்பாலனவர்கள் டிவிட்டரில் ஆபாச மொழி நடை என்கிற பெயரில் குற்றம் சுமத்தப்பட்ட சாக்கில் கருத்து சுதந்திரத்தில் கை வைத்திருப்பதாகவே நினைக்கின்றனர்.  ஆபாச மொழி நடை என்பதன் மொழி நடையை வரையறுப்பதன் சிக்கல்களும், அவற்றின் மீதான தவறான புரிந்துணர்வுகள் ஆபாச மொழி நடைகளைவிட ஆபாத்தானவை என்கிற கருத்தாக்கம் வலுப்பெறத் துவங்கியுள்ளது, உதாரணத்திற்கு சென்னையில் வெகு சாதாரணமான மொழி நடை மற்றும் பதிவர் ஜாக்கி சேகர் பயன்படுத்தும் **த்தா என்பது கேட்பதற்கு ஆபாசம் என்றாலும் அதன் வீச்சு மிகக் குறைவு, தென் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சென்னைக் காரர் தன்னை **த்தா என்று திட்டிவிட்டார் என்று வருத்தப்பட்டால் அவரை வட்டார வழக்கு புரிந்துணர்வு அற்றவர் என்று தான் முதலில் புரிந்து கொள்ள முடியும், பிறகு தான் அந்த சொல் அவரை ஏன் காயப்படுத்தியது என்று ஆராய்ச்சிக்கு செல்ல முடியும்.

பார்பனர்களிடையே அன்றாடம் பயன்படுத்தப்படும் சூத்திரவா என்பதன் பொருள் மிகவும் கீழ்த்தரமான பொருள் கொண்டதாகவே சொல்லப்படுகிறது, சூத்திரன் என்றாலும் அடுத்த ஐந்தாம் பிரிவான பஞ்சமன் என்பதன் பொருளும் கிட்டதட்ட வேசி மக்கள் என்பதன் பொருள் கொண்டதாம், பார்பனர் ஒருவர் உங்களை சூத்திரன் என்று சொல்லாவிட்டாலும் தன்னைத் பிராமணன் என்று கூறிக் கொண்டாலே எதிரே உள்ளவர் பார்பனர் அல்லாதவர் அல்லது அவர் உங்களை மறைமுகமாக சூத்திரன் என்று வரையறுக்கிறார் என்றே பொருள், இதை உணர்ந்து தான் மொழி நடைகளில் பிராமணர் என்று சொல்லுதல் நல்லதற்கில்லை என்பதற்காகவே பாரதி போன்றோர் 'பார்பனர்' என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தி வந்தனர் என்பது கவனிக்கத் தக்கது. பொதுவெளியில் தன்னை பிராமணர் என்று பிரகடனப்படுத்திக் கொள்பவர் மற்றவர்களை சூதிரனாக சித்தரிக்கிறார் என்று குற்றம் சாட்டினால் அதற்கான எந்த விளக்கங்களும் ஏற்கத்தக்கதல்ல.

இந்தியாவில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா ? பிரபலங்களிடம் அவை இருக்கிறது, ஏனெனில் அவர்களை சட்டம் எந்த விதத்திலும் தண்டிக்காது, ஆளும் காங்கிரசை பாஜாகவினர் பாராளுமன்றத்தில் தேச துரோகிகள் என்று ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளின் குறியீடாகச் சொல்கின்றனர், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டது போலவும் தெரியவில்லை, சட்டமன்றத்தில் ஜெ கருணாநிதியை விமர்சிக்கின்றார், கருணாநிதி ஜெவை விமர்சிக்கின்றார் விஜயகாந்தும் ஜெ-வும் பலமுறை மேடைகளில் தனித் தாக்குதல்கள் நடத்திக் கொள்கின்றனர், இதற்கெல்லாம் எந்த அவதூறு வழக்குகள் கிடையாது, நன்றாக வாசிக்கக் கூடியவர் என்று சாதிய அடிப்படையில் கருணாநிதியை கிண்டல் அடித்தவர் தானே இளங்கோவன், இவையெல்லாம் மேடை நாகரீகமாகவும், அரசியல் ரீதியான கருத்து சுதந்திரமாகப் பார்க்கப்படுவதை செய்தித்தாள்களின் படிக்கும் எவரும் தமக்கும் அந்த உரிமை இருப்பதாக நினைத்து கொண்டு இருக்கின்றனர், அரசியல்வாதிகள், திரைப்படத் துறையினர் பற்றிய அன்றாட அநாகரீக விமர்சனங்கள் என்றும் நடக்கத்தான் செய்கிறது, ஆனால் அவற்றை எழுத்து சாட்சியாக இணையங்களில் செய்யும் பொழுது பிரபலங்களின் மீதான மானப் பிரச்சனையாக ஓட்டு எந்திரங்கள் தண்டிக்கப்படுகின்றனர். இத்தகைய தண்டனைகள் காயம்பட்டவர்களுக்கான வலி நிவாரணியா என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை, இத்தகைய ஆபாசத்தாக்குதல்கள் பெருங்கடலில் விழுந்த காக்கையின் எச்சம் போன்று கரையக் கூடியது என்றே அவர்கள் உணர்ந்திருந்தாலும் சாமனியனுக்கு பெற்றுத்தரும் தண்டனைகள் தனது ஆளுமையைப் பற்றி பயம் கொடுக்கச் செய்யும் என்றே நம்புகிறார்கள். 

இணையத்தளங்களில் ஆபாசங்களுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டுமென்றால் ஜெயமோகனை கீழ்தரமாக, ஆபாசமாக எழுதும் சாரு போன்றவர்களும் விதி விலக்குகளாக இருக்க என்ன இருக்கிறது. ஆனால் அதே சாருவே இதுபற்றி மாற்றுகருத்தாக இணையங்களில் ஆபாசம் தண்டனைக்குரியது என்று திருவாய்மலர்கிறார், ஆக இவர்களின் ஆபாசம் குறித்த அலறல்கள், சாதரணவர்கள் பிரபலங்கள் மீது செய்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை  மற்றும் மறைமுக மிரட்டல்களாகவே  நினைக்க முடிகிறது.

எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் பற்றிய எல்லைகளை அதிகார வர்க்கம் முடிவு செய்யும் நிலையில் அவைப்பற்றிய அடிப்படை புரிந்துணர்வு இல்லாமல் எழுதிவிட்டு கருத்து சுதந்திரத்தில் கைவைத்தாக நாம் புலம்புவது பொருளற்றதாகவே உள்ளது. பெண் சுதந்திரம் என்பது ஆண்வர்க்கம் விருப்பப்பட்டு இடும் பிச்சை என்று பலர் நினைப்பது போல் எழுத்து சுதந்திரம் என்பவை அதிகார வர்க்கம் கண்டுகாணாமலும் விட்டு வைத்திருக்கும் பிச்சை என்று தான் நினைக்க முடிகிறது.  எழுத்து சுதந்திரத்தின் எல்லைகள் பற்றி எந்த ஒரு கருத்தும் வரையறுக்கப்படாத நிலையில் டிவிட்டர்கள் கணக்கை மூடிவிட்டுச் செல்வது வரவேற்க்கத் தக்கது தான்.

பிரபலத்தை எதிர்ப்பது குற்றம், ஆபாசமாகப் பேசுவது குற்றம் இதற்காக சிறைச் சாலைக் கதவுகள் திறந்தே இருக்கும்  பிரபலத்தை எதிர்க்க மற்றொரு பிரபலமாக இருக்க வேண்டும் இங்கு தகுதிகள் தான் எதிர்பவரையும் எதிர்க்கப்படுவரையும் முடிவு செய்கிறது. 

23 அக்டோபர், 2012

ராஜன்லீக்ஸ் செய்த தவறு !


பிரபலங்கள் டிவிட்டுகிறார்கள், பேஸ்புக்கில் இணைந்திருக்கிறார்கள் என்றெல்லாம் அவர்களை பாலோ செய்யும் வழக்கம் எனக்கு இல்லை, தொலைகாட்சி மற்றும் செய்தி ஊடகங்களுக்கு பிரபலங்களின் கருத்து முக்கியமானதாக இருக்கலாம், ஊடகங்கள் பிரபலங்களின் பின்னால் செல்லட்டும், நமக்கு தேவை நம்மைப் போன்றவர்களின் கருத்துகள் எத்தகையது என்று அவர்களிடம் நம் கருத்தை பகுர்ந்து கொள்ளலாம் என்பதால் தான் வலைப்பதிவில் எழுதுவதை விருப்பத்துடன் பொழுது போக்காகவும் செய்துவருகிறேன், வலைப்பதிவு போன்ற பொது ஊடகத்தில் கருத்து செல்பவர்கள் பிரபலங்கள் என்றாலும் அவர்களுடைய கருத்துகளுக்கு மாற்றுக் கருத்து முன்வைக்கப்படும் பொழுது அதை எதிர்கொள்வார்கள் என்ற மனநிலையில் பிரபலங்களைப் பின் தொடருவர்கள் பட்டியல் மிகப் பெரியது, அதற்கான பலனைத்தான் இராஜன் மற்றும் பிறர் எதிர் கொள்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது, 

சாமானியர்கள் காவல் துறையிடம் தங்கள் பிரச்சனைகளை முறையிட்டால் காது கொடுத்துக் கேட்டு நடவடிக்கை எடுக்க நேரமில்லாமல் இருக்கும் காவல்துறை பிரபலங்கள் முறையிட்டால் உடனேயே நடவடிக்கை எடுத்துவிடுமாம், எனக்கு தெரிந்து காவல் துறையினருக்கு ஊதியம் கொடுப்பது பிரபலங்கள் இல்லை, பொதுமக்கள் வரிப்பணம் தான் அவர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது, ஆனால் பிரபலங்களுக்கு சேவை செய்வதற்கு கொடுக்கும் முன்னிரிமையை மற்றவர்களுக்கு கிஞ்சித்துக் கொடுப்பதில்லை, எனவே வலைப்பதிவு அல்லது டிவிட்டர் போன்ற ஊடகங்களில் இடம் பெறும் பிரபலங்களைச் சீண்டுவது அல்லது எதிர்கருத்து சொல்வதெல்லாம் யோசித்து செய்ய வேண்டிய ஒன்றே நடந்த நிகழ்வு பாடமாக ஆக்கியுள்ளது.

"பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது." - சின்மயி

இட ஒதுக்கீடு குறித்து இவர் டிவிட்டரில் பகிர்ந்த தனிப்பட்ட கருத்துகளுக்கு இவர் வருத்தம் தெரிவித்தது போலவும், இட ஒதுக்கீடு குறித்து இவர் தவறாக விளங்கிக் கொண்டது போலவும் எந்தக் கருத்தும் இவரது விளக்கங்களில் இல்லை, மாறாக நீங்களும் அப்படித்தான் நினைக்கக் கூடும் என்றே எழுதி இருக்கிறார், இட ஒதுகீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்பட்டவர்களுக்கும் பிடிங்கிக் கொடுக்கப்படும் அல்லது பார்பனர்களிடம் அபகரிக்கப்பட்ட சொத்து போன்று தான் இவர்கள் கருத்து கொண்டிருக்கிறார்கள், இத்தகைய புரிந்துணர்வு உள்ளவர்களிடம் விவாதம் செய்வதும் பின் தொடர்வதனாலும் சமூகத்திற்கு என்ன பலன் ?  திராவிட இயக்கங்கள் காலம் காலமாக இது பற்றிப் பேசி வந்திருந்தாலும் பார்பனர்களின் எத்தனை பேர் இட ஒதுக்கீடு பற்றி சரியான புரிந்துணர்விற்கு வந்திருக்கிறார்கள், இராஜன் போன்றவர்கள் ஏன் இவர்களிடம் போய் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும் ? மாறாக முற்றிலுமாக புறக்கணித்திருக்கலாமே. தினமலர் போன்ற பார்பன ஊடகங்களைப் படிக்கும் பொழுது நமக்கு தேவையற்ற இரத்த அழுத்தம் ஏற்படலாம் என்று நான் அவற்றைப் படிப்பதை முற்றிலும் தவிர்த்தே வருகிறேன், வலைப்பதிவிலும், கூகுள் ப்ளஸிலும் பார்பனிய கருத்துகளைக் கொண்டிருப்பவர்கள் இணைந்திருந்தாலும் நான் அவர்களை பின் தொடர்வது கிடையாது,

சமூகத்தில் பெண்ணுக்கு எதிரான அதுவும் பெண் பிரபலமென்றால் உடனேயே நடவடிக்கை அரசு எந்திரங்கள் உண்டு, காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கைதி காவல் துறையினாலே பாலியல் வண்முறை செய்யப்படும் நாட்டில் தான் இத்தகைய பெண் உரிமைகாவலர்களும் இருக்கிறார்கள் என்று நாம் பெருமைப் பட வேண்டும்.

பிரபலங்களை அதுவும் பெண் பிரபலங்களை பின் தொடர்ந்து சூடுபோட்டுக் கொள்ளாதீர்கள், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் இருக்கும் பொழுது அரசு எந்திரங்களை காவலாக வைத்திருப்பவர்களிடம் உங்கள் உரையாடல்கள் தேவை தானா ?

வலைப்பதிவில் பெண்கள் அதிக அளவில் எழுதுவது மகிழ்ச்சி அளித்தாலும் ஒரு பெண்ணாக நான் அசிங்கப்பட்டேன், ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துகிறார்கள் என்கிற பரப்புரைகள் உண்மையிலேயே பெண்கள் எழுதுவதை முடக்கிவிடும். எதாவது பிரச்சனை என்று வரும் பொழுது அதை எளிதாக திசைத் திருப்பும் ஆபத்தாக 'பெண்ணென்றும் பாராமல் என்னை இழிவு படுத்திவிட்டார்கள்' என்று உங்களை நோக்கிச் சொல்லப்படும் குற்றச் சாட்டுகளை உங்களால் எதிர்கொள்ள முடிந்தால் நீங்கள் பிரபல பெண்களின் கருத்துகளுக்கு எதிர்கருத்து சொல்லலாம்.

வலைப்பதிவில் கருத்து சுதந்திரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் பிரபலங்களிடம் விவாதம் செய்யாதீர்கள், இங்கு மருத்துவர் ருத்திரன் கூட மனநலமில்லாத மருத்துவர் என்று கிண்டல் செய்யப்பட்டார், மிகவும் கேவலமாகப் பேசப்பட்டார், இருந்தும் அவர் தன்னைப் போன்ற பிரபலத்தை கேவலப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் புலம்பியது போல் தெரியவில்லை, பொது ஊடகங்களில் மாற்றுக் கருத்து என்ற பெயரில் வசைச் சொற்கள் வழக்கமானது என்று தான் ருத்ரன் போன்ற பிரபலங்கள் நம்புகிறார்கள், திமுகவின் அழுகிய நாக்குகளான நன்னிலம் நடராஜனும் தீப்பொறி ஆறுமுகமும் பொதுவாழ்க்கைக்கு வந்த முதல்வர் ஜெ வைப் பேசாத பேச்சா ? 

வலைப்பதிவர் இராஜன் தனிப்பட்ட முறையில் பாடகி சின்மயியை தரக்குறைவாக பேசி இருந்தால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இவ்வாறு இல்லாமல் வெறும் கருத்து மோதல்களுக்காக இராஜன் தண்டிக்கப்பட்டால் பாடகி சின்மயியின் செயலுக்கு நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும், இராஜன் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்.

இது தேவையா இது தேவையா என்று எழவு விழுந்த வீடுபோல் அவரவருக்குள் பேசுவதை விட்டு வெளிப்படையான விவாதங்கள் நடத்தப்பட்டு. இது குறித்த ஸ்கிரீன்சாட்டுகள், டுவிட்டுகள் எல்லாம் வெளியே வந்தால் தான் உண்மை தெரியவரும். பிரபலத்தை எதிர்த்த ஒரே காரணத்தால் வலைப்பதிவர்கள், ட்விட்டர்களின் கருத்து சுதந்தரம் பறிக்கப்படுவதும். அவர்கள் முடங்குவதும் தான் முடிவு என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்

20 அக்டோபர், 2012

குக்குப் சதுப்பு நிலத் தீவு - 2 !


மனித வாழ்க்கையாக இருந்தாலும் தாவிரங்கள் உள்ளிட்ட ஏனைய உயிர்வகையாகட்டும் விதிவிலக்குகள் எதுவும் கிடையாது, வாழ்கை என்பது போராட்டம் தான் . தன்னை காப்பாற்றிக் கொள்வது சந்ததிகளைப் பெருக்கிக் கொள்வது தவிர்த்து உயிர்வாழ்க்கையில் பெரிய சாதனைகள் செய்வதற்காக எந்த உயிரும் உருவாகுவதில்லை, இதற்கு மேம்பட்டும் மனித வாழ்க்கையில்  வசதிகளின் தேடல், அதைப் பெருக்கிக் கொள்ளுதல், ஆளுமைகள், இருப்பதை இழக்கக் கூடாது என்பதில் செய்யப்படும் முன்னேற்பாடுகள்  இவற்றைச் செயல்படுத்தத் துனியும் தன்னலம் இவை மட்டும் தான் மனித வாழ்கைக்கும் ஏனைய உயிர் வாழ்கைக்குமான வேறுபாடுகள். எதிர்கால சேமிப்புகள் ஆகியவற்றில் எறும்புகள் உள்ளிட்டவை முனைந்து செயல்பட்டாலும் தலைமுறைகள் தாண்டி பயன்படுத்தும் சேமிப்புகளை மனித இனம் தவிர்த்து வேறெந்த விலங்கினமும் செய்வதில்லை. இனம்பெருக்கம் தன்னலம் தாண்டிய மறு உற்பத்தி என்ற அளவில் மனித இனத்திற்கும் ஏனைய உயிரினத்திற்குமான வேறுபாடுகள் வியக்க வைக்கும் அளவில் நடைபெறுகின்றன, ஏனைய உயிரினங்களில் இனப்பெருக்கம் என்பவை சூழல் பாதுகாப்புகள் உள்ளிட்டவையாகவும், அதனை கட்டுப்படுத்தும் திறனும் அதே சூழலில் அமையப் பெற்றதாகவும் உள்ளன, இனப்பெருக்கம் உற்பத்தி மிக பெரிய அளவில் நடக்கும் உயிரனங்களில் அதன் வாழ்நாள்கள் மற்றும் பாதுகாப்பு மிகவும் சொற்பமானதே, மாறாக நெடுநாள் வாழக்கூடிய உயிரினப் பெருக்கத்தின் உற்பத்தி திறன் குறைவாகவும், அதன் பாதுகாப்புகள் பலமிக்கதாகவும் இருக்கும், மனித வேட்டையாடலில் மறைந்து போன உயிரனங்கள் தவிர்த்து இந்த அளவுகோளில் ஏனைய உயிரன உற்பத்திகளை இயற்கை சமஅளவில் வைத்திருக்கிறது


*****


விசைப் படகில் எங்களைத் தவிர்த்து மற்ற மூன்று சுற்றுலாவாசிகள் மற்றும் படகு செலுத்துபவர், தீவிற்கும் கரைக்கும் இடைப்பட்ட தொலைவு முக்கால் கிமி  இருக்கும், செம்மண் நிற கலங்களான கடல் தண்ணீர், கரையை ஒட்டிய கடல் பகுதிகளிலும், கடலின் நடுப்பகுதிகளிலும் மீன் வளர்ப்பு தொட்டிகள் 1000க் கணக்கானவை அங்காங்கே அமைந்திருந்தது,  இறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன் வகைகளை வளர்த்து எடுத்து ஏற்றுமதி செய்கிறார்கள், கடல்நீருக்குள்ளேயே இவ்வாறு மீன் வளர்ப்பது அதன் சூழலில் வளரவிடுவது என்றாலும் அதற்கான இரைகள் போடப்பட்டுதான் வளர்க்கப்படுகின்றன,  மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு பல்வேறு உத்திகளை கையாள்கிறார்கள், இவ்வாறு வளர்க்கப்படும் மீன்களுக்கும், உரம் போட்டு வளர்க்கப்படும் பயிரினங்களுக்கும் உற்பத்தியைக் கூட்டுதல் விரைவாக அறுவடை செய்தல் ஆகியவை பொதுவானவை என்பதால் அவற்றின் சத்துகள் கேள்விக்குறிதான், எனினினும் தரையில் தொட்டிகள் அமைத்து வளர்க்கப்படும் மீன்களைவிட இவை கூடுதலான சத்துகள், செரிவுகள் கொண்டவகையாக இருக்கக் கூடும்.


தீவுப்பகுதியின் கரைப்பகுதி அடர்ந்த மரங்களால் நிறைந்திருந்தது, அங்கே நாரைகள் பல அமர்ந்திருந்தன, சதுப்பு நிலக்காடுகள் அமைந்தப் பகுதிகளில் நாரைகளுக்கு உணவுக்கு கிடைக்கும் மீன்களுக்கு குறைவு இருக்காது என்பதை உணர்த்தும் படி ஏகப்பட்ட நாரைகள், அதன் கரகர கீச் கீச் ஒலி கேட்டுக் கொண்டு இருந்தது, படகு தீவின் முகப்படை அடைந்ததும் இறங்கினோம், திரும்பி வரும் பொழுது அலைபேசியில் அழைத்தால் வந்து அழைத்துச் செல்வதாக படகோட்டி   அங்கு ஒட்டப்பட்டு இருந்த எண்களைக் காட்டினார், தீவு முகப்பில் நுழைவுக் கட்டிடம், 'ஜோகூர் மாநிலத்தின் தேசிய பூங்கா என்ற பொருளில் அறிவுப்புடன் நுழைவாயில், உள்ளே சென்றால் தீவிற்குள் நுழைவுக் கட்டணம் செலுத்தி பின்னர் செல்ல வேண்டும், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு 25 ரிங்கிட்டும், உள்நாட்டினருக்கு 5 ரிங்கிட்டும் கட்டணம் வாங்குகிறார்கள், நண்பர் மலேசியவாசி என்பதால் 10 ரிங்கிட்டுக்கு இரண்டு நுழைவுச் சீட்டுகளைப் பெற்று வந்தார், அந்த தீவின் முகப்பு கட்டிடமே கடல் தண்ணீரினுள் தான் அமைக்கப்பட்டிருந்தது, சுற்றுலா வளர்ச்சிகாக பல மில்லியன் ரிங்கிட்டுகளை செலவிட்டு அரசாங்கம் பல வசதிகளை செய்து தந்திருப்பதாக நண்பர் குறிப்பிட்டு இருந்தார், 

கட்டிடத்தை பின்வாசல் வழியாகக் கடக்க, தீவின் நுழைவாயி, ல் அதன் பிறகு வழியாக மரப்பாலங்கள் தான் தென்பட்டன, 1 1/2 மீட்டர் குறுக்களவில் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட பாதைகள் தான் போடப்பட்டிருந்தன, நேராக ஒரு வழி தொடர்ந்து செல்ல அதன் இடையே 200 மீட்டர் தொலைவில் நான்கு மாடி உயரக் கோபுரம்,. அதன் உச்சியில் இருந்து அங்கே ஓடும் சதுப்பு நில ஆற்றைக் கடந்து அடுத்துப் பகுதிக்குச் செல்லும் தொங்கு பாலம், டவரில் கழிவறை வசதிகள் இருந்தன,  தொங்கு பாலத்தில் மூவருக்கு மேல் நடந்து செல்லக் கூடாது, அவர்கள் கடந்த பின்பு தான் அடுத்தவர்கள் செல்ல வேண்டும் என்ற அறிவிப்புகள் இருந்தன, தொங்கு பாலத்தில் ஏறினேன்,  நம் எடைக்கும் காற்றுக்கும் ஏற்றபடி கொஞ்சம் ஆட்டம் தான், புகைப்படம் எடுக்கும் பொழுது செல்பேசி தவறி விழலாம் என்பது தவிர்த்து அந்த ஆட்டம் ஒன்றும் பயமுறுத்தவில்லை. அடுத்தப் பகுதி கோபுரத்தை அடைந்து கீழே இறங்க இன்னொரு மரப் பாலப் பாதை சற்று வளைந்து சென்றது.

அந்தப் பகுதிகள் முழுக்க முழுக்க சதுப்பு நிலக் காட்டு மரவகைகள் இருந்தன, அவற்றின் வேர்கள், வேர்கள் கிளைத்த மரங்கள், கடல் நீர் ஏற்ற இரக்கம் இந்தப் பகுதியில் எப்படி இருக்கும் என்பதன் அளவுகோலாக இருந்தன,  சதுப்பு நிலத்தில் வாழும் தவளை இனம் போனறு கால்கள் உடைய  மீன்வகைகள், நண்டுகள், இவைகள் பெரும்பாலும் தண்ணீரிலும் ஈரத்தரையிலும் வாழக்க் கூடியவை, அடந்த நிழல்களும், சேற்று நீரின் குளுமையும் மிகவும் இனிமையாக இருந்தது, ஒரு 200 மீட்டர் நடந்த பிறகு ஒரு மரப் பாலம் வழியாக முன்பு துவங்கிய வழியை குறுக்காக அடையும்  இடம் இருக்கிறது, அங்கே துடுப்பு ஓடங்கள் இருந்தன, வெள்ளம் பெருகும் நாள்களில் அந்த காட்டினுள் சுற்றுலா படகு பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளாக அவைகள் இருந்தன, நாங்கள் சென்றது செவ்வாய் கிழமை என்பதால் எங்களையும் சேர்த்து ஐவர்  மட்டுமே தீவுக்குள் இருந்தோம், எங்களுடன் வந்த மற்ற மூவர் எங்களைப் பின் தொடரவும் இல்லை, தீவின் நடுப்பகுதிக்குச் செல்லும் மரப்பாதைக்கு வந்தோம், குரங்குகள் பல இருந்தன, எல்லாம் கொஞ்சம் பயந்தது போல் நம்மைப் பார்த்து விலகியே சென்றன, பாலி  தீவு குரங்குகள் போல் எதையும் தட்டிப் பறிக்க முயற்சிக்கவில்லை.


கொஞ்சம் தூரம் நடந்த பிறகு இயற்கை ஆர்வலர்கள் அவ்வப்போது அங்கு வந்து மரங்களை நட்டுப் பாதுகாக்கும் இடங்கள் பல இருந்ததைப் பார்க்க முடிந்தது, இங்கே எதற்கு வந்து நட வேண்டும், இயற்கையாகவே அவை வளருகின்றன அல்லவா ? சதுப்பு நில மரவகைகள் 100க் கணக்கானவை உண்டு, அவற்றின் இனப்பெருக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான், மரத்தில் முருங்கைகாய் போன்று நீளமாக ஆனால் பட்டை பட்டையாக இல்லாமல்  10 செமி விட்டத்தில் ஒரு சற்று கூறிய முனையுடன் அடிக் குச்சி  தண்டு காயாகவும்  அதன் மேல் முனை மொட்டுப் பகுதிகள் மரத்தில் தொங்கி வளர்ந்து வருகின்றன, அவை நீளமாக இருந்தாலும் உறுதியானவை கிடையாது, உடைத்தால் எளிதில் உடையும், குரங்குகள் பறித்து அந்த காய்களை கடித்து உண்ணுகின்றன,  மரம் சுமார் 20 அடி உயரும் பொழுது காய்க்கத் துவங்குகின்றன, மரங்கள் 100 அடி வரை வளர்க்கின்றன, குரங்குகள் தவிர்த்து வேறு எதுவும் அந்த காய்களை உண்ணுவதாக தெரியவில்லை, காய்கள் முற்றிய நிலையில் காம்புகள் நைந்து போக காற்றடிக்கும் பொழுது அவை செங்குத்தாக கீழே விழுந்து சேற்றில் சொருகினால் அவை கீழ் பகுதி வேராகவும், மேல் பகுதி இலையாகவும் வளரும் வாய்ப்புகள் உள்ளன,  அவ்வாறில்லாமல் காய்ந்த சேற்றிலோ, வேரிலோ விழுந்தால் உடைந்துவிடும், செங்குத்தாக விழ போதிய எடை மற்றும் ஈரப்பதம் இருந்தாலும்  காற்றடிக்கும் பொழுது விழுவதால் செங்குத்தாக விழும் வாய்ப்புகள் மிகவும் அரிது,  எனவே இவ்வகை மரம் காய்க்கும் காய்களில் இருந்து இனப் பெருக்க வாய்ப்பு வெறும் 10 விழுக்காட்டு காய்களுக்குத் தான் கிடைக்கின்றனவாம், அவற்றிலும் அடந்த கருநிழலைத் தாண்டி வளர்ந்து வருபவை மிகக் குறைவு.  அந்த மரங்களின் அடர்வில் மீதம் 90 விழுகாட்டு விதைகள் முளைத்தாலும் வளர வாய்ப்பில்லை, வெறும் இரண்டு விழுக்காட்டு மறு உற்பத்திகள் தான் காய்கின்ற விதைகளில் இருந்து நடக்கின்றன,  அடர்வு குறைந்த பகுதியை சீர் செய்ய அந்த விதைகளை செயற்கையாகவே நட்டு வளர்த்து வேறு இடத்தில் வைக்கிறார்கள்.




சுமார் 600 மீட்டர் வரை உள்ளே மரப் பாதை செல்கிறது, அதன் முடிவில் 5 மாடி அளவுக்கு உயர்ந்த கோபுரம், சுற்றிலும் பார்வை இட அமைத்திருக்கிறார்கள், மரப் பாதைத் தவிர்த்து வேறு வழி இல்லாத இந்த இடத்தில் அந்த கோபுரமே அங்கு ஓடும் சதுப்பு நில ஓடை வழியாக படகுகள் மூலம் கட்டுமானப் பொருள்கள் கொண்டு வந்து கட்டி இருக்க வேண்டும் என்பது தவிர்த்து வேறு வாய்ப்பில்லை, கோபுரத்தின் மீது ஏறினோம், உலகில் இருக்கும் பெரிய சதுப்பு நிலக்காடுகளில் இந்த குக்குப் தீவும் ஒன்றாம், குக்குப் என்றால் தடுப்பு, அதாவது நில அரிப்பை தடுக்கும், மற்றும் சுனாமி அலைகள் உள்ளிற்றவற்றை இந்த தீவைக் கடந்து செல்லாது நிலப்பகுதியைக் காக்கும் தீவாம், உச்சியில் நின்று பார்க்க சுற்றிலும் மரங்களின் தலைகள், பச்சை தளைகள். நடுக்கடலில் நின்று பார்க்க சுற்றிலும் கடல் நீர் சூழப்பட்டது போல் இருப்பது போன்றே சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய வரை பசுமை பசுமை. அனை அனுபவிக்க ஏதுவாக குளிர்ந்த காற்று. அப்படியே அங்கேயே ஒரு அரை மணி நேரம் அமர்ந்திருந்தோம், 






அங்கே எங்களுடன் படகில் வந்த மூவரும் வந்து சேர அவர்கள் சேர்ந்து நிற்கும் நிழல்படம் எடுக்க உதவினோம், அவர்களும் எங்களுக்கு அவ்வாறே உதவினார்கள், பசி களைகட்டி திரும்பிச் செல்ல நச்சரிக்க கையில் கொண்டு சென்ற தண்ணீரில் கொஞ்சம் குடித்துவிட்டு கோபுரத்தில் இருந்து இறங்கினோம், திரும்பிச் செல்ல நடந்து கொண்டிருக்கும் பொழுது சட சடவென்று மழைக் கொட்டத் துவங்கியது, திரும்பவும் கோபுரத்தின் அடிக்கு வந்து மழை நிற்க காத்திருக்க, ஐந்து நிமிடத்தில் தூறல்களாக மாறியது, திரும்பவும் ஒரு 100 மீட்டர் நடந்ததும் பழையபடி இன்னும் பலத்த மழை, ஓட்டம் ஓட்டம் வேற வழியில்லை, ஒதுங்க இடமில்லை, 600 மீட்டர் ஓடினால் முகப்பு கட்டிடத்தை அடைய முடியும்,  முன்னே நண்பர் ஓட, பின்னே செல்பேசி நனைத்துவிடாமல் பாக்கெட்டில் போட்டு கையில் பிடித்துக் கொண்டு நானும் பின் தொடர்ந்து ஓடினேன். கொஞ்சம் உணவு பொருளோ அல்லது குடையோ எடுத்து வந்திருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. நடுவே ஒரு மரப்பாலத்தின் அருகே அமைந்த ஓய்வு குடிலில் சற்று நேரம் இளைப்பார மழை நிற்கவும், படகுத்துறைக்குச் செல்ல படகும் காத்திருந்தது ஏறி வந்து சேர்ந்தோம்,


பசிப் போக்க அதே சீனர் கடைக்குச் சென்றோம், அவர் சொன்னது போலவே வெஜிடேரியன் ப்ரைடு ரைஸ் எனக்கும், நண்பருக்கு நண்டு மற்றும் நூடுல்ஸ் உணவு, நான் நினைத்த அளவிற்கெல்லம கவுச்சி வாடை எதுவுமே அடிக்கவில்லை, மிகவும் தூய்மையாக, சுவையாக வெஜிடேரியன் ப்ரைட் ரைஸ் இருந்தது, அங்கே அந்த உணவு கிடைப்பது கொடுப்பினை தான், நண்பருக்கு நண்டை உடைக்க பாக்கு வெட்டி போன்ற ஒன்றையும் கொடுத்திருந்தனர், பொறுமையாக உடைத்து சாப்பிட்டார். அவர் சொன்னது போல் ரிலாக்ஸாக இருக்க வந்திருக்கிறோம், எதற்கு அவசரம் ? அதற்கான தேவையும் இருக்கவில்லை, 



பின்னர் கார் நிறுத்தும் இடத்திற்கு சென்று கடைபாட்டியிடம் மற்றொரு தண்ணீர் பாட்டில் வாங்கிவிட்டு கார் பார்த்துக் கொண்டதற்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம், ஏற்கனவே வழியில் பார்த்த ப்ழக் கடையில் சில பழங்களை வாங்கிவிட்டு ஜோகூர் வந்து சேர்ந்தோம்.

*****

குக்குப் தீவுக்குச் சென்று வர ஜோகூரில் இருந்து பேருந்துகள் உண்டு, நாள் ஒன்றுக்கு 2 - 4 பேருந்துகள் வரை இருக்கலாம், கட்டணம் தொலை அடிப்படையில் பார்க்க 10 ரிங்கிட்டுகள் வரை இருக்கும், கடற்கரை கிராமம், கடலில் படகு பயணம், இயற்கை வளமாக அமைந்த சதுப்பு நிலக் காடுகள், புகைப்படம் எடுப்பது இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள்,  கடலுணவு விருப்பர்கள், சென்றுவரலாம் ஒரு நாள் போதுமானதாகும். விடுதிகள் கூட அங்குண்டு.

18 அக்டோபர், 2012

குக்குப் சதுப்பு நிலத் தீவு - 1 !

சீனர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்வது அவ்வளவு எளிதன்று, இதுவரை நீண்ட நாள் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன், அதில் மிகவும் நெருக்கமாக பழகியவர்கள் வெகுசிலரே, மற்றவர்கள் அலுவலகம் விட்டுச் சென்றதும் மறந்துவிடுவார்கள், சீனர்கள் நட்புலகம் அலுலகம் தாண்டியதாக இருப்பதும் குறைவே, சனி-ஞாயிறு இல்லத்தினருடன் செலவிடும் நாள் என்பதில் தெளிவாக இருப்பார்கள், மற்றபடி அலுவலகம் தாண்டிய தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு அழைத்தால் வருவார்கள், நெருங்கிப் பழகுதல் என்பது என்னைப் பொருத்த அளவில் அலுவலகம் தாண்டியும் சேர்ந்து ஊர் சுற்றுவது, ரொம்பவும் எதிர்ப்பார்ப்புகள்: வைக்கமல் பழகக் கூடியவர்கள் கிடைப்பது அரிது என்ற நிலையில் அவர்களில் ஒரு சிலரை நட்புகளாகத் தொடர்வதும் மிக அரிதே, அந்த வகையில் ஓரிரு சீன நண்பர்கள் எனக்கு உண்டு, இல்லத் தகவல்களையும் பகிர்ந்து கொள்வார்கள், அப்படி கிடைத்த என் வயதை ஒத்த நண்பர் ஒருவருடன் பலமுறை ஜோகூருக்குச் சென்றுள்ளேன், பெரும்பாலும் அவரது பைக்கில் தான் பயணம், நண்பர் ஜோகூரில் கார் வைத்திருப்பவர் என்றாலும், அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி என்பதால் மலேசிய பதிவு எண் காரை சிங்கப்பூருக்குள் எடுத்துவர இயலாது, அனுமதியும் இல்லை. எனவே எங்களது பயணம் பெரும்பாலும் அவரது சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட அவரது பைக்கில் தான் இருக்கும், அவரும் காரை மாற்றி புதுகார் வாங்கியது முதலாக என்னை என்றாவது ஒரு நாள் அதில் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சென்றவாரம், தனது மேலாளர் வெளிநாடு செல்லும் பொழுது மருத்துவ விடுப்பு எடுத்துவிட்டு என்னை காரில் கூட்டிக் கொண்டு ஒரு தீவுக்குச் சென்றுவரலாம் வாக்களித்திருந்தார்,  சொன்னபடியே நானும் திங்கள் காலை 10 மணிக்கு ஜோகூர் சோதனை சாவடிகளை கடந்து காத்திருக்க வந்து அழைத்துச் சென்றார்.


அவர் சொன்ன தீவின் பெயர் குக்குப் தீவு இதை ரோமன் எழுத்தில் KuKup Island என்றே எழுதியுள்ளனர், மலாய் அகராதிகளைப் பார்க்க தடுப்பு தீவு என்ற பொருளில் உள்ளது, ஜோகூர் நகரத்தில் இருந்து ஜோகூர் மாநிலத்தினுள்ளேயே சிங்கப்பூர் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் 80 கி.மீ தள்ளி அமைந்துள்ளதாம்,. நாம இன்னிக்கு ரிலாக்ஸாக இருக்க வந்திருக்கோம், எனவே காரை விரைவாக ஓட்டமாட்டேன் பொறுமையாகவே போவோம் என்று காரை பொதுவான வேகத்தில் ஓட்டினார், தென்படும் ஊர்கள் பற்றி தமக்கு தெரிந்த தகவல்களை சொல்லி வந்தார் இடை இடையே அலைபேசி அழைப்புகள் வர ஓரமாக நிறுத்திப் பேசிவிட்டு சுமார் 2 மணி நேரம் பயணம் செய்து தீவின் பகுதி அமைந்த கடற்கரை கிராமத்திற்குச் சென்றோம், விரைவுச் சாலை வழியாக அந்த இடத்திற்கு செல்ல முடிந்தாலும் எந்த தேவையும் இல்லாததால் ஊருக்குள் செல்லும் சாலை வழியாகத்தான் சென்றோம், போய் சேர பகல் 12 மணி ஆகி இருந்தது, , பேருந்து நிலையம் ஒட்டி கார்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு கடைக்கு முன்பு காரை நிறுத்தி பூட்டிவிட்டு, பூட்டு என்றதும் மலேசியாவில் காருக்கு இரண்டு பூட்டு போடுவார்கள், ஒன்று கார் சாவியை முடுக்கிவிடுவது, இரண்டாவது ஸ்டியரிங்கில் ஒரு குடை கைப்பிடி கொக்கி போன்று ஒன்றை மாட்டி இன்னொரு பூட்டும் போடுவார்கள் இல்லை என்றால் கார் நிறுத்திய இடத்தில் இருக்காதாம், அது தவிர காருக்குள் மடிக்கணிணி, அலைபேசி உள்ளிட்ட எந்த பொருளையும் வைத்திருக்கமாட்டார்கள், அப்படி வைத்துவிட்டு வந்து பார்த்தால் காருக்கு கண்ணாடியும் இருக்காது, வைத்தப் பொருளும் இருக்காது, நாங்கள் எடுத்துச் சென்ற கைப் பைகளையும், என்னுடைய கடவுச் சீட்டு உள்ளிட்ட வற்றையும் காரினுள் பின்பகுதி பொருள் வைக்குமிடத்து (டிக்கி) ரகசிய அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கே கடையில் தண்ணீர் வாங்கிக் கொண்டு காரைப் பார்த்துக் கொள்ளச் சொன்னோம், அங்கே வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் ஒப்பிட்டு சிரம் மேற்கொண்டு கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதாக கடைக்கார சீனப்பாட்டி சொல்ல,  கார் நிறுத்தும் கட்டணம் எதுவும் இல்லாமல் பாதுகாப்பிற்கும் இலவசமாகவே ஏற்பாடு செய்தாகிவிட்டது என்கிற நிம்மதியில் கடற்கரையின் முகப்பில் அமைந்த படகு வழி சோதனைச் சாவடிகளை நோக்கிச் சென்றோம், செல்லும் வழியில் இருபக்கமும் கடைகளும் வீடுகளும் இருந்தன, மேம்பட்டு வளர்ந்துவரும் ஒரு கிராமம், எனக்கென்னவோ வேளாங்கண்ணி நகர் அமைப்பை நினைவுபடுத்தியது, 

பேருந்து நிலையத்தை அடுத்து அமைந்த பகுதிகள் பெரும்பாலும் கடல் மீது கட்டப்பட்ட வீடுகளாகவே அமைந்திருந்தன, அவற்றின் நடுவே சாலைகளுக்காக மண் கொட்டி மேடுபடுத்தி சாலைகள் இட்டிருக்க வேண்டும், ஏனெனில் வீடுகள் அனைத்தும் மிதவை வீடுகள் போன்று தூண்கள் மீது தரைத்தளம் அமைத்து அதன் மீது கட்டியிருந்தனர், அடியில் தண்ணீர், சாலையின் இருபுறமும் உணவு விடுதிகள் பல்பொருள் கடைகள் இருந்தன, படகுத்துறை சோதனை சாவடி அருகே இடது பக்கம் அமைந்துள்ள கடலுணவு கடையில் காபி குடுத்துவிட்டு சாப்பாடு பற்றி விசாரித்தது, கொஞ்சம் வயதானவர் கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளராகவே இருந்தவர் 'தூய சைவ சாப்பாடு செய்துதருவேன், எங்க அண்ணன் அடிக்கடி இங்கே வந்து சாப்பிடுவார், அவரும் சைவம் தான்' என்று கூறி பாலை வார்த்தார், சுற்றிப்பார்த்துவிட்டு வந்து சாப்பிடுவதாக வாக்களித்துவிட்டு கடையை ஒட்டி அடுத்து அமைந்த குறுகிய மரச் பாதை  நடக்க அந்த பகுதி முழுக்க முழுக்க கடல் மீது கட்டப்பட்ட வீடுகள்.

அந்த குறுகிய மரப்பாதைகள் கிளைகளாக பிரிந்து செல்ல செல்ல அங்கங்கே வீடுகள் பல  காங்க்ரீட் தூண்கள் மீதும் சில மரத் தூண்கள் மீதும் கட்டப்பட்டு இருந்தன, நண்பர் சொன்னார், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் வந்த பொழுது பெரும்பாலும் மரவீடுகள் தான் இருந்தனவாம், உள்ளே ஒரு அரை கிமி நடந்தோம், மூன்றடுக்கு சீன ஆஞ்சநேய கோவில் ஒன்று உள்ளே இருப்பதாகவும், அதன் மாடியில் ஏறிப்பார்க்க அந்தப்பகுதி முழுவதும் தெரியும் என்றார், அவர் சொன்ன கோவிலை அடைந்தோம், அதுவும் தூண்கள் மீது கட்டப்பட்டு இருந்தது. கழிவறை வசதிகளும் இருந்தன, முன்பெல்லாம் அங்குள்ள வீடுகளின் கழிவுகள் அனைத்தும் கடலுக்குள் நேரடியாக சங்கமிக்க உடல் நலச் சீர்கெடு, நோய், கெட்ட வாடை ஆகியவற்றைக் கருத்தில்  அனைத்துவீடுகளின் கழிவுகளையும் குழாய் இணைப்புகளின் வழியாக கடலுக்கு வெளியே எடுத்துச் செல்கிறார்களாம், பின்னர் சுத்திகரிக்கப்பட்டு கடலில் கலக்கப்படுமா ? அல்லது கடலில் பிறபகுதிகளில் கொண்டு சென்றுவிடுவார்களா தெரியவில்லை, சீனக் கோவிலின் மூன்றாம் மாடியில் நின்று பார்க்க சுற்றிலும் கடலில் மிதப்பது போன்று வீடுகள், அதைத் தாண்டி கடல், அதன் பிறகு ஒரு தீவு. அந்த தீவு தான் குக்குப் தீவு என்று நண்பர் சொன்னார், அங்கே நாம் போகலாம், விசைப் படகில் போகவேண்டும் என்று சொன்னார், அந்தப்பகுதி கடற்கரைப் பகுதிகளுக்கே உரிய லேசான கவுச்சி வாடையுடன் இருந்தது, சுமார் 1000 வீடுகள் அமைந்திருந்தது, வீடுகளின் முடிவில் கடல் பகுதியில் பல்வேறு வகைப்படகுகள் நின்று கொண்டு இருந்தன.

இந்த ஊருக்கு வரும் வழியெங்கும்  வெற்றான நிலங்கள் பல இருக்க, இவர்கள் ஏன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள இந்த இடத்தில் அதுவும் கடல்மீது வீடுகட்டிக் கொண்டு இருக்க வேண்டும் ? காரணம் ஒன்றே ஒன்று அவர்கள் அனைவரும் கடல் சார்ந்த பல்வேறு தொழில் செய்பவர்களாக உள்ளனர், பெரும்பாலும் சிறு குழந்தைகள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைத்தான் பார்க்க முடிந்தது, மற்றவர்கள் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். அங்கிருக்கும் மர வழிகளில் கைப்பிடி அல்லது பாதுகாப்பு தடுப்புகள் கிடையாது, ரொம்பவும் அநாயசமாக சைக்கிளிலும் பைக்கிலும் உள்ளே வசிப்பவர்கள் சென்றுவருகிறார்கள், உள்ளே கார்களோ அல்லது கை வண்டிகளோ செல்ல வாய்ப்பே இல்லை, உள்ளே அங்கங்கே கடைகளும், சிறிய அளவிலான உணவு கடைகளும் உண்டு, அவை வசிப்பவர்களுக்கானது சுற்றுலா பயணிகளும் வாங்கலாம். பூட்டப்படாத வீடுகள்கள் பல இருந்தன, அங்கே வசிப்பவர்கள் தவிர்த்து வெளியாட்கள் வந்து திருடுவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் பொருள் பாதுகாப்புகளுக்கு அவர்களுக்கு பெரிய அறைகூவல் இல்லை, தரையில் இருக்கும் வீடுகள் போன்றே அனைத்து வசதிகளுடன் வசதிக்கேற்ப கட்டியுள்ளனர், சிலர் வீடுகளுக்கு முன்பே மலர் தொட்டிகளை வைத்துள்ளனர். நண்பர் சொன்னார், இந்த வீடுகள் எதையும் அரசு அங்கீகரிக்கவில்லை, அவர்கள் உரிமை கொண்டாடமுடியாது, ஆனால் அவர்களுகான மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை இணைத்து கொடுத்திருக்கிறது அரசு. கடல்மட்டம் கூடினால் இந்த வீடுகள் அனைத்தும் வசிக்க வாய்பில்லாதவீடுகள் ஆகிவிடும்.

பின்னர் சென்ற வழியை ஒரு சுற்று சுற்றி அடைந்தோம் திரும்பவும் துவங்கிய இடத்திற்கு வந்து சேர படகு துறை சோதனைச் சாவடி இருநதது, முன்பெல்லாம் சிங்கப்பூருக்கு இங்கே நேரடி படகுச் சேவை இருந்ததாம், தற்போது அந்த சேவையை நிறுத்திவிட்டார்கள், ஆனாலும் இந்தோனேசிய சுமத்திரா பகுதிகளுக்கு படகு சேவைகள் நடைபெறுகின்றனவாம், நாங்கள் அதன் வழியாக குக்குப் தீவுக்குப் போகத் தேவையில்லை, 


படகுதுறை சோதனையகம் வெளிநாட்டுப் பயணத்திற்கானது, பின்னர் குக்குப் தீவிற்கு எப்படிச் செல்வது ? சோதனைச் சாவடியின் இடதுபுறம் அமைந்த தனியார் படகுதுறை வழியாக தீவிற்கு கூட்டிச் செல்கிறார்கள், பயணம் ஒரு ஐந்து நிமிடம் தான், படகு கட்டணம் ? கூட்டத்திற்கேற்றாற்ப் போல, 10 சவாரி கிடைத்தால் ஆளுக்கு மூன்று ரிங்கிட், ஆனால் நாங்கள் படகுக்குச் செல்லும் போது யாரும் சுற்றுலாவிற்கு வரவில்லை, எனவே எங்களிடம் இரண்டு பேருக்கும் சேர்த்து மொத்தமாக 25 ரிங்கிட் கொடுத்தால் கொண்டு சென்று திரும்பவும் அழைத்துவருதாக உறுதி கூறினார்கள். பணத்தைக் கொடுத்துவிட்டு ஏறி அமர்ந்தோம், பின்னர் மேலும் 3 பயணிகள் வந்து சேர்ந்தனர், அவர்களிடம் படகுக்காரர் எவ்வளவு வாங்கினார் என்று தெரியவில்லை. படகு ஓடத்துவங்கியதும், படகு வந்தவழியில் திரும்பிப் பார்க்க  படகுத்துறை சோதனைச் சாவடி சிறிதாகிக் கொண்டு இருந்தது.


அந்த தீவில் என்ன தான் இருக்கும் ? பதிவு நீளம் கருதி அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.

16 அக்டோபர், 2012

மின்சாரம் இல்லைன்னா ?

இப்போதைக்கு ஏதோ டீசல் பெட்ரோல் வைத்து ஜெனரேட்டரைப் போட்டு மின்சாரம் இல்லாமல் செய்யும் வேலைகளை சமாளிக்கிறார்கள், எரிபொருளே இல்லை என்றால் மின்சார உற்பத்திக்கு வாய்ப்பே இல்லாத நிலையில்.

  • மின் தூக்கி இயங்காத நிலையில் ஒரு பயலும் அடுக்குமாடி வீட்டை வாங்க முன்வரமாட்டான்
  • மின்கலம் உற்பத்தித் திறன் ஆகியவை மின்சாரம் சார்ந்தே இருப்பதால் போதிய அளவுக்கு மின்கல உற்பத்தி செய்ய முடியாத நிலையில் அவற்றின் விலை உயர்வுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
  • காற்றாலை மற்றும் அனுமின்சாரம் ஆகியவை அடிப்படை வசதிகளுக்கே மட்டுமே வாய்ப்பு என்ற நிலையில் மிஸ்டு காலுக்கும் கட்டணம் என்றாகி  மிஸ்டு கால் கொடுப்பதற்கு மிகவும் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கும்,
  • பழையபடிக்கு வேப்ப மரக் காற்று தான் சிறந்த ஏசியாக இருக்கும்
  • சைக்கிள் விற்பனை படுஜோராக இருக்கும்
  • மாவாட்டும் வேலைக்கு நல்ல ஊதியம் கிடைக்கும்
  • மாட்டு வண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் வேலைக்கு மாடு குளிப்பாட்டும் தகுதி இருந்தால் போதும் என்று சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
  • மாடுமேய்க்கும் வேலையையோ, பன்றி மேய்க்கும் வேலையையோ யாரும் விமர்சனம் செய்யமாட்டார்கள்
  • குதிரை வண்டிகளை, ரிக்சாக்களை பழையபடி சாலையில் பார்க்கலாம்.
  • சாலைகள் எதுவுமே புதிதாகப் போடாமல், செப்பனிடாமல் கிடக்கும்
  • நான்கு குதிரை பூட்டிய வண்டிக்கு சொந்தக்காரர் பணக்காரன்
  • மின்சாரமே இல்லை என்றால் இணையமோ, இணைய இணைப்போ இருக்காது, பழையபடிக்கு கையெழுத்து படிவங்களாக செய்திகளுக்கு பகிர்ந்து கொள்ளப்படும்
  • மின்சாரம் சார்ந்து இயங்கும் பொறியல் துறையே முடங்கிவிட பட்டப்படிப்புகளைப் படிக்க யாருமே முன்வரமாட்டார்கள்
  • விவாசயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே தங்கும்
  • மனித வளத்தை சார்ந்திருக்கும் நாடுகள் பொருளாதார இழப்பை சந்திக்கும்
  • புனிதப் பயணம் செய்பவர்களுக்கு ஒட்டகம், குதிரை மாட்டுவண்டிகள் தான் ஒரே பயண நண்பன், இரண்டு ஆண்டுகள் கழித்து (போக வர) புனிதபயணத்தில் இருந்து திரும்பியதாக வந்து சொல்வார்கள்.
  • வீட்டுக்கு வீடு கிணறு தோண்டுவார்கள்
  • இயற்கை வளம் மிக்க நாடுகளை பலமிக்க நாடுகள் ஆக்கிரமிக்கத் துவங்குவார்கள்
  • சினிமா சார்ந்த தொழில்கள், தொலைகாட்சி ஊடகங்கள் முற்றிலுமாக செயல்படாது
  • பொழுது போக்குக்கு பழையபடி தெருகூத்து, பொம்மலாட்டம் களைகட்டத் துவங்கும்
  • பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அடிப்படைக் கல்வி தவிர்த்து வேறு படிக்க முன்வரமாட்டார்கள்
  • இல்லத்து ஆண்களின் துணித்துவைக்கும் வேலை கிண்டல் செய்யப்படாது
  • பலசரக்கு கடைகள், உணவு விடுதிகள் மட்டுமே நகரங்களில் வேலை வாய்ப்புள்ள நிறுவனங்களாக செயல்படும்
  • தண்ணீர் வரத்தும், ஓட்டமும் இல்லாத இடங்கள் பாலைகளாக மாறும்
  • வெள்ளைக்காரனையும், வெள்ளைத் தோலையும் பொறாமை கொள்ளத் தக்கது என்று எவரும் நினைக்கமாட்டார்கள்
  • வாழும் வாய்பிற்கு இனம் சார்ந்த குழுக்களே ஏற்பாடு செய்யும் என்ற நிலையில் இனம் சார்ந்து ஒன்று திரட்டல்கள் நிகழும்,
  • கோவில் மணி அடிக்கும் வேலைகள் ஆள் எடுப்பார்கள், கடுப்பேற்றும் மத வழிபாட்டு முழக்கங்களுக்கு ஸ்பீக்கர் இருக்காது
  • நெய்விளக்கும், ஆமணக்கு விளக்கும் தான் ஒளி உற்பத்திக்காக (பவர் சோர்ஸாக) இருக்கும் 
  • மின்சாரத்தை நம்பிய பெரு உற்பத்தி முற்றிலும் நின்று போக பட்டினிச் சாவால் மக்கள் தொகை மூன்றில் ஒரு பங்காக குறைந்து போகும்
  • பெட்ரோலுக்கே வழியில்லாத பொழுது ஏரோபிளேனுக்கு ஈத்தர் கிடைக்காது, பெரும் பாய்மரப் படகில் தான் நாடுவிட்டு நாடு பயணம்
  • நவீன மருத்துவ வசதிகள் அனைத்தையும் இழந்துவிடுவோம்
  • முடிந்த அளவுக்கு விமானப் பயணம் மற்றும் வாகனங்களை அனுசக்தி மூலம் இயக்க முயற்சிப்பார்கள், இதன் மூலம் அனுகதிர் வீச்சு, மற்றும் விபத்துகளும் மிகுதியாகும்.

நாம பகட்டு, வசதி என்று நம்பிக் கொண்டுருப்பவை நமது பொருளீட்டல் மற்றும் கல்வி சார்ந்தது மட்டுமே இல்லை, அவை எல்லாம் அறிவியல் கண்டுபிடிப்பான மின்சாரம் போடும் பிச்சையும் கூட. பெட்ரோலையும் மின்சாரத்தையும் நம்பி அம்மி கொத்துவது முதல் கைத்தரி நெசவு உள்ளிட்ட நேரடியாக செய்யும் தொழில்கள் அனைத்தையும் விட்டுவிட்டோம், நாளை மின்சார உற்பத்திக்கு வாய்பே இல்லாத நிலையில் பழைய வாழ்க்கைக்கு நம்மால் திரும்பிச் செல்லும் பொழுது கையறு நிலையில் தான் நாம் இருப்போம். தமிழ் நாட்டினர் தவிர்த்து வேறு எவரும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகி இருக்கமாட்டார்கள் என்ற நிலையில் தமிழினம் என்று வீழாது என்று இறுமாப்பு கொள்வோம். :)

எல்லாவற்றையும் கடவுள் படைச்சதுன்னு சொல்லும் முட்டாள்கள் உண்டு, நமக்கு தெரிந்து மின்சாரம் கடவுள் கொடுத்த கொடையன்று, மனித அறிவின் படிப்படியான வளர்ச்சியினால் கிடைத்த நன்மையே, மின்சாரத்தை கடவுள் படைக்காவிட்டாலும் அதைப் படைக்கும் ஆற்றல் உள்ள மூளையைக் கடவுள் தான் கொடுத்தார் என்று எடக்காகக் கூறினால் அதுக்கு முன்பு வாழ்ந்தவர்களை ஏன் இருட்டுக்குள்ளே கடவுள் இருக்கவிட்டார் நாம மட்டும் என்ன ஸ்பெசல் ?

கடவுள் கத்தியையும், துப்பாக்கியையும் வெடிகுண்டுகளையும், அனுகுண்டுகளையும் படைக்காத பொழுது மின்சாரத்தைப் படைத்ததாக மட்டும் பொறுப்பேற்றலாமா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்