வாழ்கையில் போலித்தனம் தேவையா ? என்பது பற்றிய கலந்துரையாடல். பொதுவாக எல்லோர் மனதிலும் செயலிலும் இருக்கும் ஒன்று பற்றிய கலந்துரையாடல் என்பதால் சுவையாக இருந்தது. சுயநல நோக்கில் நடந்து கொள்ளும் போலித்தனம், பிறரை பாராட்டுவதற்காக செயற்கையாக நடந்து கொள்ளும் போலித்தனம் பற்றியும் ஒருசாரரும், போலித்தனமே கூடாது என்பதாக மறுசாரரும் பேசினார்கள். செல்வேந்திரன் போலித்தனம் கூடாது என்கிற அணியின் சார்பாகப் பேசினார். அவர் பேசியதில் பல தகவல்கள் சிறப்பாக இருந்தாலும், கலந்துரையாடலுக்கு தொடர்பே இல்லாத ஒன்றைப் பற்றி குறிப்பிட்டு தொடர்பு இருப்பது போல் நினைக்க வைத்த அவரது பேச்சுத் திறமையைப் பாராட்டுகிறேன். அப்படி என்ன தொடர்பு இல்லாதது ?

"யுவான் சுவாங் யாரென்று தெரிகிறது, நமது முன்னோர்கள் யாரென்று தெரியவில்லை" - செல்வேந்திரன்
- வரலாற்றைத் தெரிந்து வைத்திருப்பதையும் பழம்பெருமை அறிந்து வைத்திருப்பதும் / அறியாமல் வைத்திருப்பதும் போலித் தனங்களுக்குள் எப்படி அடங்கும் என்றே தெரியவில்லை. வரலாற்றைப் பள்ளிப்பாடம் வழியாக பலவற்றை அறிகிறோம். முன்னோர்களைப் பற்றிய அறிதல் பொதுவான ஒன்று அல்ல, எனவே அதனை பள்ளிவழியாக அறியமுடியாது. மற்றும் முன்னோர்களைப் பற்றி அறிந்து என்ன செய்யப் போகிறோம் என்பது மிகப் பெரிய கேள்வி. நமக்கு முன்னோர்கள் அதாவது பாட்டன் பூட்டன் காலத்தில் ஆளுக்கு 2 / 3 மனைவி வைத்திருந்ததைத் தவிர்த்து பெரிய சாதனைகள் பண்ணி இருப்பது போல் தெரியவில்லை. எந்த ஒரு குடும்பத்திலும் ஒரு கிளையிலாவது முன்னோர்கள் மன்மதன்களாக இருந்திருக்கின்றனர். பழனி சித்தவைத்தியர் போல் குடும்ப மருத்துவம் பார்த்தவர்களாக இருந்தால் பேரன் சிவராஜ் சிபி வரை அறிந்து வைத்திருக்கலாம், தொழில் முறை குடும்ப சமூகங்கள் மாறி தற்போது படிப்பின் வழி தொழிகள் என எல்லோரும் மாறி வந்துவிட்டோம், இதில் பழம் பெருமையை நினைப்பதும், அவர்களின் பெயர்களை நினைவு வைத்திருப்பதும் ஒரு இளைஞர்களுக்கு என்ன பலன் தந்துவிடும் என்பது மட்டும் தெரியவில்லை.
மேலும் சந்தியாவந்தனத்தின் போது என் ஏழு தலைமுறைப் பெயரை என்னால் சொல்ல முடியும் ? உனக்கு உன் பாட்டன் பெயர் தெரியுமா ? என்று கேட்கும் பார்பனர்களின் கேள்விக்கும் செல்வேந்திரன் குறைபட்டுக் கொள்வதற்கும் பெரிய வேறுபாடு இல்லை (இது பற்றி முன்பு விவாதம் நடந்தது). எங்கள் பாட்டான் பூட்டன் காலத்தில் வர்றவங்களை வெளியிலேயே உட்காரவைத்து அப்படியே அனுப்புவோம், அதற்குத்தான் அக்ரகாரத் திண்ணைகள் கட்டப்பட்டது, எங்கள் வம்சம் நடந்தால் எதிரே வரும் தாழ்த்தப்பட்டவன் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு ஓரமாக நிற்பான்" என்று ஒருவர் தனது பாட்டன் பூட்டன் வரலாறுகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு "அதனை நான் பெருமையாக நினைக்கிறேன்" என்றும் சொன்னால், அவரை நோக்கி வீசப்படும் செருப்பு எதிரே நின்று கேட்பவனுடையதாகத்தான் இருக்கும்.
பழஞ் சமூகம் என்பது தவிர்த்து, தனிப்பட்ட பாட்டன் பூட்டன் காலத்துப் பழம் பெருமைகள் அனைத்தும் வீன் பெருமைகளாகவும், வரட்டு கவுரவங்களாகவுமே இருந்திருக்கும், "நான் குழந்தையாக தவழும் போது, படியில் இறங்கும் போது தடுக்கி கீழே விழுந்துவிட்டேன் உடனே தூக்க வந்த தலித் வேலைக்காரியை (பின்வாசல் வழியாக வந்து மாட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளிக் கொட்டுபவள்) எங்கள் தாத்தா "எப்பிடிடி என் பேரனை தொட்டுத் தூக்க வருவே" என்று எட்டி எட்டி காலால் உதைத்தார்" என்றார் கொங்குவேளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்த எனது நண்பர். கேட்டதும், "நீங்களெல்லாம் மனுசங்க தானா ?" என்று கேட்டேன்.
நாம பெருமை என்று நினைக்கும் பழம்பெருமை அனைத்தும் பழைய பானையின் பழைய கள்ளைவிட துர்நாற்றம் மிகுந்தது. இனவெறி / சாதி வெறியை அணையாமல் காப்பதே பழம்பெருமைப் பற்றிய பெருமித உணர்வே.
செல்வேந்திரன் இது போன்ற பழம்பெருமையும், முன்னோர் செயல்களையும், அவர்கள் தம் அருமை பெருமை, பெரும் பேரு, பெயர்களை நினைக்க வேண்டும் என்று சொல்கிறாரா தெரியவில்லை.
வாழ்ந்து மறைந்தவர்கள் பெயரை வாய்ப்புக் கிடைத்து நினைவு வைத்திருப்பதில் தவறு அல்ல, ஆனால் அப்படி வாய்ப்பே கிடைக்காததால் தெரியாமல் இருப்பதும் மாபெரும் குற்றம் அல்ல.
என் அப்பாவின் புகைப்படத்தை என் மகளுக்கு காட்டும் போது, "இவர் என்னுடையை அப்பா" என்று தான் சொல்லுவேன், "உன்னுடைய தாத்தா" என்று சொல்லியது கிடையாது, ஏனெனில் "தாத்தா" என்பது ஒரு உறவு, அந்த உறவை அவள் துய்ததே இல்லை. அவள் பிறக்கும் முன்பே, என் திருமணத்தின் முன்பே அதாவது 17 ஆண்டுகளுக்கு முன்பே எனது தந்தை இறந்துவிட்டார். இறந்து போன ஒருவரை உறவு முறையால் அறிமுகப்படுத்துவது சரியாகப் படவும் இல்லை, இல்லாத உறவை திணிப்பது போலாகும்
"உங்க மாமா புகைப்படம் கும்பிட்டுக் கொள்" என்று என் மனைவியிடமும் எனது அப்பாவின் புகைப்படத்தைக் காட்டிச் சொன்னது இல்லை. "எனது அப்பா" என்பதால் நான் மட்டும் தான் அவரது நினைவுகளைப் போற்றுவேன்.
பிறக்கும் போதே ஆதரவற்றவர்களாக (அனாதை) ஆக்கபடுவர்களெல்லாம் முன்னோர்கள் என்று எவரை நினைக்க முடியும் ?
செல்வேந்திரனின் குற்றச் சாட்டு அல்லது சுட்டிக்காட்டான "முன்னோர்களை நினைத்துக் கொள்ளாதது இன்றைய இளைஞர்களின் போலித்தனம்" என்ற வகையில் சேர்ப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை.
*******
அடுத்ததாக,
"ஆர்குட், ஐஆர்சி உரையாடிகளில் முகம் தெரியாதவர்களிடம் மணிக்கணக்காக பேசுபவர்கள் நன்கு தெரிந்தவர்களிடம் உரையாடாவோ, அவர்களுக்காக நேரம் செலவழிக்கவோ விரும்புவதில்லை" - செல்வேந்திரன்
இதுவும் ஒரு தவறான கருத்து, உண்மையில்
பலர் வீட்டுக்குள் தொலைகாட்சி மட்டுமே பேசும், மற்றவர்கள் ஒருவருக்கு தொடர்பில்லாதவர்கள் போல் ஒரே வீட்டில் இருப்பார்கள். இதுபோன்ற முரண்பாடுகள் எங்கும் காணப்படுகிறது. உரையாடியில் (சாட்) முகம் தெரியாதவர்களிடம் உரையாடுபவர்கள் பெரும்பாலும் கல்லூரி பருவத்தினரே, ஆர்குட் ஜிமெயில், யாகூ ஆகிய உரையாடியில் உரையாடும் மற்றவர்கள் நண்பர்களைத் தவிர்த்துவிட்டு அவ்வாறு செய்வது போன்று தெரியவில்லை. வெளிநாட்டிற்கு தனித்து செல்பவர்களுக்கு நண்பனாக இருப்பதே அவரைப் போன்று பேச்சிலாராக இருக்கும் பிறர் தான். ஆர்குட்டில், ஜிமெயிலில், வலைப்பதிவுகள் வழியாக உரையாடுபவர்களில் பலர் நண்பர்களாக ஆகி இருக்கின்றனர்
நட்பு என்பது நம் பிறக்கும் போதே வருவதொன்றா ? கல்லூரி, அடுத்த எதிர்வீடு, பயிற்சி வகுப்பு ஆகியவற்றிற்கு நம்மோடு வருபவர்கள், இருப்பவர்கள் தான் நண்பர்களாக வருகின்றனர். இதே போன்றது தான் எதோ ஒரு அறிமுகத்தால் தான் ஆர்குட் நண்பர்களும், இவர்களிடம் மட்டும் வெட்டி அரட்டை ஆடுவதாக எப்படிச் சொல்ல முடியும் ? எனக்கு இணையம் வழியாக கிடைத்த நண்பர்கள் பிறவழியில் கிடைத்த நண்பர்களை ஒப்பிடும் போது எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. நண்பர்களை வரவழைத்துவிட்டு உரையாடியில் அமர்ந்து நண்பர்களைக் கண்டுகொள்ளாதவர்கள் என எவரும் கிடையாது என்றே நினைக்கிறேன். நட்பு என்பது ஒத்த எண்ணங்களை உள்ளடக்கி ஏற்படும் ஒன்று என்ற கருத்தை இணைய வழியாக கிடைக்கும் நட்புகள் உடைத்து எறிந்துவிட்டு, எண்ணங்களை மதிப்பதும் நட்பு என்கிற புதிய பரிணாமத்தை நட்புலகில் ஏற்படுத்துகிறது. எனக்கு தெரிந்து இணையத்தில் நட்புகளைத் தேடியவர்களை விட்டு அவருடைய உண்மையான நண்பர்களும், உறவினர்களும் விலகினார்கள் என்று கேள்விபட்டதே இல்லை. செல்வேந்திரனின் குற்றச்சாட்டு ஞாயமற்றது. கணனி இருந்தால் எப்போதும் தொடர்பில் இருக்க முடியும் என்பது தவிர்த்து இணைய நண்பர்களுக்கும், வெளியுலக நண்பர்களும் பெரியவேறுபாடு கிடையாது. முற்றிலும் புதிதாக ஒரு இடத்திற்கு / நாட்டிற்கு செல்லும் போது அங்கு ஏற்கனவே இருக்கும் இணைய நண்பர்கள் பிற நண்பர்களைப் போல் உதவுகிறார்கள் என்பதே உண்மை. அவர்களுக்காக நேரம் செலவிடுவது போலித்தனம் கிடையாது.
போலித்தனங்கள் ஓரளவு தேவைதான் ஆனால் எவையெல்லாம் மிதமிஞ்சிய போலித்தனங்கள் என்பதை எவரும் வரையறுத்துக் கூறிவிட முடியாது, சுயநலனோக்கு, அடுத்தவரை மகிழ்ச்சி படுத்துதல் இதில் இரண்டில் அடுத்தவரை மகிழ்ச்சிபடுத்தும் போலித்தனங்கள் ஓரளவு நண்மையே. விலங்குகளில் ஆண் விலங்குகள் கூட கூடினால்
கரு உண்டாகும் என்றாலும் தனது அழகை வெளிப்படுத்திக் காட்டிவிட்டு ஒப்புதலுடன் துணையை நெருங்குகிறது, அழகான எடுத்துக்காட்டு ஆண் மயில்கள். போலித்தனங்கள் இயற்கையிலேயே அளவோடு அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான்.
எவை போலித்தனங்கள் என்று செல்வேந்திரன் சொன்னதன் மேற்கண்ட இரண்டு மோற்கோள்களில் எனக்கு உடன்பாடு இல்லை.
மற்றபடி அவர் கூறிய பிற கருத்துகளிலும், மேடையில் தயங்காமல் பேசி பாராட்டுப்பெற்றதை நானும் பாராட்டுகிறேன். சிறப்பாக செய்தார். பாராட்டுகள் செல்வேந்திரன் !