பின்பற்றுபவர்கள்

6 பிப்ரவரி, 2012

திருநங்கைகள் அர்சகர் ஆக்கப்பட வேண்டும் !

பிறப்பு வழி குறைபாடுகளுக்கு மருத்துவம் முழுமையான தொரு தீர்வை எட்டாத நிலையில் அக்குறைபாடு உடையவர்களை சமூகம் கிண்டல் கேலி செய்யாது ஏற்றுக் கொளல் வேண்டும் என்பதே பொதுவான புரிதல். 'திருநங்கைகள் என்று யாரும் கிடையாது அவர்கள் பெண்களாக தன்னைத் தானே நினைத்துக் கொள்ளும் திமிர்பிடித்த ஆண்கள்' என்று கூறும் ம(ந்)த அறைகுறைகளின் கருத்துகளை நான் நிராகரிக்கிறேன், இந்த ம(ந்)தவாதிகள் உடலியல் குறைபாடுகள் அனைத்திற்கும் மருத்துவ தீர்வு எட்டப்படதா நிலையில் வெறும் பழைமை ம(ந்)தவாத அடிப்படையில் மருத்துவம் தீர்வு சொல்லியதாக நினைத்துக் கொண்டு அவ்விதக் கருத்துகளை பரப்புகின்றனர். உதாரணத்திற்கு ஆண் பெண் என முழு உடல் தகுதி பெற்ற தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காமல் இருக்க பிறப்பிலேயே கர்ப்பை அல்லது முட்டை உற்பத்தியின்மை அல்லது ஆணுக்கு விந்தனு குறைபாடு ஆகிய ஒன்று தான். இவற்றிற்கான தீர்வுகளை மருத்துவ உலகம் இன்னும் கண்டுபிடிக்காத சூழலில் குழந்தை வேண்டிய அந்தம்பதியினருக்கு மாற்றுத் தீர்வு தத்தெடுத்துக் கொள்ளுதல் தான், இதற்கு விருப்பமில்லாதவர்களை தூற்றுவது அறிவின்மை மட்டுமின்றி அவர்களின் குறை அவர்களுடையது அல்ல அது தீர்க்கப்படாத அல்லது தீர்க்க முடியாத பிறப்பு வழி குறைப்பாடு. திருநங்கைகளின் உடலியல் / மனநிலை / உளவியல் அடிப்படையகளை புரிந்து கொள்ளாதவர்கள் ம(ந்)த வாதிகள் மட்டுமே, இது போன்ற மனித சமூக நல எதிர்ப்பு ம(ந்)த வாத கருத்துகளால் சமூகம் என்றைக்குமே பயன்பெற்றதில்லை என்பதால் அவற்றை புறந்தள்ளிவிட்டு இருக்கின்ற குறைகளை ஏற்றுக் கொள்வதற்கு அல்லது சரி செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

**********

உலக முன்மாதிரியாக தமிழக கிறிஸ்தவர்கள் திருநங்கை ஒருவரை ஆயராக ஆக்கியுள்ளனர் (நியமனம்), இது உண்மையில் பாராட்டக் கூடியதும் தமிழ் நாடு இதற்கு முன்னோடியாக இருப்பதற்கு தமிழர்கள் என்ற வகையில் பெருமைப் படக் கூடிய ஒன்றாகும். இதை வெறும் மதமாற்றச் செயலுக்கான மாற்று உத்தி என்று பார்க்காமல் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு என்ற வகையில் பார்க்கிறேன், கிறிஸ்துவர்கள் கனிசமான அளவில் இருக்கும் திருநங்கைகளை மதம் மாற்றுவதன் மூலம் அவர்களின் மக்கள் தொகையை உயர்த்திக் கொண்டு கனிசமான அளவு வெளிநாட்டு நிதிகளையும் பெற்றுக் கொள்வர் என்கிற மாற்றுக் கருத்து உள்ளவர்கள், அதையே ஏன் இந்து மதத்தினருக்கும் பரிந்துரைக்கக் கூடாது, அவ்வாறு சொல்லுவதற்கான தெளிந்த மனநிலையையில் இருந்தால் திருநங்கையின் ஆயர் நியமனம் கிறித்துவ மிசனரி நடவடிக்கை என்று கூறலாம்.

திருநங்கைகளை அர்சகர் ஆக்கினால் கிடைக்கும் நன்மைகளில் முக்கியமானது

1. பெண்களுக்கு அவர்களால் எந்த வித பாலியல் ரீதியான வன்முறைகள் நடக்காது ( உதாரணம் தேவ நாதன்)
2. பெருமைப் படக் கூடிய வேலை என்பதால் கண்டிப்பாக அவர்களைப் போன்றவர்கள் பாலியல் தொழில் இருந்து திரும்புவர் அல்லது அவ்வாறு செய்வது ஒடுமொத்த திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் செயல் என்று மாற்று வேலைக்கு அவர்கள் செல்லவும் அவர்களுக்கு வேலை வழங்கும் சூழலும் ஏற்படும்
3. இயல்பாக நளினமானவர்கள் என்பதால் கோவில்களின் பரத கலை மற்றும் பிற ஆடல்கலைகளை அவர்கள் நன்கு பயின்று அவற்றையும் வாழவைப்பார்கள்
4. பெண்களின் குணம் அவர்களுக்கு இருப்பதால் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வர்

கூத்தாண்டவர் விழாவில் ஒருநாள் தாலி கொடுத்து அதைப் பின் அறுத்து எறிய அன்று கேட்கும் அவர்களின் கூக்குரலின், ஓலங்களில் ஒப்பாறியில் அவர்களின் ஒட்டு மொத்தமாக அவர்களின் கடந்த கால வேதனைகளை தீர்த்துக் கொண்டதாக இந்து மதத்தினர் நினைக்கின்றனர். அவை கொஞ்சம் உண்மை தான் என்றாலும் அவர்களின் இழி நிலை மாறி சமூகத்தில் தன்னையும் ஒருவராக இன்றி அமையாதவராக ஆக்குவதன் மூலம் தான் அச்சமூகம் நல்ல நிலையை எட்ட முடியும், இன்றைய தேதியில் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்பரவல்களில் திருநங்கைகளின் கைங்கர்யம் கனிசமாக உண்டு என்றாலும அவர்கள் வேறு வழியின்றி அல்லது வாழுதல் கட்டாயத்தின் பேரில் அங்கு துறத்தப்படுகின்றனர். அல்லது சமூக எதிரிகளால் அங்கு தள்ளிவிடப்படுகின்றனர்.

திருநங்கைகளை அர்சகராக ஆக்குவதால் ஏற்கனவே கூந்தல் உள்ளவர்கள் என்ற முறையில் அப்பணிக்கு கொண்டை போட்டுக் கொள்வது எளிது மேலும் ஆண் அர்சகரைப் போன்று மேலாடை இல்லாத அரைமனிதனாக வலம் வந்து அருவெறுப்பை ஏற்படுத்தாமல் இருப்பார்கள், மூன்று நாள் வீட்டு விலக்கு மாதவிலக்கெல்லஅம் அவர்களுக்கு கிடையாது என்பதால் இந்துமதம் சொல்லும் தூய்மைக் கேடும் ஏற்படாது, பார்பன அர்சகர்கள் இதனை எதிர்த்தாலும் பிற கோவில்களில் பூசாரிகளாக அவர்களை பணிக்கலாம், எந்த ஒரு ஆகமவிதிகளிலும் திருநங்கை அர்சகராகும் / பூசாரி ஆவதை தடுக்கும் கட்டுப்பாடுகள் கிடையாது என்றே நினைக்கிறேன். நாயகிபாவம் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் இந்து மத வழக்கங்களில் ஆண் கடவுளை கணவனாக நினைத்து உருகும் முக்தி தேடும் வழிகள் இருக்கிறதாம், அவற்றைச் செய்ய சரியானவர்கள் திருநங்கைகள் தான்.

திருநங்கைகளை இறைப்பணிக்கு திருப்புவதன் மூலம் சமூகம் அவர்களுக்கு மாறு செய்து முன்பு செய்து வந்த கொடுமைகளின் சாப விமோசனம் பெறும் மற்றும் பாவப்பட்ட பாலியல் தொழில் இருந்து அவர்களும் விடுதலையாவார்கள் என்பது எனது நம்பிக்கை.

3 பிப்ரவரி, 2012

ஓரின சேர்க்கையாளர்கள் - சீனாவின் மற்றொரு துயரம் !

திருநங்கைகள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து பேச மறுக்கும் சமூகங்களும் அரசுகளும் மெல்ல மெல்ல அது குறித்த பேச்சும் சேர்க்கைக்கான அனுமதிகளையும் ஒரு சில சட்டக் கட்டுப்பாடுகளுடன் வழங்கிவருகின்றன, மதச்சார்பற்ற அரசுகள் ஓரின சேர்க்கையாளர்களின் பாலியலை அனுமதித்திருப்பது தனிமனித நிலைப்பாடு என்ற அளவில் தான், எந்த ஒரு அரசும் ஊக்குவிப்பதற்காக அதனை செய்யவில்லை என்பதைத் தெளிவாகவே சொல்லுகின்றன. தனிமனிதன் பிறரை துன்பறுத்தாத தற்பாலியல் இச்சைகளுக்கு அரசுகள் குறுக்கே நிற்பது தவறு என்பதாக புரிய வைக்கப்பட்டு அத்தகைய நிலையை மேற்கத்திய நாடுகள் எடுத்ததும் பரவலாக அதே எண்ணங்கள் பிற மதம் சாராத கிழக்கு நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு இருக்கின்றன.

******

நேற்றைய சீன செய்திகளில் மொத்தம் 16 மில்லியன் (1 கோடியே 60 லட்சம்) பெண்கள் ஓரின சேர்க்கையாளர்களை மணந்திருக்கக் கூடும் என்ற செய்தியுடன், அந்தப் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டி செய்தி வெளி இட்டிருக்கிறது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 'ஓரின சேர்கையாளரின் மனைவியர்' என்ற பெயரில் இணைய தளம் துவங்கியதிலிருந்து இவை அங்கு பரவலான விழிப்புணர்வை எட்டி இருக்கிறதாம்.

குடும்ப அமைப்பு மற்றும் பண்பாடுகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது, சீனர்களின் குடும்பங்களிலும் ஆண் குழந்தையின் தேவை இன்றியமையாதது என்றே கருதுகிறார்கள். மக்கள் தொகை குறித்த கட்டுப்பாடுகளினாலும் குடும்பத்துக்கு ஒரு குழந்தை தான் அனுமதி என்ற அளவில் பெற்றோருக்கு ஆணோ பெண்ணோ ஒரு குழந்தை தான் இருக்கும். இப்படி அனுமதிக்கப்பட்டு பிறந்த ஒரே ஆணும் வளர்ந்ததும் ஓரின சேர்க்கையாளராக மாறினால் அது அவர்களுக்கு அதிர்ச்சி தான், பெரும்பாலும் பெற்றோர்களின் வெறுப்புக்கு ஆளாகக் கூடாது என்கிற எண்ணத்தில் ஓரின நாட்டம் உள்ளவர்கள் முடிந்த அளவுக்கு திருமணங்களை தள்ளிப் போட்டாலும் ஒரு கட்டத்தில் திருமணங்களை செய்து கொள்ளும் போது சிக்கல் ஆகிப் போகிறது.

அவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் போது நேரிடையாக பாதிப்பது பெற்றோர்களோ, சமூகமோ இல்லை, அவர்களை திருமணம் செய்து கொள்பவர் தான், எந்த ஒரு துணையும் தன் துணை ஒத்த பால் நாட்டமுடையது என்று தெரிந்தால் அதிர்ச்சியே மிஞ்சும், இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும் என்றாலும் ஓரின ஆணை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கே மிகுந்த இழப்பு, நம்பிக்கைகள் உடைந்து எதிர்கால பாதுகாப்பு என்பது கேள்விக்கு உள்ளாகிவிடும், குறிப்பாக தெரிந்தே அனுமதித்தாலும் எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்கள் அவர்களுக்கும் தொற்றும் வாய்ப்பு உண்டு, இதனால் தன் துணை ஓரின நாட்டம் கொண்டவர் என்று தெரியவரும் போது மணவிலக்குகள் பெருகிவிடுகின்றன, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இதன் விபரீதம் தெரியாது என்பதால் இவற்றை முறையான உளவியல் பயிற்சி கொடுத்து திருத்திவிடலாம் என்று நம்புகின்றனர். ஆனால் சூடுகண்ட பூனையாக இருந்து, ருசி கண்ட பூனையாகவும் இருந்தால் அதிலிருந்து மீள்பவர் குறைவே, இவற்றை பெற்றோர்களோ, சமூகமோ புரிந்து கொள்ளாது காரணம் 'நம் குடும்பத்தில் பிறந்த ஒருவரா இப்படி ?' ஏதோ செய்வினை, புத்தி பேதலிப்பு என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்துவிடுவார்கள்.

உண்மையில் ஓரின சேர்க்கை என்பது மனித இன துவக்க காலம் தொட்டே இருந்திருக்க வேண்டும், இன்றைய ஊடகங்களால் அவை மிகைப்படுத்தப்பட்டு தற்காலத்தில் தோன்றிய புதிய சமூக சீரழிவு போன்று காட்டப்படுகிறது. அலக்சாண்டரும், ஜூலியட் சீசர் போன்றவர்கள் கூட ஓரின சேர்க்கையாளர்களாக மேற்கத்திய வரலாறுகளில் பதியப்பட்டுள்ளனர், பிற நாடுகளில் அவை வெறுக்கத்தக்கது என்ற அளவில் அவை வரலாறுகளில் இடம் பெறவில்லை.

பிறப்பு வழி பிற உடலியல் குறைபாடுகளைப் போன்றதே ஓரின நாட்டமும், அதற்கான உடலியல் காரணங்களை இன்னும் கூட ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அன்றி அவை உளவியல் ரீதியான குறைபாடுகள் அல்ல என்பதை தெளிவாகவே சொல்லுகிறார்கள். வளர்ந்ததும் எந்த உணவை ஒருவர் விரும்பி சாப்பிடுவார் என்பதை கணிக்க முடியாதது போலவே ஒருவரின் பாலியல் நாட்டம் எத்தகையது என்பதை முன்கூட்டியே சொல்லிவிட முடியாது. முதலில் மதுவை விரும்பி இருக்காத ஒருவர் பிறர் தூண்டுதலால் தாமும் மதுவிற்கு அடிமை ஆகுவது போன்றே ஓரின சேர்க்கையாளர்களின் தூண்டுதலாலும் ஓரின சேர்க்கையாளராக மாறுபவர்களும் உண்டு என்பதும் உண்மை தான்.

சமூக கட்டுப்பாடு ஆகியவை இயற்கைக்கு மாறானது என்று வகைப்படுத்தி அவற்றை மதக் கொள்கையாக்கிக் கொண்டு எதிர்த்து நின்றாலும் அத்தகைய நாட்டத்தில் செல்பவர்களை தடுக்க முடியவில்லை என்பதிலிருந்து ஒருவரின் பாலியல் நாட்டத்தில் சமூகம் நுழைவதை தண்டனைக்கு பயந்து கண்டு நிறுத்திக் கொண்டால் அன்றி தன் விருப்பமாக எவரும் மாற்றிக் கொள்வதும் இல்லை என்றே தெரிகிறது. சமூகம் மற்றும் பெற்றோர்களின் வற்புறுத்தலால் மாறுபவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகும் அதைத் தொடராமல் இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது, மிகச் சிலர் மாறி இருக்கலாம் அதற்கான காரணம் கூட அவற்றிற்கான மறுசூழல் வாய்க்காமல் போனதாகக் கூட இருக்கும்.

ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து சமூக பொறுப்புணர்வு என்ன ?

ஒருவர் ஓரின சேர்கையாளர் என்று தெரிந்தால் அவரை புறக்கணிக்காமல் எடுத்துக் கூறி சமூக அமைப்புக்கு நல்லது அல்ல என்று புரிய வைப்பது தான், புரிந்து கொள்ளவில்லை என்றால் அவரை வெறுத்து ஒதுக்கத் தேவை இல்லை, சமூகத்தால் புறக்கணிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்கின்றனர், அல்லது திருநங்கைகளைப் போல் பாலியல் தொழிலில் விழுந்துவிடுவார்கள். வற்புறுத்தலின் மூலம் திருமணம் செய்துவைக்கப்படும் போது மேலும் ஒருவரின் வாழ்வும் சேர்த்தே சீரழிகிறது.

அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் கடவுளுக்கு தேவை குடும்பக்கட்டுபபடு என்று கமலஹாசன் கூறியதாகச் சொல்லுகிறார்கள், எல்லாம் இறைவனின் படைப்பு, எல்லாம் அவன் செயல் என்று நம்பும் போது ஒருவரின் பாலியல் நாட்டத்தை மட்டும் கடவுள் தீர்மாணித்திருக்க முடியாது என்பது மட்டும் எந்தவகையான நம்பிக்கையாக இருக்க முடியும் ?

ஓரின சேர்கையாளர்கள் புறக்கணிக்கப்படும் போது என்ன செய்வார்கள் ?

சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பதைப் பற்றி கவலைப்படாதவர்கள், தன் தேவைக்கு ஏற்ப கூடும் நபர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள், இத்தகைய உறவின் இரகசியங்கள் வெகு நாளைக்கு நீடிக்காது ஏனென்றால் அந்த மற்ற ஒருவரும் இதே சமூகத்தின் ஒருவர் தான், அவரும் ரகசிய வழிகளில் தான் இத்தகைய உறவுகளை நாடுவார். இவ்வாறு பல்வேறு நபர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் போது பாலியல் நோய்களும் சேர்ந்தே தொடர்பில் வந்துவிடும், அதில் ஒருவர் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அவரை திருமணம் செய்துள்ள மாற்றுப் பாலினருக்கும் அந்த நோய்கள் பரவும். மறைவாக செயல்பட எண்ணி சிறுவர் / சிறுமியரைக் கூட தொல்லைக்குள்ளாக்கி அவர்களை மன ரீதியான பாதிப்பில் கொண்டு சென்றுவிடுவார்கள்.

வயது வந்தவ ஒருவரின் பிறரை துன்புறுத்தாத பாலியல் நாட்டத்தில் இயற்கை செயற்கை என்றெல்லாம் எதுவும் கிடையாது இயற்கையான பாலியல் உறவு என்று எதிர்பாலினர் மீதான நாட்டத்தில் இயற்கை என்று வலியுறுத்தப்படுவதின் விதிமீறல்களாக வாய் வழி, பின்புணர்வு என்பதில் ஈடுபடதாவர்கள் கூட மிகச் சிலரே, அவ்வாறு மிகச் சிலராக இருப்பவர்களுக்கும் கூட அவற்றை வெட்கத்தால் கேட்காமல் இருப்பது அல்லது கேட்டும் மறுக்கப்பட்டதாக இருக்கும், மற்றபடி அவற்றில் விரும்பாமல் தான் அவர்களும் இருந்தனர் என்று சொல்ல எதுவும் இல்லை.

இயற்கை வழி உறவு என்பதில் மிஞ்சிய தேவைகள் என்பதில் பாலியல் தொழில்கள் அங்கீகரிக்கப்படுகிறது, வசதி உள்ளவர்கள் பலரை திருமணம் செய்து கொள்வதும் கூட மதக் கொள்கைகளினால் அங்கீகரிக்கப்படுகிறது, இயற்கையில் எந்த ஒரு துணையும் தன்னுடைய துணை ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன், எதிர்பாலினர் என்றாலும் தொடர்பு வைத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்வதில்லை என்பதும் இயற்கை தான், ஆனால் பல பெண்களுடன் திருமணம் ரீதியாக உறவு வைத்திருப்பது இயற்கையா என்றெல்லாம் யாரும் விவாதம் செய்வதே இல்லை. அவற்றின் விதிமீறல்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு ஓரின சேர்க்கையாளர்களை மட்டும் சமூகத்தை சீரழிப்பவர்கள் போன்று பரப்புவது எவ்விதமான நாகரீகமாக அல்லது பண்பாடாக இருக்க முடியும்.

இறுதியாக ஓரின சேர்கையை அனுமதித்தால் நாளை மிருகங்களுடன் கூடுவதைக் கூட இயற்கை என்று கேட்டு சிலர் உரிமை பிரச்சனை எழுப்பக் கூடும் என்றெல்லாம் சிலர் ஓரினசேர்கையாளர்களை புறக்கணிக்க வேண்டும் என்ற ரீதியில் கருத்து சொல்கிறார்கள். அசைவ உணவர்கள் மன்னிக்கவும், மிருக வதைகள் உணவுக்கு என்ற அடிப்படையிலும் அவற்றைத் தோலுக்காக மற்றும் அவற்றின் உழைப்பைப் பயன்படுத்துதல் என்ற அளவிலும் அவை அதற்காகத் தான் படைக்கப்பட்டன என்ற சப்பைக் கட்டுகளுடன் பலகாலமாக அவை துண்புறுத்தப்பட்டுத்தான் வருகின்றன. எதுவுமே விலங்குளைக் கேட்டு நடைபெறவில்லை என்னும் போது இவ்வாறு மிருக புணர்சிகள் சமூகக் குற்றம் என்பது போல் காட்டப்படுவதும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

ஓரின நாட்டத்தில் ஒரு சிறுவனை சீரழிப்பவனுக்கும், எதிர்பாலின நாட்டத்தில் ஒரு சிறுமியை சீரழிப்பவனுக்கும் அடிப்படை மன நிலை வேறுபாட்டில் இவன் தேவலை என்று யாரைக் குறிப்பிட முடியும் ? இது போன்றது தான் மிருக புணர்ச்சியின் மீதான நாட்டமும் அது மன நிலை பிரண்டதின் செயல்பாடு அதற்கான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அதை பொதுப்படுத்தி ஓரின சேர்கையாளர்கள் தண்டனைக்குரியவர்கள் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொல்வதை நான் எதிர்கிறேன். கைப்பழக்கங்களுக்கும் இயற்கைக்கு எதிரானது அதற்கு தண்டனை என்று தானே மதங்கள் பயமுறுத்துகின்றன அதனைச் செய்யாத ஆண்களில் வெகு சிலர் இருந்தால் அவர்களில் பலர் கையே இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். திரைப்படங்களின் வழியாக மாமனாரின் இன்பவெறிகள் கூட சமூக சந்தையாக்கப்படுகிறது, அவற்றையெல்லாம் கூட இயற்கை என்றே திரைமறைவில் பார்ப்பதும் சமூகம் தான்.

நம் உயர்ந்தப் பண்பாட்டின் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொண்டாலும் ஒரு 50 ஆண்டுகள் பின்னோக்கி பார்க்க அதிர்ச்சியே மிஞ்சுகிறது, 6 வயதிற்கு 14 வயதிற்கும் உட்பட்ட பெண் சிறுமிகளை திருமணம் என்ற பெயரில் பாலியல் துண்புறுத்தியவர்கள் தான் நம் சமூகம், சிறுவர் திருமணங்களை இன்றும் கூட திருட்டுத்தனமாக பலர் செய்து தான் வருகிறார்கள், நடைமுறைக்கு ஒத்துவராது மற்றும் மனம் வளர்ச்சியடையாத நிலையில் குழந்தைத் திருமணங்கள் முறையானது அல்ல என்பதாகத் தான் அவை சமூகங்களில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன, இவற்றை விலக்கும் போது இது இயற்கையா செயற்கையா என்ற விவாதங்கள் எதுவும் நடந்தேறியது போல் தெரியவில்லை, சமூக மன வளர்ச்சி என்ற அளவில் அவை செயல்பாட்டிற்கு வந்தன. ஆனால் அடிப்படை புரிந்துணர்வு இருந்தும் ஓரின சேர்கையாளர்கள் பல நாடுகளில் எதோ ஒரு காரணத்தைக் காட்டி புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள் அது வேறுவிதமான சமூக குற்றங்களுக்கும் சமூக சீரழிவுக்கும் துணை போகிறது என்பதைத் தான் சீனாவின் அந்தச் செய்தி சுட்டுகிறது.

நான் ஓரின சேர்க்கைக்கு ஆதரவாளன் இல்லை ஆனால் அவர்களின் தனிப்பட்ட தேவை அல்லது விருப்பு என்ற அளவில் புரிந்து கொள்கிறேன். திருநங்கைளை கேலி செய்து வந்த நம் தமிழ் திரையுலகம் ஒருவாறு தன்னை திருத்திக் கொண்டு அத்தகைய காட்சிகளை தவிர்த்தே வருகின்றன, ஆனால் அடுத்து அவர்களின் கரிசனம் ஓரின சேர்க்கையாளர்கள் மீது விழுந்திருக்கிறது... 'அவனா நீய்யீ ?' நண்பன் படத்தில் மீண்டும் கிண்டல் அடித்துள்ளனர். சமூகத்தில் அவர்களும் இருக்கிறார்கள் என்று இவர்கள் எடுத்துச் சொல்வதாகத் தான் புரிந்து கொண்டேன், திரையுலகில் அவர்களைப் பற்றி பேச துவங்கியுள்ளார்கள் என்றே கருதுகிறேன்.

பாலியல் தொழில் சமூகத்தில் இருந்து மறையும் போது,
கைப்பழக்கம் சமூகத்தில் இருந்து மறையும் போது
வாய்வழி மற்றும் பின்வழி புணர்ச்சிகள் மறையும் போது
ஓரின நாட்டமும் சமூகத்தில் இருந்து ஒழிந்துவிடும் அதுவரையில் அவற்றையெல்லாம் இயற்கை கூறுகளின் மனித மன பரிமாணங்களின் செயல்பாடுகள் என்று புரிந்து கொள்வோம்.

இணைப்பு : Millions of wives wed to gay men: expert

2 பிப்ரவரி, 2012

உலக அறிவியலின் உச்சம் - ஒரு கற்பனைக் கதை !

கிபி 2551 அறிவியல் உலகம் தன் உயரத்தை எட்டி இருந்தது, யாரும் வேலைக்குச் செல்லத் தேவை இல்லாமல், அனைத்தையும் ரோபோக்களே கவனித்துக் கொண்டிருந்தன, விவசாயம் முதல் வாகனங்கள் ஓட்டுவது வரை ரோபோக்கள் செய்து கொண்டிருந்தன, அரசு அமைப்புகள் பல்வேறு இனங்களையும் மனிதர்களையும் போதிய அளவு பாதுகாத்தால் போதும் என்ற எண்ணத்தில் அதற்கேற்ற உற்பத்தையை மட்டும் அனுமதித்து அல்லது செய்து வந்தன, முன்பெல்லாம் அலுவலகம் சென்றுவருவார்கள் என்பதை ஆவணங்கள் பார்த்து மக்கள் தெரிந்து கொண்டனர். உண்ணுவதும், உறங்குவதும் விரும்பிய இடங்களுக்குச் சென்றுவருவதும் தான் பொழுது போக்கு, திரைப்படங்களும் ரோபாக்களால் உருவாக்கப்பட்டு அதில் மனிதர்கள் நடிப்பது போன்றும் பல்வேறு கதைகளாக நகைச்சுவை, சண்டை, பாரம்பரிய படங்கள் எடுக்கப்பட்டன, அனைத்தும் இலவசம் தான்.

ஒரு படத்தைப் பற்றிய முன்னோட்டங்களும், அதனைப் பார்த்தவர்களின் விமர்சனம் வைத்து படம் பார்க்க விரும்புவர்கள் தேர்ந்தெடுக்கலாம், அவற்றை திரையிட்டும் பார்க்கத் தேவையில்லை, படத்தின் சில்லை கண்ணியில் பொருத்தி அதன் முன் அமர்ந்தாலே படத்திற்கு ஏற்றவாறு முப்பரிமானம் மற்றும் நான்கு பரிமாண முறையில் பார்த்துவிட்டதாக மூளைக்குள் உணரவைக்கப்படும், ஒரு படம் பார்க சில வினாடிகளே என்ற வகையில் அசதியாக இல்லை என்றால் ஒருவர் மூளையின் திறனுக்கு ஏற்ப ஒரு நாளைக்கு ஐம்பது படங்களைக் கூட பார்த்துவிடும் திறன் பெற்றிருந்தனர். திரைப்படம் மட்டுமின்றி கலைநிகழ்ச்சிகள், இசை ஆகியவையும் கூட கணிணிகளால் தானியக்கமாக உருவாக்கப்பட்டு அவை மெய் நிகராக விரும்பியவர்கள் சில விநாடிகளில் நேரிடையாக பார்த்த அனுபவங்கள் கிடைக்கும் படியான அறிவியல் வளர்ச்சிகளில் வாழ்ந்தனர்.

மனித உற்பத்திக்கு திருமணம் தேவை இல்லை என்ற அடிப்படையில் எவரும் திருமணம் செய்தி கொள்ளாமல் பெற்றோர்களே இல்லாமல் உற்பத்தி செய்யப்பட்டவர்களாகவும் தனித்து வாழ்பவர்களாகவும் இருந்தனர், ஓரளவு மன வளர்ச்சி எட்டியவுடன் உருவ இன அமைப்பிற்கேற்ற மொழிகள் அவர்கள் மூளைக்குள் திணிக்கப்பட்டு வெளியே அனுப்பட்டு அங்கங்கே வாழ்ந்து வந்தனர், தகவல் பரிமாற்றம் மற்றும் பேசிக் கொள்ள மொழிகளின் இணைப்பு தேவையின்றி ஒருவர் ஒரு மொழியில் தேவையான போது பேச மற்றவர் தாம் அறிந்துள்ள மொழியில் அதனை புரிந்து கொள்ளும் வகையில் அவர்களின் காதுகளின் பொருத்தி இருந்த கருவிகள் உள்வாங்கி மொழி மாற்றி கேட்கும் படி உதவி செய்தன.

மனித உடலின் அடிப்படை உந்துதலான பாலியல் தேவைக் கூட தேவையின் போது அதை அடைந்துவிட்டதாக மூளையில் உணரவைக்கபப்டும் கைக்கடிகாரங்கள் எல்லோரிடமும் இருந்தது, அழகு ஈர்ப்பு என்ற சொல்களெல்லாம் மறைந்து போக எவரும் எவரையும் சார்ந்து வாழாத நிலைதான்.

ஒருவரின் அன்றாட வேளைகள் என்பது காலை எழுந்து காலைகடன் உள்ளிட்டவைகளை முடித்து உணவு உண்பது மற்றும் முழுக்க முழுக்க பொழுது போக்கு பின்பு உடல் அசந்தால் தூங்குவது என்பது மட்டுமே. இதைத் தவிர்த்து மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்பற்கு வேறு வேலைகள் இல்லாமல் அனைத்தையும் ரோபோக்கள் தான் செய்து வந்தன. மனிதர்களுக்கு நேரங்கள் மிகுதியாகவே கிடைத்தன, ஜீன்கள் சரிசெய்யப்பட்டு எழும்புத் தேய்மானத்தில் உடல் தளர்வுரும் வரை ஆயுள் 120 ஆண்டுகள் என்று வாழ்ந்தனர். அவர்கள் இறந்த பின்னும் கூட அவர்களின் மூளையை செயல்படுத்தி அவர்களின் அறிவுக்கூறுகள், அனுபவங்கள் ஆகியவைகள் ஆவணங்களாக சேமிக்கப்பட்டன

மனித வாழ்க்கை என்பது உண்ணுவது ஊர் சுற்றுவது, ஓய்வெடுப்பது மற்றும் பொழுது போக்குவது என்பதாக மட்டுமே இருந்தது, வெளியே செல்வது என்பது சுற்றிப் பார்க்க மட்டுமே என்ற நிலையில் விரும்பியவர்கள் சென்றுவந்தனர், விரும்பாதவர்கள் மெய்நிகராக அந்தக் காட்சிகளை சில்லுகள் மூலமாக உள்வாங்கிக் கொண்டிருந்தனர், சிலர் விலங்குகளை வளர்த்து பொழுது போக்கினர். மனிதர்களும் எந்திர மனிதர்களுக்கும் மன அளவில் வேறுபாடு இல்லாமல் இருந்தது, பணம் ஈட்டுவதற்கான தேவை என்பதே அன்று இல்லை. உள்நாட்டு, வெளிநாட்டு போர் மற்றும் அதற்கான தேவை எதுவுமே இல்லை. வேற்றுகிரகவாசிகள் ஊடுறுவினால் அதை அழிப்பதற்கு ஏராளமான கருவிகளின் தாயார் நிலையில் அவைகள் இருந்தன. சூரிய குடும்பக் கோள்கள் அனைத்திற்கும் ரோபக்கள் அனுப்பப்பட்டு கோள்களையும் வேற்று கிரகவாசிகளின் ஊடுறுவல் கூறுகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

மாசுக்கட்டுப்பாடு, புவிவெப்பங்கள் கூட கட்டுக்குள் தான் இருந்தன, ஆனாலும் இயற்கைச் சீற்றம், நில அதிர்வு ஆகியவற்றை ஒன்றும் செய்யமுடியவில்லை. எதோ ஒரு நாள் தொடர்ச்சியான விண் கற்கள் மற்றும் சூரிய தீப்பிழம்பு பொழிவால் அனைத்து மின்னனு கருவிகளும் செயல் இழக்க, புவி எங்கும் நெருப்புப் பிழம்புகள் அதன் கட்டுக்கடங்காத வெப்பம் மனிதர் உட்பட அனைத்தும் மடிந்தன, அழிந்தன, எரிந்து சாம்பல் ஆகின அடுத்து தொடர்சியாக மழை பொழிந்தது

மீண்டும் கற்காலம் துவங்கியது

********

பாத்திரங்களே இல்லாமல் சிறு கதை எழுதமுடியும் என்று சிலர் முயன்று இருக்கிறார்கள். சுஜாதா கூட அப்படி ஒரு கதை எழுதி இருக்கிறார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ம(னி)த கற்பனை சொர்கம் கூட அறீவியல் வளர்ச்சியில் உச்சமடைந்த பூமியைப் போன்றது தான், வெர்ரி வெர்ரி ஃபோரிங்......அங்கே ரோபக்களுக்கு பதில் வேலை செய்ய சொர்க வேலையாட்கள் இருப்பார்கள் என்ற அளவில் தான் புரிந்து கொள்ளமுடிகிறது.

கேப்டன் முழக்கம் தளபதி கலக்கம் !

நேற்றைய சட்ட மன்றத் தொடர் தமிழக அரசியலில் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம், கூட்டணி உதவியால் கனிசமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்த விஜயகாந்த், உள்ளாட்ச்சித் தேர்தலுக்கு பிறகு சட்ட சபைக்குள் செல்லவே மாட்டார் என்று ஊகங்கள் கிளம்பி இருந்தன, அதற்கு ஏற்றவாறு எதிர்கட்சியாக இருந்த போது கருணாநிதியும், ஜெயலிதாவும் சட்ட சபைக்குச் சென்றார்களா ? என்று கேள்வி எழுப்பி இருந்தார், இதன் மூலம் வழக்கமான வெறும் லாவனி அரசியல் போல் விஜயகாந்தும் அடுத்தத் தேர்தல் வரை ஒப்பேற்றிவிடுவார் என்று ஊடகங்களும் அரசியல் நோக்கர்களும் கருதி இருந்தனர், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கு பெற்றதுடன் ஆளும் கட்சியை கேள்விகளால் துளைத்து அடித்து திணறடித்தார் விஜயகாந்து.

பெரும்பான்மை ஆதரவுடன் அமைந்துள்ள ஆட்சி என்று முழங்கிக் கொண்டு இருந்த ஜெயலலிதாவுக்கு இது பெரிய அதிர்ச்சி தான். விஜயகாந்தை பேசவிடாமல் கத்திக் கொண்டிருந்த அவரது சட்டமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் ஜெ கட்டுப்படுத்தவில்லை, முடிவில் விஜயகாந்த் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.

தாம் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்ததற்காக வருத்தப்படுவதாகவும், கட்சியினரை திருப்பித்படுத்தவே கூட்டணி அமைத்திருந்ததாகவும் உளறினார். கூடவே வரும் சங்கரன் கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும் தேமுதிகவால் தனித்து தேர்தலை சந்திக்க முடியுமா ? என்றக்கேள்விக்கு முன்பு, பேருந்து கட்டணத்தை உயர்த்திய பிறகு, பால் கட்டணத்தை உயர்த்திய பிறகு நாங்கள் வெற்றி பெறுவோம், உங்களால் முடியுமா ? என்று கேட்டார், அந்தக் கேள்வியில் எங்களால் மக்களை பாதிக்கும் எதையும் செய்துவிட்டு இடைத்தேர்தலை சந்திக்க முடியும், நாங்கள் ஆளும் கட்சி என்ற ஆணவம் தெரிந்தது.

இதற்கு பதிலளித்த விஜயகாந்த் ஆளும் கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெரும் இரகசியம் ஏற்கனவே தெரிந்தது தானே, எதிர்கட்சியாக இருந்த போது அவ்வாறு வெற்றிபெற்றிருக்கிறீர்களா? ஏன் முதல்வராக இருந்தவரில் பர்கூரில் தோற்றவர் தானே ஜெயலலிதா என்று பதிலடிக் கொடுத்தார், முதல்வராக இருந்து தோற்றவர்களில் காமராஜரும் உண்டு, எனவே விஜயகாந்தின் அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் அவரது துணிச்சல் பாராட்டத்தக்கது, ஜெயலலிதாவின் ஆட்சியில் திமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களும் தலைவர்களும் பம்மிக் கொண்டு இருப்பார்கள், தேர்தலின் போது தான் அவர்கள் குரல் வெளிப்படும், இல்லையென்றால் முரசொலியில் 'ஆணவ ஆட்சிப் பாரீர்' என்று கட்டுரை வடிப்பார்கள், இப்படி சட்டமன்றத்திற்குள் காரசாரமாக (கை நீட்டிப்) பேசியதில்லை. (திமுகவினரிடம் இது பற்றிக் கேட்டால் நாங்கள் சபை நாகரீகம் அறிந்தவர்கள் என்றே சமாளிப்பர்)

விஜயகாந்த் சட்டமன்றத்தில் அணல் தெறிக்கப் பேசப் பேச அங்கு அருகில் அமர்ந்திருந்த ஸ்டாலினைப் பார்க்க பரிதாபமே மிஞ்சியது. 'அடுத்தத் தேர்தலுக்கு முன்பே விஜயகாந்த் மேலும் செல்வாக்கு பெற்று திமுகவின் தவிர்க்க முடியாத கூட்டணியில் ஒன்றாகவோ, அல்லது தேமுதிகவின் செல்வாக்கை சமாளிக்க முடியாமல் போவதுடன் திமுகவின் செல்வாக்கும் பாதாளத்திற்கு செல்லும் வாய்ப்பும் இருப்பதாக ஸ்டாலின் நினைத்திருக்கக் கூடும். ஏற்கனவே எதிர்கட்சி சிறப்பையும் விஜயகாந்தால் இழந்த ஸ்டாலின் திமுகவின் எதிர்காலம் குறித்தும் தமது முதல்வர் கனவு குறித்தும் கவலைப்பட்டு அமர்ந்திருந்தது போலவே தெரிந்தது.

விஜயகாந்த் இந்த ரீதியில் சென்றால் மேலும் செல்வாக்குப் பெறுவது உறுதி என்றே தெரிகிறது. நான் விஜயகாந்தின் அரசியலை பேச்சை விமர்சனம் செய்திருக்கிறேன், இப்போது பார்க்கும் போது அவர் சரியான திசையில் தான் பயணிக்கிறார், கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார் என்றே தெரிகிறது, எந்த தனிப்பட்ட அரசியல்வாதிகளால் எனக்கும் தனிப்பட்ட நன்மை கிடையாது, விஜயகாந்த் கட்சி மற்றும் கொள்கை ஆகியவற்றில் எனக்கு எந்த ஈர்ப்பும் எப்போதும் இல்லை. என்னைப் பொருத்த அளவில் விஜயகாந்தின் வளர்ச்சி மற்ற அரசியல் வாதிகளின் வளர்ச்சியைப் போன்றது தான், பலமான எதிர்கட்சி சட்டசபையின் தன்னிச்சையான முடிவுகளை எதிர்க்க மிக மிகத் தேவையான ஒன்று.

இதே அரசியல் கட்சிகள் அடுத்தும் தேர்தலை சந்தித்தால் என்னுடைய வாக்கு இப்போதைய சூழலைப் பொருத்து தேமுதிகவிற்குத் தான்.

கமான் கேப்டன்............கமான் !

1 பிப்ரவரி, 2012

வேதனை மற்றும் எரிச்சல் தந்த ஒரு செய்தி !

பொதுவாகவே செய்தி ஊடகங்கள் மிகைப்படுத்தித் தான் எதையும் சொல்லுகின்றன. வாசிப்பாளர்களின் சிந்தனையை தூண்டுவதும், முடக்குவதும் அவர்களின் செய்திகளின் தரம் வழியாக உருவாக்கப்படுபவை. கள்ளக்காதலர்கள் 'உல்லாசமாக இருந்தனர்' 'ஜாலியாக' இருக்கும் போது கொலை செய்யப்பட்டனர் என்றெல்லாம் நேரில் பார்த்தது போல் எழுதுவார்கள். அவர்கள் உல்லாசமாக இருந்தார்களா ? அவசரகெதியில் நடந்து கொண்டார்களா அல்லது தனக்கு மறுக்கப்பட்ட ஒன்றை வேறு இடத்தில் தேடிக் கொண்டார்களா ? என்பது தொடர்புடைய இருநபர்களுக்குத்தான் தெரியும். இன்றைக்கு கூட அப்படியான செய்தி ஒன்று நக்கீரனின் வெளியாகி உள்ளது, தினமலரின் தரம் அறிந்து அதனை வாசிப்பதை நிறுத்திவிட்டேன். கள்ளத் தொடர்புகளின் கொலைகளை செய்தித்தாள்கள் எழுதுவதே அந்த நிகழ்வுகளுக்காக இல்லை, இந்தக்த் தகவலை தெரிந்து கொள்ளாத தமிழினம் அழிந்துவிடும் அல்லது சபிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் எழுதுகிறார்களா ? அவற்றில் இருப்பவை பாலியல் சார்ந்த தகவல் என்பதால் அதில் நாட்டமுள்ளவர்களை தொடரும் வாசகராக்கும் திட்டத்துடன் மிகைப்படுத்தி எழுதுகிறார்கள். அவை வெறும் விற்பனை நோக்கம் தான்.

*******
சிங்கப்பூர் தமிழ் முரசு செய்தி பிரிவினருக்கு,

22 ஜனவரி 2012 (சிங்கப்பூர்) தமிழ் முரசு நாளிதழில் முகப்பு பக்கத்தில் மேற்கண்ட செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒரு குழந்தையை முதலை விழுங்கிய தகவல் மிகவும் கவலைக்குரியதும் வேதனையான ஒன்றும் ஆகும், அந்தக் குழந்தையை இழந்த பெற்றோர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. ஆனால் இந்தத் தகவலை 'ஏப்பம் விட்டுவிட்டது' என்று எழுதி நகைச்சுவை ஆக்கி இருந்தது செய்தியின் வெளியிடுதலின் தரம் குறித்த சிந்தனையை தோற்றுவித்தது.

பொதுவாக கடன் வாங்கி ஏமாற்றுதல், அல்லது நிதி நிறுவனங்களின் மோசடி ஆகியவற்றைத்தான் 'ஏப்பம் விடுவது' என்று எழுதுவது அல்லது சொல்லுவது வழக்கம், காரணம் அங்கு நடைபெறுவது நம்பிக்கை மோசடி, நம்பிக்கை மோசடி நகைச்சுவை இல்லை என்றாலும் பிறருக்கு எச்சரிக்கைக்காக முதலை வாயில் விழுந்த பணம் போன்று 'பணத்தை ஏப்பாம் விட்டுவிட்டார்கள்' என்று செய்தியாளர்கள் எழுதுவதுண்டு.

குழந்தையை முதலை விழுங்கிய செயல் நம்பிக்கை மோசடி அல்ல, அது விரும்பத்தகாத எதிர்பாராத வேதனையை உருவாக்கிய நிகழ்வு, தங்கள் வெளியிட்ட செய்தியில் இடம் பெற்றிருக்கும் 'ஏப்பம் விட்டுவிட்டது' என்ற கருத்தாக்கம் பத்திரிக்கை உத்தி என்று பார்த்தாலும் கூட ஏற்றுக் கொள்ள இயலவில்லை, செய்தி இதழ்கள் தான் மனிதர்களின் சிந்தனையை வளர்க்க உதவுகின்றன அதே போன்று பொதுவான சிந்தனைகளையும் தோற்றுவிக்கின்றன. மேற்கண்ட தகவலை படித்த போது குழந்தையின் மறைவு வேதனையை ஏற்படுத்திய அதே வேளையில் செய்தியில் இடம் பெற்றிருந்த நகைச்சுவை எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த செய்தியை தகவல் அடிப்படையில் நகைச்சுவை சேர்க்காமல் கொடுத்திருக்காலம் என்பதே என் கருத்து.

இது போன்ற மிகைப்படுத்தப்பட்ட அல்லது விரும்பத் தகாத சொற்களை செய்திகளில் தவிர்க்க வேண்டும் என்று உங்களின் நாளிதழ் வாசகன் என்ற முறையில் வேண்டுகோள் வைக்கிறேன்

அன்புடன்
கோவி.கண்ணன்

******

இந்த கருத்தை மின்னஞ்சல் வழியாக தமிழ் முரசிற்கு அனுப்பி இருக்கிறேன், வாசகர்கள் கடிதங்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன், என்ன பதில் சொல்லுவார்கள் என்று பார்ப்போம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்