பின்பற்றுபவர்கள்

8 ஜனவரி, 2009

சொர்கவாசல் திறப்பு என்னும் வைணவ மூடத்தனம் !

சொர்கம் நரகம் என்பதே கட்டுக்கதைகள். இவ்வுலகைவிட கொடிய நரகம் ஒன்று இருக்க முடியுமா ? கொத்தடிமைகள் வாழ்நாள் முழுவதும் ஒருவேலை சாப்பாட்டிற்காக சிறைபட்டுக் கிடக்கும் அவலெமெல்லாம் வேறெந்த நரகத்திலும் இல்லாத கொடுமை, 90 விழுக்காடு பெண்களுக்கு இந்த ஆண்கள் ஆளுமை உலகில் வாழ்க்கையே நரகம் தான். பச்சிளங்குழந்தை கூட பாலியல் துன்பறுத்தலில் கொடுமையை அனுபவிப்பதென்பது இந்த உலகில் தான். இதைவிட கொடுமையான நரகம் இருக்கவும் முடியுமா ? அதே போல் சுவர்க்கம் ? பிறரை அரவணைத்து அன்புடன் வாழும் அனைவருக்குமே இவ்வலகம் சுவர்கம் தான், கலப்படமற்ற தாயன்பு, நட்பு, நல்வாழ்க்கை துணை இவற்றை அடைந்தவர்களுக்கு அந்த சூழலில் கிடைக்கும் மகிழ்வையும் இன்பத்தையும் வேறெந்த உலகமும் கொண்டு வந்து தந்துவிட முடியாது. அதையும் ஒருவர் மகிழ்வோடு நினைக்காதபடி, இந்த உலகம் நிரந்தரமல்ல, மாயை என்றெல்லாம் சொல்லிவைத்து வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ள, அல்லது மகிழ்ச்சிக்கு தடைபோட ஆன்மிகம் என்ற பெயரில் முயல்வர்.

சொர்க்கம் நரகம் பற்றி பல்வேறு மதங்களும் பேசுகின்றன. நல்லவர்களுக்கு சொர்க்கமும், கெட்டவர்களுக்கு நரகமும் என்கிற கோட்பாடுகள் வைத்திருக்கின்றன. ஒரு சில மதங்கள் அதிலும் புரட்சியாக... மதத்தைப் பின்பற்றுபவன் கெட்டவனாக இருந்தாலும் மதத்தை ஒப்புக் கொண்டாலே அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவன் சுவர்க்கம் சேர்ந்துவிடுவானாம். அதுவும் நிரந்தர சொர்க்கமாம். அப்படியென்றால் இறக்கும் தருவாயில் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் அவன் அந்த மதத்தை ஒப்புக் கொண்டுவிட்டால் அவனுக்கு சுவர்க்கம் கேரண்டி. அப்படித்தான் ஆட்டோ சங்கர் கூட கிறித்துவத்தை தழுவி சுவர்க்கம் சென்றிருக்கிறான்.

இந்துமதத்தில் வைணவம், சைவம் என இருபிரிவுகள் இருக்கிறது. இதில் சிவனை வழிபடுவோர் இறந்தால் அவர்களுடைய ஈமக்கிரியை அழைப்பிதழில் 'சிவ லோக' பதவி அடைந்ததாகக் குறிப்பிட்டிருக்கும். அதே போன்று பெருமாளை வழிபடும் ஐயங்கார், நாயுடு, யாதவர், காட்டு நாயகர், ரெட்டியார் சமூகத்தினர் இறந்தால் வைகுண்ட பதவி பெற்றதாகச் சொல்லுவார்கள். சிவலோகத்தில், வைகுண்டத்தில் எல்லோருக்கும் பதவிதான் யாரும் சாதாரண பிரஜைகள் கிடையாது :)

இந்த மூடத்தனங்களை வலியுறுத்தவும் நம்ப வைக்கவும் ஆண்டு தோறும் வைகுண்டத்தில் ஒரு சுவர்க்கம் இருப்பதை நினைவு படுத்தும் வண்ணம் சுவர்க்க வாசல் திறப்பு என்னும் நிகழ்வு நடைபெறுகிறது. பெரும்பாலும் சுவர்க்க வாசல் எனச் சொல்லப்படுவது பெருமாள் கோவில்களில் நந்தவனத்தின் கதவுகள் தான். அதைத்தான் அன்று திறந்துவிடுவார்கள். சில பெருமாள் கோவில்களில் நந்தவனம் இல்லை என்றால் பின் வாசலை திறந்துவிடுவார்கள். நாகையில் கூட இரண்டு பெருமாள் கோவில்கள் உண்டு அதில் பெரிதாக இருப்பது சவுந்தராஜ பெருமாள் கோவில், அங்கு நந்தவனம் வழியாக சென்று வருவதாக சொர்க்கவாசல் திறக்கப்பட்டு இருக்கும், மற்றொரு சிறிய வரதராஜ பெருமாள் கோவிலில் இடதுபக்க சுற்றுவல (பிரகார) கதவை திறந்துவிடுவார்கள். அதில் நுழைந்து சென்றால் திறந்த் சாக்கடை தெருவரும், அன்றுமட்டும் முனிசிபல்காரர்களில் தயவால் குளோரின் பவுடர் தூவப்பட்டு இருக்கும். அந்த இடம் தான் சுவர்க்கம் :)

சுவர்க்கம் / நகரம் என்பது முழுக்க முழுக்க மத நம்பிக்கைதான், இந்தியா என்றால் அதில் வாழும் மக்கள் என இந்தியர்கள் தவிர்த்து எவரையும் நினைத்துப் பார்க்க முடியாதோ அது போல் தான் மதங்களால் காட்டப்படும் சுவர்க்கமும், வைணவ சொர்க்கத்தில் பட்டை அணிந்தவர், கிறித்துவர், இஸ்லாமிய, பவுத்தர் இருக்க மாட்டார், அதுபோலவே பிறரது சுவர்கத்திலும் அந்தந்த மதத்துக்காரர்களே இருப்பாதாகவே நம்புகிறார்கள். ஒரு உலகத்தில் வாழும் பல்வேறு நம்பிக்கைக்களுக்கு இத்தனைவிதமான வான் சுவர்க்கமா ? இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் கூட இதை தீவிரமாக நம்புபவர்களை என்னவென்று சொல்வது.

மதங்கள் காட்டும் சொர்க்கம் அனைத்தும் சோம்பேறிகளின் சொர்க்கமாகவே இருக்கிறது. சோம்பேறிகள் தான் உழைப்பின்றி என்னோரமும் ஆனந்தமாக இருப்பதை விரும்புவார்கள். மதங்கள் காட்டும் சொர்க்கம் அனைத்தின் மகிழ்ச்சியும் இதனைத்தான் வலியுறுத்துகின்றன. உழைப்பில்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி அதுவும் நிரந்தரமாக ? அதற்கான வழியைத்தான் மதங்கள் கட்டுகின்றன (எழுத்துப்பிழையல்ல)

இன்னும் எழுதிக் கொண்டே செல்லலாம்... வேறொருபதிவில் பார்ப்போம்.

(தேவருலகம் என்றும் சொல்லப்படுகின்ற சுவர்க்கத்தில் பாலியல் நாட்டத்தில் இருக்கும் பூலோக கட்டுப்பாடுக்கள் எதுவும் செல்லாதாம் - இன்றைய டோண்டு இராகவன் கேள்வி பதிலில் இருந்தது, விருப்பமுள்ளவர்கள் யாரும் யாரோடும் சேரலாம்......ச்சேசேசேசேசேசேசேசேசேசேசேசே)

முகம் சுளிப்பாக இருந்தால் இந்த கட்டுரையை பரிந்துரைக்கிறேன் (இது பரிகாரம் இல்லை பரிதாபம்).

7 ஜனவரி, 2009

அபி அப்பாவை வெறுப்பேற்றுவது எப்படி ?

என் அண்ணன் அபி அப்பா

படத்தை பெரிதாக்கி கிளிக்கி பார்க்கவும் :)

5 ஜனவரி, 2009

நன்றி தமிழ்மணம், மற்றும் பல(ர்) , ஒரு மொக்கை, ஒரு சீரியஸ் !

எனது இப்பதிவில் இட்ட வேண்டுகோள் படி, தமிழ்மணத்தில் இருந்த தவறிய இணைப்பை, இரண்டே நாட்களில் சரி செய்த தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி. அப்பதிவில் சொல்லிய படி,

"வரும் ஆண்டு 2009ல் ஆவது இந்த இணைப்பு தவறை தமிழ்மணம் சரிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். வெகுவிரைவில் நிறைவேற்றினால் உடனே பாராட்டி, நன்றி தெரிவித்து ஒரு பதிவும் இடுவேன்."

தமிழ்மணம் இரண்டு நாள் தாமதமாக சரிசெய்ததால், நானும் இரண்டு நாள் தாமதமாகவே பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு முதல் மொக்கை பதிவு...வழமை போல் ஆதரவு நல்கவேண்டும்.

*****
அடுத்து ஒரு சீரியஸ்,

தமிலீஷ் ஓனர் யாரு?

வால்பையன் எழுதிய இடுகையைப் படித்தவுடன்,

திரட்டிகள் எல்லாம் ஏன் வெளிப்படையாக செயல்படக் கூடாது ? அதில் என்ன தவறு ? என்ற எண்ணம் ஏற்பட்டது.

உதாரணம் தமிழ்மணம் நிர்வாகம் யாரால் நடத்தப்படுகிறது என்கிற விவரங்களை தமிழ்மணம் அறிவித்து இருக்கிறது, மற்ற திரட்டிகளும் தங்களைப் பற்றியும், அதை நடத்துபவர்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கலாமே.

வெறும் புரொபைல் மட்டுமே வைத்திருக்கும் அனானிகள் போலவே விவரங்கள் எதுவும் இல்லாமல் திரட்டும் திரட்டிகளை அனானி திரட்டிகள் என்று சொல்லலாமா ?

*****

* இது மட்டும் இல்லிங்க, தேன் கூடு சாகரன் மறையும் வரை அவர்தான் தேன் கூடு திரட்டியின் உரிமையாளர் என்றே பலருக்கும் தெரியாது, இதுபோல் திடிரென்று தெரியவரும் போது, 'ஐயையோ.....தெரியாமல் போச்சே...முன்பே சொல்லித் தொலைத்திருந்தால் என்ன ?' என்றே நினைக்க வைக்கும்,

* யார் கண்டது....மரணம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்றதே... இவர் 'தமி....' திரட்டியின் உரிமையாளராக இருந்தவர்....... என்று பின்னால் ஒருவர் மறைந்த பிறகு புகழ்பாடுவதைவிட யார் யார் எதை நடத்துகிறார்கள் என்று முன்பே தெரிவது நல்லது. 'திரட்டியின் உரிமையாளர் இவர் என்று முதன்முதலும் கடைசியாகவும் திரட்டி நடத்துபவர் பற்றி மரண அறிவித்தலால் அறிமுகவாவது, திரட்டி நிர்வாகிகளுக்கு கிடைக்கும் நல் அங்கீகாரம், அறிமுகம் அல்ல. :( .

இறந்த பின்பு 'இவர் இந்த திரட்டியின் நிர்வாகியாக இருந்தவர்' என எப்படியும் விசயம் கசிந்துவிடும் என்பதை நினைவில் கொண்டால், கண்ணா மூச்சு ஆட்டம் ஆடுவதை தவிர்க்கலாம்.

* மேலும் திரட்டிகள் தீவிரவாதிகளின் தளம் அல்ல, வெளிப்படையாக யார் அதன் உரிமையாளர்கள், நோக்கம் என்ன என்பதை அறிவிக்கலாம்

* தமிழிஷ் தளத்தில் பார்பனர்களை விமர்சனம் செய்து எழுதினால் பதிவுகள் காணாமல் போய்விடுகிறதாம் (ஒரு பதிவில் படித்தேன்). அதற்கு தமிழிஷ் தளத்தில் இருந்து எதும் சிறப்பான விளக்கம் எதுவும் வரவில்லை. இதுபோன்ற குற்றச் சாட்டுகளை திரட்டிகள் எதிர்நோக்கும் போது இயல்பாகவே திராவிட திரட்டி, ஆரிய திரட்டி என்கிற தேவையற்ற முத்திரைகள் விழும். இதனைத் தவிர்க்க திரட்டி நிர்வாகம் வெளிப்படையாக நடப்பது நல்லது.

முன்பு இது போல் தான் தேன்கூடு பார்பன திரட்டி என்பதாகவும், தமிழ்மணம் திராவிட திரட்டி என்பதாகவும் வதந்திகள் வர.... இரு திரட்டிகளுமே அதனை மறுத்தன.

* தமிழ்மணத்தில் இன்னொரு நல்ல விசயமாக நான் கவனித்தது, பிற திரட்டிகளின் இணைப்பையும் தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறார்கள், பிற திரட்டிகள் இவ்வாறு பெருந்தன்மையாக நடந்து கொள்வதில்லை என்றே நினைக்கிறேன்.

* பதிவர்கள் திரட்டிகளால் புகழ்பெறுகிறார்கள் என்பது போலவே, பதிவர்கள் இல்லை என்றால் திரட்டிகள் காற்றுவாங்கும், பதிவர்களால் தான் திரட்டிகளும் புகழ்பெறுகின்றன. இணைந்து வெளிப்படையாக செயல்படுவது நன்று

* இந்த திரட்டிக்கு அந்த திரட்டி போட்டிங்கிற செய்திகளெல்லாம் கேட்கவே எரிச்சலாக இருக்கிறது, ஊடகத்துறையில் தான் இது போல் போட்டிகள் இருக்கும்

* திரட்டிகள் வெளிப்படையாக இருந்தால் தான் அதன் மீதான நம்பகத்தன்மையில் உறுதி ஏற்பட்டு, பலரால் அறியப்பட்டு புகழ்பெறும்

* திரட்டிகளின் பெருக்கம் தமிழ் பதிவுகள் சூழலில் நலமானதே என்பது எனது தனிப்பட்ட கருத்து.

பின்னூட்டத்தில் இது குறித்தான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

4 ஜனவரி, 2009

ஈழமண்ணில் காங்கிரஸ் நடத்தும் போர் - வீரப்பமொய்லி ஒப்புதல் !

பிரபாகரனைப் பிடித்தால் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: காங்.ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4, 2009, 11:26 [IST]
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டால் அவரை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் வீரப்ப மொய்லி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி இலங்கை அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. இந்திய அரசின் கருத்து விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

****

ஈழவிடுதலைக்கு விடுதலைப் புலிகளையே நாங்கள் நம்புகிறோம் என்கிற ஈழத்தமிழ் மக்களின் பெருமித்த குரல் நன்கு தெரிந்தே, தமிழின இன ஒழிப்பை விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்கிற பெயரில் நடத்தும் இலங்கை அரசுக்கு காங்கிரஸின் முழு ஆதரவு கொடுத்து இருப்பதாக காங்கிரசின் வீரப்ப மொய்லி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

காங்கிரசின் தமிழர் ஆதரவு நிலை(?) தெரிந்தது தான், நடைபெறும் போரில் கொல்லப்படுபவர்களும், அகதி ஆக்கப்படுபவர்களும் அப்பாவித் தமிழர்களே. இலங்கையில் தமிழன் ஒழிப்பிற்கு ஆதரவு கரம் கொடுப்பது காங்கிரஸ்.

போர் நிறுத்தம் ஏற்பட வழியுறுத்துவோம் என்று வாய்ச்சொல் பேசிய திமுக, பாமக கட்சியினர் (இறந்தவர்களை எண்ணி ?) மெளனம் மேற்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு முறையே தமிழின தலைவர், தமிழின காவலர் என்று பெயராம்.

ஈழத் தமிழர்களையெல்லாம் அழித்து இலங்கையில் (மயான) அமைதி ஏற்பட முயற்சிக்கும் காங்கிரஸுக்கும், அதற்கு ஆதரவான திமுக, பாமக கட்சிகளுக்கும் தான் உண்மையில் உலக சமாதான விரும்பிகள், தமிழர் நலன் விரும்பிகள்.

வாழ்க நிரந்தர தமிழின காதலர்கள் மற்றும் அவர்கள் தம் காங்கிரஸ் உறவும் !

3 ஜனவரி, 2009

சக்கர வியூகம் !

வன்னியை இலங்கை இராணுவம் கைப்பற்றியதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. இவை முன்பே ஒரு முறை கைப்பற்றப்பட்ட பகுதி தான் என்பதை தமிழ் சசி தெளிவாக எழுதி இருக்கிறார். எனவே பட்டாசுக்கு காசைக் கரியாக்கி, வீனாக்குபவர்களின் தற்காலிக மகிழ்ச்சியை நான் கெடுக்க விரும்பவில்லை. இந்த சக்கரவியூகம் தலைப்பு வன்னி தொடர்புடையது அல்ல.

******

உலகெங்கிலும் இலக்கிய ஆர்வலர்கள் என்றால் அது மொழி ஆர்வலர்களாகவும், மொழி சார்ந்த துறையில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள், அதற்கு முற்றிலும் விதிவிலக்கு தமிழர்கள், தமிழர்களில் எந்த துறையில் பணிபுரிபவர்களாக இருந்தாலும் இலக்கிய ஆர்வம் என்பது அவர்களது இரண்டாவது திறமையாக பலருக்கு இருக்கிறது. எழுத்து என்பது அனைவருக்கும் பொதுதான். தமிழர்கள் தவிர்த்து ஏனையோர் எழுதும் எழுத்துக்கள் அவர்கள் துறை சார்ந்ததாகவே இருக்கும், மிகச் சிலரே விதிவிலக்காக இருப்பர். ஆனால் தமிழர்களைப் பொருத்து இலக்கிய துறைக்கு பணியாற்றியவர்களில் பலர் குறித்துப் பார்த்தால் அவர்கள் அன்றாட வாழ்வில் வேறு ஒரு தொழிலில் கோலொச்சிக் கொண்டு இருப்பவர்களாகவே இருப்பர்.

மொழிப் பற்று, மொழி ஆர்வம் தமிழர்களை இலக்கியத்துக்குள்ளும் இழுத்து வந்திருக்கும். நம் வலைப்பதிவுகளிலேயே அதனைப் பார்க்கலாம். வெறும் 10 ஆம் வகுப்பு வரை தமிழைக் கற்றோர்கள் பலர் தற்பொழுது மிகச் சிறந்த கட்டுரைகளை தமிழில் எழுதுகிறார்கள். எழுத்து தமிழே அறியாதவர்கள் கூட தன்முயற்சியால் கற்றுக் கொண்டு சிற்சில பிழை இருந்தாலும் சிறப்பாக எழுதுகின்றனர்.


இளைய பல்லவன் என்கிற புதிய பதிவர் 'காஞ்சித் தலைவன்' என்ற வலைப்பதிவு மூலம் ஆகஸ்டு 2008ல் இருந்து பதிகிறார். தனிப்பட்ட வகையில் எனக்கும் அவருக்கும் பழக்கம் இல்லை. பதிவுகள், பின்னூட்டங்கள் வழியாகவே அறிந்திருக்கிறேன். அவரது பதிவு விபரப்படி (ப்ரொபைல்) அவர் பட்டயக் கணக்கராக (சார்டட் அக்வண்ட்) பணிபுரிகிறார். பூச்சு இல்லா எழுத்தில் நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர் என்பது இவரது ஆரம்ப கால எழுத்துக்கள் உணர்த்தின, நடப்பு மற்றும் சிறுகதைகளை எழுதுபவர் என்று அறிந்து கொண்டு இருந்தேன். அதன் பிறகு சக்கர வியூகம் என்னும் வரலாற்று தொடர் எழுதினார். வலைப்பதிவில் எழுதுபவர்கள் வரலாற்றுத் தொடரெல்லாம் எழுத முடியுமா ? அதற்கான உழைப்பை நினைத்தால் இதெல்லாம் கூறற்றது (சாத்தியமற்றது) என்றே நினைக்க வைத்தது. வரலாற்றுத் தொடர் என்ற பெயரில் 'இம்சை அரசன்' போன்று நகைச்சுவை எதாவது எழுதி இருப்பார் தொடர் கொஞ்ச நாள் தொடரட்டும் பிறகு படிக்கலாம் என்று இருந்தேன். ஏறத்தாழ 12 தொடர் பகுதிகள் முடிந்த நிலையில் நேற்று ஒரே மூச்சில் வாசித்தேன். வியப்பு... வியப்பு !

சக்கர வியூகம் - 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் முகலாயர்கள் ஆட்சி ஏற்படுவதற்கான சூழலைச் சொல்லி (மாலிக் கபூர் வருகை பற்றிய தகவல்) அதைத் தமிழக அரசர்கள் தடுக்க முனைவதாக கதை சென்று கொண்டு இருக்கிறது. வரலாற்றுக் கதைகளுக்கே உரித்தான தகவல்கள், வருணனை, காதல், வீரம், இராஜ தந்திரம், தேவையான புனைவு இவையெல்லாம் அழகுற அத்தியாயங்களில் அழகாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. வரலாற்று கதையாசியர்களின் நூல்களில் இருக்கும் தெளிவான நடை இவரது கதையில் இருக்கிறது, அதுவும் இவரது முதல் வரலாற்றத் தொடர் இது என்னும் போது, சாண்டில்யன் போன்றோரை ஒப்பீடு செய்வது தவறென்றாலும் ஓப்பீடுகள் தான் இவரது எழுத்தின் தன்மையையே உணரவைக்கிறது என்ற வகையில், இவர் தொடக்க நிலை வரலாற்று கதையாசிரியர் என்றாலும் அவர்களைப் போல் புகழ் பெரும் தகுதியை இவரால் கண்டிப்பாக வளத்துக் கொள்ள முடியும்.

இவரது கதையின் ஒரு அத்யாயத்தில்

"அரசியல், மதம் ஆகியவை - பாவும், ஊடும் ஒரு துணியில் இருப்பது போல நாட்டில் நிலவுகிறது. அரசனானவன் தன் நாட்டிற்குரிய மதத்தைத் தேர்ந்தெடுப்பதோடு, பிற மதங்களும் இயைந்து வாழப் பாடு பட வேண்டும். அனைத்து மதங்களின் கருத்தும் ஒன்றுதான் என்றாலும், மக்களைப் பிரிக்க மதங்களைக் காலம் காலமாக அரசுகள் பயன் படுத்தி வந்திருக்கின்றன. இறுதியில் அத்தகைய மூடத்தனமான கொள்கைகளாலேயே அவ்வரசுகள் வீழ்ந்திருக்கின்றன."

மதமும் அரசியலும் பின்னிப் பிணைந்து ஒன்றை ஒன்று தற்காத்துக் கொள்கின்றன, அல்லது அவற்றின் அழிவுக்கு அதுவே காரணம் என்பதை இவ்வளவு சுறுக்கமாகவும் தெளிவாகவும் சொல்ல முடியுமா ? என்று நினைத்து வியந்தேன்

மற்றொரு பகுதியில்,

"இது அவசரப் படுவதல்ல சுந்தரா, சொல்லி முடிப்பதற்குள் செய்து முடித்துவிடவேண்டும் என்பதுதான் என் கொள்கை. காலம் இருக்கிறதே என்று நினைத்தால் மேலும் பல தடங்கல்கள் வரலாம். நாம் இப்போது இங்கு வந்ததே ஒரு தடங்கலாகப் படுகிறது. இதனால் நமது திட்டத்தில் தோல்வி ஏற்படலாம்'

காலம் தாழ்த்துகள் மற்றும் எச்சரிக்கை உணர்வு இவற்றைத் தொடர்ப்பு படுத்தி மிக அழகாக எதையும் குறித்த நேரத்தில் செய்வதில் தான் வெற்றியின் முதல் அத்யாயம் எழுதப்படுவதாக உணர்த்தி இருக்கிறார்

சில குறைகளும் உள்ளன, தொடரில் பேச்சுரையில் (வசனம்) பல இடங்களில் வடமொழி தாக்கம் இருந்தாலும் அது இயல்பு என்று நினைக்கலாம். ஆனால் இந்தி ஆளுமையே இல்லாத காலங்களில் நடக்கும் கதையில் எழுதப்பட்ட பேச்சுரையில் 'ஜாக்கிரதை, அதிகம்' போன்ற இந்தி சொற்களை தவிர்த்திருக்கலாம்.

///அவரிடம் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். //அதிக//

கதையில் ஒட்டவில்லை. ஜாக்கிரதை, அதிகம் இவற்றிற்கு மாற்றான சொல் எச்சரிக்கை மற்றும் மிகுதி ஆகிய சொற்களைப் பயன்படுத்தி இருக்கலாம்

தமிழில் தற்பொழுது புழக்கத்தில் இல்லாத 'போந்த' என்ற சொல் பயன்படுத்தி இருக்கிறார்.

//இருவருமே சற்று நேரம் கழித்தே படுக்கையறையை விட்டு வெளிப்போந்தனர். //

வெளிப்போந்தனர் என்றார் வெளியேறினர், வெளியே வந்தனர் என்றே பொருள், போந்தனர் என்ற சொல் வருவது என்ற பொருளில் மறைமலையடிகளார் காலத்தில் கூட பயன்பட்டு வந்தது. அந்தச் சொல்லை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.

தொடர் இன்னும் முடியவில்லை 12 பகுதிகள் வரை எழுதி இருக்கிறார். முழுவதுமாக முடித்து நூலாக வெளியிடவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். அப்படி நூலாகவெளி வரும் போது வலைப்பதிவாளர் ஒருவர் எழுதிய முதல் வரலாற்று நாவலாக அது அமையும்.

இளைய பல்லவன் மென்மேலும் பல இலக்கியங்கள் படைத்துப் பலரால் பாராட்டப் படவேண்டும், அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வலைப் பூங்காவில் பல தரமான விதைகள் ஊன்றப்பட்டு, செழித்து வளர நல்லச் சூழலுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன. அத்தகைய விதைகளாக ஊன்றப்பட்டு துளிர்விடுபவர்களில் ஒருவராக இளைய பல்லவன் இருக்கின்றார்.

இந்த ஆண்டின் முதல் பதிவு சக பதிவர் ஒருவரை பாராட்டித் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்