பின்பற்றுபவர்கள்

8 மே, 2007

தாத்தா சொத்து பேரனுக்கா ?

சன் தொலைக்காட்சியும், தினகரன் நாளிதழும் இணைந்து நடத்தும் வரலாற்று சிறப்பு மிக்க கருத்து கணிப்பு ஏ.சி நெல்சன் நிறுவனத்தால் நடத்தப்பட்டது நாளை வெளியிடப் படுகிறது.

ஒரிஜினல் கருத்து கணிப்பு கேள்வி : கருணாநிதியின் அரசியல் அடுத்த வாரிசு யார் ?

செய்தி : இரவு 8 மணி தமிழ் செய்தி - சன் டிவி

5 மே, 2007

நான் 'கண்ட' பெரியார் !

பெரியார் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்றதும், தமிழன் என்ற படம் முறையில் எப்பொழுது வரும் ? என்று ஆவலுடன் இருந்தேன். இன்று (05-மே-2007) நிறைவேறியது. படத்தின் ஆரம்பமே பெரியார் எதிர்பாளர்கள் முன்வைக்கும் 'பெரியார் குளிக்காதவர்' என்பதைச் சொல்லவரும் காட்சியுடன் நேர்மையாக எடுக்கப்பட்டு இருந்தது. தாழ்த்தப்பட்டவன்,படிக்காதவன், குளிக்காதவன் என்ற சொற்களில் ஒருவருடைய கருத்துக்களை சிதைக்க முனைபவர்களை புறம் தள்ளவேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்பது பின்பு புரிந்தது.

பெரியாரின் தந்தையின் வணிக மண்டியில் ஆரம்பித்து படம் பகுத்தறிவு வெடித்துணுக்குகளுடன் தொடர்கிறது. பின்னர் அவரது தங்கைக்கு நடைபெறும் 'பால்ய விவாகமும்' அவர் தங்கை வயதுக்கு வரும் முன்னே கைம்பெண் ஆவதையும், அதன் பிறகு தங்கைக்கு வேறு ஒரு திருமணம் அவரே ஏற்பாடு செய்து நடத்தி வைப்பதையும் காட்டினார்கள். பின்பு முறைபெண் நாகம்மையுடான காதல்... பெற்றோர் எதிர்ப்பு, நாகம்மையின் தற்கொலை முயற்சி அதன் பிறகு பெரியார் - நாகம்மை திருமணம்... தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் மனைவியின் விருப்பத்துக்கு இணங்க கோவில் வாசலில் அவருக்காக காவல் இருப்பது, பின்பு கோவிலுக்குள் நாகம்மையை சில ரவுடிகள் துரத்த... நாகம்மை வெளியில் ஓடிவருகிறார். .. 'ஆண்டவன் ஆயுதங்களுடன் கோவில் முழுதும் நிறைந்திருந்தாலும் ஆபத்துக்கு உதவுபவன் மனிதன் தான்' என்று பெரியார் நாகம்மையிடம் 'நச்'சென்று சொல்லுவார்.

விரத உணவில் கோழி காலை மறைத்து வைத்து பெரியார் அவருடைய அம்மாவை ஏமாற்றுவது போன்றவை சில நகைச்சுவை காட்சிகள். தலைமறைவாக இருக்கும் ஒரு சாமியாரின் தம்பியை நீதிமன்ற நோட்டீஸ் கொடுப்பதற்காக தபேதாருக்கு பெரியார் பிடித்துக்கொடுக்க, உயர்சாதிக்காரர்களின் கோபத்துக்கு ஆளாகிறார். அவர்கள் முறையிட்டதும் பெரியாரின் தந்தை பெரியாரை செருப்பால் அடித்து வீட்டைவிட்டு வெளியேறும் படி சொல்கிறார். அதன் பிறகு பெரியாரின் பயணம் காசி நோக்கிச் செல்கிறது. அங்கு இரண்டு பிராமணர்களுடன் சேர்ந்து கதா கலேட்சேபம் செய்கிறார் ( இராமர் அணிலுக்கு கோடு போட்ட பாடல்) ஒரு நாள் பசிக் கொடுமையில் காசியில் இருக்கும் செட்டியார் சத்திரத்திக்குள் மூவரும் நுழைகின்றனர். அங்கே பிராமணர்களுக்குத் தான் உணவு என்றதும் பசிக் கொடுமையால் எச்சிலையில் எஞ்சியதை தின்கிறார். பின்பு ஒரு சாமியாருக்கு தேவையான பொருள்களைக் கொண்டுவரும் எடுபிடியாக சேருகிறார். அங்கிருந்த பெரிய சாமியாரின் காம லீலைகளை அறிந்து அங்கிருந்து ஊருக்கு திரும்புகிறார்.

அவருரைய தந்தையாரின் மறைவுக்குப் பின்பு பல்வேறு பொறுப்புகள் அவருக்கு வந்து சேர... அதுவரை நடிப்பது சத்யராஜ் என்று தெரிந்தது... அதன் பிறகு கண்ணாடி, மீசை என வயதிற்குறிய தோற்றம் ஏற... சத்தியராஜின் உருவம் மறைய பெரியார் தோன்ற ஆரம்பிக்கிறார். இடையிடையே ராஜாஜி அவர்களுடன் ஆழமான நட்பு, காந்திஜியுடன் உரையாடல் என செல்கிறது... ராஜாஜியின் வேண்டுகோளுக்கினங்கி... இட ஒதுக்கீடு கோரிக்கையுடன்... காங்கிரசில் பெரியார் சேர்ந்ததும் அந்த இயக்கத்திற்கு தமிழகத்தில் உரமாகிறார். கதர் புடவையை தன் அம்மாவை உடுத்த வைக்க பெரியார் சொல்லும் சாமியார் காரணம், 'ஸ்ரீலஸ்ரீ காந்திமகான் சொல்லி இருக்கிறார்' என்று காந்திஜி சொன்னதை பெரிய சாமியார் சொல்லியதாக தனது தாயிடம் சொல்லி அவருடைய ஒப்புமை பெற வைப்பதும் நகைச் சுவை வெடி.

வைக்கம் போராட்டத்தை தொடங்கி வைத்தும், அங்கு எதிர்ப்பு கிளம்ப... அங்குள்ள நம்புதிரிகள் சத்ரூசம்ஹாரம் என்ற பெயரில் பெரியார் அழிவதற்கு நடத்துகின்றனர். திருவிதாங்கூர் மகாராஜா இறந்து போகிறார். உங்களுக்கு நடத்திய யாகம் மன்னரை காவு கொண்டதாக பெரியாரின் நண்பர் சொல்ல... பெரியார் அவரை 'இது அதைவிட பெரிய மூடநம்பிக்கை' என்று திட்டுகிறார். மன்னரின் மறைவை ஒட்டி எல்லோரும் விடுதலை பெறவே, வைக்கத்தில் தெருநுழைவு போராட்டம் வெற்றி பெருகிறது . சிறைசென்று சாதித்து வைக்கம் வீரராக திரும்புகிறார். பின்பு காஞ்சி காங்கிரஸ் மாநாட்டில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பெரியார் தன் கோரிக்கையை மீண்டும் வலியுருத்த ராஜாஜியும், திலகரும் எதிர்க்க... காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்குகிறார். பின்பு ரஷ்யா சென்று அங்கு மார்கசியத்தின் கொள்கைகள் பிடித்துப் போகவே, மக்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று மார்கசிய கொள்கைகளை ஆதரிக்கிறார். ஒரு நாள் நாகம்மை மறைந்துவிட ... நாகம்மை தன்னிடமிருந்து விடுதலைப் பெற்றதாக சொல்கிறார். தேவதாசி முறையை தடுத்து நிறுத்துவது... தாழ்த்தப்பட்டவர்களுக்கு தண்ணீர்பிடிக்கும் உரிமை, எழுத்து சீர்திருத்தம் என போராட்டமாகவே செல்கிறது நிகழ்வுகள்.

இடையில் மணியம்மை பெரியாரின் கொள்கைப் பித்தினால் அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பிக்க ... ஒரு நாள் பெரியாருக்கும் - மணியம்மைக்கும் பதிவு திருமணம் நடக்கிறது. விமர்சனம் செய்துவிட்டு திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா வழி உதயமாகிறது. காமராஜருக்கு ஆலோசனை சொல்லி அவரை காங்கிரசுக்கு தலைமை ஏற்க வைக்கிறார் பெரியார். பின்பு அண்ணா ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அண்ணா - பெரியாரின் உணர்சி மயமான சந்திப்பு, மணியம்மையை மேடைகளில் விமர்சித்ததற்காக அண்ணா மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிகள் மிகச் சிறப்பானவை. அனைவரும் கோவிலில் நுழைந்து அர்சனை செய்யும் உரிமை தன் காலத்தில் நிகழவில்லை ... இது தன் நெஞ்சில் குத்திய முள் என்று சொல்லும் போது உண்மையில் நெஞ்சில் முள்தைக்க மாரடைப்பில் இறக்கிறார். காந்திஜியை தேச தந்தையாக ஏற்று எந்த அரசாங்க பதவியிலும் இல்லாத ஒருவருக்கு அரசுமரியாதை அடக்கம் செய்ததைக் காட்டி எதிர்ப்புகளை சமாளித்து பெரியாருக்கு கருணாநிதி அரசு, அரசு மரியாதையில் அடக்கம் நடைபெறுகிறது.



இந்த இடத்தில் பெரியார் மறைவை ஒட்டி எடுக்கப்பட்ட உண்மை காட்சிகளை காட்டினார்கள். படம் முடிந்துவிட்டதா ? என்று நினைக்க வைத்துவிட்டது.

பெரியாரே தமிழக கட்சிகள் (பிஜேபி தவிர) அனைத்திற்கும் சொந்தமானவராக இருக்கிறார். என்பதை படம் சொல்லாமல் சொல்லி இருந்தது. உண்மை தமிழர்கள் தந்தை பெரியார் என்று அழைப்பது ஏன் என்பதை உணரவைத்தது.

படத்தில் எம்ஜிஆருக்கு 1 காட்சி, கலைஞருக்கு 2 காட்சி, வீரமணிக்கு 2 காட்சி என ரொம்பவே சுருக்கி இருந்தார்கள். பெரியாரே படம் முழுவது நிறைந்து இருந்தார்... இன்றைய தலைவர்கள் படத்தை ஆக்கிரமிக்காததற்கு இயக்குனருக்கு பாராட்டுச் சொல்லவேண்டும். இடையில் பெரியார் - அம்பேத்கார் சந்திப்பு. அம்பேத்கார் பெரியாரை புத்தமததை தழுவ சொன்னதும்... இந்து மதத்தில் இருப்பதால் என்னால் அதில் களையெடுக்க முடிகிறது. ..என்று பளிச் பதில் சொல்வார்.

படத்தில் பிராமணர்களின் பங்களிப்பும் மிகுதியாகவே இருக்கிறது.

மதன் பாப் (மார்வாடி?), ஒய்ஜி மகேந்திரன், சொர்ணமால்யா, மற்றும் பல நிஜ பிராமணர்கள் நடித்து இருந்தனர். பெரியார் துவேசம் தமிழ்நாட்டில் ஒழிந்து கொண்டிருக்கிறது என்பதாக நான் அவர்கள் மூலம் கருத்துகிறேன். வரலாற்று நிகழ்வை அழகாக படம் ஆக்கி தொய்வில்லாமல் எடுத்துச் சென்றதில் இயக்குனர் இராஜசேகரன் வெற்றி பெற்றி இருக்கிறார். பெரியார் பற்றி அறியாமையில் எதிர்பவர்கள் (வேண்டுமென்று எதிர்பவர்கள் அல்ல) அவர்களுக்கு பிற்காலத்தில் பெரியாரின் வாழ்வு, போராட்டுக் குறித்து அறிய செய்ய திரைப்பட குறுந்தகடை (வி.சி.டி) வாங்கி பரிசளிக்கலாம்.

வித்யாசகர் திறன் முழுவதையும் இசையிலும், பின்னனி இசையிலும் கையாண்டு இருக்கிறார். தங்கர்பச்சான் ஒளிப்பதிவில் தன் திறனை மேலும் மெய்பித்து இருக்கிறார்.


படம் வெற்றியா தோல்வியா ?


ம்.... படம் வெற்றிப் பெற்றால் வருத்தப்படுபவர்களைப் பார்த்தும், தோல்வியானால் துள்ளிக் குதிப்போரையும்ம் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி ! அவர்களுக்கு இருக்க வேண்டிய கவலை !
:)))

அன்புடன்,
- கோவி.கண்ணன்

4 மே, 2007

தமிழ்தான் இந்தியாவின் வேர் - ஜெயகாந்தன் !

இந்திய இலக்கியத்தின் வேர் தமிழகத்தில்தான் உள்ளது. இந்தியில் வருவது மட்டுமே இலக்கியம் அல்ல என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.

கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. அவர் எழுதிய ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதைத் தொகுதிக்காக இந்த விருது கிடைத்துள்ளது.

இதையொட்டி மேத்தாவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. நர்மதா பதிப்பகம், திருமகள் பதிப்பகம், கவிதா பதிப்பகம், குமரன் பதிப்பகம் ஆகியவை இணைந்து இந்த பாராட்டு விழாவை நடத்தின.

இதில் ஞான பீட விருது பெற்ற ஜெயகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வழக்கம் போல அணலும், ஆணித்தரமும் தெறிக்கப் பேசினார் ஜெயகாந்தன்.

இந்தி இலக்கியங்கள் மட்டுமே இந்திய இலக்கியங்கள் என்று கூறுவோர் வடக்கில் அதிகம் உள்ளனர். ஆனால் அது தவறு. இந்தியாவின் வேர் தெற்கில் தான் உள்ளது. குறிப்பாக தமிழத்தில்தான் உள்ளது.

இமய மலையையும், கங்கை நதியையும் தெற்கில் உள்ளவர்கள் போன்று யாரும் பாடியதில்லை. இவ்வளவு ஏன், இமயமலை அடிவாரத்தில் உள்ளவன் கூட அதைப் பற்றி கவிதை பாடி இருக்க மாட்டேன். ஆனால் நம் பாரதியோ மண்ணும் இமயமலை எங்கள் மாமலையே என்று பாடினான்.

சில விருதுகளால் பெறுபவர்களுக்கு பெருமை. சில நபர்களால் அந்த விருதிற்கு பெருமை. அப்படி விருதிற்கு பெருமை சேர்க்கக் கூடியவராக மேத்தா விளக்குகிறார்.

முன்பு நான், இவர்கள் எல்லாம் புதுக்கவிதை என்ற பேரில் அசட்டுத்தனம் செய்கிறார்கள் என்று கூறியதுண்டு. ஆனால் அக்கருத்தை இன்று நான் மாற்றிக் கொள்கிறேன்.

இங்கே நிறைய கவிஞர்கள் வந்துள்ளனர். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழால் நாங்கள் இணைந்துள்ளோம் என்றார் ஜெயகாந்தன்.

நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வாலி, மு.மேத்தா எழுதிய நபிகள் நாயகத்தின் வரலாறு என்ற புதுக்கவிதை நூலை வாசித்த பின்பு தான், எனக்கு ஒரு உந்துதல் ஏற்பட்டு அவதார புருஷன் என்று ராமபிரானை பற்றி புதுக்கவிதை வடிவில் எழுதினேன் என்றார்.

கவிஞர்கள் முத்துலிங்கம், சிற்பி, பாலா, பழனிபாரதி, பா.விஜய் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.





'தமிழர்கள் தங்களுக்கு தானே நக்கிக் கொள்ளும் நாய்கள்' - பொன் மொழி புகழ் ஜெயகாந்தனுக்கு ஞானம் கிடைத்து இருக்கிறது. இன்னும் தமிழ் நாட்டில் பலருக்கும் கிடைக்கனும் !

2 மே, 2007

சிரிக்கலாம் வாங்க (1) !


மொழி, கடவுள், அடிமைத்தனம்

மொழிகள் என்பது வெறும் தொடர்பு சாதனாமா ? இல்லை. அது ஒரு இனத்தின் அடையாளம். தனக்கென்று மொழிகள் உள்ள இனங்களே போற்றப்படுகின்றன. தனது மொழியைப் பரப்புவதன் மூலம் அந்த இனம் மற்ற இனங்களைவிட உயர்வானவர்கள், நாகரீகத்தில் முன்னேறியவர்கள் என்று நினைக்க வைத்துவிட முடியும். நமது ஆங்கில மோகமும் அப்படித்தான் வெள்ளைக் காரர்கள் உயர்வானவர்கள், உயர்ந்த பண்பாடுகள் உள்ளவர்கள் என்று நினைக்கிறோம். உலகம் முழுதும் ஆதிக்கம் செலுத்த வெள்ளையர்கள் செய்தது ஆங்கில மொழியைப் பரப்பியது. ஒரு மொழி நன்கு வேகமாக வேறு ஒரு மொழி பேசும் இடத்தில் வளரும் போது அவ்வின மக்கள் தங்கள் மொழியைக் குறைத்துமதிப்பிடுவர். எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்வது தவறே இல்லை. ஆனால் தன் மொழியின் பயன்பாட்டைக் குறைக்கும் அளவுக்கு வேற்று மொழியானது ஒரு இன மக்களிடம் புழங்கும் போது பெரும் ஆபத்தை நோக்கியே செல்கிறது, பண்பாடு அழிகிறது முடிவில் தேவையற்றது பயனற்றது என்று தாய்மொழியே அழிகிறது. அடுத்த நூற்றாண்டில் தனக்கென ஒரு மொழி இல்லாத இனம் என்று ஏளனம் செய்யப்படுகிறது.

இதேதான் கடவுள், இறைவன், இறைநம்பிக்கை என்ற விசயங்களிலும் நடக்கிறது. நான் இங்கு மதம் என்று பொதுவாக குறிப்ப்பிட வில்லை. சர்சைகளுக்குள் செல்ல விருப்பம் இல்லை. உலகில் ஆதி காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனமும் தத்தம் கடவுளைக் வழிபட்டுக் கொண்டிருக்கின்றன, அது பின்னால் மதம் என ஒருங்கினைக்கப்பட்டு மதநூல்கள் ஏற்படுத்தப்பட்டன. தன்னுடைய நம்பிக்கை சார்ந்த அல்லது கடவுள், இறைநம்பிக்கைகளை மாற்று இனத்தாருக்கு பரப்புவதன் மூலம் தங்கள் இனமே உயர்ந்தது என்று நிறுவமுடியும். ஓரளவு கூர்ந்து பார்த்தால் இது உண்மைதான் என நினைக்க வைக்கிறது. இந்திய மதங்களைவிட மேலை நாட்டு மதங்கள் எல்லாவிததிலும் உயர்ந்தது என்று நினைக்கிறோம், நம்ப வைக்கப் படுகிறோம், அது உண்மையாகக் கூட இருக்கலாம். இந்தியர்கள் மீது ஆசிய நாடுகள் அன்பு வைத்திருப்பதற்குக் காரணம் புத்தர் இந்தியாவில் பிறந்தவர். புத்தம் இந்தியாவில் பரவி இருந்ததல் நாம் உயர்ந்தவர்கள் என்று ஒரு வேளை ஆசிய நாடுகளால் போற்றப்பட்டிருக்கும்

இந்தியாவில் நாட்டார் தெய்வ வழிபாடுகள் காணமல் போனதும், தங்கள் பேசும் மொழியே 'தீண்டத்தகாதவர் பாசை' என்று சொல்லும் போதும் யாருக்கும் சுரனை இல்லாமல் போனதற்கும் தங்கள் தெய்வம், மொழி ஆகியவற்றைவிட மற்றொன்று உயர்ந்தது என்று நினைக்க வைத்து இதுவே தேவ பாசை, நாங்கள் வணங்கும் கடவுள்களே உயர்ந்தது என்று சொல்லியதை நம்பியதால் தான். நீங்கள் தீண்டத்தகாதவர்கள் ஊருக்குள் வரக்கூடாது...உங்கள் சாமிகளும் தீண்டத்தகாதவை ஊருக்கு வெளியில் எல்லையில் நின்று கொண்டு எங்கள் தெய்வங்களுக்கு 'எல்லை சாமிகளாக' காவல், ஏவல் செய்யட்டும் என்று நடந்தேறி இருக்கிறது. ஒரு இனம் அடிமைப் பட இரண்டு விசயங்கள் அழிய வேண்டும் ஒன்று மொழி, இரண்டு வணங்கும் தெய்வங்கள்... இதை இழந்த இனங்களே அடிமையாக ஆகி இருக்கின்றன. இந்தியாவில் வருண அமைப்புகள் தோன்றி மக்கள் பிளவானதற்கும் காரணம் மொழி, தெய்வம் போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டு அவைகளில் சொல்லப்பட்டது உண்மை, அவை எல்லாம் உயர்ந்தது என்று நினைத்து அவைகளை பின்பற்ற ஆரம்பித்தது தான்.

இதுபற்றி ஆழமாக எவரேனும் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.


மாற்றுக் கருத்துடையோர் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்