பின்பற்றுபவர்கள்

4 செப்டம்பர், 2016

தெரியாமல் போய் இருக்கலாம்...

முன்பெல்லாம் அலைபேசிகள் இல்லாத காலத்தில் அலுவலகம் வழியாக பழகிய நண்பர்களை அந்த அலவலகத்தின்  தொடர்பு முடியும் போது கிட்டதட்ட முடிந்துவிடும், நெருக்கமான நண்பர்கள் ஒருவருக்கொருவர் இல்லம் வரையிலான அறிமுகம் கிடைக்கப்பெற்றவர்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும்.  பேச்சிலராக இருந்த காலகட்டத்தில் நம்முடன் பழகிய நண்பர்கள் எத்தனையோ அதில் ஒரு சிலரை என்றாவது பார்ப்போம் என்று நம்பிக்கைகள் மட்டும் இருக்கும், தற்போது போன்று முகநூல் மற்றும் பிற சமூக ஊடகங்கள் சாராத காலத்தில் தொடர்பறுந்த நட்பை தொடர்வதற்கான வாய்ப்புகள்  மிக அறிது, அப்படியும் பார்க்க நினைக்கும் நண்பர்கள் முகநூல் கணக்கு துவங்கி இருப்பார்களோ என்ற ஊகத்தில் எதிர்ப்பார்ப்பில் அவ்வப்போது ஊர் பெயர், இனிசியல், தந்தை பெயர் மற்றும் நண்பர் பெயர், பள்ளி கல்லூரி, முடித்த ஆண்டு, வேலை பார்த்த இடம் என்ற குறிச் சொற்களாக தேடித் தேடி சிலரை கண்டுபிடித்து 15-20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர்களைத் தேடிச் சென்று கட்டிப்பிடித்து மகிழ்ந்ததுண்டு.

என்னுடன் வேலை பார்த்த நண்பர் ஒருவர் பெயர் சவுரி ராஜன்,  1989 வாக்கில் ஒன்றாக வேலை செய்திருந்தோம், சென்னையில் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்திருக்கிறோம்,  பிறகு 1989 - 97 வரையில் அவர் வேலை செய்த இடத்திற்கு நானோ அல்லது நான் வேலை செய்யும் இடத்திற்கு அவரோ சென்று ஆண்டுக்கு ஒருமுறையேனும் சந்தித்துக் கொள்வோம், நான் சிங்கை வந்த பிறகு அவருடன் முற்றிலும் தொடர்பு அறுந்து போனது, அதற்கு முன்பே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது, என்னுடைய அன்றைய சூழலில் என்னால் அவரின் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை, அதற்கும் முன் ஒருமுறை அவர் அரும்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த போது அவர் தங்குமிடம் இருக்கிறேன், அவரே அப்போது அழைத்துச் சென்றதால் எனக்கு முகவரியும் தெரியாது, 97 க்கு பிறகு முற்றிலும் தொடர்பு அறுந்துவிட 2013 வாக்கில், பதினைந்து ஆண்டுகள் கழித்து எதற்கும் பழைய அலுவலகம் இணைய தளம் (http://kores.in/) துவங்கி இருந்தால் ஒருவேளை அதில் தொடர்பு எண்கள் எதேனும் இருக்கும், முயற்சித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்து அலைத்தால் நண்பர் தற்போதும் அதே நிறுவனத்தில் மதுரையில் பணிபுரிவதாக சொல்லி அலைபேசி எண்ணைக் கொடுத்தார்கள்,  அலைபேசியில் பேசிவிட்டு, தமிழகம் சென்ற போது அவரைப் பார்க்க வேண்டும் என்றே மதுரைக்குச் சென்றேன், என்னை இரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்றார்.

15 ஆண்டுகள் ஆகிவிட்டதே நான் இன்னும் பழைய நண்பராகவே நினைக்க, 'சிங்கப்பூர்' பின்புலத்தில் இருந்து வந்ததால் என்னை பழைய படி டா போட்டு அழைத்துப் பேச நண்பர் தயங்கி 'ங்க' போட, நாய செருப்பால் அடி என்று நான் கடிந்து கொண்டு உரிமையில் ஒருமைக்கு மாறி இயல்பாக பேச அன்றைய பொழுது இருவரும் விடுபட்ட கதைகளை பேசிக் கொண்டோம், நான் மதுரையில் இருக்கேன், குடும்பம் சென்னையில் இருக்கிறது சென்னைக்கு வரும் போது சொல்லு நான் உன்னை வீட்டுக்கு கூட்டிச் செல்கிறேன் என்றார், பிறகு பிரியா விடைபெற்றோம்,  அதன் பிறகு ஒரு சில முறை நான் சென்னை செல்லும் போதெல்லாம் அழைத்துப் பேசுவேன், ஒரு முறை சென்னையில் இருந்தார், வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார், ஆனால் அன்றைக்கு அடைமழை சாலைகள் போக்குவரத்து இடையூறு என்று அவரது குடும்பத்துடன் எனது சந்திப்பு இயலாமல் போய்விட்டது

பிறகு சென்ற ஆண்டு மே மாதம் மும்பை சென்றிருந்த போது அங்கிருந்தே அவருக்கு அலைபேசினேன், மும்பையில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு இருந்தபடியால் எனக்கு உணவு மற்று சுற்றிப் பார்க்கும் இடம் குறித்து நிறைய தகவல்கள் சொன்னார், இப்ப சென்னைக்கே மாற்றலாகி வந்துவிட்டேன், சென்னை வரும் போது சொல்லுடா வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன் என்றார்.   

பிறகு ஜூன் மாதம் திரும்பவும் மும்பை சென்றிருந்தேன், அங்கிருந்தே அவரது அலைபேசிக்கு அலைத்தேன், எதிர் முனையில் வயதான பெண்குரல், நீங்க யார் பேசுகிறீர்கள் ? அவரை எப்படித் தெரியும் போன்ற அனைத்துவிவரங்களையும் கேட்டுவிட்டு 'அவர் (சவுரிராஜன்) சென்ற வாரம் மாரடைப்பால் இறந்துவிட்டார்' நான் அவங்க மாமியார் தான் பேசுகிறேன், என் பொண்ணு (நண்பரின் மனைவி) அழுதுகிட்டே இருக்கா ஒருவாரமாக சரியாக சாப்பிடவில்லை... அவர் பையன் +12 படிக்கிறான், சரியாகவே படிக்கமாட்டேன்கிறான், என்ன செய்றது என்றே தெரியவில்லை என்று கலங்கிய குரலில் கூறினார். சென்னை வந்தால் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறி  மற்றொரு அலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கினேன்

கேட்க கேட்க நாம் ஒருவேளை அவரை சந்திக்காமலே இருந்திருக்கலாமோ? இ(ப்ப)டியான தகவலைக் கேட்கவா 15 ஆண்டுகள் கழித்து அவரை தேடிக் கண்டுபிடித்தேன், ஒருவேலை தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால் இன்னும் என் நினைவில் எங்கு வாழ்ந்து கொண்டிருப்பாரோ ? 

நண்பர் குடும்பத்தை இதுவரை சந்தித்தே இல்லை, அலைபேசி எண்ணை அழைத்து அவர் வீட்டுக்கு சென்று அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி அவரைப் பற்றி கேட்டு ஆறி இருக்கும் புண்ணை கிளறிவிடுவது என்பது தவிர்த்து என் அறிமுகம் அவர்களுக்கு எந்த பயனும் அளிக்காது என்பதால் நான் அவர் விட்டுச் சென்ற குடும்பத்தை சந்திக்க செல்லவே இல்லை

நான் என்ன செய்திருக்க வேண்டும் ?

நேற்று எழுதிய பதிவின் பின்னூட்டத்தில் பதிவர் இராஜ நடராஜன் மறைவு குறித்து வரூண் குறிப்பிட்டு இருந்தார்,  இராஜ நடராஜன் மறைவு கூட எனக்கு தெரியாமலே போய் இருக்கலாம், என்றாவது சந்திக்க முடியும் என்ற எண்ணிக் கொண்டிருந்த பதிவர்களில் அவரும் ஒருவர், என்னைப் போல் பலருக்கும் பிடித்தவர், காற்றுக் குமிழி போல் வண்ணங்களை காட்டி மறைந்துவிட்டார் :(4 கருத்துகள்:

தனிமரம் சொன்னது…

செய்தி அறிந்தும் போய் ஒரு ஆறுதல் சொல்லாவிட்டால் நட்பாக இருந்து என்ன பயன்? நடா அண்ணாவின் இழப்பு பேரிழப்பு!

கோவி.கண்ணன் சொன்னது…

//தனிமரம் கூறியது...
செய்தி அறிந்தும் போய் ஒரு ஆறுதல் சொல்லாவிட்டால் நட்பாக இருந்து என்ன பயன்? //

நான் அவர் வீட்டுக்கு சென்று, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரைப் பற்றி கேட்டு... மனது கொஞ்சம் கொஞ்சமாக ஆறி இருப்பார்கள், அதை திரும்ப கிளறி விடுவானேன் என்று பார்க்கிறேன், கண்டிப்பாக ஒருநாள் சென்று பார்த்துவரவேண்டும், நடக்கும்

வேகநரி சொன்னது…

அவர் வீட்டுக்கு சென்று அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி அவரைப் பற்றி கேட்டு ஆறி இருக்கும் புண்ணை கிளறிவிடுவது என்பது தவிர்த்து என் அறிமுகம் அவர்களுக்கு எந்த பயனும் அளிக்காது - என்பதே உண்மை[இதில் நானும் உங்க மாதிரி தான்]ஆனால் அவரின் நண்பர் தெரிந்தும் வரவில்லை என்று தான் அவர்கள் சொல்வார்கள்.

Nanjil Siva சொன்னது…

மனிதர்களின் மிகப்பெரிய துன்பம் சக மனிதர்களின் மரணமே ... ''சாவே உனக்கும் ஒரு நாள் சாவு வந்து சேராதோ'' என்றுதான் சபிக்க தோன்றுகிறது ...
https://www.scientificjudgment.com/

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்