பின்பற்றுபவர்கள்

19 ஜூன், 2013

பாமெண்ணையால் வந்த வினை !

செய்திகளில் படித்திருப்பீர்கள், கடந்த மூன்று நாட்களாக கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் புகைமூட்டம், ஜூன் மாதம் துவங்கி அக்டொபர் வரையிலும் இந்த பகுதிகளில் புகைமூட்டம் இருக்குமாம், இந்தோனேசியா சுமத்திரா தீவில் காட்டுத்தீ 'ஏற்படும்' அதனால் தான் புகை என்றே நான் இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறேன், வெயில் காலத்தில் காட்டில் தீ பற்றுவது இயல்பு, அது காட்டுத்தீயாக பரவி புகை மூட்டம் கிளம்பும் போல என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். 

சிங்கப்பூர் துவங்கி மலேசியா கோலாலம்பூர் நோக்கிய பேருந்து பயணத்தில் வழியெங்கும் பாம் எண்ணை மரங்களைக் காணலாம், ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் காட்டுப்பகுதிகளை அழித்து தான் அவை உருவாக்கியுள்ளனர் என்பது அவற்றைப் பார்க்கும் பொழுதே விளங்கிக் கொள்ள முடியும். தென்னை மரங்களைவிட பாம் எண்ணை மரங்கள் மகசூல் மிகுதியாகக் கொடுத்து முதலாளிகளுக்கு மிகுதியான பணம் ஈட்டித்தருவதால் மலேசியாவில் கிட்டதட்ட பாதி நாட்டு பரப்பளவில் பாமாயில் விவாசயம் தான். 

கடந்த மூன்று நாளில் இன்று உச்சமாக சுற்றுச் சூழல் காற்று எண் 290 (PSI index) தொட்டு இருக்கிறது, முன்பு 1997ல் 224 ஆக இருந்ததே உயரிய அளவாம், அது இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. காலையில் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது 120....140... பகல் 2 மணிக்கு 160 பின்னர் 4 மணிக்கு 172 ஐ நெருங்கியது. பிறகு குறையவே அலுவலகம் முடிந்து மாலை 8 மணிக்கு 190ஐ தொட்டது, 100க் மேல் சென்றாலே புகை வாடையையும் உணர முடியும், 190 என்று தெரிந்தவர்கள் முகத்தில் முகமுடியுடன் சென்றார்கள், இரவு 9 மணிக்கு PSI 290 ஐ தொட்டு இருக்கிறது, 300க்கும் மேல் சென்றால் எதிரே வருபவர்கள் தெரியாது, போக்குவரத்திற்கு வாய்ப்பில்லை, கப்பல் விமானப் போக்குவரத்துகள் முற்றிலும் நிறுத்தப்படும், அல்லது பாதிவழியிலேயே நிறுத்தப்படும், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மூச்சு திணறலால் பாதிக்கப்படுவார்கள்.

வழக்கமாக இரவு 11 மணி வரை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் ஆள் அரவே இல்லை, அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர், சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன, அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட இடம் தாண்டி புகைப்பிடித்தால் தண்டம் கட்ட வேண்டிய சிங்கப்பூரில் எல்லா இடத்திலுமே புகை. நிலமை இன்னும் சில நாட்கள் நீடித்தால் .....அவசரகால அறிவிப்புகள் கூட வெளிவந்தால் வியப்பில்லை, எங்கள் வீட்டில் முடிந்த அளவு பகல் பொழுதில் கூட சன்னல் கதவுகள் அனைத்தையும் சாத்திதான் வைத்திருக்கிறோம், இருந்தும் வீட்டினுள்ளும் புகை நெடியை உணர முடிகிறது.


வரலாறு காணாத புகை மூட்டம் என்று தலைப்பிட்டு தொலைகாட்சியிலும், இணைய செய்திகளிலும் தகவல்கள் வெளி இடுகிறார்கள். சுற்றுலா வந்தவர்களுக்கு மோசமான அனுபவங்கள், நிலமை சரியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால் இவை வெறும் காட்டுத் தீயால் ஏற்பட்டது தானே என்று என்னைப் போல் நினைத்தவர்களுக்கு. கிடைக்கும் தகவல்கள் மனித பேராசைகளே இதற்கு காரணம் என்று தெரியவர அதிர்ச்சி தான். புகையை கட்டுப்படுத்த ஏதாவது செய்யுங்கள் என்று சிங்கப்பூர் சுற்றுச் சூழல் அமைச்சு இந்தோனேசியாவை கேட்க, அவர்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், ஆனால் அதற்கு முற்றிலும் உதவ எங்கள் நாட்டில் முதலீடு செய்துள்ள சிங்கப்பூர் - மலேசிய முதலாளிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பதில் கூறியுள்ளனர். அதாவது



சமையல் எண்ணை நிறுவனங்கள் மலேசியா முழுவதும் பாம் எண்ணை மரங்களை நட்டு விளைச்சல் பார்த்தது போதாது என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தோனேசியா காடுகளிலும் கை வைத்துள்ளனர், இவற்றில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் சிங்கப்பூர் மலேசியாவை சேர்ந்த முதலாளிகளாம், காடுகளை அழித்து அவற்றை கொளுத்திவிட்டு அங்கே பாம் எண்ணை மரங்களை நடுவது ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி நடைபெறும் செயலாம். இந்த ஆண்டு கூடுதலான பகுதிகளை அழித்திருக்க வேண்டும், அதன் எதிர்விணையைத் தான் தற்பொழுது நாங்கள் அனுபவிக்கின்றோம்.

இந்தோனேசியா ஏழை நாடு இத்தனை ஆண்டுகளுக்கு பாமாயில் மரங்களுக்கு குத்தகைக்கு இடம் வேண்டும் என்றால் காடுகளை கைகாட்டிவிட்டு கையெழுத்து போட்டு ஒப்பந்தம் செய்து கொள்வார்கள், அவர்களையும் குறை சொல்ல முடியாது. போட்டித் தன்மை நிறைந்த உலகத்தில் எதையாவது அழித்தால் வருமானம் வந்தால் சரி என்று நினைக்கும் முதலாளிகளை குறைச் சொல்ல முடியாமல் அரசுளும் கையை பிசைகின்றன, ஏனென்றால் எல்லாம் அரசாங்கம் அனுமதித்தப்படியே நடக்கின்றன, விளைவு ? மக்களுக்கு தான் எல்லா வகையிலும் இழப்பு.

பாமாயில் வாங்குவதை நிறுத்தினால் ஒருவேளை காடுகள் பாமாயில் பண்ணைகளாக மாற்றப்பட்டுவதை தடுக்கலாம்,  ஆனால் அவையெல்லாம் கடல்கடந்து வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற நிலையில் அதற்கும் வாய்ப்பில்லை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து பாமாயிலுக்காக முதலிடு செய்யப்படுவதை தடுத்தால் எரியும்  காடுகளை தடுக்கலாம். பெரிய அளவு உயிர் சேதம் நடந்தால் ஒருவேளை அவர்கள் அது பற்றி யோசிக்கக் கூடும். அதுவரை இவை வழக்கம் போல் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகிவிடும்.

இதை எழுதி முடித்துவிட்டுப் பார்த்தால்

The three-hour Pollution Standards Index (PSI) soared to 321 at 10pm local time 

Singapore haze hits 'hazardous' levels of PSI 321.

பொழைச்சு கிடந்தால் பின்னர் பார்ப்போம். (குறைந்துவருவதாகவுக் குறிப்பிட்டுள்ளனர்.

10 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

மிக மோசமான நிலை தான். இப்படியான நிலையை கடைசியாக பார்த்தது 1997. இப்போது மீண்டும். அச்சமயத்தில் ஆரோக்கிய பாதிப்பினால் சிலர் இறந்தும் போனார்கள்.

டின்னர் சாப்பிட மாலேசியா வரும் சிங்கை வாகனங்கள் இன்று குறைவு. வேலைக்கு சுலபமாக போனது ;-)

வடுவூர் குமார் சொன்னது…

ஒவ்வொரு வருடமும் சிங்கை மற்றும் இந்தோனேஷியா அரசாங்கமும் இதை கட்டுப்படுத்த பல தகவல்களை பரிமாறிக்கொண்டாலும் சரியான பலன் இல்லாதது போல் தோன்றுகிறது.நான் அங்கு இருந்த போது சேட்டலைட் படங்களை எடுத்து இந்தோனேஷியாவுக்கு கொடுத்து உதவியது சிங்கை.சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுக்ககூடியது.

ராமலக்ஷ்மி சொன்னது…

/காடுகளை அழித்து அவற்றை கொளுத்திவிட்டு அங்கே பாம் எண்ணை மரங்களை நடுவது /

அதிர்ச்சியாக இருக்கிறது!

துளசி கோபால் சொன்னது…

அடடா...... நானும் எதோ காட்டுத் தீ என்றுதான் நினைத்தேன். பாம் ஆயில் வியாபாரம் என்று தெரிவித்தமைக்கு நன்றி.

குழந்தைகள் பத்திரம். நீங்களும் கவனமாக இருங்கள்.

குமார் சொல்வது போல ஆஸ்துமாவில் அவதிப்படும் மக்களுக்கு கூடுதல் கஷ்டம்தான்:(

priyamudanprabu சொன்னது…

321 ...

ஜோதிஜி சொன்னது…

நவீன யுகத்தில் முதலாளிகள் நோக்கம் உருவாக்க எதை வேண்டுமொன்றாலும் உருக்குலைக்கலாம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதிர்ச்சி தரும் தகவல்...

கோவி.கண்ணன் சொன்னது…

இன்றைய பகல் காற்று தூய்மைக்கேடு படு கேடு, PSI 371 புள்ளிகள் வரை சென்றது
:(

வேகநரி சொன்னது…

//காடுகளை அழித்து அவற்றை கொளுத்திவிட்டு அங்கே பாம் எண்ணை மரங்களை நடுவது//

உண்மை இப்படியிருக்க இந்தோனேசிய மக்கள் நல அமைச்சர் சிங்கப்பூர் சின்னபிள்ளை மாதிரி நடக்குது, இது காட்டு தீ என்று கதை சொல்கிறார்.
http://www.bbc.co.uk/news/world-asia-22982018

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

காடுகளை மனித சுயநலத்திற்காக அழிப்பது எங்கு கொண்டு போய் விடுமோ தெரியவில்லை. இந்தியாவில்தான் இயற்கை வளங்கள் கேட்பாரற்று அழிக்கப் படுகின்றன என்றால் வெளிநாடுகளிலும் இதே நிலைதானா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்