சிறுவயதில் மார்கழியில் அருகில் இருக்கும் கோவில்களில் பாடும் டி எம் எஸ்ஸின் பக்திப் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் என்ற முறையில் டி எம் எஸ்ஸின் தனித்துவம் வாய்ந்த குரல் என்றுமே எனக்கு மிகவும் பிடித்தவை, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் - நாத்திகரும் விரும்பிக் கேட்கவைக்கும் ஒரு பாடல் அதை டி எம் எஸ் தவிர்த்து வேறு யாராலும் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியாது, எத்தனையோ புகழ்பெற்றப் பாடகர்கள் தமிழத்தில் கோலொச்சினாலும் சவுராஷ்ட்ரா மொழியை தாய்மொழியாகக் கொண்ட சவுந்தராஜனின் தமிழ் பாடலில் எந்த ஒரு சொல்லும் சிதைந்தோ, சொதப்பியோ இருந்தது இல்லை.
ஒரு பாடகரை தொடர்ந்து பாடவைப்பதும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதும் இசையமைப்பாளர்களின் கையில் தான் உள்ளது, இளையராஜாவின் வரவிற்கு பிறகு டி எம் எஸ்ஸுக்கு பாடும் வாய்ப்புகள் குறைந்தது, நன்றாக பாடி வந்த எல் ஆர் ஈஸ்வரியும் திரைப்படங்களில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்கள் என்றாலும் இருவருமே தத்தம் இருப்பை தொடர்ந்து பக்திப் பாடல்கள் தொகுப்பை வெளியிட்டு உறுதிப்படுத்திக் கொண்டனர். இளைஞர்களின் கவனம் எஸ்பிபி பக்கம் திரும்ப டி எம் எஸ் என்றால் எம்ஜிஆர் சிவாஜிப் பாடல்கள் பாடியவர் என்ற அளவில் தான் கடந்த முப்பது ஆண்டுகளாக நினைக்க வைத்தது, இதைத் தவறு என்று சொல்ல முடியாது, அவரவர் காலத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தினால் தான் தமது தனித்துவம் நிலைத்து நிற்கும் என்று இசையமைப்பாளர்கள் நினைப்பார்கள், எனவே டி எம் எஸின் பாடல் ஆதிக்கம் கிட்டதட்ட அவரது 60 வயதினில் முடிவுக்கு வந்ததை இசை துறைக்கான மிகப் பெரிய இழப்பு என்று கருத முடியாது, பழையன கழிதலும் புதியவை புகுதலும் தானே சமூக வளர்ச்சிக்கும் நல்லது.
*******
டி எம் எஸ் தனது 91 வயதில் மறைந்துவிட்டார், இதை நல்ல சாவு, வாழ்வாங்கு வாழ்ந்தவரின் சாவு என்று தான் வகைப்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து, முக அழகிரி தவிர்த்து டி எம் எஸ் வாழ்ந்த காலத்தில் திரைத்துறையினர் அவருக்காக பெரிய விழா எடுத்ததில்லை, அழகிரி அரசியல் நோக்கம் காரணமாக இதைச் செய்திருந்தாலும் தனிப்பட்ட கலைஞனுக்கு பாராட்டு என்ற முறையில் அதனை பாராட்டியே ஆகவேண்டும், எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிய டி எம் எஸ்ஸுக்கு எம்ஜிஆர் ரசிகர்களோ, சிவாஜி ரசிகர்களோ பாராட்டுவிழா எதையும் நடத்தவில்லை, இதற்கெல்லாம் திரையுலகினரோ, அவர்கள் எடுக்கும் திரையுலக பாராட்டு விழாக்களுக்கு தலைமை ஏற்று நடத்தும் அரசியல்வாதிகளுக்கோ வருத்தம் எதுவும் அடைந்தது போல் தெரியவில்லை. ஆனால் டி எம் எஸ் மறைந்த பிறகு இருதரப்பினரும் டி எம் எஸ் மறைவு குறித்து ஆற்றமுடியாத துயரம், ஆத்தமா சாந்தியடைய வேண்டும் என்றெல்லாம் இரங்கல் தெரிவித்துள்ளனர், 91 வயதின் இறப்பின் ஆத்மா சாந்தியடையவில்லை என்றால் எந்த வயதில் இறந்தால் ஆத்மா சாந்தியடையும், இத்தனைக்கும் டிஎம்எஸ் தனது பேரன் திருமணத்தையே பார்த்தவர் தான்.
பணக்காரகள் / வசதியானவர்கள் 80 வயதிற்கு மேல் வாழ்ந்தாலே அது வேலைக்காரகளின் பணிவிடையால் தான், 91 வயதிற்கும் மேல் டி எம் எஸ் வாழ்ந்தால் அவருக்கு உடலில் உயிர் தங்கியுள்ளது என்பது தவிர்த்து வேறென்ன பலனைக் கொடுக்கும் ? இரங்கல் என்ற பெயரில் சாவைக் கொச்சைப்படுத்துவதை விட அவருக்கு சூட்டும் புகழாரமே அவருக்கான சிறந்த அஞ்சலி என்பது எனது தனிப்பட்ட கருத்து. எந்த ஒரு மனிதனும் நன்றாக வாழ்ந்து வாரிசுகளின் மகன்/மகள் / பேரக் குழந்தைகள் சாவைப் பார்க்காமல் போய் சேர்வது தான் சிறந்த இறப்பாகும், டி எம் எஸ்ஸின் மறைவால் வருத்தம் அடைய ஒன்றும் இல்லை.
டி எம் எஸ்ஸின் புகழ் அவரது பாடல்கள் நிலைத்து நிற்கும் வரை நிலைக்கும், பாகவதர்கள் பாட்டுகளே கூட இன்றும் நினைவு கூறும் பொழுது டி எம் எஸ்ஸின் பாடல்கள் இன்னொரு நூற்றாண்டிற்கு கூட கேட்டுக் கொண்டி இருக்கும்
12 கருத்துகள்:
உங்கள் கருத்தை நான் அப்படியே ஆமோதிக்கிறேன் ... ரிடயர்ட் ஆகி , பார்க்க ஆள் இல்லாமல் இருந்து பின் இறந்து விட்டால் கூட , ஐயோ இதனால் திரைத் துறைக்கே பெரிய இழப்பு என்று ஓவர் பில்ட் அப் கொடுக்கும் வழக்கு என்று ஒழியப் போகிறதோ தெரியவில்லை... நன்றாக வந்து கொண்டிருக்கும் ஒருவர் தீடிர் என்று அகால மரணம் அடைந்தால் வேண்டுமானால் அவ்வாறு சொல்வது சாலப் பொருந்தும் , மற்றபடி இது வெறும் புகழாரமே , செத்தபின் எதுக்கையா அதெல்லாம் ....
முதலில் ராம மூர்த்தி , அப்புறம் பி பீ சீனிவாஸ் , இப்ப டி எம் எஸ் , அடுத்து ?
வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கோர் இடம் ஏது
நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாளும் தெரிந்த தலைவனடா.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
டி எம் எஸ்ஸின் புகழ் அவரது பாடல்கள் நிலைத்து நிற்கும் வரை நிலைக்கும், பாகவதர்கள் பாட்டுகளே கூட இன்றும் நினைவு கூறும் பொழுது டி எம் எஸ்ஸின் பாடல்கள் இன்னொரு நூற்றாண்டிற்கு கூட கேட்டுக் கொண்டி இருக்கும்
மிகச் சரியான கருத்து//
அருமையாக எழுதியிருக்கீங்க. இங்க ஒரு கலாசாரம் என்னவென்றால் செத்தவன் எவ்வளவு கேவலமானவனாக இருந்தாலும் கூட அவனைக் குறை சொல்லக் கூடாது என்பதாகும். இறப்பு என்பது ஒரு இயற்க்கை நிகழ்வு என்பதை பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த 'கலக' தலைவர்களும் அவர்களது கண்மணிகளும் கூட புறிந்து கொல்வதில்ல்லை. செத்தவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது, தாங்க முடியவில்லை அது இது சொல்வதோடு மட்டுமல்லாமல், அவர்களது பிணத்தைப் பார்த்து ஒப்பாரியும் வைக்கிறார்கள்.
TMS நல்ல மனிதர் நீங்க சொன்னது போல 91 வாழ்ந்து அனுபவித்து மறைந்திருக்கிறார். இதையும் துக்கம் லிஸ்டில் சேர்க்கக் கூடாது. அவரது + பாயிண்டுகளை ninaiவு கூறலாம் என்பது மிகவும் சரி.
கோவி,
சரியாத்தான் சொல்லி இருக்கீங்க, எங்க கிராமத்து பக்கமெல்லாம் இப்படி வயசாகி ,நல்லாவும் வாழ்ந்து செத்தா "கல்யாண சாவு"னு சொல்லி ஆர்ப்பாட்டமாக , குதுகளமாத்தான் எடுப்பாங்க,சரக்கு , டப்பாங்குத்து டான்ஸ் எல்லாம் ஆட வைப்பாங்க.
உங்களுக்கு தமிழக அல்லது பதிவுலக கலாச்சாரம் இன்னும் புரியலை , யாரு செத்தாலும் மனமுருக கண்ணீர் அஞ்சலி செய்தே ஆகணும், அதை விட்டுப்புட்டு வியாக்கியானம் செய்தால் "கொடூரன், சாவுலவும் அரசியல் செய்றான்னு" சொல்லிடுவாங்க ,எனவே ஊரோடு ஒத்து நாமளும் கண்ணீர் அஞ்சலி செலுத்திடனும்!!!
டி.எம்.எஸ் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்,ஆழ்ந்த இரங்கல்கள்!"
அன்பின் கோவி கண்ணன் - அருமையானதொரு அஞ்சலி - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அருமையான சிந்தனை கோவி.
//நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாளும் தெரிந்த தலைவனடா.//
இளையதாசன் - நாளும் தெரிந்த அல்ல நாலும் தெரிந்த என்பதே பொருத்தம்.
கோவி கண்ணன்!
மிக உண்மை, நீங்கள் கூறிவிட்டீர்கள்.
பலர் வவ்வால் சொல்வதுபோல் ஒத்தூதிவிட்டார்கள்.
அவர் குரலைத் தமிழுலகு தவிர்க்க இயலாது.
கோவி உங்கள் கருத்தையும் பின்னுட்டத்தில் கருத்திட்ட இளையதாசன் அவர்களின் கருத்தையும் நாம் அப்படியே ஆமோதிக்கின்றேன் .டி எம் எஸ் மறைந்துவிட்டாலும் அவர் பாடல்கள் என்றும் மறையாது. உங்களைப் போலவே நானும் சிறுவயதில் அவரின் பக்தி பாடல்களை கேட்டு வளர்ந்தவன். நாத்திகர் மட்டுமல்ல மாற்று மதத்தினரும் அவர் பாடிய பக்திபாடல்களை ரசிப்பவர்கள்தான்
நான் வெளிநாட்டிற்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும் நான் மிஸ் பண்ணுவது என்னவோ மார்கழி மாதம் அதிகாலையில் கோவில்களில் போடும் பாடல்களைதான் என்னதான் வீட்டில் சிடியில் இந்த பாடல்களை கேட்டாலும் இப்படி அதிகாலையில் பால் வாங்கப் போகும் போது கேட்கும் இன்பமே இன்பம்
இவர் இறந்த ஒரு மணி நேரத்திற்குள் முக நூலில் பார்த்த போது ஊரில் டூரிங் டாக்கிசி முதல் இன்று வரைக்கும் உள்ள அத்தனை நிகழ்வுகளும் மனதிற்குள் வந்து போனது.
சாவு குறித்து நீங்க எழுதியதைப் பார்த்து நான் எழுதியிருந்தால் கூட இந்த அளவுக்கு எழுதியிருக்க மாட்டேன் என்றே தோன்றுகின்றது.
இறப்பு என்றாலும் புகழாரம் சூட்டத்தான் தோன்றுகின்றது.
டிஎம்எஸ் பற்றிய அழகான சிந்தனைகளின் வெளிப்பாடு. அவரவர் காலத்து அடையாளம் என்பது கவர்கிறது.
கருத்துரையிடுக