மழைக்கு திரையரங்கம் பக்கம் ஒதுங்கிப் பார்த்தப் படம், மாலை 5.30 மணிக்கு நல்ல மழை, தொடர்வண்டி நிலையத்தை விட்டு வெளியே வந்து பார்த்தபோது மழையோ மழை, மழை விடும் வரை என்ன செய்வது ? அடுக்குமாடி குடியிருப்புகளுனூடாக நுழைந்து சாலையைக் கடக்கும் போது மட்டும் கொஞ்சம் மழையில் நனைந்தால் கோல்டன் சுல்தான் திரையரங்கை அடைந்துவிடலாம், சரி போய் தான் பார்ப்போமே ஆனால் என்ன படம் பார்ப்பது ? அங்கு மேல் கிழ் என இரு திரையரங்குகள், பெரும்பாலும் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவார்கள், அலெக்ஸ் பாண்டியனும், கண்ணா லட்டு திண்ண ஆசையா ? ஓடியன. அலெக்ஸ்பாண்டியன் பார்த்துவிட்டு காய்சல் கண்டு கேபிள் சங்கரும், மூனா செந்திலும் முனுகலாக எழுதிய பதிவுகளைப் படித்தது, அலெக்ஸ் பாண்டியனுக்கு நான் பலியாக விரும்பவில்லை, ஏற்கனவே மூன்று நாளாக காய்சல், இன்று தான் குறைந்திருந்தது, விஷப்பரிட்சை வேண்டாமே ? எனவே சந்தானம், பவர் ஸ்டார் நடித்த லட்டு தின்ன ஆசையா ? படத்தைத் தேர்வு செய்தேன், 13 வெள்ளி கட்டணம், (13 X 43 ரூ), ஆங்கிலப்படங்களைவிட இங்கு தமிழ் படங்களுக்கு கட்டணம் கூடுதலாக வாங்குகிறார்கள், பார்க்க வாய்ப்பு என்ற அளவில் கொடுக்க வேண்டித்தான் இருக்கிறது.
திரையரங்கில் திரளாக மக்கள் குவிந்திருப்பார்களோ....என்றெல்லாம் கற்பனை செய்வதில்லை, ரஜினி, கமல், விஜய், சூர்யா படங்கள் தவிர்த்து படங்கள் பற்றிய நல்ல விமர்சனம் வராத வரை மக்கள் திரையரங்கிற்குள் எட்டிப்பார்த்து கை சுட்டடுக் கொள்ள விரும்புவதில்லை, மொத்தமாக 50 பேர்கள் தான் இருந்தார்கள், 500 பேர் வரை பார்க்கக் கூடிய பெரிய அரங்கு. பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என்று எழுத்தைப் பார்த்ததும் 50 பேரில் 40 பேர்கள் ஆரவாரம் செய்தார்கள், இது வரை லத்திகா என்ற பெயரைக் கேள்விப்படாதவர்கள் கூட பவருக்கு ரசிகர் ஆகி இருக்கிறார்கள், பவரு கோபிநாத்திற்கு நன்றி சொல்லலாம். ஆஹா பவருக்கு உலக அளவில் ரசிகர்கள் இருப்பது திரைப்படத்தின் பங்குபெற்றவர்களின் பெயர்களைப் போடும் போதே தெரிந்துவிட்டது, தமிழ் திரையில் கதைக்கும் சதைக்கும் பஞ்சம் என்றால் பழையப் படம், ஆங்கிலப் படம் மற்றும் பாம்பே பக்கம் சென்றுவிடுவார்கள், இந்த முறை இந்தியாவின் மிகசிறந்த திரைகதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனரான பாக்கியராஜின் இன்று போய் நாளைவா கதையையே சுட்டு கிட்டதட்ட மறு ஆக்கம் என்ற அளவில் எடுத்திருக்கிறார்கள், திருட்டு விசிடிபார்த்தால் பொங்கும் திரையுலகம், சக இயக்குனரிடமே அனுமதி பெறாமல் படம் எடுத்திருப்பதும் 'சினிமா பொழைப்பு' என்ற ஒற்றைச் சொல்லில் பல பொருள்களை வைத்து நாம் சொல்லிவிடலாம்.
மூன்று நண்பர்களாக சந்தானம், பவர் ஸ்டார் மற்றும் ஒரு புதுமுக நடிகர் சேது, புதுமுகங்கள் காமடிப்படங்களில் அறிமுகம் ஆகும் பொழுது அவர்களுடைய நடிப்பைக் குறைச் சொல்ல வாய்ப்பில்லை என்ற அளவுக்கு நகைச்சுவைக்காட்சிகள் அவற்றை சரி செய்துவிடும், புதுமுக நடிகருக்கு இது + தான். சேது சாயலில் சற்று ஶ்ரீகாந்தை நினைவுபடுத்துகிறார். சேது விளம்பர மாடலாக நடிப்பவர், சந்தானம் கல்யாணம் முதல் கருமாதி வரை ஆல் இன் ஆல் தொழில் செய்து KK என்று பெயரில் இருப்பார், மூன்றாவதாக பணக்கார கிழைஞன் பவர் என்ற பெயரிலேயே வருகிறார், இவர்கள் மூவரும் சேர்ந்தால் தண்ணியடிப்பது இளைஞிகளை பின்தொடர்வது என்பதாக் இருக்க, இடையில் சேதுவீட்டுக்கு எதிரே வரும் விஷாகா என்ற புதுமுகம் கதைக்குள் வரும் பொழுது மூவருக்கும் விஷாவை காதலியாக அடைவது பற்றி போட்டி ஏற்பட்டு ஆளுக்கு ஆள் ஒவ்வொரு விதத்தில் விஷாகாவின் வீட்டினுள் நுழைந்துவிடுகிறார்கள், மிச்சசொச்சமெல்லாம் இன்று போய் நாளைவா பாணி தான். படம் முழுக்க கோவை சரளா, பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி மற்றும் பல நகைச்சுவை நடிகர்கள் இவர்களுடன் நடன இயக்குனர் சிவசங்கர்.
படம் கலகலப்பாகப் போகிறது, வலைப்பதிவில் பவர் ஸ்டார் கலாய்க்கப்படுவதைவிட பலமடங்கு படத்தில் சந்தானத்தால் பவரின் பல், விக்கு, தொப்பை, எடை ஆகியவற்றை நக்கல் அடித்து கலாய்க்கப்படுகிறார், சென்னை மொழி வழக்கில் பேசும் இளம் கவுண்டமணி என்பதைத் தவிர சந்தானத்தின் காமடிகள் என்னைப் பெரிதாக ஈர்பதில்லை, கவுண்டமணியின் காலி இடத்தில் நிற்கிறார், கவுண்மணியைப் போன்று உருவங்களைக் கிண்டல் செய்து பேசுவது, நக்கல் அடிப்பது, எல்லாம் கவுண்டமணி பாணிதான், இதுவரை மக்கள் திரையுலகில் நகல்களை ஏற்றுக் கொண்டதில்லை என்பதில் சந்தானம் விதிவிலக்காக இருக்கிறார், அதற்குக் காரணம் கவண்டமணியின் பாதிப்புகள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களுக்கு தேவைபடுவதாக இருக்கிறது, அதை கவுண்டமணி ஏற்படுத்திவிட்டிருக்கிறார், அவை சந்தானத்தால் நிரப்பப்படுகிறது என்பதைத் தவிர்த்து வேறு காரணங்கள் என்னால் நினைக்க முடியவில்லை,
படத்தில் சந்தானம் பாட்டுக் கற்றுக் கொள்வது, பவர் பரதம் கற்றுக் கொள்வது எல்லாம் நகைச்சுவை சரவெடிகள், பழைய படக்கதை சுட்டு எடுத்திருப்பது போல் பழையைப்பாடல்கள் ரீமிக்ஸாக வருகிறது, படம் துவங்கியது முதல் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு பாடல் என்று வருகிறது, கடைசி 45 நிமிடம் பாடல்கள் இல்லை, பாடல்காட்சிகள் நகைச்சுவைக் காட்சிகளாக எடுத்திருப்பதால் எழுந்து போகும் அளவுக்கு இல்லை, சிம்பு சிம்புவாகவே சிறப்பு தோற்றத்தில் வந்து போகிறார், அவருக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். காட்சித் துவக்கத்தில் குத்துவிளக்காக அறிமுகப்படுத்தப்படும் நாயகி அடுத்தப் பாடல்காட்சியில் அனுஷ்கா அளவுக்கு ஆடைகளைக் குறைத்துக் கொண்டார்.
இராமநாரயணன் தயாரிப்பு என்பதால் விரக தாபத்தில் ஒரு துணை நடிகை அம்மனாக (எழுத்துப் பிழையோ என்று நினைக்காதீர்கள்) காட்சியில் மூவரையும் பார்த்து உருக, அது கனவு காட்சியாகவும் அவர் எதிரே நிற்கும் பெண் காவலாளி என்றும் காட்டப்படுகிறது, அம்மன் கதைகளாக எடுத்து பிழைப்பு நடத்தியவர், இத்தகைய காட்சியை படத்தில் வைத்திருப்பதைப் பார்க்கும் பொழுது 'சினிமா பிழைப்பு' என்பதைத் தவிர்த்து வேறென்ன சொல்ல ?
ஆத்துல ஆத்துக்காரெல்லாம் அவிச்ச முட்டை மற்றும் ஆம்ப்ளேட் சாப்பிடுவா.......என்பதை தேவ தர்ஷினி மூலம் ஒரு காட்சியாக வைத்திருக்கிறார்கள், படம் போரடிக்கவில்லை, படம் முழுவதும் வசனங்கள் கொஞ்சம் காதுவலியாக இருக்கிறது, பவர் ஸ்டாரின் அண்ணன் மற்றும் அப்பா ஆகிய இருவராக வருபவர்களில் லூட்டிகள் ரசிக்க முடிந்தது, பவர் ஸ்டாரில் உண்மையான சுய விளம்பர தட்டிகள் போன்றே படத்திலும் பவரின் பிறந்த நாள் தட்டிகளெல்லாம் வந்திருப்பதால் படத்தில் பவர் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும், பவர் ஸ்டார் படத்தில் பேசும் பஞ்சு வசனம் சிலரை பார்த்தால் தான் பிடிக்கும், சிலரை பார்க்க பார்க்க பிடிக்கும் என்னையெல்லாம் பார்க்காமலேயே பிடிக்கும். உண்மை தான்.
இயக்குனர், படப்பிடிப்பு, பாடியவர்கள், இசை அமைத்தவர்கள் இவர்களெல்லாம் யார் யார் என்று கண் கொட்டாமல் திரையைப் பார்த்து தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை, சுட்டக் கதைக்கு இவையெல்லாம் முக்கியமா என்ன ?
பவர் ஸ்டார் கலக்கிபுட்டப்படி
கண்ணா லட்டு தின்ன ஆசையா ? திருட்டு லட்டு !............திருட்டு மாங்காயின் சுவை
1 கருத்து:
உரிமையை விலை கொடுத்து வாங்கிதான் படம் எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். யார் உரிமையை வைத்திருப்பது என்பதுதான் புஷ்பா கந்தசாமிக்கும் பாக்யராஜுக்கும் உள்ள பிரச்சனை
கருத்துரையிடுக