பின்பற்றுபவர்கள்

28 நவம்பர், 2012

வேலைப் போனால் கோழை - 1


நமக்கு எதுவும் நடக்காது என்கிற நம்பிக்கை நம்மை கவிழ்த்துவிடும் என்பது பலருக்கு தெரியாத உண்மை, நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு எதுக்கு மாறி பிரச்சனைக்கு வழி தேடனும் ? என்று ஆண்டு கணக்கில் தனியார் நிறுவனங்களில் சம்மணமிட்டு பணிபுரிபவர்களை அம்மணமாக்கி ஆப்பு எப்போ வைபார்கள் என்று தெரியாது, ஆனா ஆப்பு கிடைப்பது உண்மை, இதற்கு காரணம் திறமை இன்மை அல்லது சோம்பல் ஆகிய காரணங்களைவிட குறிப்பிட்ட சூழலில் வேலைப் பார்த்து பழகிவிட்டு வெளியே போனால் ஒப்பேற்ற முடியாது, காலம் தள்ள முடியாது என்கிற காரணங்களையும் தவிர்த்து நாம தான் நிறுவனத்தைத் தாங்குகிறோம் என்கிற நினைப்பும் சேர ஒரு சிலரை ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் அழுத்திவிடும். சென்ற ஆண்டு சீனா, மலேசியா என்று பறந்து பறந்து வேலை செய்தாலும் இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு தொடர்ச்சியான வேலை இல்லை, 

காரணம் எல்லாம் சரியாக செயல்பட்டுக் கொண்டு இருப்ப்பதால் சிஸ்டம் / சர்வர் பரமரிப்பு வேலைகள் தவிர்த்து அன்றாட வேலைகள் மிகக் குறைவே, யோவ் யாராவது வேலை கொடுங்கைய்யா என்று கெஞ்சாத குறையாக ஏதாவது கணிணி பிரச்சனை என்று சொன்னால் விழுந்தடித்து செய்து முடித்துவிட்டு வழக்கம் போல் கூகுள் ப்ளஸ் அல்லது வலைப்பதிவில் மேய்வது, திரட்டியை பார்ப்பது தான் முழுநேர வேலை என்றாக, வாங்கிற சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்பதுடன், என்னை தொடர்ந்து வைத்திருப்பது நிறுவனத்திற்கும் நட்டமே, இது சரிப்படாது என்கிற முடிவில் பிற நிறுவனங்களுக்கு ஏன் வேலைக்குச் செல்ல முயற்சிக்கக் கூடாது ? என்கிற நினைப்பில் முட்டுக்கட்டையாக இரண்டு மாத நோட்டீஸ் என்கிற நடப்பு நிறுவனத்தின் ஒப்பந்ததை கிடப்பில் போட்டுவிட்டு, கடந்த ஜூலை 26 முதல் அதையே விண்ணப்ப படிவங்களில் குறிப்பிட்டு பயோடேட்டா என்னும் தற்குறிப்பு கல்வித் தகுதி, அனுபவத் தகுதியை நிரப்பி அனுப்பத் துவங்கினேன்,


இங்கே சிஸ்டம் மற்றும் சர்வர் தொடர்பில் வேலை வாய்ப்பு என்பவை பெரிய நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையிலும் சிறு நிறுவனங்களில் நேரடி பணியாளராகவும் எடுப்பார்கள், ஆனாலும் நம்மை வேலைக்கு எடுப்பவர்கள் இரண்டு மாதம் தான் சென்று சேருவேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்பது அரிதே, 

எதாவது முன்கூட்டிய திட்டமாக (ப்ராஜெக்ட்) மூன்று மாதம் கழித்து துவங்குவதாக இருந்தால் அவ்வாறு எடுக்க வாய்ப்புள்ளது, அல்லது ஏதாவது கிளை நிறுவனம், அல்லது புதிய நிறுவனம் இரண்டு மாதம் கழித்து துவங்குவதாக இருந்தால் இரண்டு மாதம் கழித்து சேருகிறேன் என்றால் ஏற்றுக் கொள்வார்கள், அவ்வாறான வாய்ப்புக் கிடைப்பதும் அரிதே, 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் போட்டும் அழைத்தவர்கள் ஓரிருவர்கள் மட்டுமே அவர்களும், சிஸ்டம் என்ஜினியரிங்களில் குறிப்பிட்ட துறையில் (வெப் அட்மின், நெட் ஒர்க் அட்மின் போன்று)  மட்டுமே வேலை என்பதால் அதற்கான சிறப்பு தகுதி தனித்து இல்லை, நான் ஆல் இன் ஒன் என்பதால் எடுக்கவும் தயங்கினார்கள், இவ்வாறாக  வாரம் ஒரு நேர்முகத் தேர்வு என்று சென்று வந்து கொண்டிருந்து, 40 நாட்கள் கடந்த நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி, நிறுவன உரிமையாளர் உன்னிடம் பேச வேண்டும் அறைக்கு வருகிறாயா ? என்று அழைப்பு விடுத்தார்.

நினைத்தது போலவே 'நீ ஏன் வெளியே வேலை தேடக் கூடாது ?' உனக்கு தேவையான நேரம் எடுத்துக் கொள், நாங்க உடனடியாக செல்ல வேண்டும் என்று சொல்லவரவில்லை, நிறுவனத்தில் இந்த ஆண்டு பிஸ்னஸ் சரி இல்லை, ஐடி வேலையை அவுட் சோர்ஸ் கொடுத்துடலாம் என்று நினைக்கிறேன், எல்லா டாகுமெண்டுகளையும் தாயார் செய்துவிடு.......' என்று சொல்ல, எனக்கு ஒன்றும் அதிர்சியாக இல்லை, நான் ஏற்கனவே அதைத்தான் செய்து வருகிறேன் என்று அவரிடம் சொல்லாமல் மனதுக்குள் சிரித்துக் கொண்டு, 'நானே சொல்லாம் என்று இருந்தேன், எனக்கு கொடுக்கும் சம்பளம் உங்களுக்கு கட்டிப்படியாகாது, வேற யாராவது ஜூனியர் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள், நான் பயிற்சி கொடுத்துவிட்டு செல்கிறேன் என்று நான் சொல்ல இருந்தேன், ஆனால் எனக்கு இங்கு வேலை செய்ய விருப்பம் இல்லை என்று நீங்கள் தவறாக நினைக்கக் கூடும் என்பதால் சொல்லவில்லை, என்றேன், பின் அவரே தொடர்ந்தார், நீ இங்கே ஆறு ஆண்டு வேலை செய்திருக்கிறாய், உனக்கு ஏதாவது இழப்பீடு தருகிறோம் என்று சொல்ல எனக்கு பருத்தி புடவையாக காய்தது போலவே இருந்தது, சரி என்று சொல்லிவிட்டு சிரித்து கொண்டே வெளியே வந்தேன், அப்பாடா இனி திருட்டுத் தனமாக இண்டர்வியூ செல்லத் தேவை இல்லை, 
ஒருவாரம் கழித்து ஒருமாதத்திற்குள் நான் அனைத்து தகவல்களையும் கோப்பாக்கி ஒப்படைப்பதுடன் பணியில் இருந்து விலகுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு, அடுத்த நாள் முதல் ஏதாவது நேர்முகத் தேர்வென்றால் நிறுவனத்தில் சொல்லிக் கொண்டே சென்றேன்,  அதன் பிறகு வேலைக்கு இரண்டு மாதம் காத்திருப்பு தேவை இல்லை என்பதால் வாரத்திற்கு நான்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புகள் வரத் துவங்கியது. கார்ப்ரேட் நிறுவனங்களில் கக்கூஸ் கழுவச் சென்றாலும் ஏற்கனவே வேற கார்ப்ரேட்டில் கக்கூஸ் கழுவி இருந்தால் தான் நல்லா கழுவத் தெரியும் என்று நம்புவார்கள் போல, என்னை அழைத்த கார்ப்ரேட் நிறுவனங்களெல்லாம் கார்ப்ரேட் எக்ஸ்பீரியன்ஸ் இல்லை என்று இரண்டாம் கட்ட நேர்முகத்திற்கு அழைக்கவில்லை, இந்த நிலையில் நாளை மறுநாள் (அக்டோபர் 12) முதல் வேலை இல்லை என்ற நிலையில் அன்று மட்டுமே காலை ஒன்றும் மாலை ஒன்றுமாக இரு நேர்முகத்திற்கான அழைப்புகள், இது கண்டிப்பாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை, ஏனெனில் அதில் ஒன்று வீட்டுக்கு வெகு அருகில்...... அக்டோபர் 11 ஆம் தேதி என்ன ஆச்சு என்றால்............?

23 கருத்துகள்:

Senthil, Pondy சொன்னது…

waiting for your next update

நாய் நக்ஸ் சொன்னது…

கிட்டத்தட்ட உங்கள் நிலைமைதான் எனக்கும்...பிரச்சனை தற்காலிகமாக தள்ளி போடப்பட்டுள்ளது....

மீண்டும் வரும் ஏப்பிரல் மாதம் கண்டிப்பாக ஆரம்பிக்க படருக்கிறது...

சார்வாகன் சொன்னது…

நண்பர் கோவி,
நல்ல பதிவு. தனியார் நிறுவனங்களில் வேலை நிரந்தரம் இல்லை என்பதும்,நம் சூழல் பொறுத்து இடம் மாற்றம் முடியாது என்பதாலும் பல் முறை வேலையை விட்டு,வேறு வேலை தேட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம்.

அச்சமயத்தில் கொஞ்சம் முன் கூட்டியே திட்டமிடுபவர் எனில்,கொஞ்சம் சேமிப்பு,இதர‌ விடயங்களில் கவனாமக் இருந்து வேலைமாற்றம் சுலுவாக் நடக்கும் படி பார்த்துக் கொள்வார்.

இல்லை எனில் கஷ்டம்தான்!!!.

இதன் காரணமாகவே எப்படியாவது அரசு வேலை பெற அனைவரும் இந்தியாவில் முயற்சி செய்கின்றனர்.

அடுத்த பதிவை எதிர்நோக்குகிறேன்.

நன்றி!!!

semmalai akash சொன்னது…

உண்மையான சம்பவங்கள் மனதை காயப்படுத்தியது. எனது எதிர்காலத்தை நினைத்து நினைத்து எப்பொழுதும் ஒருவித பயம் இருந்துக்கொண்டுதான் உள்ளது. அருமையான பகிர்வு நண்பரே!

எனது பக்கமும் வந்துபோங்கள் நானும், இதுபோல் சில உண்மைகளை எழுதி இருக்கிறேன்.

துளசி கோபால் சொன்னது…

ம்ம்ம்....அப்புறம்????

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

நெடுநாளாக இப்பக்கம் காணவில்லையே என எண்ணி,ஆண்டிறுதியானதால் அதிக வேலைப் பழுவாகவுமிருக்குமோ என எண்ணினேன்.
உத்தியோகம் புருச லட்சணம்
சும்மாவா? சொன்றார்கள்.

ப.கந்தசாமி சொன்னது…

அதனால்தான கால் காசு உத்தியோகம்னாலும் கவர்மென்ட்டு உத்தியோகம் வேணும்கிறாங்க.

Unknown சொன்னது…

என்ன ஆயிற்று கோவி! கவலையோடு இருக்கிறேன்

வடுவூர் குமார் சொன்னது…

ஹா!ஹா! சிங்கை மாதிரியே சென்னையிலும் இருக்கு.எனக்கும் சொல்லிட்டாங்க.சிங்கையிலேயே வேணும் என்கிற அளவுக்கு வாங்கிவிட்டதால் இப்போது வலி இல்லை.விவசாய துறைக்கு போகலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

ராஜ நடராஜன் சொன்னது…

யதேச்சையாக நேற்று நினைத்தேன்.எங்கோ கோவி.கண்ணனை காணோமேன்னு!

செக்கு மாடு மாதிரி சுத்திகிட்டிருக்கும் வரை பிரச்சினையில்லை.புதுசா தேடி அங்கேயுள்ள சூழலுக்கும்,பணியாளர்களுடன் இணைவதற்கும் கால அவகாசம் எடுக்கும்.இணைஞ்சுட்டா மறுபடியும் செக்கு மாடுதான்.

அனுபவம் கை கொடுக்கும்.வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

சகோ.சார்வாகன்!புலம்பலை சொன்னாலும் கூட நல்ல பதிவுன்னு வழக்கமான ரெக்கார்டையே போடுறீங்களே!

நல்லவேளை சிந்திக்க மாட்டீர்களா பாட்டை போடவில்லை:)

நமக்கு எதிரா கயிறு இழுக்கறவங்களை மட்டும் கிள்ளினா நல்லாயிருக்காது பாருங்க:)

வவ்வால் சொன்னது…

கோவி,

ஆஹா அதானா கொஞ்ச நாளா அடிக்கடி பதிவுகளை காண முடியலை, சீக்கிரம் ஒரு இருக்கையில் அமர வாழ்த்துக்கள், கண்டிப்பாக இதை விட நல்ல இடம் அமையும்.

உள்நாட்டில் என்றால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக உணர்வோம்,அயல்நாட்டில் இருக்கும் போது கொஞ்சம் மனம் பதைக்கும் என நினைக்கிறேன்.

எல்லா வகை அனுபவத்தையும் பகிர உங்களால் முடிகிறது.
---------

ஓய் ராச நட,

சார்வாகனை கிள்ளி விடுவதில் அப்படி என்ன சந்தோஷம் பதிலுக்கு அவரு கொட்டினா மண்டை வீங்கிடும் :-))

சிந்திக்க மாட்டீர்களா :-))

---------

நக்ஸ் அண்ணாத்தை பார்க்கிர இடத்தில் எல்லாம் என்னை மிரட்டிக்கிட்டு இருந்தார்,

இங்கேயும் இருக்கார் ,கண்ணில் படும் முன் ஓடிவிட வேண்டியது தான் :-))
--------

துபாய் ராஜா சொன்னது…

அருமையான அனுபவப்பகிர்வு. தொடருங்கள்.தொடர்கிறோம்.

Jayadev Das சொன்னது…

இங்கே அரசுப் பணி என்றால் ஒரு பயலும் மதிப்பதில்லை, ஏதாவது IT வேலை என்றால் தான் மதிப்பு. தங்களுடைய தற்ப்போதைய அனுபவத்தை வைத்து எளிதாக வேறு பணியில் சேர இயலாது என்பது வியப்பாக இருக்கிறது. பெஸ்ட் ஆ ஃ ப லக்.

Jayadev Das சொன்னது…

@ ராஜ நடராஜன்

\\சகோ.சார்வாகன்!புலம்பலை சொன்னாலும் கூட நல்ல பதிவுன்னு வழக்கமான ரெக்கார்டையே போடுறீங்களே!

நல்லவேளை சிந்திக்க மாட்டீர்களா பாட்டை போடவில்லை:)\\ Rolling on the floor and laughing!!

ராஜ நடராஜன் சொன்னது…

வவ்வால் & ஜெயதேவ்....அடடா காம்பினேஷன் வேற பொருத்தமாக இருக்கிறதே!

சிரிப்பான்களுக்கு நன்றி.ஆனா நம்ம அண்ணாத்த பார்த்துட்டு சிரிச்சாத்தான் எனக்கு சிரிச்ச மாதிரியிருக்கும்:)

Jayadev Das சொன்னது…

அவரு எங்கே சிரிக்கப் போறாரு, எதாச்சும் குள்ளநரி மாதிரி வேலை பண்ணச் சொல்லுங்க, முன்னால வந்து நிப்பாரு. ஆனாலும், நீங்க வச்ச பஞ்ச் ... செம பஞ்ச் !! மனுஷன் நாக் அவுட் தான். ஆனாலும் வலிக்காத மாதிரி சீன் போடுவாரு பாருங்க!!

suvanappiriyan சொன்னது…

அனுபவம் இருப்பதால் சீக்கிரமே நல்ல வேலை கிடைத்து விடும்.

iTTiAM சொன்னது…

திரு. கோவி. கண்ணன் அவர்களே,
என்ன செய்ய நேரம் சரியில்லை என்று, 'காலத்திடமே' கூற முடியாது!
எளிதாக எல்லாம் சரியாகிவிடும் கவலைப்பட வேண்டாம், எல்லாம் ஓர் அனுபவம்தானே என்று இங்கிருந்து கூறுதல் எளிது. அழுத்தத்தினை எதிர்கொள்பவருக்குத்தன் அதன் சிரமங்கள் புரியும், எனினும் நம்பிக்கை கூறுவதாயின் ' இதுவும் கடந்து போகும்'. தங்களின் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை மற்றும் வார்த்தைகளிலிருந்து சூழ்நிலை அவ்வளவு மோசமாக இருக்காது/இருந்திருக்காது என்று நம்புகிறேன்.

ஒரு விதத்தில் சிங்கை மற்றும் இதர வெளி நாடுகள் பரவாயில்லை, இந்தியா நிலை இன்னும் மோசம், வெளிப்படையாக சொல்லவும் மாட்டார்கள், மூடு மந்திரம் தான் கடைசி நிமிடம் வரை. work from home வார்த்தை படும் பாடு சொல்லி மாளாது இந்தியாவில். பாதி பறவை பாதி மீன் நிலை.
பொருளாதார மந்தம் என்ற ஒன்று இப்போது உலகில் எல்லோரையும் இணைக்கும் பொதுவெளியாகிவிட்டது.

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

இப்போது இதை வெளிப்படையாக எழுதியிருப்பதால், வேறு வேலை கிடைத்து அதில் காலூன்றி விட்டீர்கள் என்றுதான் பொருள்..

வேலை கிடைத்த அனுபவத்தை சீக்கிரப் பகிருங்கள்..

கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரே நிறுவனம்..என்னைப் போன்று திட்ட செயலாக்கத்தில் இருப்பவர்கள் ஆறு ஆண்டுகளில் ஐந்து வேலைகள் மாறுகிறோம்..

என்னைப் போன்றவர்கள் இந்தப் பொருளில் 10 பதிவுகள் எழுதி விடலாம்!

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

வேலைப் போனால் ~ வேலை போனால்.

வரதராஜலு .பூ சொன்னது…

என்னாங்க ஆச்சி அப்புறம்? 8 நாள் ஆயிடிச்சே? மறுநாளே போடுவிங்கன்னு பாத்தேன்?

Dino LA சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்