பின்பற்றுபவர்கள்

12 ஜூன், 2012

திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 1 !

மனித வாழ்க்கையில் வேலை, உண்ணுவது உறங்குவது தவிர்த்து பொழுது போக்கும் ஒரு பகுதி தான், அவ்வப்போது மாறுபட்ட சூழலை தூய்துவருவதன் மூலம் அன்றாட வாழ்க்கையில் புத்துணர்வைக் கூட்டிக் கொள்ள முடியும், இங்கு சிங்கையில் ஜூன் திங்கள் முழுவதும் பள்ளிவிடுமுறை தான், குழந்தைகளைக் கூட்டிச் செல்ல புதிய  இடமாகவும், செலவுக் குறைவாக இருக்க வேண்டுமே என்று எண்ணி அருகே இந்தோனேசியா தீவுடன் இணைந்த பின்டன் (Bintan) தீவிற்கு செல்ல முடிவெடுத்து மூன்று நாள் இரு இரவு (3D2N) பயணத்திற்கு ஏற்பாடு செய்தோம்.

******
கடந்த வியாழன் முதல் சனி வரை சுற்றுலாவில் இருப்பது என்று முடிவாகி இருந்தது, 'பின்டன்' தீவு சிங்கையில் இருந்து கடல் வழியாக விசைப்படகு பயணத்தில் 45 நிமிடத்தில் அடையும் தொலைவில் இருக்கிறது, நாடுவிட்டு நாடு பயணம் என்பதால் கடவு சீட்டு இத்யாதிகளுடன் அதே போன்று 2 மணி நேரத்திற்கு முன்பாகச் சென்று வழிமுறைகளை முடித்துக் கொள்ள வேண்டும், படகு முனையமும் சாங்கி விமான நிலையத்திற்கு அருகே தான் உள்ளது, பேருந்து அல்லது வாடகை உந்திகளில் அந்த முனையத்தை அடைய முடியும். படகு முனையத்தில் உணவுக் கடைகள் உண்டு, விலைகள் வெளியே இருப்பதைக் காட்டிலும் ஒன்னறை மடங்கு கூடுதல். மாலை 3:00 மணி படகு பயணத்திற்கு 1 மணிக்கெல்லாம் முனையத்திற்குச் சென்று குடிநுழைவு சோதனைகளை முடித்துக் கொண்டு விசைப்படகிற்காக 30 நிமிடங்கள் காத்திருந்தோம்.


300 பேர்கள் அமர்ந்து செல்லக் கூடிய சுற்றிலும் கண்ணாடி சன்னல்கள் அமைக்கப்பட்ட குளிர்சாதன பெரிய விசைப்படகு எங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது, இரண்டு அடுக்குகளாக இருந்த படகில் மேல் தளம் உயர்வகுப்பு பயணிகளுக்காகவும், முதல் தளம் மற்றபயணிகளுக்காகவும் ஒதுக்கி இருந்தனர் படகு முற்றிலும் பயணிகளால் நிறைந்திருந்தது, ஒரு நாளைக்கு இரண்டு பக்கமும் இரண்டு படகுகளில் 5 ஏற்றங்களில் (சவாரி)  சுமார் 1500 + 1500 பயணிகளை சிங்கப்பூருக்கும் - பின்டனுக்கும் இடையே பயணிக்க வைக்கிறார்கள், அதாவது சிங்கப்பூர் படகு முனையம் / துறையில் இருந்து ஒரு நாளைக்கு 1500 பேரை பின்டனுக்குச் சென்று சேர்க்கிறார்கள். பிற படகுகள் மற்றும் விமானம் உள்ளிட்ட பிற போக்குவரத்து வழிகளில் இருந்தும் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 2000 சுற்றுலாப் பயணிகள் பின்டனை வந்து அடைகிறார்கள்.

நாங்கள் சென்ற படகு நிரம்பி இருந்தது, குடிக்க இலவச பானம் எதுவும் கொடுக்கவில்லை, ஆனால் படகில் சிறிய திண்பண்ட மற்றும் பானக் கடை ஒன்று இருந்தது, பசி தாகம் என்றால் வாங்கலாம் என்பது தவிர்த்து பொழுது போக்குக்கு கொறிக்க வாங்கினால் கை புண்ணாகிவிடும் விலை கூடுதலாகத் தான் இருந்தது. தெரிந்திருந்தால் வெளியில் இருந்து வாங்கி வந்திருக்கலாமே ந்ன்று நினைத்தேன், பையன் படகுக்குள் ஓடிக் கொண்டு இருக்க அவனைத் துறத்தி துறத்தி இழுத்து வந்து உட்கார வைக்க 45 நிமிடங்களும் ஆகி முடிக்க படகு பின்டன் முனையத்தை அடைந்திருந்தது. மாலை மறுபடியும் 3 மணி தான். இங்கு சிங்கையைக் காட்டிலும் ஒரு மணி நேரம் நேரக் குறைவு.


வழக்காமான குடி நுழைவு சோதனைகள் இந்திய கடவுச் சீட்டுகளுக்கு 10 அமெரிக்க வெள்ளி குடி நுழைவுக் கட்டணமாக வாங்குகிறார்கள், உடைமைகளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தோம், பையன் அவன் தான் இழுக்கனும் என்று ஒரே அடம், அவன் இழுத்துச் செல்வதைப் பார்த்தோர்கள் அனைவரும் புன்னகையுடன் கடந்து சென்றார்கள், பின்டன் படகு முனையத்திற்கு வெளியே நாட்டுச் சின்னமாக இறக்கை விரித்த பருந்தின் சிலை இருந்தது. தங்கும் விடுதியின் பேருந்தும் ஆட்களும் வந்திருந்தார்கள், அந்த விடுதிக்குச் செல்லும் அனைவரின் உடைமைகளையும் பெற்றுக் கொண்டார்கள், பையன் கொடுக்கமாட்டேன் என்று அழுது அடம்பிடித்தான், பின்னர் ஒருவாரு அமைதியடைய வைத்து பேருந்துனுள் ஏறி அமர்ந்தோம். பேருந்து புறப்பட்டது.


15 நிமிடத்தில் ஒரு சோதனைச் சாவடியைக் கடந்து விடுதியின் முகப்பில் இறக்கிவிட்டது,  முகப்பில் யானை சிலைகள், வண்ண மீன் குளங்களுடன் விடுதி இருந்தது, அனைவருக்கும் வரவேற்பு பானம் வழங்கினார்கள். வரவேற்பு அறைக்குச் சென்று பதிவு செய்துவிட்டு (ஏற்கனவே முன்பதிவு செய்த விடுதி தான்)  , இந்த விடுதியின் பெயர் நிர்வாணா ரிசார்ட் ஓட்டல், ஐந்து நட்சத்திர வசதி கொண்டதாம், மிகப் பெரிய கட்டிடமாக இல்லாமல் கடற்கரைப் பகுதிக்கு ஏற்ற வகையில் நீளவாக்கில் வளைவாக மூன்று மாடிகளாகக் கட்டி இருந்தார்கள். அறை எண் மற்றும் சாவியைப் பெற்றுக் கொண்டு அறைக்குச் சென்றோம்,  பொழுது போக்கு விளையாட்டுகளுக்கான பற்றுச் சீட்டுகளையும் கொடுத்திருந்தார்கள், அறையின் சன்னலைத் திறந்தால் எதிரே நீலவண்ணத்தில் அமைதியான கடற்கரைத் தெரிந்தது. அறையில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு விடுதி மையத்திற்கு வந்து கடற்கரைச் சென்றடைந்தோம். செல்லும் வழியில் நீச்சல் குளம் அமைத்திருந்தனர்.



கடற்கரையில் 20 செமி உயர அலைகள், களங்கள் அற்ற தெளிவான தண்ணீர், ரவாவை மாவாக அரைத்தது போன்று மென்மையான கடற்கரை மணல், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது, கடலில் கால் நினைத்துவிட்டு கடற்கரை ஓரமாக நடந்தோம், இரண்டு மரங்களுக்கு இடையே வலையூஞ்சல் கட்டி இருந்தனர், அதில் கொஞ்ச நேரம் ஆடிவிட்டு அப்படியே நடக்க அருகில் ஜெல்லி மீன் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இருந்தது, இன்னும் சற்று தள்ளி நடக்க வழித்தடங்கள் பிரிந்து ஒன்று விடுதியை நோக்கியும் மற்றொன்று நேராகவும் சென்றது, விடுதிப் பக்கம் உள்ள பாதையில் நடந்தோம், அங்கே முயல்கள், எலிமான் போன்ற விலங்குகளையும், கிளிகள், வல்லுறு மற்றும் பருந்து ஆகியவற்றை வைத்து அறைகள் அமைத்து காட்சிக்காக வைத்திருந்தனர், அதைத் தாண்டி ராஜநாகம், மலைப்பாம்பு ஆகியவற்றின் குடில்களும், முதலைகள், ஆமைகள் மற்றும் மீன்கள் ஆகியவற்றிற்கான காட்சி இடங்களும், அதைத்தாண்டி மான்களுடன் ஒரு தோட்டப் பகுதியும் இருந்தது, இன்னும் சற்று நடக்க விடுதி முகப்பு வந்துவிட்டது.





பின்னர் அங்கிருந்து விடுதிக்கு முன்பான வழித்தடத்தில் நடக்க அது அங்கு அன்றாடம் நடைபெறும் விளையாட்டுகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்வுகளின் இடத்திற்கு அழைத்துச் சென்றது, பொழுதும் இருட்டத் துவங்கியதால் அருகே இருந்த பொழுது போக்குக் கூடத்திற்குள் நுழைந்தோம், அது ஒரு உருட்டு பந்து கூடம் (பவுலிங்), எங்களுக்கு கொடுத்த பற்றுச் சீட்டில் இலவசமாக அங்கு விளையாட அனுமதி இருந்தது, ஆனாலும் காலுறை மற்றும் அவர்கள் தரும் காலணிகளை அணிந்து தான் விளையாட வேண்டுமாம், அதற்கு கட்டணம் 4 வெள்ளி. வேற வழி ? பற்றுச் சீட்டைப் பயன்படுத்த வேண்டும் மகளும் விளையாட ஆவலாக இருந்தாள். இரண்டு ஆட்டங்கள் விளையாடினோம், தண்ணீர் விலை விசாரித்தேன், 1 1/2 லிட்டர் பாட்டில் 9 வெள்ளியாம், தலை சுற்றியது. பின்னர் விடுதிக்கு வந்தோம். மாலை 7:30 ஆகி இருந்தது, காலையில் சாப்பிட்ட பிறகு, விடுதிக்கு வந்ததும் எடுத்து வந்த இட்லிகள் தவிர்த்து உணவாக எதுவும் சாப்பிடவில்லை, அவ்வப்போது எடுத்து வந்த திண்பண்டங்கள் ஓரளவு பசியை கட்டுப்படுத்தி இருந்தாலும் இரவு உணவுக்கு ஏதாவது சாப்பிட்டே ஆகவேண்டும். சைவம் சாப்பிடும் எங்களுக்கு என்ன கிடைக்கும் ? அந்த விடுதி வளாகம் மிகப் பெரிய கேம்பஸ் போன்றது அதனுள் பல விடுதிகளை அவர்களே அமைத்திருக்கிறார்கள், வெளி ஆட்கள் யாரும் வரமுடியாத அளவுக்கு கட்டுப்பாடு மிக்க இடம், அதனுள்ளேயே பல்வேறு இடங்களுக்குச் சென்றுவர பேருந்துகள் வைத்திருக்கிறார்கள், கட்டணம் எதுவும் கிடையாது, 30 நிமிடத்திற்கு ஒரு முறை சென்றுவரும், இந்திய உணவு 'மாயாங்க் சாரி' என்னும் பெயர் கொண்ட விடுதியில் அமைந்துள்ள உணவகத்தில் கிடைக்கும் என்றார்கள். இந்திய உணவு என்ற பெயரில் வட இந்திய 'சுட்ட சப்பாத்தி(Naan)' வகை உணவே இருப்பதாக உணவுப் பட்டியலையும் காட்டினார்கள், அனைவரையும் அறைக்குச் செல்லச் சொல்லிவிட்டு நான் உணவு வாங்கி வருவதாகச் சொன்னேன், விடுதி வளாகப் பேருந்தில் ஏற வட இந்தியக் கூட்டம் ஒன்றும் ஏறி கரே முரே என்று கத்திக் கொண்டு வந்தார்கள், ஐந்து நிமிடப் பயணத்தில் உணவகம் வந்தது, வட இந்தியர்களும் இறங்கிக் கொண்டனர்.

இரண்டு செட் 'நான்' மற்றும் அதற்கான கறிகளை வாங்கினேன், விலை ? அரசு வரி, சேவை வரி உள்பட 35 வெள்ளிகள், இதே உணவுப் பொருள் சிங்கையில் இதில் 60 விழுக்காடு தான் இருக்கும். 'நான்' தவிர்த்த கறி (பன்னீர் பட்டர், பருப்பு) மசலாக்கள் எல்லாம் ஏற்கனவே அடைத்து வைத்த (MTR Ready-made) பாக்கெட்டுகளை எடுத்து சூடாக்கித்தான் தருகிறார்கள் பிறகு ஏன் கொள்ளை விலை ? யோசிக்க, வியாபார சூத்திரம் என்பதே இன்றைய உலகில் வாய்ப்புகள் உள்ள இடத்தில் கூடுதலாக விற்று லாபம் பார்ப்பது தானே என்று நினைப்பதைத் தவிர்த்து வேறொன்றும் தோன்றவில்லை, அருகில் சுற்றுலா பரிசு பொருள்கள் விற்கும் கடையில் தண்ணீர் பாட்டில் 3 வெள்ளிகளுக்குத் தருவதாகச் சொன்னார்கள், பாட்டில் ஒன்றுக்கு முன்பு விடுதிக்கு அருகே இருக்கும் கடையில் அதே பாட்டில் தண்ணீர் 9 வெள்ளிகள். அதை  ஒப்பிட்டு இரண்டு பாட்டில் வாங்கினேன், திரும்பவும் பேருந்து எடுத்து விடுதிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, பருப்பு மசாலா கெட்டுப் போய் இருந்தது மற்றதெல்லாம் பரவாயில்லை. நாளைக்கு என்னச் செய்வது ? எங்கே சுற்றுவது  ? என்று பயண வழிகாட்டி அட்டைகளைத் தேடினால் அந்த சுற்றுலா தளம் தவிர்த்து வெளியே சென்றுவர வாடகைக் கார் கட்டணங்கள் எல்லாம் தலையைச் சுற்றும் அளவுக்கு 80 வெள்ளி, 100 வெள்ளி என்றெல்லாம் போட்டிருந்தார்கள். சுற்றுலா என்று கிளம்பி வந்தது தனித் தீவில் சிக்கிக் கொண்டது போல் உணர்வு ஏற்பட்டது. இரண்டு காரணம் அங்கு பொருள்களின் விலை சிங்கையைக் காட்டிலும் மிகுதி, அந்த வளாகத்தைத் தவிர்த்து வேறு எதுவும் பார்க்கச் செல்ல இயலாது.

பேசாமல் வேறு எங்காவது சென்று வந்திருக்கலாமோ ? என்று நினைத்தவாறு...



தொலைகாட்சியை ஓடவிட்டு சிறிது நேரம் பார்த்துவிட்டு தூங்கிவிட்டோம்.

தொடரும்...


13 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது…

சாதாரணமாக நாங்கள் ஊருக்குச் செல்கின்றோம் என்றால் சென்றடையும் வரைக்கும் தேவையான அத்தனையும் எடுத்துக் கொண்டு வண்டியை எடுப்போம். காரணம் விலை பிரச்சனைகள் ஒரு பக்கம், சுகாதாரம் மற்றொரு பக்கம். மற்றொன்று ஒரு வெளி இடத்திற்குச் சென்ற பிறகு மனதில் சிறிய சஞ்சலம் உருவாகி விட்டாலும் கூட அங்குள்ள சின்ன சின்ன சந்தோஷங்களைக்கூட நம் மனம் ஏற்றுக் கொள்ளாது. இது போன்ற சமயங்களில் நான் கடைபிடிப்பது ஒன்றே ஒன்று தான். குழந்தைகளின் விருப்பத்தை மனதில் கொண்டு என் விருப்பங்களை உள் மனதில் புதைத்துக் கொள்வதுண்டு. இந்த முறை படங்களும் பெரிய எழுத்துக்களுமாக படிக்க எளிதாக இருந்தது.

Yaathoramani.blogspot.com சொன்னது…

படங்களும் விளக்கப் பதிவும்
நேரடியாகப் பார்ப்பதைப் போல இருந்தது
தொடர வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் சொன்னது…

இப்படி ஒரு புதை குழியா?

துளசி கோபால் சொன்னது…

அட ராமா..............

சொ.செ சூ வச்சுக்கிட்டாப் போல?

கிரி சொன்னது…

இந்தோனேசியாவிற்கு இந்த விலைகள் ரொம்ப அதிகம் தான். நாங்கள் ஒரு முறை "பாலி" சென்று இருந்தோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி திருப்பூர் கூறியது...
சாதாரணமாக நாங்கள் ஊருக்குச் செல்கின்றோம் என்றால் சென்றடையும் வரைக்கும் தேவையான அத்தனையும் எடுத்துக் கொண்டு வண்டியை எடுப்போம். காரணம் விலை பிரச்சனைகள் ஒரு பக்கம், சுகாதாரம் மற்றொரு பக்கம். மற்றொன்று ஒரு வெளி இடத்திற்குச் சென்ற பிறகு மனதில் சிறிய சஞ்சலம் உருவாகி விட்டாலும் கூட அங்குள்ள சின்ன சின்ன சந்தோஷங்களைக்கூட நம் மனம் ஏற்றுக் கொள்ளாது. இது போன்ற சமயங்களில் நான் கடைபிடிப்பது ஒன்றே ஒன்று தான். குழந்தைகளின் விருப்பத்தை மனதில் கொண்டு என் விருப்பங்களை உள் மனதில் புதைத்துக் கொள்வதுண்டு. இந்த முறை படங்களும் பெரிய எழுத்துக்களுமாக படிக்க எளிதாக இருந்தது.///

நீங்கச் சொல்வது சரிதான், எதிர்பார்ப்புகள் இல்லாத இடத்தில் ஏமாற்றம் என்பதும் இருக்காது

கோவி.கண்ணன் சொன்னது…

//Ramani கூறியது...
படங்களும் விளக்கப் பதிவும்
நேரடியாகப் பார்ப்பதைப் போல இருந்தது
தொடர வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி ரமணி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் கூறியது...
அட ராமா..............

சொ.செ சூ வச்சுக்கிட்டாப் போல?//

அதே அதே. செலவோடு நேரத்திற்கும் சேர்த்தே சூனியம்

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி கூறியது...
இந்தோனேசியாவிற்கு இந்த விலைகள் ரொம்ப அதிகம் தான். நாங்கள் ஒரு முறை "பாலி" சென்று இருந்தோம்.//

பாலி எவ்வளவோ பரவாயில்லை, பார்க்க ரசிக்க எவ்வளவோ இருக்கிறது. உணவுப் பொருள் செலவும் பின்டன் அளவுக்கு கிடையாது

கோவி.கண்ணன் சொன்னது…

இந்தப் பதிவுக்கு மைனஸ் வாக்குப் போட்ட மகராசன் வாழ்க. அடுத்தும் உங்கள் சேவை தேவை.

வவ்வால் சொன்னது…

கோவி,

நாட்டுக்கு ஒரு தனித்தீவு இருக்கும் போல, இந்தியாவில் அந்தமான் தீவுகளுக்கு சென்றாலும் அதே கதை தான் , எல்லாம் பல மடங்கு விலை.

ஆனால் இந்தியாவிலேயே பெட்ரோல், கார் போன்றவற்றின் விலை அங்கு தான் குறைவு :-))

இவ்வளவு ஏன் சென்னையில ஒரு தியேட்டர்ல போய் எதுவும் வாங்கி திண்ணுட முடியாது ,அப்படி ஒரு கொள்ளை, இதுல தியேட்டருக்கு மக்கள் வரலைனு சினிமாக்காரங்க பொலம்பல் வேற :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//இவ்வளவு ஏன் சென்னையில ஒரு தியேட்டர்ல போய் எதுவும் வாங்கி திண்ணுட முடியாது ,அப்படி ஒரு கொள்ளை, இதுல தியேட்டருக்கு மக்கள் வரலைனு சினிமாக்காரங்க பொலம்பல் வேற :-))//

வவ்ஸ், நீங்கள் சொல்வது சரிதான், குறிப்பாக பேருந்து நிலையம், இரயில் நிலையம் ஆகியவற்றின் கொள்ளைகள் மிகுதி, எனக்கு தெரிந்து பேருந்து நிலையத்திலும் பிற இடங்களிலும் பொருள்களின் விலை ஒன்றுபோல் இருப்பது நாகைப் பேருந்து நிலையத்தில் மட்டும் தான். பக்கத்தில் திருவாரூரில் கூட அப்படி இல்லை

முகவை மைந்தன் சொன்னது…

நல்லா மாட்டிக்கிட்டீங்களா? கி கி கி கி... சுற்றுலா விடுதி தவிர வேறெதும் இல்லை என்பதால் பின்டான் செல்வதில் எனக்குப் பெரிதாக ஆர்வம் இல்லை.

//பையன் அவன் தான் இழுக்கனும் என்று ஒரே அடம்// ;-)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்