'வீட்டுக்குள்ள இருக்கிற பொம்பளைங்களுக்கு என்னப்பா கஷ்டம் அவங்கப் பாடு ஜாலி - ன்னு கொஞ்சம் ஆண்டுக்கு முன்னால நினைத்துக் கொண்டு இருந்தோம், இப்போது பரவலாக அவர்களும் வேலைக்கு வந்துவிட்டார்கள், பெண்கள் ஆண்களுடன் போட்டியிடாத துறையே இல்லை என்னும் அளவுக்கு பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயர்ந்திருப்பது உலகெங்கிலுமான நடைமுறை, இந்தியாவில் இந்த நிலை வளர்ந்துவருகிறது, நம் கண்ணில் எதிர்படும் மிகப் பெரிய உயரக் கட்டிடங்கள், பூங்காக்கள், கப்பல்கள் ஆகியவற்றில் ஆண்களின் கற்பனைத் திறனும் செயலாற்றலும் அமையப் பெற்றவை என்பதால் ஆண்களுக்கு நிகரான அறிவித்திறனை பெண்கள் பெற்றிருக்கவில்லை என்று சொல்வதைக் காட்டிலும் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை அல்லது அவர்கள் அந்தத் துறைகளில் இன்னும் கால்பதிக்க முயற்சிக்கவில்லை என்று தான் சொல்லமுடியுமே அன்றி அவர்களுக்கு அதற்கான திறன் இருக்காது என்று சொல்ல ஒன்றும் இல்லை, ஆண்களால் மட்டுமே செய்யக் கூடியது என்பதாக சவக்கிடங்கிலும், இடுகாடுகளிலும் கூட பெண்கள் பணியாற்றுகின்றனர், மிகப் பெரிய அரசமைப்புகளில் பெண்கள் பிரதமராகவும், அதிபர்களாகவும் இருக்கின்றனர் என்பதால் கட்டுமான வடிவமைப்புத் தொழிலோ, ராக்கெட் தொழில் நுட்பம் முதலான அறைகூவல் நிறைந்த இயந்திரவியல் தொழில் நுட்பமோ அவர்களால் முடியாத ஒன்று என்பதற்கில்லை.
***********
அக்கம் பக்கம் (எங்க ஊரில் Neighborhood என்பதை இப்படித்தன் சொல்லுவாங்க) இந்தியர்கள் ஒண்ணு சேர்ந்து இந்திய புத்தாண்டு விழான்னு ஒன்று நடத்தினார்கள், இந்த நிகழ்ச்சிக்கு முழுக்க முழுக்க சிங்கப்பூர் சமூக நல அமைப்புத்தான் பொருளுதவி மற்றும் பிற. வெறுமன புத்தாண்டு விழான்னு கொண்டாடக் கூடாது என்று பள்ளிகளையும், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் இந்தியர்களையும் கோலப் போட்டிக்கு அழைத்து இருந்தனர், மாணவர்கள், மாணவிகள் இரண்டு பள்ளியில் இருந்து மட்டும் தான் கலந்து கொண்டனர், அதில் ஒன்று பட்டய கல்லூரி (பாலிடெக்னிக்) மற்றும் 6 குடும்பங்கள் கோலப் போட்டியில் பங்கு பெற்றனர், கோலத்திற்கு 8 பகுதி ஒதுக்கி இருந்தனர், யார் செய்த சதியோ தமிழ் புத்தாண்டுன்னு பலர் கொண்டாடுவதை சாதுர்யமாக 'இந்தியப் புத்தான்டு' என்று பெயர் மாற்றி இருந்தனர், இங்கிட்டும் நிறைய தமிழ் தீவிரவாதிகள் இருக்காங்கப் போலன்னு நினைச்சேன். நிகழ்ச்சி 9 மணிக்கு துவங்கியதாம், என் மகளும் அவளுடைய தோழிகளுடன் கலந்து கொண்டாள், நான் நண்பரை வானூர்தி நிலையத்தில் விட்டுவரச் சென்றிருந்தேன், எனவே கோலத்திற்கு புள்ளி வைப்பதைப் பார்க்க முடியவில்லை.
வீட்டில் இருந்து கூப்பிடும் தொலைவு தான் அந்த சமூகமன்றம், காலை 10 மணிக்கு அங்கு சென்றேன், அதற்குள் மொத்த குடும்பமும் எங்க வீட்டு குட்டிப் பையனும் அங்கு இருந்தான், கோலங்கள் முடிக்கப்பட்டு இருந்தன. ஒரு மணி நேரம் கொடுத்ததிருந்ததில் இவ்வளவு விரைவாக இவ்வளவு அழகாகக் கோலம் போட முடியுமா ? அங்கு தான் பெண்களின் திறமை பளிச்சிடுவதைப் பார்த்தேன், திரும்பவும் ஒரு முறை முதல் பத்தியைப் படிச்சுட்டு வாங்க. நாலு பெண்கள் ஒண்ணு சேர்ந்தால் அங்கு மென்மையாக கலவரம் வெடிக்கும் என்பது தான் நமக்குத் தெரியும், ஆனால் நான்கு நான்கு பேராக இவ்வளவு அழகாக நேர்த்தியாக கோலமிடவும் முடியும் என்பதை அங்கு தான் தெரிந்து கொண்டேன், என்ன ஒரு அழகுணர்ச்சி, அதனுடன் இருந்த திறமை, கற்பனை வளம், வாய்ப்பே இல்லை, இது போல் ஆண்களை ஒன்று சேர்ந்து ஒரு செயல் செய்யச் சொன்னால் பாதி பேர் எழுந்து 'தம்' அடிக்கப் போய்விடுவார்கள், மீதி வேலையில் ஒருவரின் கை ஓங்கி இருக்க மற்றவரெல்லாம் ஒப்புக்குச் சப்பானியாக இருப்பர். தவிர இந்த அளவுக்கெல்லாம் ஆண்களால் பொறுமையாகச் செயல்பட முடியுமா என்பதே எனக்கு ஐயமாக இருந்தது.
போட்டியில் கலந்து கொண்ட கோலங்களில் இரண்டைத் தவிர அனைத்தும் அசத்தலோ அசத்தல்,
மேலே உள்ள கோலம் மகளும் அவள் தோழிகளும் வரைந்தது, இதற்கு முதல் நாளே மூன்று மணி நேரம் மகளுடைய பள்ளித் தோழில் வீட்டில் பயிற்சி வேற நடந்தது, மகளின் தோழியின் அம்மா தான் பயிற்சி, 'ஒரு கோலப் போட்டிக்கே இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் படிப்புக்கு எவ்வளவு பயிற்சிக் கொடுப்பாங்க, நாம அந்த அளவுக்கு ஈடுபாடு காட்டுவதில்லை, என்று சொல்லி எங்க வீட்டுக்கார அம்மா பெருமூச்சிவிட, ஏற்கனவே பயிற்சி வகுப்பு, வீட்டுப்பாடம் என்று நாக்கு தள்ள பள்ளி பிழிந்து எடுக்க, மகப் படும்பாடு, நமக்கே பரிதாபமாக இருக்கு, இதில வீட்டில் தனியாகப் படிப்பைக் கையில் எடுத்தால், உன் பொண்ணு படிக்கிறதையே வெறுத்துடுவாள்' என்றேன். நிகழ்ச்சிக்கு துணைப்பிரதமர் வருவார் என்று கேள்விப்பட்ட மகள், கோலம் போடும் எங்களுக்கெல்லாம் அவர் கொடுப்பாரா ? என்று கேட்டு ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தாள். ரொம்ப எதிர்பார்க்காதே.......அங்க கோலம்போட வரும் அனைவருக்கும் கைகொடுத்தால் அவர் கையே ஒடுந்துவிடும் என்று கூறினேன். மேலே உள்ள கோலம் மற்ற மூன்று மாணவிகளுடன் சேர்ந்து மகள் வரைந்தது.
அடுத்து பாலிடெக்னிக் மாணவ / மாணவிகள், அவங்க நேரத்திற்கு முடிக்கவில்லை, அவங்க நினைத்தப்படி கோலமும் நேர்த்தியாக வரவில்லை
இருந்தாலும் ஒரு மாணவனும் முயற்சி செய்து கொண்டிருந்தான்.
இது தான் முதல் பரிசு பெற்றக் கோலம், அழகாக வரைந்திருந்தனர், நடுவில் குத்துவிளக்கு அலங்காரம், மூலையில் புத்தாண்டு வழிபாட்டுக்கான பொருள்கள், சுற்றிலும் கிட்டதட்ட ஒரே அளவிலான வெற்றிலை, அதில் தங்க நிற ஜிகானாவில் (confetti) கிழும் மேலுமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தாண்டு வாழ்த்து, சுற்றிலும் உள்ள வெற்றிலைள் ஒவ்வொன்றிலும் வளையல்கள் மற்றும் பெரிய நாணயம் அளவிளாக தங்கத்தால் சுற்றப்பட்ட சாக்லெட், கோலத்தின் வண்ணங்களாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது வண்ணம் பூசப்பட்ட அரிசி. மொத்தமாகப் பார்க்க சிறப்பாக இருந்தது. என்னதான் சிறப்பு என்றிருந்தாலும் திங்கிறப் பொருளை இப்படியா வீணடிப்பது என்று நினைக்கத்தான் செய்த்து, மற்றவர்களுக்கு அப்படித் தோன்றியதா தெரியாது. திரைப்படங்களில் (சண்டை) காட்சி அமைப்புக்கு பயன்படுத்தும் பொருள்களை வீணடிப்பதை ஒப்பிட இது மிக மிகக் குறைவானதே
இது இரண்டாம் பரிசுக்கானது, இவங்க சொன்ன நேரத்தில் முடிக்காமல் இருந்ததால் இரண்டாம் இடத்திற்கு வந்ததே பெரிது. இவங்களுடைய கோலமும் நன்றாக இருந்தது.
இது மூன்றாம் பரிசுக்கான கோலம், இதற்கு இரண்டாம் பரிசு கொடுத்திருக்கலாம். வண்ணங்களைவிட வெள்ளை நிறத்தில் வளைவுகளை ஒன்று போல் வரைந்திருந்தனர், மற்றபடி இதில் வேலைப்பாடுகள், குறைவுதான், இது போன்ற கோலங்கள் கோவிலினுள் மேல் சுவற்றில் போடப்பட்டிருக்கும்.
கீழே உள்ளவகைளும் சிறப்பாக இருந்தாலும் 1,2,3 தரவரிசையில் மேலேவரவில்லை.
சமூக மன்றத்தில் பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துணைப் பிரதமர் வந்திருந்தார், முதலில் மாணவர்களுக்கான கோலப் போட்டி பரிசளிப்பு விழாவில் என் மகளும் அவள் தோழிகளும் வரைந்த கோலத்திற்கு முதல்பரிசு கிடைத்தது, மகள் எதிர்ப்பார்த்தது போல் தோழிகளுடன் மேடை ஏறி துணைப்பிரதமரின் கைக் குலுக்களைப் பெற்று மகிழ்ந்தாள், நான்கு மாணவிகளும் சேர்ந்து அந்த பரிசை வாங்கி வந்தனர், பின்னர் மேலே கூறியபடி மாணவர்கள் அல்லாதவர்களின் கோலப் போட்டிப் பரிசு 1,2,3 வரிசைப்படிக் கொடுக்கப்பட்டது, பின்னர் கோலப் போட்டியில் வெற்றிபெறாத கோலங்களுக்கும் சிறப்பு பரிசுகளும் கொடுக்கப்பட்டன, போட்டியில் கலந்து கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் என்று கொடுக்கிறார்கள்.
பரிசு கொடுத்து முடிந்துவிட்டு துணைப் பிரதமர் புறப்பட்டார், அதன் பிறகு நிறைய ஆட்டங்கள், கொண்டாட்டங்கள், பாடல்கள் மேடை ரகளை கட்டியது, மலேசியாவில் இருந்து வந்திருந்த வில்லியம் சியா என்கிற சீனன் தமிழ் பாட்டை பட்டைய கிளப்பிப்பாடுகிறான், அவனுடைய 'நேத்தி ராத்திரி அம்மா' பாட்டு தூளோ தூள்.
மணி ஆக பசிக்கு ஜெனங்க பறக்க, ஏற்கனவே விருப்பத்திற்கேற்ற உணவாக சைவம் அசைவம் தனித்தனியாக வைத்திருந்தனர். சைவ சில்லித் சிக்கன், சைவ பெப்பர் மட்டன், கத்திரிக்கா கறி, பிரியாணி சோறு.....இதே போல் அசைவ வகைகளும் இருந்தன.
பபே சிஸ்டம் என்றாலும் கூட்டத்தைப் பார்த்துட்டு உணவு ஏற்பாட்டாளர்கள் கோவில் பிரசாதம் போல் கரண்டியில் அளந்து அளந்து போட்டனர். நிகழ்ச்சியெல்லாம் முடிஞ்சு பார்த்தா வைத்திருந்த உணவில் பாதிக்கு மேல் குப்பையில் கொட்டிக் கொண்டு இருந்ததனர், 'உணவுப் பொருள் இவ்வளவு வீணாகுதே.........' அன்னிக்கு உற்சாகங்களை மீறி ஏற்பட்டது இரண்டாவதாக அதே உணர்வு.
8 கருத்துகள்:
எல்லாக் கோலங்களுமே அருமையாத்தான் இருக்கு.
மகளுக்கு எங்கள் அன்பான வாழ்த்துகள்.
சாப்பாடு வரிசை பார்த்து கோபாலுக்கு மகிழ்ச்சி :-)))))
நானும் நேற்று ஒரு திருமண நிகழ்வில் குப்பையில் கொட்டப்பட்ட சாப்பாட்டை நினைத்து கவலையுற்றேன். இருநூறு பேருக்கு போதுமான உணவு அது. :(
வாவ் பிரியாணி ரைஸ்.. கோலங்கள் அருமை..
பதிவு நல்ல இன்ரெஸ்ட்டா இருந்தது. படங்கள் சுப்பர்.
//பெண்கள் ஆண்களுடன் போட்டியிடாத துறையே இல்லை என்னும் அளவுக்கு பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உயர்ந்திருப்பது உலகெங்கிலுமான நடைமுறை//
உலகெங்கிலுமா!! ஹி! ஹி! ஹி!
தங்களுக்கும் தங்கள் மகளுக்கும் வாழ்த்துக்கள்
கோவி,
உங்க மகளுக்கு வாழ்த்துகள்,நல்ல வண்ண மயமான ரங்கோலி, எல்லா ரங்கோலியும் பளிச்சுனு இருக்கு.
ரூல்ஸ் ரெங்கசாமீயா ஒன்னு சொல்லிக்கிறேன், ரங்கோலி போட்டிகளில் முழ வடிவான திடப்பொருளை எல்லாம் பயன்ப்படுத்தக்கூடாது. உ.ம்: அரிசி, உளுந்து, வெற்றிலை ,பூக்கள் போன்றவை.போட்டியல்லாத அலங்கார நோக்கில் என்ன வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
என்ன தாய்குலத்துக்கு பக்க வாத்தியம் பலமா இருக்கு, பசங்களும் ஒன்னு கூடினா அசத்துவோம்ல, இத போல ரங்கோலில எல்லாம் எங்க பசங்க டீமே அசத்தும்,படிக்கிற காலத்தில ரங்கோலி போட்டவன் தான்..
// சைவ சில்லித் சிக்கன், சைவ பெப்பர் மட்டன்,//
சைவம்???
கோலங்களின் அழகு மனதை அள்ளுகிறது.
மகளும் அவரது தோழிகளும் அற்புதமாக இட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.
நிகழ்ச்சியை அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். நல்ல பகிர்வு.
கருத்துரையிடுக