பின்பற்றுபவர்கள்

7 செப்டம்பர், 2011

பயன்பாட்டில் இல்லாத தமிழ் குறியீடுகள் !

உயிர், மெய், உயிர்மெய் மற்றும் ஃ எழுத்து, ஃ - இதை ஆய்தெழுத்தென்பர், மேலும் ஃ - இதற்கு தனிநிலை, அஃகேனம், முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு. ப்பதை தவிர்ப்பது தமிழ்த் தூய்மையை மேலும் பேணும் என்பது எனது பரிந்துரை. இருந்தாலும் இக்கட்டுரையானது ஃ குறித்தது அல்ல. மேற் கூறியபடி தமிழில் 247 குறியீடுகள் இருந்தாலும் அடிப்படை 12 + 18 + 1 ஆக 31 எழுத்துகள் தாம், அவற்றில் உயிரெழுத்து குறில் நெடில் ஆங்கிலம் உட்பட சிலமொழிகளில் ஒன்றாகவே இருக்கிறது, அம்மொழிகள் சொற்களுக்கான ஒலிகள் இப்படித்தான் ஒலிக்க வேண்டும் (Pronounceable) என்று இலக்கணம் வைத்திருக்கிறார்கள், குறில் நெடில் தனித்தனியாக அமைந்திருப்பதால் எழுத்தொலிகளை அறிந்து கொள்ளும் எவரும் தமிழ் சொல்லை எளிதாகப் படித்துவிட முடியும் என்பது தமிழுக்கும் இந்திய மொழிகளுக்கும் இருக்கும் சிறப்பு. ஒரு மொழிக்கு குறைவான எழுத்துகளோ அல்லது மிகுதியான எழுத்துகளோ அம்மொழிக்கு தனிப்பட்ட சிறப்பை வழங்கிவிடாது, மொழியின் சிறப்பென்பது பிற மொழிக்கலப்பின்றி தனித்தியங்குவதையும் அதன் இலக்கிய / இலக்கண வளங்களையும் சார்ந்ததே.

ஓலைச் சுவடிகள் வழியாகவும், கல்வெட்டுகளிலும் எழுதும் காலத்தில் எழுதுவதென்பது எளிதான ஒன்று அல்ல, எனவே முடிந்த மட்டில் சொற்களை குறைத்து எழுதுவதென்பது மிகத் தேவையான ஒன்றாக இருந்தது, 20 ஆண்டுகளுக்கு கூட முன்பு மிக விரைவாக எழுதுவதற்கென்றே சுறுக்கெழுத்து (குறியீட்டு) எழுத்து பலமொழிகளுக்கும் இருப்பது நாம் அறிந்தது தான், அலுவலக கூட்டங்களின் போதும், உரிமையாளர் சொல்லுவதை வைத்து விரைவாக எழுத குறியீட்டு எழுத்துகளை செயலர்கள் / செயலாளர்கள் (stenographer) அறிந்திருப்பர், தற்போது அவை தேவை இல்லை ஏனென்றால் சிறிய அளவு ஒலிவாங்கியின் (MP3 Recorder) மூலம் தகவல் பெற்று அதைக் கேட்டு தட்டச்சில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது மின்னனுயியலின் முழுப் பயன்பாட்டிற்கு முன்பான காலத்தில் சுறுக்கெழுத்து என்பது பல்வேறு மொழிகளுக்கும் இன்றியமையாதவையாகவே இருந்தன.

ஓலைச்சுவடிகாலத்தில் சுறுக்கெழுத்து என்பது பரவலாகப் பயன்படுத்தாவிடிலும் நாள், திங்கள், ஆண்டுகளைக் குறிக்க குறியீட்டுச் சொற்கள் புழக்கத்தில் இருந்தன, சோதிடர்கள் மற்றும் நிலப்பத்திரம் வரைபவர்கள் தேதி(திகதி>திதி>தேதி - இது தான் ஆங்கிலத்திலும் Date என்பதன் மூலம், Old French dade) குறித்த விவரங்களுக்கு குறியீடுகளைப் பயன்படுத்துவர்.

நாள் அல்லது திகதி - ௳
திங்கள் அல்லது மாதங்களைக் குறிக்க - ௴
ஆண்டு அல்லது வருடங்களை குறிக்க - ௵

எண்கள் 1,2,3,4,5,6,7,8,9,10,100,1000 முறையே
௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯,௰,௱,௲

நடைபெறும் திருவள்ளுவர் ௵௧௯௭௧ , தை ௴ ௧௨ என்பது திருவள்ளுவர் ஆண்டு 1981 (ஆங்கிலத்தில் 1950) தை திங்கள் 12 ஆம் நாள் ஆகும். (தமிழக அரசு 1971 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது), திருவள்ளுவர் ஆண்டு அறிமுகம் இல்லாத காலத்தில் விக்ரம ஆண்டு (சாலிவாகன சகாப்தம் என்பார்கள்) முறையில் எழுதப்படும்.

'அ' னாவுக்கு முன்னாடி எழுத்து என்ன ? என்று எனது தந்தையார் சிறுவயதில் புதிராகக் கேட்பார், விழிக்கத் தான் நேரிடும், பிறகு அவரே சொல்லுவார், 'அ' னாவுக்கு முன்னாடி எழுத்து 'எ' என்று கூறி தமிழ் எண்களைக் குறிப்பிடுவார் . அப்படித்தான் எனக்கு ஒரளவு தமிழில் எண்கள் குறித்த குறியீடுகள் அறிமுகம் ஆகி இருந்தன.

அது தவிர்த்து பிற குறியிடுகளும் நில ஆவணங்கள் எழுதும் போது பயன்பட்டு வந்தது, மேற்படி நில உடைமை தாரர் என்னுமிடத்தில் மேற்படி என்றச் சொல்லைக் குறிக்க ௸ யை பயன்படுத்தினர், மேலும் எண்ணைக் குறிக்க தற்காலத்திலும் ஒரு சில இடங்களில் (சிங்கையில் மின் தூக்கிகளினுள், பழுது ஏற்பட்டால் அழைக்க வேண்டியது ௺ 1800-XXXXXXXX) எண் என்பதன் சுறுக்கமாக ௺ பயன்பட்டுள்ளது. மேலும் வரவு செலவு குறியீடுகளாக ௷ வரவு என்பதாகவும் ௶ செலவு என்பதற்கும் பயன்பட்டு வந்தது. ௫ - ரூபாய் நாணாயக் குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டது.

இவைகள் ஏன் மறைந்து போனது ? சோம்பலா ? குறியீடுகளில் எழுதுவது எளிது விரைவானது என்றாலும் அச்சு ஊடகங்கள் ஏற்பட்ட காலத்தில் இவற்றின் புழக்கம் வெகுவாகக் குறைந்தது, காரணம் அவை தாள்களில் அச்சடிக்கப்படுவதால் தாள்களின் விலைக் குறைவு மற்றும் சுறுக்கத்தைவிட சொற்களாக எழுதுவதே எளிதாகப் புரியும் மேலும் குறியீடாக எழுதுவதன் எல்லைக் கோடுகளான எழுத்தாணி (ஓலைச்சுவடி) அழுத்தம், உளி(கல்வெட்டு) அழுத்தம் ஆகியவை அச்சுக் கோர்பின் போது இல்லை. அச்சுக்கோர்ப்பு முறை மாறி தற்போது கணிணி வழியாக எழுத்துகள் நகல் எடுக்கும் போது பழைய குறியீடுகளின் தேவை என்பது கிட்டதட்ட தேவையற்றது என்றாகிவிட்டது.

குறியீடுகளை மீட்டுப் பயன்படுத்தலாமா ? என்னைக் கேட்டால் தேவை இல்லை என்றே சொல்லுவேன், தற்போது கணிணியில் தட்டச்சவோ, தாள்களில் நகல் எடுக்கவோ எழுத்துக் குறைப்பிற்கான, குறிகளுக்கான தேவை மிகவும் வேண்டியதாக இல்லை. குழந்தைகளுக்கு அந்த பழைய குறியீடுகளை அறிமுகப்படுத்தி பாடச் சுமையை ஏற்றுவதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை.

மேலும் தமிழ் எண் குறியீடுகளிலும் இதே கருத்தைத் தான் கொண்டிருக்கிறேன், வழக்கத்தில் இருக்கும் 0 முதல் 9 வரையிலான எண் குறியீடுகள் கிட்டதட்ட தமிழ் வட்டெழுத்து வடிவத்தையே கொண்டிருக்கிறது, அவற்றை நாம் வாக்கியங்களில் பயன்படுத்தும் போது அவை பிறமொழி எழுத்துகளாக நினைக்கப்படுவதும் இல்லை, மேலும் பழைய எண்களை மறு அறிமுகம் செய்து, இன்று முதல் என்பதாக அனைத்து தரப்பு தமிழர்களையும் படிக்கச் சொல்லுவது என்பது இயலாத ஒன்று, இந்தியா தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் ஒரே ஒரு புதிய நாணயக் குறியீட்டையே உடனடியாக உள்வாங்கக் கடினமாக இருக்க தமிழ் எண்கள் ௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯,௰ மனப்பாடம் செய்து பயன்படுத்துவது / படிப்பது தமிழில் எழுதிப்பழகாதவர்களுக்கு (படிப்பு முடித்து வேலைக்குச் சென்றவர்கள்) எளிதும் அல்ல.

தமிழகம் தவிர்த்த பீற மாநிலங்களின் அம்மாநில மொழி எழுத்துகளை இயல்பாகப் பயன்படுத்துகின்றனர், நமக்கு அந்த மாற்றம் திணிக்கப்படாமல் மெதுவாக ஏற்பட்டு, குறிப்பாக நாளிதழ்கள் வார இதழ்களின் மீள் அறிமுகப்படுத்தப்பட்டு வழக்கிற்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்கலாம்.

சீன மொழி எழுத்துகளின் எண்ணிக்கையை ஒப்பிட தமிழ் எழுத்துகள் மற்றும் குறியீடுகள் அவற்றில் ஐந்து விழுக்காடு கூட இல்லை. தமிழின் தனித்தன்மை பேண தமிழ் எண்களை மீள் பயன்பாடாக பயன்படுத்தத் துவங்கலாம். அதனால் பழைய புத்தகங்களை மீள் பதிப்பு செய்ய எதுவும் தடங்களும் இல்லை எனெனில் ஆங்கிலத்துடன் இன்றைய எண் முறைகளையும் சேர்த்தே தான் படித்துவருகிறோம், அவை பழைய புத்தகங்களில் இருக்கும் போது, அவற்றை புதிதாகப் படிப்பவர் எவரும் புரிந்து கொள்ள இயலாது என்று சொல்லவும் இயலாது.


இணைப்புகள் :
தமிழ் எழுத்துகள்
தமிழ் எண்கள்

9 கருத்துகள்:

naren சொன்னது…

//நமக்கு அந்த மாற்றம் திணிக்கப்படாமல் மெதுவாக ஏற்பட்டு, குறிப்பாக நாளிதழ்கள் வார இதழ்களின் மீள் அறிமுகப்படுத்தப்பட்டு வழக்கிற்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்கலாம்.//

ஊடகங்களில் அதிகமாக பயன்படுத்தினால், தானாக பழகி, மக்கள் அறியும் எளிதாக பயன்படுத்தும் எழுத்துகளாக மாறிவிடும்.

தமிழில் பூஜ்ஜியதிற்கு எண் எழுத்து இல்லையோ???

நல்லப் பதிவு.

கோவி.கண்ணன் சொன்னது…

நரேன்,

சுழியங்களை கணக்கில் தமிழில் பயன்படுத்தப்படவில்லை, எனவே அவை இல்லாமல் இருக்கக் அதுவே காரணம் என்று நினைக்கிறேன், தற்போதைய கணக்குகள் சுழியங்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன, மிகவும் கடினமான கணக்கு வழக்குகள் உள்ள சோதிடங்களிலும் சுழியங்கள் இருந்ததாகத் தெரியவில்லை,

இதுபற்றி விக்கிப்பீடியா தமிழில் கீழ்கண்டவாறு கொடுத்துள்ளனர்

தமிழ் எண்களில் பழங்காலத்தில் சுழியம் (பூஜ்யம்) இல்லாமல் போயினும், தற்காலத்தில் சுழியம் தமிழில் எண்களை எழுதும் போது பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1825ஆம் ஆண்டு வெளி வந்த கணித தீபிகை என்னும் நூல் கணித செயல்பாடுகளை எளிமையாக்கும் பொருட்டு தமிழில் சுழியம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறுகிறது.[1]. ஒருங்குறியின் 4.1 பதிப்பில் இருந்து தமிழ் எண் சுழியம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

குமரன் (Kumaran) சொன்னது…

கண்ணன்,

ஆயுதம் வேறு; ஆய்தம் வேறு. தமிழ் எழுத்தை ஆய்த எழுத்து என்று தான் பலகாலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனை ஆயுத எழுத்து என்பதும் கேடயத்தின் மும்முனையை முப்பாற்புள்ளிக்கு ஒப்பிடுவதும் தவறான புரிதல்கள். அந்தத் தவறான புரிதல்களிலிருந்து வரும் ஆயுதம் வடசொல்; அதனைப் புழங்கக்கூடாது என்பதும் தவறான பரிந்துரை. நேரம் இருப்பின் கூடலில் வந்த இந்த இடுகையைப் பாருங்கள்.

http://koodal1.blogspot.com/2008/02/blog-post.html

குமரன் (Kumaran) சொன்னது…

நீங்கள் எந்த குறியீடுகளை இங்கே பேசுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள இயலவில்லை. எல்லாமே எனக்கு சதுரம் சதுரமாகத் தெரிகிறது.

Unknown சொன்னது…

தமிழ் எண்களில் கோடியை தாண்டியும் எண்கள் உண்டு,

http://en.wikipedia.org/wiki/Tamil_units_of_measurement

குறைந்த பட்சம் அரசியல் வாதிகளுக்காவது பயன்படும்.
உதாரணமாக 2ஜி யில் வருமானம் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி என்பதற்கு பதில் 1.75 கற்பம் என்று சுலபமாக சொல்லலாம் அல்லவா?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் (Kumaran) said...
கண்ணன்,

ஆயுதம் வேறு; ஆய்தம் வேறு. தமிழ் எழுத்தை ஆய்த எழுத்து என்று தான் பலகாலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனை ஆயுத எழுத்து என்பதும் கேடயத்தின் மும்முனையை முப்பாற்புள்ளிக்கு ஒப்பிடுவதும் தவறான புரிதல்கள். அந்தத் தவறான புரிதல்களிலிருந்து வரும் ஆயுதம் வடசொல்; அதனைப் புழங்கக்கூடாது என்பதும் தவறான பரிந்துரை. நேரம் இருப்பின் கூடலில் வந்த இந்த இடுகையைப் பாருங்கள்.

http://koodal1.blogspot.com/2008/02/blog-post.html

1:41 AM, Septe//

குமரன் ஆய்தம் என்பதை ஆயுதம் என்ற பொருளில் விக்கியில் கட்டுரை எழுதியுள்ளனர், நான் இங்கு சரி செய்கிறேன். சுட்டியதற்கு மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் (Kumaran) said...
நீங்கள் எந்த குறியீடுகளை இங்கே பேசுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள இயலவில்லை. எல்லாமே எனக்கு சதுரம் சதுரமாகத் தெரிகிறது.

1:51 AM, September 1//

திரை நிரல் (ஸ்கீர்ன் ஷாட்) போட்டுவிடுகிறேன்
:)

குமரன் (Kumaran) சொன்னது…

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
நன்றி.//

மிக்க நன்றி , ஆய்தம் குறித்த எனது கருத்தை நீக்கிவிட்டேன்,வேலை அழுத்தம் தொடர்பில், கருத்துரைக்க சற்று காலவிரையம் ஆகிவிட்டது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்