பின்பற்றுபவர்கள்

17 ஆகஸ்ட், 2011

அன்றாடம் தூய ஆடை அணிபவரா நீங்கள் ?

நான் தோல் செருப்புக் கூடப் போடுவதில்லை, காய்கறி உணவுக்களைத் தான் எடுத்துக் கொள்கிறேன் என்னால் சுற்றுச் சூழலுக்கு எந்த ஒரு கெடுதல்களும் இல்லை என்று சொல்ல முடிந்தவர்கள் கூட தமக்கே தெரியாமல் சுற்றுச் சூழல்களில் மாசுகளை ஏற்படுத்தித்தான் வருகின்றனர். மனிதனின் அன்றாடத் தேவைகளில் உணவு தவிர்த்து உடை, தண்ணீர் சற்று மிகுதியாகவே பயன்படுத்தப்படுகிறது. உடலில் சராசரியாக காலுரை, உள்ளாடைகள் (இடுப்பணியாடை, மார்பணியாடை), மேல்சட்டை, கால்சட்டை என்று அணிந்துவருகிறோம் நான்கு வகை ஆடைகள் அணிந்துவருகிறோம். அதே போல் பெண்களும் நான்குவித ஆடைகள் அணிகிறார்கள், அவற்றின் பெயர் மற்றும் அமைப்பு மாறுபடும் அவ்வளவு தான், இவை பொதுவான ஆடை பண்பாடு, பிறவகை ஆடை விருப்பங்களை விட்டுவிடுவோம், அவை பெரும்பான்மையல்ல.

எப்போதும் 'வெள்ளையும் சொள்ளையுமாக' பளபளப்பாக இருப்பவர்களைப் பார்த்தால் நேர்த்தியான தோற்றத்துடன் தான் இருப்பர். அதில் ஒன்றும் தவறு அல்ல, அவ்வாறான ஆடை அணிபவர்களை பொதுவாக எல்லோருமே மதிக்கிறார்கள். மூன்று திங்கள் முன்பு சீனாவில் ஒரு விடுதியில் தங்கி இருந்தேன், அப்போது கழிவறையில் ஒரு பெட்டிச் செய்தி 'ஒரு நாளைக்கு சலவை துணிகளுக்கு பயன்படுத்தும் சலவை தூள்களின் அளவு மற்றும் அதில் இருக்கும் நச்சுகள் கடலில் கலக்கும் அளவுகளும் பட்டியலிடப்பட்டு, நீங்கள் சுற்றுப்புற ஆர்வலராக சுற்றுபுறத்தை பாதுக்காக்க விரும்பினால் இங்கு நீங்கள் பயன்படுத்தும் துண்டுகளை (டவல்) சலவைக்கு போடும் போன் மறுபடியும் பயன்படுத்த முடியும் அளவுக்கு இருந்தால் பயன்படுத்த முயற்சி செய்ய்யுங்கள்' என்றிருந்தது. அதாவது முகம் கழுவிவிட்டு துடைத்து பின் மூளையில் தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த துண்டுகளை அடுத்துப் பயன்படுத்தும் முன், அதே துண்டை குளித்தப் பின்பும் துவட்ட பயன்படுத்தலாம் அல்லது பயன்படுத்திய துண்டு குறைவான பயன்பாட்டுடன் இருந்திருந்தால் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதே. நானெல்லாம் வீட்டில் பயன்படுத்தும் துண்டுகளை துவைத்து பல நாட்கள் இருக்கும், முகத்தைத் துடைத்தாலே எதோ ஊறுவதாக இருக்கும் என்போர்களுக்கு அல்ல, ஆனால் அவர்கள் கூட விடுதிகளில் தங்கும் போது ஒருதடவைக்கு மேல் விடுதி துண்டுகளை மீண்டும் பயன்படுத்துவதில்லை.

சீனாவில் சுற்றுச் சூழல் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் தொழிற்சாலைகளின் புகைபோக்கிகள் மாசுகளை கக்கிவருகின்றன, ஆனாலும் அவர்கள் கூட சுற்றுச் சூழலுக்கு ஏதேனும் செய்ய முடியுமா என்று தான் செயல்பட்டுவருகிறார்கள். துணிகளை துவைக்க நீரும், சலவை தூள்/ கட்டியும் இன்றியமையாதவை, தண்ணீர் என்றுமே பற்றாக் குறைதான், சலவை இரசாயனங்களும் நச்சுகள் நிரம்பியவை இவற்றை ஒரு சேர நாம் துணிகளை சலவை செய்யப்பயன்படுத்துகிறோம் என்பதால் அவற்றின் பயன்பாட்டின் கட்டுப்பாடு குறித்து கொஞ்சமேனும் கவனம் கொள்வது நன்று.

துணிகளை துவைக்க போடும் முன் உள்ளாடைகள், காலுறைகள் தவிர்த்தவற்றை மறுபடியும் ஒருமுறை அடுத்த நாள்களில் பயன்படுத்த முடியுமா என்று பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம், நமது தூய்மையான ஆடை சுற்றுச் சூழல் மீது உமிழ்ந்தே அப்படி மாறியுள்ளது என்பதை நினைவில் கொள்வது நலம். செய்யாத செலவு அல்லது தவிர்க்கும் செலவுகள் தான் சேமிப்புகளே. உட்காரும் டாய்லெட்டில் கொஞ்சம் எச்சிலை துப்பிவிட்டு 10 லிட்டர் தண்ணீரை திறந்துவிட்டு ஓடவிடுமுன், அதே எச்சிலை பக்கத்தில் இருக்கும் வாஷ்பேசனில் துப்பிவிட்டு கொஞ்சம் தண்ணீர் திறந்துவிட்டாலே ஓடிவிடும், தண்ணீரும் குறைவாக செலவாகும் என்பது பற்றி பலர் நினைப்பது இல்லை. மேலும் தண்ணீரை திறந்துவிட்டுக் கொண்டே முகச் சவரம் செய்வதைத் தவிர்க்கலாம்.

குறைந்தது நான்கு வாளி தண்ணீரில் குளித்தால் குளித்தமாதிரி இருக்கும் என்றால் அதற்கு பயன்படும் சோப்புகளும் சேர்ந்து வீணாகும் நீர் தான் குளித்தமாதிரி இருப்பதற்கு கொடுக்கும் விலை. வரும் தலைமுறைகளுக்கு அசையா சொத்துகளை சேர்த்து வைக்கும் ஆர்வத்தில் கொஞ்சமேனும் அதே தலைமுறை சுற்றமான காற்றையும், தண்ணீரையும் சேமிக்க முடியாமல் போவது வியப்பளிக்கவே செய்கிறது. நாளைக்குத் தேவை என்பதில் பணம் பொருள் தவிர்த்து சுற்றுச் சூழலும் மிகத் தேவையான ஒன்று, என்னதான் ஆடம்பர மாளிகையில் வசித்தாலும் மூச்சுக் காற்றை விலைகொடுத்து யாரும் பயன்படுத்த முடியவே முடியாது. அப்படி பயன்படுத்துபவர்கள் பணக்கார நோயாளிகள் மட்டுமே. தண்ணீரை தூய்மையாக்கவும் ரசாயனங்கள் தான் பயன்படுகிறது, அவ்வாறு ரசாயனம் கலக்கப்பட்டு தூய்மை பெரும் நீர் உண்மையிலேயே தூய்மையான நீரா ? பணத்துக்கு கேடு என்றாலும் கிடைக்கும் பிற தண்ணீரைவிடப் பரவாயில்லை என்பது மட்டும் தான் அவற்றின் உண்மை.

கொஞ்சம் விலை உயர்ந்தது என்றாலும் நல்ல பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தினால் அவற்றை ஒருநாளைக்கு மேலும் துவைக்காமல் பயன்படுத்த முடியும், ஜீன்ஸ் ஆடைகளை பலநாட்கள் துவைக்காமல் பயன்படுத்தும் போது பருத்தி ஆடைகளை இரு நாட்கள் பயன்படுத்துவதில் என்ன நேர்ந்துவிடப் போகிறது. என்ன தான் துவைத்த ஆடையை, புதிய ஆடையப் போட்டுக் கொண்டாலும் நறுமண திரவங்களைத் தான் பலரும் தெளித்துக் கொள்கிறார்கள் அல்லவா ? வியர்வை சுரக்க வேலை செய்பவர்கள் துவைக்காமல் மீள் பயன்பாடு செய்ய முடியாது ஆனால் குளிர் அறையில் வேலை செய்பவர்கள் பயன்படுத்தலாம் அல்லவா ? நம்காலத்தில் பெரிய கெடுதல்கள் ஏற்படாது என்பது நம்பிக்கை என்றாலும் எதிர்காலத்தில் சுற்றுச் சூழலை கெடுப்பதில் நம் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு குறைத்துக் கொள்ளலாம். பரம்பரை நோய்களுக்கு நாம் காரணி இல்லை, அது நம் வழியாகவும் பரவுகிறது, ஆனால் இயந்திரங்களை, இரசாயனங்களை பயன்படுத்தும் இன்றைய நம் வாழ்க்கையில் அவற்றின் பயன்பாடுகளின் கூறுகளாக சுற்றுச் சூழல் கெடுவது நம் காலத்தில் தானே நடக்கிறது, அவற்றை நாம் நம் வருங்காலத்தினருக்கு வலிய திணித்துவருகிறோம் என்பது உண்மை தானே.

ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பேன், ஒரு நாள் போட்ட சட்டைய மறுநாள் போடமாட்டேன் என்போரே.....வரும் காலத்தில் உங்கள் பேரன்களுக்கு குளிக்கத் தண்ணீரோ, உடுத்த பருத்தியோ விளையாமல் போகலாம். மரம் நடுவது மட்டுமே சுற்றுச் சூழலை பாதுகாக்கும் என்ற நம்பிக்கயுடன் நமது அன்றாட தண்ணீர் மற்றும் சலவை சோப் பயன்பாட்டின் கட்டுபாடும் கூட சூற்றுச் சூழல் விரைவாக சிதைவதை ஒரளவு தடுக்கும் என்பதை நினைவு கொள்க. கணக்கெடுத்துப் பார்த்தால் ஒருநாள் நம் சலவைக்கு பயன்படுத்தும் சோப்பு நீர் கடலில் கலப்பதையும் திருப்பூர் ஆடைகளின் சாயக் கழிவு நீரையும் ஒப்பிட்டால் சாயக்கழிவுகள் அவற்றில் 10 விழுக்காடு கூட இருக்காது என்றே நினைக்கிறேன்.

சுத்தம் சூழலைக் கெடுக்கும் என்று புது மொழிகள் ஏற்படும் நாள் விரைவில் இல்லை. திருவள்ளுவர் இன்றிருந்தால் புறந்தூய்மை நீரால் அமையும் என்பதற்கு பதிலாக 'மிகவும் புறந்தூய்மை நீரைக் கெடுக்கும்' என்ற பொருள் பட எழுதுவார்.

இடுகையின் சுருக்கம் : எந்த ஒரு தூய ஆடையும் சுற்றுப் புறச் சூழலை மாசுபடுத்தி தான் பளபளக்கிறது, ஆடைகளில் மின்னலடிக்கும் வெண்மை எதிர்காலத்தின் கருமை. சலவைத் தூள், கட்டி, குளிப்பு கட்டிகள் (சோப்) பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் கடைபிடித்தால் சுற்றுச் சூழலை காப்பதற்கு நம்மாலான பங்குகளை ஆற்றி வருங்காலத்தினருக்கு கொஞ்சமாவது நல்ல தண்ணீர், காற்று மீதம் வைக்க முடியும், நீர்வாழ் உயிரனங்களை பாதுக்காக்க முடியும். இராசயனங்கள் குறைந்த (ECO Friendly) மற்றும் இராசயனம் அற்ற சலவை பொருள்களை பயன்படுத்தத் துவங்குவோம்

சுட்டிகள் :
http://www.nosuds.com/NSEnvironment.htm

http://www.accu.or.jp/litdbase/material/pdf2/mt/mt10.pdf

12 கருத்துகள்:

Kite சொன்னது…

அருமையான இடுகை. நான் மேலாடைகள் அனைத்தையும் இருமுறை பயன்படுத்திய பின்னரே
துவைப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். வெயில் காலத்தில் மட்டும் சட்டையை தினமும் துவைக்க வேண்டியுள்ளது. ஜீன்சாக இருந்தால் நான்கு முறை பயன்படுத்தியபின் துவைப்பேன்.
குளிப்பதற்கு ஒரு வாளி தண்ணீருக்கு மேல் உபயோகப்படுத்துவதில்லை. தலைக்குக் குளிப்பது
வாரம் ஒரு முறைதான்.

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பவர்கள் தண்ணீர் எவ்வளவு ஊதாரித்தனமாக செலவழிக்கிறார்கள்
என்பது எனக்கு வியப்பளிக்கிறது. அதுவும் குளிப்பதற்கு சிலர் மூன்று வாளி தண்ணீர் உபயோகிப்பது
மிகவும் அதிகமாகத் தெரிகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜெகநாதன் சார், பாராட்டுக்கு நன்றி,

நான் தலையில் புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தான் தண்ணீர் ஊற்றுவது வழக்கம். சட்டை 2 நாளும் பேண்ட் 3 நாளும் அடுத்த அடுத்த நாள் வராமல் பார்த்துப் போடுவேன். குளிக்க தண்ணீர் ஒன்று அல்லது இரண்டு வாளிகள் தான் பயன்படுத்துவேன்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமையான விழுப்புணர்வு பதிவு.பகிர்வுக்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

காலத்திற்கேற்ற பதிவு!
நிச்சயம் அனைவரும் கடைப்படிக்க வேண்டிய விடயங்கள்.
நீரின்றி அமையாத இவ்வுலகில், நன்நீரால் வரப்போகும் சிக்கல்கள் - பசுமை நிறுவனங்கள் மூலம்
செய்தியாக நாளும் வருவதால்
இயன்றவரை நீரைச் சிக்கனப்படுத்த என்னாலான முயற்சியை எடுப்பதுடன், வீட்டாரையும்
ஒழுகும் படி கூறி, அதைப் பின்பற்றுகிறார்களா? என்பதைக் கவனிக்கிறேன்.
தவறின் சுட்டிக் காட்டுவேன்.
இயன்றவரை நண்பர்களையும் கடைப்பிடிக்க சொல்கிறேன்.
வீட்டில் உள்ள பூச்சாடிகளுக்கு, நாளும் சமையலறையில் மரக்கறி கழுவும் கழிவு நீரைச் சேமித்து
ஊற்றுகிறோம். மழை நீரையும் சேமித்து ஊற்றுவேன்.

வந்தவாசி ஜகதீச பாகவதர் சொன்னது…

பெங்களூர் போன்ற நகரங்களில் white collar (ஏசி அலுவலக‌ங்களில்) வேலையில் உள்ளவர்கள், இரு நாட்களுக்கொரு முறை குளித்தால் போதும்; மேலாடைகள் மூன்று முறை பயன்படுத்தலாம்.

kaialavuman சொன்னது…

S.V.சேகரின் ”1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி” நாடகத்தில் ஒரு காட்சி. அரசியல் வாதி சேகர் கூறுவார், “நம்ம கட்சியிலயாவது தீக்குளிக்க தான் ஆளில்லை. எதிர் கட்சிய பாரு குளிக்கவே ஆளில்லை. கட்சி செயற்குழு கூட்டமுடியல. ஒரே கப்பு” என்பார். அது தான் நியாபகம் வருகிறது.

ஆனாலும், நீங்கள் கூறியுள்ளது ஓரளவு சரிதான். ஒரு 15-20 ஆண்டுகளுக்கு முன் யாராவது தண்ணீரை விலை போட்டு விற்பார்கள் / விலை கொடுத்து வாங்குவார்கள் என்று கூறியிர்ந்தால், அவரைப் பைத்தியம் என்று எள்ளி நகையாடியிருப்போம்.

என்ன செய்வது?

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்ல விழிப்புணர்வு பதிவுண்ணே

அடுத்த சந்ததியினருக்கு நாம் என்ன விட்டுச்செல்லப்போறோம் என்பதில் மிகத்தெளிவாக இருக்கனும்

நன்றி பகிர்தலுக்கு...

காந்தி பனங்கூர் சொன்னது…

நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு நன்றி.

saarvaakan சொன்னது…

/சுத்தம் சூழலைக் கெடுக்கும் என்று புது மொழிகள் ஏற்படும் நாள் விரைவில் இல்லை. /
வணக்கம் நண்பரே,
அருமையான் பதிவு.சோப்பு உபயோகப் படுத்தாமல் வெறும் நீரில் குளிப்பது அவ்வளவு பாதிக்காது எனலாமா?

துணிகளை வெளுக்க சூழல் பாதிக்காத ஏதேனும் தொழில் நுட்பம் வருமா?
______
குளிக்காமல் துவைக்காமல் அழுக்காகக திரிபவர்கள்தான் சூழலின் நண்பர்கள் என்றாகி விடும்.சூழலின் நண்பன் ஆக்லாம் என்றால் குடும்பத்தில் குழப்பம் வரும்.எனக்குத் தெரிந்து பெரியார் இப்படி இருந்தார் என்று கேள்வி.எதார்தத்தை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.ஹா ஹா ஹா!!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//துணிகளை வெளுக்க சூழல் பாதிக்காத ஏதேனும் தொழில் நுட்பம் வருமா?//

ஏற்கனவே விற்பனையில் நிறைய இருக்கு

aotspr சொன்னது…

நல்ல தகவல்!
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ரிஷி சொன்னது…

நல்ல பதிவு கோவி.
பின்வரும் பதிவையும் படித்தேன்.
http://www.vinavu.com/2011/04/25/ambani-uses-5-lakh-litres-or-water/

ஒரு மெலிதான புன்னகையுடன் இரண்டையுமே கடந்து செல்கிறேன்...!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்