*******
சென்ற முறை அலுவல் தொடர்பில் சீனா சென்ற போது தட்டிச் சென்ற அதிவிரைவு தொடர்வண்டி பயண ஆசை இந்த முறை (27 மே 2011) நிறைவேறியது, ஷாங்காய் புத்தொங் விமான நிலையத்திலிருந்து சுற்றுலாவாசிகளை கவருவதற்காகவே மெக்லெவ் எனப்படும் உலகின் அதிவிரைவு மின்காந்த புல்லெட் தொடர்வண்டியை இயக்கி வருகிறார்கள். நேர அட்டவணைப்படி மணிக்கு 431 கிமி விரைவு மற்றும் 301 கிமி விரைவு என இரு வேறுபட்ட விரைவுகளில் ரயில் பயணம் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றனர். அந்த அட்டவணைப்படி காலை வேலைகளிலும், மாலை வேலைகளிலும் மணிக்கு 431 கிமி விரைவிலும், நண்பகலுக்கு சற்று முன்னும் பின்னும் 301 கிமி விரைவிலும் பயணிக்க முடியும். நான் சென்ற நேரம் நன்பகல் நெருங்கி இருக்க, எனக்கு 301 கிமி விரைவில் பயணம் செய்ய மட்டும் தான் வாய்ப்புக் கிடைத்தது.
மெக்லெவ் எனப்படும் அந்த ரயில் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து ஷாங்காய் நகரின் மையப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள லோங்யாங் சாலை வரை சுமார் 40 கிமி வரை சென்று திரும்புகிறது. போக வர ரயில் கட்டணம் (80 யுவான், சிங்கை வெள்ளிக்கு 15.38, இந்திய ரூ 538), மறு பகுதியை அடைய சுமார் 8 நிமிடங்கள் தான். இருக்கை வசதிகள் மிகவும் நேர்தியாக வசதியாக இருந்தன, விஐபிகளுக்கு தனிப்பகுதி பெட்டியும் மேலும் சிறப்பான இருக்கைகளும் வைத்திருக்கிறார்கள், கொஞ்சம் கூடுதல் கட்டணம் அவ்வளவு தான். நான் பொதுப் பெட்டியிலேயே பயணித்தேன். நேரம் மற்றும் ரயிலின் வேகம் காட்டுவதற்கு பெட்டியினுள் இருபுறமும் மின்னனு காட்சி (டிஸ்ப்ளே) உள்ளது.
குறித்த நேரத்தில் புறப்படும் ரயில் 20 வினாடிக்குள் உச்ச வேகத்தை எட்டிவிடுகிறது. அந்த வேகத்தில் உள்ளே அமர்ந்திருக்கும் போது உடல் எடை குறைந்து போன்றும் பறப்பது போன்றும் உணர்வுகள் வருகின்றன, கண்ணாடி வழியாகப் பார்க்க இரயிலின் வேகம் உணரப்படும், கிட்டதட்ட ஓடுதளத்தில் விமானம் மேலெழும்ப விரைவாக ஓடும் போது (ஓடு தள விமான வேகம் மணிக்கு 200 - 250 கிமி) உள்ளுக்குள் இருக்கும் நமக்கு இருக்கும் உணர்வுகள் போன்றது தான்.
வளைவுகளில் சற்று 15 டிகிரி வரை சாய்ந்தே செல்கிறது, அதன் படியே தளமும் அமைக்கப்பட்டு இருக்கிறது, மைய விலக்கு விசைக் காரணமாக அந்த வேகத்தில் வளைவுகளில் நேராகச் செல்ல முடியாது என்பதால் அவ்வாறு அமைத்திருக்கிறார்கள்.
சுமார் 5 நிமிடங்கள் 301 கிமி விரைவில் சென்றதும், வேகம் குறைத்து அடுத்த நிலையத்தில் நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து நகரின் மையப்பகுதிக்கு வேறு வாகனங்களில் 5 நிமிடத்தில் செல்ல முடியும். நானும் அலுவலக நண்பரும் புறப்படும் விமானத்திற்கு திரும்ப வேண்டி இருந்ததால், அங்கே லோங்யாங் சாலை நிலையத்தில் இறங்கி சிறிது நேரம் சுற்றிவிட்டு அடுத்து புறப்படும் ரயிலில் திரும்பினோம், திரும்பும் போது எதிரே மற்றொரு ரயில் கடக்கும் போது லேசாக அதிர்ந்தது, எதிர் வண்டி மின்னல் வேகத்தில் கடந்து சென்று கொண்டிருந்தது. 301 கிமி விரைவிலும் பெரிதாக சத்தங்கள் இல்லை, வண்டி விரைவு தாலாட்டுவது போன்றிருந்தது, அடுத்தும் அதே நேரம் சுமார் எட்டு நிமிடங்களில் விமான நிலையத்தை அடைந்தது.
வண்டிக்குச் செல்ல பயணச் சீட்டு வாங்கியதும், உள்ளே செல்லும் முன் கைப்பைகளையும், உடைமைகளையும் எக்ஸ்ரே சோதனை செய்தே அனுப்புகிறார்கள்.
தொழில் நுட்பத்தின் படி அந்த விரைவில் தடம் புறளும் வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ரயில் பாதையாக இல்லாமல் தட்டையான பாதையாக உள்ளது. வேகம் எடுக்கும் போது மிதந்து தான் செல்லும் என்றே நினைக்கிறேன், ஏனெனில் உராய்வு சத்தங்கள் எதுவும் பயணம் செய்யும் போது கேட்கவே இல்லை.
ஷாங்காய் வழியாகவோ அல்லது ஷாங்காய் நகருக்கோ செல்பவர்கள் மோக்னெட்டிக் ரயில் பயண வாய்ப்புகளை தவறாது பயன்படுத்திக் கொண்டால் நல்லதொரு பயணத் துய்ப்புக் கிடைப்பது திண்ணம். இதற்கு முன் ஐரோப்பாவின் ஈரோ ஸ்டார் விரைவு ரயிலில் பயணித்திருக்கிறேன், ஆனால் அதன் வேகம் 200 கிமி தான். உலகின் பிற பகுதிகளிலும் மின்காந்த இரயில்கள் இருந்தாலும் ஷாங்காய் ரயிலின் வேகத்தில் அவை பயணிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் மெக்லெவ் பற்றிய ஆங்கில விக்கிக் குறிப்பு இங்கே.
இதெல்லாம் எப்போது இந்தியாவிலும் நடக்கும் என்ற ஏக்கமா ? மேலே முதற்பத்தியை திரும்ப படிக்கவும்.