பின்பற்றுபவர்கள்

7 மார்ச், 2011

திமுக - காங்கிரஸ் ஒன்று படுமா ?

அரசியல் கட்சிகளின் கூட்டணி துரோகங்கள் அரசியல் களத்திற்குப் புதியவை அல்ல. மாநிலம் தோறும் நடப்பவை தான். இப்போதெல்லாம் தேர்தல்காலக் கூட்டணிகள் தோர்தலுக்குப் பிறகு எப்படிச் செயல்படலாம் என்ற திட்ட வரையறையை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு கைகோர்கின்றன. இதன்படி தேர்தலுக்குப் பின் அணிமாறும் மருத்துவர் இராமதாஸ் போன்றே அனைத்துக் கட்சிகளும் நடந்து கொள்கின்றன. தமிழக காங்கிரசின் திட்டம் திமுகவுடன் கூட்டணி ஆட்சி என்று ஒப்பந்தம் போட்டு தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுகவை ஒடுக்குவதே. இதன் மூலம் ஸ்பெக்டரம் விவகாரத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கு திமுகவே காரணம் என்று காட்டிவிட்டு தொடர்கைதுகளை நடத்த காங்கிரசு திட்டமிட்டு இருந்தது. இதனை அறிந்து கொண்ட கருணாநிதி காங்கிரசின் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கைக்கு உடன்படாமலும், முடிந்தவரை காங்கிரசின் கூட்டணி இடங்களைக் குறைப்பதன் மூலம் அதனைத் தடுக்கமுடியும் என்று நினைத்தார். திமுகவின் மனநிலை அறிந்து கொண்ட காங்கிரசும் முடிவில் இறங்கிவர மறுத்தது. காங்கிரசை வைத்துக் கொண்டாலும், கழட்டிவிட்டாலும் பாதிப்பு என்று உணர்ந்த கருணாநிதி காங்கிரசை கழட்டிவிடுவதே சரி, அதுவும் விஜயகாந்த் அதிமுக கூட்டணிக்குச் சென்ற பிறகு செய்தால் காங்கிரசால் தனித்து நிற்பதைத் தவிர்த்து ஒன்றும் செய்துவிடமுடியாது, தனித்து நின்றால் அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள், அதிமுகவுடன் சேர்ந்து தனக்கும் கட்சிக்கும் அவர்களால் ஆபத்து ஏற்படுத்த முடியாது என்றே முடிவெடுத்து இருக்கிறார் என்றே நம்ப வேண்டி இருக்கிறது.

மற்றபடி காங்கிரஸ் இத்தைகைய துரோக அரசியலுக்கு வரைபடம் வைத்திருக்காவிடில் காங்கிரசுடன் கைகோர்த்து கூட்டணி அரசமைப்பதில் திமுகவிற்கு எதுவும் கவுரவப் பிரச்சனை இருப்பது போல் தெரியவில்லை, ஏனினெல் கடந்த 7 ஆண்டுகளாக காங்கிரசுடன் கைகோர்த்து மத்திய அமைச்சரைவையில் கனிசமான இடங்களைப் பெற்ற திமுக, சட்டசபைத் தேர்தலிலும் அத்தகைய புரிந்துணர்வில் கூட்டணி அரசாகத் தொடர்வதில் சிக்கலோ, தன்மானத்திற்கு இழுக்கு என்பதற்கோ அரசியல் மொழியில் எதுவுமே இல்லை. கருணாநிதி கூட்டணி அரசு என்பதை ஒப்புக் கொள்ளும் மனநிலையில் இருந்தாலும் தேர்தலுக்குப் பிறகும் அதைத் தொடர்வதற்கு காங்கிரஸ் விரும்பவில்லை, திமுகவை கழட்டிவிடுவதன் மூலம் மிஸ்டர் க்ளீன் என்று தனது மத்திய அரசை காட்டமுடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது, சட்டமன்றத் தேர்தல் உடனடியாக இல்லாவிடில் காங்கிரஸ் - திமுக உறவு என்றோ முடிவுக்கு வந்திருக்கும், திமுகவுடன் நிபந்தனைகளுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கழண்டு கொள்ளலாம் என்கிற காங்கிரசின் திட்டம் பொய்யாகிப் போய் இருக்கிறது. காங்கிரசை தனிமைப்படுத்தியது கருணாநிதியின் சாணக்கியத்தனம் என்று திமுகவினர் பெருமைப் பேசிக் கொண்டாலும் தலைவரின் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் இனிதான் ஆபத்தே என்று உணர்ந்துள்ளனர். எவ்வளவு அடித்தாலும் எங்களுக்கு வலிக்கவில்லையே என்கிற பாணியில் கருணாநிதியின் முடிவுக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்தாகச் செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் தரப்பிலும் இதுவே தான்.

ஸ்பெக்டரம் விவகாரத்தில் ராசா கைது திமுகவினருக்கு காங்கிரஸ் அரசால் அவமானம் என்றால், அதே ஸ்பெக்டரம் விவகாரத்தால் திமுகவினால் காங்கிரசின் ஒட்டுமொத்தப் பெயரும் கெட்டுவிட்டதாக காங்கிரசார் கருதுகின்றனர். இவ்வளவு கொதிப்புகள் தொண்டர்களிடையே இருந்தாலும் மேல் மட்டத்தில் காங்கிரஸ் தரப்பில் திமுகவின் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டே. திமுகவுடன் பேசி அதிக இடங்களைப் பெற்றுவாருங்கள், எங்களுக்கு எதிராக நீங்கள் நிற்கும் தொகுதிகளில் உங்களுக்கு வாக்களிக்கிறோம் என்று அதிமுக காங்கிரசுடன் இரகசிய ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்றே கருத வேண்டி இருக்கிறது.

காங்கிரசின் திட்டம் பலிக்காமல் போனதால் காங்கிரஸ் திமுக அரசின் மீது கடுங்கோபத்துடன் இருப்பதும், அதன் வெளிப்பாடுகள் ஓரிரு நாளில் தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதையும் மீறி காங்கிரஸ் திமுவுடன் சுமூகமாகப் பேசி 60 இடங்களைப் பெற்றுக் கொண்டாலும், பின்னர் அதிமுகவுடன் கைகோர்க்கப் போவது உறுதிதான். ஏனெனில் ஒரு மாநில அரசியலில் கிடைகும் லாபத்தைவிட ஒட்டுமொத்த இந்திய அறுவடையையே காங்கிரஸ் விரும்புகிறது, அது ஸ்பெக்டரம் விவகாரத்தில் திமுகவை கைகாட்டிவிடுவதன் மூலமே நடக்கும் என்று காங்கிரஸ் வியூகம் அமைத்திருக்கிறது.

காங்கிரஸ் தனித்து நின்றாலும் இப்போதைய அரசியல் துரோகங்களையும், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முனையும் எத்தனிப்பையும் ஒன்று சேர்ந்துப் பார்த்தால் அதிமுகவினர் காங்கிரசார் தங்களை எதிர்த்து நிற்காத தொகுதிகளில் வாக்களிப்பர். இப்படிச் செய்வதன் மூலம் அதிமுக - காங்கிரஸ் உறவுகள் புதுப்பிக்கப்படலாம், ஜெ வும் தன் மீதான வழக்குகளில் தற்காத்துக் கொண்டு இழந்த ஆட்சியைக் கைப்பற்றுவார்.

********

வரப்போகும் தேர்தலில் திமுகவிற்கே பாதிப்பு, ஒருவேளை இழுபறியில் ஆட்சி அமைத்தாலும் காங்கிரஸ் மைய அரசுத் தலைமை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்பி கவர்னர் ஆட்சியை ஏற்படுத்தினாலும் திமுகவினரால் ஒன்றும் செய்யவே முடியாது, மேற்கண்ட இவை யாவும் என் ஊகங்கள் என்றாலும் நடைபெற சாத்தியம் உள்ளவை தான் என்பதை எவரும் மறுக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். 90களில் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினருடன் முடங்கிக் கிடந்த திமுக திராவிட உணர்வு என்ற திராவிட உணர்வாளர்களின் அரவணைப்பினாலும், அதிமுவின் ஊழல் குறித்து மக்கள் எதிர்ப்பினாலும் வளர்ந்து ஆட்சியில் அமர்ந்து ஜெவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. குடும்ப ஆட்சி, ஊழல் ஆகியவற்றில் சிக்கி, காங்கிரசின் இரும்பிப் பிடியில் பிழியப்பட்டு கிடந்தாலும், ஈழத் தமிழர்களின் நலன் கருதி இருந்தால் திமுக தொடர்ந்து பிழைத்திருக்கும், ஏனென்றால் குடும்ப அரசியலோ, ஊழலோ ஒரு அரசியல் கட்சியையும், தலைமையையும் புறக்கணிக்க பெரியக் காரணம் இல்லை. இருந்தாலும் இனத் துரோகம் சகிக்க முடியாது என்பதால், வருத்தம் வருத்தம் தான் என்பதுத் தவிர்த்து திமுகவின் இன்றைய நிலையும், அதற்கான ஆதரவும் என்பது பற்றி இதற்கு மேல் கருத்துக் கூற வெறொன்றுமில்லை.

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இது தங்களைப் போன்ற தீவிர ஈழ ஆதரவாளர்களின் கருத்தாகவே தோன்றுகிறது. ஆனால் இங்கு நிலைமை நீங்கள் எழுதுவது போல இருப்பதாக என்னால் உணரமுடியவில்லை.

முருகன் சொன்னது…

GOOD ONE.

ADMIN சொன்னது…

நல்ல கேள்வி.. !

Make Money Online Forum சொன்னது…

It is wonderful topic which is related today's Tamilnadu politics

மாயாவி சொன்னது…

உங்கள் கருத்துக்கள் ஒரளவு யூகமாகவே இருந்தாலும் உண்மையாக இருக்க வாய்ப்பு அதிகம். மேலும், நீங்கள் சொன்னது போல காங்கிரஸ் தன் மீதான போலி களங்கத்தை துடைக்க இதை விட்டால் வேறு வழி இல்லை. தினை விதைத்தவன் வினை அறுப்பான். மேலும் சிலர் கூவுவது போல இன்னமும் திமுகவை எந்த பைத்தியகாரனும் ஆதரிக்கவில்லை ஆதரிக்க போவதும் இல்லை.

மாயாவி சொன்னது…

இனிமேல் இவர் தினமும் தமிழ், தமிழர் சுயமரியாதை, தமிழ்நாடு, தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் பேசுவோர் என்று புது புது வார்த்தை பிரயோகம் செய்து ஜல்லியடி செய்வார் காண தவறாதீர்கள்...

சூடான அரசியல் செய்திகளுக்கு தினமும் இருமுறை புதிய செய்திகளுடன் ஒரு வலை பூ

http://mugamuddi.blogspot.com

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு.பிரச்சனையை வேறு ஒரு கோணத்தில் அலசியிருக்கிறீர்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

//மேற்கண்ட இவை யாவும் என் ஊகங்கள் என்றாலும் நடைபெற சாத்தியம் உள்ளவை தான் என்பதை எவரும் மறுக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். //

படித்துக்கொண்டே வரும்போது மனதில் பட்டது கோவி ஊக வியாபாரம் நல்லா செய்கிறாரே என்பதுதான்:)

ராஜ நடராஜன் சொன்னது…

பாட்டு நல்லா இருக்குதா:)

http://pazhankanji.blogspot.com/2011/02/blog-post_06.html

பித்தனின் வாக்கு சொன்னது…

என்ன சொல்ல, சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதே செயலை முன்னர் தி மு க, காங்கிரஸிக்கு( நாடளு மன்றம் அமைக்க) செய்த போது இப்படி கட்டுரை எழுத யாரும் இல்லை.

அபு மர்வான் சொன்னது…

80% தமிழ் மக்கள் தமிழ் உணர்வை இழந்து தன்னலத்திற்காக மட்டுமே வாக்களிப்பதற்கு பக்குவப்படுத்தப் பட்டுவிட்டார்கள். ஈழத்தமிழர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர்கள் கூட தேர்தல் நேரத்தில் அதைப்பற்றி பேசுவதே பாவம் என்று கிடைத்த தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு ஊமையாகிவிட்டார்கள். இச்சூழ்நிலையில்,இன உணர்வு அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு அமையும் என்று எதிர்பார்ப்பது மடமை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்