பின்பற்றுபவர்கள்

1 மார்ச், 2007

சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 2

முன்பகுதி ...

நான் முன்பு ஒரு முறை ஞானவெட்டியான் ஐயாவுடன் செல்பேசி வழி ஒரு முறை 20 நிமிட நேரம் பேசி இருக்கிறேன்.
அவர் உருவப் படத்தை இணைய பதிவில் பார்த்து இருக்கிறேன். சற்று முறுக்கு மீசையுடன் இருப்பார். அதன் பிறகு சந்திக்கச் சென்ற அன்று நேரடியாகப் பார்த்தேன். பச்சை வண்ண 'டி' சட்டையில் (சர்டில்) கள்ளழகராக நின்று வரவேற்றார். மீசையில் முறுக்கு இல்லை ம.பொ.சி மீசை போல அடர்வாக இருந்தது. கன்னக் கதுப்புகள் அந்த படத்தில் இருப்பதை விட சற்று மிகையாகவே இருந்தது. அறிமுக கைகுலுக்கல் முடிந்ததும் வீட்டின் முற்பகுதியில் உள்ள வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார். மணி மாலை 3:45 ஆகி இருந்தது

பலவகையான (சகல விதமான) கணனி தொடர்புடைய கருவிகளுடன் (சாதனம்) அவருக்கென்ற தனிப்பட்ட (ப்ரத்தியோக) அறையில் இருந்தது. எல்சிடி 17" கணனி திரை பெரிய எழுத்துக்களில் படிப்பதற்கு ஏற்ப மாற்றி வைத்திருந்தார். குட்டி நூலகமும் அதில் ஆன்மிக, சித்தர் பற்றி நூல்கள் இருந்தன.

வாங்கிச் சென்ற பழங்களைக் கொடுத்துவிட்டு எதிரதிரே அமர்ந்து உரையாடினோம். தன் துணைவியாரை அழைத்து அறிமுகப் படுத்தினார். ஐயாவுக்கு ஏற்ற குணநலன்களுடன் இருப்பதை பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் சற்று உடல் நலக் குறைவாக இருப்பதால் மிகுந்த (அதிக) நேரம் உரையாட முடியாது என்று என்பதால் ஐயாவுடன் உரையாடத் துடங்கினேன்.

அவர் 5 ஆண்டுகளுக்கு (வருடங்களுக்கு) மேலாக வலையில் எழுதி வருவதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக வலைப்பதிவில் எழுதி வருவதாகவும் சொன்னார். எண்ணிக்கையில் மிகுந்த அளவில் வலைப் பக்கங்களை வைத்திருப்பவர் பட்டியலில் எனக்கு தெரிந்து இவரும் அன்பு நண்பர் குமரனும் இருக்கிறார்கள்.

பேச்சு தற்போதைய வலைப்பதிவு நடப்புகளை (விவகாரங்கள்) பற்றி சென்றது. பதிவர்களில் பலர் தற்போது கருத்தொற்றுமையின்றி காழ்புணர்வில் சிக்கிக் கொண்டுள்ளார்கள் என்று கவலை தெரிவித்தார். வலைப்பதிவு எழுதுவர்களின் அகவை (வயது) 20 முதல் 70 வரை இருப்பதால், பல வேறுபாடுகள் வெளிப்படையா கண்ணுற முடிகிறதென்றேன். இளைஞர்களின் கருத்துக்கள் சூடாகத்தான் இருக்கும் என்று என் கருத்தைத் தெரிவித்தேன்.

பின்பு என்னிடம், என்னை சந்தித்து எதாவது ஆன்மிகம் அல்லது சித்தர் தத்துவத்தில் விளக்கம் (சந்தேகம்) பெறவேண்டும் என்பது போன்ற முதலான (முக்கிய) நோக்கம் இருக்கிறதா என்று வினவினார்.

ஐயா, விளக்கம் கேட்கும் அளவிற்கெல்லாம் நான் ஆன்மிகத்தில் வளரவோ ஆராய்சி நடத்தவோ இல்லை. உங்களைப் போன்ற நடமாடும் தெய்வங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவாலில் பார்க்க வந்தேன்... அன்பும் நல்லாசியும் (ஆசிர்வாதம்) வேண்டும் என்பதைத் தவிர இந்த சந்திப்பில் எந்த நோக்கமும் இல்லை என்றேன்.

பின்பு அவருடன் தொடர்ந்து தொடர்பு கொள்பவர்களைப் பற்றி குறிப்பிட்டார் அதில் திருமதிகள் மதி கந்தசாமி, துளசி கோபால் ஆகியோறைப் பற்றியும், வளவு இராமகி ஐயாவுடன் தனக்கு உள்ள நட்பைப் பற்றி குறிப்பிட்டார். ஓசை செல்லாவுடன் இருக்கும் நட்பு பற்றியும், ஓசை செல்ல அவருக்கு இணைய தளம் அமைக்க உதவியதையும் தெரிவித்தார். 20 குழந்தைகளுக்கு கல்விக்கு உதவியதாகவும், சில பொது நல சேவை அமைப்புகளில் வழிநடத்தும் ஆலோசகராக இருப்பதாகவும் தன்னுடைய நற்செயல்களைப் பற்றி மிக எளிமையாக எடுத்துச் சொன்னார். வங்கி மேலாளராக தான் பணிபுரிந்ததை பற்றிச் சொன்னார்.
தன்னுடைய 95 அகவையுடைய அப்பா திருச்சியில் வசிப்பதாகவும், தம் தமக்கை புதுச்சேரியில் வசிப்பதாகவும் மாதம் ஒருமுறை அவர்களை சந்தித்து வருவது பற்றி நெகிழ்சியாக குறிப்பிட்டார்.

அவர் புது ப்ளாக்கரில் உள்ள டெம்ளேட் எனப்படும் கருவிப் பட்டையை அக்கு வேராக ஆணி வேராக பிரித்து வைத்துப் பயன்படுத்துகிறார். இந்த அளவுக்கு அவருடைய கணனி அறிவு என்னை வியப்படைய வைத்தது.

பேசிக் கொண்டிருக்கும் போது நேரம் சென்றதே தெரியவில்லை. படக் கருவி கொண்டு சென்றதால், புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்றேன். மஞ்சள் வண்ண சட்டை அனிந்து கொண்டார். இரண்டு படங்களை எடுத்தேன். நானும் அவரும் சேர்ந்து நிற்க ஐயாவின் துனைவியார் ஒரு படம் எடுத்து கொடுத்தார். இடையே அவருடைய துணைவியார் சுவையான ப்ரூ காப்பி கொடுத்து விருந்தோம்பல் (உபசரிப்பு) செய்யதார். அடுத்த ஊருக்குச் செல்ல திட்டம் இருந்ததால் விடை பெறுவதாக அறிவித்தேன். பிறகு தம்பதிகளிடம் விழுந்து ஆசிபெற்றேன். திருநீறு பூசி விட்டார். சிறிய அளவிலான பூசை அறை பித்தளை விளக்கொன்றை நினைவு பரிசாக கொடுத்தார். ஐயாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அங்கேயே விடை பெற்றேன். வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

அங்கிருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு ஆட்டோ எடுத்து வந்து சேரும் போது மாலை மணி 6 ஆகி இருந்தது.

அடுத்து கோவையை நோக்கிய பயணம் ....

தொடரும்....

2 கருத்துகள்:

ஞானவெட்டியான் சொன்னது…

//என் நினைவுக்கு வந்தவர் பெரியவர், அனைவரின் அன்புக்குறியவர், தற்காலச் சித்தர், பதிவர் ஞான வெட்டியான் ஐயா ஞாபகம் வந்தது.பச்சை வண்ண 'டி' சட்டையில் (சர்டில்) கள்ளழகராக நின்று வரவேற்றார். மீசையில் முறுக்கு இல்லை ம.பொ.சி மீசை போல அடர்வாக இருந்தது. கன்னக் கதுப்புகள் அந்த படத்தில் இருப்பதை விட சற்று மிகையாகவே இருந்தது.//

இல்லாததெல்லாம் எழுதியுள்ளீரே! ஐயா.
இது ஒன்றே போதும் என் சுயவிளம்பரத்திற்கு!
ஒரு சிறு நிகழ்வுகூட விடாமல் விவரித்தமைக்கு மிக்க நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//இல்லாததெல்லாம் எழுதியுள்ளீரே! ஐயா.
இது ஒன்றே போதும் என் சுயவிளம்பரத்திற்கு!
ஒரு சிறு நிகழ்வுகூட விடாமல் விவரித்தமைக்கு மிக்க நன்றி. //

ஐயா வாங்க !

பூக்கடைக்கு விளம்பராமா ? :)
மணம் ஒன்றே போதுமே ! நுகர்ந்ததை பகிர்ந்தேன்.

நான் சந்திக்க விரும்பியவர்களில் நீங்களும் ஒருவர். அது நிறைவேறியதற்கு மெத்த மகிழ்ச்சி.
தங்கள் துணைவியாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோவை செல்ல திட்டம் இருந்ததால் சந்திப்பின் நேரம் சுருங்கியது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்