பின்பற்றுபவர்கள்
31 ஆகஸ்ட், 2012
29 ஆகஸ்ட், 2012
Bet - ம், Risk - க்கும் !
தொலைகாட்சி தொகுப்பாளர்கள் பேசுவதைக் கேட்கும் பொழுது இரத்தக் கொதிப்பு தான் வருகிறது, நாகரீகம் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லை, இவர்கள் பேசுவதில் 5 விழுக்காடு தமிழ் இருக்குமா என்பது ஐயமே, இதை ஒரு ஆங்கிலத் தொலைகாட்சி நிகழ்ச்சியாக கற்பனை செய்து கொண்டு தொகுப்பாளர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவராக நினைத்து, அவர் தொகுப்பு நிகழ்ச்சியில் தவறிப் போய் ஒரே ஒரு சொல்லை தமிழில் சொல்லிவிட்டால் நாக்கைக் கடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்பாரா இல்லையா ? கூடவே கண்டனம் தெரிவித்து வாசகக் கடிதங்களும் குவிந்துவிடும், தினமலர் உள்ளிட்ட நாளிதழ்களிலும் ஆங்கிலம் பரவலாகவே இடை இடையே எழுதப்படுகிறது தவிர 'கோர்ட்' என்று தலைப்பிட்டு நீதிமன்றம் சார்ந்த செய்திகளையும் வெளி இடுகிறான், 'கோர்ட்' என்பதற்கு மாற்றாக இவர்களால் ஏன் 'நீதித்துறை' என்று தலைப்பிட்டு அதன் கீழ் செய்திகளை போட முடியவில்லை. இதை வேண்டுமென்றே செய்யும் திமிர்த் தனம் என்று வகைப்படுத்த முடியுமா முடியாதா ? அல்லது பார்பனக் கொழுப்பு என்று நான் விமர்சனம் செய்தால் சண்டைக்கு வருபவர் யார் ? அவ்வாறு சண்டைக்கு வந்தால் தினமலரின் திமிர் தனங்களுக்கு போதுமான காரணங்களைச் சொல்லிவிட்டு சண்டையிடலாமே. தொலைகாட்சி, செய்தி ஊடகம் இவற்றில் இருந்துதான் மக்களும் தமக்கான மொழியறிவை வளர்த்துக் கொள்கிறார்கள் என்ற புரிந்துணர்வில் தமிழ் என்ற பெயரில் அன்றாடப் புழக்கமாகிப் போன தமிங்கிலத்தை சகித்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது, யாருமே நேரங்களைக் குறிப்பிடுவதில் கூட 10 மணி , 12 மணி என்றெல்லாம் சொல்வது கிடையாது டென் ஓ க்ளாக், ட்வள் ஓ கிளாக் என்று தான் கூறுகிறார்கள், சுரணை அல்லது அது பற்றிய சிந்தனைகளே இல்லை என்றால் கேட்கும் நமக்கு எரிச்சல் ஏற்படாது. கண்ணுக்கு முன் மொழிச் சிதைவை பார்க்கும் பொழுது ஏற்படும் ஆற்றாமைகள் தொடர்ச்சியாகக் கிடைக்கும் தண்டனைகளை துய்ப்பது போன்ற கொடுமை. நான் செந்தமிழில் உரையாடுங்கள், பேசுங்கள் என்று சொல்லவரவில்லை, ஆனால் புழக்கத்தில் இருக்கும் சொற்களை புதைத்துவிடுகிறார்கள் என்று புலம்புகிறேன், நான் என்னதான் முடிந்த வரையில் தூய தமிழில் உரையாடலாம் என்று முயற்சி எடுத்தாலும்'பேருந்து வருகிறது' என்று சொன்னாலும் எதோ புரியாத ஒன்றை சொல்லக் கூடாத ஒன்றைச் சொல்லிவிட்டது போல் கொஞ்சம் நக்கலாகப் பார்த்து நகைப்பதால் யாரிடம் தமிழில் மட்டுமே பேசுவது என்றெல்லாம் நான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது, ஒரு சிலருக்கு நான் என்ன சொன்னேன் என்பதை திருப்பிச் சொன்னால் தான் புரியும் என்ற நிலையும் உள்ளது. தமிழன் தமிழன் என்று நாம் பெருமை பீற்றிக் கொண்டாலும் நாம் பேசுவது தமிழ்தானா ? இன்றைக்கு தமிழ் பேசும் எவரும் 50 விழுக்காடுகள் ஆங்கிலச் சொற்கள் கலவை இன்றி பேசுவதே கிடையாது. பிறகு நாம் பேசுவது எப்படி தமிழாகும் ?
*****
சிங்கப்பூர் தமிழ் மாணவர்கள் எல்லது தமிழர்கள் தொலைகாட்சி நிகழ்ச்சியின் செய்தியில் / அல்லது வேறு நிகழ்ச்சிகளின் இடையே பேசும் பொழுது பேசுவதைக் கேட்கும் பொழுது தமிழை தாய்மொழியாகக் கொண்ட இவர்கள் ஏன் தமிழைப் பேச இப்படித் திணறுகிறார்கள் ? என்று முதல் முறைப் பார்ப்பவர்கள் நினைக்கத் தோன்றும், திணறுவதற்கு முதல்காரணம் அவர்கள் மொழி தாய் மொழி தமிழ் என்றாலும் வீட்டில் பேசுவது முழுக்க முழுக்க சிங்கை ஆங்கிலம் (சிங்லிஸ்), எனவே ஒரு நிகழ்ச்சியின் இடையே தமிழில் பேச வேண்டும் என்கிற நிலை வரும் பொழுது ஆங்கிலத்தில் பேசிப் பழகிய அவர்கள் தமிழுக்கு மாற வேண்டிய சூழலும் ஏற்பட சற்று திணறலாகத்தான் இருக்கும், தவிர திணறலுக்கு அது மட்டுமே காரணம் இல்லை, பேசப் போவது தமிழ் என்பதால் அதில் அவர்களின் சிந்தனையில் கலந்த ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசிவிடக் கூடாது என்பதால் பொருத்தமான தமிழ் சொற்களை ஆங்கில சிந்தனை வழியாக சிந்தித்து பிறகு பேசுவார்கள், பொருத்தான தமிழ் சொற்கள் குறித்த அவர்கள் சிந்திக்கும் நேரம் பேசுவதின் தொடர்ச்சியில் நேரத் தொய்வை ஏற்படுத்த கேட்கும் நமக்கு அவர்கள் தமிழில் பேச திணறுகிறார்கள் என்பது போல் தோன்றும், உண்மை அதுமட்டுமல்ல, தமிழில் பேசும் போது தமிழில் மட்டும் தான் பேச வேண்டும் என்கிற நிலைபாடு தான் காரணம், நம்மைப் போன்று ஆங்கிலச் சொற்களைக் கலந்து பண்ணித் தமிழில் பேசலாம் என்று அவர்கள் நினைத்திருந்தால் அவர்களாலும் திணறல் இன்றிப் பேசிவிட முடியும். எந்த ஒரு மொழியையும் பேசும் பொழுது அந்த மொழியில் விளக்க பொருத்தமான சொற்கள் இல்லாத நிலையில் சொற்களை கடன் வாங்கிப் பயன்படுத்துவது தவறே இல்லை.
'பார்க் பண்ணிட்டிங்களா ?', லஞ்சுக்கு கெளம்புறிங்களா ? டிக்கெட் எடுத்துட்டிங்களா ? இதை கொஞ்சம் கட் பண்ணித் தாங்க. ஒரு வாக் போய்ட்டு வந்துடுறேன், அவரு போன் பண்ணி சொன்னார், நாளைக்கு மார்னிங்க் உங்களுக்கு மிஸ்டு கால் கொடுக்கிறேன், அந்த மூவி செம ஃபோர்... உஙக வைப் ஒர்க் பண்ணுறாங்களா ? உங்க டாட்டர் என்ன ஸ்டாண்டார்ட் படிக்கிறா ? - இது போல் தான் பேசுகிறோம், இதை தமிழில் பேசுவதாகவும் கூறிக் கொள்கிறோம்.
*****
முந்தைய நாள் பேருந்தினுள் பக்கத்து இறுக்கையில் முதலாம் வகுப்பு படிக்கும் தமிழ் குழந்தை அவளுடைய அம்மாவிடம் "அம்மா பெட் (Bet) - டுக்கு தமிழில் என்னம்மா ?" என்று கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தாள், நான் பெட் - டுக்கு என்ன தமிழ் சொல் என்று சிந்திக்கத் துவங்கியதும் அந்த குழந்தையின் அம்மா என்ன சொல்லி கொடுத்திருப்பார் என்று கவனிக்கவும் இல்லை, ஆனால் குழந்தையின் அம்மா சரியான சொல்லை எடுத்துச் சொல்லவில்லை என்று தான் தெரிந்தது, நானும் சிந்தித்து சிந்துத்துப் பார்த்து 'நாம பெட் கட்றது, பெட் வச்சிக்குவோம் வரியா ? ன்னு தானே போட்டிப் போடுவோம் ? வேற என்ன சொல் தமிழில் இருக்கும் ? என்றெல்லாம் மிகுந்த நேரம் சிந்தித்து 'பந்தயம்' தான் சரியானச் சொல் என்று முடிவு செய்தேன், அவர்களிடம் சொல்லவும் தயக்கம், நாம பேசிவருவதை இவர் ஏன் காது கொடுத்துக் கேட்டார் என்று நினைப்பார்களோ என்று பேசாமல் இருந்துவிட்டேன், சிறுவயதில் 'வாடா பந்தயம் வச்சிக்கலாமா ?' வெகு இயல்பாக புழங்கிய ஒருச் சொல் கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்டு பெட் அதில் படுக்கைப் போட்டுக் கொண்டதை நினைத்துப் பார்க்க ஊடகங்கள் செய்துவரும் தமிழ் துரோகமே காரணம் என்று நினைக்கத் தோன்றியது. செய்தி ஊடகங்களும், அரசியல்வாதிகளும், திரைப்படத் துறையினரும் தமிழை வைத்து தான் பிழைப்பு நடத்துகிறார்கள், அவர்கள் வயிற்றுப் பிழைப்பான தமிழை அவர்களே அழிக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடுமையான நடைமுறையாக இருக்கிறது. சில அறிவிலிகள் மொழிகள் என்பவை தொடர்புக்கானவை என்ற புல்லரிக்கும் விளக்கங்களையெல்லாம் கொடுக்கும் பொழுது உணவு என்பது சாப்பிட மட்டும் தான் அதில் வேறு சிந்தனைகள் தேவை இல்லை என்று கண்டதையும் ஏன் நீ உண்பது இல்லை ? வெந்ததையும் வேகாததையும் கூட திண்ணலாமே என்றெல்லாம் கேட்கத் தோன்றும்,
*****
முன்பு ஒரு நாள் நண்பர் ஒருவர் தமிழ் குறித்த சற்று சூடான உரையாடலில் நீங்க தமிழ் தமிழ் என்று பேசுகிறீர்கள், நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு 'ரிஸ்க் எடுக்காதீங்க ? ' என்பதற்கு தமிழில் எப்படிச் சொல்லுவிங்க என்று மடக்கினார், நான் 'முயற்சி செய்யாதிங்க ?' என்று சொன்னேன், அப்ப 'ட்ரை பண்ணாதிங்க' என்பதற்கு என்னச் சொல்லுவிங்க என்று மறு கேள்வி கேட்டார். அந்த நேரத்தில் மாற்றுச் சொல் தேடி சிந்தனைகள் அலைந்தது தவிர்த்து உருப்படியாக ஒன்றும் அவருக்கு மாற்றாகச் சொல்லத் தோன்றவில்லை, அவரும் நக்கலாக சிரித்துக் கொண்டார், பிறகு யோசித்துப் பார்க்க, ரிஸ்க் என்பது செய்யலாமா வேண்டாமா என்கிற கேள்வியை கொண்ட ஒரு சொல், இதற்கு சரியான தமிழ் சொல் சொல்ல வேண்டுமென்றால் ரிஸ்க் எடுக்காதிங்க என்பதற்கு மாறாக 'துணியாதீர்கள்' என்று தான் சொல்ல வேண்டும், துணிவு என்பது வெறும் துணிச்சல் சார்நத சொல் மட்டுமே இல்லை, அதில் செய்யலாமா வேண்டாமா என்கிற எண்ணமும் சேர்ந்த சொல்லாகவும் பயன்பாடுடையது. நம்மாளுங்க இன்னும் பயன் என்ற எளியச் சொல் இருக்க 'உபயோகம்' என்றெல்லாம் எழுதுகிறார்கள் தெரியுமா ?
செந்தமிழில் பேச வேண்டும் என்பது தேவை இல்லை, ஆனால் பேசுவது ஆங்கிலம் உள்ளிட்ட வேற்றுமொழிகள் கலந்த கொடுந்தமிழாக இல்லாமல் தூய தமிழாக இருந்தால் போதும், வலைப்பதிவில் எழுதும் பொழுது முடிந்த வரை தமிழில் எழுதுகிறோம், அதையே நாம் பேச்சிலும் செயல்படுத்தினால் நம்மைப் பார்த்து தமிழில் கலப்பின்றி பேசுவது தாழ்வானது இல்லை என்று நம்பத் துவங்குவார்கள். சிங்கையில் முகவை இராம் என்கிற நண்பர் ஒருவர் யாரு என்ன நினைப்பாங்க என்றெல்லாம் கவலை படமாட்டார், நல்ல தெளிவான தமிழில் பேசுவார். அவரைப் பார்த்து நகைத்தவர்கள் இல்லை, பாராட்டியவர்களே மிகுதி.
28 ஆகஸ்ட், 2012
யார் மூத்தப் பதிவர்கள் ?
தமிழ் பதிவர்களின் மாபெரும் ஒன்று கூடலை நேரடி ஒளிபரப்பை நேரம் கிடைக்கும் பொழுது பார்க்க முடிந்தது, இந்த ஏற்பாடு சிறப்பு, இணைய வேகத்தில் குறைபாடு இருந்ததால் விட்டு விட்டு தெரிந்தது, இருந்தாலும் என்ன நடக்கிறது என்பதை பார்க்கும் ஒரு வாய்ப்பு என்ற அளவில் இதை நான் குறையாகவும் கருதவில்லை. தமிழகத்தில் இந்த அளவு ஏற்பாடு செய்ய முடிவதே பெரிய அளவு. நான் பார்க்கத் துவங்கிய பொழுது பதிவர் அறிமுக நிகழ்ச்சி நடந்தேறியது. இந்த நிகழ்ச்சி கிட்டதட்ட இரண்டு மணி நேரம் நடந்ததாக பின்னர் தெரிந்தது. சிங்கப்பூரில் சிறிய அளவிலான சந்திப்புகளில் பதிவர் அறிமுகங்களை தவிர்ப்போம், காரணம் தேவையற்ற நேர விரயம் என்பதுடன், திட்டமிட்ட மற்ற நிகழ்ச்சிகளை நடத்த போதிய நேரம் கிடைக்காது என்பதால் பதிவர் அறிமுகங்களை தவிர்ப்போம், அதற்கு மற்ற காரணம், வலைப்பதிவில் எழுதுகிறார்கள், ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்ற அளவில் திரும்பவும் அறிமுகப் படுத்திக் கொள்வது தேவையற்றது என்பதாலும், மிகவும் புதியவர் / வாசகர் என்றால் மட்டுமே சிறு அளவிலான தகவல்களை கேட்டுப் பெருவதுடன் சரி. சிலருக்கு பேசவே கூச்சமாக இருக்கும் அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொல்ல நெளிவார்கள். பெரிய கூட்டங்களில் சிலர் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாமே என்று நினைத்திருப்பார்கள். அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பாத நிலையில் அவர்களை மேடை ஏற்றி அறிமுகம் செய்யது கொள்ளச் சொல்வதும் அவர்களை வர்புறுத்துவதாகும். சிலர் அறிமுகம் என்ற அளவில் இல்லாமல் பேசிக் கொண்டே இருப்பார்கள், அதை கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் நெளிவார்கள். இதற்கு மாற்றாக பெயர் அட்டைகளில் (பேட்ஜ்) அவர்களது பெயர், தேவை என்றால் ஊர் மற்றும் வலைப்பதிவு பெயரை, வருகையை உறுதிப்படுத்தியவர்கள் என்ற அடிப்படையில் முன்கூட்டியே அச்சடித்து வைத்திருந்து வருகையின் பொழுது அணிந்து கொள்ளச் சொல்லலாம். அதைப் படிப்பவர்கள் இன்னார் இன்னார் என்று தெரிந்து கொள்வார்கள். விருப்பம் இருந்தால் நிகழ்ச்சி இடைவெளிகளில் தான் உரையாட விரும்புவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து தொடர்ப்பு கொள்வார்கள்.
*****
மூத்தப் பதிவர் யார் என்ற (சுரேகாவின்) விளக்கம் சிறப்பாக இருந்தது, வலைப்பதிவில் ஓரளவு தொடர்ந்து செயல்படும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூத்தப் பதிவர்கள் என்ற விளக்கம் எனக்கும் பிடித்திருந்திருந்தது, ஏற்கிறேன், என்னைக் கவர்ந்த மற்றொன்று தமிழ் பதிவர்களிடையே பெரியவர்களை மதிக்கும் பண்பு, இவை யாருமே சொல்லிக் கொடுக்காமல் வளர்ந்திருக்கிறது, இதற்கு அடிப்படைக்காரணம் நமது பண்பாடு என்றே நினைக்கிறேன், பெரியவர்களிடம் கருத்து மோதல் செய்வதுடன் அவர்களுக்கு கொடுக்கும் மதிப்புகளை இணைத்துப் பார்க்கலாகது என்ற புரிந்துணர்வு பங்குபெற்ற அனைவருக்குமே இருந்தது பாராட்டத்தக்கது, வலைப்பதிவில் எழுதுகிறார்கள், வயதில் மூத்தவர்கள் என்ற அளவில் அனைவரும் மதிக்கின்றனர் என்ற உணர்வே மூத்தவர்களுக்கு கிடைக்கும் சிறந்த வெகுமதியாகும், என்னுடைய தனிப்பட்ட நன்மதிப்பு பெற்றவர்கள் என்ற அளவில் மூத்த வலைப்பதிவர்கள் சிலரை நேரடியாக சந்திக்கும் பொழுது அவர்களின் காலில் கூட விழுந்து எழுந்திருக்கிறேன், அதற்காக அவர்கள் எழுதுவதையெல்லாம் சரி என்றெல்லாம் நான் ஒப்புக் கொண்டதோ, மறுக்கத் தயங்கியதோ இல்லை, தீமையான கருத்துகளைப் பரப்புவர்கள் என்பவர்கள் தவிர்த்து மூத்தவர்களை மதிக்க வேறெந்த அளவுகோலும் தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
வலைப்பதிவில் நீண்டகாலமாக எழுதிவரும் திரு டோண்டு இராகவன் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளாதது சற்று ஏமாற்றம் தான், சந்திப்பில் அனைவரையும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர், திரு டோண்டு இராகவன் கலந்து கொள்ளவதை ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்திருந்தால் அவருக்கும் சிறப்பு செய்திருபார்கள் என்றே நினைக்கிறேன், அது தவிர்த்து டிபி ஆர் ஜோசப், தருமி மற்றும் டிவிஆர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், டிவிஆர் / தருமி கலந்து கொள்ளாததன் தனிப்பட்ட காரணங்களை பதிவில் எழுதி இருந்தனர். விழாவில் கலந்து கொள்ளபவர்கள் என்ற அடிப்படையில் இல்லாமல் முன்கூட்டியே ஏற்பாட்டாளர்கள் மூத்தப்பதிவர்களை அடையாளம் கண்டு, தொடர்பு கொண்டு அவர்களின் விருப்பம் கேட்டிருந்தால் விடுபட்டவர்கள் ஒருவேளை கலந்து கொள்ள நேரிட்டிருக்கும். விழாவில் கலந்து கொள்பவர்கள் தவிர்த்து வெளிநாட்டில் வசிக்கும் மூத்தப்பதிவர்களையும் பாராட்டி அவர்களுகான சான்றிதழ்களை அனுப்பியும் வைக்கலாம், நேரடியாக அனைவரும் பங்குபெற முடியும் என்பது வாய்ப்பற்றது. உதாரணத்திற்கு திருமதி துளசி கோபால், இவரைத் தெரியாத பதிவர் வலைப்பதிவராக இருக்க முடியாது, வலைப்பதிவு முன்னோடி என்பது தவிர மூத்த வலைப்பதிவர் என்கிற தகுதியும் பெற்றவர், இவரைப் போன்றவர்களை நினைவு கூர்ந்து பாராட்டாமல் மாபெரும் சந்திப்புகளில் வெற்றி என்ற சொல்லாடலை இணைத்துக் கொண்டால் மட்டும் போதாது. இதை நான் குறை என்ற அளவுகோளில் குறிப்பிட வில்லை, நிகழ்ச்சி பற்றிய எனது எண்ணம், அதை வெளியே சொன்னால் தான் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மற்றவர்கள் நிகழ்ச்சி பற்றி என்னக் கூறுகிறார்கள் என்பது தெரியவரும் என்பதால் குறிப்பிடுகிறேன், எனவே குறை / எதிர்கருத்து என்ற அளவில் இதைப் பொருத்திப்பார்க்காதீர்கள்.
*****
தமிழ் வலைப்பதிவர்களுக்கு பொது அமைப்பு தேவையா ? சாத்தியமா ? - இதையெல்லாம் கடந்த ஆண்டே பலர் எதிர்த்தும் ஆதரித்தும் எழுதிவந்தார்கள், பொது அமைப்பு என்றால் யார் தலைமை ஏற்பது ? கருணாநிதி உலகத் தமிழர்களின் தலைவர் என்று திமுகவினரால் சொல்லப்பட்டால் கருணாநிதி உலகத் தமிழர்களின் தலைவர் ஆகிவிடுவாரா ? அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா ? என்பது போன்றது தான் வலைப்பதிவர்களுக்கான பொது அமைப்பும் தலைமையும். எந்த ஒரு அமைப்பும் வெற்றிகரமாக செயல்பட தலைமை மிகவும் தேவை, வழிகாட்டல் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அமைப்பாக செயல்படவும், தலைமை தாங்குபவர்களை தேர்ந்தெடுக்கவும் விளக்கங்கள் காரணங்கள் தேவைப்படுகிறது. சிலர் சென்னைப் பதிவர் சந்திப்பு என்றார்கள், சிலர் தமிழ் நாட்டு பதிவர்கள் சந்திப்பு என்றார்கள், வெளிநாடுகளில் இருந்து சிலர் கலந்து கொண்டதால் உலக தமிழ் பதிவர்கள் சந்திப்பு என்றார்கள். வலைப்பதிவர்களுக்கான பொது அமைப்பு ஏன் ? என்பதற்கான காரணங்களை நாம் தெளிவாக வரையறுக்காதவரை அதுபற்றியும் அதன் தலைமை பற்றியும் பேசுவது வீண். மற்றபடி
நகரம் சார்ந்து ஒருசிலரின் உந்துதலில் வலைப்பதிவாளர்கள் ஒன்றுகூடி நிகழ்ச்சி நடத்துவதில் ஏதும் சங்கடங்கள் இல்லை, சென்னை நிகழ்ச்சியைக் கூட நான் அப்படித்தான் பார்க்கிறேன், இது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள் மதுரை, கோவை, திருச்சி, பெங்களூர் டெல்லி மற்றும் வலைப்பதிவர்கள் எண்ணிக்கை அளவில் மிகுந்திருக்கும் இடங்களில் நடத்துவது அவசியம் தான். நாங்கள் சிங்கையில் மணற்கேணி நிகழ்ச்சி நடந்தினோம், முதலாண்டு வெற்றியாளர்களுக்கு மறைந்த வலைப்பதிவர்களை நினைவு கூறும் வகையில் அவர்கள் பெயரிலேயே விருதுகள் வழங்கினோம், இதில் அமைப்பு என்பது சிங்கைப்பதிவர்கள், அதிலும் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் கலந்து பேசி பொறுப்புகளைப் பிரித்துக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினோம். தொடர்ந்து செயல்படாமல் இருப்பதற்கு வேறு சிலகாரணங்கள் இருந்தாலும் யாருக்கும் அதில் தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகள் எதுவும் இல்லை.
இதுபோன்ற பொது நிகழ்ச்சியில் கணக்கு வழக்குகள் மிகவும் முக்கியம் யாரும் மட்டமான கமெண்ட் அடித்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் ஏன் நடத்தினோம் ? என்று வருந்துவார்கள். ஸ்பான்ஸர் சிப் அல்லது விருப்பத்தின் பெயரில் விரும்பியதைக் கொடுக்கலாம், திட்டச் செலவு இவ்வளவு என்று சொல்லிவிட்டால் விரும்பியவர்கள் பொருளுதவி செய்வார்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி நடந்த பிறகு பல்வேறு தரப்பினரால் சர்ச்சைக்கு உள்ளாவர்கள். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அதன் பிறகான சர்சைகளும் அங்கமே, அத்துடன் சேர்த்து தான் நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வருகின்றது, எனவே சர்சைகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது, மிகவும் மோசமான சர்சை என்றால் மட்டுமே விளக்கங்கள் கொடுக்கலாம்.
நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் பார்க்கும் பொழுது நானும் கலந்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது, அதற்கான முன்னேற்பாடுகளை நான் எதுவும் செய்யவும் இல்லை, ஆனாலும் இதுபோன்ற மாபெரும் சந்திப்புகளில் கலந்து கொள்வதால், என்னைப் பிடிக்காதவர்களையும் நான் சந்திக்க வேண்டிய சங்கடமாக அமைந்துவிடும், அதனால் முடிந்த அளவு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வது ஐயமே. கருத்து தெரிவித்தல் என்ற அடிப்படையை மறந்து தனிமனித தாக்குதல் செய்தவர்களை நேர்முகம் கண்டு கட்டித் தழுவுவது பெரும்தன்மை, சமூக நல்லிணக்கம் என்றெல்லாம் நான் நினைப்பது இல்லை.
24 ஆகஸ்ட், 2012
மருதாணி - வதந்தீ !
சன் தொலைகாட்சியின் மெகாத் தொடர் தலைப்பு தான், சென்ற வாரம் இஸ்லாமிய பெருநாளின் பின்னிரவிலும், மறுநாள் செய்தியாகவும் பரபரக்கப்பட்ட பெயர் மருதாணி. மருதாணி வைத்துக் கொள்பவர்களை அச்சுறுத்தி கிளப்பிவிடப்பட்ட வதந்ததி, வதந்திகள் நோக்கத்துடனும், நோக்கமின்மையாலும் கிளப்பிவிடப்படுவது வாடிக்கை தான். கண்ணதாசன் தாம் இறந்துவிட்டதாக அவரே ஒருமுறை வதந்தி கிளப்பி இருந்தார், தனக்காக வருந்துபவர் யார் என்று தெரிந்து கொள்ள அவ்வாறு செய்தாராம். கருணாநிதி, ரஜினி உள்ளிட்டோரைப் பற்றி கூட வதந்திகள் வந்து இருக்கின்றன, எம்ஜிஆருக்கும் பலமுறை வதந்தி கிளப்பி இருந்தனர், முன்பெல்லாம் வதந்தி பரவும் வேகத்தை ஒப்பிட அடங்க இரண்டு மூன்று நாள் பிடிக்கும், செல்பேசிகள் புழக்கத்திற்கு வந்த பிறகு பரவும் வேகமும் கூடுதலாகவும், அதே போன்று அடங்குவதும் கிட்டதட்ட அதே வேகத்தில் அடங்கிவிடுகிறது.
எந்த ஒரு சமயம் சார்ந்த பெரும் பண்டிகையில் பெண்கள் மருதாணி இட்டுக் கொள்வது இந்திய சமூகத்துப் பெண்களின் வழக்கமாக இருக்கிறது, நகைகள் போட்டுக் கொள்ளாத பெந்தகொஸ்தே அமைப்பு தவிர்த்து கிறித்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் அவரவர் பண்டிகையின் போது மருதாணி இட்டுக் கொள்வது வழக்கம். இந்தியாவில் இருந்த வரை தீபாவளி நாள்களின் அக்கா- தங்கை வைத்துவிடும் மருதாணி என் கைகளிலும் நகங்களிலும் கூட இருந்தது, தாள்களில் நட்சத்திர வடிவங்களை வெட்டி அதன் மீது மருதாணி வைத்து உள்ளங்கையில் அழகான மருதாணி சிவப்பு வடிவங்களை அமைத்துக் கொள்வோம், அதன் பிறகு கையை கழுவும் வரை சொறிய முடியாது, காலையில் எழுந்து பார்த்தால் சட்டை படுக்கை பாய் ஆகியவற்றில் மருதாணி அங்காங்கே அப்பி இருக்கும், கையைக் கழுவி யாருடைய கை நன்றாக சிவந்திருக்கிறது என்று பார்த்து பார்த்து ரசிப்போம். வீட்டில் மருதாணி செடி இருப்பது மகிழ்ச்சியுடன், கவுரவத்தையும் கூட கொடுப்பதாக நினைத்திருந்தேன், கடைசியாக திருமணத்தின் முந்தைய இரவில் கொஞ்சம் வைத்துவிட்டார்கள், இப்பவும் ஆண் மருதாணி வைத்துக் கொள்வது தவறு இல்லை என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் கேலி செய்யப்படுவோம் என்பதால் வைத்துக் கொள்வதில்லை.
சிங்கையில் ஆண் முகப்பவுடர் அடித்திருந்தாலும் 'மேக்கப் ?' என்று கேலி செய்வார்கள், ஆண்கள் யாரும் முகத்தில் பவுடர் அடிப்பது கிடையாது, பவுடரை உடலில் தடவிக் கொள்வார்கள். சென்னையிலோ தமிழகத்திலோ இரு நண்பர்கள் கைகோர்த்து நடப்பது போல் இங்கு நடந்தால் 'அவ(னா)ர்களா இவ(ன்)ர்கள் ?' என்பது போல் பார்பார்கள். பொது நீச்சல் குளங்கலின் ஆண் பெண்ணுக்கு தனித்தனியாக உடைமாற்று அறைகள் உண்டு, உடைமாற்று அறைகளில் எந்த வெட்கமுமின்றி ஆடையின்றி குளிபார்கள், அங்கேயே உடைமாற்றுவார்கள், உடைமாற்று அறையில் முன்பெல்லாம் ஷவர்கள் வரிசையாக இருக்கும் இடையே தடுப்பு இருக்காது, தற்பொழுது அறைகள் அமைத்து ஷவர் வைத்திருக்கிறார்கள். குளித்த பிறகு தடுப்பில் இருந்து வெளியே வந்து (அறையினுள்) உடைமாற்றுவார்கள், ஆணுக்கு முன் ஆணின் நிர்வாணம் இங்குள்ளவர்களின் வெட்க வரையறைனுள் வராது, பொதுவாகவே சீனர், ஜப்பானிய கலாச்சாரம் பரவிய இடங்களில் பொது இடம் தவிர்த்த தனிப்பட்ட இடங்களான பொதுக் குளியல் அறைகளில் அம்மணம் ஒரு பிரச்சனையே இல்லை. அப்பனும் - மகனும் கூட குளியல் அறையில் ஒருவருக்கும் முன் ஒருவர் நிர்வாணமாகத்தான் நிற்பார்கள், முதன்முதலில் அவர்களைப் பார்க்க கொஞ்சம் அதிர்சியாக இருந்தது அவ்வளவு தான். இவர்களின் அகராதிபடி ஆண்மை பெண்மை இவையெல்லாம் வெறும் பாலியல் உறுப்புகள் சார்ந்தது கிடையாது, சீனா, ஜப்பான், தைவான் மற்றும் கொரியாவில் வெப்ப நீருற்றுகளில் (Hot Spring) ஆண் பெண்ணுக்கு அமைக்கப்பட்ட தனித்தனிப் பகுதியில் நிர்வாணக் குளியல் மிகவும் இயலபாக நடைபெறும் ஒன்று. Hot Spring Tour என்ற வகையில் வெளிநாட்டினர் விரும்பிச் செல்லும் இடங்கள் அந்தநாடுகளில் ஏராளம் உண்டு. ஆண் இயல்புகள் பெண் இயல்புகள் என்ற அடைப்படையில் ஆண் பவுடர் அடிப்பதையும், ஒத்தப் பாலினர் கைகோர்த்துச் செல்வதையும் இவர்கள் இயலாக எடுத்துக் கொள்வது கிடையாது.
இஸ்லாமியப் பெண்கள் கைகள், முகம் தவிர்த்து உடலை முழுவதும் மறைத்துக் கொண்டிருந்தாலும், ரம்சான் பண்டிகையின் போது மருதாணி வைத்துக் கொள்வதை தடுக்கும் நோக்கத்தில் ஏன் வதந்தி கிளம்பி இருக்க வேண்டும் ? யார் கிளப்பி இருப்ப்பார்கள் ? பெண்களின் வெளியே தெரியும் கையில் வைத்துள்ள மருதாணி கவர்ச்சியைத் தூண்டும் என்றும் என்ற அடிப்படைவாத நம்பிக்கைத் தவிர்த்து இதைத் தடுக்கும் நோக்கம் வேறெதும் இருப்பதாகத் தெரியவில்லை, பின்னிரவில் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்ன ஆகுமோ பதைப்புடன் உயிர் பயத்துடன் மருத்துவமனைகளுக்கு ஓடியதை வதந்தி கிளப்பியவர்களே கூட ரசித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். இது வதந்தீ என்றே நிருபணம் செய்யப்பட்ட நிலையிலும் அடுத்தாண்டு மருதாணி வைக்கும் பழக்கம் பாதியாக குறைந்துவிட வாய்ப்புள்ளது, வதந்தி கிளப்ப எவ்வளவோ நிகழ்வுகள் இருந்தும், மருதாணி வைத்துக் கொள்வது பிரச்சனை (தான்) என்ற அளவில் மசூதி மைக்குகளில் அறிவிக்கும் அளவுக்கெல்லாம் சென்றிருக்கிறது. கீழே உள்ளது ஒரு மாதத்திற்கு முன்பு வந்த செய்தி. மருதாணி வதந்தியுடன் ஒப்பிட்டுப் பார்க்க, யார் கிளப்பி இருப்பார்கள் ? ஏன் கிளப்பி இருப்பார்கள் ? கீழே உள்ள இணைப்புகள் பல்வேறு ஊகங்களைக் கிளப்பிவிடுகிறது.
இணைப்புகள் :
ஒரு சிலரால் அவர்களின் சமூகத்தை வலிந்தே 1400 ஆண்டு பின்தங்க வைப்பதை நினைத்து வருத்தப்படாமல் / பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை, இவற்றிற்கெல்லாம் அவர்களைச் சார்ந்த சில பெண்களே ஆதரவு அளிப்பதும் கூட அவர்களுக்கு கிடைக்கும் ஆசிகளாகத்தான் அமைகிறது.
அரேபிய நாடுகளில் மருதாணி வைத்துக் கொள்ளுவது பாரம்பர்யமானது தான் , அதை ஏன் தமிழகத்தில் தடுக்கும் நோக்குடன் செயல்பட வேண்டும் என்றும் தெரியவில்லை. ஒருவேளை சவுதி போலிஸின் செயல்பாடுகள் தான் மதரீதியாக அனுமதிக்கப்பட்டது என்று கருதுகிறார்களோ. மருதாணி வதந்தி பற்றி எந்த ஒரு மதவாதப் பதிவரும் வருத்தப்பட்டோ / கண்டித்தோ பதிவு எழுதியது போல் தெரியவில்லை. இந்த வதந்தியின் வாய்ப்பு என்ற அடைப்படையில் இது முழுக்க முழுக்க எனது ஊகம். என் ஊகம் தவறு என்று சொன்னால் தமிழகத்தில் வசிப்பவர்கள் அடிப்படைவாதிகள் இல்லை என்று மகிழ்வேன்.
23 ஆகஸ்ட், 2012
கு_கா_ன் பே_சு வி_ஞ்_ப் போ_சு !
பிரச்சனை முடிஞ்சதா இல்லையான்னு தெரியவில்லை, பதிவர் ஆரூர் மூனா செந்தில் மற்றும் நாய் நக்ஸ் - நக்கீரன் ஆகிய இருவர் தனிப்பட்ட முறையில் பேசியதை திரை ஒற்று (ஸ்கீரீன் ஷாட்) எடுத்து போட்டு, பதிவர் சந்திப்பு என்றாலே குடிகாரர்கள் கூடிக் களிக்கும் இடம் என்பது போன்ற தோற்றம் விளைவிக்க ஒரு முயற்சி மதவாதப் பதிவர்களால் நடந்தது, இவங்க இரண்டு குழுவிற்கும் என்ன பிரச்சனை என்று ஊகித்தால், தமிழ்மணம் மகுட போட்டிகளில் அண்மைக்காலமாக முனா செந்திலின் இடுகைகளும் இடம் பிடிப்பது கூடக் காரணமாக இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து, தமிழ்மணம் மகுடம் சூடும் பதிவுகளின் 'தரம்' உருவாக்கப்படுபவை / தெரிந்தவை தான் என்பதால் நமக்கு அதில் ஏதும் நட்ட/நாட்டமில்லை, ஆனால் அதை 'தரமாக' நினைப்பதுடன் அதில் தங்கள் 'தரமான' பதிவுகளை போட்டிப் போட்டு வாக்குக் குத்தி இணைப்பவர்களுக்கும் மூனா செந்தில் மீது எரிச்சல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்பது எனது அனுமானம் என்றாலும் அதில் உண்மைகள் இருக்காது என்று சொல்ல ஏதேனும் வாய்ப்புள்ளதா என்பதை வாசிப்பவர்களின் பார்வைக்குவிட்டுவிடுகிறேன், நான் தனிப்பட்டு யாரையும் குறைச் சொல்லவில்லை, குழுவாகச் செயல்படுபவர்கள் குறித்து தான் சொல்கிறேன், விமர்சனங்கள் என்பது தவிர்த்து தனிமனித தாக்குதலில் எனக்கு விருப்பம் கிடையாது, தவிர 'முகம் தெரியாதவர்களை' பழகி இருக்காதவர்களுடன் விவாதம் செய்வதையும் கூட நான் தவிர்த்தே வருகிறேன், மூனா செந்திலோ, நக்கீரனோ கூட எனக்கு நேரடியாகவோ, மின் அஞ்சல் மூலமாகவோ தொடர்ப்பு அற்றவர்கள், இக்பால் செல்வன், சார்வாகன், ராஜ நடராஜன் ஆகியோருடன் கூட எனக்கு நேரடித் தொடர்புகள் எதுவும் கிடையாது, குழுவாக செயல்படும் போது அதில் இணைந்திருப்பவர்களின் தனிப்பட்ட செயல்பாட்டுக்கும் சேர்த்தே முட்டுக் கொடுக்கும் மூட்டுவலி பற்றி அறிந்தவன் என்பதால் எந்த ஒரு குழுவிலும் சேர்ந்து செயல்படுவதில் விருப்பமற்றவன். இருந்தாலும் பதிவர் சார்ந்த ஒருங்கிணைப்பு சந்திப்புகளில் கலந்து கொள்வதுண்டு. வார இதழில் வாசிப்பாளர் போல் வாசித்துவிட்டு கருத்துகளை பின்னூட்டமாகச் சொல்வதுடன் சரி. இந்தக் கருமாந்திரத்தை நான் ஏன் எழுதனும் ? யாருக்காவது முட்டுக் கொடுத்து துட்டுப் பார்க்கப் போகிறேனா ? என்று கூட ஒரு சிலர் நினைக்கக் கூடும் என்பதால் விளக்கம் பின்னர் அளிக்கிறேன்.
******
ஒரு பழமொழி சொல்லுவாங்க 'குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு' கொலை வெறியோடு வசைபாடியதையோ, மதுவாடையுடன் சொட்டும் எச்சிலுடன் மேலே விழுந்து அன்பு செலுத்த முயற்சித்தையோ போதை தெளிந்து விடிந்தவுடன் மறந்துவிட்டு, யாரேனும் அதுபற்றிச் சொன்னால் 'ராத்ரி போதை அதிகமாச்சு மாப்ளே' என்று வழிந்துவிட்டு மறந்துவிடுவார்கள், குடிகாரர்களில் 95 விழுக்காட்டினர் கட்டிப் புரண்டு சண்டை இடுபவர்களோ, சாக்கடையில் விழுந்து கிடப்பவர்களோ கிடையாது, இருந்தாலும் மது உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அது 'தீய பழக்கம்' என்று வகைப்படுத்தப்பட்டு தவிரக்கச் சொல்லி வலியுறுத்தப்படுகிறது. பருவ வயதைக் கடந்தவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்ற வகையில் அரசுகளே மதுபான கடைகளை திறந்து விற்பனை செய்கின்றன என்பதால் மது ஒட்டு மொத்த சமூகத்தீன் சீர்கேடு என்று சொல்ல ஒன்றும் இல்லை, உடல் நலன் என்ற அளவில் தனிப்பட்ட மனிதனுக்கு மது குறித்த விழிப்புணர்வை ஊட்டுகிறார்கள், ஆனாலும் மதுவும் மருந்தாகும் என்ற அடிப்படையில் போதைக் குறைவான ஒயின் வகைகளை இதய நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்புக்காக மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள். எனவே மதுவின் நன்மை தீமை என்பவை எல்லாம் அவற்றின் அளவான மற்றும் தேவையான பயன்பாடுகளைப் பொருத்து மாறும். ஒட்டு மொத்தமாக மது சமூகத்தின் சாபக் கேடு என்று சொல்ல முடியாது.
மனித சமூகத்தின் சாபக் கேடுகள் மதங்கள் தான், மதுவைக் காட்டிலும் போதைத் தரக் கூடியவை மதங்களே, நானும் அவனும் உற்ற நண்பர்களாக இருந்தாலும் எதோ ஒரு அசம்பாவிதத்தினால் மத ரீதியில் பிளவு பட்டு நிற்கும் பொழுது என் கையில் இருக்கும் அறிவாள் அவனைப் பதம் பார்க்காது என்பதற்கு மதம் உத்திரவாதம் கொடுக்காது, ஆனால் மனித நேயமும், நட்பும் உத்திரவாதம் அளிக்கும், அவை மதங்களினால் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருவதில்லை.
எந்த ஒரு மதம் சார்ந்த தீவிர வாதச் செயலிலும் குடிகாரர்களின் பங்கு என்று எதாவது இருக்கிறதா ? குடிகாரன் என்பதால் மட்டுமே குண்டு வைத்தான் என்று ஏதேனும் செய்திகள் வந்ததுண்டா ? துளி கூட ஆல்ஹால் இல்லாமல் போதை ஏற்றும் மதத்திற்கு இருக்கும் பண்பு நலன்களில் மிகக் குறைந்த விழுக்காடே ஆல்ஹால் சேர்ந்த மதுவில் இருக்கிறது. குழுவை ஏற்படுத்தவும், குழுவிற்கு போதை ஏற்றவும் சக்தி படைத்தவை மதங்கள், அதை ஒப்பிட டாஸ்மாக் கடைகளோ, குடிகாரர்களோ அற்பம் தான்.
மதப்பற்றாளர்கள், மதவெறியர்கள் போதை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால் அதன் முரண்பாடுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை மதம் - மது - எது போதை ? என்பதை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம். நான் பல இடுகைகளில் எழுதிவருவது 'மதவெறி/சாதிவெறி - மதப்பற்று/சாதிப்பற்று' இவைகளுக்கான அடைப்படை வேறுபாடு சம்பவம் நடந்த பிறகு, சம்பவம் நடப்பதற்கு முன்பு' என்பது தவிர்த்து வேறுபாடுகள் இல்லை, அதாவது சாதி / மதம் சார்ந்து குழுவாக ஊர்வலம் செல்லும் போது கூட்டத்தில் ஏதேனும் சலசலப்பு அல்லது கூட்டத்தை நோக்கி சிறு கல்வீச்சு நடந்தாலும் கூட அதே குழு சாதி வெறி / மதவெறி குழுவாக மாறி தாண்டவம் ஆடிவிடும் இதை மறுப்பவர்கள் மதவெறிக்கும் மதப்பற்றிற்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளது என்று எனக்கு பாடம் நடத்தலாம்.
******
சென்ற மாதம் ஐயா புலவர் இராமனுசம் அவர்களை அவரது சிங்கை சுற்றுலா பயணத்தின் போது சந்தித்தேன், சென்னைப் பதிவர்களின் மாபெரும் சந்திப்புக்கு திட்டமிட்டு பொறுப்பேற்று செயல்படுவதாக குறிப்பிட்டு இருந்தார், அவருக்கு தனிப்பட்டு லாப நட்டமில்லாமல் (நேர விரயம் கொஞ்சம் பண விரயம் என்கிற நட்டம் இருந்தாலும்) இப்படி ஒரு முயற்சியை அவரது 80 வயதை கடந்த நிலையில் எடுத்திருப்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது, கிட்டதட்ட நூறு பேருக்கும் மேற்பட்ட பதிவர்களை தனிப்பட்டு தொடர்பு கொண்டு சந்திப்பின் பொழுது அவரவரின் செயல்பாடுகள் குறித்த திட்டமெல்லாம் தீட்டி ஒருங்கிணைப்பதன் கடினம் எனக்கு புரிந்தது, 'ராமா - கிருஷ்ணா, என்பதுடன் பேரக் குழந்தைகளுடன் பொழுதை கழிக்க வேண்டிய வயதில் தமிழ் சார்ந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் செயல்படுவதை என்னால் மிகச் சாதரண நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அண்ணா காலத்தில் அவருடன் தொடர்பு கொண்டவர்களில் மிகச் சிலரே எஞ்சி இருக்கும் நிலையில் அது போன்ற ஒருவரின் தமிழ் நலம் குறித்த செயல்பாடுகளை வரவேற்காவிட்டால் நட்டம் நமக்குத்தான் என்பதால் ஐயாவின் முயற்சியை பாராட்டி பதிவர் சந்திப்பு விழா வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக் கூறினேன், எல்லாம் கூடிவரும் சமயத்தில் பதிவர் சந்திப்பு என்றாலே குடிகாரர்களின் சம்மேளனம் என்று கிளப்பிவிடுவது கண்டிக்கத் தக்கதுடன் அத்தகைய தூண்டல்களை துண்டித்து வெற்றிகரமாக பதிவர் சந்திப்பு செயல்பாடுகள் நடந்தேற வேண்டும், மூனா செந்திலோ, நக்கீரனோ ஒரு பெரியவர் எடுக்கும் முயற்சியில் 'தண்ணீ' அடித்துவிட்டு கலந்து கொள்வார்கள் என்பது போன்ற வதந்திகளை நான் நம்பவில்லை. மற்றபடி அந்த நிகழ்வு தவிர்த்த வேளைகளில் அவர்கள் குடிப்பதோ விழுந்து கிடப்பதோ யாருக்கும் நட்டம் ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன்.
பொதுவாகவே நண்பர்களின் திருமணத்திற்கு அழைப்பின் பேரில் செல்லும் நண்பர்கள் குடியுடன் அதிகாலை 3 மணி வரை சீட்டாடிக் கொண்டு இருந்தாலும் காலையில் எதுவும் நடைபெறாது போல் திருமணத்தில் கலந்து கொள்வார்கள், மட்டையானவர்கள் மண்டபம் பக்கம் தலையை காட்டமாட்டார்கள், அதைத் தாண்டி அசம்பாவிதங்கள் பெரிதாக எதுவும் நடைபெறாது, எனவே குடிப்பழக்கம் உள்ளவர்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது தவறு என்று சொல்வதைக் கூட நான் மறுக்கிறேன், அப்படியே சொன்னாலும் சொல்லுபவர்களின் தகுதிகள் அறிந்து அதன் பிறகே அதை பரிசீலனை செய்யலாமா புறந்தள்ளலாமா என்பதெல்லாம் முடிவு செய்யப்பட வேண்டும்.
மதுவின் தீமையை எடுத்தும் சொல்ல விரும்பும் எவரும் மதவாதத்தின் தீமைபற்றியும் விழிப்புணர்வு கொடுத்தால் அவர்களின் "நல்ல எண்ணம்" குறித்து அவர்களே கூட மகிழ்ந்து கொள்ளலாம். நாலு பேரு மட்டும் தான் இஸ்லாமியப் பதிவர்கள் இல்லை என்பதால் இதை 'இஸ்லாமியப் பதிவர்களின் எதிர்ப்பு' என்றும் வகைப்படுத்துவதை நான் புறக்கணிக்கிறேன், மத போதையுடன் 'தமிழ்மணம் மகுட' போதையும் சேர்ந்தால் அதன் விளைவுகள் எத்தகையது என்பதை ஒப்பிட்ட குடிகாரர்களின் போதை பெரிய விசயமே இல்லை,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்

.jpg)
