பின்பற்றுபவர்கள்

4 ஜூலை, 2006

மவுன மொழி (கவிதை)!

சவ ஊர்வலம் போல் தேன்கூடு போட்டிக்காக மரணம் பற்றிய ஆக்கங்கள் அமைதியாக சென்று கொண்டிருக்கின்றன. சோகமாக எட்டிப் பார்த்த மற்றொரு துளிப்பா... இது போட்டிக்கு அல்ல.

மவுன மொழி !
தோற்றம் மறைவு தேதிகளை காட்டிய
கல்லறையின் மவுனம் சொன்னது
ஒரு மறைவே எனது தோற்றம் !

'அந்த' சந்தேகம் (சிறுகதை) !

தன்மகள் கல்யாணியுடன் தோழிபோல் பழகும் அலமேலு அம்மாள் அன்று ஆடிப்போனார். மாத மாதம் உபயோகிக்கும் அந்த பொருள் இரண்டு மாதமாக அப்படியே இருந்தது, இரண்டு மாதமாக உபயோகிக்கவில்லை என்று தெரிந்ததும் உடல் நடுங்கியது. தன் மகள் இதைப்பற்றி ஏன் கேட்கவோ சொல்லவோ இல்லாமல் என்னிடம் மறைத்தாள்... இந்த மனுசனுக்கு தெரிந்து போய் என்ன ? எப்படி ? என்று கேட்டால் எப்படி சொல்வது ? ... இது வெளியிலும் சுற்றி யுள்ளவர்களுக்கும் தெரிந்தால் பெருத்த அவமானமாகி விடுமோ? தன் மகளின் தோழிகள், இதை பெரிய விசயமாக்கி, தன் மகளை கின்டல் செய்தால் அவளால் பொருத்துக் கொள்ள முடியுமா ?. சொந்தகாரங்களை பற்றி கேட்கவே வேண்டாம், வெறும் வாயையே மெல்லும் அவர்களால், இந்த விசயம் கேள்வி பட்டுவிட்டால் பெருத்த அவமானமாகிவிடுமோ?



வயசுப் பொண்ணு வீட்ல இருக்கான்னு நினைப்பே இல்லையா ? மகளைப் பற்றி பொறுப்பில்லாமல் இருவரும் இருந்துவிட்டீர்கள் என்று எல்லோரும் அவமானப் படுத்துவார்கள். வெளியில தலை காட்ட முடியாது, மகளும் பயந்து கொண்டே 'அம்மா எதுக்கும் டாக்டரை பார்த்துவிட்டு வருவோம்' என்று சொன்னாள். வேறு வழியில்லை நிலைமை மோசமாவதற்கு முன் மகளைக் கூட்டிக் கொண்டு போய் ... காதும் காதும் வைத்தது மாதிரி முடிச்சிட வேண்டியது தான்' என்ற முடிவோடு அலமேலு அம்மாள் தன்னுடைய வயது வந்த மகள் கல்யாணியுடன் அந்த கிளினிக் வாசலில் நின்று, சுற்றும் முற்றும் பார்த்தபடி உள்ளே சென்றார்.

வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு இருக்கிறோமே கவனமாக இருக்க வேண்டும், கால காலத்தில அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்கனுமேன்னு தோனாமல் தன்னோட வேலையில் மட்டும் கவனம் செலுத்தியதால், இன்னைக்கு அவளோட இங்க வந்து நிக்க வேண்டியதாகி விட்டது, எனக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கா? எல்லாம் விதி என்று தன் புருஷனை நினைத்து, தன்னை நொந்து கொண்டு, இது மகளின் எதிர்காலத்தை எந்த விதத்தில் பாதிக்கும் என்று குழம்பியபடி ... கிளினிக்கின் வரவேற்பு அறைக்கு வந்துவிட்டார் ... மகளை கொஞ்சம் தள்ளி நிற்கவைத்துவிட்டு ... விசயத்தை சொல்லி முன்பதிவு பெற்று, டாக்டரின் அழைப்புக்காக அறைக்கு முன்பு தன் மகளுடன் காத்திருந்தார்.

அலமேலு அம்மாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது, அவர் மகள் குழம்பிய படி, அம்மாவை வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் இருவரும் உள்ளே அழைக்கப் பட்டார்கள். ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எல்லாம் எடுத்தாகி விட்டது. 'அம்மா, உங்க மகளை கூட்டிக்கிட்டு, நீங்க போயி வெளியில் வெய்ட் பன்ணுங்க' என்று நர்ஸ் சொல்ல, ரிசல்டுக்காக வெளியில் அலமேலு அம்மாவும், அவர் மகள் கல்யாணியும் உட்கார்ந்திருந்தார்கள்.

அலமேலு அம்மாவுக்கு தன் மகளை முகம்பார்க்க கூட கூசியது, வெறுமையாகவும், பட படப்பாகவும் இருந்தது. ரிசல்ட் எப்படி இருக்குமோ, ஒரு வேளை பாதகமாகி டாக்டர் கை விரித்துவிட்டால் என்று நினைத்தபடி வரும் அழுகையை அடக்கி கொண்டு, நிமிடங்கள் கரைய, நெருப்பில் அமர்ந்த மாதிரி ஒட்கார்ந்திருந்தார்.

அந்த நிமிடம் நெருங்கியதும், நர்ஸ் வெளியில் வந்து, கல்யாணியிடம் ... 'இங்க வாம்மா, உன்னிடம் சில விசயங்களை டாக்டர் கேட்கனும்னு விரும்புகிறார், தெளிவா எல்லாத்தையும் மறைக்காமல் சொல்லு' என்று சொல்ல. அலமேலு அம்மா முகத்தில் ஈயாடவில்லை, தன் மகளை உள்ளே போகச் சொன்னார்.

டாக்டர் கல்யாணியைப் பார்த்து,

"உங்க கூட வந்திருக்காங்களே, அவுங்க யாரு?",

"என் பெயர் கல்யாணி ... அவுங்க என் அம்மா அலமேலு ... டாக்டர்" என்றாள் கல்யாணி.

"கடைசியா மாதவிலக்கு எப்போ நின்னுதுன்னு உங்களுக்கு தெரியுமா?"

"அம்மாதான் சரியாக ஞாபகம் வைத்திருப்பார்கள், இருந்தாலும் இரண்டு மாசத்திற்கு மேல் இருக்கும்னு நினைக்கிறேன்"

"கல்யாணி கவனமாக கேட்டுக்குங்கள், நீங்கள் சொல்வதை வைத்தும், இந்த ப்ளட், யூரின் டெஸ்ட் எல்லாம் பார்த்த பிறகு, ஒரு முடிவுக்கு வருகிறேன், உங்க அம்மாவுக்கு மெனோபாஸ் ஆரம்பிச்சிடுச்சி, இனிமே கொஞ்ச நாளைக்கு கோபப்படுவாங்க, சம்பந்தமில்லாமல் எரிந்து விழுவாங்க, நீங்கதான் உங்க அம்மாவிடம் அனுசரணையாகவும், ஆதரவாகவும் நடந்து கொள்ள வேண்டும், இதுல பயப்பட ஒன்றுமில்லை, இது இந்த சமயத்தில சிலருக்கு வரும் நார்மலான உணர்வுகள் தான்" என்று சொல்லி முடித்தார்.

"நானும், அதைதான் நினைச்சேன், டாக்டர் ... கன்பார்ம் பண்ணாமல் நேரிடையாக சொல்ல முடியவில்லை"

"இரண்டு மாசமாவே அம்மா குழப்பமாகவும், சோர்வாகவும் இருந்தாங்க, நான் தான் வற்புறுத்தி, எதுக்கும் ஒரு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து பார்த்திடலாம்னு சொன்னேன், அம்மா பலத்த யேசனைக்கு பிறகு ஒத்துக்கிட்டாங்க... டாக்டர்"

"கல்யாணி, உங்க அம்மாவை நல்லா புரிஞ்சி வைச்சிருக்கிங்க, வெரிகுட்"

"தாங்கியூ டாக்டர், நான் பொண்ணா இருக்கிறதால, இது எனக்கு நல்லா புரியுது"

"கல்யாணி, நீங்க போய் வெளியில் இருக்கும் உங்கள் அம்மாவை அனுப்பி வையுங்கள்"

என்று சொல்ல கல்யாணி விடைபெற்றுக்கொண்டு வெளியே சென்றார்.

வெளியில் வந்த மகளின் சிரித்த முகத்தை பார்த்ததும் அலமேலு அம்மாவிற்கு 'இவள் கேலியாக சிரிக்கிறாளோ ?' என்று நினைத்தாலும் சற்று தெம்பு வந்தது. கதைவை திறந்து கொண்டு டாக்டரை பார்க்க உள்ளே சென்றார்.

"அலமேலு அம்மா, பயப்படாதீர்கள், உங்களுக்கு ஒன்னுமில்லை, இது நார்மல் தான், நாற்பது வயது தாண்டி, என்றாவது ஒருநாள் மாதவிலக்கு நிற்கும், அது தான் உங்களுக்கு நடந்திருக்கு" என்று சொல்ல, அலமேலு அம்மாள் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

அலமேலு அம்மா வயிற்றைத் தடவிக் கொண்டு ... சங்கடமாக

"நன்றி, டாக்டர், நான் தான் ஏதேதோ, நெனெச்சிகிட்டு ரொம்ப பயந்து போயிட்டேன்"

"ம் ... எதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்றார் டாக்டர்

"அதெல்லாம் ஒன்னுமில்லை டாக்டர்" என்று அவசரமாக மறுத்துவிட்டாலும் அலமேலு அம்மாள் முகத்தில் வெட்கம் தெரிந்தது

டாக்டருக்கு நன்றி சொல்லி விடைபெற்றுக்கு கொண்டு வெளியில் வர, மகள் கல்யாணி தன் அம்மாவை பரிவுடன் பார்த்தாள்.

என்று இந்த கதையை கூறிய வேதாளம், இந்த கதையை படிப்பவர்கள் 'ஏன் அலமேலு அம்மாள் தன் வயிற்றை தடவிப்பார்த்துக் கொண்டார் ? ஏன் கணவரை பொறுப்பற்றவர் என்று மனதுக்குள் திட்டினார் ?' என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தும் கூறாதிருந்தால் அவர்களின் பதிவுகள் மாயமாக மறையும் என்று சொல்லிவிட்டு சற்றும் தாமதிக்காமல் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது

பி.கு : பின்னூட்டத்தில் கலாய்க்க மட்டும் தான் தெரியுமா ? தமிழ் பதிவர் உலக சான்றோர் வியக்கும் வண்ணம் ஒரு கதை எழுத உன்னால் முடியுமா என்று பலரும் நகைப்பது எப்படியோ எனக்கு தெரிந்துவிட்டது... விடுவேனா ? குப்புசாமி செல்லமுத்துவின் 'அந்த' கதையை படித்தவுடன் ஏற்கனவே எழுதி தூங்கிய 'இந்த' கதை நினைவில் வந்தது.... அப்படியே எடுத்து ஒட்டிவிட்டேன். பாராட்டுபவர்கள் தட்டலாம் ... மற்றவர்கள் குட்டலாம். எழுத்துப் பிழைகள் இருக்கும் அடியேன் இன்னும் பாலர் பள்ளிதான்.

முன்னாள் காதலை எண்ணி...

கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் காதலிக்கிறார்களா ? காதலிப்பவர்கள் எல்லோரும் கவிதை எழுதுகிறார்களா?... என்னைப் போல் கவிதைகளை காதலிப்பவர்கள் உண்டு. கழுதைக்கு கூட காதல் பிடிக்கும் அது காகிதத்தில் எழுதப்பட்டிருந்தால். எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லை. யாரோ ஒருவர் சந்தர்ப வசத்தில் பிரியும் போது ... சில வேளைகளில் இப்படியும் நடந்துவிடுகிறது.


முன்னாள் காதலை எண்ணி...



என் காதலனாக
என்னை நீ காதலித்த போது,
எனக்கு அனுப்பிய கடிதங்கள் அனைத்தும்
ஏற்றுக்கொண்டு படித்தவுடன், பெண் என்ற
எச்சரிக்கை உணர்வுடன்,
எவருக்கும் தெரியாமல்,
எல்லா கடிதங்களையும், பெண்
என்பதால் எரித்துவிட்டேன் !

ஏதோ எதிர்பாரதவிதமாக, இது
எதுவும் தெரியாததால்,
என் சம்மதம் கேட்காமல்,
என் பெற்றோர் வேறொருவருடன்
எனக்கு திருமணம் செய்தார்கள்!
என் முதல்காதலை , நீ அனுப்பும்
என் பழைய கடிதங்கள் மூலம்
என் கணவர் தெரிந்துகொண்டும்,
எதற்கும் எதிர்க்காமல்,
என்னை ஏற்றுக் கொண்டு
என்னை தேற்றும்,
என் கணவன் கயவனல்ல !

என் பழைய காதலை எண்ணித் துணிந்தே,
என் எண்ணங்களை உனக்கு எழுதுகிறேன் !
என்னை காட்டிக் கொடுப்பதாக,
என் பழைய கடிதங்களை,
என் கணவருக்கு அனுப்பும் உன்னை,
என் நெஞ்சில் சுமந்த அசுத்தம்
எனத் துடைத்துவிட்டேன் !
என் முன்னாள் கடிதங்கள் எல்லாம்
என் கணவருக்கு நீ அனுப்பிமுடிந்ததும்,
என் கடைசி கடிதம் இதையும்
என் கணவருக்கு அனுப்பிவிடு !

3 ஜூலை, 2006

மரணத்துடன் ஒரு நேருக்கு நேர் ... !

இம்மாத தேன்கூடு போட்டித் தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் பயம். கதையா, கவிதையா, கட்டுரையா ? எதை எழுதுவது ? ... கூடவே நிறைய கேள்விகள். யாரிடம் கேட்பது ? தத்துவங்களா, மதநூல்களா ? என்று நினைத்த நான்... வேண்டாம் அவற்றுள் எது சரி என்பது தெரியவில்லை ... ஒரே குழப்பமாக இருக்கிறது... மதங்கள் பிறவிகளைப் பற்றி ... சொர்க்கம் ... நரகம் என்பது பற்றியெல்லாம் சொல்லுகின்றன, அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை. மதங்கள் மரணம் பற்றி நேரிடியாக சொல்லாமால் மறைமுகமாக சொல்லுகின்றன. நமக்கு தேவை பதில்கள் அது வெட்டு ஒன்று நிறைய துண்டுகள் என்பதைப் போல் இருக்க வேண்டும் என்று நினைத்து மத நூல்களை ஆராய்வதை கைவிட்டேன். இறந்த அன்பு சொந்தங்கள் நினைவில் வந்துபோனார்கள். தூக்கம் வந்தது அப்படியே தூங்கிவிட்டேன்.




ஆழமற்ற தூக்கதில் எண்ணங்கள் ... தூக்கத்தில் மீண்டும் துறத்தியது கேள்விகள் ... கேள்விகள் குடைந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் தூங்குவதாக சொல்கிறார்களே... கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு கடையில் நெய் வாங்கச் செல்வதா ? பிறகு எனக்குள்ளும் அது தூங்கிக் கொண்டே குடியிருக்கிறது என்பதை ஒருவாறு தெறிந்து கொண்டேன். அதையே எழுப்பி கேள்வி கேட்டால் என்ன ? என்ற துணிவுடன், பயத்தை கொஞ்ச நேரம் மூட்டைக் கட்டி ஓராமாக வைத்து ...அமைதியாக யோசித்து... யோசித்து மெல்ல நெருங்கிச் சென்று அதனை எழுப்பினேன்.

எழுப்புவதே பெரும் சிரமாக இருந்தது. மெதுவாக எழுந்து கண் விழிக்காமல் சோம்பல் முறித்த மரணத்துடன் உறையாடத் தொடங்கினேன்.

கோவி : மிஸ்டர் மரணம், கொஞ்சம் கண்விழித்துப் பாருங்கள் நான் யாரென்று தெரிகிறாதா ?

மரணம் : தெரிகிறது... என்னை கண்விழிக்க வற்புறுத்தாதே, நான் கண்விழித்தால் பார்பதற்கு நீ இருக்க மாட்டாய், கால நண்பனான உன்மீது எனக்கு அக்கரை உண்டு. கண் திறக்காமல் விளிப்பு நிலையில் இருந்து கேட்டுக் கொள்கிறேன். உனக்கு என்ன தெரிய வேண்டும் என்பதை ஒன்று ஒன்றாகக் கேள் என்றது மரணம்

பயம் தனிந்தது, நொகிழ்ந்து போய் கும்பிட்டேன்,

'தவறு செய்யப் பார்த்தேன், நல்ல வேளை அது கண்ணை திறக்க முயற்சிக்கவில்லை' என்று நிம்மதி பெருமூச்சி விட்டு விட்டு,

கோவி : அன்பு மரணமே, என் மீதான அக்கரைக்கு நன்றி. இதை நான் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன்.

மரணம் : சரி, விசயத்துக்கு வா !

கோவி : மிஸ்டர் மரணம், உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா ?

ஆழ்ந்த மவுனத்திற்கு பிறகு மரணம் பேசியது

மரணம் : நான் ஒரு நிகழ்வு, காலத்தின் ஊடாகவே நானும் இருக்கிறேன். உயிர்கள் என்னை தனித்தனியாக உணருகின்றன.

கோவி : புரியவில்லை ! கொஞ்சம் விளக்குங்களேன் ?

மரணம் : கருப்பையில் உயிர் துடிக்க ஆரம்பித்த அதே வேளையில், நானும் கூடவே பிறக்கின்றேன். அப்படியில்லை என்றால் அந்த உயிர்துடிப்பதற்கு முன்பே பிறக்கின்றேன். அதாவது அந்த உயிர் அப்போதே பிறந்து இறந்துவிட்டது என்று கூட சொல்லலாம்.

கோவி : இன்னும் குழப்பமாகவே இருக்கிறது !

மரணம் : அதாவது பிறக்காத ஒன்றுடன் நான் இணைவதில்லை. பிறந்த ஒன்றை நான் விடுவதும் இல்லை !

கோவி : பிறப்புடன் இணைந்து பிறப்பதாக சொல்லுகிறீர்கள். தனி உயிர்களை தற்போதைக்கு சற்று மறப்போம். ஒரு முக்கிய கேள்வி, உங்களின் கருப்பு வண்ணத்தில் மறைந்து, இறந்து போன சாம்ராஜியங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

மரணம் : நான் பார்க்காத சாம்ராஜ்ஜியங்களா ? சாம்ராஜ்ஜியங்களின் பெரிய பெரிய மகுடங்களின் தலைகளை, அதாவது மன்னர்களை மாற்றி அழகு பார்த்தியிருக்கிறேன். அதன் எழுச்சி, வீழ்ச்சிகளை நானே முடிவும் செய்தும் இருக்கிறேன். பல சாம்ராஜ்யங்கள் சிறப்புற்றதும், சீர்கெட்ட சாம்ராஜ்யங்கள் அழிவுற்றதும் என்னால் தான்.

கோவி : அது சரி... சிறியோர், பெரியோர் என்ற வயதுகளை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் ?

ஒரு குழந்தையின் கூதுகுல சிரிப்புடன் சொல்லத் தொடங்கியது மரணம்
மரணம் : குழந்தை மணம் வேண்டும், வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, அதே மன நிலையில்தான் அவர்களை அணைக்கும் பொழுது எனக்கும் ஏற்படுகிறது. கால(டைம்) தேவன் எனக்கு கொடுக்கும் ஒரு விளையாட்டு பொம்மையாகத் தான் அவர்களை நினைக்கிறேன். விளையாட்டு குணம் என்னிடம் அப்பொழுது வந்துவிடுகிறது. வயது வேறுபாடின்றி தொட்டு விளையாடுகின்றேன்.

கோவி : சந்தித்த கோர அனுபவங்கள் ?

மரணம் :என்று நான் காலத்துடன் இணைந்தோனோ அன்று முதல் இன்று வரை எத்தனையோ கோர நிகழ்வுகள், அழிவுகள் அவை என் விருப்பமில்லாமல், ஒரு தூக்கு தண்டனை நிறைவேற்றும் காவல் அலுவலர் என்ற மனநிலையில், கடைமையை செய் என்பது போல் நிகழ்ந்துவிடுகிறது. ஒன்றை நினைத்து... மற்றொன்றிக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறேன். இடைப்பட்ட காலத்தில் காலதேவனின் கால அவகாசம் தான் என்னை ஆற்றிக் கொள்ள வைக்கிறது.

கோவி : ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை நீ எவ்வாறு அணுகுகின்றாய் ?

மெல்லச் சிரித்ததுச் சொன்னது ....
மரணம் : எனக்கேது பாகுபாடு ? நான் அவர்களை பார்க்கும் போது என்பார்வையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை, இவர்கள் எல்லோருமே சமமாகவே என்னுள் அடக்கமாகிறார்கள்

மரணத்துடன் கொஞ்சம் நட்பு ஆகிவிட்டது என்று தெரிந்தது ... ஒருமைக்கு மாறி,
கோவி : உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் பார்ப்பாயா ?

கேலியாக சிரித்தது மரணம் ...
மரணம் : சாவு மணியை கையில் வைத்துக் கொண்டு அடிக்காமல் விடுவேனா ? ஏற்றத் தாழ்வு என்னிடம் இல்லை என்று உறக்க கேட்கும் படி மணியடித்திருக்கிறேன். தூங்குவது போல் நடிப்பவர்களே, கேட்காதது போலவும் நடிக்கின்றனர். எங்கே சென்று விடுவார்கள் ? நான் பார்க்காமல் விடுவேனா ? இதைப் புரிந்து கொள்பவர் மிகச் சிலரே என்பது என் ஆதங்கம். பலரும் புரிந்து கொள்ளும் போது காலம் கடந்து போயிருக்கிறது.
என்று வருத்தத்துடன் சொன்னது மரணம்.

கோவி : நீ சொல்வது சரியா தவறா என்பது தெரியவில்லை, அன்பு உறவுகளுக்குள் நுழைந்து திடீரென்று தட்டிப் பறிப்பது சரியா ?

மரணம் : முன்பே சொல்லிவிட்டேன், சரி தவறு என்ற கேள்விகளுக்கு எனக்கு பதில் யாரும் சொல்வதில்லை ... எனக்கு தெரிவதும் இல்லை. காலதேவனின் கட்டளை எதுவோ, அது கடமை என்ற அளவில் அதைச் செய்கிறேன். உறவுகள் ஒன்றுக் ஒன்று சேர்வதினாலோ, தற்காலிகமாக பிரிவதாலோ, தங்களுக்குள் தாங்களே புரிந்து கொள்வதைக் காட்டிலும் நிரந்தரமாக பிரியும் போது தான் உறவுகளின் உன்னதங்களை புரிந்து கொள்கிறார்கள். இவற்றைப் பார்க்கும் போது அது எனக்கு ஆறுதலாக அமைந்து விடுகிறது. எல்லாவித காயங்களுக்கும் தான் காலன் களிம்பு மருந்து போடுகிறானே !

கோவி : வருத்தமான விசயம் அது. மண்ணிக்கவும்... ஒரு ஆர்வக்கோளாறு கேள்வி இது, நீ வருவதை முன் கூட்டியே சொன்னால் குறைந்தா போய்விடுவாய் ?

மறுபடியும் நகைத்தது,
மரணம் : ம்... சொல்லாம் .... நான் செய்யும் வேலையை அவர்களே செய்து மற்றோரை வாழவிடாமல் செய்துவிடுவார்கள். நாளைக்கு சாகப் போகிறோம் என்று இன்றைக்கே வேண்டாதவர்களை எல்லாம் வீழ்த்த முயற்சிப்பார்கள். தனக்கு கிடைத்தது (மரண தேதி) எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தாரள நிலையை எல்லோரும் எடுத்துவிட்டால் கால தேவனிடம் யார் பதில் சொல்வது?. தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். அது எனக்கு மாற்றான வாழுதல் என்ற நிலைக்கு நான் செய்யும் துரோகம்.

கோவி : மதம் பற்றிய உன் மீதன மரண கருத்துக்கள் பற்றி என்ன நினைக்கிறாய் ?

மெல்லச் சிரித்தது மரணம் ...
மரணம் : என் மீது பயம் காரணமாகவே மனிதன் தேடிக் அலைந்து உருவாக்கிக் கொண்டது மதங்கள் ஆகும். என் வாழ்வில் எத்தனையோ மதங்களையும், என்னைப் பற்றிய தத்துவங்களையும் பார்த்திருக்கிறேன், மதங்கள், தத்துவங்கள் அவை நீர்த்துப் போகும் போது அவற்றை என் சவ குழியில் புதைத்திருக்கிறேன். பிறப்புகள் போலவே மதங்களும் என்மீதான புதிய கருத்துக்களுடன் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கின்றன.

கோவி : சபாஷ், எனக்கு வருத்தமாக இருப்பது ஒன்று. உன்னை தானாகவே தேடி வருபவர்கள் பற்றி என்ன நினைக்கிறாய் ?

மரணம் : நீ கேட்பது தற்கொலையை என்று புரிகிறது, இருந்தாலும் கொலையைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன். இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வது இல்லை. விரும்புவர்களையும், விருப்பின்றி தள்ளப் படுபவர்களையும் நினைத்து நான் கண்ணீர்விடுவதும் உண்டு. மீழத் துயரில் என்னை நோக்கி கை நீட்டுபவர்களை அணைத்துக் கொள்கிறேன். கொலைக் கரங்களுக்கு இடையில் சூழ்நிலை கைதியாகிறேன். அப்போது அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்தனை செய்வதைத் தவிர வேறொன்றும் நான் செய்வதில்லை. என்னைப் பற்றி புரிந்துணர்வு, விழிப்புணர்வு இல்லாததாலேயே இத்தகைய கொடுமைகள் நடந்து முடிந்துவிடுகின்றன. இதற்கு குற்றம் சொல்வது என்றால் கால தேவனையும் (டைம்), பொறுப்பற்றவர்களையும், அடுத்தவர் நலன் கெடுப்பவர்களையுமே குற்றம் சொல்ல வேண்டும்.

கோவி : ஏதோ சொல்கிறாய்... எனக்கு முழுவதும் உடன்பாடு இல்லை. நீ சொல்வது தேற்றிக் கொள்வதற்காக என்ற ரீதியில் எடுத்துக் கொள்கிறேன்... கடைசி கேள்வி, மரணமே உனக்கு மரணம் உண்டா ?

வெகுண்டு கோபப்படுவது போல் தோன்றியது. கண்ணை திறக்க முயற்சிப்பது போல் தெரிந்தது.

கோவி : அமைதி! அமைதி!... அடுத்தவர் மரணம் பற்றிச் சொல்லும் போது அமைதியாக இருந்த நீ ... உன்னைப் பற்றிகேட்கும் போது கோபம் வருகிறதே மரணம் என்றால் உனக்கும் பயமா ?

சிறிது நேர மவுனத்திற்கு பின் மெதுவாக,

மரணம் : உன்னுடைய கேள்வி எனக்கு எதிராக இருப்பது போல் தோன்றியதும், சற்று கலவரப்பட்டது உண்மை. நீ கேட்பது சரியான கேள்வி என்பதால் ஆழ்ந்து யோசித்து அமைதியானேன். மரணத்திற்கு மரணமா ? மரணம் இறந்துவிட்டது என்றால் அது மீண்டும் பிறந்துவிட்டது என்று தானே அர்த்தம். அப்படி பிறந்துவிட்டால் எனக்கு மரணமில்லை எனக் கொள்ளலாம்... அதாவது மரணத்திற்கு மரணமே இல்லை... மரணம் என்றுமே வாழ்கிறது. கால தேவனின் கடைசி மூச்சி இருக்கும் வரை வாழ்கிறது. போதும் மேலும் நோண்டாதே ... என்றோ ஒரு நாள் மீண்டும் சந்திப்போம். அன்று நீ என்னுடன் இருப்பாய்.
என்று அப்படியே தூங்கிவிட்டது.

ஏதோ ஏதோ உணர்வுகள். சிலிர்ப்புகள் எழுந்து அடங்கியது. மெல்ல கண்விழித்துப் பார்த்தும், எல்லாம் கனவு என்று தெளிந்தேன். மரணத்தின் மீதான என்பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது ... அதன்பிறகு தூக்கம் வரவில்லை. நடந்தவற்றை எழுதினேன்.

எல்லாவித சாவுகளுக்கும் கேள்வி எழுப்பிய நான் ஒன்றுக்கு மட்டும் வாய்த்திறக்கவில்லை. அதற்கு மரணமே மரண ஓலம் எழுப்புமோ என்ற பயம் தான் காரணம். ஆம்...! மரணமும் கலங்கி ஓலமிடும் என்றால் அது பட்டினிச் சாவுதான். இதற்கான காரணம் மரணத்திற்குத் தெரியாது ... மனிதர்களிடம் மட்டுமே இதற்கான காரணம் இருக்கிறது.


ரணம் மட்டுமே வாழ்கிறது ...

கருப்பையில் உயிரின் முதல் துடிப்பில்
பிறப்புடன் சேர்ந்தே பிறப்பெடுக்கிறது மரணம் !

சாம்ராஜிய மா மகுடங்களின் தலைகளை
மாற்றி அழகு பார்க்கிறது மரணம் !

சிறுவயதோ, முதுமையோ எதற்கும் அஞ்சாமல்
தொட்டு விளையாடும் கள்ளமற்றது மரணம் !

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை
உடைத்து சமநீதி வழங்குகிறது மரணம் !

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடின்றி
ஒரே மரணக்குழியில் புதைக்கிறது மரணம் !

உறவுகளை உணர்த்தி, உள்ளங்களை திருத்தும்
ஒப்பற்ற நிலைத்த தத்துவம் மரணம் !

இரவுபகலென்று இயற்க்கையின் இரட்டை நிலையில்
அமைதி இரவாக எண்ணப்படுவது மரணம் !

உயிர் என்பது ஊசலாட்டம் என்று
ஒயிலாடி சுட்டு உணர்த்துவது மரணம் !

மட்டில்லா துன்பங்கள் எத்தனை வந்தாலும்
எட்டி ஓடாமல் கட்டியணைப்பது மரணம் !

மரண தத்துவங்களும் மறித்துப் போனாலும்,
அன்றும், இனிஎன்றும் மறிக்காதது மரணம் !

நொடி பிசகாமல், காலம் தாழ்தாது
நாட்களை எண்ணிச்செயல் ஆற்றவது மரணம் !

காலதேவன் காலமாகிப் போகும்வரை இவ்வுலகில்
கடைசிவரை வாழ்வது மரணம் ... மரணம் மட்டுமே !



பின் குறிப்பு : இந்த பதிவில் வந்தது யாவும் என் கற்பனையே ... எந்த நம்பிக்கையும் பொய் என்று சொல்லுவதற்காக எழுதப்படவில்லை. உள் உணர்வுகளையும், சொந்தக் கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் அதையும் மதிக்கிறேன்.

வளர்ச்சிதை மாற்றம் - என்னுடைய கவிதைக்கு வாக்களித்தவர்களும், பின்னூட்டமிட்ட பதிவாளர் நண்பர்கள், நண்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

அன்புடன் கோவி.கண்ணன்

2 ஜூலை, 2006

படகில் பயணம் ...



படகுகளைப் பார்க்கும் போதெல்லாம்
என்னுள் எழும் எண்ணம்,
படகுகள் பலவிதம் !
ஒவ்வொன்றும் ஒருவிதம் !


அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள்,
அமைதி நடுக்கடலுக்குள் துணிந்து செல்லும் படகுகள்,
ஆற்றில் இலக்கு தெரிந்து சீராக செல்லும் படகுகள்,
அக்கரையும், இக்கரையும் மட்டுமே தெரிந்த பரிசல் படகுகள்,
அனைத்துக் கரைகளையும் அறிந்த பெரும் படகு என கப்பல்கள் !
ஆழமூழ்கி எழுந்து நிற்கும் நீர்மூழ்கிக் படகு கப்பல்கள் !

ஆனால் எந்த படகானாலும், அவை
உடைந்து உருக்குலைந்து போகும் போது,
ஒரு நாள் கரைக்குத் திரும்பியதும்,
வெம்தணலில் எறிந்து போகும் கட்டைகளே !

படகுகளைப் பார்க்கும் போதெல்லாம்
நெடுந்தூரப் பயணத்தின் ஊடாக

எதாவது படகின் வழி என் பயணம்
தொடர்கிறது என்றும் எண்ணிக் கொள்வேன் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்