சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், எண்ணிப் பாருங்கள், நான் உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றிருக்கிறேன், மனிதாபிமானம் / மனிதர் மீதான அன்பு என்ற கோட்டைத் தொட இந்தியர்கள் பயணிக்க வேண்டிய தொலைவு மிகுதி, ஒரு சில தனிநபர்கள் மனிதாபிமான மிக்கவர்கள், அவர்கள் நாட்டின் பின்புலத்தால் வழிகாட்டலால் அவ்வாறு இல்லை, இயல்பிலேயே அவ்வாறு உள்ளவர்களாக இருக்கக் கூடும். எதோ ஒரு தனிமனித மனிதாபிமானச் செயல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதை நாட்டிற்கு பொதுவானதாக காட்டுவதற்கு / எடுத்துக் கொள்வது இயலாத ஒன்று, இதே கூற்றைத் தான் சாதி / மத ஆர்வமிக்கவர்கள் குறித்தும் நான் கூறிவருகிறேன், அதாவது ஒரு சாதியில் / மதத்தில் ஒருவன் நல்லவனாக இருந்தால் அது அந்த சாதி / மதத்தின் அடையாளமன்று, அது அவனின் தனித்தன்மை, தெரிந்தோ தெரியாமலோ அவனோ / அவனைச் சார்ந்தவர்களோ அதை சாதி மதப் பெருமையாக அடகு வைத்து அவனை முன்னிறுத்தி சாதி / மதத்தின் பிழைகளை மறைக்க முயல்கிறார்கள்.
*****
பொதுவாகவே இந்திய மனநிலையில் / மதவாதிகளின் மனநிலையில் ஊனம் என்பது கடவுளின் தண்டனை / முற்பிறவியில் செய்தவினை என்று பார்க்கப்படுவதால் குறிப்பிட்ட உடற்குறையுற்ற நபரின் இல்லத்தினர் தவிர்த்து உறவினர் உள்ளிட்ட ஏனையோர் ஏளனமாக பார்ப்பதும், பிணக்குகளின் போதும் 'அதான் உனக்கு/உன் குடும்பத்திற்கு கடவுள் தண்டனை கொடுத்திருக்கானே, தெரிந்துமா ஆடுறே...?' ஒற்றை கேள்வியில் கூனிக்க்குறுக வைப்பர்.
உடைந்த பொருள்கள் என்றாலே அபசகுணம் என்று உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று பதைப்புடன் அதனை வீட்டில் இருந்து வெளியேற்றுவர், கடவுள் சிலை என்றாலும் உடைந்த்தால் அது குப்பைத் தொட்டிக்குத் தான், உடற்குறையுற்றோர் / திருநங்கைகள் எந்த இனக்குழுவிலும் / சமூகங்களிலும் உண்டு, ஆனால் இவர்களை பெருமைப்படுத்தும் புராணக் கதைகளோ, கடவுள் உருவங்களோ, மதரீதியான கதைகளோ சொல்லப்பட்டதே கிடையாது, இவர்களைப் பொருத்த அளவில் உடற்குறை என்றாலே அவமானம், அதனால் தான் குருடர்களை பார்க்க வைப்போம், முடவர்களை நடக்க வைப்போம் என்ற அற்புதங்கள் இங்குண்டு என்ற ரீதியிலெல்லாம் மதங்களை வளர்க்கிறார்கள், முடவர்களை பாதிரி ஆக்குவோம், முடவர்களை புரோகிதர் ஆக்குவோம், பார்வையற்றவரை இமாம் ஆக்குவோம் என்றெல்லாம் இவர்கள் என்றுமே கூற மாட்டார்கள், அவர்களைப் பொருத்த அளவில் 'ஊனம்' இறைவனின் தண்டனை, ஒருவேளை இறைநாடி இருந்தால் அவன் ஊனமில்லாது பிறந்திருக்கக் கூடும் என்றே அவர்கள் நினைக்கின்றனர்கள். மதங்கள் உடற்குறையுற்றோரையும் உங்களைப் போன்ற மனிதர்களாவே கண்ணியமாக நடத்துங்கள் என்று கூறவில்லை. ஒருவேளை கூறி இருந்ததால் அவர்கள் சமூகத்தில் தனித்து நடத்தபடமால் இருந்திருக்கக் கூடும்.
கைவிடப் பெற்றோர் தவிர்த்து உடற்குறையுற்றோர்கள் அனைவரும் யாரிடமும் உதவி கேட்பதில்லை, தங்களுக்கான வசதிகள் இல்லை, தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்று தான் கூறிவருகின்றனர், ஊனமுற்றோர் தங்களின் மீது பரிதாபம் கொள்ளச் சொல்லி கெஞ்சுவதில்லை, எங்களால் என்னவெல்லாம் முடியும் என்று புரிந்து கொண்டு எங்களுக்கான வழிவகைகள் செய்துதரவேண்டும் என்று தான் கேட்கிறார்கள், அது உரிமை அல்ல, அரசுகள் பொது நிறுவனங்கள் செய்ய மறந்ததைத் தான் கேட்கிறார்கள்.
******
நான் சென்று வந்த நாடுகளில் உடற்குறையுற்றோர் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதில்லை, அவர்கள் வெளியே சென்றுவரும் வகையில் அரசுகள் பேருந்து வசதிகளில் அவர்கள் ஏறுவதற்கும், அவர்களுக்கான இருக்கைகளை அமைத்து தருகிறது, அனைத்து பேருந்துகளிலும் சர்கரநாற்காலி ஏறக்கூடிய வசதி உண்டு, ஓட்டுநர் சாய்தளம் அமைத்து அவர்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏற்பாடு செய்து தருவார். உடற்குறையுற்றோருக்கான கைப்பிடிகளுடன் கூடிய மின்தூக்கி வசதிகள் உண்டு, பார்வையற்றவர்கள் மின்தூக்கி மற்றும் தொடருந்துகளை பயன்படுத்த அவர்கள் பாதங்கள் உணரக்கூடிய தனிப்பட்ட ஒற்றையடி பாதைகளை அமைத்திருப்பார்கள், யாருடைய உதவியுமின்றி அவற்றின் தடத்தை மிதித்துக் கொண்டே மின் தூக்கி அல்லது ரயில் கதவுகள் இருக்கும் இடத்தின் அருகே வந்துவிட முடியும், குறிப்பாக கழிவறைகளில் ஆண் / பெண் கழிவறைகள் உள்ளது போலவே உடற்குறையுற்றோருக்கு தனி கைப்பிடிகளுடன் கூடிய கழிவறைவசதிகள், அதனுள் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ள அழைப்பு பொத்தான்களும் இருக்கும்.
ஆனால் இந்திய மனநிலையில் உடற்குறையுற்ற ஒருவர் வீட்டில் தன் வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே அழைத்துச் செல்லச் சொன்னாலும், 'உன்னால தான் முடியலையே, நீ எல்லாம் எதுக்கு இப்படி ஆசைப்படுறே, எங்களையும் ஏன்படுத்துறே...'ன்னு பட்டென்று சொல்லிவிடுவார்கள், இதுக்கு காரணம் நாம காலம் காலமாக உடற்குறையுற்றோர் குறித்து கேட்டுவந்த பழமொழிகள் தான், உடல்குறையுற்றோர்கள் என்றால் மற்றவர்கள் போல் அவர்கள் ஆசைகள் வைத்திருக்கக் கூடாது, இதுதான் தலைப்பு 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா ?' கால் ஊனமுற்றோர் மரத்தில் உள்ள தேனை அருந்த ஆசைப்படலாமா ?' ஆசைப்படுவதில் என்ன தப்பு, தேன் சாப்பிடுகிற அத்தினிபேரும் தானே மரத்தில் ஏறி தேனை எடுத்து பயன்படுத்துகிறார்களா ? எவரோ விற்பனைப் பொருளாக அதனை எடுத்து தர பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், கால் இல்லாததற்கும் தேன் சாப்பிடுவதற்கும் என்ன தொடர்பு ? தேன் சாப்பிடுவது நாக்கு தானே...?
கண்ணு தெரியாத கபோதி... கவனக்குறைவாக உள்ளவரை திட்டுவதற்கு அவருக்கு இல்லாத ஒரு உடல் குறையை ஏளனாமாக பயன்படுத்துகிறோம், செவிடன் காதில் ஊதிய சங்கு > காதுகேளாதவர் என்று தெரிந்தும் சங்கு ஊதிப்பார்ப்பவன் தானே மடையன், காதுகேளாதவருக்கு சங்கின் ஒலி ஏன் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ? சொன்னதை செய்யாதவர்களை இழிக்க செவிடன் காதில் ஊதியது / ஓதியது என்று சொல்வது என்று ஊனமுற்றோர்களை ஒழிங்கினக் குறியீடுகளாகவே நாம் கேட்டுவந்திருக்கிறோம், அதனால் நம் மனநிலையில் அவர்களை நம்மில் ஒருவராக பொதுவானவர்களாக பார்க்கவே முடியவில்லை.
வாய்ப்புக் கிடைத்தால் நாங்கள் சாதிப்போம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே தாண்டலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தங்கவேலு, தங்கவேலுவின் சாதனை மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கைக் கொடுப்பதுடன், அவர்கள் யார் உதவியுமின்றி வெளி இடங்களுக்கும் சென்றுவரும் வசதி வாய்ப்புகளை பெருக்கித்தரும் என்று நம்புகிறேன்.
உடற்குறையுறோர் குறித்த தமிழ் சார்ந்த பழமொழிகளையும் ஒழித்து அவர்களை தலை நிமிர செய்வோம்.