உலகத்தில் எந்த ஒரு மக்கள் தலைவருக்கும் இல்லாத நற்பெயரும் புகழும் திரு லீ குவான் யூ விற்கு மட்டும் எப்படி ? மற்றவர்களைவிட இவர் எந்தவிதத்தில் மாறுபட்டவர் ? என்று கேள்விக்கு சிங்கப்பூரின் மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கைத் தரம், தனிமனித உரிமை விடையாக கூறிவிட முடியும். எத்தனையோ உலக தலைவர்கள் தங்கள் மக்களின் விடுதலைக்காக போராடி பெற்று தந்திருக்கிறார்கள், சேகுவாரா, லெனின், மாசேதுங், மார்டின் லூதர்கிங், அண்ணல் காந்தி மற்றும் மண்டேலா போன்றோரை எடுத்துக்காட்ட முடியும், ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத தனிச் சிறப்பு திரு லீ குவான் யூவிற்கு இருக்கிறது, அவர்களெல்லாம் போராளிகள், இவர் போராளி மட்டுமின்றி பொருளாதார மேதையும் கூட.
1963-1965 காலகட்டத்தில் மலேசியாவின் மாநிலமாக இணைந்திருந்து, பின்னர் மலேசிய அரசிடம் தங்களுக்கு கூடுதல் முதன்மைத்துவம் அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டு, அவை நிராகரிக்கப்பட்டு தனித்தே இருந்து கொள்ளுங்கள் என்று 1965 ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 ஆம் நாள் தள்ளிவிடப்பட்டது தான் சிங்கப்பூர், அன்றைய நாளின் நினைவில் தான் ஆண்டுதோறும் சிங்கப்பூர் தன்னுடைய தேசிய நாள் என்று கொண்டாடிவருகிறது. இனி என்ன செய்யப் போகிறோம் ? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்து அதற்கு விடையாக பல திட்டங்களைக் கூறி மக்களை வழிநடத்திச் சென்றதுடன் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத் தக்கவகையிலும், ஆசியாவிலேயே மிகச் சிறந்த, பொருளாதார வளர்ச்சியில் சிறந்த நாடாக உருவாக்கிக் காட்டினார் திரு லீ குவான் யூ, அவருடைய முப்பதாண்டு காலத்திற்கும் மேலான ஆட்சியில் கல்வித்தரம், அடிப்படைவசதிகள், சொந்தவீடு, வேலைவாய்பு, வெளிநாட்டு முதலீடு, உள்நாட்டு வர்தகம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் சிங்கப்பூர் குடிமக்கள் வளர்ந்தனர், இணைப்பு மொழியாக ஆங்கிலத்தை முதல் மொழியாக்கியும், அவரவர் தத்தம் தாய்மொழியை இரண்டாம் மொழியாக கற்பித்தும், அனைத்து மக்களும் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை ஒரு 20 ஆண்டுகளுக்குள்ளேயே ஏற்படுத்தித்தந்து வழிகாட்டினார், பல இன / மத நல்லிணக்க சமூகத்தை எப்படி பேணுவது என்பதற்கு சிங்கப்பூர் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு.
தமிழர் என்று நாம் பெருமைபடும் வகையில் உலக அரங்கில் நம்முடைய தமிழும் அதன் வளர்ச்சியும், தமிழர்களும் போற்றப்படும் ஒரே நாடு சிங்கப்பூர் மட்டுமே, மாநிலத்தைத் தாண்டினால் இந்தியாவில் கூட தமிழுக்கான அங்கீகாரம் சொற்பமே, அந்தவகையில் திரு லீ குவான் யூவை தலைவராக பெற்றதற்கு சிங்கப்பூர் தமிழர்கள் பெருமைப்படவும், நன்றிக்கடன்படவும் கடமைபட்டவர்கள்.
உலக அரங்கில் மக்களை ஒன்றுபடுத்திய தலைவர்கள் எல்லோரும் செய்யாமுடியமல் விட்டதை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டு விடைபெற்றுக் கொண்டுள்ளார் திரு லீ, பெண்களுக்கான சம உரிமையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்களைத் தாண்டி, நமது பண்பாடு, கடமை மற்றும் பொறுப்பு என்ற அள்வில் சிங்கப்பூரார்களை உணரவைத்து அதை நடைமுறைக்கும் கொண்டுவந்துள்ளார், வெறெந்த நாட்டைவிட சிங்கப்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழுபாதுகாப்பு உண்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம உரிமை உண்டு. 1900 க்கு பிறகு விடுதலை பெற்ற நாடுகளை ஒப்பிட சிங்கப்பூரின் பொருளாதர வளர்ச்சியும் மக்கள் வாழ்வியல் தர மேம்பாடும் திரு லீ யின் வழிகாட்டுதலில் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளனர், விடுதலை அடைந்த ஏனைய நாடுகளில் நிலைமை இவ்வாறு இல்லை, திரு லீ அவர்களின் தொலை நோக்கு பார்வையும், அவரது நீண்ட வாழ்வும் சிங்கப்பூர் மக்களுக்கு கொடையாக அமைந்ததும் சிங்கப்பூர் பல்வேறு வளர்ச்சிகளில் மேம்பட முடிந்தது. சிங்கப்பூரின் கடவு சீட்டு (பாஸ்போர்ட்) ஐரோப்பிய நாடுகளின் கடவு சீட்டுகளைப் போன்று மதிப்பு வாய்ந்தது, குடிநுழைவு அனுமதியின்றி 160+ நாடுகளுக்கு சென்றுவர முடியும்,
சிங்கப்பூரின் சட்டதிட்டங்கள் கடுமை என்றும் திரு லீ கண்டிப்பானவர் முதலாளிகளுக்கு ஆதரவானவர் என்றெல்லாம் உலக அரங்கில் திரு லீ க்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பலர் முன்வைத்தாலும் சிங்கப்பூரர்கள் அதைப் புறந்தள்ளுவார்க்கள், காரணம் மக்கள் தலைவர்கள் எந்த கொள்கையை (இசம்) பின்பற்றினாலும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதுதான் அதன் நோக்கமாக இருக்கவேண்டும் என்பதற்கு உலக அரங்கில் சிங்கப்பூர் நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பதை சிங்கப்பூர் மக்கள் உணர்ந்துள்ளனர்.
*****
திரு லீயின் மறைவு பேரிழப்பு என்றாலும் 91 அகவை கடந்த அவரது உடலுக்கான ஓய்வு என்ற அளவிலேயே அவரது மறைவு பார்க்கப்படுக்கிறது, ஆகச்சிறந்த சுற்றுலா நகரம், வானூர்தி நிலையங்கள், கப்பல் கட்டுமானங்கள், உலக வங்கிகள் (பைனாஸ் செண்டர்), மற்றும் கட்டுமானத்துறை, சிங்கப்பூருக்கு சிறந்ததொரு அடித்தளங்களை திரு லீ அமைத்துக் கொடுத்துள்ளார், ஒரு மாபெரும் தலைவரின் மறைவும் அதன் பின்னான நிகழ்வுகளும் கூட உலக அரங்கில் வியப்பாக பார்க்கும்படி அமைந்துவிட்டது.
ஆம், திரு லீயின் மறைவு குறித்து அறிவிக்கப்பட்ட நாள் சோகமான நாள் என்பதைத் தாண்டி மக்களின் இயல்பு வாழ்க்கை நலிவடையவில்லை, பொது போக்குவரத்து நிறுத்தப்படவில்லை, பள்ளிகள், கல்லூரிகள் அலுவலகங்கள், அரசு செயல்பாடுகளுக்கு விடுமுறைவிடப்படவில்லை, கடையடைப்போ, சாலைமறியலோ, முன்னறிவிப்பற்ற பொதுமக்களுக்கு இடையூறான ஊர்வலங்கள் இல்லை.
திரு லீயின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மூன்று நாட்களில் முதல் நாள் மட்டும், இதுபோன்ற நிகழ்வுகளின் முன்னனுபவம் இல்லாததால் பொதுமக்கள் தாங்களே நீள் வரிசையை அமைத்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர், முதல் நாள் வரிசையில் ஊர்ந்து செல்லும் நேரம் 10 மணிநேரமாகவும், அடுத்தடுத்த நாட்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட ஏற்பாடுகளுடன் மக்களுக்கான தண்ணீர், குளிர்பானம், ரொட்டிகள் மற்றும் வெயிலுகான குடைகள் என அனைத்து வசதிகளையும் 24 மணிநேரமும் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்திருந்ததனர், கடந்த வியாழன் மற்றும் வெள்ளி இறுதி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் 8 மணிநேர வரிசையில் சென்று அஞ்சலி செலுத்தினர், எந்தவித விரும்பத்தகாத நிகழ்வோ, உணர்ச்சிவசப்படலோ நடக்கவில்லை, ஒருவொருக்கொருவர் தேவையான உதவிகளை செய்து கொண்டு சென்று அஞ்சலி செலுத்தினர், மாற்றுத் திறனாளிகள், முதியோர், குழந்தைகளுடன் வருவோருக்கு விரைவில் அஞ்சலி செலுத்தும் தனி வரிசை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது, நானும் வலையுலக நண்பர்கள் சிலரும், அலுவலக நண்பர் ஒருவருடன் மாலை 5 மணிக்கு வரிசையில் சேர்ந்து இரவு 12 மணிக்கு அஞ்சலி செலுத்தி வீடுதிரும்பினோம், இரவு திரும்ப பொது போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. தமிழகத்தில் பல்வேறு சிற்றூர்களில் திரு லீயின் மறைவின் இரங்களுக்காக தட்டி வைக்கப்பட்டிருந்ததை சிங்கப்பூர் மக்கள் அறிந்து தமிழ்நாட்டு தமிழர்களின் நன்றி உணர்வை வெகுவாக நெகிழ்ந்து பாராட்டினர்
திரு லீயின் இறுதிப் பயண நிகழ்வான இன்று வானம் காலை முதலே அழுதது, கடந்த 10 நாட்களாக இல்லாத மழை சிங்கப்பூரில் இன்று பெய்ததும், திரு லீயின் இறுதி பயண 10 கிமி தொலைவு நெடுவிலும் மிதமான மழை இருந்து கொண்டே இருந்தது மக்களால் உணர்வுபூர்வமாகவே பார்க்கப்பட்டது, சாலைகளின் இருபுறமும் கொட்டும் மழையை பொருட்படுத்தாது பள்ளிக் குழந்தைகளுடன் நின்று கொண்டு திரு லீயின் இறுதிப் பயணத்திற்கு மரியாதை செலுத்தினர், இன்றும் கூட இறுதிப்பயண சாலைகளில் போக்குவரத்து முடங்கவில்லை ஒருபக்கம் இறுதிப்பயணம் செல்ல மறுபுறம் போக்குவரத்து சென்று கொண்டிருந்தது, ரயில்களும் ஓடின.
உலக நாடுகளின் தலைவர்களின் இறுதி மரியாதைக்காக திரு லீயின் உடல் கிட்டதட்ட 3 மணிநேரம் வைக்கப்பட்டு, அப்போது திரு லீயின் சிங்கப்பூர் வளர்ச்சி மற்றும் உலக நாடுகளுடான உறவுகள் குறித்தெல்லாம் சிங்கப்பூர் பிரதமர், ஆளுனர் மற்றும் பல்வேறு இனமேம்பாடுகளுக்கு லீ செய்த ஏற்பாடுகளைப் பற்றி அந்தந்த இன சார்ப்பில் ஒருவரும் பேசினர், அரங்கில் தமிழில் திரு லீ குறித்து கருத்தும் பகிர்ந்து கொள்ளப்பட்டது, துக்கமான ஒரு நிகழ்வு, இறுதி நிகழ்வு என்றாலும் திரு லீ குறித்து பேசியவர்களில் பிரதமர் திரு லீ சியான் லூங்க் (மறைந்த திரு லீயின் மூத்த மகன்) நகைச்சுவை தகவல்களையும் கூறி அரங்கின் இறுக்கத்தை தளர்த்தி ஒரு இயல்பான நிகழ்வாக மாற்றி இருந்ததனர். இதெல்லாம் சிங்கப்பூர் தவிர்த்து வெறெங்குமே பார்க்க முடியாத காட்சிகள். அதன் பிறகு திரு லீ யின் உடல் இல்லத்தினர் மற்றும் உறவினர்களுடன் பொது மின்மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவித்து இறுதி அஞ்சலி நிகழ்வை முடித்துக் கொண்டனர்
*****
முதல்முறை நடைபெறும் ஒரு மாபெரும் தலைவரின் இறுதி நிகழ்வு கூட சிங்கப்பூரில் அவருக்கான மரியாதையை சற்றும் குறைக்காமல் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் நடத்தப்பட்டதும் கூட திரு லீயின் வழிகாட்டுதலாகவே இருக்கக் கூடும். உலக அரங்கில் பொருளாதாரத்தில் உயர்ந்து, ஊழல் மற்றும் லஞ்சமற்ற சிங்கப்பூர் பற்றி திரு லீயின் வழிகாட்டுதல் தலைவர்களை உருவாக்கவும் தனிமனிதர்களை மேம்படுத்தவும் உதவும் என்பதை திரு லீயின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த தலைவர்கள் கண்டிப்பாக உணர்திருக்கக் கூடும்.
5 கருத்துகள்:
ஆழ்ந்த அஞ்சலிகள்
மேதகு திரு லீ குவான் யூ அவர்களின் பூவுடலுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்
ஆழ்ந்த அஞ்சலிகள்
மறைந்தும் மறையாத மாமனிதர்!
சிறந்த எண்ண வெளிப்பாடு
புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
குறிப்பாக தமிழுக்கும் தமிழர்களுக்கு முக்கித்துவம் அளித்தவர்..சிங்கப்பூர் வாழும் இந்தியர்களுக்கு உயர்திரு லீ அவர்கள் கூறிய வார்த்தை. சிங்கப்பூரை பொருத்தவரை இந்தியர்கள் என்றால் தமிழர்கள்,இந்திய மொழி என்றால் அது தமிழ் மட்டும் தான்...
கருத்துரையிடுக