இன்னிக்கு செய்தி ஒன்றை படித்தேன், 'நாணயத்தில் ஸ்ரீவைஷ்ணவதேவி உருவப்படம்: - ' முஸ்லிம் அமைப்புகள் கண்டனம். இந்தியாவில் கண்டனம் செய்வதற்கு காரணங்களே தேவை இல்லை. ஏதாவது ஒன்றை தமக்கு எதிர்ப்பாக நினைத்துக் கொண்டாலே போராட்டம், சாலை மறியல், மனு கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்துவிடலாம்.
காலம் காலமாக பணத்தை லெட்சுமி, தெய்வம் என்ற பொருளில் தான் இந்தியர்கள் நம்பிவந்தார்கள், இன்றும் நம்பிக் கொண்டார்கள், ஒருசிலரின் மதமாற்றத்திற்கு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவருமே அந்த நம்பிக்கையை தூக்கி எரியவேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் அனைவரும் 'மதச்சார்பின்மை' என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
'ஹலல்' என்ற எழுதப்பட்ட கறிவிற்கும் கடையில் 'அல்லா சாமியை வேண்டி' வெட்டியதை நாங்கள் வாங்கமாட்டோம் என்று ஏனைய மதத்தினர் புறக்கணித்தால், கறிக்கடைக்காரர் வயிற்றில் ஈரத்துணியை நனைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியது தான், இதெல்லாம் விட நாத்திகரும் வாழும் நாட்டில் குழாய் ஒலிப்பெருக்கியில் 'அல்லாஹு அக்பர்' தொழுகை நேர அறிவிப்பு மற்றவர்களின் மதசார்பின்மையெல்லாம் கேட்டு தான் பின்னர் எழுப்பப்படுகிறதா ?
கிட்டதட்ட 95 விழுக்காடு நெல்வயல்களும் தாணியங்களும் பயிறிடும் முன் விருப்ப தெய்வத்திற்கு வேண்டிவிட்டு தான் விதைக்கப்படுகின்றன, அது போன்று அறுவடையில் முதலில் படையலுக்கு எடுத்துவைத்துவிட்டு தான் பிறகு விற்பதற்கான தாணியங்களை அறுத்து எடுக்கிறார்கள், ஏன் விளைச்சல் நன்றாக விளைந்தால் தான் நம்பிய கடவுள் கொடுத்தவையே அவை என்று நம்புகிறார்கள். மேற்கண்ட போராட்ட அமைப்புகள் இந்த தாணியங்களையெல்லாம் வாங்கி உண்ணாமல் எதை உண்ணுகிறார்கள் ? மதச்சார்பற்ற தாணியங்கள் என்று ஏதேனும் விளைகிறதா ?
உலகிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தோனிசியாவில் பிள்ளையார் படத்தை ரூபியாவில் அடித்து புழக்கத்தில் விட முடிகிறது, இராமயண நாயகர்களை, இந்து கோவில்களை பணத்தில் அச்சடித்து விட முடிகிறது, அங்கெல்லாம் அந்த நாட்டு இஸ்லாமிய அமைப்புகளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.
தீவிரமாக இந்து நம்பிக்கைக் கொண்ட ஒருவன் மேற்கண்ட செய்தியைப் படித்தால் தனக்குள்ளே கேள்வி கேட்கவே மாட்டானா ? இந்து பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் தங்கள் நம்பிக்கை சார்ந்த ஒன்றை கவுரவப்படுத்தும் பொழுது அதனை எதிர்ப்பது தனது நம்பிக்கையை மதிப்பதையும் எதிர்பதாகும் என்று நினைக்கமாட்டானா ?
மதச்சார்பின்மை என்பது எனது எல்லைக் கோட்டிற்குள் நீ வராதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது, அதனால் இந்தியாவிற்கு தேவை மதச்சார்பின்மை அல்ல மதச் சகிப்புத் தன்மையே. இவர்களின் எதிர்ப்பு தேவையற்ற காழ்புணர்வுகளையும் இந்துத்துவத்தை வளக்கவே உதவும். இவர்களது வைஷ்ணவி உருவம் பதிக்கப்பட்ட நாணய எதிர்ப்புணர்வும், இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதே என்கிற இந்துத்துவ கோஷமும் ஒன்றே.
இன்னும் இவர்கள் தமிழ்நாட்டு அரச முத்திரையில் இருக்கும் கோபுரத்தை தூக்கவேண்டும் என்று சொல்லாதது வியப்பளிக்கிறது, ஒருவேளை தமிழ்நாட்டின் அரசு சின்னத்தில் கோபுரம் இருப்பதை இவர்கள் கவனிக்கவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
மேற்கண்ட போராளிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒருவகையில் மதம் அல்லது வேலை ஆகிவற்றில் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான், இவர்கள் ஏன் அந்த நாடுகளில் இவர்கள் விரும்பும் மதசார்பின்மையை பரிந்துரைத்து ஏக உலகத்தில் மதசார்பு அற்ற அரசுகள் ஏற்படுவதை முன்னெடுக்கக் கூடாது ?