மூன்றாம் வகுப்பு படிக்கிறச்ச....ஆண்டவாரானரும் தேவ ஆட்டுக்குட்டியானவருமான ஏசு பிரான் குறித்த 'சண்டே க்ளாஸுகளுக்கு' சனிக்கிழமை வகுப்பு முடிந்ததும் கொடுக்கும் மிட்டாய்க்கு நாக்கு சுரந்து சென்று வந்ததுண்டு, மேற்கண்ட பதிவு தலைப்பில் படத்துடன் கூடிய துண்டு சிறுகதை ஒன்றைக் கொடுத்து படிக்கக் கொடுத்திருக்கிறார்கள், கதையும் அதனுடன் சேர்ந்த கதைத் தலைப்பும் இன்றளவிலும் என்னால் மறக்க முடியவில்லை, அதற்கு காரணம் ரொம்ப எளிது தான். எப்போதாவது எதையாவது தொலைத்தால் அந்த கதை நினைவுக்கு வந்துவிடும், கதை சுறுக்கம் இது தான், ஒரு ஏழையாகப்பட்டவன் ஆடு மேய்க்கப் போறச்ச... தன்னுடைய ஆட்டுக்குட்டியை தொலைத்துவிட்டு அழுது கொண்டிருப்பான், அந்த வழியாக வந்த ஏசு பிரான் அவனுடைய ஆட்டுக்குட்டியை கண்டுபிடித்துக் கொடுப்பார், உடனே அந்த ஏழை மகிழ்ச்சி எல்லைக்கு சென்றுவிடுவான், உங்களது இன்னல்கள் யாவையும் ஏசு பிரானிடம் சொல்லிவிட்டு அவை தீரும் பொழுது அந்த ஏழையைப் போல் நீங்களும் 'சந்தோசம் (மகிழ்ச்சி) அடையுங்கள்' என்பதே அந்த கதை கூறுவதாகும்,
இந்த கதையில் நாம் புரிந்து கொள்ளும் மற்றொன்று, என்ன தான் ஒருவன் உணவுக்கே வழி இல்லை என்றாலும் அவனுக்கு வானத்தில் இருந்து எதுவும் வரவழைத்து வழங்கப்படாது, அவனிடம் இருந்த ஏதேனும் பறிபோனால் அவை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது, கடவுளின் திறன் இவ்வளவே என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும், கடவுளிடம் அதைக் கொடு இதைக் கொடு என்று கேட்டால் எதுவும் கொடுக்கமாட்டார், உங்களின் தற்போதைய நிலைக்கு குந்தகம் வராமல் இருக்க வாய்ப்பு உண்டு அதுவும் 'மன்றாடினால்' மட்டுமே, இவை கிறித்துவ மதம் தவிர்த்து ஏனைய மதங்களின் அடைப்படை நம்பிக்கைகளுள் ஒன்று, அதாவது வழிபாடு என்பவை இழப்பில் இருந்து மீட்டுக் கொள்ள ஒரு (நல்) வழி. இதற்கு மேல் கடவுளுக்கு இயற்பியல் அடிப்படையிலான அந்த திறன் உண்டு, இந்த திறன் உண்டு என்று கட்டுக்கதைகளை பரப்பி விடும் பொழுது அவை போலி நம்பிக்கைகள் என்னும் விமர்சன வளையத்திற்குள் வந்து விடுகின்றன.
******
கடந்த வெள்ளி அன்று அலுவலகம் முடிய இன்னும் அரைமணி நேரம் இருக்கும் பொழுது அலுவலக நுழைவு அனுமதி அட்டை (ஐடி கார்டு) தொலைந்துவிட்டது, நானும் மேலே கீழே எங்கெல்லாம் சென்றேனோ அங்கெல்லாம் சென்று தேடிவிட்டேன் கிடைக்கவே இல்லை, எப்படியும் அலுவலகம் நுழையும் முன் வெளியேறும் முன் அட்டையைப் பயன்படுத்தி இருப்போம், தற்பொழுது அலுவலகத்தினுள் இருப்பதால் அட்டை அலுவலத்தினுள் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது, கடைசியாக ஒருவரின் கணிணியில் ஒரு மென்பொருள் நிறுவ சென்ற இடம், அங்கும் சென்று தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை, பிறகு அட்டையை செயல் இழக்க செய்துவிட்டு, அட்டையை கண்டுபிடிப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும் என்று மின் அஞ்சல் அனுப்பிவிட்டு, எதற்கும் மீண்டும் அந்த இடத்தில் சென்று தேடலாம் என்று செல்ல அங்கே அந்த நபர் இல்லை, இருக்கையின் ஓரத்தில் அட்டை தொங்கிக் கொண்டு இருந்தது, முன்பு அவர் உட்கார்ந்திருந்தால் அங்கு சென்று தேடிய பொழுது எனது கண்களில் படவில்லை, நான் அவரது இருக்கையை பயன்படுத்திய பொழுது அட்டை அங்கே இருக்கையின் ஓரத்தில் சிக்கிக் கொள்ள, நான் எழுந்த பிறகு கவனிக்காமல் அவரும் அவரும் தொடர்ந்து அதே இருக்கையில் உட்கார்திருக்க முன்பு தேடிய பொழுது கண்டுபிடிக்க முடியாமால் போனது. அப்பாடா என்ற என் நிம்மதி பெருமூச்சு ! அட்டை காணமல் போனால் 150 வெள்ளிகள் வரை கட்டணம் செலுத்த வேண்டும், அதுனுடன் கிடைக்கும் வரை மற்றவர்களிடம் அட்டையை கடன் கேட்டு அல்லது அவர்கள் செல்லும் பொழுது கூடவே செல்ல வேண்டி இருக்கும். அட்டை கிடைத்த பிறகு மேற்கண்ட 'இழந்தலும் மீண்டும் கண்டுபிடித்தலும் கதை' தான் நினைவுக்கு வந்தது. மீண்டும் கிடைத்த மகிழ்ச்சி 12 மணி நேரம் கூட நீடிக்கவில்லை.
சென்ற சனிக்கிழமை, காலை 8 மணிக்கு வழக்கமான இரத்த சோதனைக்காக அதன் தொடர்பிலான ஆவணங்களை எனது அலுவலக பையிலேயே எடுத்துக் கொண்டு சென்றேன், சோதனை அறையில் இரத்த மாதிரிகளைக் கொடுத்துவிட்டு, வெளியே வந்து காய்கறிகள் கொஞ்சம் வாங்கிக் கொண்டு, உணவுக் கடை பகுதிக்குச் சென்று ஒரு காஃபி குடித்துவிட்டு வீட்டுற்குள் வந்து ஒன்றை மணி நேரம் ஆன பிறகு பையில் இருக்கும் பண அட்டையை எடுத்துக் கொண்டு வெளியே வேறொரு வேலைக்காகச் செல்ல முனைந்து பை இருக்கும் இடத்தை தேட பையைக் காணும், அதே அலுவலகப் பையில் தான் என்னுடைய அலுவலக நுழைவு அட்டை மற்றும் பணப்பை, பண அட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் இருந்தன. காணும் என்றதும் கலவரம் ஆகியது, நேற்றாவது 150 வெள்ளி இன்னிக்கு எல்லா அட்டையும் புதுப்பிக்க ஆகும் செலவு, அது கைக்கு கிடைக்க ஆகும் நாட்கள் மன உளைச்சல். எங்கு தொலைத்தேன், எங்கு மறந்துவிட்டு வந்தேன்....? மருத்துவ சோதனைக்கு சென்ற இடத்திலா, காய்கறி வாங்கிய இடத்திலா ? அல்லது காஃபி குடித்த இடத்திலா ? கொஞ்சம் தான் வாங்கிய காய்கறிகள், வாங்கிய பிறகு பையில் வைத்திருக்க முடியும், ஆனால் காய்கறிகள் மட்டுமே வீடு வந்திருக்கிறது பையைக் காணும், ஒருவேளை மருத்துவ சோதனைகள் நடந்த இடத்தில் தான் இரத்தம் எடுக்கும் பொழுது கீழே வைத்து மறந்து வந்திருக்க வேண்டும், உடனடியாக சென்று பார்ப்போம் பகல் 12:30க்குள் சென்றால் உள்ளே சென்றுவிடலாம் என்று பரப்பானேன், படப்பானேன், இது என்ன தேவை இல்லாத அழுத்தம் ?, ஏன் இத்தனை ஞாபக மறதி ? , வயது கூடுவதும் காரணமோ, கிடைக்காமல் போனால் இழப்பு எவ்வளவு........ என்றெல்லாம் என்ன இதயத் துடிப்புக் கூடுதலானது, 'ச்சே' என்ன இது இந்த அளவுக்கு மன உளைச்சல் ஆக என்ன இருக்கிறது. கடைசியாக போகும் பொழுது காணாமல் போனவற்றில் ஒன்றையாவது கொண்டு செல்ல முடியுமா ? கிடைக்க வேண்டும் என்று இருந்தால் கிடைக்கட்டும், இதற்காக தேவை இல்லாமல் கலங்கவோ, வருத்தப்படவோ ஒன்றும் இல்லை, போய் கேட்டு, தேடிப் பார்ப்போம் அதன் பிறகு கிடைக்காமல் போனால் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம், என்று நல்ல தெளிவான மனநிலைக்கு வந்துவிட்டேன்.
பேருந்து ஏறி நேராக மருத்துவ சோதனைக்காக சென்ற மருத்துவ கூடத்திற்கு சென்று தேடிவிட்டு விசாரித்தால், கையை விறித்தார்கள், பின்னர் பையின் நிறம், அதனுள் இருந்தவை உள்ளிட்ட விவரங்களுடன் என்னுடைய கைப் பேசி எண் ஆகியவற்றை எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து அடுத்து காய்கறி வாங்கிய கடைக்குச் சென்று பார்க்கலாம் என்று சென்றேன், கடையிலும் யாரும் இல்லை, பையை எங்காவது கண்ணில்படும் படி வைத்திருக்கிறார்களா ? என்று பார்தேன் ம்கூம். ஒரு வேளை யாராவது எடுத்திருந்தாலும் கொடுபபர்களா ? அதனுள் குறிப்பிட்ட அளவு பணமும் இருந்ததே, 'ச்சே சிங்கையில் தொலைந்தால் கண்டிப்பாக கிடைக்கும்', எனக்கு காய்கறி கொடுத்த கடைக்கார சீனப் பாட்டியையும் காணவில்லை, சரி அடுத்து காஃபி குடிக்க சென்ற உணவு கடைத் தொகுதிக்கு சென்று தேடலாம், அங்கு கிடைக்கவில்லை என்றால் இங்கு வந்து மீண்டும் கேட்டுப்பார்கலாம் என்ற நினைத்து அங்கிருந்து அகன்றேன், பொது மருத்துவ சோதனை நிலையத்தில் காணாமல் போய் கிடைக்கும் வாய்ப்பு மறு நாள் ஞாயிறு என்பதால் இனிமேல் திங்கள் தான் என்று நினைத்துக் கொண்டு க்ஃபி குடித்த மேசையைப் பார்க்க அங்கு வேறு யாரோ அமர்து குடித்துக் கொண்டு இருந்தார்கள், அந்த இடத்தில் இருப்பதற்கான அறிகுறி இல்லை, அங்கே குடித்த டம்ளர்களை , சாப்பிட்ட தட்டுகளை எடுத்து செல்லும் பாட்டியிடம் விசாரிக்க அதுவும் நான் பார்க்க வில்லை என்றது, ஏமாற்றம்....... அப்படியே திரும்பி சுற்றிலும் பார்க்க மேசைகளை துடைக்கும் வேலை செய்பவர்கள் ஓய்விற்காக அமர்ந்திருக்கும் இடத்தில் 'பை', அதோ அது தான் என்னுடைய பை என்றேன் பாட்டியிடம், போய் எடுத்துக் கொள், நான் பார்க்கவில்லை, ஒரு வேளை 'டினா' பார்த்து எடுத்து வைத்திருந்தாள் போல என்றது. அப்பாடா என்ற மன நிறைவு பெருமூச்சுடன் பையை எடுத்துக் கொண்டு, அருகே திரும்பி அமர்திருந்த 'டினா' வை விழித்து, விவரம் சொல்லி பையை எடுத்துக் கொண்டு நன்றி கூறி. உள்ளே திறந்து பார்க்க எதுவும் காணாமல் போகாமல், களவாடாமல் அப்படியே இருக்க, நன்றிக்கடனாக 10 வெள்ளியை நீட்ட, வேண்டாம் என்று மறுத்தார், பின்னர் மீண்டும் வழியுறுத்தி நன்று கூறி கொடுக்க வாங்கிக் கொண்டார், 'இழத்தலும் மீண்டும் கண்டுபிடித்தலும்' கதை அடுத்த அடுத்த நாளில் மீண்டும் நினைவு கூர்ந்தேன், அந்த கதையில் கடைசியாக என்னோடு சேர்ந்து நீங்களும் சந்தோசம் அடையுங்கள் என்று முடித்திருப்பார்கள்.
பை கிடைத்ததன் விவரம் வீட்டிற்கு அழைத்து சொன்னேன், 'என்ன இவ்வளவு கூலாக சொல்றிங்க' என்றார் மனைவி.
மன உளைச்சல் என்பது நாம் எதை தொலைத்தோம் என்பதைப் பொருத்தும் உள்ளது, பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கி கழுத்தில் போட்ட இரட்டை வட தங்கச் சங்கிலியையை, அல்லது ஒரு ரவுண்டு போய்டு உடனே வந்துடுறேன் என்று வாங்கி சென்ற பைக்கையா ? அல்லது சொத்தையே பறிகொடுத்தோமா ? உறவுகளை இழந்தோமோ என்ற பெரிய இழப்புகள் குறித்து நான் இங்கு குறிப்பிடவில்லை, அவற்றின் தாக்கம் வேறு, ஆனால் நம்முடைய நம்மால் ஈட்டக் கூடிய, அது இல்லாவிட்டாலும் நம்மால் வாழ முடியும் என்கிற நிலையில் உள்ள பொருள் குறித்தே எழுதியுள்ளேன்.
காணமல் போனவற்றை தேட முயற்சிக்கலாம் அவை கிட்டலாம் கிட்டாமலும் போகலாம் அவை மீண்டும் கிடைத்தால் மகிழ்ச்சி, கிட்டாமல் போனால் நமக்கு நாமே ஆறுதலாக, அவை நம்முடனேயே வந்துவிடாது, அவை இல்லை என்றால் வாழ்கையே இல்லை என்ற நிலையும் இல்லை என்ற புரிதல் இருந்தால், நமக்கு மனவுளைச்சலோ, பெரிதாக இழந்தோம் என்கிற மன அழுத்தமோ ஏற்படாது.