முதலில் 'பதின்ம' என்றால் என்னவென்று சொல்லிவிடுகிறேன், ஆங்கிலத்து 13 முதல் 19 வரை இருக்கும் எண்களில் அகவை உடையோரை 'டீன் ஏஜ்' என்று சொல்வதுண்டு, அதுவே தான் தமிழில் பயன்படுத்தும் போது பதின்ம அகவை அல்லது வயது என்றாகிறது. 'பதி' மூன்று முதல் 'பதி'னொன்பது(பத்தொன்பது) வரையிலான அகவை 'பதி'ன்ம அகவை என்கின்றனர்.
அந்த அகவையில் எட்டாம் வகுப்பிலிருந்து இளநிலை பட்டப்படிப்பு முதல் / இரண்டாம் ஆண்டுவரை படித்திருப்போம் (6 ஆம் வகுப்பை ஆறுமுறை படிக்கிறவர்களை கணக்கில் சேர்க்கவில்லை). எட்டாம் வகுப்பில் படிக்கும் போது தான் சில பசங்க சைட் அடிப்பதையும், 'அவ என் ஆளு' என்று சொல்வதையும் அரசல் புரசலாக கேள்வி பட்டேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களில் சிலர் மாணவிகளை காதலிக்கத் தொடங்கி இருந்தனர். அடுத்தது ஒன்பதாம் வகுப்பு, ஒரு மாணவன் பள்ளி விடுமுறையின் போது மரணம் அடைந்துவிட்டான், ஒரு சிலர் மாற்றலாகி சென்றுவிட்டார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது உடன்படிக்கும் மாணாவர்களில் சிலர் முழு கால்சட்டை எனப்படும் பேண்ட்டும், சிலர் வேட்டி அணிந்து வந்தார்கள் (நம்புங்கள் அப்போதெல்லாம் (எப்போதுன்னு கேட்கபடாது) வேட்டி அணிந்து வருவதால் இழுக்கு இல்லை, ஆசிரியர்களும் ஒப்புதல் அளிக்காவிட்டாலும் எதிர்ப்பு காட்டவில்லை) மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகுப்பு ஆகையால் பெண்களுடன் படிக்கும் அரிய வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. பெண்களுக்கான தனி வகுப்புகளில் மாணவிகள் பலர் தாவணி அணிந்திருந்தார்கள். 'டேய் என்னடா......' ன்னு பேசும் மாணவிகள் தாவணிக்கு மாறியதும், எதிர்படும் போது தலையைக் குணிந்து கொண்டு சென்றார்கள் (வெட்கப்பட்டு சிரித்தார்கள் என்று பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்), மனித உறவுகள், குழந்தை பேறு இவை பற்றிய அறிவு வளர்ச்சி அடைந்திருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது அறிவியல் வகுப்பு ஆசிரியர் தான் ஆண் பெண் இனப்பெருக்க உருப்புகள் குறித்தும், இனப்பெருக்கம் எப்படி நடைபெறுகிறது என்பது பற்றியெல்லாம் சிறிய பாடம் நடத்தினர். அதுவரையில் ஆண் பெண் திருமணம் செய்து கொண்டால் பிள்ளை பிறக்கும், வயிற்றை பிளந்து குழந்தை பிறந்ததும் வயிறு தானாகே மூடிக் கொள்ளும் என்கிற கற்பனையெல்லாம் முடிவுக்கு வந்தது. சுமாராக படிக்கும் மாணவன் தான். ஆங்கிலம் என்றால் அலர்ஜி அதற்கு காரணம் தமிழ் வழி மாணவர்களுக்கு புரியக் கூடிய வகையில் எந்த ஒரு ஆங்கில ஆசிரியரும் பாடம் எடுப்பதில்லை. ஆங்கிலத்தில் தேறுவது தான் பெரும் க(வ)லையாகவே இருந்தது, எப்படியோ எல்லை மதிப் பெண் எடுத்து தேறி, பட்டாம் பூச்சி பருவமான +1, +2 வில் சேர்ந்தேன்.
வீட்டில் கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் மூவர் (என்னுடன் சேர்த்து 4 பேர், மேலும் அக்கா, தங்கை) இருந்தாலும் அடித்துக் கொண்டது, புத்தகங்களைக் கிழிப்பது, மிதிவண்டியை உடைப்பது போன்ற ஓற்றுமையைத்தான் செயலில் காட்டி வந்தேன். திரைப்படங்களில் காட்டுவது போல் அண்ணன் தம்பி பாசம் இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு இடையே நிறைய ஆண்டு வேறுபாடு இருக்கவேண்டும் இல்லை என்றால் இருவர் அல்லது மூவராக குறைந்த எண்ணிக்கையில் உடன்பிறந்த உறவு முறைகள் இருக்க வேண்டும். ஆனால் இருபது அகவைக்கு மேல் உடன் பிறப்புகளின் மீதான ஈர்ப்பு இயல்பாக வந்துவிடும்.
+1, +2 படிக்கும் போது நானும் பேண்ட் - க்கு மாறிவிட்டேன், ஜட்டி போட்டு போடனுமாம், அதுக்கு முன்பு வரை அரை ட்ராயர் போடும் போது அந்த வழக்கம் இல்லை. (பெரு)நகர் புறங்களிலும், படித்த பெற்றோர்களின் பிள்ளைகளிடமும் அந்த வழக்கம் இருந்தது, தற்போது வசதி குறைந்த மாணவர்கள் கூட ஜட்டி அணியாமல் அரை ட்ராயர் அணிவது கிடையாது. என் தம்பி மகன்கள் வெறும் அரைடிராயருடன் செல்வது இல்லை. அப்போதெல்லாம் அரை ட்ராயர் பின்னால் கிழிந்து தபால் பெட்டி என்று கிண்டல் செய்வோரும் உண்டு, எப்படிடா உங்களுக்கெல்லாம் பின்னால் கிழியுது என்று கேள்வி கேட்பார்கள், அதில் ஒன்றும் புதிர் இல்லை, சறுக்கு மரம் எனப்படும் சாய்வு ஏறி (ஸ்லைடிங் ரெய்ட்) சிமெண்டால் தான் செய்யப்பட்டு இருக்கும், தற்போது ப்ளாஸ்டிக்கில் செய்கிறார்கள், சிமெண்ட் சாய்வில் சருக்கும் போது அரை ட்ராயரின் பின்பக்கம் தேய்ந்து ஓட்டை ஆக்கிவிடும், வீட்டில் உள்ளவர்கள் போடக் கூடாது என்று சொல்லும் வரை தபால் பெட்டி அரை ட்ராயருடன் வெளியே சென்றதில் அப்போதைய மாணவர்கள் யாரும் வெட்கப்பட்டது போல் தெரியவில்லை.
+1, +2 படிக்கும் போது தான் சாதிய முகங்கள் அறிமுகம் ஆகின, மாணவர்களுக்குள்ளேயும், இவன் பறையன், பள்ளன், செட்டி(யார்), முதலி(யார்), பூணூல்காரன் என்றெல்லாம் சாதிய அடையாள பட்டப் பெயர் வைத்து அழைத்துக் கொள்வார்கள். என்னுடன் படித்த பார்பன மாணவர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் வகையில் வகுப்பில் முதலாக வந்ததே இல்லை. ஆங்கில அகர வரிசை படி வகுப்புகளின் மாணவர் வருகைப் பதிவேடு வாசிப்பதன் மூலம் ஒரிரு வாரங்களில் அனைவரின் பெயர்களும் தெரிந்துவிடும், எப்படியோ கூடவே அதே மேசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் அவர்களுக்குள் நட்பை மேலும் வளர்த்துக் கொள்வார்கள், அவர்களுக்கு பிடித்தவர்கள் என வகுப்பினுள் குழுக்கள் உருவாகி இருக்கும், இப்படியாக உருவாகும் குழுக்கள் உடற்பயிற்சி வகுப்பின் போது அவிழ்த்து விடுவதை வாய்ப்பாக்கிக் கொண்டு காமக் கதைகளையும், பாலியல் பற்றிய அறிவுகளை வளர்த்துக் கொள்வார்கள், கற்பத்தடைகள் வகைகள் பற்றியெல்லாம் அப்போது தான் உடன்படிக்கும் மாணவர்கள் சொல்லக் கேட்டுக் கொண்டேன். என்னுடன் படித்த மாணவர்களில் மிகச் சிலரே நல்ல நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்களின் முகவரிகள் தெரியவில்லை.
பிறகு கல்லூரிக்குச் செல்வார்கள், எனக்கு கல்லூரி செல்லும் வாய்ப்பு அப்போது கிடைக்கவில்லை (பிறகு கிடைத்தது, பின்னர் பகுதி நேரமாக இளநிலை முடித்தேன்), பெரிதாகவும் முயற்சிக்கவில்லை, பாலிடெக்னிக் எனப்படும் பட்டய படிப்பில் தான் சேர்ந்தேன். கூடவே 20 மாணவர்கள் வரை படித்தார்கள், 18 அகவை ஆகி இருந்தது, உடன் படிப்போர் அவர்களது வீட்டுக்குச் செல்லும் போது அவர்களின் தங்கைகள் பார்த்துவிட்டால் உள்ளே சென்று அறையினுள் முடங்கிவிடுவார்கள். ஒவ்வொரு முதிர்நிலை பதின்ம வயது மாணவனுக்கும் தன்னுடைய நண்பனின் தங்கையை சைட் அடிப்பது அல்லது அவள் தன்னை காதலிக்கிறாளோ என்கிற நினைப்பு இருக்கத்தான் செய்கிறது. பதின்ம வயதில் மட்டுமல்ல, நான்காம் வகுப்பு படிக்கும் போது என்வயதை ஒட்டிய என்னுடன் அப்போது நான்காம் வகுப்பு நண்பன் (அதே தெருவில் இருப்பவன்) ' அந்த (எட்டாம் வகுப்பு)அக்காவை லவ் பண்ணப் போகிறேன்' இன்னொரு மாணவனிடம் சொல்லி, அவன் அதை வெளியே சொல்ல இரண்டு பக்கமும் பெற்றோர்களிடம் நன்றாக முதுகு வீங்கும் அளவுக்கு வாங்கினான், நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது.
மற்றபடி அந்த வயதில் பெற்றோர்களுடனோ, உடன் பிறந்தோர்களுடனோ நல்லதொரு புரிந்துணர்வு வளர்ந்தது என்று சொல்ல முடியவில்லை. அவையெல்லாம் பின்னால் வேலைக்குச் சென்ற பிறகே ஏற்பட்டது.
பதின்ம வயதுகள் மன முதிர்ச்சி வளரத்தொடங்கும் வயது, பாலியல் ஆர்வம், கல்வித் தேர்வு என பல அறை கூவல்களை உள்ளடக்கியது.
என்னை தொடருக்கு அழைத்த இயற்கை நேசி, நண்பர் தெகா அவர்களுக்கு நன்றி. இத் தொடரைத் தொடர நான் அழைக்க விரும்புவது...
பெரியவர் மதுரை கிருஷ்ண மூர்த்தி (Consent tobe Nothing)
பெரியவர் மதுரை சீனா ( அசைபோடுவது)
துளசி அம்மா (துளசி தளம்)
இளைஞர் அக்பர் (சினேகிதன்)
இளைஞர் ஸ்டார்ஜன் (எ) ஷேக் (நிலா அது வானத்து மேலே)
என்றும் இளைஞர் சஞ்செய் காந்தி (முன்னாள் பொடியன், இன்னாள் SanjaiGandhi)
(பழைய நினைவுகளில் விருப்பம் உள்ளவர்கள் எல்லோரும் வெட்கப்படாமல் எழுதுங்க)
பிகு : மேலே உள்ள படம் இணையத்தில் கிடைத்தது மற்றபடி எனக்கு படத்துக்கும் தொடர்ப்பு இல்லை.