பின்பற்றுபவர்கள்

30 அக்டோபர், 2009

யாதும் நாடே யாவரும் பாரீர் (Top Of The Europe) - 8

பருவகால மாற்றங்களில் ஏற்படும் கடும் குளிரின் சோம்பல்களிலிருந்து உற்சாகப்படுத்திக் கொள்ள பண்டிகைகள், அக்காலங்களில் விழாக்கள் நடைபெறுகின்றன. மார்கழி மாதக் குளிரையும் புறந்தள்ள தமிழ் நாட்டில் கார்த்திகை முதல் மார்கழி வரை கோவில் விழாக்கள் நடைபெறும், ஐரோப்பிய நாடுகளில் கடுங்குளிர், பனிப்பொழிவு காலங்களில் கிறிஸ்மஸ் விழா என்னும் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகின்றது, கிறிஸ்மஸ் அலங்காரங்களில் பனிப் படர்ந்த கிறிஸ்மஸ் மரங்களைக் காட்சியாக வைக்கிறார்கள். பருவகால மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை சூழல் மாறுபாடுகளை தனக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வது மனித இனப் போக்காகக் இருக்கிறது, பிழைப்பு, வாழ்கை என்னும் வாழ்வியலில் அது இயல்பானதும் கூட. ஐரோப்பிய நாடுகளில் தற்பொழுது பனிக்காலம் தொடங்கி இருக்கிறது, Winter எனப்படும் (கடும்)குளிர் காலமான நவம்பர் - ஜனவரி திங்கள்களில் ஹாலோவின், கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆயத்தமாகிவருகின்றன.

*****

23 / அக்/2009 ஐரோப்பிய சுற்றுலாவின் நிறைவு நாளில் இருந்தோம். அன்று முதன்மையானதும் நிறைவாகவும் பார்க்க வேண்டிய இடம் ஐரோப்பாவின் உச்சி என்று அழைக்கப்படும் Jungfraujoch எனப்படும் பனி மலைக்குச் சென்று வருவது தான் திட்டம், அதற்கான பயணச் சீட்டுகள் எல்லாம் ஆயத்தமாக இருந்தது. அன்று காலை 8 மணிக்கு எழுந்து, 9 மணிக்கு ஆயத்தமாகி, விடுதியில் கொடுக்கும் ரொட்டி, பழச்சாறு காலை உணவுகளை முடித்துக் கொண்டு 9.30 மணிக்கு விடுதியை விட்டுக் கிளம்பினோம், அந்த விடுதியில் பல மஞ்சள் இன ஆசியர்களும், ஒரு சில இந்திய இல்லத்தினரும் கூட தங்கி இருந்தனர்.





குளிர்காலம் தொடங்கப் போகும் பருவ மாற்றத்தை உணர்த்த வெளியே லேசான மழைத்தூரல் பெய்து கொண்டிருந்தது, குடையை எடுத்துக் கொண்டு Interlaken OST எனப்படும் கிழக்கு தொடர் வண்டி நிலையத்தை நடந்தே அடைந்தோம். செல்லும் வழியெங்கும் வண்ண இலைகளுடன் காட்சி கொடுத்த மரங்கள், அந்த ஊரும் மிகத் தூய்மையாகவும், குளிருமாக மிக இனிமையாக இருந்தது. சுற்றிலும் மலைகள், அந்த மலைகளில், சில மலைகள் தலையில் வெண் பனி அணிந்திருந்தன. மலைகளின் மீது உரசிக் கொண்டும் , தழுவியும் நின்றபடி மேகக் கூட்டங்கள் பார்க்க கண் கொள்ளாக் காட்சி.

சாலை ஓரத்தில் நாய்களுடன் சிலர் சென்று கொண்டு இருந்தனர். நாய்கள் சிறுநீர் கழிக்க குத்துக் கல்லுடன் தனி இடம் கூட சாலை ஓரத்தில் இருந்தது வேறெந்த நாட்டிலும் பார்க்காத ஒரு காட்சி.
மறுநாள் எடுத்தப்படம்


தொடர்வண்டி நிலையத்தில் விவரம் கேட்க மாறி மாறி மூன்று தொடர்வண்டிகள் மூலம் பயணிக்க வேண்டிய விவரம் சொல்லி, கூடவே தொடர்வண்டி புறப்படும் நேரம் தொடர்பான கையேடு ஒன்றையும், குறிப்புகளையும் கொடுத்தனர்.

முதலில் பயணம் செய்யப் போகும் தொடர்வண்டி Interlaken லிருந்து Grinde Wald என்ற நிலையத்துக் செல்லும், அங்கிருந்து பேருந்து ஒன்றில் ஏறி 1 கிமி தொலைவில் இருக்கும் அடுத்த நிலையத்துக்கு மாறவேண்டும். ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு தொடர்வண்டி என அப்போது 10:30 மணிக்கு புறப்படும் Grindel Wald தொடர்வண்டி புறப்பட காத்திருந்தது, ஏறி உட்கார்ந்தோம். இரண்டு நிமிடத்தில் புறப்பட்டது. மேல் கீழ் என இரண்டு தளங்கள் இருந்தன. வேடிக்கைப் பார்க்க வசதியாக மேல் தளத்தில் உட்கார்ந்தோம். அகலமான கண்ணாடி சன்னல்கள் வழியாக நன்றாக பார்க்கும் படி அமைத்திருந்தார்கள். சுற்றிலும் சற்று தொலைவில் மரங்களுடன் கூடிய மலைகள், அருகே புல்வெளிகள் அதில் பசுமாடுகள், ஆடுகள் மேய்வது, சிற்றோடைகள் வழியெங்குமான காட்சிகளாக இருந்தன. அங்காங்கே பள்ளத்தாக்குகள் அதன் சரிவில் தனித்தனி வீடுகள் இருந்தன.






விரைவான, சற்று நீளமான தொடர்வண்டி தான் 35 நிமிட பயணத்தில் Grindel Wald அடைந்தோம். அங்கே அருகே பேருந்து நிற்கும் இடத்திற்கு பயணிகள் சென்றனர், அடுத்த தொடர்வண்டி இணைப்புகாக இயக்கப்படும் தனிப்பட்ட பேருந்து, அதில் ஒரு மூன்று நிமிடப் பயணம் Grund என்ற இடத்தில் இருந்து அடுத்து மேலே அழைத்துச் செல்லும் தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்றது, மூன்று பெட்டிகளுடன் தொடர்வண்டி அங்கே ஆயத்தமாக நிற்க அதில் ஏறினோம், புறப்பட்டது, இந்த முறை மலையில் தொடர்வண்டி மேலே ஏறுவது உணரும்படி இருப்புப் பாதைத் தடம் ஏற்றத்தில் செல்வது நன்கு
தெரிந்தது, அதே லேசான மழை இங்கும் தொடர்ந்து பெய்து கொண்டு தான் இருந்தது.





மலைச் சரிவில் நிறைய வீடுகள், மாடுகள் தெரிந்தன. சிறிது நேரப் பயணத்திற்கு பிற வீடுகள் இல்லை, குறைவான உயர மரங்களும், நடந்து மேலே செல்லுவோருக்கான வழிகளும், கம்பித் தடத்தில் தொங்கிக் கொண்டு செல்லும் கயிறுந்து (Rope Car) மேலும் கீழுமாக சென்று கொண்டிருந்தன. சுமார் 20 நிமிட பயணத்திற்கு பிறகு அங்கங்கே வெளியில் உறைபனித் திட்டுகள் காணப்பட்டன, தொலைவில் தெரிந்த மலைகள் யாவும் பனிப்படந்து காணப்பட்டன. அடுத்த ஐந்து நிமிடப் பயணத்தில் தொடர்வண்டிக்கு வெளியே எங்கும் பனி வெளிகள்...காணப்பட்டன, அங்கே ஒரு நிறுத்தம் அதன் பெயர் KL.Scheidegg அத்துடன் அந்த தொடர்வண்டியில் இருந்து மலை உச்சிக்கு செல்லும் மற்றொரு தொடர் வண்டிக்கு மாற வேண்டு அனைவரும் இறங்கிக் கொண்டனர்.


அங்கு இறங்கியதும் இதுவரை தண்ணீர் துளிகாக மேலே விழுந்த மழைத்துளிகள் அந்த இடத்தில் பூப்போன்ற பனித் துளிச் சாரல்களாக கீழே விழுந்து கொண்டிருந்தன. அவை நம் உடல் மீது பட்டதும் உடல் சூட்டில் தண்ணீர் துளிகாக மாறிவிடுகிறது. இருப்புப் பாதைத் தவிர்த்து அனைத்து இடங்களும் உறைப் பனித்துளிகளால் மூடப்பட்டு இருந்தன. அதன் மீது நடக்க மென்மையாக இருந்தது, இரண்டு நிமிடம் அந்த பனிமழையில் நினைந்து மகிழ்ந்து அடுத்து மழை உச்சிக்குச் செல்லும் தொடர் வண்டியில் ஏறினோம். அதில் இரண்டே பெட்டிகள் இருந்தன.

பெரிய பெரிய சர்கஸ் கூடாரங்கள் வெண்ணிற ஐஸ்கிரிமை உடலெங்கும் பூசிக் கொண்டது போன்று சுற்றிலும் மலைகள் அதன் சரிவில் வெண்ணிற பனிப் பள்ளத்தாக்குகள், உறைப் பனி தலையில் தாங்கி நின்று கொண்டு இருந்த மிகக் குறைந்த மரங்கள் தென்பட்டன, வெண்பனி மூடிய சிறிய சமவெளி மீது அந்த சிறிய தொடர் வண்டி ஊர்ந்து சென்றது., சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு திரைப்படங்களில் மட்டுமே பார்த்து வந்த க்காட்சிகள் கண்ணுக்கு முன் சாட்சியாக வந்து கொண்டு இருந்தன, அதன் பின் பனிமலையின் குடைந்த குகைப்பாதை வழியாக வண்டி சென்றது.



குகைப்பாதையின் இடையிடையே பார்வையாளர்கள் மலைத் தொடரை ரசிப்பதற்காக நிறுத்தங்கள் வைத்திருந்தனர். அங்கே ஐந்து நிமிடங்கள் நின்றன, இப்படியாக Eigergletscher, Alpiglen, , Eismeer என்ற மலை ஏற்ற இடங்களில் நின்றது, அன்று கடும் பனிப்பொழிவு ஆகையால் அங்கே அமைந்திருந்த கண்ணாடி வழியாக பார்க்க முடியவில்லை, கண்ணாடிகளின் வெளிப்பக்கம் முழுவதுமே வெண்புகை போன்று பனிப் படர்ந்திருந்தால் அந்த உயரக் காட்சிகள் காணமுடியாமல் போனது.

நிறைவாக Jungfraujoch எனப்படும் மலை உச்சியில் அமைக்கப்பட்ட பார்வையாளர்கள் பார்பதற்காக அமைக்கப்பட்ட கட்டி இடத்தின் அடித்தள நிலையத்தை அடைந்தது.
இணையப் படம்

(இணையத்தில் தேடி எடுத்தப் படம்)


அந்த இடம் முழுவதும் உச்சி மலையை குடைந்து அமைக்கப்பட்ட இடம், மேல் தளமாக பெரிய பார்வையாளர் கட்டிடம், அதில் நான்கு தளங்கள். மேல் தளத்திற்கு சென்றோம், அங்கே திறந்த வெளியில் நிற்பதற்கு பாதுகாப்பு கம்பிகளுடன் ஒரு தளம் அமைத்திருந்தார்கள், கதவை திறந்து கொண்டு அங்கு செல்ல.......லேசான பனிப்புயல் அதாவது கடுமையான காற்று.....பனித்துளிகளுடன் முகத்தில் அறையும் காற்று, நடுங்க வைக்கும் கடுமையான குளிர், ஒரு நிமிடம் அங்கு நின்றால் கைகள் விரைத்துப் போகும் அளவுக்கு கடும் குளிர். அங்கே நிற்க முடியவில்லை, இருந்தாலும் ஒரிரு முறைகள் உள்ளே சென்றுவிட்டு விட்டு அங்கு நின்று வந்தோம். வெளியே வெப்ப நிலை அளவு போட்டு இருந்தார்கள் - 8 டிகிரி.






அடுத்த தளத்தில் ஐஸ் பேலஸ் எனப்படும் பனி மாளிகை அமைக்கப்பட்டு இருந்தது, ஒரே சமயத்தில் இருவர் நடந்து போகும் அளவுக்கு குறுகலாக குகை போன்ற நுழைவாயில், அதனுள் பல இடங்களில் காட்சியாக வலப்பக்கமும் இடப்பக்கமும் பனிச் சிற்பங்கள் செய்து வைத்திருந்தனர்.






10 நிமிடம் ப்ரீசருள் இருந்தது போன்று இருந்தது அங்கிருந்து திரும்பிய பிறகு. போகும் போதே தேவையான அளவுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குளிராடைகள் அணிந்திருந்தால் அந்த கடும்குளிரை எதிர்கொண்டோம்.

அங்கே பிற தளங்களில் கண்ணாடி சன்னல் அமைக்கப்பட்டு வெளிக்காட்சிகள் தெரிந்தன. சுற்றுலா பொருள் விற்கும் கடைகளும், பானங்கள், உணவுகள் விற்கும் கடைகளும், ஒரு உணவு விடுதியும் இருந்தன, இரண்டு தளங்களில் கழிவரை வசதிகள் இருந்தன.
ஐரோப்பாவின் மலை உச்சியான அந்த இடத்தில் சுமார் 1 மணி நேரம் சுற்றிப் பார்த்து திரும்பினோம்.



வரும் வழியில் உறைபனி முடியும் தொடர் வண்டி மாறும் இடத்தில் சிறிது நேரம் பனிபொழிவில் பனியை உருண்டை உருட்டி வீசி எறிந்து விளையாடி கழித்துவிட்டு, பிறகு மாறுபட்ட வழி இருந்தும் சென்ற வழியிலேயே திரும்பினோம், மாற்று வழியை விட 30 நிமிடம் விரைவாக அழைத்துச் சென்றுவிடும் என்கிற தகவல் தெரிந்தது. மேலும் மலைக்காட்சிகள் இரண்டிலும் பெரிய மாறுதல் இருக்காது என்பதால் விரைவாக திரும்பும் வழியைத் தேர்ந்தெடுத்தோம்.






Interlaken OST திரும்ப மலை 6 ஆகி இருந்தது. அந்த ஊரை கொஞ்சம் நடந்தே சுற்றினோம்.


பிறகு விடுதிக்குச் சென்று சற்று ஓய்வெடுத்துவிட்டு, இரவு உணவுக்கு அங்கே சற்று தொலைவில் Interlaken West நிலையத்திற்கு அருகே இருந்த தாஜ் இந்திய உணவகத்திற்குச் சென்று இரவு உணவை முடித்தோம். மூன்று பேருக்கும் சேர்த்து இரவு உணவாக ஒரு புலாவ், நான்கு வட இந்திய ரொட்டி(Nan), உருளை கிழங்குடன் காலிப்ளவர் மசாலா 40 ஸ்விஸ் ப்ராங்க், மிகுதிதான். ஆனால் அந்த ஊரில் இந்திய உணவு கிடைப்பதற்கு கொடுக்கலாம். பனிப் பொழிவு மழை பெய்யும் போது தான் ஏற்படுகிறது, அன்று மழை தூறியதால் அதே போன்ற பருவ நிலையால் மலை உச்சியிலும் மழைக்குக்கு பதிலாக பனிப் பூப்பொழிவாக இருந்தது அன்றைய பருவ நிலையால் ஏற்பட்ட ஒன்று, இல்லை என்றால் உறைபனியை மட்டும் பார்த்துவிட்டு திரும்பி இருப்போம். ஆங்கிலத் திரைப்படத்தில் மட்டுமே பார்த்து வந்த பனித் தூறல், பனிப்பூக்கள் கண்களில் காட்சியாகவும், உடலிலும் பட்டதும் மகிழ்வானதொரு துய்பு.

பயணக்குறிப்புகள் : Jungfraujoch பனி மலைக்கு தொடர்வண்டி மற்றும் கயிறுந்து (Rope Car) தடவழிகள் இருக்கின்றன, நமக்கு விருப்பமானவற்றில் செல்லலாம். கடும் குளிர்காலத்தில் செல்லும் போது தேவையான குளிராடைகள், கையுறைகள், பொருத்தமான காலணிகள் (ஷூ) அணிந்து செல்ல வேண்டும். Interlaken லிருந்து சென்று, ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு, திரும்ப 6 மணி நேரங்கள் தான் ஆகிறது, Interlaken -ல் மற்ற விடுமுறை தளங்களைவிட குறைவான வாடகைக்கு விடுதிகள் கிடைக்கும். மற்ற கடைகளும், இந்திய உணவகங்களும் அமைந்திருக்கின்றன. Jungfraujoch மலை உச்சியில் உணவு மற்றும் சுற்றுலா நினைவு பொருள்கள் விலை மிகுதி, முடிந்த வரை உணவு பொருள்களையும் குடிநீர் ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்வது செலவைக் குறைக்கும்.
மலை உச்சியில் பனிச்சறுக்கு, நாய்கள் இழுத்துச் செல்லும் வண்டியில் மூன்று நிமிடப் பயணம் போன்ற விளையாட்டுகள் இருக்கின்றன. இருந்தும் பருவ நிலையைப் பொருட்டே இவைகள் நடக்கும், நாங்கள் சென்ற அன்று மோசமான பருவ நிலை. விளையாட்டுகள் எதுவும் நடைபெற வில்லை.




(படத்தின் மீது அழுத்து பெரிதாகப் பார்க்கவும்)



கடைசி மூன்றும் இணையத்தில் இருந்து எடுத்தப் படங்கள்)



நாய்களுக்கு ஏன் மூச்சா போகக் கூட இட வசதி செய்து தருகிறார்கள் என்பது இப்பதான் புரிகிறது :) பயணிகளை ஈர்பதில் அவைகளும், மாடுகளும் ஸ்விசர்லாந்தில் தன்னுடைய பங்கையாற்றுகின்றன :) மாட்டு மணி மாதிரிகள் பயணிகள் விரும்பி வாங்கிச் செல்லும் பயண நினைவுப் பொருள்களில் ஒன்றாக இருக்கிறது.

இங்கே எழுதி இருப்பவை அனைத்தும் சென்ற வாரம் இதே வெள்ளிக் கிழமை முழுவதும் நடந்த நிகழ்வு, எழுதும் போதே ... மீண்டும் அங்கெல்லாம் செல்ல மனம் ஏங்குகிறது.

29 அக்டோபர், 2009

யாதும் நாடே யாவரும் பாரீர் (Louvre Museum, Zurich and interlaken) - 7

மனித உடல் பற்றி பல்வேறு மனித இனங்களிலும் பல்வேறு கருத்துகள், உணர்வுகள் இருக்கின்றன. ஒரே பாலினர் முன்பு மற்றொருவர் நீச்சல் குளங்களில் அமைந்த பொதுக் குளியல் அறைகளில் நிர்வாணமாக குளிப்பது மேலை நாடுகளில் இயல்பான ஒன்று ஓரின சேர்கையாளர்கள் தவிர்த்து வேறு எவரும் கிளர்ச்சி அடைவது இல்லை. நிர்வாண உடல் மீது அருவெறுப்பு பார்வை நம் இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். உடலியல் காரணங்களினால் மருத்துவர் தவிர்த்து மற்றொருவர் முன் நிர்வாணமாக நிற்பது நம் இந்தியர்களால் இயலாத ஒன்று, அந்த அளவுக்கு நிர்வாண உடல் பற்றிய சமூக சிந்தனைகள் வெகு இயல்பானதாக இருக்கவில்லை என்பதே காரணம்.

நிர்வாண உடல் வெறுக்கத் தக்கது, அருவெறுப்பானது, அசிங்கமானது அல்ல....மற்ற இயற்கைகளைப் போலவே.....மனித உடலும் ரசிக்கத் தக்கது என்று நினைத்தே ஐரோப்பாவில் அங்கங்கே சிலைகள் நிர்வாணமாகவே வடிக்கப்பட்டு இருக்கின்றன. பார்பதற்கு நமக்கு கண் கூசும், அவர்களுக்கு அது ரசிக்கத்தக்க காட்சி. நம்முடைய பொது சமூக சிந்தனைகள் நிருவாண உடல்களைப் பார்க்க தடை விதித்து அவற்றை பொதுவில் வைக்காவிட்டாலும் நம் ஆண்களில் 90 விழுக்காட்டினர் நீலப்படங்களை ரசித்துப் பார்க்கிறார்கள், மற்றவர்களை வாய்ப்புக் கிடைக்காதவர்கள் என்று நினைத்துக் கொள்ளலாம், அவை மிகக் குறைவு. எனவே நிர்வாண உடல் மீதான நம் சிந்தனைகள் என்பது நம் சமூகத்தின் பொதுக்கட்டுப்பாட்டைச் சார்ந்தது, தனிமனித மன சார்புள்ளது அல்ல என்றே நினைக்கிறேன்.

ஐரோப்பியர்கள் தனிமனித எண்ணங்களும், சமுக எண்ணங்களும் ஒன்று என்பதாக அத்தகைய நிர்வாண காட்சிகளை பொதுவில் வைக்கத் தயக்கம் காட்டவில்லை. அவர்களது தனிமனித, பொதுச் சமூக சிந்தனைகள் நேர்மையான செயல், நம்முடைய பொதுச் சமூக சிந்தனைகள் போலியாக கட்டமைக்கப்பட்ட, திணிக்கப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன், இவற்றையும் மீறி நம் கோவில் கோபுரங்களில் இடம் பெற்ற அது போன்ற அந்தக் காட்சிகள் நமக்கும் அனுமதிக்கப்பட்ட ஒன்று, நம் சமூகத்தின் வழக்கமாகவும் இருந்திருக்கிறது என்பதை நாமும் புரிந்து கொள்வதே இல்லை, நிர்வாண உடல் மீது நமக்கு அருவெறுப்பு ஏற்பட்டது எப்போது என்பது சரியாக விளங்கவில்லை.

*****

22/அக்/2009 வியாழன் பாரிஸ் பயணத்தின் மூன்றாம் மற்றும் நிறைவு நாள், விடுதி முன்பதிவு படி அன்று கிளம்பவேண்டும். காலை 11:15க்குள் 'செக் அவுட்' செய்யும் படி விடுதி நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது. அன்று காலை 8 மணிக்கு எழுந்து கொண்டோம். உடமைகளை எடுத்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு கிளம்ப 9 மணி ஆகியது, அன்று காலையும் விடுதியின் காலை உணவு ரொட்டித் துண்டுகளை விழுங்கிவிட்டு, வேறெங்கு சென்று வரலாம் என்று பாரிஸ் வரைபடத்தைத் தேடினால் 'இந்திய கேட்' போன்ற Arc de Triomphe எனப்படும் நுழைவாயில் இருக்கும் மிடம் வரைபடத்தில் தேர்ந்தெடுத்தோம். அந்த இடம் நிறைய சாலைகள் சந்திக்கும் இடம் என்றும் பாரிஸ் வந்த அன்றே அழைத்துப் போவதாக யோகன் அண்ணா சொல்லி இருந்தார். அன்று நேரம் போதவில்லை என்பதால் அந்த திட்டத்தை அன்று கைவிட்டுவிட்டோம்.

கிளம்பும் அன்று அங்கு சொல்ல முடிவெடுத்து சுரங்க இரயில் நிலையம் சென்று பயணச் சீட்டுகளை வாங்கினோம். சுரங்க நிலைய வழித்தடங்கள் ஓரளவுக்கு புரியும் நிலைக்கு பழகி இருந்தது. வழித்தடங்களைப் படிக்கும் போது louver museum போகும் வழியில் ஒரு நிலையத்தின் அருகில் இருப்பதைக் குறித்துக் கொண்டோம். இரு வழித்தடங்கள் மாறி மாறி Arc de Triomphe இருக்கும் Charles de Gaulle என்ற நிலையத்திற்குச் சென்றோம். நெப்போலியன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமாம். கூகுள் வரைபடப் படி 12 சாலைகள் அங்கே சந்தித்தன. கூகுள் Street View வில் அனைத்து சாலைகளிலும் நீங்கள் கணிணி வழியாக பயணிக்கலாம் ஒரு சாலையின் நடுப்பகுதிக்குச் சென்று படம் எடுத்தேன். அங்கு காலை 10 மணி ஆகி இருந்தது.

சென்ற வழியிலேயே திரும்பி louver museum இருக்கும் நிலையத்திற்கு வந்தோம். மிகப் பெரிய இரு கட்டிடங்கள், அதற்கு நடுவே கண்ணாடியால் கட்டப்பட்ட பிரமீடு போன்ற நுழைவாயிலுக்குள் நுழைந்தால் அந்த அருங்காட்சியகத்திற்குள் நுழைய பெரியவர்களுக்கு 10 Euro நுழைவுச் சீட்டும், சிறுவர்களை இலவசமாகவும் அனுமதிக்கிறார்கள்.


அங்கு செல்லும் போது மணி 10:15 இன்னும் 1 மணி நேரத்திற்குள் விடுதிக்குத் திரும்ப வேண்டிய சூழலில் வெறும் 45 நிமிடங்கள் தான் இருந்தது. மனைவியின் விருப்பப்படி நேராக மோனோலிசா ஓவியம் அமைக்கப்பெற்ற கூடத்திற்குச் செல்வதாக வழியைப் பார்த்துக் கொண்டே சென்றோம்.

போகும் வழியில் அமைந்த கூடத்தில் பிரான்ஸ்/பாரிசின் தனிப்பட்ட அடையாளமான நிர்வாண சிலைகள் பல இருந்தன. அந்த உருவங்களின் பெயர்களைக் கூட படிக்க நேரமில்லை.



கூடங்களின் உள் மேல் கூரைகள் ப்ரஞ்சுகாரர்களின் கலைத்திரனை நினைக்க வியக்க வைத்தது.




ஒரு கூடத்தின் மையத்தில் ஒருவர் அமர்ந்து ஓவியம் வரைந்து கொண்டு இருந்தார், அதை அடுத்து இருந்த இணைப்புக் கூடத்தில் மோனோலிசா ஓவியம் இருந்தது. அதன் அருகில் செல்ல முடியாமல் தடுப்புகளை அமைத்திருந்து சற்று தொலைவில் இருந்தே பார்க்க அனுமதித்து இருந்தனர்.

யாரோ விசமி தேநீரை ஊற்றிவிட்டாராம் ஒருமுறை அதிலிருந்து யாரையும் மிக அருகில் நெருங்க விடுவதில்லை என்று எங்கேயோ படித்த தகவலை மனைவி சொல்லக் கேட்டேன்.

வண்ண ஓவியங்கள் பல நிறைந்த கூடங்கள் பல இருந்தன. ஏசு கிறித்துவின் வாழ்க்கை வரலாறுகளை வண்ணத்தில் வடி(வமை)த்து வைத்திருந்தினர். அடுத்த கூடத்தில் எகிப்து தொடர்பான கண்காட்சிகள் இருந்தன.

எகிப்து பழங்குடி ஒருவரின் சிலை....காயத்ரி மந்திரம் சொல்கிறாரான்னு தெரியலை :)

விரைவாகவே அதைப் பார்த்துவிட்டு விடுதிக்குத் திரும்பினோம். விடுதிக் கட்டணம் 2 நாட்களுக்கு 225 euro.

சரியாக 11:30க்கு விடுதியைவிட்டு வெளியேறி மீண்டும் Gare Du Nord நிலையத்திற்கு வந்து, CDG விமான நிலையம் செல்லும் இரயில் புறப்படும் இடம் ஆகியவற்றை கேட்டு அறிந்து கொண்டு, அதன்படி RER வழித்தடம் B குறியீடு கொண்ட தொடர்வண்டிக்கு பயணச் சீட்டு எடுத்துவிட்டு மகளையும் மனைவியையும் அங்கே உட்கார வைத்துவிட்டு இந்திய உணவகங்கள் தேடினேன். ஒரு ஈழத்தவர் வழி சொன்னார். இந்திய கடைகள் நிறைந்த ஒரு பகுதியில் இந்திய உணவகங்கள் பல இருந்தன. இங்கு மதிய உணவிற்கு தேவையானதை வாங்கிக் கொண்டு வர மணி பகல் 1:00 மணி ஆகியது.

தொடர்வண்டி நிலையத்தினுள் பெட்டியுடன் நுழைய தனி வழி வைத்திருக்கிறார்கள், அதில் பயணச் சீட்டு போடும் போது திறக்க அடம் பிடித்தது, பின்பு நிலைய உதவியாளர் உதவி செய்தார். ஒருவழியாக 10 நிமிட காத்திருத்தலுக்கு பிறகு தொடர் வண்டி வர CDG விமான நிலையத்தில் இறங்கினோம். பயணச்சீட்டை வெளியேறும் வழியில் நுழைத்தால் கதவு திறக்கவே இல்லை, 20 நிமிடப் போராட்டம், அங்கு உதவிக்கு யாரும் இல்லை, விமானத்தைப் பிடிக்க இன்னும் ஒரு மணி நேரம் தான் இருந்தது என்கிற அழுத்தம் வேறு. பாரிசில் குறிப்பாக ஆப்ரிக்கர்கள் பயணச்சீட்டு வாங்காமல் யாராவது நுழைவாயிலில் பயணச் சீட்டு செலுத்தி நுழையும் போது அப்போது திறந்து கொள்ளும் கதவு வழியாக விரைவாக வெளி ஏறிவிடுவார்கள், அதைப் பார்த்து இருந்த நான் அப்படியே வெளி ஏறிவிட்டேன். மனைவிக்கும் மகளும் ஒரு வெள்ளைக்கார பெண்மணியும், இன்னொரு வெள்ளைக்காரரும் வெளியேற உதவி செய்தனர்.

பாரிஸ் புறநகர் வெளி



அங்கிருந்து இணைப்பு பேருந்து வழியாக 2G விமான முனையத்தை அடைந்தோம். மற்ற விமான நிலைய நடவெடிக்கைகளை முடித்துக் கொண்டு, மதிய உணவை அங்கேயே உண்டுவிட்டு விமானச் சோதனைகளைக் கடந்து ஏர்-பிரான்ஸ் விமானத்திற்குள் செல்ல, 3:15க்கு விமானம் மேலே பரந்தது. சிறிய ரக விமானம் தான், 120 இருக்கைகள் இருந்தன. பாதிக்கும் மேல் நிரம்பவில்லை.




ஒருமணி நேரம் சில நிமிடங்களில் சுமார் மாலை 4:30 மணிக்கு சுவிஸர்லாந்து ஜூரிக் அடைந்தது.

சுவிஸில் 'Interlaken' தங்குவதற்கு ஏற்ற இடம் என்று சில விடுதி முகவரிகளை பதிவர் மகேஷ் முன்பே கொடுத்திருந்தார். அதன் படி Interlaken - Backpakers Villa வில் முன்பதிவு செய்திருந்தோம். ஜூரிக் லிருந்து 'Interlaken' 100+ கிமி தொலைவு. அங்கு எப்படி செல்வது, ஸ்விசில் பார்க்கும் இடங்கள் எவை என்று தெரியாமல் ஜூரிக் வரை வந்துவிட்டோம். 'ஸ்விசில் எதோ உயரமான மலைக்குச் சென்று வருவது நன்றாக இருக்குமாம், அங்கு செல்லுங்கள்' என்று பதிவர் இராம் குறிப்பு சொல்லி இருந்தார். விமானநிலையத்திலேயே தொடர்வண்டி நிலையமும் இருந்ததால் அங்கு சென்று 'Interlaken' செல்ல பயணச் சீட்டு கேட்கும் போது 'உயரமான மலை' பற்றிக் கேட்டோம். 'அப்படி என்றால் டூரிஸ்ட் நிறுவனத்தை அனுகுங்கள்' என்று அறிவுறுத்தினார்கள். அதுவும் அருகிலேயே இருந்தது. அவர்களிடம் விவரம் கேட்க 'ஸ்விஸ் பாஸ்' எனப்படும் மூன்று நாட்களுக்கான போக்குவரத்து அடையாள அட்டையுடன் மலைக்குச் சென்றுவரும் இரயில் கட்டணமாக நபர் ஒன்றுக்கு (99 CF$ for Half price Pass + மூன்று நாள் பயணத்துக்கான Train Ticket 110 CF$) மொத்தமாக ஒருவருக்கு 210 ஸ்விஸ் ப்ராங் பெற்றுக் கொண்டு, வழிகள் குறிப்பு மற்றும் தொடர்வண்டி பயண அட்டவணைகளைக் கொடுத்தார்கள். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர்களுடன் பயணத்தால் இலவசமாம்.

அவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டோம், இரயில் நேரடியாக 'Interlaken' செல்லாது.

இடையில் 'Bern' என்ற நகரத்தில் வழித்தடம் மாறி வேறொரு தொடர்வண்டியில் பயணித்தால் தான் 'Interlaken' செல்ல முடியும், அப்படி மாறி மாறி பயணம் செய்து 'Interlaken ost' என்னும் 'Interlaken' கிழக்கு நிலையத்தை அடையும் போது இரவு 8 மணியை நெருங்கி இருந்தது. இங்கும் லேசான மழைத்தூரல்... அங்கே உள்ள நகர வரைபடத்தைப் பார்த்து தங்கும் விடுதியின் வழிகளைக் கண்டுபிடித்து, அங்கும் கடுங்குளிர் ஆனால் ஏற்கனவே குளிர் பழகி இருந்ததால் தெரியவில்லை. பெட்டிகளை இழுத்தபடி விடுதிக்கு சுமார் 1 கிமி தொலைவுக்கு நடந்தே அடைந்தோம். அங்கு மற்ற நடைமுறைகளை முடித்துவிட்டு விடுதி அறைக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு, அது என்ன உயரமான மலை ? என்கிற விவரங்களைப் படிக்கும் போது நாளை செல்லப் போகும் இடம் Jungfraujoch - Top of the Europe என்கிற விவரம் தெரிந்தது.

இந்த இடுகையில் எழுதியது அனைத்தும் சென்ற வாரத்தில் இதே வியாழக்கிழமை முழுவதுமாக பாரிசிலும், ஸ்விசிலும் நடந்த சுற்றுப் பயண நிகழ்வின் தொகுப்பு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்