பின்பற்றுபவர்கள்

3 டிசம்பர், 2010

ரஜினி அரசியலில் இறங்க இதுவே சரியான நேரம் !

தற்போதைய தமிழக அரசியல் நிலவரத்தை ஸ்பெக்டரம் விவாகாரம் முன், ஸ்பெக்டர்ம் விவகாரத்திற்கு பின் என்று பார்ப்பது பொருத்தமாக இருக்கும். தமிழகத்தில் எப்போதாவது ஏற்படும் அரசியல் வெற்றிடம் இந்த முறை பெரும்திடல் அளவுக்கு விரிந்து கிடக்கிறது. வெற்றிடத்திற்காக காத்திருப்போர் நன்கு பயன்படுத்திக் கொள்ள ஏற்ற நேரம். ஸ்பெக்டர்ம் விவகாரத்தில் மன்மோகன் சிங்கின் அரசிற்கு தொடர்பு இல்லை என்று கொள்வதற்கு ஒன்றும் இல்லை. இந்தியாவில் அரசியல் தொடர்பு இல்லாதா பெரிய நிறுவனங்களே இல்லை என்னும் போது அவர்களுக்கு அரசுகளின் ஒப்பந்தங்களின் (டெண்டர்களினால்) கிடைக்கும் லாபத்தை எந்த ஒரு அரசியல் கட்சியும் கணக்கு போட்டே கமிசன் பெறுகிறார்கள். இந்திய அரசியல் கட்சிகள் அதுவும் ஆளும் கட்சி தகுதி பெற்ற எந்த ஒரு அரசியல் கட்சியும் தொண்டர்களின் பணத்தையோ தலைவர்களின் கைகாசையோ, கட்சி நிதியையோ தேர்தலுக்கு பயன்படுத்துவதில்லை. அனைத்தும் நிறுவன முதலாளிகளின் கைவண்ணத்தால் நடக்கிறது. இந்திய அமைச்சர்களாக யார் யார் வரவேண்டும் என்பதை பொதுமக்கள், முதலமைச்சர், பிரதமர் முடிவு செய்வதைவிட நிறுவன முதலாளிகளே முடிவு செய்கிறார்கள் என்பதை நீரா ராடியா - ரத்தன் டாட்டா பேர உரையாடல்களில் இருந்து அம்பலமாகி உள்ளது.

ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தனியாருக்கு குறைத்து தாரை வார்த்து கொடுத்ததில் திமுக அமைச்சருக்கு மட்டுமே பங்கு இருக்கிறது என்று நம்புவதற்கு இல்லை. இந்திய அளவில் ஆட்சி நடத்தும் மன்மோகன் அரசிற்கு ராசாவின் செயல்பாடுகள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, அப்படி ஒப்புக் கொண்டால் பிரதமர் பதவிக்கு தகுதி இல்லை என்றே பொருள். செயல்பாடுகள் தெரிந்து இருந்தால் முறைகேடுகளில் பங்கு என்று தெரிந்துவிடும் சிக்கலில் மத்திய அரசு தவிக்கிறது. கடந்த 14 நாட்களாக பாராளுமன்றம் முடக்கமே இவற்றைச் சொல்கிறது. மடியில் கனம் இல்லை என்றால் கூட்டுக் குழு விசாரணைக்கு ஒப்புக் கொள்ள வேண்டியது தானே என்று பல்வேறு தரப்பினரும் கேட்கின்றனர். இந்த சூழலில் தன்னை கை தூய்மையாக காட்டிக் கொள்ள காங்கிரசுக்கு திமுகவை கழட்டி விடுவதைத் தவிர்த்து வேறு வழி இல்லை. ஜெண்டில் மேன் அக்ரிமெண்ட் போல் போட்டுக் கொடுத்துக் கொள்ளாமல் அவரவர் வழியில் செல்லலாம் என்றே விலகிக் கொள்வார்கள் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. இருந்தாலும் நீதிமன்றமும், எதிர்கட்சிகளும் இதை அப்படியே விட்டுவிடும் என்று சொல்வதற்கில்லை. திமுகவை காங்கிரஸ் கழட்டிவிடும் சூழலில் காங்கிரஸ் மூன்றாவது அணியாக களம் இறங்கும் வாய்பிருக்கிறது. விஜயகாந்த், பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்று முயற்சிக்கக் கூடும் என்றே கருதுகிறேன். ஏனெனில் சோனியா ஜெ வுடன் கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளமாட்டார். மூன்று அணியாக தமிழக தேர்தல் களம் இருந்தால் மீண்டும் திமுகவிற்கு வாய்ப்பு கிடைக்கும், அதை காங், ஜெ தொடர விடுவும் மாட்டார்கள். இவை ஊகம் தான். ஆனால்...

*****

இன்றைய தேதியில் தமிழகத்தில் படித்த வாக்காளர்களுக்கும், அரசியல் வெறுப்புணர்வாளர்களுக்கும் ஜெ மற்றும் கருணாநிதியே மீண்டும் மீண்டும் தமிழகத்தை பீடித்திருப்பதில் விருப்பமில்லை. கருணாநிதியின் இலவச டிவி ஓரளவு பயனளித்திருக்கிறது, கிரமாத்தினர் கூட ஸ்பெக்டரம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள், அரசியல் மாற்றம் பற்றி கிராமத்தினர் விவாதிக்கின்றனர். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு இருந்த அரசியல் வெற்றிடம் தற்போதும் ஏற்பட்டுள்ளது, அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியவர் குறிப்பாக சூப்பர் ஸ்டார் பயன்படுத்திக் கொண்டால் தமிழக அரசியல் களம் முற்றிலுமாக மாறும், எனக்கு ஜெ, மற்றும் கருணாநிதி மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. அவர்கள் எந்த அளவுக்கு தமிழர் நலன் சார்ந்து செயல்படுகிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பேன். என்போன்றோர் பலரின் நிலைப்பாடும் இதுவே. ஈழத்தமிழர் நலனை, இராமேஸ்வரம் மீனவர் நலனை புறக்கணித்த, புறக்கணிக்கும் காங்கிரசுடன் கையை விடாது பற்றும் இவர்களையே தொடர்ந்து முதல்வராக வைத்துக் கொள்ள தமிழனுக்கு தலையெழுத்தா என்ன ? அதற்கு பதிலாக இராஜபக்சேவை உதைக்கச் சொல்லி வெளிப்படையாக பேசிய ரஜினி காந்த் அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும் தமிழர்கள் எதிர்பார்க்கும் மாற்று அரசியல்வாதிக்கு தகுதியானவராகவே தெரிகிறார். மாறன் சகோதர்களுக்கு இருக்கும் மீடியா பலம் திமுக தலைமையின் மீது இருக்கும் கசப்புணர்வு இவை அவர்களின் எந்திரன் ரஜினி பக்கம் சாதகமாக, பிரச்சாரமாக திருப்பும் வாய்ப்பும் இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் இந்த சூழலில் அரசியலுக்கு வரவேண்டும், இதைவிட்டால் வாய்புகள் சிறப்பாக அமையும் வேளைகள் அமைந்தாலும், அவரது ஏறும் வயதிற்கு சரிவருமா என்பது தெரியவில்லை.

30 நவம்பர், 2010

சென்னை அருகே ஒரு போலி சுங்கச் சாவடி !

மகளின் பள்ளி விடுமுறையை அடுத்து மகனையும் மகளையும் தமிழகத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டமாக ஒருவார காலம் சென்று வந்தேன். மழைகாலம், எல்லோரையும் பார்த்துவருவது இயலாத செயல், ஒருவார காலமே இடைவெளி என்பதால் நண்பர்களிடம் சொல்லிக் கொள்ளவில்லை. சென்னை சென்றது ஓடபோன் இணைப்புப் பெற்று கூகுள் பஸ்ஸில் அறிவித்திருந்தேன். அதைப் பார்த்து அழைத்தவர்கள் கேபிள், அப்துல்லா, லயன் சுதாகர் (பித்தனின் வாக்கு), இவர்களுடன் கேஆர்பி செந்திலையும் சந்திக்க முடிந்தது.
கேஆர்பி செந்தில் மற்றும் கேபிள் சங்கர்
பித்தன் வாக்கு சுதாகர், அப்துல்லா
அப்துல்லா மற்றும் செங்கதிர்

20 ஆம் தேதி சென்னைச் சென்றேன், 22 ஆம் தேதி சென்னையில் சிறு வேலை இருந்ததால் சென்னையில் 22 ஆம் தேதி வரை தங்கினேன். சிங்கையில் இருந்து சென்னைச் செல்லும் பயணிகளில் 90 விழுக்காடு தமிழர்கள், ஆனாலும் ஏர் இந்திய விமான சேவையின் அறிவிப்புகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் வருகிறது. இறுக்கையில் டிவி வைத்திருக்கிறார்கள், மருந்துக்கு ஒரு தமிழ் படம் கூடப் போடவில்லை. இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதில் என்ன ஒரு கொல வெறியோ. இந்தி ஒழிகன்னு விமானத்தின் நடுப்பகுதிக்கு வந்து கத்தனும் போல் இருந்தது. அவனுங்களுக்கு தமிழ் தெரியாதேன்னு விட்டுவிட்டேன். வழக்கம் போல் பாட்டிகளே விமானப் பணிப் பெண்ணாக வந்தார்கள். உலகிலேயே ரிடையர்ட் வயது விமானப் பணிப் பெண்ணை ஏர் இந்தியா சேவையில் தான் பார்க்க முடியும். திரும்பும் போதும் அதே கதைதான். இந்தியாவிற்குச் செல்லும் விமானங்களில் கட்டுப்படி கட்டண (பட்ஜட்) சேவை இல்லாத பொது விமான சேவையில் மிகவும் மட்டமான சேவைக்கு பதக்கம் கொடுத்தால் ஏர் இந்தியாவுக்குக் கொடுக்க நான் வாக்களிப்பேன். விமானங்களில் பார்க்க முடியாத தமிழ் விமான நிலையத்தில் பார்க்க முடிந்தது, அறிவிப்புகள் தமிழில் இருந்தன. சென்னை செல்லும் பிற நாடுகளின் விமானங்கள் தமிழில் அறிவிப்புகள் செய்யும் போது ஏர் இந்தியா விமானத்திற்கு மட்டும் என்ன எழவு நேர்ந்தது ?

*****

தமிழக பயணத்தின் ஊடாக பிறந்த ஊருக்குச் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு, மதுரையில் டிபிசிடி மற்றும் சீனா ஐயா அழைப்பின் பேரில் மதுரைக்குச் சென்று வந்தேன். மழை மிகுதியாக இருந்ததால் ஏற்கனவே சந்தித்தவர்கள் தவிர்த்து யாரையும் அழைத்து தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 24 ஆம் தேதி பின்னிரவில் பேருந்தில் ஏறி தஞ்சை சென்று அங்கிருந்து புதுக்கோட்டை வழி மதுரையை அடைந்தேன். காலை 6 மணி ஆகி இருந்தது. மாட்டுத் தாவணி பேருந்து நிலையை எதிரே உள்ள விடுதிகளில் ஏற்கனவே தங்கி இருந்து பட்டதால் அங்கு தங்க விருப்பம் இன்றி வேறுறொரு விடுதி முகவரியைக் கேட்டு அங்கு சென்றேன், அன்று மங்கல நாளாம் விடுதிகள் அனைத்தும் அறைகள் இல்லை என்று கை விரித்தன. அப்பறம் அங்கு டிபிசிடி வந்து வேறொரு விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கும் இல்லை, அறை இல்லை என்றவரிடம் அண்ணனை எழுப்பிவிடுவேன் என்று டிபிசிடி மிரட்டிப் பார்த்தார். அண்ணனுக்கு அங்கு மதிப்பு இல்லை, திரும்பி எதிரே இருந்த மற்றொரு விடுதியில் இடம் இருந்தது, 300 ரூபாய் என்றார்கள், பணத்தை முன்பணமுமாகச் சேர்த்து 600 கொடுத்துவிட்டு அறைக்கு சென்றால் அரசு மருத்துவ மனையின் ஒரு அறையில் படுக்கைப் போட்டது போல் இருந்தது, பினாயல் வாடை போதாக் குறைக்கு பச்சை நிறத்தில் படுக்கை. எந்த வசதியும் இல்லை, 300க்கு இவ்வளவு தான், ஆனாலும் அறை கிடைக்காத சூழலில் ? அங்கே விட்டுச் சென்ற டிபிசிடி 10 நிமிடத்தில் அழைத்தார். அண்ணே இங்கு சாரதா இராஜனில் டிலக்ஸ் ரூம் 2,500 டபுள் ரூம் 1,700 என்றார். 1,700 க்கு உள்ளதை பேசி முடித்துவிடு என்றேன், கீழே வந்து அறையைக் காலி செய்வதாகச் சொல்ல, 300ம் அம்பேல்.
சீனா ஐயா
ஜாலி ஜம்பர்
தருமி ஐயா
டிபிசிடி
கோவியார் என்கிற நான்

சாரதா இராஜனில் அறையை எடுத்துவிட்டு சீனா மற்றும் தருமி ஐயாவை அழைத்து வருகையைச் சொன்னேன். 30 நிமிடத்தில் காலை 9.30 மணி அளவில் சீனா ஐயா வந்தார். அவருடன் காலை உணவு எடுத்துவிட்டு பேசிக் கொண்டு இருந்தோம், பிறகு தருமி ஐயா வந்தார், மதிய உணவு நேரம் ஆகி இருந்தது, அருகில் இருந்த மீனாட்சி பவனில் உணவு அருந்தி சிறிது ஓய்வு எடுத்துவிட்டு மாலை 3:30 மணிக்கு தருமி ஐயா விடைபெற்றார், பிறகு வீட்டுக்கு உணவு அருந்த சென்ற சீனா ஐயா குட்டித் தூக்கம் போட்டுவிட்டு மாலை 5 மணிக்கு வந்தார், பிறகு ஜாலி ஜம்பர் வந்தார், பேசினோம்... பேசினோம் மாலை 6 ஆகி இருந்தது, பிறகு டிபிசிடி திரும்பவும் வந்து மூவருடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு நேரம் ஆகவே மாலை 7 மணிக்கு அறையை காலி செய்து அனைவரிடம் விடை பெற்று பிறந்த ஊருக்குத் திரும்பினேன் வந்து சேரும் போது இரவு 3 மணி ஆகி இருந்தது. மதுரையில் பிற பதிவர்களையும் சந்திக்க ஆவல் இருந்தாலும், அன்று வியாழன் வேலை நாள், நல்ல மழை என்பதால் அழைத்த நண்பர்களை மட்டும் பார்த்துத் திரும்பினேன்.

*********

போலி சுங்கச் சாவடி (Poli-Toll)


தமிழகத்தில் சாலை வசதிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளது, 120 கிமீ விரைவில் வாகனங்கள் பயணித்தன. இது போன்ற விரைவு சாலைகளை வெளிநாடுகளில் மட்டுமே முன்பு பார்க்க முடியும்,
வாஜ்பாய் அரசு துவங்கிய சாலை நல்ல திட்டம், செயல்படுத்திய அரசுகளை பாராட்டவேண்டும். ஆனாலும் அரசு ஆதரவுகளோடு விரைவு சாலைகளில் தில்லுமுல்லு நடக்கின்றன, புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தேன், நண்பருடைய கார் தான். மூன்று நண்பர்களாக பாண்டியில் இருந்து சென்னைக்கு பயணித்தோம், முன்னதாக இருவர் ஏற்கனவே சென்னையில் இருந்து புதுவைக்கு அதே காரில் வந்திருந்தனர், திரும்பும் போது என்னையும் அழைத்துச் சென்றனர். திண்டிவனத்திற்கும் மதுராந்தகத்திற்கு இடையே ஒரு டோல் கேட். நண்பர் விவரம் அறிந்தவர் என்பதால் அந்த டோலில் நிற்காமல் போனால் ஒண்ணும் கண்டு கொள்ள மாட்டார்கள், காரணம் ஒரு எம் எல் ஏ தான் தன்னுடைய ஆட்களைப் போட்டு டோல் நடத்திவருகிறார், அந்த இடத்தில் முன்பு டோல் இருந்தது பிறகு வேறொரு இடத்தில் செங்கல்பட்டு தாண்டி சென்னையில் நுழையும் முன்பாக மாற்றிக் கொண்டு சென்றுவிட்டார்கள், ஆளும் கட்சியின் எம் எல் ஏ நேரடியாக இந்த டோலை நடத்துவதால் அரசுகளின் ஆதரவோடு பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றார். திண்டிவனம் மார்க்கமாக ஒரு நாளைக்கு சென்னைக்குச் செல்லும் தனியார் வாகனங்கள் குறைந்தது 10,000 என்றால் டோல் கட்டணம் 20 வைத்துக் கொண்டாலும் நாள் ஒன்றுக்கு 2 லட்ச ரூபாய் கிடைக்கும், 10 பேருக்கு யூனிபார்ம் போட்டு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு மாத வருமானம் 60 லட்சம். 10 பேருக்கு நபர் ஒன்றுக்கு 5 ஆயிரம் சம்பளம் கொடுத்தாலும் மீதம் 59+ லட்சம் பகல் கொள்ளையாக நடக்கிறது. நண்பர் காவல் துறையில் இருந்ததால் அவருக்கு இது போலி டோல் என்பது தெரியும், அவருக்கு மட்டுமல்ல, அந்த வழியாகச் செல்லும் அரசு பேருந்துகளுக்கும், நாள் தோறும் சென்று வருபவர்களுக்கும் தெரியும், அவர்களும் இந்த ஏமாற்றுக் கூத்து தெரிவதால் சுங்கம் செலுத்துவதில்லை. நாங்கள் காரை அங்கு நிறுத்தவும் இல்லை, அவர்களும் எங்களை துறத்திப் பிடிக்கவும் இல்லை.

*****

தமிழகம் எங்கும் நல்ல மழை பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுராந்தகம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது.

(எனது நண்பர்கள் இராம் என்கிற இராமநாதன் மற்றும் ஜெ.கண்ணன்)

சென்னையில் முதன்மையான சாலைகள் தவிர்த்து தெருக்களில் குண்டும் குழியும், சேறுமாக நிற்கிறது. சிங்காரச் சென்னை மழைகாலத்தில் அசிக்காரச் சென்னையாக நிற்கிறது. முழுவதும் சுரங்க இரயில் பாதைகளைப் போடலாம், மெட்ரோ ரயில் திட்டம் அவ்வளவாக பயனளிக்குமா என்று தெரியவில்லை. சென்னை மக்கள் தொகைக்கு மெட்ரோ இரயிலெல்லாம் போதாது. வெளிநாடுகளில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டிய வசதிகள் என்பதை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள். இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தேவைப்படும் வசதியைத்தான் ஏற்படுத்தித் தருகிறார்கள் இரண்டாம் வரிசை அலைக்கற்றை ஊழல் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியாம். இதில் எத்தனையோ நல்ல திட்டங்களைப் போட்டிருக்கலாம், கிடைக்கும் சில ஆயிரம் கோடி கையூட்டுகளுக்காக அரசு வருமானம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அம்பேல்.


***

நெருங்கிய பதிவர் நண்பர்களின் அலைபேசி எண்கள் கைவசம் இருந்தும் தொடர்பு கொள்ள இயலவில்லை. சென்று பார்க்க இயலாத கடுமழைச் சூழலில் அழைத்துப் பேசி பிறகு பார்க்காமல் திரும்பவும் மனதில்லை என்பதால் தவிர்த்தேன். மன்னிக்கவும்.

16 நவம்பர், 2010

மதச்சார்பின்மையும் மண்ணாங்கட்டியும் !

நேற்று ஒரு இடுகையைப் படித்ததும் பெருவாரியான இந்திய மதச்சார்பின்மைக்கு வேட்டுவைக்கும் திரியாக இருந்தது. மதச்சார்பின்மை என்பது பல்வேறு மத நம்பிக்கையினர் வாழும் நாட்டில் மிக மிகத் தேவையானது. மதச்சார்பின்மை என்பது சகிப்புத்தன்மை அல்லது புரிந்துணர்வு. மதத்தினரிடையே சகிப்புத் தன்மை குறைவு என்பதால் புரிந்துணர்வு என்பதே பொருத்தம், அதாவது நீ உன்னுடையதை கழுவிக் கொள், நான் என்னுடையதைக் கழுவிக் கொள்கிறேன் யாருக்கும் புறத் தொல்லைகள் இல்லை, மாறாக நான் மட்டும் தான் கழுவவில்லை என்று சுட்டிக் காட்டாதே என்பதே மதங்களுக்கிடையேயான புரிந்துணர்வு. மற்றபடி அவங்க மதம் சார்ந்த விழாவுக்கு இவங்க வருகிறார்களா ? புறக்கணிக்கிறார்களா போன்றவை அனைத்தும் மத நல்லிணக்கம் என்பவையாக சொல்லப்படுகிறது. தற்போதைக்கு மதங்களுக்கிடையே முற்றிலும் நல்லிணகம் என்பதே கிடையாது, அவ்வாறு இணங்குபவர்கள் மதங்களை மறுக்கும் நாத்திகர்கள் மட்டுமே, மத நல்லிணக்கவாதிகள் என்று நாத்திகர்களைச் சொல்லலாம் அவர்களுக்கு எல்லா மதமும் ஒண்ணு தான். சகிப்புத்தன்மையே இல்லாத மதவாதிகளிடம் நல்லிணக்கம் எதிர்பார்க்க முடியுமா ? எனவே தற்போதைய சூழலில் பல்வேறு மதத்தினர் இருக்கும் நாட்டில் இருப்பவை வெறும் புரிந்துணர்வுகள் மட்டுமே, அதற்கும் வேட்டுவைக்க அவ்வப்போது இந்தியா இந்து நாடு, இந்து மதம் தமிழர்களின் தாய் (தந்தை மதம் என்ன ?) போன்ற மதவாத முன்னெடுப்புகள் நூற்றாண்டுகளாக நடந்தேறிவருகிறது.

இன்றைய வாழ்வியல் மற்றும் சமூக அமைப்புகள், அரசுகள் பெருவாரியான நடைமுறைகள் (சிஸ்டம்) ஐரோப்பிய வழிகாட்டலின் வழியாக நடந்தேறிவருகிறது, உதாரணத்திற்குச் சொல்லப் போனால் நாட்காட்டி இவை உலகினருக்கு பொதுவானது, அது போன்றே நேரம் இவையும் பொது, இவை கிரிக்கேரியன் முறையைப் பின்பற்றி ஆங்கிலத்தில் உள்வாங்கி அதையே உலகினருக்கு பொதுவானதாகப் பயன்படுத்திவருகிறோம். குறிப்பாக வெள்ளைக்காரன் உடை. இதையெலலாம் வைத்து உலக நாடுகள் அனைத்தும் கிறித்துவத்திற்கு மாறிவிட்டன என்று சொல்ல முடியுமா ? அல்லது உலகமே ஒரு பெரிய கிறித்துவ நாடு என்று சொல்லிவிட முடியுமா ? இந்தப் பதிவைப் படித்ததும் உண்மையிலேயே வெறுப்பே மிஞ்சியது, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருகிறதாம், அல்லா கைகாட்டியுள்ளான், நாம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்வோம் இதுவே சரியான சமயம் என்பதாக இந்தியா இஸ்லாமிய நாடு - ஏன் என்பதற்கான காரணங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

என்ன கொடுமைசார், இந்துக்களுடன் சேர்ந்துவாழ எங்களுக்கு விருப்பம் இல்லை, ஒத்துவராது நாங்கள் செல்கிறோம் என்று தானே பாகிஸ்தான், பங்களதேஷாக பிரிந்து சென்றார்கள். பிரிந்தவர்களின் நிலையோ படு மோசம், இதில் பங்களாதேசாவது பரவாயில்லை பாகிஸ்தான் பண மதிப்பு இந்திய நாணய மதிப்பைவிட மிகக் குறைவு. மொத்த நாடும் சர்வாதிகாரிகள் கையில் மாறி மாறி சிக்கி அந்த நாட்டை வறுமை கோட்டிற்கு கீழே வைத்திருக்கிறது, மேலும் அரபு நாடுகளில் பணிபுரிந்தால் மட்டுமே பாகிஸ்தானில் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்கிற நிலை, இது தான் இந்தியா பிரிவினையால் முழுக்க இஸ்லாமிய நாடாக மாறிய பாகிஸ்தான் பெற்ற பலன். பங்களாதேஷ் நிலையும் அதே என்றாலும் பொருளாதார வாழ்வியலில் பாகிஸ்தான் மக்களைவிட இவர்கள் பரவாயில்லை காரணம் இராணுவத்திற்கு பாகிஸ்தான் அளவுக்கு செலவு செய்வதில்லை. பாகிஸ்தானோ, பங்களாதேஷோ இஸ்லாமிய நாடாக மாறியதால் அங்கு தேன் மாரி பொழிகிறதா ? கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றது தொடர்பாக குற்றவாளிகளைத் தண்டிக்க அரபு நாடுகளின் சட்டங்களை பின்பற்ற வேண்டும் பொதுமக்கள் சொன்னது இவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சி முறை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான அழைப்பாக இருக்கிறதாம்.

குறிப்பிட்ட அந்த இடுகையை கூகுள் பஸ்ஸில் போட்ட போது சில நண்பர்கள் வருத்தம் தெரிவித்தார்கள், ஏன் இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கிறீர்கள், நீங்கள் விளம்பரம் கொடுப்பதால் நல்லவர்கள் கூட அதைப் படித்து கெட்டுப் போகலாம் இல்லையா ? ஞாயம் தான். தடுப்பு ஊசிப் போட்டுக் கொள்ள நோய் தாக்கி இருக்கத் தேவை இல்லை. இது போன்ற கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் இது சரிதான் என்பதாக கருத்தாக்கத்தை உருவாக்குபவர்கள் மேலும் மேலும் முயலமாட்டார்களா ?

இந்தியா இந்து நாடாக மாறுதா ? இஸ்லாமிய நாடாக மாறுதா ? என்பது பிரச்சனையில் சுடுகாடு ஆகிவிடாமல் இருந்தால் சரி. இங்கு மதவாதிகள் எவருக்கும் வெட்கமே இல்லை, இதற்கு எந்த மதத்தின்வாதிகளுக்கும் விலக்கு இல்லை. மதச்சார்பின்மைதான் இந்தியர்களின் சிறப்பு என்பதற்கு வேட்டுவைக்க எல்லா மத அமைப்புகளுமே தன்னால் ஆன கெடுதலை செய்தே வருகின்றன. பெரும்பான்மை மக்கள் தொகையை கணக்கில் கொண்டாலும் இந்தியா ஒரு இந்து நாடு அல்ல பலமாகவே முழங்கி மதச்சார்பின்மை போற்றிவரும் வேளையில் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருதாக புழகாங்கிதப்படுகிறார்கள் ? இந்துக்களிடையே மதச்சார்பின்மை பேசும் பகுத்தறிவாளர்கள் என்போல் ஆயிரம் பேர் உண்டு, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருகிறது என்று மகிழும் இவர்களை வெளிப்படையாக கண்டிக்க இஸ்லாமியர்கள் முன்வரவேண்டும்.

15 நவம்பர், 2010

தமிழக அரசியல் கலவரம் !

அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் (ஒருலட்சம் கோடியாம், ஒரு லட்சம் என்பதே இந்திய பொது மக்களுக்கு பெரிய விசயம், அதையே கொள்ளையடிக்கும் கோடிகளுக்கு முன்பாக பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது) தொடர்பில் திமுகவிற்கும், காங்கிரசிற்கும் இருக்கும் அரசியல் காதலில் கல் எரியும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் ஜெ. முதலில் லட்சம் கோடிகளுக்கான ஊழல் இதில் இந்திய ஆளும் கட்சிக்குத் தொடர்பே இருக்காது என்பதற்கு ஜெ உத்தரவாதம் கொடுக்கிறார் என்பதாக இதை எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, ஜெவின் செயல்பாடுகள் ஊழலைக் கண்டிப்பதற்காகவோ, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல, கூட்டணி பலத்துக்கு கட்சி சேர்ப்பு என்பதாகத்தான் கொள்ள முடியும். மேலும் ஜெவுக்கு ஊழல் என்றாலே என்னவென்று தெரியாதா என்று பச்சை குழந்தையிடம் கேட்டால் கூட நகைக்கும். எதிர்கட்சிகள் பெரிய விவகாரம் ஆக்கி நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை நிறுத்தும் அளவுக்குச் சென்று கொண்டிருக்கும் ஸ்பெக்டரம் இதில் காங்கிரசு கட்சிக்கு தொடர்பே இருக்காது என்றும் பங்கு சேர்ந்திருக்காது என்று நினைப்பதும் அரசியல் அறிவின்மையின் அபத்தமே, காங்கிரசு ராசாவுக்கு நெருக்கடிக் கொடுத்து பதவி விலகச் சொல்லாததற்கு அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடை பெற்றிருக்க முகாந்திரமே இல்லை என்று கொள்வதற்கு ஒன்றும் இல்லை. தற்பொழுதி உச்ச நீதிமன்றங்களே இவ்வாகரத்தில் தலையிடுவதால் அரசுகளைக் காப்பாற்றிக் கொள்ள ராசாவே முன்வந்து பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்ததாக அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

கழுதைகள் தேய்ந்து கட்டெறும்புகள் ஆகி ஒன்று சேர்ந்து சாரை சரையாகச் சென்றால் தான் சேர்ந்துவாழமுடியும் என்ற கற்பனையை இன்றைய அரசியல் கட்சிகளுக்கு பொறுத்தினால் மிகச் சரியாக இருக்கும் நடுவன் அரசு மற்றும் மாநில அரசு அமைப்பு என்பதில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதே இன்றைய அரசியல் சூழல், இதனால் தான் கூட்டணியாக தேர்தல்களை சந்தித்துவருகின்ற அரசியல் கட்சிகள். கூட்டணி பலம் அல்லது மிகப் பெரிய அனுதாப அலை இவையே வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் நிலைதான் இன்றைய தேர்தல் முடிவுகள். மத்தியில் கூட்டணி ஆட்சி தான் வழி என்றாகிவிட்டபிறகு அதில் கிடைக்கும் அமைச்சர் பதவிகளை தூண்டில் இட்டு தமிழக திராவிடக் கட்சிகளிடையே பேரம் நடத்தி தமிழக சட்டசபையில் கனிசமான இடங்களைப் பெற்றுக் கொண்டே வந்திருக்கிறது காங்கிரஸ். கூடவே காங்கிரஸ் மற்றும் பாமக, விசி ஆகிய கட்சிகள் இணையும் திராவிடக் கட்சிகள் இணைந்து தேர்ந்தலை சந்தித்தால் வெற்றி உறுதி என்பதே தமிழக அரசியலின் பார்முலா. காமராசருக்கு பிறகு காங்கிரஸ் முதல்வர் என்பது கிட்டதட்ட தமிழக அரசியலில் காணல் நீராகிவிட்ட படியால் இந்த முறை தன்னை கூட்டணியில் இணைத்துக் கொள்ள விரும்பும் கட்சிகளுக்கு பலமாகவே செக் வைக்க நினைக்கிறது காங்கிரஸ், கருணாநிதியுடன் கூட்டணி தொடர்ந்தால் 75 இடங்களுக்கு மேலும் பெற்று அதில் 90 விழுகாடு இடம் கிடைத்தால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் அவ்வளவு கிடைக்கவிட்டாலும் திமுக மைனாரிட்டி ஆட்சியாக தொடரவே காங் விரும்புகிறது. ஆலமரமாக வளர்ந்துவிட்ட வாரிசுகள், வாரிசுகளின் செல்வாக்குகளைக் காப்பாற்றிக் கொள்ள கருணாநிதி காங்கிரசின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதைத் தவிர வேறு வழியும் இல்லை.

ஜெ காங்கிரசுவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது காங்கிரசுக்கு அனுகூலம் தான், இதன் மூலம் திமுகவிற்கு நெருக்கடி கொடுத்து மிகுதியான சட்டசபை இடங்களைப் பெற முடியும். இதைத்தான் ஜெவும் எதிர்பார்க்கிறார். காங்கிரசுக்கு நிறைய இடங்களை ஒதுக்குவதன் மூலம் திமுகவினால் பாமக மற்றும் தேமுதிக கட்சிகளை இணைத்துக் கொண்டு அவர்கள் திருப்தி அடையும் அளவுக்கு திமுகவினால் இடம் கொடுக்க முடியாது. இந்த நிலையில் பாமக மற்றும் தேமுதிக கண்டிப்பாக அதிமுகவுடன் இணையவே விருப்பம் தெரிவிக்கும் அதன் மூலம் திமுக - காங் கூட்டணியை எதிர்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்பதே ஜெ-வின் கணக்கு. தனித்து போட்டியிட்டால் ஒரே ஒரு இடம் தான் கிடைக்கும் என்ற நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களை கூட்ட இந்த முறை தேமுதிக எதாவது ஒரு கூட்டணியில் இடம் பெற்றே ஆகவேண்டிய சூழல். காங்கிரஸ் - திமுக கூட்டணி மறு உறுதிப்படுத்தப்பட்டால் பாமகவும், தேமுதிகவும் அதிமுகவுடன் கைகோர்க்கும், கூடவே கம்யூனிஸ்டுகளின் ஆதரவு, சோ இராமசாமி உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்களின் மறைமுக ஆதரவு ஆகியவை ஜெவிற்கு சட்டசபை தேர்தலை சந்திக்க நம்பிக்கை ஊட்டியுள்ளது. இராஜிவ் காந்தி மறைவுக்கு பிறகு எந்த ஒரு தேர்தல் அலையும் இல்லாத நிலையில் கூட்டணி பலங்களே வெற்றி பெற்றுவருகின்றன. இலவசத் திட்டங்கள் கனிசமான வாக்கு பெற்றுத் தந்தாலும் அவற்றில் எதையும் பெறாத நடுத்தரவர்க்கத்தினர் வாக்குகளே தேர்தலில் வெற்றி தோல்விகளை முடிவு செய்வதாக உள்ளன. இந்த முறை தேர்தலில் எந்த ஒரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, குதிரை பேரங்கள் வெற்றி பெற்றால் காட்சிகள் மாறலாம், அப்படிப் பார்க்கும் போது திமுகவிற்கே பணபலம் மிகுதி. இருந்தாலும் தமிழகத்தில் எந்த அரசு அமைந்தாலும் இழுபறி அரசாகத்தான் அமையும். திமுக - காங் கூட்டணி இந்த தேர்தலுக்கும் தொடரும் என்றே நினைக்கிறேன். பதிபக்தி இல்லாதவர், அண்டனோ மொய்னோ போன்ற ஜெவின் சோனியா குறித்த தரக்குறைவான சாடல்களை, சோனியா யானை போல் எதையும் மறக்காமல் தன்னைப் போலவே பலிவாங்குபவர் என்பதை ஜெ அறிந்தவர் தான், இருந்தாலும் ஜெவின் காங்கிரசிற்கு வெளிப்படையான ஆதரவு என்பது அதைவைத்து காங்கிரஸ் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும், கொடுக்க வேண்டும் என்பதே.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்