பின்பற்றுபவர்கள்

6 அக்டோபர், 2015

மும்பையின் வியப்புகள் !

மும்பைக்கு அலுவலக பயணமாக மும்முறை கிட்ட தட்ட 60 நாட்கள் நாரிமன் பகுதியில் உள்ள ட்ரைடென்ட் விடுதியில் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தி தெரியாமல் அவமானப்பட்டேன், அசிங்கப்பட்டேன் என்று சொல்லும் திராவிட எதிர்ப்பு மற்றும் இந்தி ஆதரவு தூற்றிகள் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. 

60 நாட்கள் தங்கியதில் முதல் 15 நாட்களுக்கு வாடகை உந்துகளில் தனித்து சொல்ல நேரிடிகையில் செல்லும் இடம் குறித்தும் இறங்கும் இடம் குறித்தும் 
விளக்கிச் சொல்ல கடினமாக இருந்தது, அது நமக்கு ஆங்கிலம் தெரியாத வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஏற்படும் அனுபவம் போன்றது தான், ஆனால் அடுத்த 15 நாட்களில் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து ஓரளவு இந்தியில் தெரியும், தெரியாது, இங்கே அங்கே, அதற்கு பக்கத்தில் (ஏர் இண்டியாகா பில்டிங்கே பாஸ்) என்ற அளவுக்கு இந்தி புலமை வந்துவிட்டதால் பிறகு வாடகை உந்திகளில் எங்கும் செல்லவும் தயக்கமின்றி சென்று வந்தேன். எந்த மொழியையும் ஊட்டவேன்றுமென்ற தேவையில்லை, அந்த மொழியை மதித்து அவற்றை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலே குறிப்பிட்ட மொழி பேசும் நகரத்தில் தங்க நேறும் பொழுது 6 மாதங்களுக்குள் நன்றாகவே பேச முடியும். இந்த திறமை யற்றவர் எவ்வளவு தான் ஒரு மொழியை படிப்பின் வழி திணித்தாலும் பேச கற்றுக் கொள்ளாவே முடியாது. ஒன்றாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை ஆங்கில வழி கல்வி கற்பவர்களாலும் கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடன் சரளமாக ஆங்கிலத்தால் பேசமுடியும் ? தயக்கமின்றி பேசி பயிற்சி எடுத்தால் மட்டுமே கல்வியாக கற்ற எந்த மொழியையும் பேச முடியும், 


இந்தி கற்றுக் கொடுத்திருந்தால் நாங்கள் வடநாட்டுக்காரனிடம் அசிங்கப்பட்டிருக்கமாட்டோம் என்று மொழியியில் அறிவின்றி கூறுவோரைக் கண்டால் திராவிட இயக்கங்களைத் திட்டும் பாவம் பைத்தியம் என்றே எனக்கு நினைக்கத் தோன்றும். கொத்து வேலைக்கு வடநாட்டுக்கு செல்லும் தமிழக கூலிகள் எந்த பள்ளியில் படித்து அங்கே இந்தி பேசக் கற்றுக் கொள்கிறார்கள், பிழைக்கும் வழிக்கு அங்குள்ள மொழியின் முக்கிய தேவை என அறிந்தோர் ஆர்வத்தினால் கற்றுக்கொள்வர், 

மலேசியாவில் முடித்திருத்தும் வேலைக்கு வருபவர்கள், மூன்று மாதங்களில் மலாய் பேசுகிறார்கள், எந்த பள்ளியில் படித்து கற்றுக் கொண்டார்கள் ? 

**********

மும்பை என்றதும் இரயில் வெடிகுண்டு வெடிப்புகளும், அண்மையை ஆண்டில் நிகழ்ந்த தாஜ் ஹோட்டல் துப்பாக்கி சூடு நிகழ்வுகளும் தவிர்க்க முடியாதவை, மும்பையை பொறுத்த அளவில் இந்த நிகழ்வுகளால் இந்திய இந்து இஸ்லாமிய சமயத்தினரிடையே கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை பிரித்துள்ளதை உணர முடிகிறது, அங்குள்ள இந்துக்களிடம் தனிப்பட்ட முறையில் பேசும் பொழுது இஸ்லாமியர்கள் குறித்து அவர்களுக்கு ஒரு நல்ல எண்ணம் இருப்பதாக நினைக்கவே முடியவில்லை, ஒரு 7 விழுக்காட்டு மக்கள் அவர்களால் தான் இங்கே பிரச்சனை என்பதாக குறிப்பிடுகிறார்கள், பெருகும் பிள்ளையார் ஊர்வலங்கள் அவர்கள் சொல்வதை மெய்ப்பிப்பதாகவே காணமுடிகிறது. இந்துக்களின் பலம் என்பது இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பினால் கட்டப்பட்டுள்ளது. 


வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மாநில ரீதியான எதிர்ப்புகளை சமாளிக்க இந்துப் போர்வை அவர்களுக்கு தேவைப்படுவதால் அவர்களின் ஆதரவுகளினால் அவை அணையாத நெருப்பாக காக்கப்படுவதை யாகூப் மோனன் தூக்கில் இடப்பட்ட நிகழ்வுகளினால் உறுதி செய்யமுடியும், எந்த ஒரு ஊடகமும் யாகூப் மோமனின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்ப முன்வரவில்லை, மாறாக புறக்கணித்தன.


இவற்றை அரசியல் சமூக ரீதியில் நான் பார்த்தாலும் மும்பையின் மாறுபட்ட முகமாக வேறு சிலவும் என் கவனத்தை ஈர்த்தது, இந்திய நகரங்களில் பொதுக்கழிவறைகள் நிறைந்த நகரம், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களை காண்பது அரிது. பொதுக்கழிவறைகளில் சிறுநீர் கழிப்பதற்கு கட்டணங்கள் கிடையாது, ஒரு பொதுக்கழிவறை இருந்தால் அங்கு அருகே நடைபாதை வாசிகளின் கூடாரங்களை காணமுடியும். அவர்களுக்கு கழிப்பறை, குளியல் அறை எல்லாமே பொதுக்கழிப்பிடம் தான். 

வேறெந்த நகரங்களைவிட கொசுக்கள் மும்பையில் குறைவே, மாலை ஏழுமணிக்கு மேல் திறந்த வெளியில் நின்றாலும் கொசுத் தொல்லைகளை உணரமுடியவில்லை, அவ்வளவு பெரிய நகராட்சியில் கொசு இனப்பெருக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மும்பையின் சிறப்பு, மீட்டருக்கு மேல் பணம் கேட்கும் வாடகை உந்திகளின் நச்சுக்கள் மிகக் குறைவு.

வெறெந்த நகரங்களைவிட சிலெம் எனப்படும் சேரிப்பகுதிகள் மும்பையில் மிக மிக அதிகம், மும்பையில் மொத்த மாக 50 சேரிகளுக்கு மேல் உண்டு, சேரிகளின் பெருக்கம் கட்டுப்படுத்த முடியாத ஒன்று, காரணம் மும்பைக்கு தேவைப்படும் கூலியாட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுவதால் சேரிகளின் எண்ணிக்கையும் மிகும், மும்பையின் வீட்டுமனைகளின் விலைக்கு குறைந்த கூலி வாங்குபவர்களால் வாடகைக்கு வீட்டின் ஒரு அறைகூட எடுக்க முடியாது, கூலியாட்களை அல்லது வேலைக்கு ஆள் எடுக்கும் எந்த நிறுவனமும் தங்குமிட வசதி எதுவும் செய்து தராததால் அவர்களின் புகலிடம் சேரிதான், அதற்குள்ளும் இடம் கிடைக்காத நிலையில் நடைபாதையில் டெண்ட் அடித்து தங்கிவிடுவார்கள், குடும்பம் குடும்பமாக மும்பையின் வணிக தளமான நாரிமன் பகுதியிலும் கூடாரங்களை பார்க்க முடிகிறது, அவர்களை அப்புறப்படுத்தவும் முடியாது, அவ்வாறு செய்தால் அந்த பகுதியில் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காது.

மும்பை போன்ற மாநகரங்களில் சேரிகளும் கூடாரங்களும் தவிர்க்க முடியாதவை, என்னைக் கேட்டால் அவைகள் நகரத்தின் ஒரு அங்கம் அதற்காக முகம் சுளிக்கத் தேவை இல்லை. சேரிகளை பார்த்து முகம் சுளிப்பவர்கள் நகரங்களில் சேரிகளுக்கான தேவை ஏன் வந்ததது என்று நினைத்தால் சேரிகளில் வசிப்பவர்களின் இன்னல்களுக்காக பரிதாபப்படுவார்கள்.

மும்பை வெடிகுண்டு வெடிப்பினால் பல உயிர்கள் பலியாகி இருந்தாலும் பல கோடிகள் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் எந்த நகரத்தையும் விட பாதுகாவலர் பணிக்கு மிகுந்த அளவில் ஆட்களை வைத்திருக்கும் நகரம் மும்பை தான், எந்த ஒரு கட்டிடங்களில் பாதுகாவலர்களின் சோதனைகளை கடக்காமல் நுழைந்துவிட முடியாது, கிட்டதட்ட 25 லட்சத்திற்கும் மிகுதியானவர்கள் குறைந்த படிப்பு படித்தவர்கள் பாதுகாவலர் உடையணிந்து ஆண் பெண் இருபாலரும் பணியில் இருக்கின்றனர், எந்த ஒருநிறுவனமும் லாபத்தில் 5 - 10 விழுக்காடு பாதுகாப்புகளுக்காக செலவிடுகிறது. மும்பையில் வெடிகுண்டே வெடிக்காமல் அமைதியாக இருந்திருந்தால் படிக்காத அல்லது குறைந்த படிப்பு படித்த 25 லட்சம் பேருக்கு மிகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் என்பதை அரசாங்கமோ தனியாரோ ஏற்படுத்தி கொடுத்திருக்க முடியுமா ? 


நான் மும்பை வெடிகுண்டு நிகழ்வு ஏற்படுத்தியிருக்கும் ஆக்கப்பூர்வமான பின் விளைவுகளைப் பார்த்து உண்மையில் வியந்தேன், லாபத்தில் முழுவதையும் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் நிறுவனங்களி 5 - 10 விழுக்காட்டை பாதுகாப்புக்கு கட்டாயமாக செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, நகரத்தில் வேலை வாய்ப்பை கூட்டும் ஒரு கூறுகாக அமைந்துள்ளதை முற்போக்கான மனநிலையில் தான் கொள்ள வேண்டும். ஓரளவுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்கிறது என்பதால் அங்கு சமூகம் சார்ந்த திருட்டு குற்றங்கள் குறைவு தான்,  இரயில் பிதுங்கி பயணம் செய்தாலும் பிக்பாக்கெட் திருட்டுகள் அரிது தான், சிக்கியவன் செத்துவிடுவான் அது வேற ஆனாலும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதால் திருட்டு தொழிலில் ஈடுபடுபவர்கள் சோம்பேரிகளாகவும் உழைக்க விரும்பாதவர்களாகவும் தான் இருக்கக் கூடுமே தவிர வேலை கிடைக்காதவர்கள் என்ற வாய்ப்பு மும்பையில் இல்லை.

வெங்காயமும் உருளை கிழங்கும் உற்பத்தி நின்றால் மிகுதியாக பாதிக்கப்படுவது மும்பை வாசிகளாக இருக்கக் கூடும், அவர்களின் அன்றாட உணவுகளில் அவை இல்லாத நாட்களே இல்லை, வெறெந்த நகரங்களைவிட மும்பை பெண்கள் ஆண்கள் குறித்து அச்சப்படுவதில்லை, பொது இடங்களில் அவர்கள் புகைப்பதை பார்க்க முடிகிறது, ஆடைகளும் விரும்பிய அளவிற்கு அணிகிறார்கள், பெரிதாக யாரும் அவற்றை வெறித்துப் பார்ப்பதும் இல்லை, குடியகத்திற்கு (பப்) வருகிறார்கள், சேர்ந்தும் குடிக்கிறார்கள், ஆண் பெண் சமநிலை மும்பையில் பேணப்படுகிறது.

மும்பை அனைத்துலக விமான நிலையம்  உள்கட்டமைப்பும் சேவைகளும் சர்வதேசத் தரத்துடன் உள்ளது.


மும்பையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசிக்க நேரிடுபவர்களால் மும்பையை விட்டுச் செல்ல முடியாது, அவர்களை எல்லா விதத்திலும் மும்பை ஈர்த்துவிடும் அம்சம் மும்பையில் உண்டு. வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் தவிர்த்து மும்பையில் இயல்பு வாழ்க்கைக்கான தனிமனித பாதிப்புகள் வெறெந்த இந்திய நகரங்களைவிட குறைவே.

29 மார்ச், 2015

சிங்கப்பூர், திரு லீ குவான் யூ அவர்களின் இறுதி நிகழ்வு !

உலகத்தில் எந்த ஒரு மக்கள் தலைவருக்கும் இல்லாத நற்பெயரும் புகழும் திரு லீ குவான் யூ விற்கு மட்டும் எப்படி ? மற்றவர்களைவிட இவர் எந்தவிதத்தில் மாறுபட்டவர் ? என்று கேள்விக்கு சிங்கப்பூரின் மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கைத் தரம், தனிமனித உரிமை விடையாக கூறிவிட முடியும். எத்தனையோ உலக தலைவர்கள் தங்கள் மக்களின் விடுதலைக்காக போராடி பெற்று தந்திருக்கிறார்கள், சேகுவாரா, லெனின், மாசேதுங், மார்டின் லூதர்கிங், அண்ணல் காந்தி மற்றும் மண்டேலா போன்றோரை எடுத்துக்காட்ட முடியும், ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத தனிச் சிறப்பு திரு லீ குவான் யூவிற்கு இருக்கிறது, அவர்களெல்லாம் போராளிகள், இவர் போராளி மட்டுமின்றி பொருளாதார மேதையும் கூட.

1963-1965 காலகட்டத்தில் மலேசியாவின் மாநிலமாக இணைந்திருந்து, பின்னர் மலேசிய அரசிடம் தங்களுக்கு கூடுதல் முதன்மைத்துவம் அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டு, அவை நிராகரிக்கப்பட்டு தனித்தே இருந்து கொள்ளுங்கள் என்று 1965 ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 ஆம் நாள் தள்ளிவிடப்பட்டது தான் சிங்கப்பூர்,  அன்றைய நாளின் நினைவில் தான் ஆண்டுதோறும் சிங்கப்பூர் தன்னுடைய தேசிய நாள் என்று கொண்டாடிவருகிறது. இனி என்ன செய்யப் போகிறோம் ? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்து அதற்கு விடையாக பல திட்டங்களைக் கூறி மக்களை வழிநடத்திச் சென்றதுடன் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத் தக்கவகையிலும், ஆசியாவிலேயே மிகச் சிறந்த, பொருளாதார வளர்ச்சியில் சிறந்த நாடாக உருவாக்கிக் காட்டினார் திரு லீ குவான் யூ, அவருடைய முப்பதாண்டு காலத்திற்கும் மேலான ஆட்சியில் கல்வித்தரம், அடிப்படைவசதிகள், சொந்தவீடு, வேலைவாய்பு, வெளிநாட்டு முதலீடு, உள்நாட்டு வர்தகம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் சிங்கப்பூர் குடிமக்கள் வளர்ந்தனர், இணைப்பு மொழியாக ஆங்கிலத்தை முதல் மொழியாக்கியும், அவரவர் தத்தம் தாய்மொழியை இரண்டாம் மொழியாக கற்பித்தும், அனைத்து மக்களும் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை ஒரு 20 ஆண்டுகளுக்குள்ளேயே ஏற்படுத்தித்தந்து வழிகாட்டினார், பல இன / மத நல்லிணக்க சமூகத்தை எப்படி பேணுவது என்பதற்கு சிங்கப்பூர் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு. 

தமிழர் என்று நாம் பெருமைபடும் வகையில் உலக அரங்கில் நம்முடைய தமிழும் அதன் வளர்ச்சியும், தமிழர்களும் போற்றப்படும் ஒரே நாடு சிங்கப்பூர் மட்டுமே, மாநிலத்தைத் தாண்டினால் இந்தியாவில் கூட தமிழுக்கான அங்கீகாரம் சொற்பமே, அந்தவகையில் திரு லீ குவான் யூவை தலைவராக பெற்றதற்கு சிங்கப்பூர் தமிழர்கள் பெருமைப்படவும், நன்றிக்கடன்படவும் கடமைபட்டவர்கள்.

உலக அரங்கில் மக்களை ஒன்றுபடுத்திய தலைவர்கள் எல்லோரும் செய்யாமுடியமல் விட்டதை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டு விடைபெற்றுக் கொண்டுள்ளார் திரு லீ, பெண்களுக்கான சம உரிமையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்களைத் தாண்டி, நமது பண்பாடு, கடமை மற்றும் பொறுப்பு என்ற அள்வில் சிங்கப்பூரார்களை உணரவைத்து அதை நடைமுறைக்கும் கொண்டுவந்துள்ளார், வெறெந்த நாட்டைவிட சிங்கப்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழுபாதுகாப்பு உண்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம உரிமை உண்டு. 1900 க்கு பிறகு விடுதலை பெற்ற நாடுகளை ஒப்பிட சிங்கப்பூரின் பொருளாதர வளர்ச்சியும் மக்கள் வாழ்வியல் தர மேம்பாடும் திரு லீ யின் வழிகாட்டுதலில் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளனர், விடுதலை அடைந்த ஏனைய நாடுகளில் நிலைமை இவ்வாறு இல்லை, திரு லீ அவர்களின் தொலை நோக்கு பார்வையும், அவரது நீண்ட வாழ்வும் சிங்கப்பூர் மக்களுக்கு கொடையாக அமைந்ததும் சிங்கப்பூர் பல்வேறு வளர்ச்சிகளில் மேம்பட முடிந்தது. சிங்கப்பூரின் கடவு சீட்டு (பாஸ்போர்ட்) ஐரோப்பிய நாடுகளின் கடவு சீட்டுகளைப் போன்று மதிப்பு வாய்ந்தது, குடிநுழைவு அனுமதியின்றி 160+ நாடுகளுக்கு சென்றுவர முடியும், 

சிங்கப்பூரின் சட்டதிட்டங்கள் கடுமை என்றும் திரு லீ கண்டிப்பானவர் முதலாளிகளுக்கு ஆதரவானவர் என்றெல்லாம் உலக அரங்கில் திரு லீ க்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பலர் முன்வைத்தாலும் சிங்கப்பூரர்கள் அதைப் புறந்தள்ளுவார்க்கள், காரணம் மக்கள் தலைவர்கள் எந்த கொள்கையை (இசம்) பின்பற்றினாலும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதுதான் அதன் நோக்கமாக இருக்கவேண்டும் என்பதற்கு உலக அரங்கில் சிங்கப்பூர் நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பதை சிங்கப்பூர் மக்கள் உணர்ந்துள்ளனர்.

*****

திரு லீயின் மறைவு பேரிழப்பு என்றாலும் 91 அகவை கடந்த அவரது உடலுக்கான ஓய்வு என்ற அளவிலேயே அவரது மறைவு பார்க்கப்படுக்கிறது, ஆகச்சிறந்த சுற்றுலா நகரம், வானூர்தி நிலையங்கள், கப்பல் கட்டுமானங்கள், உலக வங்கிகள் (பைனாஸ் செண்டர்),  மற்றும் கட்டுமானத்துறை, சிங்கப்பூருக்கு சிறந்ததொரு அடித்தளங்களை திரு லீ அமைத்துக் கொடுத்துள்ளார், ஒரு மாபெரும்  தலைவரின் மறைவும் அதன் பின்னான நிகழ்வுகளும் கூட உலக அரங்கில் வியப்பாக பார்க்கும்படி அமைந்துவிட்டது.

ஆம், திரு லீயின் மறைவு குறித்து அறிவிக்கப்பட்ட நாள் சோகமான நாள் என்பதைத் தாண்டி மக்களின் இயல்பு வாழ்க்கை நலிவடையவில்லை, பொது போக்குவரத்து நிறுத்தப்படவில்லை, பள்ளிகள், கல்லூரிகள் அலுவலகங்கள், அரசு செயல்பாடுகளுக்கு விடுமுறைவிடப்படவில்லை, கடையடைப்போ, சாலைமறியலோ, முன்னறிவிப்பற்ற பொதுமக்களுக்கு இடையூறான ஊர்வலங்கள் இல்லை.

திரு லீயின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மூன்று நாட்களில் முதல் நாள் மட்டும், இதுபோன்ற நிகழ்வுகளின் முன்னனுபவம் இல்லாததால் பொதுமக்கள் தாங்களே நீள் வரிசையை அமைத்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர், முதல் நாள் வரிசையில் ஊர்ந்து செல்லும் நேரம் 10 மணிநேரமாகவும், அடுத்தடுத்த நாட்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட ஏற்பாடுகளுடன் மக்களுக்கான தண்ணீர், குளிர்பானம், ரொட்டிகள் மற்றும் வெயிலுகான குடைகள் என அனைத்து வசதிகளையும் 24 மணிநேரமும் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்திருந்ததனர், கடந்த வியாழன் மற்றும் வெள்ளி இறுதி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் 8 மணிநேர வரிசையில் சென்று அஞ்சலி செலுத்தினர், எந்தவித விரும்பத்தகாத நிகழ்வோ, உணர்ச்சிவசப்படலோ நடக்கவில்லை, ஒருவொருக்கொருவர் தேவையான உதவிகளை செய்து கொண்டு சென்று அஞ்சலி செலுத்தினர், மாற்றுத் திறனாளிகள், முதியோர், குழந்தைகளுடன் வருவோருக்கு விரைவில் அஞ்சலி செலுத்தும் தனி வரிசை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது, நானும் வலையுலக நண்பர்கள் சிலரும், அலுவலக நண்பர் ஒருவருடன் மாலை 5 மணிக்கு வரிசையில் சேர்ந்து இரவு 12 மணிக்கு அஞ்சலி செலுத்தி வீடுதிரும்பினோம், இரவு திரும்ப பொது போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. தமிழகத்தில் பல்வேறு சிற்றூர்களில் திரு லீயின் மறைவின் இரங்களுக்காக தட்டி வைக்கப்பட்டிருந்ததை சிங்கப்பூர் மக்கள் அறிந்து தமிழ்நாட்டு தமிழர்களின் நன்றி உணர்வை வெகுவாக நெகிழ்ந்து பாராட்டினர்

(முக நூலில் இருந்து)

திரு லீயின் இறுதிப் பயண நிகழ்வான இன்று வானம் காலை முதலே அழுதது, கடந்த 10 நாட்களாக இல்லாத மழை சிங்கப்பூரில் இன்று பெய்ததும், திரு லீயின் இறுதி பயண 10 கிமி தொலைவு நெடுவிலும் மிதமான மழை இருந்து கொண்டே இருந்தது மக்களால் உணர்வுபூர்வமாகவே பார்க்கப்பட்டது, சாலைகளின் இருபுறமும் கொட்டும் மழையை பொருட்படுத்தாது பள்ளிக் குழந்தைகளுடன் நின்று கொண்டு திரு லீயின் இறுதிப் பயணத்திற்கு மரியாதை செலுத்தினர், இன்றும் கூட இறுதிப்பயண சாலைகளில் போக்குவரத்து முடங்கவில்லை ஒருபக்கம் இறுதிப்பயணம் செல்ல மறுபுறம் போக்குவரத்து சென்று கொண்டிருந்தது, ரயில்களும் ஓடின.










உலக நாடுகளின் தலைவர்களின் இறுதி மரியாதைக்காக திரு லீயின் உடல் கிட்டதட்ட 3 மணிநேரம் வைக்கப்பட்டு, அப்போது திரு லீயின் சிங்கப்பூர் வளர்ச்சி மற்றும் உலக நாடுகளுடான உறவுகள் குறித்தெல்லாம் சிங்கப்பூர் பிரதமர், ஆளுனர் மற்றும் பல்வேறு இனமேம்பாடுகளுக்கு லீ செய்த ஏற்பாடுகளைப் பற்றி அந்தந்த இன சார்ப்பில் ஒருவரும் பேசினர், அரங்கில் தமிழில் திரு லீ குறித்து கருத்தும் பகிர்ந்து கொள்ளப்பட்டது, துக்கமான ஒரு நிகழ்வு, இறுதி நிகழ்வு என்றாலும் திரு லீ குறித்து பேசியவர்களில் பிரதமர் திரு லீ சியான் லூங்க் (மறைந்த திரு லீயின் மூத்த மகன்) நகைச்சுவை தகவல்களையும் கூறி அரங்கின் இறுக்கத்தை தளர்த்தி ஒரு இயல்பான நிகழ்வாக மாற்றி இருந்ததனர். இதெல்லாம் சிங்கப்பூர் தவிர்த்து வெறெங்குமே பார்க்க முடியாத காட்சிகள். அதன் பிறகு திரு லீ யின் உடல் இல்லத்தினர் மற்றும் உறவினர்களுடன் பொது மின்மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவித்து இறுதி அஞ்சலி நிகழ்வை முடித்துக் கொண்டனர்



*****


முதல்முறை நடைபெறும் ஒரு மாபெரும் தலைவரின் இறுதி நிகழ்வு கூட சிங்கப்பூரில் அவருக்கான மரியாதையை சற்றும் குறைக்காமல் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் நடத்தப்பட்டதும் கூட திரு லீயின் வழிகாட்டுதலாகவே இருக்கக் கூடும். உலக அரங்கில் பொருளாதாரத்தில் உயர்ந்து, ஊழல் மற்றும் லஞ்சமற்ற சிங்கப்பூர் பற்றி திரு லீயின் வழிகாட்டுதல் தலைவர்களை உருவாக்கவும் தனிமனிதர்களை மேம்படுத்தவும் உதவும் என்பதை திரு லீயின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த தலைவர்கள் கண்டிப்பாக உணர்திருக்கக் கூடும்.

14 பிப்ரவரி, 2015

Onsen - ஜப்பானிய வெந்நீருற்று குளியல் !

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கன் களைவதாம் நட்பு - 

இந்த குறளுக்கு பொருள் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாத போது அம்மணத்தை மறைக்க உதவும் கை போன்றதே தக்க சமயத்தில் உதவக் கூடியது நட்பும்.  பருவ அகவையை கடந்தவர்களின் உட‌லில் பலர் முன்பு ஆடைய‌ற்ற‌ நிலை என்ப‌து ஒரு இக்க‌ட்டான சூழ‌ல், வெட்க‌த்தையும் கூச்ச‌த்தையும் ஏற்ப‌ட‌த்தும் நிலை, அப்ப‌டியான‌ நிலையை திருவள்ளுவர் மற்றும் ச‌ங்க‌ கால‌த்திலும் யாரும் விரும்பிய‌தில்லை, சபை முன்னிலையில் ஆடை அவிழ்ப‌து ஒருவ‌ரை அவ‌மான‌ப்ப‌டுத்தும் முய‌ற்சி என்றெல்லாம் ம‌காபார‌தக் க‌தைக‌ளில் ப‌திய‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள ஆடையின் தேவை குறித்த த‌னிம‌னித‌ த‌ன்மான‌ம் ப‌ற்றிய‌ குறிப்புக‌ள்.

ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்கு பெண்ணோ வெட்க்க‌ம் கொள்ள‌த் தேவை இல்லை என்ப‌து பொதுவான‌ ப‌ரிந்துரைகள் மற்றும் புரிந்துணர்வு தான், இந்தியாவிலும் த‌மிழ‌க‌த்தில் இவை ஓர‌ள‌வு ஏற்றுக் கொள்ள‌ப்ப‌ட்டாலும், ந‌ம‌து ஆடைய‌ற்ற‌ உட‌லை ஒரு சில நிமிடங்கள் ம‌ருத்துவ‌ர்க‌ள் த‌விர்த்து வேறு எவ‌ருக்கும் காட்டுவ‌து வழக்கம் இல்லை, பெண்க‌ளுக்கு ம‌க‌ப்பேற்றின் போது அந்த சூழலில் உத‌வி செய்ப‌வ‌ர்க‌ள் முன்னிலை த‌விர்த்து எந்த‌ பெண்ணும் த‌ன‌து ஆடைய‌ற்ற‌ உட‌லை தனது துணை தவிர்த்து எவ‌ருக்கும் காட்ட‌ மாட்டார்கள்.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுக் குளத்தில் குளியல் இருந்தது, இன்னும் கூட கிராமங்களில் படித்துறைகளுடன் சேர்ந்த குளத்தில் குளிக்கிறார்கள், இன்னும் குற்றலாம், மலை அருவிகள், கடற்கரை தவிர்த்து வெறெங்கும் பொதுக் குளியல்களுக்கு வாய்ப்பற்ற நிலை உள்ளது. எனக்கு தெரிந்து ஆசிய நாடுகளில் நான் பயணம் செய்தவரையில் குளியல் என்பது பொழுது போக்கு, அதற்காகவே சீனா, தைவான், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் பலவித வசதிகளுடன் கூடிய பொதுக் குளியல் அறைகள் உண்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீன தலைநகரில் Beijing Bath Houses மிகவும் புகழ்பெற்றவையாக இருந்தது, தற்பொழுது அவைகள் மூடப்பட்டு, முற்றிலும் புதிய வடிவமாக SPA எனப்படும் பல்வேறு குளியல் வசதிகளுடன், சூட்டு அறை (Sauna) மற்றும் நீராவி அறைகள் (Steam Room) கூடிய பொழுது போக்கு இடங்கள் உண்டு. ஐரோப்பிய நாடுகளில் Russian Banya மற்றும் Turky Hammam புகழ்பெற்றவை. SPA இதைத் தமிழில் பொருளுடன் 'புத்துணர்வு கூடம்' என்று வேண்டுமானால் சொல்லலாம், 
 (Pic Courtesy : China Daily)
வார இறுதிகளில் நண்பர்களுடன் அல்லது இல்லத்தினருடன் சென்று ஒரு மூன்று மணி நேரம் செலவு செய்துவிட்டு உடலை மனதையும் புத்துணர்வு செய்து திரும்பும் ஒரு பொழுது போக்கிடமாக அவற்றை அமைத்துள்ளனர். முழுவதுமாக உள்ளுக்குள் (Indoor) சுடுநீர் த‌ண்ணீர் குள‌ங்க‌ள், குளிர் நீர் குள‌ங்க‌ள் ம‌ற்றும் சுடுக‌ல் சூட்டு அறை (Sauna) உட‌ல் விய‌ர்க்க‌, நீராவி அறை இவ‌ற்றை முடித்துவிட்டு, ஓய்வெடுக்க‌ தொலைகாட்சி அறை, அங்கு அருகே பாண‌ங்க‌ள் சிற்றுண்டிக‌ள், மென்மது (Beer) எல்லாம் கிடைக்க‌க் கூடிய‌ Bar வ‌ச‌தி ம‌ற்றும் விரும்பிய‌வ‌ர்க‌ளுக்கு க‌ட்ட‌ண‌ம் செலுத்தினால் தசைப்பிடித்துவிடுவ‌து (Massage) ஆகிய‌ வ‌ச‌திக‌ள் இருக்கும். சிங்க‌ப்பூர் ம‌லேசிய‌ நாடுக‌ளில் பெண்க‌ளுக்கான‌ SPA குறைவு, ஆனால் ஆண்க‌ளுக்கு நிறைய‌வே உள்ள‌து. இவ‌ற்றிற்கும் சீனா, தைவான்,கொரியா ம‌ற்றும் ஜ‌ப்பான் SPA க்குளுக்கும் பெரிய‌ வேறுபாடு அங்கு ஆடை தான். சிங்க‌ப்பூர் ம‌லேசிய ஆண்களுக்கான SPA க்க‌ளில் சிறிய‌ வகை நீச்சல் கால்ச‌ட்டைக‌ அணிந்திருப்பார்க‌ள். ம‌ற்ற‌ ஆசிய‌ நாடுக‌ளில் ஏதும‌ற்ற‌ (Nude/Naked) ஏகாந்த‌ ஜென் (ஜைன‌) நிலை தான்.

40ஐ கடந்த எனது அகவை மற்றும் துய்ப்புகளை கருத்தில் கொண்டு கீழ்கண்டவற்றை எழுதுவதற்கு எனக்கு சற்றும் கூச்சம் எதுவுமில்லை.

******

ஏகாந்த நிலையை துய்க்கும் வாய்ப்பு முதன் முதலில் மூன்றாண்டுக்கு (2012) முந்தைய சீனப் பயணத்தில் தான் கிட்டியது, தங்கியிருந்த 4 நட்சத்திர விடுதியில் இருந்தது SPA, அங்குள்ளே எப்படி இருக்கும் என்று ஆர்வத்தில் சென்றேன், முதலில் உடமைகளை பூட்டி வைக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு சென்றதும் உடமைகளை வைத்துவிட்டு, உடைகளை களையச் சொன்னார்கள், கழட்டிவிட்டு உள் ஆடையில் நின்றேன், அதையும் கழட்டுமாறு அங்கு உதவி செய்யும் சீனர் சொன்னதும் கண்கள் சுறுக்கி இமைத்து 'திக்' ஒரு கூச்சம், திரும்பிவிடலாமா என்கிற எண்ணம், பிறகு இங்கு தான் நமக்கு தெரிந்தவரோ, இந்தியரோ தமிழரோ இல்லையே என்று தேற்றிக் கொண்டு முற்றிலும் களைந்தவுடன் உள்ளுக்குள் கூட்டிச் சென்றார். மஞ்சள் நிற ஆண் குழந்தைகள் அப்படியே 5 - 6 அடிக்கு வளர்ந்தது போல் பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வயது சீன‌ ஆண்கள் ஜென் நிலையில் குளித்துக் கொண்டும், படுத்து ஓய்வெடுத்துக் கொண்டும் இருந்தனர், அங்கு கருநிறத்தில் நுழைந்த என்னை ஒரு முறை வியப்பாக பார்த்ததுடன் சரி, பின்னர் பார்வையை மீட்டுக் கொண்டனர், ஒட்டுத் துணி கூட இல்லாத நிலையில், அருகே ஷவரில் நின்று குளித்துவிட்டு விரைவாக சென்று  சுடுநீர் உள் நீச்சல் குளத்தில் (Indoor Hot spring Pool) தண்ணீரில் இறங்கி, தண்ணீரையே ஆடை ஆக்கிய ஒரு சில நிமிடங்கள் நானும் கூச்சம் மறக்க, மனதிற்கு இதமான சுதந்திர உணர்வுடன் உற்சாகம் தொற்றிக் கொள்ள, கூட்டில் இருந்து விடுதலை அடைந்த ஒரு பறவையின் மன நிலைக்கு மாறி அதனுள் அங்கும் மிங்கும் நீந்தி மகிழ்ந்தேன். அந்த‌ சூழ‌ல் மறக்க இயலாததாகவும், பின்னர் நினைக்க அது போன்ற வாய்ப்பு இனி எப்போதோ என்ற ஏக்கமாகவும் இருந்தது.


*****

சென்ற‌ வார‌ம் ஜ‌ப்பான் செல்லும் வாய்ப்பு, மூன்று மாத‌ம் முன்பு திட்ட‌மிட்ட‌ ஒன்று தான், அங்கு வேறு சில‌ வேலைக‌ள் இருந்தாலும், ஏற்க‌ன‌வே ஜ‌ப்பான் SPAக்கள் புகழ்பெற்றவை என்று அறிந்திருந்ததால், அங்கு சென்று வரவிரும்பி சிறந்த SPAக்களில் ஒன்றான SPA World அதன் மிகச் சிறந்த வசதிகளுக்காக தேர்ந்தெடுத்து சென்றேன்.

ஒரு நாள் முழுவதுமே அங்கிருக்க கட்டணம் குறைவு தான் இந்திய ரூபாய்க்கு 1200 என்ற அளவில் தான், உள்ளே நுழைந்தது, ஷூவை கழட்டி பூட்டி வைத்துவிட்டால், எண்ணுடன் கூடிய கையில் அணிந்து கொள்ளும் Strap Tag உடன் ஆண்களுக்கான 4 ஆம் தளத்திற்கு செல்ல வேண்டும். பெண்களுக்கு 6 ஆம் தளம் (Asian Zone), ஒவ்வொரு மாதமும் ஆண்கள் தளமும் பெண்கள் தளமும் மாறும், நான் சென்ற பிப்ரவரியின் பொழுது 4 ஆம் தளம் ஐரோப்பிய அமைப்பு (European Zone) ஆண்களுக்கானது,  ஆறுவயதுக்குட்பட்ட ஆண் பெண் குழந்தைகள் எந்த தளத்திற்கும் பெற்றோர் ஒருவருடன் செல்லலாம். ஆண்களுக்கான 4 ஆம் தளத்தில் நுழைவாயிலை தாண்டியதும் அங்கு உடைமாற்றும் பகுதி, அங்கு நுழையும் போதே ஒரு சில அம்மணர்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர், கிட்டதட்ட 500 பேர் உடமைகளை பூட்டி வைக்கும் வைக்கும் Locker Room அமைந்த பகுதி, அந்த தளமும் மிகப் பெரியது, பல்வேறு குளிப்பு வகை வசதிகளை உள்ளடக்கியது, கீழ்தளத்தில் வழங்கிய‌ த‌னிப்ப‌ட்ட‌ ஆடையை மூன்றாம் தளத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அணிந்து கொள்ள வேண்டும். அணிந்து கொண்டு முதலில் மூன்றாம் தளம் செல்ல முடிவெடுத்து சென்றேன்.
Ganban Yoku

மூன்றாம் தளத்தில் ஆண்கள் பெண்களுக்கு பொதுவான சுடுகல் Stone SPA அதனை Ganban's Yoku என்ற ஜப்பானிய பெயரில் அழைக்கிறார்கள், அதற்கான தனிப்பட்ட ஆடையை அணிந்து அங்கு செல்ல வேண்டும், அதில் பல நாடுகளில் உள்ள  சுடுகல் SPA அமைப்பும் அதற்கான‌ தனித் தனி அறைகளும் அதற்கான வெப்ப நிலைகள் மற்றும் அலங்கார அமைப்புகளுடன் உள்ளது, ஒரு அறையில் 20 பேர் வரை ஓய்வெடுக்கும் அளவில் உள்ளது, மெல்லிய இசையும், இதமான மணமும், படுத்துக் கொள்ள அல்லது அமர்ந்து கொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டிருந்தது, மையப்பகுதியில் படுத்துக் கொண்டு ஒய்வெடுக்கும் மிக அற்புதமான வான் கூறையில் நட்சத்திரங்கள் அமைக்கப்பட்ட நடுக்கூடமும் இருந்தது, அருகில் உணவு மற்றும் குளிர்பான கடைகள் இருந்தன. அந்த பகுதியில் ஒவ்வொரு அறைக்கும் 5  - 10 நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு ஒரு மணி நேரம் களி(ழி)த்து நான்காம் தளத்தில் இருக்கும் ஆண்களுக்கான Onsen - japan hotspring spa பகுதிக்குள் மீண்டும் வந்தேன். Onsen என்றால் ஜப்பானிய மொழியில் வெந்நீர் ஊற்று அல்லது ஆங்கிலத்தில் Hot Springs எனப்படும்.

அங்கு உடைகளையும் களைந்து அங்கு பூட்டி வைத்து விட்டு, அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததில் இருந்து இரண்டு கைக்குட்டையை சேர்த்தால் இருக்கும் நீளத்தில் இருக்கும் ஒரு மஞ்சள் துண்டு அதை எடுத்துக் கொண்டு குளியல் பகுதிக்குச் செல்லவேண்டும், அந்த துண்டு இடுப்பு சுற்றளவுக்குக் கூட வராது, உடுக்கை இழந்தவன் கை அளவுக்கு வேண்டுமென்றால் மறைத்துக் கொள்ளலாம், வெப்ப அறையில் இருக்கும் பொழுது தண்ணீரில் நனைத்து அந்த துண்டை போட்டுக் கொள்ளலாம், தலையில் சூடு ஏறாது. மற்றபடி அந்த துண்டு சுருட்டினால் அம்மண உடலை மறைக்கும் கை அளவு கூட இல்லை,

Onsen - Hotspring பகுதிக்கு செல்லும் முன் உடலும் தலையும் நனைய குளித்துவிட்டு செல்ல வேண்டும், பொதுவாகவே ஆசிய நாடுகளின் நீச்சல் குளத்திற்கு இறங்கும் முன் குளித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அறிவுறுத்தல், உடலில் உள்ள வியர்வை மற்றும் அழுக்குகளை போக்கிவிட்டு பொதுக் குளத்தில் இறங்கினால் அங்கு குளிக்கும் மற்றவர்களுக்கு அருவெறுப்பு வராது என்பதால் இந்த ஏற்பாடு.

முதலில் சென்ற குளம் பழங்கால ரோமா புரி அமைப்பில் அமைக்கப்பட்ட பகுதியின் Hotspring, அங்கு இடுப்பளவு சுடுநீர் அதில் 15 பேர் வரை அமர்ந்திருந்தனர், அதில் சில அப்பாக்களும் அவர்களுடைய மகன்களும் ஆறுவயதிற்கு குட்பட்ட பெண் குழந்தைகளும் அடக்கம், ஆறுவயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆடையற்ற பருவ வயதினரின் உடல் எந்த கவர்ச்சியையும் ஏற்படுத்தாது என்பதால் ஆசிய நாடுகளின் குளியல் அறைகளில் ஆண்கள் பெண்கள் பகுதிக்கு அவர்களால் கட்டுபாடின்றி சென்றுவர முடியும். ஆசிய நாடுகளில் குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து குளிப்பது வழக்கம். ஒரு சில விடுமுறை நாட்களில் மகனுடன் சேர்ந்து நானும் குளிப்பது உண்டு. குழந்தைகள் கள்ளம் கபடம் அறியாதவர் மட்டுமின்றி, அவர்கள் வளர்ந்தாலும் பெற்றோரின் நிர்வாண உடல் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை, படுத்த படுக்கையாக பெற்றோர் இருக்கும் பொழுது அவர்களுக்கு உடைமாற்றிவிட எந்த கூச்சமும் இல்லாமல், முகம் சுளிக்காமல், அருவெறுப்பு இல்லாமல் அன்புடன் செய்ய முடியும், பாலியல் உறுப்பு அனைவருக்கும் இருக்கும் என்று குழந்தை பருவத்திலேயே தெரியவருவதாலும் பார்த்து வருவதாலும் வளர்ந்த பிறகும் ஆண் - ஆண் அல்லது பெண் - பெண் ஓரின இனக்கவர்ச்சி அக்குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அவை குறைக்கிறது.
SPA World - Onsen European Zone

ஒருமுறை நீரில் மூழ்கிவிட்டு இடுப்பளவு தண்ணீரில் அமர்ந்து கொண்டேன், ஆடைகளுக்கு மாற்றாக நீந்தும் செதில் முளைத்த மீனின் புத்துணர்வை உணர்ந்தேன். யாரும் யாரையும் இடுப்புக் கீழ் வெறித்துப் பார்க்கவும் இல்லை, அளவு ஆய்வும் செய்யவில்லை, அம்மணமே என்றாலும் எல்லோரும் வெகு இயல்பாகவே இருந்தனர். இந்தியாவில் ஏன் இது போன்ற இடங்கள் இல்லை, அம்மணம் என்பதே துறவிகளுக்கானது என்று மட்டுமே நம்புகிறார்களோ ? என்றெல்லாம் நினைத்தேன், அங்கு பல்வேறு குளங்களில் கிட்டதட்ட 150 ஆண்கள் அதில் குழந்தைகளும் அடக்கம். வெப்பம் 40 Deg, Hotspring குளியல் பரிந்துரைபடி 10 நிமிடம் வரையில் அந்த தண்ணீரில் இருக்கலாம், பின்னர் வெப்ப அறையிலோ, நீராவி அறையிலோ ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வேறு ஒரு  Hotspring பகுதிக்குச் செல்லலாம். ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு நாடுகளின் Hotspring குளியல் முறைபடி அமைக்கபட்டிருக்கும் குளங்களும், மிகவும் குளிர்ந்த நீர் (19 Deg) குளங்களும் உண்டு.

Hotspring த‌ண்ணீரில் உட்கார்ந்து ஓய்வெடுப்ப‌து, ப‌டுத்து ஓய்வெடுப்ப‌து, த‌னிப்ப‌ட்ட‌ சிறிய‌ தொட்டியில் அம‌ர்ந்திருப்ப‌து உள்ளிட்ட‌ ப‌ல்வேறு அளவும் உயரமும் உள்ள அமைப்புக‌ள் அங்கிருந்த‌ன. ஒவ்வொன்றிலும் உப்புத் த‌ண்ணீர், க‌ந்த‌க‌ த‌ண்ணீர் ம‌ருந்து த‌ண்ணீர் உள்ளிட்ட‌ பல வகை குளங்கள், அவ‌ற்றில் வ‌ழியும் நீராக‌ (Flowing / Over Flow Water) வ‌ந்து கொண்டே இருக்கும், என‌வே யாரும் சிறுநீர் க‌ழித்து இருப்பார்க‌ளா த‌ண்ணீர் கெட்டு இருக்குமோ என்று ஐய‌ப்ப‌ட‌த் தேவை இல்லை. Hotspring க்கு செல்ல‌ உட‌ல் நிலை ப‌ரிந்துரைக‌ள் உண்டு, என‌வே நோயாளிக‌ள் வ‌ந்திருப்பார்க‌ள், தொற்று நோய் ஏற்ப‌டும் என்கிற‌ அச்ச‌மும் தேவை இல்லை.

விருப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு கட்டண உட‌ல் பிடிப்பு சேவைக‌ளும் இருந்த‌ன‌, அனைத்து சேவையாள‌ர்க‌ளும் பெண்க‌ள் அவ‌ர்க‌ள் ஆண்க‌ளின் அம்மண உட‌லுட‌ன் அப்ப‌குதிக்குச் செல்வ‌தை பொருட்ப‌டுத்துவ‌தும் இல்லை, ம‌ருத்துவ‌ சேவை போன்று இதையும் செய்கிறார்க‌ள். உள்ளுக்குள் செய‌ற்கை சுடுநீர் அருவி உண்டு, அங்கு சுற்றிலும் சுவ‌ர் அமைப்பு வான‌த்தைப் பார்க்க‌லாம், வெளியில் இருந்து பார்ப‌வ‌ர்க‌ளுக்கு தெரியாத‌ப‌டி சுவ‌ர் அமைப்பு, ஆனால் வெளி உல‌கில் (Open / outdoor)  இருப்ப‌து போன்று ந‌ம‌க்கு உண‌ர்வை ஏற்ப‌டுத்தும். சுடுநீர் கொட்டும் அருவியில் நின்றால் அத‌ன் விழும் வேக‌த்தில் உட‌ல் வ‌லி போய்விடும், அங்கும் 10 நிமிட‌ம் வ‌ரை குளிக்க‌லாம். தளத்தின் நடுவே குளிர்பான‌ங்க‌ள் ம‌ற்றும் பிய‌ர் விற்கும் க‌டை, மேசைக‌ள் போட்டு இருப்பார்க‌ள், மேசைக்குக் கீழே கால் ந‌னையும் அள‌வுக்கு வெது வெதுப்பான‌ த‌ண்ணீர், ந‌னைத்துக் கொண்டே குளிர்பான‌த்தை ர‌சித்து குடித்து ஓய்வெடுக்க‌லாம், எல்லாம் அம்மண நிலையில் தான். உள்ளே எதுவும் வாங்குவதற்கு பணம் தேவை இல்லை, எல்லாம் கையில் அணிந்துள்ள Locker Tag Scan வழியாகத்தான், வெளியேறும் போதனது காட்டும் செலவை கட்டிச் செல்லவேண்டும், தனிமனித உணர்வு (ப்ரைவசி) மதிக்கப்படுவதால் உள்ளுக்குள் படம் எடுக்கவும் அனுமதி கிடையாது

வெப்ப அறையிலோ (Sauna), நீராவி (Steam) அறையிலோ ஓய்வெடுக்க அமரக்கூடிய நீள‌ ம‌ர‌மேசை அமைத்திருந்தார்க‌ள், அதில் வெள்ளை பூ ட‌வ‌ல் (ட்ர்கி டவல்) போட‌ப்ப‌ட்டிருந்த‌து, அத‌ன் மீது நேர‌டியாக‌ அமராம‌ல் உட்காருவ‌த‌ற்கு மெல்லிய‌ ர‌ப்ப‌ர் சீட்டுக‌ளை (Silicon Seat) ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும், Hygenic அல்ல‌து தூய்மை பேன‌ அத்த‌கைய‌ ஏற்பாடு. தலை
Sauna
முடியும், தலையும் மிகுந்த சூடாகமல் இருக்க கையில் இருக்கும் மஞ்சள் துண்டை நனைத்து தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும், Sauna அறையில் இருக்கும் போது தேமே...என்று ஓய்வெடுக்கும் கை.. 'உடுக்கை இழந்தவன் கை' எடுத்துக்காட்டு இந்த இடத்தில் நட்புக்கு பொருந்தாதே என்றெல்லாம் நினைத்தேன்.

அந்த‌  Onsen - Hotspring இர‌ண்டு மூன்று ம‌ணி நேர‌ம் செல‌விட்டாலும் நேர‌ம் செல்வ‌து தெரியாது, இறுதியாக‌ ஜ‌ப்பானிய‌ பாணி குளிய‌ல், அதில் சிறிய‌ ஸ்டூலில் உட்கார்ந்து த‌ண்ணீர் பிடித்து, சோப்பு தேய்த்து குளித்துவிட்டு, சில‌ர் அங்கேயே முக‌ச் ச‌வ‌ர‌ம் செய்து கொள்கிறார்க‌ள், நான் அங்கிருந்த மூன்று மணிநேரம் இந்திய ஆண்கள் எவரையும் காணவில்லை, (ஒசாகா சென்று திரும்பும் வரையில் கூட வெளியேயும் இந்தியர் எவரையும் பார்க்கவில்லை) பின்னர் அப்படியே ஒப்ப‌னை அறைக்கு வ‌ந்து ந‌ன்றாக‌ துவ‌ட்டிவிட்டு, த‌லைவாரிக் கொண்டு, உட‌ல் எடையை பார்த்துவிட்டு, ஆடைக‌ள் இருக்கும் இட‌த்திற்கு சென்று ஆடைக்குள் சிறைப்படுத்திக் கொண்டு வெளியே வ‌ந்தேன். அப்பாடா....என்ன புத்துணர்வு...என்ன சுகம். எந்த செயற்கையும் சுற்றாத அம்மண உடல்களும் அழகானது, புனிதமானது தான்.

*****

நாட்டுக்கு நாடு உடலில் ஆடையின்மை குறித்து பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு, குடிகாரன் விழுந்து கிடக்கும் பொழுதும், தன் நினைவற்று  சுருண்டு கிடக்கும் மனவளர்ச்சி குன்றியவர்களிடம் துணி விலகி இருக்கிறதா என்று ஒருமுறையேனும் பார்க்கும் மனநிலை நம்மில் பலருக்கும் உண்டு, பொதுவாகவே வீட்டுக்குள்ளோ, விடுதியிலோ தனியாக இருக்கும் பொழுது ஆடையின்றி இருக்க விரும்பும் ஆண்களின் மனநிலை. இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் குறைவே. நீலப்படங்களையும் நிர்வாண உடல்களையும், ஆடையையும் ஊடுறுவி பார்த்து மிகுதியாக ரசிப்பதெல்லாம் உடைக்காட்டுப்பாடு மிக்கதாகவும் கூறிக் கொண்டே, உடை நாகரீகம் பற்றி வாய்கிழிய பேசி பேசியும், பண்பாடுகள் பாரம்பரியம் பற்றி பெருமையாக பேசும் நாடுகளில் உள்ளோரே மிகுதி. 

 *******

ஜப்பானிய Hotspring குளியல் எனக்கு ஒரு மாறுபட்ட அனுபவம், . ஒரு சில மணித்துளிகள் அங்கே அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்து பறந்து செல்லும் மன நிலையில் இருந்தேன், வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய ஒன்று, எனக்கு அந்த‌ நல்லூழ் வாய்த்தது.

இணைப்பு : ஸ்பா (தமிழில்) - தமிழ் விக்கிபீடியா

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்