சிறுவயதில் மார்கழியில் அருகில் இருக்கும் கோவில்களில் பாடும் டி எம் எஸ்ஸின் பக்திப் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் என்ற முறையில் டி எம் எஸ்ஸின் தனித்துவம் வாய்ந்த குரல் என்றுமே எனக்கு மிகவும் பிடித்தவை, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் - நாத்திகரும் விரும்பிக் கேட்கவைக்கும் ஒரு பாடல் அதை டி எம் எஸ் தவிர்த்து வேறு யாராலும் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியாது, எத்தனையோ புகழ்பெற்றப் பாடகர்கள் தமிழத்தில் கோலொச்சினாலும் சவுராஷ்ட்ரா மொழியை தாய்மொழியாகக் கொண்ட சவுந்தராஜனின் தமிழ் பாடலில் எந்த ஒரு சொல்லும் சிதைந்தோ, சொதப்பியோ இருந்தது இல்லை.
ஒரு பாடகரை தொடர்ந்து பாடவைப்பதும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதும் இசையமைப்பாளர்களின் கையில் தான் உள்ளது, இளையராஜாவின் வரவிற்கு பிறகு டி எம் எஸ்ஸுக்கு பாடும் வாய்ப்புகள் குறைந்தது, நன்றாக பாடி வந்த எல் ஆர் ஈஸ்வரியும் திரைப்படங்களில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்கள் என்றாலும் இருவருமே தத்தம் இருப்பை தொடர்ந்து பக்திப் பாடல்கள் தொகுப்பை வெளியிட்டு உறுதிப்படுத்திக் கொண்டனர். இளைஞர்களின் கவனம் எஸ்பிபி பக்கம் திரும்ப டி எம் எஸ் என்றால் எம்ஜிஆர் சிவாஜிப் பாடல்கள் பாடியவர் என்ற அளவில் தான் கடந்த முப்பது ஆண்டுகளாக நினைக்க வைத்தது, இதைத் தவறு என்று சொல்ல முடியாது, அவரவர் காலத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தினால் தான் தமது தனித்துவம் நிலைத்து நிற்கும் என்று இசையமைப்பாளர்கள் நினைப்பார்கள், எனவே டி எம் எஸின் பாடல் ஆதிக்கம் கிட்டதட்ட அவரது 60 வயதினில் முடிவுக்கு வந்ததை இசை துறைக்கான மிகப் பெரிய இழப்பு என்று கருத முடியாது, பழையன கழிதலும் புதியவை புகுதலும் தானே சமூக வளர்ச்சிக்கும் நல்லது.
*******
டி எம் எஸ் தனது 91 வயதில் மறைந்துவிட்டார், இதை நல்ல சாவு, வாழ்வாங்கு வாழ்ந்தவரின் சாவு என்று தான் வகைப்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து, முக அழகிரி தவிர்த்து டி எம் எஸ் வாழ்ந்த காலத்தில் திரைத்துறையினர் அவருக்காக பெரிய விழா எடுத்ததில்லை, அழகிரி அரசியல் நோக்கம் காரணமாக இதைச் செய்திருந்தாலும் தனிப்பட்ட கலைஞனுக்கு பாராட்டு என்ற முறையில் அதனை பாராட்டியே ஆகவேண்டும், எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிய டி எம் எஸ்ஸுக்கு எம்ஜிஆர் ரசிகர்களோ, சிவாஜி ரசிகர்களோ பாராட்டுவிழா எதையும் நடத்தவில்லை, இதற்கெல்லாம் திரையுலகினரோ, அவர்கள் எடுக்கும் திரையுலக பாராட்டு விழாக்களுக்கு தலைமை ஏற்று நடத்தும் அரசியல்வாதிகளுக்கோ வருத்தம் எதுவும் அடைந்தது போல் தெரியவில்லை. ஆனால் டி எம் எஸ் மறைந்த பிறகு இருதரப்பினரும் டி எம் எஸ் மறைவு குறித்து ஆற்றமுடியாத துயரம், ஆத்தமா சாந்தியடைய வேண்டும் என்றெல்லாம் இரங்கல் தெரிவித்துள்ளனர், 91 வயதின் இறப்பின் ஆத்மா சாந்தியடையவில்லை என்றால் எந்த வயதில் இறந்தால் ஆத்மா சாந்தியடையும், இத்தனைக்கும் டிஎம்எஸ் தனது பேரன் திருமணத்தையே பார்த்தவர் தான்.
பணக்காரகள் / வசதியானவர்கள் 80 வயதிற்கு மேல் வாழ்ந்தாலே அது வேலைக்காரகளின் பணிவிடையால் தான், 91 வயதிற்கும் மேல் டி எம் எஸ் வாழ்ந்தால் அவருக்கு உடலில் உயிர் தங்கியுள்ளது என்பது தவிர்த்து வேறென்ன பலனைக் கொடுக்கும் ? இரங்கல் என்ற பெயரில் சாவைக் கொச்சைப்படுத்துவதை விட அவருக்கு சூட்டும் புகழாரமே அவருக்கான சிறந்த அஞ்சலி என்பது எனது தனிப்பட்ட கருத்து. எந்த ஒரு மனிதனும் நன்றாக வாழ்ந்து வாரிசுகளின் மகன்/மகள் / பேரக் குழந்தைகள் சாவைப் பார்க்காமல் போய் சேர்வது தான் சிறந்த இறப்பாகும், டி எம் எஸ்ஸின் மறைவால் வருத்தம் அடைய ஒன்றும் இல்லை.
டி எம் எஸ்ஸின் புகழ் அவரது பாடல்கள் நிலைத்து நிற்கும் வரை நிலைக்கும், பாகவதர்கள் பாட்டுகளே கூட இன்றும் நினைவு கூறும் பொழுது டி எம் எஸ்ஸின் பாடல்கள் இன்னொரு நூற்றாண்டிற்கு கூட கேட்டுக் கொண்டி இருக்கும்