நமக்கு எதுவும் நடக்காது என்கிற நம்பிக்கை நம்மை கவிழ்த்துவிடும் என்பது பலருக்கு தெரியாத உண்மை, நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு எதுக்கு மாறி பிரச்சனைக்கு வழி தேடனும் ? என்று ஆண்டு கணக்கில் தனியார் நிறுவனங்களில் சம்மணமிட்டு பணிபுரிபவர்களை அம்மணமாக்கி ஆப்பு எப்போ வைபார்கள் என்று தெரியாது, ஆனா ஆப்பு கிடைப்பது உண்மை, இதற்கு காரணம் திறமை இன்மை அல்லது சோம்பல் ஆகிய காரணங்களைவிட குறிப்பிட்ட சூழலில் வேலைப் பார்த்து பழகிவிட்டு வெளியே போனால் ஒப்பேற்ற முடியாது, காலம் தள்ள முடியாது என்கிற காரணங்களையும் தவிர்த்து நாம தான் நிறுவனத்தைத் தாங்குகிறோம் என்கிற நினைப்பும் சேர ஒரு சிலரை ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் அழுத்திவிடும். சென்ற ஆண்டு சீனா, மலேசியா என்று பறந்து பறந்து வேலை செய்தாலும் இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு தொடர்ச்சியான வேலை இல்லை,
காரணம் எல்லாம் சரியாக செயல்பட்டுக் கொண்டு இருப்ப்பதால் சிஸ்டம் / சர்வர் பரமரிப்பு வேலைகள் தவிர்த்து அன்றாட வேலைகள் மிகக் குறைவே, யோவ் யாராவது வேலை கொடுங்கைய்யா என்று கெஞ்சாத குறையாக ஏதாவது கணிணி பிரச்சனை என்று சொன்னால் விழுந்தடித்து செய்து முடித்துவிட்டு வழக்கம் போல் கூகுள் ப்ளஸ் அல்லது வலைப்பதிவில் மேய்வது, திரட்டியை பார்ப்பது தான் முழுநேர வேலை என்றாக, வாங்கிற சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்பதுடன், என்னை தொடர்ந்து வைத்திருப்பது நிறுவனத்திற்கும் நட்டமே, இது சரிப்படாது என்கிற முடிவில் பிற நிறுவனங்களுக்கு ஏன் வேலைக்குச் செல்ல முயற்சிக்கக் கூடாது ? என்கிற நினைப்பில் முட்டுக்கட்டையாக இரண்டு மாத நோட்டீஸ் என்கிற நடப்பு நிறுவனத்தின் ஒப்பந்ததை கிடப்பில் போட்டுவிட்டு, கடந்த ஜூலை 26 முதல் அதையே விண்ணப்ப படிவங்களில் குறிப்பிட்டு பயோடேட்டா என்னும் தற்குறிப்பு கல்வித் தகுதி, அனுபவத் தகுதியை நிரப்பி அனுப்பத் துவங்கினேன்,
இங்கே சிஸ்டம் மற்றும் சர்வர் தொடர்பில் வேலை வாய்ப்பு என்பவை பெரிய நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையிலும் சிறு நிறுவனங்களில் நேரடி பணியாளராகவும் எடுப்பார்கள், ஆனாலும் நம்மை வேலைக்கு எடுப்பவர்கள் இரண்டு மாதம் தான் சென்று சேருவேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்பது அரிதே,
எதாவது முன்கூட்டிய திட்டமாக (ப்ராஜெக்ட்) மூன்று மாதம் கழித்து துவங்குவதாக இருந்தால் அவ்வாறு எடுக்க வாய்ப்புள்ளது, அல்லது ஏதாவது கிளை நிறுவனம், அல்லது புதிய நிறுவனம் இரண்டு மாதம் கழித்து துவங்குவதாக இருந்தால் இரண்டு மாதம் கழித்து சேருகிறேன் என்றால் ஏற்றுக் கொள்வார்கள், அவ்வாறான வாய்ப்புக் கிடைப்பதும் அரிதே, 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் போட்டும் அழைத்தவர்கள் ஓரிருவர்கள் மட்டுமே அவர்களும், சிஸ்டம் என்ஜினியரிங்களில் குறிப்பிட்ட துறையில் (வெப் அட்மின், நெட் ஒர்க் அட்மின் போன்று) மட்டுமே வேலை என்பதால் அதற்கான சிறப்பு தகுதி தனித்து இல்லை, நான் ஆல் இன் ஒன் என்பதால் எடுக்கவும் தயங்கினார்கள், இவ்வாறாக வாரம் ஒரு நேர்முகத் தேர்வு என்று சென்று வந்து கொண்டிருந்து, 40 நாட்கள் கடந்த நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி, நிறுவன உரிமையாளர் உன்னிடம் பேச வேண்டும் அறைக்கு வருகிறாயா ? என்று அழைப்பு விடுத்தார்.
நினைத்தது போலவே 'நீ ஏன் வெளியே வேலை தேடக் கூடாது ?' உனக்கு தேவையான நேரம் எடுத்துக் கொள், நாங்க உடனடியாக செல்ல வேண்டும் என்று சொல்லவரவில்லை, நிறுவனத்தில் இந்த ஆண்டு பிஸ்னஸ் சரி இல்லை, ஐடி வேலையை அவுட் சோர்ஸ் கொடுத்துடலாம் என்று நினைக்கிறேன், எல்லா டாகுமெண்டுகளையும் தாயார் செய்துவிடு.......' என்று சொல்ல, எனக்கு ஒன்றும் அதிர்சியாக இல்லை, நான் ஏற்கனவே அதைத்தான் செய்து வருகிறேன் என்று அவரிடம் சொல்லாமல் மனதுக்குள் சிரித்துக் கொண்டு, 'நானே சொல்லாம் என்று இருந்தேன், எனக்கு கொடுக்கும் சம்பளம் உங்களுக்கு கட்டிப்படியாகாது, வேற யாராவது ஜூனியர் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள், நான் பயிற்சி கொடுத்துவிட்டு செல்கிறேன் என்று நான் சொல்ல இருந்தேன், ஆனால் எனக்கு இங்கு வேலை செய்ய விருப்பம் இல்லை என்று நீங்கள் தவறாக நினைக்கக் கூடும் என்பதால் சொல்லவில்லை, என்றேன், பின் அவரே தொடர்ந்தார், நீ இங்கே ஆறு ஆண்டு வேலை செய்திருக்கிறாய், உனக்கு ஏதாவது இழப்பீடு தருகிறோம் என்று சொல்ல எனக்கு பருத்தி புடவையாக காய்தது போலவே இருந்தது, சரி என்று சொல்லிவிட்டு சிரித்து கொண்டே வெளியே வந்தேன், அப்பாடா இனி திருட்டுத் தனமாக இண்டர்வியூ செல்லத் தேவை இல்லை,
ஒருவாரம் கழித்து ஒருமாதத்திற்குள் நான் அனைத்து தகவல்களையும் கோப்பாக்கி ஒப்படைப்பதுடன் பணியில் இருந்து விலகுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு, அடுத்த நாள் முதல் ஏதாவது நேர்முகத் தேர்வென்றால் நிறுவனத்தில் சொல்லிக் கொண்டே சென்றேன், அதன் பிறகு வேலைக்கு இரண்டு மாதம் காத்திருப்பு தேவை இல்லை என்பதால் வாரத்திற்கு நான்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புகள் வரத் துவங்கியது. கார்ப்ரேட் நிறுவனங்களில் கக்கூஸ் கழுவச் சென்றாலும் ஏற்கனவே வேற கார்ப்ரேட்டில் கக்கூஸ் கழுவி இருந்தால் தான் நல்லா கழுவத் தெரியும் என்று நம்புவார்கள் போல, என்னை அழைத்த கார்ப்ரேட் நிறுவனங்களெல்லாம் கார்ப்ரேட் எக்ஸ்பீரியன்ஸ் இல்லை என்று இரண்டாம் கட்ட நேர்முகத்திற்கு அழைக்கவில்லை, இந்த நிலையில் நாளை மறுநாள் (அக்டோபர் 12) முதல் வேலை இல்லை என்ற நிலையில் அன்று மட்டுமே காலை ஒன்றும் மாலை ஒன்றுமாக இரு நேர்முகத்திற்கான அழைப்புகள், இது கண்டிப்பாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை, ஏனெனில் அதில் ஒன்று வீட்டுக்கு வெகு அருகில்...... அக்டோபர் 11 ஆம் தேதி என்ன ஆச்சு என்றால்............?