பின்பற்றுபவர்கள்

15 ஜூலை, 2009

பெருகிவரும் முதியோர் இல்லங்கள் - சில எண்ணங்கள் !

முதியோர் இல்லங்கள் என்றாலே எதோ ஆதரவற்றர்களின் பாதுகாப்பகம் போல் நினைப்பது இன்னும் தமிழ் சமூகத்தின் எண்ணமாக இருக்கிறது, இதற்க்குக் காரணமாக (ரோஜாவனம் போன்ற) திரைப்படங்களில் முதியோர் இல்லங்களாக காட்டப்படுவது அனைத்திலும் பிள்ளைகளால் துறத்தப் பட்டவர்களின் புகலிடமாகவே அவை காட்டப்படுகின்றன. ஆனால் அவற்றையும் மீறி ஊடகங்கள் வழியாக வரும் தகவல்கள் மூலம், பிள்ளைகள் இல்லாத பிரபலங்கள் முதுமையை இன்னல் இன்றி கழிக்கும் ஒரு இடமாக முதியோர் இல்லங்களை நாடுவதாக தெரியவந்தது. எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் முதியோர் இல்லத்தில் இருக்கிறார். தற்பொழுது முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு டி.என்.சேஷன் மற்றும் அவரது மனைவி திருமதி சேஷன் ஆகியோரும் தங்களுக்கு வாரிசு இல்லாத காரணங்களினால் முதுமை காலத்திற்கு ஏற்ற இடமாக முதியோர் இல்லம் நாடி இருக்கின்றன.

'அந்த' காலத்தில் முதியோர் இல்லம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை, பொறுப்பற்றவர்களின் செயல் வினையாக முதியோர் இல்லங்கள் முளைத்திருப்பவராக நினைப்பவரென்றால் உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வது நல்லது. சமூகத்தின் பல மாற்றங்களின் எதிரொலியாக முதியோர் இல்லங்கள் இன்றைய தேவை என்பதாக சூழல் அமைந்திருப்பதைப் பார்க்க வேண்டும். பொறுப்பற்ற பிள்ளைகள், வாரிசு இன்மை
இவற்றைக் காரணாமாக கருதுவதைவிட முதியோர் இல்லம் பெருகுவதற்கு முதல் காரணமாக நான் நினைப்பது. இல்லறக்கட்டுப்பாடு என்னும் சமூக நல நோக்கில் இரண்டு அல்லது ஒரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டது தான். கூட்டுக் குடும்பமாக வாழாவிட்டாலும் ஒரு குடும்பத்திற்கு முன்பெல்லாம் குறைந்தது 5 குழந்தைகள் அவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண் வாரிசுகள் இருப்பார்கள், அவர்கள் மாறி மாறி பெற்றோர்களைப் பார்த்துக் கொள்வார்கள்.

மக்கள் பெருக்கம் கட்டுபடுத்தும் நல நோக்கில் கடந்த 30 - 40 ஆண்டுகளில் 80 விழுக்காட்டினருக்கும் மேல் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளவில்லை. வதவதவென்று பெற்றுவிட்டு அதை வளர்க்க வழியில்லாமல் குழந்தைத் தொழிலாளர் ஆக்கும் நிலை கடந்த 30 - 40 ஆண்டுகளில் கனிசமாகக் குறைந்தே உள்ளது, ஒன்று இரண்டாக பெரும் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து வருங்காலத்தில் அடுத்த தலைமுறையாவது நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்குமே இருக்கிறது. முன்புபெல்லாம் வீட்டுப் பொறுப்புகளுடன் வீட்டில் உள்ள முதியவர்களைக் கவனித்துக் கொள்ளும்பொறுப்பு பெண்களிடம் இருந்தது. இன்றைய பொருளியல் தேவைக்கு பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறோம் என்ற நாசுக்கான பெயரில் பொருளியல் தேவையின் சுமையின் ஒரு பகுதியை அவள் தலையில் ஏற்றி வைத்துவிட வேண்டியுள்ளதால் முதியவர்களைப் பார்த்துக் கொள்வது யார் என்ற கேள்விக்கு தொண்டையை நெறித்துக் கொண்டு விழுங்கும் விடையாக முதியோர் இல்லங்கள் தான் தெரிகின்றன.

இந்த இடற் இல்லாத குடும்பங்களில் குடும்பத்தின் தேவையற்ற சுமையாகவே முதியோர்களை நினைக்கும் படி இளைய தலைமுறைகளின் மன நிலையும் மாறி இருக்கிறது. வாழ்க்கையே ஒரு முறைதான், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதாக நினைக்கத் தொடங்கி இருக்கிறார்கள், இன்றைய முதியவர்களின் பலர் அதைப் புரிந்து கொண்டு தங்களாகவே முன் வந்து முதியோர் இல்லங்களுக்கு பயணப்படுகின்றனர்.

இல்லம் சார்ந்த தொழில்கள் மறைந்து போய் படிப்பிற்கான வேலைக்குச் செல்ல வேண்டியபடி கல்வி முறைகள் அமைந்துவிட்டபடியால் வேலை கிடைக்கும் இடத்தில் இருக்க வேண்டிய சூழலும், அங்கே பெற்றோர்களை அழைத்துச் செல்ல முடியாத சூழல்களில், அவர்களை தனியாகவிடவும் முடியாத சூழல்களில் முதியோர் இல்லம் ஒரு வாய்ப்பாக இருப்பதாகத்தான் வாரிசுகள் நினைக்கின்றனர். காரணம் இன்றைய எந்திர வாழ்க்கையில் காலையில் வேலைக்குச் செல்லும் தம்பதிகள் மாலை தான் திரும்ப வேண்டிய சூழலில் பெற்றோர்கள் அவர்களுடன் இருப்பதும், இல்லாதிருப்பதும் ஒன்றாகத்தான் தெரிகிறது, அவர்களைக் கூடவே வைத்திருந்தால் அவர்களுக்கு பணிவிடை செய்வதைவிட அவர்களை வேலை வாங்கும் சூழல் மிகுந்துவிடும் என்பதால் பெற்றோர்களுக்கு முதியோர் இல்லம் நல்ல ஓய்வைக் கொடுக்கும் ஒரு இடமாகவும் தேர்ந்தெடுக்கிறார்கள். பணிப்பெண் வைத்துப் பார்த்துக் கொள்ள முடிந்தவர்கள் அப்படியும் செய்கிறார்கள். அந்த அளவுக்கு செலவு கட்டுபடி ஆகாதவர்கள் முதியோர் இல்லங்களை தவிர்க்க முடியாத சூழலில் பெற்றோர்களுக்கு கைகாட்டி விடுகின்றனர். ஒரே ஒரு பெண் அல்லது இரண்டுமே பெண்ணாகப் பெற்ற பெற்றோர்களின் முதுமைக் காலம் ? மனைவி வேலைக்குப் போகாவிட்டாலும் கூட, பெண்ணைப் (மனைவியைப்) பெற்றவர்களைப் பார்த்துக் கொள்வதையும் தன் கடமையாக நினைக்கும் பரந்த மனப்பான்மை பலருக்கு வரவே இல்லை. அவர்களது வழிகாட்டலும் மாமானார் - மாமியாருக்கு முதியோர் இல்லங்களை நோக்கியதாகத் தான் இருக்கிறது.

மாணவ விடுதிகள் போன்று முதியோர் இல்லங்களும் பல்வேறு வசதிகளுடன், பொழுது போக்கும் இடமாகத்தான் அமைந்திருக்கிறது. உடன் இருக்கும் மற்ற முதியவர்கள் ஒவ்வொருவராக இறக்கும் போது சொல்ல முடியாத வெறுமையும், வாழ்க்கையில் வெறுப்பு வருவதும் வயதான காலத்தில் அங்கே இருக்கும் ஒருவரின் அமைதியைக் கெடுத்துவிடும் என்பதைத் தவிர்த்து முதியோர் இல்லங்களில் வசிப்பது பெரிய குறையாகத் தெரியவில்லை. முதியோர் இல்லங்களை நாடும் முதியவர்களில் பெரும்பகுதியினர் பார்பனர்களாக இருப்பது, அவர்கள் சமூக மாற்றங்களை உவந்து ஏற்றுக் கொண்டதன் விளைவா ? அல்லது சுமையாகக் கருதி அனுப்பப் படுகிறார்களா ? என்பதை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் எப்படி இருந்த போதிலும் பார்த்துக் கொள்ள இயலாத போது, முதியோர் இல்லங்களுக்கு பெற்றோர்களை அனுப்புவது அவர்களை கவனிப்பின்றி தனித்து விடுவதை விட மேலான அக்கரையையாகத் தான் தெரிகிறது.

இனப்பெருக்கக் கட்டுப்பாட்டின் காலத்தின் கோலமாகவும், படிப்பின் தொடர்பில் (தொலைவில் / வேறு நாடுகளில்) அமைந்த வேலை, பெண்கள் வேலைக்குச் செல்வது ஆகிய காரணங்கள் முதியோர் இல்லப் பெருக்கத்திற்கு முதன்மைக் காரணங்களாகவும், சமூகம் சாடும் பிள்ளைகளின் பெறுப்பின்மை சொற்பக் காரணமாகவும் தான் தெரிகிறது.
மனிதன் தனக்காக குடும்பம் அமைத்துக் கொண்டதும் பிள்ளைகளை வளர்ப்பது பொறுப்பாகவும், பெற்றோர்களை பராமரிப்பது கடமையாக இருந்தது. தற்போது பொறுப்பு மட்டும் இருக்கிறது, பண்டமாற்று முறையில் கடமை கைமாற்றி விடப்படுகிறது.



முதியோர் இல்லங்கள் சமூகச் சூழலின் கட்டாயம் என்பதை விட சமூகத்தின் ஒரு கூறாக, அங்கமாக அமைந்து விட்டது. நாம் பெற்ற நவநாகரீக வளர்ச்சியில், மெக்கலே கல்வி கற்றதன் பயனாக, பெண்களுக்கு கல்வி அளித்ததன் பயனாக, அவரவர் குடும்பம் அவரவர் வாழ்க்கை இன்னும் பல காரணிகளில் வாழ்க்கையின் நிறைவு முதியோர் இல்லங்களாக இன்றைய இளைஞர்களின் முதுமையும் இருக்கும்.

17 கருத்துகள்:

மங்களூர் சிவா சொன்னது…

என்னவோ போங்க :(

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

Mr.Yes எழுதும் கருத்து..

உங்கள் முதியோர் சிந்த்தனை நன்று.

எனது சில கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.

முதியோர் இல்லங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதில் ஐய்யம் இல்லை. அவை தேர்ந்த வாழ்விடமாகவே மாறும்.

ஒரு குழந்தையை பெற்று அது இறந்து போனாலோ, அல்லது உறவு சிக்கலால் பிரிந்தாலோ பெற்றோர்களின் கதி சிரமமே.

கோவையில் சில ஹைடெக் முதியோர் இல்லங்கள் உண்டு. அவை வாரம் பார்ட்டி முதல் கொண்டு நடக்கிறது.

சமூக நிலையில் நான் செய்யும் சேவையை வெளியே சொன்னது இல்லை. நன்மை நடக்கும் என்பதற்காக இந்த சந்தர்ப்பத்தில் சொல்லுகிறேன்.

முதியோர் இல்லங்களுக்கு மருத்துவ உதவி. மற்றும் உடை ஆகியவற்றை அளித்து வந்தோம். ஆனால் ஒரு நாள் அவர்களுக்கு இதைவிட தேவையான ஒருவிஷயத்தை கண்டு கொண்டேன். கடந்த சில வருடங்களாக “அதை” கொடுத்துவருகிறேன்.

அது என்ன என்றால் அவர்களுடன் அமர்ந்து பேசுவது. ..!

அவர்களுடன் பேசுவது என்றால் அவர்கள் சொல்லுவதற்கு செவிசாய்ப்பது. அவர்கள் அடையும் சந்தோஷமும் நிறைவும் வேறு எதிலும் இல்லை.

கோவையை சார்ந்தவர்கள் இந்த சேவையை செய்ய என்னுடம் வர விருப்பம் இருந்தால் வரலாம்.


ஒரு நாடோடிகதையில் அரசன் முதியவர்களை கொல்ல சொல்லுவான். ஒரு இளைஞன் தனது தாத்தாவை மறைத்துவைத்து விடுவான். பிறகு நாட்டிற்கு துயர்வரும்பொழுது தாத்தாவின் உதவியால் நாட்டை காப்பான்.

முதியோர் இல்லங்களுக்கு நான் செல்லும்பொழுது எல்லாம் இக்கதையை நான் ஒரு முறையேனும் நினைத்து கொள்வேன்.

அனுபவம் விலைபதிப்பற்றது..!

--------------------------------
பின்குறிப்பு : ஏன் Yes எனும் பெயரில் எழுதினேன் என கேட்பவர்களுக்கு...

No என எதிர்மறை கருத்து சொல்லுவதைகாட்டிலும், Yes என நேர்மறைகருத்துகளை பதியலாமே என்றுதான். :)

நட்புடன் ஜமால் சொன்னது…

முதியோர் இல்லங்களாக இன்றைய இளைஞர்களின் முதுமையும் இருக்கும். \\

நிதர்சணம் ...

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான உண்மைகளை உங்கள் பதிவு பறை சாற்றுகிறது

RATHNESH சொன்னது…

தன்னுடைய பெற்றோர், தான் வசதியுடன் இருக்கும் போதும் அநாதைகள் போல் ஏதோ ஓர் இல்லத்தில் (அது எத்தனை ஸ்டாராகத் தான் இருக்கட்டுமே) இருப்பது குறித்த குற்ற உணர்வு ஏற்படாத அளவுக்குத் தன் பிள்ளைகளை வளர்த்தவர்களின் தவறு தான் முதியோர் இல்லம் என்பதே என் எண்ணம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
தன்னுடைய பெற்றோர், தான் வசதியுடன் இருக்கும் போதும் அநாதைகள் போல் ஏதோ ஓர் இல்லத்தில் (அது எத்தனை ஸ்டாராகத் தான் இருக்கட்டுமே) இருப்பது குறித்த குற்ற உணர்வு ஏற்படாத அளவுக்குத் தன் பிள்ளைகளை வளர்த்தவர்களின் தவறு தான் முதியோர் இல்லம் என்பதே என் எண்ணம்.
//

முதியோர்ர் இல்லம் நல்ல மாற்று தான் சொல்பவர்கள் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அதற்கு நான் மேலே குறிப்பிட்ட காரணம் தான்.

வளர்ப்புதான் சூழலாக அமைகிறது என்பது முற்றிலும் சரி என்று சொல்ல முடியாது, அவையும் ஒரு காரணம்.

நையாண்டி நைனா சொன்னது…

வளர்ப்பு மிக இன்றியமையாததாக கொள்வதே எனது கருத்தும்.

நையாண்டி நைனா சொன்னது…

ஒருவருக்கு வாரிசு இல்லை என்றால், அவர்கள் சமூகத்தின் பிள்ளைகள், அவர்களை காப்பது சமுதாயமான நமது கடமை.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் முதியோர் இல்லத்தின் தேவை மிக குறைவு.

பிள்ளையில்லாதவர்கள் முதியோர் இல்லத்தை நாடுவதில் தவறேதும் இல்லை.

ஆனால் பிள்ளைக‌ள் இருந்தும் அங்கே சென்றால்...

வாழ்றதுக்காக சம்பாதித்தால் சந்தோசமாக இருக்கலாம்.
ச‌ம்பாதிப்ப‌த‌ற்காக‌ வாழ்ந்தால் ப‌ண‌ம் இருக்கும் உண்மையான‌ பாச‌ம் இருக்காது.

மணிகண்டன் சொன்னது…

முதியோர் இல்லம் குறித்தும், பெற்றோர்களின் பாசம் குறித்தும் தாங்கள் தொடர்ந்து எழுதிவரும் இடுகைகள் எனக்கு நெருடலாகவே இருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

அன்புடன் அருணா சொன்னது…

நேர்மையான உண்மைகள்....பிடியுங்கள் பூங்கொத்தை!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

..அருமையான பதிவு..

CHANDRA சொன்னது…

எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்,காசுக்காக பணியாற்றினாலும் அந்த ஊழியர்கள் புன்முறுவலோடு பரி மாறும் காட்சி அழகு. 95% வீட்டில் முதியவர்களிடம் இந்த பரிவை காட்டுவது இல்லை.

priyamudanprabu சொன்னது…

நல்ல கருத்து
நமக்கும் முதுமை வரும் என்பதை பிள்ளைகள் உணரனும்

TBR. JOSPEH சொன்னது…

முதியோர் இல்லங்கள் என்றாலே எதோ ஆதரவற்றர்களின் பாதுகாப்பகம் //

பெரும்பான்மையானோர் அப்படித்தான். பொருள்வசதி இல்லாத முதியவர்களை எத்தனை வாரிசுகள் இருந்தும் பார்த்துக்கொள்வதில்லை என்பதுதான் உண்மை.

எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் முதியோர் இல்லத்தில் இருக்கிறார். //

உங்களுக்கு உண்மைக் கதை தெரியாது என நினைக்கிறேன். இராஜம் தம்பதியருக்கு குழந்தையில்லை என்பது உண்மைதான். ஆனால் வசதி படைத்தவரல்ல. ஈட்டிய அனைத்தையும் உறவினர்களிடம் பறிகொடுத்துவிட்டு வாழ வழி தெரியாமல் சில நண்பர்களுடைய உதவியால் முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்தவர். ஆகவேதான் சமீபத்தில் மு.க கதாசிரியையின் படைப்புகளை அரசுடைமையாக்கிக்கொண்டு ரூ.3 லட்சத்தை வழங்கியுள்ளார்.

கிடுகுவேலி சொன்னது…

இந்த போக்கு சரியா தவறா என்று உணரமுன்னமே காலச்சக்கரம் சுழன்று விடுகிறது. நாமும் இங்கே வேலை அது இது என்று அலைந்தால் அவர்கள் ஊரில் தனித்துத்தானே இருப்பார்கள். அவர்களாலும் இங்கே வாழமுடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை. நாமும் இந்த நிலையை விட்டு போவதாக இல்லை. இந்த இடைவெளி அதிகரிக்கத்தான் போகிறது. நல்லதொரு பதிவு...!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்