ஒருங்கிணைந்த இந்தியா என்பது பல்வேறு மொழி பேசும் நாடுகளின் தொகுப்பு, நிறம், உடல் அமைப்பு ஒற்றுமை என்னும் இன அடையாளத்தால் அங்கு வாழும் மக்களை இந்தியர், நிலத்தை இந்தியா என்கிறோம், அதிலும் சில சிக்கல்களாக வட எல்லையை ஒட்டிய நிலப்பரப்பு மக்கள் சீனர்களின் முக அமைப்பை ஒத்த மங்கோலிய இனத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்து வகையான மொழி பேசுபவர்களும் இணைந்து ஒரு நாடாக இருக்கலாம் என்று முடிவு செய்ததது ஒரு பெரும் நிலப்பரப்பின் கீழ் பிற இன ஆளுமை இல்லாமல் இணைந்திருப்பது தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கை.
இந்தியா என்பது ஒரே நாடு என்றாலும் அதன் மானில மொழி பேசுபவர்களுக்கும் சம உரிமை, அவர்களின் அடையாளங்களும் பேணப்படும் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை பாதிப்பு ஏற்படும் போது நான் இந்தியன் இல்லை, 'இந்த' மொழி பேசுவன் என்கிற நிலை எடுக்க தூண்டுவதாக, அவர்களின் மொழி மற்றும் நிலத்தை அழித்தல் மற்றும் கையகப்படுத்துதல் என்னும் தேசியம் சார்ந்த நடவடிக்கையால் இயல்பாகவே, எதிர்வினையாகவும் ஏற்பட்டுவிடுகிறது, இன்றைக்கு மகாராஷ்ட்ராவில் நடப்பதும் இது தான். மண்ணின் மைந்தர்களுக்கான வாய்ப்புகளை பல்வேறு மாநிலத்தினர் எடுத்துக் கொள்ளுதல் அல்லது பங்கிட்டுக் கொள்ளுதல் என்னும் நிலையில் அவர்களது வேலை வாய்ப்புகள், சமூக உயர்வு என்பது கேள்வி குறியாகவே ஆகிறது. மகாராஷ்ட்ரத்தின் தனி அடையாளம் என்பது அம்மாநில மொழிதான், அது பேசப்படுவது குறையும் போது அங்கு வசிக்கும் மண்ணின் மைந்தர்கள் கிளர்ந்தெழுவது இயல்பே.
ஒரே மொழிப் பேசுபவரிடையே கூட குறிப்பிட்ட நிலப்பகுதியில் இருக்கும் மக்கள் புறக்கணிக்கப்படும் போது அதன் விளைவுகளாக தனித் தெலுங்கான கோரிக்கைகள் நடந்து வருவதை கண்ணுறுகிறோம். அதிகாரம் பகிர்தல் என்கிற புரிதல் இல்லாமல் அதிகாரம் கைப்பற்றுதல் என்ற நிலைக்கு ஒரு தரப்பு முயலும் போது மற்ற தரப்பு அதிகார இழப்புக்கு ஆளாகிறது. இதுவே பூசல்கள் பலவற்றிற்கும் காரணம்.
தமிழன் மட்டுமல்ல தனது மொழி பாதிக்கப்படும் போது அனைத்து மொழிக்காரனும் கிளர்ந்தெழுவான், ஏனெனில் அவன் மொழியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்குத்தானே இருக்கிறது. வல்லரசு கனவில் இந்தியாவை மேலும் ஒருங்கிணைப்போம் என்று முயற்சிக்கும் அரசியல்வாதிகள் அதை மொழியால் செய்துவிட முடியும் என்று நினைத்து இந்தியை பல்வேறு மாநிலங்களில் திணிக்கிறார்கள். ஏற்கனவே நன்கு பொருளியல் ரீதியில் வளர்ந்திருக்கும் மாநிலங்களில் இந்த திணிப்பு நடைபெறும் போது இந்தி தெரிந்த பிற மாநில மக்கள் அந்த மாநிலத்திற்கு வேலை வாய்ப்புக்கு சென்று அந்த மாநிலங்களை ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். மொழிக்கலப்பு மற்றும் பண்பாட்டுக் கலப்பு என அந்த மாநில தனி அடையாளமே இவ்வாறு தான் சிதைக்கப்படுகிறது. ஒரு இந்தியன் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வசிக்க முடியும் என்பது அவனது உரிமை, ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரே மாநிலத்தில் அனைவரும் குவியும் போது அங்கு பிறந்தவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும்.
தாக்ரேக்கள் செய்வது அரசியலே என்றாலும் கூட அந்த அரசியலைக் கையில் எடுத்தால் அவர்களால் வெற்றிகரமகா அரசியலில் நிலைத்திருக்க முடியும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது. மொழிக்குறித்தான அரசியல் முன்னெடுப்பும், தற்காப்பும் அங்கு தேவையாக இருக்கிறது என்பதால் அவர்கள் அதைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் செயல் குற்றமாக தெரிந்தாலும் மொழி, நிலம் பாதுக்காப்பு தேவை என்னும் சூழல் இருப்பது உண்மை தானே.
ஜெமோ எழுதுகிறார், 'திராவிட இயக்கம் என்பது பிற்பட்ட மக்களுக்காக பிற்பட்டவர்களே உருவாக்கிய இயக்கம் இதே பெயரில் இல்லாவிடினும் இதே போன்ற தேவையில் பிற மாநிலங்களிலும் பிற்பட்ட மக்களின் இயங்கங்கள் தோன்றி அதிகாரத்தைக் கைப்பற்றின' உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், அதிகாரம் அப்போது வேறொருவர் அல்லது பெரும்பான்மை பிற்பட்டவர்களுக்கு எதிராக இருந்தது என்பதும் தானே உண்மை. ஒரு இயக்கம் வெற்றிகரமாக வளர்ந்திருந்தால் அதற்கான ஏக்கம், அந்த இயக்கத்திற்கான தேவை அதைச் சார்ந்தவர்களுக்கு இருந்திருக்கிறது அதனால் அவர்கள் அதை வளர்த்தெடுத்தார்கள் என்றும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். திராவிட இயக்கங்கள் பல்வேறாக பிரிந்தன் காரணம் பிற்பட்டவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட அதிகார கைப்பற்றுதலுக்கான, பங்கிட்டுக் கொள்வதற்கான தேவை அல்லது வேட்கை ஏற்பட்டது என்று வைத்துக் கொள்ளலாம். திராவிட இயக்கம் என்பது சாதி சார்பு இயக்கம் இல்லை என்பதால் கவனத்துடன் 'பிற்பட்டவர் இயக்கம்' என்ற சொல்லாடலை ஜெமோ பயன்படுத்தி இருக்கிறார். திராவிட இயக்கத்தின் தேவை மற்றும் அதன் வளர்ச்சி நாம் பார்த்தவை இதில் இயல்புக்கு மாறாக என்று எதுவுமே இல்லை. ஒரு இயக்கம் அதன் நோக்கத்தில், கொள்கையில் இப்போதும் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அது அதிகாரத்தைக் கைப்பற்றியதா என்பது தான் முக்கியம்.
ஒரு இயக்கத்தின் கொள்கை என்பது அந்த இயக்கத்தின் தோற்றம் மற்றும் பெயருக்கான குறைந்த அளவு திட்டம் மட்டுமே, நாளடைவில் அது நிறைவேறி இருக்கும், அல்லது அந்த நேரத்தில் அந்த கொள்கையி்ன் தேவையோ, தீவிரமோ தேவையற்றதாக இருக்கும். இன்று வரை திராவிட இயக்கங்கள் வெற்றிகரமாகவே இயங்குகின்றன, திராவிட இயக்கங்கள் இன்று வரை தேசிய கட்சிகளை தமிழகத்தில் மறு தலை எடுக்காமல் செய்துவிட்டன, இன்னும் கூட செய்து வருகின்றன. காரணம் தேசியம் சார்ந்த வேட்கைக்கு வழிவகை செய்யும் வழியாக, தேசியம் நல்ல நம்பிக்கையை தமிழர்களிடத்தில் ஏற்படுத்தவில்லை. தேசியத்தில் சிதையுண்டு அல்லது புதையுண்டு போன மாநிலங்களாக வடமாநிலங்கள் தெரிகின்றன. அவர்களின் ஒரே நம்பிக்கை மும்பாய் மகாராஷ்ட்ரா, புனே அங்கு தான் இந்தியுடன் போதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும் வகையில் முன்னேறி இருக்கிறது.
மகாராஷ்ட்ராவுக்கு பதிலாக குஜராத்துக்கு நலிந்தவர்கள் படையெடுக்கும் நிலை வந்தால் மோடி தாக்ரேவாக மாறுவார், தாக்ரேக்களைவிட மூர்க்கமாகவே செயல்படுவார். மாநிலங்களுக்கு சம உரிமையும், மாநில மொழிகளை மதிப்பதும், இந்தியைத் திணிக்காமல் இருப்பதாலும் தான் இந்தியா தேசிய ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முடியும். மற்றபடி அனைத்தும் இந்தியா நாம் அனைவரும் இந்தியர் என்பதெல்லாம் பள்ளி நேரத்தில் உறுதி மொழி எடுக்க மட்டுமே பயன்படும் வெற்று வாய்பாடுகள். தாக்ரேக்கள் சொல்லிக் கொடுக்கும் பாடம் ஏறுமா ? இல்லை பிற மாநிலங்களும் அதே போல் நடந்து கொண்டால் தான் இந்திய தேசியவாதிகளுக்கு புரியுமா ? என்று தெரியவில்லை. மும்பைக்கு அடுத்து பெங்களூரிலும் மொழித்திணிப்பிற்கும், மண்ணின் மைந்தர்கள் குறித்தும் போராட்டங்கள் தொடர வாய்ப்புண்டு. அவர்களும் ஒட்டுமொத்த பெங்களூரும் இந்தி பேசுவதில் நொந்து போய் இருக்கிறார்கள்