பின்பற்றுபவர்கள்

இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 மார்ச், 2012

தர்ஹா ஏ ஆர் ரஹ்மான் வஹாபிகள் !

இயக்குனர் ஷங்கர் மகனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அறிந்த ஏ ஆர் ரஹ்மான் ஷங்கர் குடும்பத்தினரை மவுண்ட் ரோடு தர்ஹாவுக்கு வரவழைத்து பாத்திஹா ஓதினாராம், சிறுவனும் குணமாகிவிட்டான், என்னுடைய நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு மகன் குணமானதற்கு ரஹமான் உதவி இருக்கிறார், அவரது பிசி ஷெட்யூலுக்கு நடுவே தனிப்பட்டு நேரம் செலவளித்தது எங்கள் மகனுக்காக உதவியது எனக்கு மிக்க நெகிழ்ச்சியாக உள்ளது என்று இயக்குனர் ஷங்கர் ஆனந்தவிகடனில் தெரிவித்திருந்தார். ஆவி ஆன் லைன் வெளி வெளியீட்டில் இதைப் படித்தேன், ஆன் லைன் வெளியீட்டில் கருத்துரைகளுக்கு (பின்னூட்டம்) இடமளிக்கிறது ஆவி.

"எவ்வளவு பிஸியானவர்? எவ்வளவு பேர் அவர் ஸ்டுடியோவில் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபி மானியா சில மணி நேரங்களை அர்ஜித்துக்காகச் செலவழிச்சது என்னை நெகிழவெச்சுக் கண் கலங்க வெச்சிருச்சு.

நம்ப மாட்டீங்க... ஆச்சர்யமான ஆச்சர்யம்! ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடி ஆகிட்டான். 'எப்படி இது சாத்தியம்’னுலாம் நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்!'" - Director Shakar


வழக்கம் போல் பின்னூட்டமாக வகாபி இஸ்லாமியர்களில் ஒருவர் 'ஏ ஆர் ரஹ்மான் மனம் திருந்தவேண்டும், படைத்தவனை வணங்க வேண்டும் படைப்பை அல்ல' என்று உதிர்த்துவிட்டு சென்றிருந்தார், இன்னும் அது போன்று நிறைய பின்னூட்டங்கள், சூஃபி இச அடைப்படையில் இந்தியாவில் இஸ்லாம் கால் ஊன்ற பரவ ஊன்று கோல் கொடுத்து இருந்தது நன்கு தெரிந்தும் சூஃபி இசத்தை அழித்துவிட தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது வளைகுடாவின் ஆதரவுடன் தமிழகத்தில் பரவி வரும் வஹாபி இசம். அவர்களது முயற்சியில் வளைகுடாவில் பணி செய்யும் தமிழகத்து முஸ்லிம் இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ள வெளிப்படையான சூஃபிகளின் மீதான வன்மங்களை இணையங்களிலும் பார்க்க முடிகிறது, சூஃபி இஸ்லாமிய பதிவர்கள் ஓரளவு பதிலும் கொடுத்துவருகிறார்கள், வஹாபிகள் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். சூஃபி இசத்தின் முக்கிய நிகழ்வான ஏர்வாடி, நாகூர் சந்தனக் கூடுகளின் விழாக் கோலம், உற்சாகம் அனைத்தும் களை இழந்து காணப்படுகிறது, முன்பு 10 நாள் திருவிழாவாக நடக்கும் சந்தனக் கூடு உற்சவம் தற்பொழுது எப்பொழுது வருகிறது போகிறது என்றே அறிய முடியவில்லை.

குறிப்பாக தர்கா திருவிழா, சந்தனக் கூடு உற்சவம் இந்துக்கள் - இஸ்லாமியர் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி இருந்தது, விழாக்களின் உற்சாகம் குறைய, இந்துத்துவாக்களின் இஸ்லாமிய எதிர்ப்பு பரப்புரை, வஹாபிகளின் மிரட்டல் மற்றும் ஏக இறைவன் பிரச்சாரம் என்பதாக கடந்த 20 ஆண்டுகளில் சந்தனக் கூடு உற்சவங்கள் பெயரளவுக்கே நடக்கிறது. நாகூர் - நாகப்பட்டினம் சாலைகள் முன்பெல்லாம் 10 நாட்கள் களைகட்டி இருக்கும், பெரிய கப்பல் சாலையில் ஓடுவது போல் கப்பல்களை சர்கரங்களில் இழுத்துச் செல்வர், சிறுவர்களும் அவர்கள் பங்கிற்கு சிறிய வடிவ கப்பல்களை இழுத்துச் செல்வர், சந்தனக் கூட்டிற்கு இந்து - இஸ்லாமியர் பேதமின்றி மாலைகளை வாங்கி அதன் மீது வீசுவர், சந்தனக் கூட்டில் அமர்ந்திருப்பவர்கள் இருபக்கத்திலும் கூடி இருக்கும் மக்களுக்கு நல்லாசிகள் செய்து கொண்டே செல்வர். பின்னால் வரும் சாம்ப்ராணி வாகனம் நகரெங்கிலும் நறுமனம் பரப்பிச் செல்லும்.

ஆண்டு தோறும் 20 ஆண்டுகளுக்கு முன்பான காட்சிகள் இவை தான், நாகை - நாகூர் இஸ்லாமிய இளைஞர்கள் வளைகுடாவிற்கு வேலைக்குச் சென்று வரத் துவங்கிய பொழுது தான் நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது, இஸ்லாமிய இளைஞர்களிடையே வழக்கத்திற்கு மாறான அடர்த்தியான தாடி, நெற்றியில் தெரியும் தொழுகை தடம் என மாறிப் போய் இருக்க சிறுவயதில் என்னுடன் பம்பரம் விளையாடிவர்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை. நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட எதிரே பார்க்கும் போது வெறும் புன்னகையுடன் கடந்து சென்றனர். அவர்களும் அவர்களைப் போன்றவர்களும் வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே, தர்ஹாவை புறக்கணிக்க வேண்டும் என்று கூறித் தொடங்கினர், ஜமாத்துகளிலும் பிளவுகள் தர்ஹா கொண்டாட்டங்கள் முற்றிலுமாக களை இழந்துவிட்டது.

இந்த நிலை தொடர்ந்தால் தர்ஹா எனப்படும் அடக்கத் தளங்கள் நாளடைவில் பராமரிப்பின்று அழியும், அப்படியும் மீறி தர்காவிற்குச் செல்பவர்கள் மிரட்டப்படுவார்கள், தர்ஹாக்களை அகற்ற இந்துத்துவாக்கள் தனியாக சதி செய்யத் தேவை இன்றி அனைத்து 100 ஆண்டுகள் புகழ்வாய்ந்த தர்ஹாக்களும் அழிக்கப்பட்டுவிடும்.

******

மேற்சொன்னது போல் இந்தியாவில் இஸ்லாம் காலூன்ற சூஃபி இசமே அடிப்படை, இந்திய சமயங்களின் வழிபாட்டு முறைகளுடன் இஸ்லாமிய ஞானிகள் சூஃபி இசத்தை தாழ்தப்பட்டவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்தெடுத்தனர், இன்றைய வஹாபி இச வழிமுறைகளுடன்(தென்) இந்தியாவில் இஸ்லாம் பரப்ப முயற்சி செய்யப்பட்டிருந்தால் எவ்வளவு பேர் மதம் மாறி இருப்பார்கள் ? குப்பனும் சுப்பனும் ஒரே நாளில் தங்களது அனைத்து பழக்கவழங்கங்களையும் விட்டுவிட்டு ஓரிறைவனை நினையுங்கள் இது தான் இஸ்லாமிய மார்க்கம் என்று கூறி இருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்களா ?

தீண்டாமைக்கு எதிராக மதம் மாறியது என்பதை தவிர்த்துப் பார்த்தாலும் ஏழை எளியவர்களின் கடவுள் நம்பிக்கை என்பது நோய் தீர்க்கும் மருந்து அளவுக்குத்தான், காய்சல், பூச்சிக்கடி, வயிற்றுவலி அனைத்திற்கும் பச்சிலை வைத்தியம் பார்ப்பார்கள், சூஃபிகள் இறை நம்பிக்கையோடு அதனை ஓதி அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்கள் பெயரில் இறைவனிடம் கேட்டுக் கொள்ளும்படி இறையடியார்களாக அடக்கமானவர்களிடம் தெரிவிப்பார்கள் இது தான் பாத்தியா ஓதுதல் என்பது. நம்பிக்கை உடையவர்களுக்கு எதுவும் விரைவில் சரியாகும் என்பது போல் தான் நோய்களும், கடவுளிடம் வேண்டியாகிவிட்டது இனி சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் மன பலம் உடல் பலம் சேர நோய்கள் குணமாகும். சூஃபிகள் தன்னை நாடிவருபவர்களுக்கு மருத்துவம் பார்த்து மன நிலையை சரி செய்ய வழிபாடு செய்வார்கள், இந்த முறையில் தான் 'திலிப்' பாக இருந்த ஏ ஆர் ரஹ்மான் சூஃபி இசத்தில் உள்ளவர் உதவியுடன் தன் குடும்பத்தில் யாரோ செய்த 'ப்ளாக் மேஜிக்' எனப்படும் சூனியம் வேலை செய்து (எனக்கு இதில் நம்பிக்கை இல்லை) குடும்பத்தைப் பாடாய் படுத்த அதிலிருந்து மீண்டதால், பிறகு தன்னை இஸ்லாமிய மார்க்கத்தவராக மாற்றிக் கொண்டார். இது பல ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மானே ஆனந்தவிகடனிலோ, குமுதத்திலோ தெரிவித்தது தான்.

'சே.திலிப்' என்பவர் 'அல்லா ராக்கா ரஹ்மான்' என்று பெயர் மாற்றம் மதம் மாற்றம் செய்து கொள்ள காரணமாக அமைந்தது சூஃபி வழியினரும், அவர் சென்று வந்த தர்ஹாவும் தான், வாஹாபிய நம்பிக்கை அவரை இஸ்லாமிற்குள் இழுத்துவரவில்லை, தர்ஹாக்கள் இல்லை என்றால் ஏ ஆர் ரஹ்மான் திலிப்பாகவே இருந்திருப்பார்.

"குணப்படுத்த முடியாத உனது கடுமையான நோயை மருத்துவர் குணப்படுத்தினார் என்பது உண்மையில்லை அவர் கொடுத்த மருந்தே நோய் குணமானதற்கு காரணம், எனவே மருத்துவரை மற மருந்தை மட்டுமே நினை"
என்பது போன்ற வாதம் தான் வஹாபிகளுடையது, நன்றிப் பெருக்கு உடையவர்கள் இவ்வாறு செய்வார்களா ? என்றெல்லாம் யோசிப்பது இல்லை.

ஏ ஆர் ரஹ்மான் மனமாற்றத்திற்கு ஆதாரனமானது சூஃபி இசம், அதை மறந்துவிட்டு தர்ஹா வணக்கம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறினால் அதன் பிறகு ரஹ்மானின் நம்பிக்கையில் என்ன இருக்கிறது ? அதை அவரும் அவ்வளவு எளிதில் விட்டுவிட விரும்புவாரா ?

******

வட இந்தியாவில் எப்படி என்று தெரியாது வாளால் பரவியது என்ற பேச்சும் உண்டு, ஆனால் தென்னிந்தியாவில் இஸ்லாம் பரவ சூஃபி இசமே முக்கிய காரணம், அதனை முற்றிலும் அழித்துவிடும் போது இந்து - இஸ்லாமிய மக்கள் ஒற்றுமை முற்றிலும் சிதையும், மக்கள் மத அடிப்படையில் தனித் தனி தீவுகளாகவிடுவர். பதிவுலகில் கூட சூஃபி இசத்தை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் நெருக்கமானவர்களாக உள்ளனர், வஹாபிகளில் ஒரு சிலரே அப்படி இருக்கின்றனர், ஏனெனில் அடிப்படையில் வஹாபிகளுக்கு போதிக்கப்படுவது

இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு இறைநிராகரிப்பாளர்களான காஃபிர்களை உங்களது உற்ற தோழர்களாக
ஆக்கிக் கொள்ளாதிர்கள். (அல்- குர்ஆன் 4:144)


உற்ற தோழர்கள் என்றால் உங்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் தான். (அல்- குர்ஆன் 5:2)

இங்கே இறை நிராகரிப்பவர்கள் எனப்படுவர்கள் வஹாபிகளைப் பொறுத்த அளவில் பிறமதத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் முற்றிலுமாக இறை நம்பிக்கையே இல்லாவதர்களும் தான். அனைவரையும் காஃபிர் என்று நிராகரிப்பது உண்மையெனில் இஸ்லாம் மதத்தை யாரிடம் எடுத்துச் சொல்லுவது மதத்தை எப்படிப் பரப்புவது ? இங்கு தான் வஹாபி இசமும் சூஃபி இசமும் மாறுபட்டு பொருள் கொள்கிறது. பிரமதத்தைச் சார்ந்தவர்கள் நிராகரிக்கக் கூடியவர்கள் அல்ல அவர்களது வழிபாட்டு முறையும் கடவுளின் பெயரும் வேறு என்றாலும் இறையடியார்கள் பிறமதத்தினர் அனைவரும் ஒரே இறைவனைத்தான் வழிபடுகின்றனர் என்ற புரிந்துணர்வை கொண்டுள்ளனர் சூஃபிகள்.

இந்திய பண்பாடு, பழக்கவழக்கம், சமய நம்பிக்கைகள் மத நல்லிணக்கம் என சமூகம் சார்ந்த அனைத்திலும் புரிந்துணர்வை கொண்டு இருப்பவர்கள் சூஃபிகளே. சூஃபிகளால் இந்தியாவில் வளர்ச்சி கண்டு வந்த இஸ்லாம் வஹாபிகனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சொல்கிறேன் ஏ ஆர் ரஹ்மான் இஸ்லாமியராக மாறினார் என்றால் அது சூஃபிகளினால் அவர்களது தர்ஹாக்களாலும் தான்.
ஏ ஆர் ரஹ்மான் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் நேசிக்கப்படுபவராக உணரப்படுவதும் அவரது செயல்முறைகளினாலும் அவரது 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று அடிக்கடிச் சொல்லுவதாலும் தான் அன்றி அவர் ஒரு அடிப்படை வாத வஹாபிய இஸ்லாமியராக இருந்திருந்தால் அவர் ஒரு இஸ்லாமிய இசையமைப்பாளர் என்ற அளவில் தான் அதுவும் இசைக்காக பேசப்படுவார்.

வஹாபிகள் இன்னும் கூடுதலான வன்மத்துடன் சூஃபிகள் இஸ்லாமியர்கள் இல்லை உம்ரா (காஃபாவுக்கு புனித பயணம்) செய்யத் தகுதியற்றவர்கள் என்று சொல்லி தடுத்துவிட்டால் இஸ்லாம் மதத்திலிருந்து சூஃபிகள் தனி மதம் கண்டுவிடுவார்கள் பிறகு அஹமதியா மார்கம் போல் சூஃபி மார்க்கம் என்று வெளிப்படையாகவே பிளவு ஏற்பட்டுவிடும், ஒட்டு மொத்த இஸ்லாமியர் எண்ணிக்கை கனிசமாக குறைந்துவிடும் என்று கொஞ்சம் அடக்கிவாசிக்கிறார்கள்

எனக்கு தெரிந்து எந்த சூஃபியும் இறைவனுக்கு இணைவைப்பவர்கள் இல்லை, இறையடியார்களிடத்திலும் அன்பு செலுத்துபவர்கள் மட்டுமே. மனைவியையும் நேசிப்பது என்பது பெற்றோர்களை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று விளக்கம் சொல்லுகிறார்கள்

எதிர்படும் தெரிந்தவருக்கு வணக்கம் சொல்லுவதைக் கூட இறை 'வணக்கத்துடன்' ஒப்பிட்டுப் பார்த்து இறைவனைத்தவிர வேறு யாருக்கும் வணக்கம் சொல்லக் கூடாது சொல்லும் வஹாபிகளிடம் சூஃபிகளின் விளக்கம் எடுபடுமா ? விளங்கிக் கொள்ளத் தேவை இல்லை என்கிறார்கள் சூஃபிகள்.

"அல்லா......! வஹாபிகளிடம் இருந்து இஸ்லாமியர்களை காப்பாற்று
குரானை அவர்களே ஓதிக் கொள்வார்கள்" என்று சொல்லத் தோன்றுகிறது

இன்ஷா அல்லா !

30 ஆகஸ்ட், 2011

நோன்புத் திருநாள் வாழ்த்துச் சொல்ல தயங்குவதேன்...!

சென்ற முறை தை 1 ஐ புத்தாண்டாக கொண்டாடிய போது நண்பர் ஒருவரிடம் உங்களுக்கு சித்திரை 14 தான் புத்தாண்டு அதை நான் குறைச் சொல்லவில்லை, ஆனால் தை 1ல் கொண்டாடும் எங்களுக்கு வாழ்த்துச் சொல்ல தயங்குவதேன் ? என்று கேட்டேன், வாஸ்தவம் தான் எங்களுக்கும் சித்திரை 14 க்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல நீங்க மனசு வைத்தால் நான் இப்பச் சொல்லத் தயக்கம் இல்லை என்றார். சரியெனப்பட்டது, அவரும் தை 1க்கு பொங்கல் வாழ்த்துடன் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார், நானும் ஏப்ரல் 14 சித்திரை ஒன்றில் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொன்னேன்.

நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் புழங்காத போது இஸ்லாமிய பண்டிகைகளுக்கு இஸ்லாமிய அன்பர்களுக்கு வாழ்த்துச் சொல்வது வழக்கம். அவர்களுக்கும் இந்து பண்டிகைகளுக்குச் சொல்லுவார்கள், இங்கு இணையத்தில் படிக்கத் துவங்கிய போது மதங்களும் அதன் பல்வேறு கோர முகங்களும் அறிமுகமாகின, அதன் பிறகு மதவாத விமர்சனமாகவே அனைத்து மதங்களையும் கண்ணியத்துடன் தான் நான் விமர்சனம் செய்துவருகிறேன். மதம் சார்ந்த பண்டிகைகளில் நான் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதும் இல்லை, இந்நிலையில் இஸ்லாமியர்கள் பிற மதத்தினர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லாமா ? என்பது போன்ற கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தது, அதில் குறிப்பிட்டவாறு,

கேள்வி : மாற்றுமத நண்பர்களுக்கு புது வருடம், கிருஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் மற்றும் பிறந்த நாளின் போது வாழ்த்து
சொல்லலாமா? வாழ்த்து அட்டைகள் அனுப்பலாமா? (மன்சூர், யாகூ மெயில் மூலமாக)

மாற்று மதத்தவர்களுக்கு கிருஸ்துமஸ் போன்ற அவர்களது பெருநாட்களின் போது வாழ்த்துச் சொல்வது கூடாது என்பது
எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது தமது ‘அஹ்காமு அஹ்லித்திம்மா’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். ‘மாற்று மதத்தினரின் விசேஷ நிகழ்ச்சிகளின் போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாழ்த்துச் சொல்லக் கூடியவர் ‘குப்ர்’ என்னும் இறைநிராகரிப்பு அளவுக்குச் செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலுவையை வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம் கூடியது என்று கூடச் சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக அல்லது பித்அத்திற்காக அல்லது குப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர்
அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்’

இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவது போல் வாழ்த்துக் கூறுவது ஹராம் என்று சொல்லக் காரணம், வாழ்த்துபவர்
வாழ்த்தப்படுபவரின் இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களை அங்கீகரிக்கின்றார் என்பதனலாகும்.

வாழ்த்தப்படுபவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ
இருப்பினும் சரியே!

மாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும்
கூடாது. ஏனெனில் அது நமது பெருநாள் அல்ல. தனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை.

அவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது.

மேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, அதுவும்
ஹராமாகும்.

‘எவர் பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது)

அஷ்ஷெய்க் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ‘மாற்று மதத்தவர்களின் விசேஷ தினங்களில் அவர்களை வாழ்த்துவது அவர்களது வாழ்த்துக்குப் பதில் சொல்வது, அத்தினங்களில் அவர்களது அழைப்பை ஏற்று அவர்களது விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல் அல்லது அத்தினங்களை கொண்டாடுவது அனைத்தும் கூடாது. அவ்வாறு செய்பவர் பாவியாவார். இவற்றை ஒருவர் முகஸ்துதிக்காகவோ அன்பினாலோ அல்லது வெட்கத்தினாலோ செய்தாலும் அவர் பாவியாவார். ஏனெனில் அல்லாஹ்வுடைய தீனில் காம்ப்ரமைஸ் என்னும் (சமரசத்திற்கு) இடம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

http://islamiyadawa.com/new/?p=529

******



இவற்றையெல்லாம் படித்தபிறகு ஈமான் (நம்பிக்கைக்) கொண்ட இஸ்லாமியர் ஒருவர் பிற மதத்தினரின் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்வதே அவர்களின் மதக் கொள்கைக்கு எதிரானதாகும் என்று விளங்கியது, இந்த நிலையில் சிலைவழிபாட்டையும், இஸ்லாம் அடிப்படை மீது நம்பிக்கையற்றவர்களின் வாழ்த்துகளையும் அவர்கள் வரவேற்பதில்லை என்று விளங்கியது. அதிலிருந்தே பொதுவாக அனைத்து இஸ்லாமியர்களுக்கு நல்வாழ்த்து என்னும் சீசன் வாசகங்களை பதிவுகளில் வாழ்த்தாக எழுதுவதைத் தவிர்த்து நெருங்கிய மற்றும் நட்பைப் பெரிதாகவும், வாழ்த்தை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் நண்பர்களுக்கு மட்டுமே சொல்வது வழக்கமாகியுள்ளது, இப்பதிவின் மூலம் மாற்று மத அன்பர்களின் நல்வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாமிய நண்பர்களுக்கு நோன்புத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் நம் வாழ்த்துகளை புறந்தள்ளும் போது பொதுவாகச் சொல்வதும் தேவையற்றதாகவும், தயக்கத்திற்குரியதாகவும் உணர நேரிடுகிறது.

மிகச் சிலரின் கருத்துகளை இஸ்லாமியக் கருத்தாக வைக்கலாமா ? சரிதான், ஆனால் அந்த ஒருசிலரின் கருத்துக்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட மற்ற இஸ்லாமியக் கருத்துகளை நான் அறிந்ததில்லை.

2 ஜூன், 2011

சோ இராமசாமியும் சுவனப்பிரியனும் !

பெண்கள் கார் ஓட்டுவதற்கு சவுதி அரேபியா ஏன் தடைவிதித்திருக்கிறது என்பதற்கு அறிவுப்பூர்வமான ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார் திருவாளர் சுவனப்பிரியன். இவரது புனைப்பெயரிலேயே இவர் எவ்வளவு சுவனத்தின் மீது ஆசை கொண்டிருக்கிறார் என்பது தெளிவு, நண்பருக்கு சுவனத்தில் நித்திய கன்னிகைகள் தேவைக்கு மிஞ்சியே கிடைக்க வாழ்த்துகிறேன். சுவனத்தின் நித்திய கன்னிகைகளை நாம் மறந்தாலும் இவரது புனைப்பெயரே இவர் பதிவிடும் பொழுதெல்லாம் அதை நினைவுபடுத்திவிடுகிறது. பிரச்சனை அதுவல்ல.

*****

பெண்கள் கார் ஓட்டுவதை சவுதி அரசு தடைசெய்வதற்கு காரணம் பெண்களின் பாதுகாப்புக் குறித்ததாம். அதாவது தனியாக கார் ஓட்டிச் சென்று ஏங்கேயாவது காமுகர்களிடம் சிக்கிக் கொண்டால் அந்த பெண்களின் கதி என்ன ஆகும் என்று சவுதி அரசு கவலைப்பட்டே இந்த சட்டத்தை சவுதி அரசு இயற்றி நடைமுறைப்படுத்தி வருவதாக இவரே ஊகமாக சொல்லி இருக்கிறார், சவுதி அரசு பெண்கள் கார் ஓட்ட தடை குறித்த காரணங்களை சுவனப்பிரியன் சொல்வது போல் எங்கும் குறிப்பிடவில்லை. இதற்கு அடைப்படைக்காரணம் பெண்(கள்) அல்லது மனைவி(கள்) தனியாக கணவர் துணையின்றி வெளியே செல்லக் கூடாது என்கிற குரான் அறிவுறுத்தல் மட்டும் தான். மேலும் குரான் உருவான காலத்தில் கார் என்று ஒரு வாகனமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குரான்படி பார்த்தாலும் பெண்கள் கார் ஒட்டுவதற்கு அவர் கணவர் கூடவே செல்லும் போது தடை ஏதும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம், சவுதி அரசு குரானைக் காரணம் காட்டி பெண்கள் கார் ஓட்டுவதை தடை செய்திருப்பது முற்றிலும் ஆணாதிக்க மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலையே. இதை எந்த ஒரு சப்பைக்கட்டாலும் சரி என்று சொல்லிவிடமுடியாது. சவுதி தவிர்த்து ஏனைய மலேசியா, இந்தோனேசியா, துபாய் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி இருப்பதை ஒப்பு நோக்குகையில் குரானை சாக்கிட்டு சவுதி தடை விதித்திருப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை.

பெண்கள் கார் ஓட்டுவதை தடுப்பதற்கு சவுதி அரசு மாற்று வழிகளை அனுமதித்திருப்பதில் மிகவும் தரக்குறைவான ஒன்று, பெண்களுக்கு ஓட்டுனர்களாக இருப்பவர்கள் உறவுக்காரர்களாக இருந்தால் தடை ஒன்றும் இல்லை, அப்படி உறவுக்காரர்களாக இல்லாதவர்கள் ஓட்டுனர்களாக அமைத்துக்கொள்ள குறிப்பிட்ட பெண்கள் ஓட்டுனராக ஆக இருப்பவருக்கு முலைப்பால் கொடுக்க வேண்டுமாம். ஒருமுறை முலைப்பால் குடித்துவிட்டால் பிறகு ஓட்டுனர் இரத்த உறவுக்குள் வந்துவிடும் அந்நியர் அல்லாதவர் ஆகிவிடுகிறாராம். கார் ஓட்ட அனுமதிப்பதை தடைசெய்ய இது போன்ற இழிசெயல்களை நடைமுறையில் வைத்திருப்பது எவ்வளவு கீழான செயல் என்பதை சுவனப்பிரியன் தெரிந்தும் அதைக் கட்டுரையில் குறிப்பிடவே இல்லை.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கார் ஓட்ட அனுமதியில்லை என்றால் நகருக்குள் பேருந்து ஓட்ட அனுமதித்து பெண்கள் ஓட்டுனர் ஆவதற்கு எந்த தடையுமில்லை என்று சவுதி முன்மாதிரியாக இருந்திருக்கலாமே. இவரின் சப்பைக்கட்டின்படி வெளியே தனியே செல்லும் பெண்களுக்கு என்ன என்ன பாதுகாப்புக் குறைபாடு காரணங்கள் இருக்கிறதோ அதே காரணம் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கும் இருக்கும் என்பதை இவர் சிந்திக்கவே இல்லை.

மேலும் திரு சுவனப்பிரியனின் பின்னூட்ட பொன்மொழிகளில் ஒன்று கிட்டதட்ட சோ இராமசாமியின் பெண்கள் குறித்த கூற்று போலவே அமைந்திருக்கிறது.

"என்னதான் நாம் சமத்துவம் பேசினாலும் ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக ஒரே அளவு கோலை பல இடங்களில் நாம் கடை பிடிப்பதில்லை. மேலாடை இல்லாமல் ஆண்களாகிய நாம் சுதந்திரமாக வர முடியும். அதே அளவு கோளோடு பெண்களும் வெளியில் வர முடியுமா? நாம் அனுமதிக்க மாட்டோம். மூட்டை தூக்குதல், பாரங்களை இழுத்தல் போன்ற உடல் சார்ந்த வேலைகளை நாம் பெண்களை செய்ய அனுமதிப்பதில்லை. ஏனெனில் அவர்களின் உடல் மென்மையானது. ரெஸ்லிங்கில் விளையாடும் பெண்களை பார்த்தால் அங்கு பெண்மை நமக்கு தென்படுகிறதா? ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பும் இதனால் குறைந்து விடும். "

இதில் " ரெஸ்லிங்கில் விளையாடும் பெண்களை பார்த்தால் அங்கு பெண்மை நமக்கு தென்படுகிறதா? ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பும் இதனால் குறைந்து விடும். " என்பது தவிர்த்து இவை 100க்கு 100 சோ இராமசாமியின் பொன்மொழிகள் ஆகும்.

ரெஸ்லிங்மட்டுமல்ல, பலுத்தூக்கும் பெண்களுக்கும் உடல் கட்டுக்கட்டாகத்தான் இருக்கும். ஓட்டப்பந்தயங்கள், மாரத்தான் பெண்களுக்கும் கூட உடல் தசைகள் இறுக்கமாகத்தான் இருக்கும். இவர் கூற்றுப்படி விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் பெண்மையின் மென்மை இல்லாமல் ஆண்களைப் போன்று ஆனவர்களாம், இவர்களைப் பார்த்து ஈர்ப்பு வராதாம். அப்படி என்றால் அவர்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்களெல்லாம் ஆண்களே இல்லை என்று இவர் சொல்லுகிறார் போல. கட்டுமஸ்தான உடல் உடைய ஆண்களை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வோம் என்று பெண்கள் கூறினால் 99 விழுக்காடு ஆண்களுக்கு திருமணமே ஆகாது. அல்லது ரெஸ்லிங் ஆண்களின் உடல்கட்டைப் பார்த்து பெண்களுக்கு ஈர்ப்பு வருது என்று ரெஸ்லிங்க் ஆண்ககளின் உடல்பயிற்சியை தடைச் செய்யச் சொல்லுவாரா ?

சவுதி கார் ஓட்டுவதை தடை செய்திருப்பதற்கு ஒட்டு மொத்தமாக விளையாட்டுத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெண்களைப் பற்றி மிகக் கேவலமாக கருத்தொன்றை உதிர்த்திருக்கிறார், இவர் ஒன்றும் இஸ்லாமுக்கு முன் மாதிரியோ பின்மாதிரியோ கிடையாது என்பதால் நான் இவரின் கருத்தை இஸ்லாமிய கருத்தாகப்பார்க்காமல் இஸ்லாமிய அடிப்படை வாதியின் கருத்தாகவே பார்த்து எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்தான் அல்குரானை அன்றாடம் ஓதுவர் ஆகிற்றே இவருக்கு ஏன் ரெஸ்லிங் பெண்கள் மீது பார்வை போனது ? அல்லாவுக்கே வெளிச்சம். குரான் கட்டுப்பாட்டின் படி ரெஸ்லிங் பெண்கள் சுவனம் புகமுடியாது என்பதால் இவருக்கு கிடைக்கும் நித்திய கன்னிகைகளில் ரெஸ்லிங்க் பெண்கள் இருக்கமாட்டார்கள் என்று நம்பி ரெஸ்லிங்க் பெண்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

இன்சா அல்லா...........!

பலவித சமூக பழமை வாதக்கருத்துகளில் பார்பனிய அடிப்படை வாதிகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் வேறுபாடே இல்லை. குறிப்பாக ஓரிறைக் கொள்கையை வழியுறுத்த சுவனப்பிரியன் போன்றோர் இந்துவேதங்களில் இருந்து மேற்கோள் காட்டுவதில் இருந்து கூட இதனை தெரிந்து கொள்ளலாம். ஹுசைனம்மா உள்ளிட்டோர் கூட இவரது கருத்துகளில் சிலவற்றை ஆதரிப்பது இவருக்கு டானிக் கொடுத்தது போல் இருப்பதால் இவர் கண்டபடி கருத்துகளை திணித்துவருகிறார் என்பது கவலை அளிக்கிறது, இவரது கருத்துகளினால் இஸ்லாம் ஒரு அடிப்படைவாத மதம் என்றே மீண்டும் மீண்டும் பிறமதத்தினரை எண்ண வைத்துவிடுகிறது என்பதை இஸ்லாமிய பதிவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சுவனப்பிரியனின் ஆணாதிக்க கருத்துகளை பின்னூட்டத்தில் பொடி(புடை)த்த பதிவர் இக்பால் செல்வனுக்கு பாராட்டுகள்.

பின்குறிப்பு : திரு சுவனப்பிரியன் உங்கள் மீது எனக்கு எந்த காழ்புணர்வும் இல்லை, விமர்சனங்களெல்லாம் உங்களின் கீழான கருத்துகளின் மீது தான். பார்பனிய அடிப்படை வாதிகளுக்கும் இதைத்தான் நான் செய்கிறேன்.

14 பிப்ரவரி, 2011

முஸ்லிம்களும் மூன்றாம் பாலினமும் !

ஒரு சில மீன் வகைகள், தவிர இனங்கள் தவிர்த்து ஆண் / பெண் இருத்தன்மை ஒன்றாக அமையப்பட்ட உயிரினம் மிகக் குறைவு. ஒரு செல் உயிரிகளுக்கு பால் அமைப்புகள் கிடையாது அவை தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும். உயிரின இனப் பெருக்கத்திற்கு உயிர்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் உயிர்களை எப்போதும் உற்பத்தி செய்து கொண்டிருக்க முடியும் என்கிற விதியில் ஏற்பட்ட பிரிவுகளே ஆண் / பெண் அமைபு. ஈர்ப்பு என்பது இன்பமாகவும் அதன் விளைவுகள் இனப் பெருக்கம், அவ்வாறு பெருகும் இனத்திற்கு பாதுகாப்பான தாயன்பு என்கிற இணைப்பு அவற்றின் பருவ வயது வரையிலான வளர்ச்சிக்கு இயற்கை ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு அமைப்பே ஒரே உயிரினத்தின் பால் வேறுபாடுகள். உடலமைப்பும், இனப்பெருக்க உறுப்புகளும் ஒரு உயிரனத்தை ஆண் பெண் என்று காட்டுகின்றன என்றாலும், இந்த இரண்டு பிரிவும் ஒன்றை ஒன்று உற்பத்தி செய்யும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. பால் உறுப்புகள் தவிர்த்து ஒரு ஆண் தன் வடிவத்தைப் போன்ற பெண்ணிற்கு தந்தையாவதும், ஒரு தாய் தன் உருவத்தை ஒத்த ஆணைப் பெற்றெடுப்பதற்கும் இயற்கை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. இவ்வாறு உருவம் பெற்றிருக்கும் உயிரினங்கள் தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் அறிந்து கொள்ள முதல் காரணம் அவற்றின் உடலமைப்பு தான். மனித இனத்தில் மனிதன் சமூகமாக மாறவில்லை என்றால் இந்த ஆண் / பெண் பிரிவுகளில் உடலும் மனமும் சரியாகவே பொருந்தி இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு ஆண் தன்னை பெண்ணாக உணர்வதற்கும், ஒரு பெண் தன்னை ஆணாக உணர்வதற்கும் உடல் குறித்த காரணங்களை விட சமூகம் குறித்தக் காரணங்களே முதன்மையாகிறது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சமூக அமைப்பில் தான், இவற்றை மீறிய மூன்றாம் பாலினமாக மனிதர்கள் தோன்றுகிறார்கள்.

ஆண் பெண் பாகுபாடின்றிய காட்டுவாசிகளிடமோ, நரிக்குறவ்ர்களிடையோ மூன்றாம் பாலினர் உற்பத்தி ஆகுவதில்லை என்றே நினைக்கிறேன், அங்கே இனப் பெருக்கம் மட்டும் அதைச் சார்ந்த ஈர்ப்பு என்பதைத் தவிர்த்து ஆண் / பெண் மனங்கள் எதுவும் கிடையாது, வேட்டையாடுதல், தொழில்கள் ஆகியவற்றை இருவரும் சேர்ந்தே செய்கிறார்கள். நாகரீக வளர்ச்சி பெற்ற சமூகத்தில் தான் பெண்ணுக்கான இலக்கணமும், ஆணுக்கான இலக்கணமும் புழக்கத்தில் இருந்து வாழ்க்கைத் தரமாக ஆகிவிட்ட படியால், உடலும் மனமும் ஒன்றிணைந்து மூன்று வயதின் பிறகு ஒரு குழந்தை தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைக்கத் துவங்குகிறது. பருவ வயதினில் ஏற்படும் உடலியல் மாற்றங்களில் அதை உறுதி செய்து கொள்கிறது. எதிர்பாராவிதமாக ஒரு சிலரின் பருவமாற்றங்களில் ஏற்படும் கோளாறுகள் வேறுமாதிரியான (சுரப்பிகளைத் தூண்ட அல்லது கட்டுப்பட்டு) விருப்பங்களை ஏற்படுத்த தன்னுடைய பாலினம் உறுதி செய்ய முடியாத சிக்கலுக்குச் செல்லவே அவர்கள் குழப்பத்தில் சென்று புதிய முடிவுகளை எடுக்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். இவர்கள் தான் மூன்றாம் பாலினர். இவ்வாறு ஒரு ஆண் தன்னை ஒரு பெண்ணாக நினைத்து மூன்றாம் பாலினர் நிலை அடைவது என்பது அவராக விரும்பி ஏற்றுக் கொண்ட நிலை இல்லை, உடல் மற்றும் மனச் சூழலலால் அமையப் பெற்றதே. பிறக்கும் போது ஒருவர் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்தாலும் அதன் முழுமை என்பது பருவ மாற்றங்களினால் பெறப்படுவதே. ஆகையால் ஒருவர் ஆணா பெண்ணா என்பதை பிறப்பு முடிவு செய்வதில்லை அதை பருவ வயதே முடிவு செய்கிறது. இவற்றை மதம் மற்றும் குரான் வசனங்களைக் காட்டி இஸ்லாமிய சமூகம் ஒப்புக் கொள்வதில்லை. காரணம் அல்லாவின் படைப்பு ஆணையும் பெண்ணையும் தான் படைக்கிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் ஒருவரை அல்லா படைக்கவே இல்லை என்கிறார்கள்.

ஒரு சில கட்டுபாடுகளை மூன்றாம் பாலினத்தினர் மீது இஸ்லாமிய நாடுகள் விதித்திருக்கிறது. அதாவது மூன்றாம் பாலினம் என்கிற சொல்லே இஸ்லாத்திற்கு எதிரானது ஆகவே மூன்றாம் பாலினத்தில் ஆணுறுப்பு உடையவர்கள் தன்னை ஆண் என்றோ பெண் என்றோ அழைத்துக் கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஈரான் போன்ற தீவிர இஸ்லாமிய நாடுகளில் மூன்றாம் பாலினர் தன்னை பெண்ணாக அறிவித்துக் கொள்ள ஆண் உறுப்பை நீக்கிக் கொண்டவராக இருக்க வேண்டும், இதற்கு சட்டத்திலும் அனுமதி உண்டு. ஆனால் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்களுக்கு பெண்களைப் போன்று நடந்து கொள்ள அனுமதி கிடையாது. . மலேசிய உள்ளிட்ட வேறு சில நாடுகளில் ஆண் உறுப்பை நீக்கிக் கொண்டாலும் அரசு ஆவணங்களில் அவர்களின் பாலினம் ஆண் என்றே இருக்கும். மதம் சாராத அரசுகள் ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ அறிவித்துக் கொள்ள உரிமை வழங்குகிறது. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் மேற்கண்ட கட்டுப்பாடுகள் நாட்டின் ம்த உணர்வின் ஆழங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் திருநங்கை அல்லது மூன்றாம் பாலினத்தினர் பற்றிய புரிந்துணர்வு இருந்தாலும் அவர்களை சக மனிதனாக மதிக்கும் நிலை இன்னும் வரவில்லை. அண்மையில் தமிழகத்தில் மூன்றாம் பாலினமாக ஆன ஒருவரை 'இஸ்லாத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார்' என்று அவரது உறவினரான முஸ்லிம் இளைஞரால் ஓட ஓடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய சமூகத்தில் மூன்றாம் பாலினர் பற்றிய ஒரு தெளிவோ, வழிகாட்டுதலோ சரியாக அமையவில்லை காரணம் இஸ்லாம் உடல் உறுப்புகளை வைத்து தான் ஆண் பெண் என்று முடிவு சொல்கிறது, அதற்கு மாற்றாக அறிவித்துக் கொள்ள குரானிலோ, ஹதீசீலோ வழிகாட்டுதல் கிடையாது, தடையே நிலவுகிறது.

மூன்றாம் பாலினர் மட்டுமின்றி மனவளர்ச்சி இன்றி பிறந்தக் குழந்தைகள் குறித்து இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு இத்தகைய படைப்பு அல்லாவின் குறைதானே என்று கேட்டால் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், பெற்றோர் கர்பம் அடைந்த போது தவறான மருந்துகளை உட்கொண்டிருப்பார்கள் அதனால் இத்தகைய குழந்தை பிறந்திருக்கலாம் மற்றபடி 'அலக்' என்ற நிலையில் கருவுறச் செய்வதுடன் அல்லாவின் வேலை முடிந்துவிட்டது என்கிறார்கள். அல்லா நன்கு அறிந்தவன் என்றால் நாளைக்கு இந்தக் குழந்தை பிறந்தால் இப்படி ஆகிவிடும் என்று அந்த கருவுறுதலையே தடுத்து இருக்கலாமே ? என்ற என்போன்றவரின் அப்பாவித் தனமான கேள்விகள் அல்லாவின் படைப்புத் திறனை என்றுமே குறைத்து மதிப்பிடாது என்றே நினைக்கிறேன். மூன்றாம் பாலினரை மூன்றாம் பாலினர் என்று அழைக்காவிட்டாலும் ஒரு பெண்ணாக ஏற்றுக் கொள்கிறார்களே என்பது மகிழ்ச்சியான ஒன்று தான். என்னைப் பொருத்த அளவில் மூன்றாம் பாலினப் பெருக்கத்தை ஆண் / பெண் சமூக இலக்கணங்களை சரி செய்தால் குறைக்க முடியும் என்றே கருதுகிறேன், ஆணாக பிறந்த ஒருவர் விரும்பி பெண் உடைய அணிந்து கொள்ள முதல் காரணம் பெண்ணிற்கான உடை இவைகள் என்பதை சமூகம் முடிவு செய்திருப்பதும், பெண் என்பவள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென்ற இலக்கணங்கள் போன்றவையாகும், உடல் ரீதியான பருவ மாற்றங்கள் ஒரு ஆணை பெண்ணாக உணரவைத்தாலும், சமூகம் பால் வேறுபாடின்றி இருக்க தனக்குத் தானே ( ஆண் பெண்ணாக மாறும் ஆசை) தூண்டல் உடல் மற்றும் மன ரீதியில் பயணப்பட ஒன்றும் இருக்காது. மற்றபடி மத ரிதியான கட்டுப்பாடுகளோ, மருந்துகளோ இந்த உணர்வுகளை குறைத்து மூன்றாம் பாலின உற்பத்தியை குறைத்துவிடாது. ஆண் பெண் மன ரீதியான பாகுபாடு இல்லாத இனங்களில், உயிரினங்களில் இத்தகைய இரட்டை தன்மை உடைய மூன்றாம் பாலினம் அரிது அல்லது இல்லை என்றே கூறிவிடலாம்.

மூன்றாம் பாலினத்தினரையும் ஓரின சேர்கையாளர்களையும் ஒன்றாகவே பார்த்து நிராகரிக்கிறது இஸ்லாம்.

பின்குறிப்பு : கட்டுரையில் ஏதும் தவறானவை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், மாற்றிக் கொள்கிறேன்.

31 ஆகஸ்ட், 2008

எல்லாப் புகழும் ...

இஸ்லாம் மதத்தில் நான் முதன்மையாக கருதுவது அவர்கள் இறை நம்பிக்கையில் காட்டும் ஈடுபாடே. இறை உணர்வில் நீக்கு போக்கு (காம்ப்ரமைஸ்) என்பது அவர்களின் மதத்தில் கிடையாது, ஒரு வகையில் அது அவர்களின் இறைநம்பிக்கையி்ன் ஆழத்தைக் காட்டுகிறது. அதை உறுதியான பிடிமானமாக வைத்திருப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் ஒரு சிலர் இறைபற்று என்பதை விடுத்து அந்த உறுதியினால் பிற மத நம்பிக்கையை பழிக்கவே செய்கின்றனர். அவ்வாறு மாற்று மதத்தினரை தூற்றுபவர்கள் எண்ணிக்கை விழுக்காட்டு அளவில் குறைவே அதைப் பற்றி பேச பலர் இருக்கின்றனர். நான் இங்கு எழுத நினைப்பது வேறு.

நாள் தோறும் 5 வேளைத் தொழுகையும், சமயப்படாமும் ஒரு இஸ்லாமியரின் வாழ்நாள் கடமையாக இருக்கிறது, இதைச் செய்யாதவர்கள் மிகக் குறைவே. பிற மதங்களில் இந்த செயல் உறுதி மிகக் குறைவே. வாழ்கையில் ஒரு அம்சமாகவே இறை நம்பிக்கையையும், அதன் தொடர்பிலான சடங்குகளையும் வைத்திருப்பவர்கள் இஸ்லாமியர்கள். இந்த கட்டுறுதி (டெடிகேசன்) மற்ற மதங்களில் குறைவே. பிறமதங்களில் இருப்போர்க்கு, தேவைக்கான வேண்டுதலுக்காகவும், சமயபண்டிகையின் போதுமே இறையின் நினைவு வருகிறது. அதில் ஒருசிலர் மட்டுமே விதிவிலக்கு.

இஸ்லாமியர்கள் அளவுக்கு இறைப்பற்றும், நம்பிக்கையும் உடைய பிறமதத்தினர்களைப் பார்த்ததே இல்லை. ரமலான் மாதத்தில் அவர்கள் இருக்கும் உண்ணா நோம்பு மிகவும் சிறப்பானது, சிறுகுழந்தைகள், தாய்மார்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்கள் தவிர்த்து கிட்டதட்ட அனைவருமே நோம்பை மேற்கொள்கிறார்கள். எனது இஸ்லாமிய நண்பர்கள் பலரும் உண்ணா நோண்பு இருப்பதைப் பார்த்து இரு்க்கிறேன். அதைக் கடனுக்குச் செய்யாமல் வாழ்வியல் கடமையாகவே செய்கிறார்கள்.

இறைவன் மீது நம்பிக்கை உடைய மாற்று மதத்தினர், இஸ்லாமியர்களின் நம்பிக்கையைத் தூற்றும் முன் இந்த படத்தைப் பார்த்துவிட்டு, தங்களிடம் தாங்களே கேட்டுக் கொள்ளவேண்டும் என முக்கிய கேள்வியாக நான் கருதுவது,

புனித மெக்காவில் கூடும் மக்கள் வெள்ளத் திரள், இறைவனின் விருப்பம் ஏதுமின்றிய சாத்தியமா ?

'இறைவன் ஒருவனே' என்பதில் இஸ்லாமியர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துகிறது. இறைவனுக்கு இணையாக எவரும் இல்லை என்பதை ஆணித்தரமாகவே பின்பற்றுவார்கள். என்னைப் பொருத்து மிகச் சரிதான். ஒப்பற்றவன் இறைவன் என்றே எல்லா மதத்தினரும் நம்பும் போது அதற்கு ஒப்புக் கற்பித்து மனிதனை இறைவனாக்குவதும் தவறானது தானே. மனிதர்கள் இறைவனின் சித்தங்களை நிறைவேற்றினானும், மனிதன் இறைவன் இல்லை. மனிதன் இறைவன் ஆகமுடியாது. மனிதன் இறைத்தூதன் தான்... எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லும் இஸ்லாமிய கோட்பாட்டை மிகவும் மதிக்கிறேன். அவற்றை செய்யாததாலேயே பிற மதங்களில் போலி சாமியார்கள் பெருத்துவிட்டனர். இஸ்லாம் மீது சில விமர்சனங்கள் எனக்கும் இருக்கிறது, அவை பொதுவாக எல்லோரும் வைக்கும் விமர்சனங்கள் தான் என்பதால் நானும் அதைப்பற்றி எழுத விரும்புவதில்லை.

நாளை (திங்கள் சிங்கையிலும், இந்தியாவில் செவ்வாய்) முதல் உண்ணா நோம்பு தொடங்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இறைவனின் ஆசிர்வாதம் கிட்டட்டும்.

இந்த பதிவின் மூலம் இஸ்லாமிய பதிவர்கள், நண்பர்களுக்கு ரமலான் மாத நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்