பின்பற்றுபவர்கள்

31 டிசம்பர், 2009

பர்தா வெவகாரம் சில எண்ணங்கள் !

நாகூர், நாகப்பட்டினம் பகுதியில் பிறந்து வளர்ந்ததால் இஸ்லாமியர்கள் வாழ்வியல் முறைகள் பற்றி ஓரளவு எனக்கு தெரியும். இஸ்லாமியர்கள் பற்றிய எனது சிறுவயது எண்ணம், அவர்கள் இந்து கோவில்களுக்கு வரமாட்டார்கள். மசூதிக்கு செல்பவர்கள், மாறுபட்ட உடை பழக்க வழக்கம் கொண்டவர்கள் என்பதே. எங்கள் வீட்டினருக்கும் நெருக்கமான இஸ்லாமிய குடும்பங்கள் உண்டு. நாங்களும் இஸ்லமிய சிறுவர்களும் விளையாடும் போது அவர்கள் / நாங்கள் வேறு என்பதாக நினைத்தது கிடையாது. பெரியவர்கள் அளவிலும் பண்டிகைகளில் உணவுகள் இடம் மாறும். பெரியவர்கள் அளவில் இஸ்லாமிய சிறுவர்களை சுன்னத் பற்றி கிண்டல் அடிப்பதுடன் சரி. இஸ்லாமிய சிறுமிகள் எட்டு வயதிற்கும் மேலும் தெருவில் உள்ள மற்ற சிறுமிகளுடன் விளையாடிப் பார்த்தது கிடையாது. எட்டு வயதிலிருந்து தாவணிகள் அணியும் வழக்கத்திற்கு சிறுமிகள் சென்றிருப்பார்கள். பளபளப்பான சரிகை வகை உடைகளை அணிந்திருப்பார்கள். பள்ளி ... பள்ளி விட்டால் வீடு என்பதாகவே இஸ்லமிய சிறுமிகளின் நடவெடிக்கைகள் மாறி இருக்கும். "சின்ன வயதிலேயே தாவணிப் போட்டு வீட்டோடு இருப்பதால் சிறுமிகளுக்கு கூச்ச உணர்வு ஏற்பட்டுவிடுகிறது, பெரியவளானதும் ஆண்களைக் கண்டால் அவர்களுக்கு உடனேயே கூச்சம் வந்துவிடுகிறது, வீட்டுக்கு அடங்கி இருக்கிறார்கள்" என்று எங்க வீட்டு பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள். இப்போது நினைத்துப் பார்த்தால் பெண் வீட்டினுள் அடங்கி இருக்கவேண்டும் என்று விரும்பவர்களாக எங்கள் வீட்டு பெரியவர்களும் விரும்பி இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

சிறுவயது முதலே உடைக்கட்டுப்பாடு, குறிப்பிட்ட உடை என்ற அளவில் பழக்கப்படுத்தப்படுவதால் இஸ்லாமிய பெண்களைப் பொருத்த அளவில் கைகள், இடுப்பு, கழுத்து பகுதி வெளியே தெரிய உடை அணிவது அவர்களது வளர்ப்பு முறையால் அவர்களை மிகவும் கூச்சப்படுத்தும். விரும்பி பர்தா அணிகிறார்கள் என்பதைவிட அது தான் தங்கள் உடலுக்கும், கூச்ச உணர்விற்கும் பாதுகாப்பு என்பதாக இயல்பாகவே பர்தா அணிந்தே வெளியே செல்வார்கள். பொது இடத்தில் அவர்களால் மற்ற பெண்களைப் போல் பர்தா இல்லாமல் இருப்பது வேட்டி மட்டுமே அணிந்து வந்த ஒருவரை ஒரு நாள் பேண்ட் போடச் சொன்னால் அவர் நெளிவதைப் போன்ற அவஸ்தைதான். என்ன தான் நாம ஆண் என்று மார்பு தட்டினாலும் ஜட்டியுடன் பலர் முன் நிற்பது நம்மால் நினைத்துப் பார்க்கவே கடினமானது தான். ஜட்டி அணிந்திருப்பது அம்மணத்தைவிட மேலானது, கோவணம் அணிந்து பலர் வேலை செய்வதைப் பார்த்து இருக்கிறோம். இருந்தும் நம்மால் பொது இடத்தில் அனுமதி கொடுத்தாலும் ஜட்டியுடன் ஒரு ஆண் தான் நிற்க நேரிட்டால் வெறும் வீம்புக்கு என்பதை விட்டு விட்டு பார்த்தால் அவனுக்கு மிகுந்த கூச்சமான அனுபவமாகவே நேரிடும்.

உடை கைதெரிய அணியலாமா, இடுப்பு தெரிய அணியலாமா தொடை தெரிய அணியலாமா என்கிற விவாதங்களை விட ஒருவர் எந்தவிதமான உடைக்கு பழக்கப்பட்டு இருக்கிறாரோ அதுவே அவருக்கு பொருத்தமான உடை என்பதே உடை குறித்த கேள்விக்கு சரியான விடையாக இருக்கும். சென்னையில் இருக்கும் போது நண்பர்கள் அரை ட்ராயர் போடுவது போல் நானும் போட்டுக் கொள்ள நினைத்துப் பார்த்தால் எனக்கு மிகுந்த கூச்சம் ஏற்பட்டது. ஆனால் சிங்கை வந்த பிறகு வேலை நேரம் தவிர்த்து பலரும் அரை ட்ராயரில் தான் உலாத்துகிறார்கள். நானும் அரை டிராயருக்கு மாறிவிட்டேன். சொந்த ஊருக்குச் சென்றாலும் விமானத்தில் சென்றாலும் அரை ட்ராயர் எடை குறைந்ததாகவும் வசதியாகவும் இருப்பதாக உணர்ந்து அலுவல் தவிர்த்த வேளைகளில் அணிந்து வருகிறேன்.

எப்போதும் புடவை அணியும் அம்மாவை வெளி நாட்டிலாவது கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம் சுடிதார் அணியச் சொன்னால் அவங்க வெட்கப்பட்டுக் கொண்டு மறுத்துவிடுவார்கள். அவர்களைப் பொருத்த அளவில் அவர்களின் வளர்ப்பு முறையில் அவர்களுக்கு ஏற்ற கண்ணியமான ஆடையாக புடவை அணிவதை நினைக்கிறார்கள். இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதும் கூட வளர்ப்பு முறையினால் தான். பர்தா அணிந்தே வளர்க்கப்பட்டவர்களால் பர்தா இன்றி வெளியே செல்வதை அவர்கள் கண்ணியம் குறைவாக நினைப்பார்கள், அவ்வாறு அவர்களால் செல்லவும் முடியாது. இப்படியான வளர்ப்பு முறைகளை அவரவர் நற்குடி வளர்பு என்று நினைத்துக் கொள்வதைத் தவிர்த்து இதில் ஒன்றும் இல்லை. என்னைப் பொருத்த அளவில் கவிஞர் பர்வின் சுல்தான புடவையுடன் தான் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள் ப்ர்வின் சுல்தானா வீட்டில் குழுக்கலாச்சாரம் வேண்டாம், ஒரு குழுவிற்குள் முடக்கவேண்டாம் என்று ஏனைய பெண்களைப் போல் உடை அணியட்டம் என்று அனுமதிக்கப்பட்டு அதன் படி அவர்கள் வளர்க்கப்பட்டு இருக்கலாம். அவர்களைப் பொருத்த அளவில் மற்ற பெண்கள் பொதுவாக அணியும் உடை அவர்களுக்கு கண்ணியமானது. அவர்கள் பர்தா அணியவில்லை என்பதற்காக அவர்கள் நற்குடி, இஸ்லாமிய முறைப்படி வளர்ந்தார்களா என்ற ஆராய்ச்சிகளெல்லாம் நடத்தினால் நமது பார்வை மிகக் குறுகியதே. இந்து மதத்திற்குள் பெண்களுக்கு புடவை கட்டுவதிலே கூட பல்வேறு வகைகள் இருக்கின்றன. நகரத்து பெண்களும், கிராமத்து பெண்களும் ஒரே துணி என்றாலும் புடவை கட்டும் விதம் வேறு, கிராமத்தினர் போல் நகரத்தினர் அணிவது அவர்களுக்குள் கூச்சமாகவே இருக்கும். மடிசார் எனப்படும் புடவைக் கட்டை பார்பன பெண்கள் மட்டுமே அணிகிறார்கள். மற்ற பெண்களுக்கு அதைக் கட்டினால் அவர்கள் தடுக்கி விழுந்தாலும் விழுவார்கள். புடவை கட்டுகள் ஒரு பெண்ணின் நற்குடி பற்றி எதுவும் சொல்லாதோ, அதே போன்று தான் நற்குடிக்கும் பர்தாவுக்கும் தொடர்பே இல்லை. அதை அணிவதும் அணியாததும் அவரவர் பெற்றோர் வளர்ப்பு முறை தான்.

அதே சமயத்தில் பெண்ணிய காவலாளிகள் போல் பர்தா பெண்ணை முடக்குகிறது என்று கூச்சலிடுபவர்கள் தம் இனப் பெண்களுக்கு என்ன விதமான உடை சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் என் கண் முன்னே இன்னும் கூட பல இடங்களில் வெள்ளை உடை அணிந்த விதவைகளும், இன்னும் சில இடங்களின் அக்ரஹாரங்களில் காவி உடை அணிந்து தலையில் முக்காடு அணிந்து, தலை மொட்டையான பார்பான பெண்களும் கூடத் தெரிகிறார்கள். முக்காடு அணிந்த இஸ்லாமியர்கள் பார்பதற்கு இந்து விதவைகள் போல் இருக்கிறார்கள் என்று நினைப்பதுடன் சகிக்காமல், தாழ்வுணர்வில் 'இஸ்லாம் பெண்களின் மீது ஆடைக் கட்டுபாடு விதித்திருக்கிறது' என்று கூச்சல் இடுகிறார்கள் என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பர்தா பற்றி ஒரு இஸ்லாம் இணைய தளம் சொல்லும் கருத்து,

ஹிஜாப் என்பது கண்ணியம் பேணுதலுக்கான உடை அல்ல. பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கம் என்பவற்றிற்காக அணியும் ஆடையும் அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு கடமையாகும். அதற்குறிய சட்ட விதிப்படி உடை அணிதல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் மீதும் அல்லாஹ் (சுபு) விதித்துள்ள கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்(சுபு) எமது முஸ்லிம் பெண்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!

*****

பெண்களுக்கான கண்ணிய உடைகள் இவை என்பவை ஆண்களின் பார்வையில் தப்ப ஆண்களே வடிவமைத்து செய்த ஏற்பாடு என்பதைத் தவிர்த்து, எந்த ஒரு சமயத்தைச் சேர்ந்த பெண்களின் உடையையும் அப்பெண்களே முடிவு செய்துவிடவில்லை. பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெண்கள், எந்த உடை பாரம்பரியமானது, எதை அணியலாம் என்று கருத்து சொல்லும் உரிமை அந்த பெண்களுக்கு உண்டு, ஆனால் அதையும் 'பெண்களுக்கான' உடை என்று பன்மையில் பொதுப்படுத்துவது தவறு தான்.

*****

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !

30 டிசம்பர், 2009

செய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைக் காட்சி) !

இன்றைய தலைப்புச் செய்திகள்: செம்மொழி மாநாடு குறித்து கருணாநிதி ஆலோசனை, காங்கிரஸ் கட்சியை யாரும் அழிக்க முடியாது சோனியா சூளுரை. டைகர் உட்சை முந்துகிறார் திவாரி. திருப்பதி கோவில் ஏஆர் ரஹ்மான் இசைக்கு இந்து முன்னனி எதிர்ப்பு, எடியூரப்பா ஆட்சிக்கு மீண்டும் இடையூறு, பொன்னகரம் தேர்தல் தள்ளி வைப்பு தேர்தல் ஆணைய அறிவிப்பு.

வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கிற செம்மொழி மாநாட்டை எப்படி நடத்துவது என்கிற ஆலோசனை நடத்த தமிழறிஞர் குழுவை நாளைக் கூட்டுவதாக கருணாநிதி அறிவித்தார். செம்மொழி மாநாடு குறித்து அனைத்து உலக தமிழர் அமைப்புகளிலும், வெளி நாடுகளில் வாழும் தமிழர் தலைவர்களிடமும் ஆலோசனை கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். உலக வரலாற்றில் முதன் முறையாக செம்மொழிக்காக மாநாட்டை ஒரு தமிழனே நடத்துவதும், அந்தப் பெருமை தனக்கே கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறதென்றும், மாநாடு நடக்கக் கூடாது என்பதற்காக எதிரிகளும் விசமிகளும் பல்வேறு கேள்விகள் கேட்டு வருகிறார்கள், அதையெல்லாம் நாங்கள் சட்டை செய்யாது தமிழ் தாய்க்கு பொன்னாடையாகவே போற்றுவோம் என்றார்.

காங்கிரசின் 125 ஆண்டு நிறைவு காணுவதை ஒட்டி அதன் தலைவி திருமதி சோனியா காந்தி பேசிய அறிக்கையில் காங்கிரசை யாராலும் அழிக்க முடியாது என்றார். அப்படி என்றால் அது தானாகவே அழியும் என்று நினைக்கிறீர்களா ? என்று கேட்ட செய்தியாளரை கூட்டத்தினர் குப்புறத் தள்ளி அப்புறப்படுத்தினர். சுதந்திர இந்தியாவில் காந்தியின் கனவை நிறைவேற்றும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்றார். 'சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தேவை அற்றது என்றும் அது கலைக்கப்படுவதை தாம் விரும்புவதாக காந்திஜி சொன்னதைப் பற்றி புகழ்பெற்ற தொலை காட்சி நிறுவனம் ஒன்றின் செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது காந்திஜி ஆவியாக வந்து தாம் அவ்வாறு சொன்னது தவறு என்றும் காங்கிரஸின் தொடரும் பொற்கால ஆட்சி இந்திய நலனுக்கு என்றென்றும் தேவை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த நரசிம்மராவின் கனவில் 10 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதாகவும் குறிப்பிட்டார். காந்திஜி ஆவியின் விருப்பப்படி காங்கிரஸ் கட்சி அதன் லட்சியங்களை அடையும் வரை அதை யாராலும் அழிக்க முடியாது என்று சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

இணையங்களில் டைகர் உட்சின் லீலைகளை தேடுவது போலவே என் டி திவாரி குறித்து எதுவும் சிக்குமா என்று தேடுபவர்கள் எண்ணிக்கை கூடி இருப்பதாக இந்திய இணைய தள தேடல் குறித்து ஆராய்ந்து வரும் ஒரு பெயரில்லாத செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதற்கிடையே இந்த செய்தியைப் பற்றி திவாரி கூறுகையில் அது எதிர்கட்சிகளின் சதி என்றும் கிராபிக்ஸ் பயன்படுத்தி எடுத்திருக்கிறார்கள், வீடியோவில் இருந்தது நான் அல்ல என்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் தத்துருபமாக ஒரிஜினல் போலவே கிராபிக்ஸ் செய்யும் நம் இந்திய கிராபிக்ஸ் வல்லுனர்கள் அதைத் திரைப்படத்துறையில் பயன்படுத்தினால் இந்தியாவிலும் அவதார் போன்ற சிறந்த கிராபிக்ஸ் படங்களை உருவாக்கி ஹாலிவுட்டுக்கு சவாலாக இருக்க முடியும் என்றார்.

இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பன், ஆகம விதிக்கு இந்து கோவில்களை புத்தாண்டு பிறப்புக்காக டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவில் திறந்து பூஜை செய்தால் இந்து முன்னணி அதை தடுக்கும் விதத்தில் போராட்டம் நடத்தும். அத்துடன் அதற்கு உடந்தையாக இருக்கும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அறங்காவலர்கள் மீது வழக்கு தொடருவோம். என்றார். அங்கு வரும் பக்தர்களை ஓட ஓட விரட்டுவீர்களா ? கூடவே ஒடுவதற்கு போதிய கட்சித் தொண்டர்கள் இல்லை என்பதால் பக்தர்களை தாங்கள் தடுக்கப் போவதில்லை என்றார், மேலும் அவர் சற்று ஆவேசமாக திருப்பதி வெங்கடாஜலபதி பற்றிய பாடல்களுக்கு இசைஅமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை வைத்து இசை அமைத்து ஆல்பம் வெளியிடப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இசை அமைத்தால் சிறப்பாக இருக்கும். எனவே தேவஸ்தானம் தனது திட்டத்தை கைவிட வேண்டும் மேற்கண்டவாறு இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பன் கூறினார். புத்த மதத்தைச் சேர்ந்த ராஜேபக்சே நுழைய முடிந்த கோவிலுக்கு ரஹ்மான் இசை அமைப்பதால் என்ன முழுகிவிடப் போவது என்று கேட்ட செய்தியாளரிடம் யார் கண்டது... காஞ்சி பெரியவாளை கைது செய்த போது சுனாமி வந்தது போல் ஏஆர்ரஹ்மான் திருப்பதி இசையால் அபச்சாரம் நிகழ்ந்து மீண்டும் ஒரு சுனாமி கூட வரலாம், நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

29 டிசம்பர், 2009

வேட்டைக்காரன் வெளிவராத காட்சிகள் !

நான் சென்னையில் இருந்த பொழுது எங்கள் வீட்டின் எதிரே உள்ள பங்களாவில் வேட்டைக்காரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். இரண்டு நாளைக்கு ஒருமுறை அங்கே படப்படிப்பு நடக்கும். கேரவன்கள், உணவு வாகனங்கள், படக்கருவி இழுவை வண்டிகள், உதவியாளர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் படத்தில் பணி புரிபவர்கள் என பெரியக் கூட்டம் சூழ்ந்திருந்தது. அன்றைய காட்சி நடிகர் சாயாஜி சிண்டே வேகமாக ஜீப்பில் வந்து பங்களாவில் இறங்குவது போன்ற காட்சி. மூன்று முறை அடுத்தார்கள், அடுத்தக் காட்சியாக விரக்தியாக வீடு கைவிட்டுப் போகிறதே என்பது போல் பார்த்துவிட்டு ஜீப்பில் ஏறுவது போன்ற காட்சி இதையும் மூன்று முறை எடுத்தார்கள்.

படத்தில் அந்த இரு காட்சிகளுமே இல்லை, ஆனால் வீட்டினுள் பிடிக்கப்பட்டக் காட்சி காட்டப்பட்டு இருந்தது. கதை படி சாயாஜி சிண்டே வில்லனுக்கு ஆதரவான உயர் காவல் அலுவலர். அவரது சின்னவீடு தான் அந்த வீட்டில் இருப்பார். வில்லன் அவரது சின்ன வீட்டையும் வளைத்துவிட வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளி ஏறுவார். வீட்டுனுள் வில்லனும், சின்னவீடும் இருக்கும் காட்சியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாத விரக்தியில் வெளியே வருவார். வெளியே வந்ததும் சின்ன வீடும், பங்களாவும் கைவிட்டுப் போய்விட்டதே என்று வெறுத்து, வெறுப்பில் பார்த்துவிட்டு ஜீப்பில் ஏறுவார். வீட்டுனுள் எடுக்கப்பட்ட காட்சியை நான் பார்க்கவில்லை. வெளியே எடுத்தக் காட்சியைத் தான் பார்த்தேன். படத்தில் வீட்டுனுள் எடுத்தக் காட்சியே இடம் பெற்றிருந்தது. வெளியே எடுத்தக் காட்சி நீளம் கருதி வெட்டப்பட்டதாக நினைக்கிறேன். காரணம் ஏற்கனவே படம் 3 மணி நேரத்திற்கும் மேல் மாபெரும் இழுவை. வேட்டைக்காரன் படத்தில் சிறப்பாக செய்திருந்தவர்களில் சாயாஜி சிண்டேவும் ஒருவர்.







படப்பிடிப்பைப் பார்த்துக் கொண்டே எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து நான் படம் எடுத்துக் கொண்டிருத்தேன். எடுக்கக் கூடாது என்று சைகை காட்டினார்கள். சரி என்று சொல்லிவிட்டேன். எடுத்த வரை ஆறு படங்கள் இருந்தது. ஒரு திரைப்படம் உருவாக பலரது உழைப்பும், பெரிய அளவில் பணமும் புழங்குகிறது, திரை உலகம் என்பது மபெரும் தொழிற்சாலை தான். வெற்றி பெற்றால் பணத்துடன் புகழ் வெளிச்சமும் சேர்ந்தே கிடைக்கிறது. அதிலும் டைட்டில் எனப்படும் படத் தலைப்பில் தனியாக பெயர் போடப் படுபவர்களுக்கு மட்டுமே. மற்றவர்களது உழைப்பு பெரிதாக வெளியே தெரியாது என்றாலும் ஒரு படம் தோல்வி அடைந்தால் அந்த மற்றவர்கள் பாதிப்பு அடையமாட்டார்கள், தனியாக பெயர் போடப்படுபவர்கள் தான் பாதிப்பு அடைவார்கள். திரையுலகம் கலை சார்ந்தது என்றாலும் அது ஒரு மாபெரும் சூதாட்டம், ஒரு இயக்குனர் வரிசையாக இரண்டு தோல்வி படங்கள் கொடுத்தால் பிறகு அவருக்கு தயாரிப்பாளரே கிடைக்க மாட்டார். ஆனால் நடிகர்கள் ? நான்கு படம் தோல்வி அடைந்து ஐந்தாவது வெற்றிப்படம் அமைந்தால் அதன் காரணமாக அடுத்த நான்கு தோல்விப் படங்களுக்கு அவருக்கு இயக்குனரும், தயாரிப்பாளர்களும் கிடைப்பார்கள். ஏனென்றால் முகராசி என்பதை திரையுலகம் வெகுவாகவே நம்புகிறது அதுவும் நடிகைகளுக்குக் கிடையாது. எந்த ஒரு வெற்றிப்படமாக இருந்தாலும் பொதுமக்களிடம் நேரடி அறிமுகம் பெற்றவர் என்பதால் ஒரு நடிகரின் புகழ் அந்தப் படத்தின் இயக்குனரை விட வெகுவாகவே பரவும், இயக்குனரின் புகழ் திரையுலகிலும், நடிகர்களைத் தாண்டி திரைப்படங்களை ரசிப்பவர்களிடம் மட்டும் தான் பரவும்.

என்னைப் பொருத்த அளவில் திரைக் கலைஞன் என்றால் முதலில் இயக்குனரே அதன் பிறகு இயக்குனரின் கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் நடிகர் நடிகைகள். வளர்ந்த நடிகர்களைப் பொருத்த அளவில் ஒரு படத்தின் தோல்வி என்பது அந்த படத்தை இயக்கியவர்களின் தோல்வி (இவளவு பெரிய நடிகரை வச்சே பணம், படம் பண்ணத் தெரியலையே என்பார்கள்). ஒரு படத்தின் வெற்றி அந்த நடிகரின் வெற்றி என்பதாகவும் திரையுலகினுள்ளேயே பிரித்து அறியப்படுகிறது. வளர்ந்த நடிகர் தோல்வி படமானால் அடுத்தப் படத்துக்கு இயக்குனரை மாற்றிக் கொள்வார். வெற்றிப்படம் மென்றால் அடுத்தப்படத்தில் அதைவிட நிறைய செலவு செய்யும் படமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரையே மாற்றிக் கொள்வார். திரையுலகம் ஒரு கனவு தொழிற்சாலை என்று சரியாகச் சொல்கிறார்கள். சில கனவுகள் பலிக்கும், பல கனவுகள் பழிக்கும். இதில் நட்டம் அடைபவர்கள் என்றால் இயக்குனரோ, நடிகர்களோ கிடையாது வட்டிக்கு பணம் வாங்கி தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் எனப்படும் படம் வெளியீட்டாளர்களும் தான். இயக்குனர்கள், நடிகர்கள் படு தோல்வி என்றாலும் அவர்கள் தஞ்ச மடைய சின்னத் திரையுலகம் இருக்கு. தயாரிப்பாளர் தோல்வி அடைந்தால் கடன் தொல்லையில் தப்பிக்க விடுதி அறையில் தஞ்ச மடைந்து முழம் கயிற்றில் முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இது சன்/திமுக, ஏவிஎம் குடும்பம் போன்று பெரிய அளவிலான பலதொழில் புரியும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பொருந்தாது, வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுப்பவர்களுக்குத்தான் அந்த நிலை.

பின்குறிப்பு : வேட்டைக்காரன் விமர்சனம் எழுதினால் பதிவுலகில் இருந்து தள்ளி வைக்கப்படுவீர்கள் என்று பலமான எச்சரிக்கை பல தரப்பினரிடம் இருந்து வந்ததை முன்னிட்டும், வேறு வழியே இல்லாததால் என் பங்குக்கான வேட்டைக்காரன் பதிவு இது என்ற அளவில் எடுத்துக் கொள்ளுமாறு விஜய் ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். :)

28 டிசம்பர், 2009

வேதக்கடலில் தத்துவப் பெருங்காயங்கள் !

நான்கு வேதங்கள் பற்றிய பெயரையாவது இந்துக்களில் பெரும்பான்மையினர் அறிந்திருப்பர். நான்கு வேதங்களில் ரிக் வேதமே பழமையானது, அதர்வண வேதம் அவற்றுள் பிந்தையது. வேதங்களை எழுதியவர் யார் என்று தெரியாது, ஆனால் அவற்றைத் தொகுத்தவராக வேதவியாசர் என்பவரைச் சொல்லுகிறார்கள். வேதங்களை யார் எழுதியது என்பது தெரியாமல் இருக்க அவை தான் தோன்றியோ கடவுளால் படைக்கப்பட்டது என்கிற கூற்றைவிட அவை எழுதப்படாமல் மனப்பாடமாக (ஸ்ம்ருதி) வழிவழியாக கொண்டு செல்லப்பட்டது என்பதே பொருத்தமான கூற்றாக இருக்க முடியும். பருப்பொருள்கள் எதுவுமே மூலம் எதுவும் மின்றி தோன்றி இருக்க வாய்ப்புகள் கிடையாது. இப்படியான ஒரு கூற்றில் தான் சமணத் துறவி நீலி கேசி என்பவள், நட்ட நடுவீதியில் மலம் கிடந்தால், இருந்தவர் யார் என்று அறிய முடியாத சூழலில் அது தானாகவே வந்திருக்கும் என்று கூற முடியாதே, என்று சொல்லி வேதம் குறித்த 'தான் தோன்றிக்' கருத்துகளை மறுத்தாள்.

காலத்திற்கு முற்பட்டவை, காலம் அறியமுடியாதது, கல்தோன்றாக் காலத்து போன்ற காலத்தை வைத்து செய்யப்படும் சொல்லப்படும் கூற்றுகள் யாவும் வரலாறு என்பதற்கு போதிய தோற்றமை காட்ட ஒன்றும் இல்லாத போது உயர்வு நவிர்ச்சியாக அவ்வாறு சொல்லப்படுமேயன்றி எவராலும் எழுதப்படாத தான் தோன்றி ஆக்கங்கள் என்றுக் கூறக் கூடியது எதுவுமே இல்லை. மொழியாகிலும், தத்துவங்களாகிலும் இவை உருவாகி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளவை என்கிற புரிதலே அறிவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். தெய்வ மொழி, தெய்வ வேதம் போன்ற சொல்லாடல்கள் புனிதத் தன்மைகள் கற்பிக்கப்ப(ட்)ட வலுக்கட்டாயமாக புகுத்தப்பட்ட வெறும் சொற்களேயன்றி இவை புனிதப் பூச்சு என்பதைத் தவிர்த்து புனிதம் என்கிற ஒன்றை ஒருகாலமும் தந்துவிடாது. குறிப்பிட்ட தத்துவங்களை, வேதங்களை எழுதிய புத்தகங்கள் நெருப்பில் வேகாது என்று எவரும் காட்ட முடியாது. ஆனால அவ்வாறெல்லாம் கூடச் சொல்லப்பட்ட நெருப்பில் இட்டும், தண்ணீர் வீசியும் பல சோதனைகளை தமிழ் நூட்கள் மீது நடந்திருப்பதை அனல்வாதம் புனல் வாதம் ஆகியவற்றின் மூலம் அறியலாம். ஆனாலும் வென்றதாகச் சொல்லப்பட்ட நூல்கள் இன்றும் நெருப்பில் எரியாமல் இருக்கும் என்பதை ஒருவராலும் நிருபனம் செய்ய முடியாது, ஏனெனில் அன்றைக்கு பனவோலையில் என்ன விதமான இராசயனம் பூசப்பட்டு நெருப்பில் அல்லது நீரில் போடப்பட்டது என்பதை நாம் அறிவதற்கு இல்லை :)

நான்கு வேதங்களில் இருப்பவையாக சொல்லப்படுபவைகளில் பெரும்பான்மைச் செய்யுள்கள் அன்றாட சடங்கு மற்றும் வழிபாட்டு முறைகளை கொண்டது. இந்திரன் சோமன், ஐம்பூதங்களின் வழிபாடுகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. சோமபானத்தின் உயர்வும் புனிதத் தன்மையும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சி, இன்பம் ஆகியவைச் சொல்லப்பட்டு இருக்கிறது. இதைத் தவிர்த்து அதர்வண வேதத்தில் இசைகள் குறித்து பேசப்படுகின்றன. மற்றபடி நான்கு வேதத்தில் பிரம்மம் என்ற சொல்லோ, அத்வைதத் தத்துவமோ பேசப்படவில்லை. எந்த ஒரு மதமாக இருந்தாலும் அது குறித்த புதிய நூல்களை எழுதும் போது மூல நூல்களின் மேற்கோளுடன் தான் எழுதுவர். இதே அடிப்படையில் தான் இந்து அல்லது இந்திய சமயங்களில் பவுத்தம், சமணம் தவிர்த்து அனைத்தும் வேதத் தொடர்புடையதாகவே எழுதப்பட்டது. இதில் வேடிக்கை என்ன வென்றால் வேதங்களையும், வேதக் கடவுளையும் மறுக்கும் சார்வாகம், மீமாம்சை போன்றவைகளைக் கூட பின்னால் வேதத்தொடர்புடன் இருப்பதாகவே சொல்லப்படும் இட்டுக்கதைகள். காரணம் இதை எழுதியவர்கள் பார்பன்ர்கள் என்பது தவிர்த்து வேறெதுவும் இல்லை. மீமாம்சகர்களும், குமரிலா போன்றோர்கள் பார்பனர்கள் என்றாலும் அவர்கள் தத்துவ ரீதியில் வேதங்களையும், வேதக்கடவுள்களையும், சிருஷ்டி குறித்த வேதக்கருத்துகளையும் கடுமையாக எதிர்த்தவர்கள். இவர்களின் கருத்துகளை வேதத்துடன் தொடர்புடையது என்று சொல்வதன் மூலம் புதிதாக தெரிந்து கொள்ள எதுவுமே இல்லை என்கிற கண்ணோட்டத்தில் அவர்களது நாத்திகக் கருத்துகள் புறக்கணிக்கப்படும் என்கிற வெறும் வைதீக அரசியல்.

நாத்திகக் கருத்துகளை மறுப்பவர்கள் முதலில் சொல்வது இது ஒன்றும் புதிதல்ல, நாத்திகம் என்பது வேதத்திலேயே அனுமதிக்கப்பட்டவை என்றும் சொல்லுவார்கள். அது உண்மையென்றாலும் ஏனைய கடவுள் ஏற்பு நூல்களைப் போன்ற மதிப்பு கொடுப்பது இல்லை, மேலும் சார்வாகம் குறித்த விளக்கங்களையும் பேசத் தயங்குவர். காரணம் கடவுள் குறித்தும் கடவுள் நம்பிக்கை குறித்தும் இந்த நூல்கள் மிகுதியாகவே கேள்வி எழுப்பி இதுவரை விடை இல்லாததால் அதை வேதாந்தக் கருத்தாக ஏற்றாலும் புனிதத் தன்மை கொடுப்பது சிக்கலாகிவிடும் என்கிற தாழ்வுணர்ச்சியே. புத்தரின் தத்துவங்களை மறுக்க புத்தரை விஷ்ணுவின் எட்டாவது அவதாராமாக்கிவிட்டால் ஒரு இந்துவுக்கு புத்தர் என்ன சொன்னார் என்ற அக்கரை இருக்கப் போவதில்லை. நாட்டார் தெய்வங்களை வைதிக தெய்வங்களின் கோவில்களுக்கு எல்லைச் சாமிகள் ஆக்கினால் அவற்றை வணங்குபவர்கள் தொண்டனை விட தலைவனையே வணங்கினால் போதும் என்று நினைத்துவிடுவர். இவை வழிபாட்டு அளவில் தான்.

தத்துவ நூல்கள் பற்றியும் இதே நடைமுறை, வேதாந்தங்கள் எனப்படும் உரைநடைகள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடை பட்டவையே என்கிறார்கள். ஆனால் இவற்றில் வேதக் குறிப்புகளை வைத்து எழுதப்பட்டு இருப்பதால் அவை முழுமையான வேதாந்தம் என்பதாகவே கற்பிக்கப்படுகிறது. நான்கு வருணங்களில் சூத்திரன் தவிர்த்து மூன்றே மூன்று வருணம் தான் நான்கு வேதங்களில் இடம் பெற்றிருக்கிறது. நாலவது வருணம் பற்றிப் பேசுவது புருச சூக்தம் மட்டுமே, அதற்கு பிறகு மனுஸ்மிருதி ஆகியவை புருச சூக்ததின் மேற்கோளில் எழுதப்பட்டவை. இவை அனைத்தையும் வேதத்துடன் தொடர்பு படுத்துவதால் இவற்றில் பேசும் ஏற்றத்தாழ்வு அனைத்திற்கும் வேதம் அனுமதி கொடுத்திருப்பதாகவே கொள்ள முடியும் என்பதாக இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையாதாகச் சொல்லப்பட்டது. இந்திய தத்துவ ஞானம், இந்திய ஞான மரபு போன்ற சொல்லாடல்களை வைதீக வாதிகளும் ஆதரவாளர்களும் மிகுதியாகவே பயன்படுத்திவருகின்றனர். ஆனால் இந்த ஞான மரபு என்கிற ஒற்றைச் சொல்லில் அனைத்து தத்துவங்களும் அடங்கி இருப்பதாக இவர்கள் நினைப்பதற்கு மாறாக ஞான மரபு என்ற சொல்லில் அனைத்து தத்துவங்களும் நீர்த்துப் போகின்றன என்பதை நினைப்பது இல்லை.

இந்து / வைதீக மதத்தில் நாத்திகமும் ஒரு தத்துவம் தான் என்பது உண்மையானால் வேத பாடசாலைகளில் நாத்திக வாதங்கள் சொல்லிக் கொடுக்கலாமே ? நாத்திகமும் புனிதத் தன்மை வாய்ந்தது என்று சொல்லலாமே ? உண்மையில் தத்துவங்கள் என்று உயர்வு கற்பிக்கப்படுபவற்றில் அவை உண்மை பேசுகிறது என்பதைத் தவிர்த்து வேறெதும் இல்லை, அரிஸ்டாட்டில், பிளாட்டோ, கன்பூசியஸ் அல்லது நம் கவுதம புத்தர் இவர்களின் தத்துவங்களைப் படித்தால் அவற்றில் உண்மைகளை மிகத் தெளிவாகப் பேசி இருப்பதை உணரலாம். உண்மைகளில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை என்றாலும் சூழல்களால், தன்னலத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைத் தவிர்த்து அவ்வுண்மைகளில் மறுப்புக்கான சொற்பக் காரணங்கள் கூட இருப்பதில்லை. உண்மைகள், மெய்கள் என்பதையே தத்துவம் என்பதாக சொல்லப்படும் பொழுது அதில் தேவையற்ற புனிதம் போய் ஒட்டிக் கொண்டு, அதை கடைப்பிடிப்பதில் இருந்து தடுக்கிறது, அல்லது ஒரு அச்சத்தை ஏற்படுகிறது என்கிற பரவலான புரிந்துணர்வு இருப்பதில்லை என்று சொல்வதற்கில்லை என்றாலும் ஆனால் அவை ஏன் புனித மற்றும் தத்துவ என்கிற அரசியல் அடைமொழிகளைக் கொண்டு உயர்வாக்கப்பட்டு இருக்கிறது என்றால் அதை வியாபாரமாக்கும் ஒரு செயல் அல்லது அதைவைத்து பிழைத்தல் என்பதே ஆகும். சூத்திரன் வேதம் படித்தால் அவன் காதில் ஈயத்தைக் காய்து ஊற்று என்கிற மனு ஸ்மிருதிகள் கூட இந்த வகை தந்திரங்களினால் எழுந்த எழுத்து ஆவணங்களே. அதையும் தாண்டிய அரசியல் வேதங்களோ, வேதாந்தங்களோ அவற்றில் என்ன எழுதி இருக்கிறது என புரியாதது என்று ஒன்றும் கிடையாது, ஆனால் அதை எல்லோரும் படித்துவிட்டால், 'பூ......இவ்வளவு தானா ?' என்று மிகச் சாதரணாமாக்கப்பட்டுவிடுமோ என்கிற தேவையற்ற அச்சமும் பிரிதொரு காரணமாக இருக்கிறது.

வேதம் வேதாந்தம் இவற்றின் இன்றைய பயன் எதுவும் இருக்கிறதா என்கிற கேள்வி மற்றொரு விவாததற்கு உட்பட்டது. ஒரு கிறித்துவருக்கு நெருக்கமாகவும் அன்றாடமும் பயனில் இருக்கும் பைபிள், அதே போன்று இஸ்லாமியருக்கு இருக்கும் குரான் போன்று இந்துக்களின் ஒவ்வொரு பிரிவிற்கும் (சைவம், வைணவம்) ஒன்று என்று சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை என்று பார்க்கும் போது இந்து சமயங்களின் வேதங்களின் மீது கட்டப்பட்ட மித மிஞ்சிய புனிதத் தன்மை தவிர்த்து வேறு என்னவாக இருக்க முடியும் ? இந்திய தத்துவ ஞானம், அல்லது இந்து ஞான மரபு என்கிற ஒற்றைச் சொல்லில் தத்துவங்களையும் சமய நூல்களையும் முடக்குபவர்கள் அவற்றை இந்து மக்களின் பொதுப்பயன்பாட்டில் இருந்து விலக்கி எடுத்துச் செல்கிறார்கள் என்பதை உணர்வார்களா ?

பின்குறிப்பு : நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சலாக எழுதியதன் தொகுப்பு

சிங்கையில் அழகிய சிங்கர் !

பதிவர் மற்றும் பாடகர் எம் எம் அப்துல்லா சிங்கையில் முகாமிட்டு இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை சிங்கைக்கு இல்லத்தினரோடு வந்தார், வேறு சில காரணங்களால் விமான நிலையம் சென்று சந்திக்க முடியவில்லை. மறுநாள் ஜோசப் பால்ராஜ், அப்துல்லா இருவரும் என் வீட்டுக்கு வந்து மூவருமாக சேர்ந்து சிங்கை நாதனை பார்க்கப் போகலாம் என்று முடிவு செய்தோம். அதன் படி மாலை 6 மணி வாக்கில் ஜோசப்பால்ராஜின் 'சொந்த'க்காரில் என் வீட்டுக்கு இருவரும் வந்தனர். சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு சிற்றுண்டிகளை முடித்துக் கொண்டு சிங்கை நாதன் வீட்டிற்கு கிளம்பினோம்.

போகும் வழியில் ஈரோடு பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடந்ததையும் அங்கு ஆட்டம் போட்டதையும் பகிர்ந்து கொண்டு வந்தார். கேபிள் (சங்கர்), தண்டோரா இருவரும் பட்டையைக் கிளம்பினார்களாம், காரில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது, இவரும் பாட தொடங்கிவிட்டார். பால்ராஜ் பாட்டு ஒலியை முற்றிலுமாக குறைத்துவிட்டார். அப்துல்லா மட்டுமே பாடிக் கொண்டு வந்தார் ( உன்னை நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்.....). ஏன்ம்பா பாட்டை நிறுத்திட்டிங்கன்னு அப்துல்லா கேட்க, அதான் லைவாக பாடுறியே அதான் நிறுத்திவிட்டேன் என்று சொல்ல கலகலப்பு.

சிங்கை நாதன் வீட்டுக்கு மாலை 7:30க்குச் சென்றோம். வீட்டில் உள்ளவர்கள் இன்னும் 1 மணி நேரத்தில் வந்துவிடுவதாகச் சொன்னார் செந்தில். செந்தில் தற்போது பார்க்கும் பொழுது முகம் நன்றாக தெளிவடைந்திருக்கிறார்.

சற்று கூடுதல் எடை, வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் உடல் எடை கூடுகிறதாகச் சொன்னார். VAD எனப்படும் இதய இயக்கியை சிறிய பையில் போட்டு குறுக்காக மாட்டிக் கொண்டு இருந்தார். நன்றாக நடக்கவும் பேசவும் முடிகிறது.

எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார். சிறிது நேரம் அவருடைய மருத்துவ நிலவரம் குறித்துக் கேட்டுக் கொண்டோம், மற்ற நிலவரங்களைப் பேசினோம். 45 நிமிடங்கள் ஆகி இருந்தது, அப்துல்லாவிற்கு வேறு சிலரைப் பார்க்க வேண்டியிருந்ததால் செந்தில் வீட்டினர் வரும் வரை காத்திருக்க முடியவில்லை. செந்திலிடம் விடை பெற்று குட்டி இந்தியாவிற்கு வந்தோம். பிறகு நான் வீட்டிற்கு விடை பெற்றேன்.

புதுகை அப்துல்லாவுடன் பதிவர் சந்திப்பு வார இறுதியில் நடக்க இருக்கிறது. அது பற்றிய விவரம் விரைவில் வரும்.

தம்பி அப்துல்லா இனிய குரலில் பாடுபவர், பதிவர் என்பதைத் தாண்டி அனைவரையும் அண்ணா என்று அழைக்கும் பாசக்காரப் பயப் புள்ளன்னு பேரு இருக்கு. ஏற்கனவே சிங்கை வந்திருக்கிறார். அப்போது குறுகிய கால இடைவெளியில் சந்தித்தோம். பிறகு தனிப்பட்ட முறையில் சென்னையில் சந்தித்து இருக்கிறேன். சாதி, மதம், குழு மனப்பாண்மையில் இயங்கும் பதிவுலகில் அப்துல்லா போன்றோர் விதிவிலக்கு, அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர். நாம் சந்திப்பவர்களில் 'இவருடன் நட்பு வேண்டும், இவர் நண்பராக அமைய மாட்டாரா ?' என்று நினைக்க வைப்போர் மிகக் குறைவுதான். அப்படி இருப்பவர்களில் இவரும் ஒருவர். அந்தவகையில் புதுகை அப்துல்லா எனக்கு தம்பி அப்துல்லா.

பின்குறிப்பு : அப்துல்லாவிற்கு அழகிய சிங்கர் பெயர் அளிப்பு அப்பாவி முரு (நன்றி)

26 டிசம்பர், 2009

அத்தை மக அருக்காணி !

கிராமத்துப் பெயர்களை திரையுலகிலும், நாடகங்களிலும் கிண்டல் அடித்து அடித்து தமிழ் பெயர்கள் சூட்டுவது கூட இழுக்கு என்பதாகி 'ஸ்', 'ஷ்','ஜ' போன்ற வட எழுத்துக்களில் தொடங்கும் வடமொழிப் பெயர்களை சூட்டுவது வழக்கமாகி இருக்கிறது. கிண்டல் அடிப்பது மட்டுமின்றி பிறந்த நேரத்து பலனாக இந்த எழுத்தில் தொடங்குங்கள் என்கிற சோதிட அறிவுறுத்தலால் மனதுக்கு பிடித்தப் பெயர்களை விட்டுவிட்டு எதையோ ஒரு பெயரை வைத்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு முன்னோர்களின் பெயரை வைத்து நினைவு கூறும் வழக்கம் கிட்டதட்ட இல்லை என்னும் நிலையில் தான் தமிழ் பெயர்கள் வழங்கி வருகின்றன.

இந்தியாவில் குடும்பப் பெயர்கள் என்பவை சாதிய அடைமொழியாகி இழிந்துவிட்டதால், தமிழக அளவிலாவது சாதிவெறியர்கள் தவிர்த்து வேறு எவரும் சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வதில்லை. சந்திரபாபு நாயுடு ஒரு பேட்டியில் நாயுடு என்கிற சாதிப் பெயரைத் தன் பெயரில் இருந்து இனி எடுக்கப் போவதாக அறிவித்தார், செயல்படுத்தினாரா என்று தெரியவில்லை. ஆனால் செய்தி இதழ்களில் சந்திரபாபு நாயுடு என்றே எழுதப்பட்டு வருகிறது. ஒருவன் திருந்தினாலும் அவனை இந்த சமூகம் திருந்தவிடாது என்பதைத்தான் செய்தி இதழ்களின் பெயர் சேவை மூலம் தெரிந்து கொள்கிறோம். சாதிய அடைமொழியை பெயரில் இருந்து நீக்கிக் கொள்வது சாதிய ஏற்றத்தாழ்வுகளால் நொருங்கிக் கிடக்கும் சமூகத்தில் வரவேற்கத்தக்கதே. உயர்சாதி என்று அழைத்துக் கொள்ளும் அனைத்து சாதி வெறியர்கள் தவிர்த்து சாதிப் பெயர் மீது விருப்பம் கொண்டவர் குறைவே. அகமுறை திருமணங்கள் ஒழிந்துவிட்டால் சாதிப் பெயர்கள் முற்றிலுமாக நீங்கும், தற்போதைய திருமண அழைப்பிதழ்களில் உயர்சாதியினர் என்று கூறிக் கொள்பவர்கள் தவிர்த்து யாரும் சாதியை அடையாளப்படுத்தி அழைப்பிதழ் அடிப்பது கிடையாது, ஒரு சில அழைப்பிதழ்களில் குல தெய்வப் பெயர் இருக்கும், அதை வைத்து சாதியைக் கண்டுபிடித்தால் தான் உண்டு.

சரி, அருக்காணிக்கு வருவோம், அண்மையில் பார்த்த வேட்டைக்காரன் படத்தில், விஜய் மேற்படிப்புக்காக சென்னை செல்கிறார், அப்போது அவர் அம்மா, அழுது கொண்டிருப்பார், ஏன் அழுகிறீர்கள் என்று விஜய் கேட்க, 'மேலப் படிக்காமல் இருந்தால் அத்தை மகள் அருக்காணியை உனக்கு கட்டிவைத்து கூடவே வைத்திருப்பேன்' என்பதாக சொல்லுவார்.

இந்தக் காட்சியைப் பார்க்கும் ஒருவரது மனதில் பதியும் எண்ணங்கள்

1. அருக்காணி என்ற பெயர் உடைய பெண்கள் படித்திருக்க மாட்டார்கள்
2. படிப்பு அறிவு, படிப்பின் பயன் தெரியாதோர் இன்னும் அருக்காணி என்ற பெயரையெல்லாம் வைப்பவராக இருக்கிறார்கள்
3. படித்தவனுக்கு படிக்காதப் பெண்ணை திருமணம் செய்து வைப்பது தவறு

மூன்றாவதாக நான் குறிப்பிட்டு இருப்பது ஞாயம் உள்ளதாகவே இருந்தாலும், ஒரு பெண் படித்தவளா இல்லையா என்பதை அவள் பெயர் சொல்லிவிடுமா ? அல்லது படித்தப் பெண்கள் பெயர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதேனும் இருக்கிறதா ? வழக்கமாக எஸ்வீசேகர் நாடகங்களில் தமிழ்பெயர்கள் மிகுதியாக கிண்டல் அடிக்கப்படும், அதையும் காசு கொடுத்துவிட்டு ரசித்து சிரித்துப் பார்த்துவிட்டு வருவோம். ஆனால் அப்பன் வைத்தப் பெயரையே எண் கனித சோதிடம் பார்த்து 'சே.வே.ஷேகர்' என்று மாற்றிக் கொண்ட எஸ்விசேகருக்கு தமிழ் பெயரைக் கிண்டல் அடிக்கும் தகுதி இருக்கிறதா என்று ஒருவரும் எண்ணிப் பார்ப்பது இல்லை. ஒருவரின் பெயர் வெற்றியை ஈட்டித்தருவதாக இருக்க வேண்டும் என்று நினைப்போர் தன் பெயரை 'சொறிநாய்' என்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சோதிடன் பரிந்துரைத்தால் அப்படியும் வைத்துக் கொள்வார்கள்.

எஸ்விசேகர் பார்பனிய சிந்தனையாளர் அவருக்கு தமிழ்பற்று இருக்க வேண்டும் என்கிற தேவை இல்லை என்றாலும் தமிழைக் கிண்டலடிக்கும் உரிமையும் இல்லை என்று நாம் எதிர்ப்பு காட்டுவதில்லை, 'அமெரிக்காவில் அருக்காணி' ஆயிராமவது முறையாக அரங்கேறினாலும் பார்த்து ரசிப்போம். ஒரு கிறித்துவரான விஜய் இந்து பெரும்பான்மையினரின் பெயராக 'விஜய்' என்ற பெயரைச் சூட்டி இருக்கும் நடிகர் விஜய் தன் படத்தில் ஒரு பெண் பெயரை கிண்டல் அடித்திருப்பதை எப்படி அனுமதித்தார் என்று தெரியவில்லை. திரைப்பட நாயகன் கிறித்துவ, இஸ்லாமிய பெயருடன் இருக்கக் கூடாது என்பதில் உறுதியுடனும், மூன்றெழுத்திலும் தேர்ந்தெடுக்கும் விஜய் உடபட பல நடிகர்கள் பிறரின் பெயரை வைத்து செய்யப்படும் காமடி அபத்தங்களை அதுவும் தம் படத்தின் வழியாக சொல்வது முரணாகவே இருக்கிறது.

பல்வேறு ஊடகங்கள் வழியாக கிண்டல் அடித்து கிராமங்களில் அருக்காணிகளே குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம், காரணம் திரைப்படங்களைப் பார்த்து பார்த்து கிராமப் பெயர்கள் எல்லாம் எப்போதோ மாறிவிட்டிருக்கிறது. எம்சிஆர் என்று பெயர் வைத்துள்ளவர்களைக் கூட நான் பார்த்திருக்கிறேன். லாவண்யா, சுப்ரியா, ஸ்ரேயா, அம்சா, தேவநாதன், புவனேஷ்வரி என்று பெயர் வைத்திருப்பவர்கள் அனைவருமே படித்தவர்கள் என்று சொல்லிவிட முடியுமா ? இன்னும் சொல்லப் போனால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் மிகுதியாக படிப்பவர்களாகவும் தேர்ச்சி விழுக்காட்டில் மிகுதியாகவும் இருக்கின்றனர். இப்போதெல்லாம் ஆண்களின் படிப்பு தகுதியைப் பார்த்து தன்னை விட மிகுதியாக படித்திருக்ககவிட்டால் நிராகரிக்கும் நிலையில் தான் இருக்கின்றனர். இன்னும் அருக்காணிகள் படிக்கவில்லை என்பதும், படிக்காதவர்கள் அருக்காணிகளாக இருக்கிறார்கள் என்பது போன்ற திரைப்பட கட்டமைப்புகள் கண்டிக்கத் தக்கதே. அதைவிட தமிழ் கிராமியப் பெயர்களை (படிக்காதவர்களின் பெயர்கள் என்பது போல்) கிண்டல் அடிக்கலாம் என்கிற உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார் ?

24 டிசம்பர், 2009

கலவை 24/டிச/2009 !

கடவுளைப் போல் காலமும் புதிரானது. பரவெளியில் அசைவுகளும், செயல்படும் மனித மனமும் இல்லை என்றால் காலம் என்று ஒன்றை வரையறுக்க முடியாது, அசைவுகளின் அளவீடுதான் காலம் (Time) எனக்கருதிக் கொள்கிறோம். இன்று நடைமுறையில் இருக்கும் கிரிக்கேரியன் ஆங்கில முறை நாட்காட்டி 500 ஆண்டுகளுக்கு முன்பு தான் உருவாகப்பட்டது என்று அறியும் போது வியப்பாகவே இருக்கிறது. மொழி, இனத்திற்கு ஒரு நாட்காட்டி முறைகள் உலகெங்கிலும் இருந்தாலும் பொதுவான நாட்காட்டி முறையான கிரிக்கேரியன் நாட்காட்டி முறை போப் எட்டாம் ஜார்ஜ் என்கிற கத்தோலிக்க போப் ஆண்டவரால் உருவாக்கப்பட்டதாம். ஆங்கில நாட்காட்டி கிறித்து பிறப்புடன் தொடங்கியது அல்ல, வரலாற்றை எழுத கிறிஸ்து பிறப்புக்கு பிறகே சுமார் 500 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கப்பட்டது. ஏசு கிறிஸ்து பிறந்தது கிமு 4 ஆம் ஆண்டு என்றும் சொல்கிறார்கள். ஏசுவுக்கு முன்பே வாழ்ந்த அலெக்சாண்டர், அரிஸ்டாட்டில் மற்றும் பிற கிரேக்க தத்துவயலாளர்களின் பெயர் வரலாற்றில் சிறப்பாக பதிவு செய்திருக்கும் பொழுது, ஏசு கிறிஸ்து பிறப்பு பற்றி பைபிள் தவிர வேறு வரலாற்று ஆவணங்கள் எதிலும் இல்லை என்றே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கிறித்து சிலுவையில் அறையப்படும் போது இருந்ததாகச் சொல்லப்படும் ஏராது மன்னன் வரலாற்று அடிப்படையில் ஏசு பிறப்புக்கு முன்பே இறந்துவிட்டானாம். ஏசுவை ஈசா நபி என்று அழைக்கும் இஸ்லாமியர்கள் ஏசு பிறப்பைக் கொண்டாடதக் காரணங்கள் தெரியவில்லை.

கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.


ஆங்கில நாட்காட்டியின் வரலாறு பற்றி அறிய விக்கியை சொடுக்குங்கள்.

*******

என் வலைப்பதிவுக்கு 'பாலியல்' 'காமக் கதை' ஆகிய குறிச் சொற்களைத் தேடி நிறைய பேர் வருவதாக feedjit காட்டுகிறது, தினமலரில் 'தேவநாதனையும்', 'புவனேஸ்வரியை'யும் நிறைய பேர் தேடி இருக்கிறார்கள். தேடல் என்பது இது தானோ !

*******

இடைத்தேர்தல் பற்றிய செய்திகள் ஆரவாரமில்லாமல் இருக்கிறது. வழக்கமாக இடைத்தேர்தல் என்றாலே ஊடகங்கள் பரபரக்கும், விவாதங்கள் சூடு பறக்கும், என்னத்த.....அதான் யார் வெற்றிபெறுவார்கள் என்று தெரிந்தது தானேங்கிறது போல் தொகுதி மக்கள் தவிர்த்து வேறு எவரும் பெரிதாக அலட்டிக் கொண்டது போல் தெரியவில்லை. மருத்துவர் இராமதாஸ் ஐயாவின் வேண்டுகோளை ஏற்று 49 ஓ போட்டது மொத்தமே 49 பேர் கூட இல்லை என்பது சுவையார்வமான தகவல். இதுக்கு பதிலாக வெற்றிபெரும் கட்சியை ஆதரித்துவிட்டு எங்களால் தான் வெற்றிபெற்றது என்று வழக்கம் போல் சொல்லி இருக்கலாம். மருத்துவர் ஐயாவின் பார்ம் போய் விட்டது. பத்தாண்டுக்கும் மேலாக பாமக நீடித்ததே வியப்பு தான். மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் மஞ்சள் குளித்த அனித்தா இராதாகிருஷ்ணன் வேட்பாளர்களுக்கு முன்னோடி, இனிமே(ல்) கட்சி மாறுகிறர்வர்களால் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் தேர்தல் செலவும் சேரும் என்கிற முன் உதாரணத்திற்கு முதல் முன்னோடி. இதெல்லாம் பொது ஊடகங்களில் வெகுவாக விமர்சனம் செய்யப்படாததும் வியப்பு தான். கவர் ஸ்டோரி எழுத கவர் யாரும் கொடுத்திருந்தால் செய்தியாளர்கள் இது பற்றி கேட்டு, பேசி, எழுதி இருப்பாங்கப் போல :). கட்சி மாறி தேர்தல் நடத்தி சட்டமன்ற பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ள அனிதா இராதாகிருஷ்ணனின் செயல் மக்கள் ஆட்சியின் மற்றோர் இழிவு.

*******

தெலுங்கானா பிரிப்பு பற்றி தெலுங்கான பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்வது தான் சரியான அனுகு(ம்)முறை என்று நினைக்கிறேன். ஒருமாநிலத்தில் தொடர்வது, தனியே செல்வது பற்றி அவர்களைத் தவிர்த்து பிற பகுதியினரோ, மானில மத்திய அரசுகளோ முடிவு செய்வது செயல் திணிப்பு ஆகும். தமிழ்பேசுபவர்கள் பாண்டி தமிழ்நாடு என்று இருக்கிறோம், மொழியால் மாநிலப் பிரிவினைக்கு எந்த பாதிப்புகளும் இல்லை, மொழி வளர்ச்சிக்கு பயன்படும், ஒரே மொழி ஒரே மாநிலம் என்பது செண்டிமெண்ட் டாக், மற்றபடி பெரிதாக பாதிப்பு எதுவும் கிடையாது. இந்தி பேசுகிற மாநிலங்கள் இருக்கும் போது தெலுங்கு பேசும் மாநிலங்கள் இருப்பதும் வரவேற்கத்தக்கதே. தெலுங்கான பிரிவினைப் பற்றி பிறர் கருத்து கூறலாம், ஆனால் முடிவு செய்யும் உரிமை அப்பகுதி மக்களுக்கே உரியது. மாநிலத்தைப் பொதுப்படுத்தி பஞ்ச் டயலாக் பேசும் தெலுங்கு நடிகர்கள் தெலுங்கைப் பொதுப்படுத்தி பேசவேண்டி இருக்கும். மாநிலம் பிரிந்தால் தண்ணீர் பிரச்சனை ? மாவட்டங்களுக்கு இடையேயும் தண்ணீர் பிரச்சனைகள் உள்ளது. நம்ம தமிழ்நாட்டில் கூட இந்த மாவட்டத்து தண்ணீர் அங்கே போகக்கூடாது என்கிற போராட்டங்கள் நடந்து இருக்கிறது. தனக்கு மிஞ்சியது தான தருமம் போல் தம்பகுதிகளுக்கு மிஞ்சியதே தண்ணீர் என்பதாகத்தான் தண்ணீர் தேவை குறித்த சித்தாந்தங்கள் இருக்கின்றன. ஆகவே தண்ணீர் பிரச்சனைகளுக்கும் தனித் தெலுங்கானவிற்கும் தொடர்புகள் குறைவு அல்லது அவை என்றுமே இருப்பது என்று சொல்லலாம். வழக்கம் போல் தேசியவியாதிகள் மாநிலப் பிரச்சனையையும் தேசியப்பிரச்சனையாக்கி மாநிலப் பிரிவினையை தனிநாட்டுப்பிரிவினை என்பது போல் காட்ட முயற்சிக்கிறார்கள். என்னைப் பொருத்த அளவில் தமிழ்நாடு பிரிக்கப்படுவதற்கு சொல்லப்படும் காரணங்கள் சொற்பமே, அதை நிராகரிக்கிறேன். ஆனால் புதிய மாநில தலைமை அல்லது தலைநகரங்கள் பிறப் பகுதியிலும் துணைத் தலைநகர் போன்று திருச்சி அல்லது மதுரையில் அமைத்தால் சீரான மாநில வளர்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கும்.

********
தேர்தல் ஜோக்

தொண்டர் 1 : இடைத்தேர்தல் வெற்றி பற்றி நம்ம தலைவர் என்ன சொல்கிறார்

தொண்டர் 2 : இன்னும் இரண்டே ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் வரும், இடைத் தேர்தலுக்கு இவ்வளவு செலவு செய்து வென்றது நட்டம் தானாம்.

தொண்டர் 1 : அடப் போய்யா.... இந்த மாதிரி இடைத்தேர்தல் நடக்குறதால் தான் நம்ம மாதிரி ஆளுங்களிடம் பணப்புழக்கம் இருக்கு

தொண்டர் 2 : அப்ப நீயெல்லாம் முன்னைப் போல் வெறும் டீ குடிச்சிட்டு வேலை பார்க்கலையா ?

23 டிசம்பர், 2009

செய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைகாட்சி)

இன்றைய முதன்மைச் செய்திகள், தமிழக தலைவர் முன்னூறாவது முறையாக மூச்சும் பேச்சும் தமிழுக்கே என்றார். வெற்றிமுரசு கொட்டும் சேட்டைக்காரன் சிறப்பு செய்திகள், பிற்பட்டவர் வீட்டில் பூரி கிழங்கு சாப்பிட்டார் ராகுல் காந்தி.....இன்னும் பக்கத்துக்கு பக்கம் (சாரி...இது குங்குமம் வெளம்பரம் இல்லை, செய்தி .....செய்தி தடங்களுக்கு வருந்துகிறோம்)


நேபாள நாட்டில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் கலைமகன் விருது பெற்றுக் கொண்ட தமிழினவேந்தன் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். தனக்கு இந்த விருது பெரும் தகுதி இல்லை என்றாலும் விருது கொடுப்பவர்களின் மனம் கோணாமல் இருக்க இந்த விருதை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். தனது மூச்சும் பேச்சும் முன்னூறாவது முறையாக தமிழுக்கும் தமிழனுக்கு அற்பணிக்கப் போவதாகக் கூறினார். பேச்சின் இடையே தலைவா இது 301 ஆவது முறை எண்ணிக்கை தவறு என்று கத்திய தொண்டரின் ஆர்வக் கோளாறு வேந்தனை முகம் சுளிக்க வைத்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு சிற்றுரை ஆற்றி முடித்தார். வேந்தனுக்கு நடத்திய பாராட்டுவிழாவின் மகிழ்ச்சியில் எழுந்த ஆனந்த கண்ணீர் மீண்டும் ஒரு மழை வெள்ளமோ என்று வியக்க வைத்தது (இது பற்றிய செய்தித் தொகுப்பில் சென்னை அரங்க நாயகம் சுரங்கப் பாதையின் சூழ்ந்திருந்த நீரில் பேருந்து ஒன்று நகரமுடியாமல் நின்று கொண்டிருப்பதையும் அதை கிரேன் மூலம் இழுப்பதும் காட்டப்பட்டது)

மூன் பிக்சர் வெளியீடாக வெளியான சேட்டைக்காரன் தமிழக மற்றும் இந்திய உலக வரலாறு திரைப்படங்களின் சாதனைகளை ஒன்றும் இல்லாமல் செய்திருக்கிறது. இங்கே நீங்கள் பார்பவர்கள் ரேசனுக்கு காத்திருப்பவர்கள் அல்ல, அடுத்தவராம் சேட்டைக்காரன் டிக்கெட்டுக்கு சென்ற வாரம் முதல் வரிசையில் நிற்பவர்கள் தான், அடுத்தவன் உயிர் கூட தலைவனுக்கே சொந்தம் என்று கூறி உணர்ச்சி வசப்பட்ட ரசிகர்களை சமாதானப் படுத்தி அழைத்துச் செல்லும் காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உணவையும் மறந்து 6 நாட்களாக வரிசையில் காத்திருக்க வைக்கிறதென்றால் சேட்டைக்காரன் உலக சாதனைச் செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்பதை டிடிவி சானலும் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தில் வரும் 'நாய் கடிச்சா தூங்க மாட்டே....' பாட்டு பட்டையைக் கிளப்புவதாகவும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர், டுஸ்மோர்....சில இடத்தில் த்ரைஸ்மோரெல்லாம் கேட்டது திரையரங்கு வளாகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது

(வெளம்பர இடைவேளை.....சேட்டைக்காரன்.........'நாய் கடிச்சா தூங்க மாட்டே....')

உத்திர பிரதேசம் ஜான்சி மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு பிற்பட்ட சமூகத்தைச் சார்ந்த சுய உதவிக் குழுவினர் ஒருவர் வீட்டில் பூரி கிழங்கு சாப்பிட்டார். பூரி கிழங்கு சுவையாக இருந்ததாகவும், இளைஞர்கள் பூரி கிழங்கு சாப்பிடுவதால் கேஸ் ட்ரபிள் எதுவும் வராது என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தவே தாம் துணிந்து பூரி கிழங்கு சாப்பிட்டதாகவும் தெரிவித்தார். பூரி கிழங்கு சாப்பிட்டதற்கு காசு கொடுத்தீர்களா ? என்று கேட்ட செய்தியாளர் ஒருவரிடம் சிரித்து மழுப்பிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாக வட்டார செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

நன்றி வணக்கம்...

இது ஒரு காலம் தொலைக்காட்சியின் தயாரிப்பு

20 டிசம்பர், 2009

அவதார் !

ஆங்கிலப் படங்களில் வரைகலையுடன் அறிவியல் புனைவுகள் விரும்பிப் பார்ப்பவர்களுக்கு அவதார் படம் நல்ல தீனி. 2:30 மணி நேரம் முப்பரிமான காட்சிகள் பார்க்கும் போது காட்சிகளின் ஊடாக பயணிப்பது போன்ற ஓர் உணர்வை இந்தப் படம் தருகிறது. எதோ ஒரு வேற்றுலக வசிப்பிடத்தை அடையும் மனிதர்கள் அங்கு வாழும் மற்றோர் உயிரினத் தொகுதியை அழித்துவிட்டு, இயற்கை வளங்கள் மிகுந்த அந்த இடத்தைக் கைப்பெற்ற முயல்வதாகக் கதை. அப்படி அங்கு சென்ற மனிதர்களில் வேற்றுலக உயிரின அழிப்பில் உடன்படாதவர்கள் வேற்றுலகத்தினரை காப்பாற்றுவதாகக் கதை முடிகிறது.

மனித உடல் விட்டு வேற்றுலத்தினரின் உடலில் நுழைந்து அவர்களின் உலகத்தினருடன் கதை நாயகன் சேர்வதும், அவர்களது சூழலை, இயற்கையிடன் இணைந்து வாழும் வாழ்வியல் முறைகளை உணர்ந்து அவர்களைக் காப்பாற்றுவதானக் காட்சிகளில் அடுத்தது அடுத்து கணிணி வரை கலைகளில் முற்றிலும் மாறுபாட்ட உலகில் மனித கற்பனை விரிந்து இருக்கிறாது. (கற்பனை என்று எதுவும் கிடையாது, நமக்கு தெரிந்தவைகளின் மாறுபட்ட பார்வை, கொஞ்சம் அலங்காரம் இவையே தான் கற்பனை எனப்படும்). மெர்குரிப் பூக்கள் போல் ஒளிரும் தாவரங்கள், பூக்கள், மரங்கள், நடைபாதைகள் இரவு நேரங்களில் ஒளிர்வதும், மாறுபட்ட உயிரின வகைகள் எந்திரத் தனமாக இல்லாமல் உண்மையானவை போன்று இருந்தன.

2:30 மணி நேரம் காட்சிகள் இப்படித் தான் என்பதாக வரைகலை திகட்ட திகட்ட இருப்பதால் எப்போது தான் படம் முடியுமோ என்கிற அயற்சியை ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை. ஏனைய முப்பரிமானப் படங்களை விட இந்தப் படம் கண்டிப்பாக குழந்தைகளை கூடுதலாகவே மகிழ்விக்கும் படம்.

இந்தப் படத்திற்கான உழைப்புகளை பெரிய அளவில் விளம்பரப் படுத்தி இருப்பதால் படத்தில் அந்த எதிர்பார்ப்பை முழுமை செய்யாத வெறுமை ஏற்படுகிறது. எனக்குத் தெரிந்த அயற்சிக்கு காரணம் வேற்றுலகத்தினர்கள் மனித முகத்தை ஒத்திருந்திருந்ததலும், உடல் (வண்ண) நிறங்கள், உயரம் கூடுதலாகவும், வாலுடனும் இருக்கிறார்கள். அவர்களின் முகம் அந்த அளவுக்கு கவர்ச்சியை ஏற்படுத்தவில்லை.


இதுவரை ஆங்கிலப் படங்களில் வேற்றுலகத்தினரை வில்லனாகக் காட்டுவார்கள். இதில் நல்லவர்களாகக் காட்டி இருப்பதால், நல்லவர்களுக்கான முகங்களாக இந்தப் படத்தின் முகங்களை பொறுத்திப் பார்க்க முடியாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதன் காரணமாக அவர்களின் வீரமும் அடிமைகளின் ஆற்றமையில் எழுந்த வீரம் போல் உணரப்படுகிறது. பொதுவாக சமூகம் நல்லவர்கள் என்று அடையாளம் காட்டும் முகத்தின் கட்டமைப்புகளை வைத்துக் கொண்டு தான் பார்க்கிறோம். அதில் இந்தப் படத்தில் காட்டும் வேற்றுலகத்தினரின் முகம் பொருந்திவரவில்லை. படம் பார்த்து வெளியே சென்ற சீனர்களும் படத்தில் மனநிறைவு அடைந்தது போல் தெரியவில்லை. படத்தில் வசனங்களின் நீளம் மிகுதி.

2012 திரைப்படத்தைவிட இந்தப் படத்தில் வரைகலை நுட்பம் சிறப்பாகவே இருக்கிறது. ஆனாலும் அவதார் விளம்பரப் படுத்தப் பட்ட அளவுக்கு ஓடுமா என்பது ஐயமே. விஜயபடமா, அவதாரமா எது விரைவில் திரையரங்குகளை விட்டு வெளியோறும் என்பதை கடுமையான போட்டியாகவே நடத்தலாம்.





படத்திற்கான இலவச நுழைவுச் சீட்டு : முகவை இராம்
படம் பார்க்க கூடவே வந்த மற்ற அவதாரங்கள் : ஜோசப் பால்ராஜ், ஆமத்தூர் ஜெகதீசன் மற்றும் விஜய் ஆனந்த்



விஜய் ஆனந்த் மற்றும் ஜோசப் பால்ராஜ் (இரு அவதாரங்கள்)

*********

அவதாரம் என்பதற்கு தனித் தமிழ் சொல் தோற்றரவு

அவதார் படம் பற்றிய சிறப்பான விமர்சனங்களுக்கு கேபிள் சங்கர் மற்றும் ஹாலிவுட் பாலா ஆகியோரின் பதிவுகளை பரிந்துரைக்கிறேன்.

18 டிசம்பர், 2009

வேட்டைக்காரன்... அடேங்கப்பா !




படம் இன்னிக்கு தான் வெளியாகுது, முன்பதிவு தொடங்குகிறது என்ற கேள்விப்பட்டதும், சிங்கப்பூர், கோல்டன் வில்லேஜ் யூசுன் திரையரங்கில் நேற்று மாலை நுழைவுச் சீட்டு பெற காந்திருந்தவர்களின் நீண்ட வரிசை தான் மேலே பார்க்கும் படம்.

17 டிசம்பர், 2009

இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 2

உலகத்தில் நல்லவர்கள் இருவர் தான், ஒருவர் இறந்துவிட்டார் இன்னொருவர் பிறக்கவே இல்லை, இது தான் நல்லவர்கள் யார் என்பதற்கு பல்வேறு தரப்பினர் ஏற்றுக் கொள்ளும் விளக்கம், காரணம் நல்லவர் என்ற சொல்லின் முழுமைக்குப் பொருத்தமானவர் என்றுமே இருந்தது இல்லை. பிராமணன் என்று வருண வாதிகளால் சொல்லப்படும் குண மேன்மையுடன் எப்போதும் ஒருவன் இருநத்தே இல்லை, ஆனாலும் அப்படி எவரேனும் இருக்கிறார்களா ? என்ற தேடுதலும் தன்னை அப்படி உயர்த்திக் கொள்ள ஒரு சில பார்பனர்கள் முயற்சி செய்வதாக இந்து சமய பழமைவாதியும் பார்பனருமான சோ இராமசாமியின் கற்பனைகதைகளே எங்கே பிராமணன் தேடல் நூலாகவும், தொலைக்காட்சித் தொடராகவும் வெளி வந்திருக்கிறது. இது குறித்து முன்பு எழுதிய பதிவில் இதிகாச அடிப்படையில் பிராமணன் என்பவன் இருந்தது இல்லை என்று சொல்லி இருந்தேன். இங்கே தமிழக வரலாற்று அடிப்படையில் பிராமணன் இருந்தானா ? என்று பார்ப்போம்.

பிராமணன் என்பவன் வாழ்ந்தே இருந்திடாவில்லை என்று தெரிந்தும் அப்படி ஒரு குண மேன்மை எங்களுக்கு வாய்க்க வாய்ப்புகள் உண்டு, அதற்கான வாழ்வு முறை எங்களது என்கிற கட்டுமானத்தில் பார்பனர்கள் தங்களை பிராமணர்களாக அறிவித்துக் கொண்டு அந்த பிராமணத் தகுதி என்பதை தொழில் முடிவு செய்தாக எழுதிக் கொண்டதும், தொழிலானது பிறப்பின் வழியாக அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப் பட்டு வழிவழியாக தொடர வேண்டும் என்கிற ஏற்பாட்டில் பிராமணத் தகுதி என்பதை பார்பனர்களின் நிரந்தர உடைமை ஆக்கியதுடன், பிராமணனிடம் பிற சமூகத்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற வருண கோட்பாடுகளை வகுத்து, பிற வருணத்தினர் தங்களின் மேலாண்மையையும், வழிகாட்டுதலையும் ஏற்றுக் கொள்வது அவரவர் குல தர்மம் என்பதாக ஆக்கி அதை மனுஸ்மிருதி முதற்கொண்டு பல்வேறு பார்பன சார்பு, பார்பன நல மேன்மை காக்கும் நூல்களில் ஆக்கி வைத்து அதன் படியான நீதி வழுவாமல் பார்த்துக் கொள்வதே அரசக் கடமை, அரச நீதி என்றெல்லாம் வழிகாட்டப்பட்டது. இதன் படி பல முட்டாள் அரசர்கள் தங்களை பார்பனர்கள் மூலம் சந்திர வம்சம், சூரியவம் என்றெல்லாம் புகழச் செய்து பாடல்கள் ஆக்கிக் கொண்டு மனு நீதி வழுவாத அரசாட்சி நடத்தினார்கள் என்பதை சமய சார்பற்றவர்கள் எழுதும் மாற்றுப் பார்வைகள் மூலம் வெளிச்சத்துக்கு வருகின்றன.

நிலம் பொது உடமையாக இருந்த சங்க காலத்தில் திருக்குறள் உட்பட பதினென்கணக்கு நூல்கள் 'சாதி' என்றச் சொல்லை அறிந்ததே இலலை. குலம் குலவழக்கம் ஆகியவை அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அமைந்தும், களவு மணம் என்னும் காதல் மணம் மண வாழ்க்கையின் வாசலாக இருந்தது என்பதை அகத்திணை புறத்திணை ஆகிய நூல்கள் வழியாக நமக்கு தெரிய வருவதாகும். குலக் கலப்பு இழுக்கு என்பதாக் எநத் ஒரு குறளிலும் திருக்குறளில் சொல்லி இருக்கவில்லை என்பதை ஒப்பு நோக்க அப்படியான களவு மண முறை குலம் சார்ந்த ஒன்று அல்ல அனைத்தும் குலமும் தொழில் என்பதை பொருளீட்டலுக்கு செய்து வந்தார்களேயன்றி அதைத் தனியார் உடைமையாக்கி இருக்க வில்லை என்பதை அறியலாம்.

ஓதுதல் ஓதுவித்தல் ஆகியவை சிலப்பதிகாரக் காலமான 3 - 6 ஆம் நூற்றாண்டு காலத்தில் தொடங்கி இருந்த ஒன்று என்றும் 'மாமுது பார்பன் மறை வழிகாட்டிட' என்கிற செய்யுள் அதை உறுதிப் படுத்துவதாக அமைந்திருகிறது என்கின்றனர். அதாவது அந்த காலத்தில் மண முறைகள் குலத்துக்குள்ளேயே நடந்திருக்கிறது, அதை அகமணமுறை (பெற்றோர்களால் உறுதிப்படும் திருமணம்) என்றும் அதை பார்பனர்கள் நடத்தி தருவது வழக்கம் ஆக தொடங்கி இருக்கிறது என்பர். சிலப்பதிகாரப் பாடல்களிலும் சாதிச் சாடல் மிகுதியாக இல்லை. சங்கம் மறுவிய காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்த கடையேழு வள்ளல்கள் ஆட்சி புரிந்த காலத்தில் சாதி வேறுபாடுகள் மிகுதியானது என்பதைக் காட்டுவிதமாக கொன்றை வேநதனில் 'சாதி இரண்டொழிய வேறில்லை' என்கிற சாதிச் சாடால் பாடல்களும், அப்பாடல்கள் முழுவதும் சங்கச் செய்யுள்கள் போலில்லாது தெளிவாக புரியும் படியான தமிழ் நடையில் எழுதப்பட்டிருப்பதை ஒப்பு நோக்க சாதி அமைப்புகள் வேறூன்றியது ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே என்பது தமிழாராய்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

பிற்காலச் சோழர்களும், பல்லவர்களும் பார்பனர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்தியதால் 1000க் கணக்கான ஆகம கோவில்களும், அதற்கு நிலங்களாக காடுகள் அழிக்கப்பட்டு சதுர்வேதி மங்களங்கள் உருவாக்கப்பட்டு பார்பனர் வசம் ஒப்படைப்பட்டு, அவர்கள் மூலமாக காவேரி படுகை முழுவதும் விவசாய நிலங்கள் ஏற்படுத்தப்பட்டு வேளாண்மை தொழில் அறிமுகம் ஆனதாகச் சொல்கிறார்கள். கங்கைச் சமவெளியில் இருந்து வந்திருந்ததால் பார்பனர்களுக்கு விவாசய நுட்பம் தெரிந்திருந்திருக்க, புதிய விவாசாய முறைகளும் விளை நிலப்பரப்புகளும் விரிவடைவதற்கும் அவர்களின் நுட்பம் பயன்பட்டது என்கிறார்கள். பார்பனர்கள் நேரடியாக விவாசயம் பார்க்காமல் கோவிலை மையப்படுத்தி அதன் வழியாக சமூக ஆளுமை செய்து கொள்ள எடுத்த முடிவாக பார்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் பார்பனர்களாலேயே குத்தகை தாரர்களிடம் கொடுக்கப்பட்டு, அப்படியா குத்தகைக்கு எடுத்து வேளாண்மை செய்து வந்தவர்கள் பிள்ளைமார் சமூகம் அல்லது வேளாளர் சமூகம் என வழங்கப்பட்டது. நில உடமைதாரர்களாக இருந்த வேளாளர்களும், பார்பனர்களும் சேர்ந்து சமண ஆதிக்கத்தை ஒழிக்க முற்பட்ட ஏற்படுத்தியது தான் பக்தி இயக்கம். சேக்கிழார் போன்ற வேளாளப் புலவர்கள் பார்பனர்களை அந்தணர்கள், ஐயர்கள் என்று அழைக்க அவர்கள் இவர்களுக்கு பிள்ளைமார் பட்டம் கொடுத்து இருவரும் சைவ வழி உணவு உண்ணுவதன் மூலம் தனியான மேன்மையான தகுதி தங்களுக்கு கிடைக்கும் என்பதை புத்த / சமண மதங்களில் நடை முறையில் இருந்த உணவு வழக்கமான சாத்விக உணவு பழக்கத்தைப் பின் பற்றினர். வைணவம் தனிக்கதை.

ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே சதுர் வருணம் என்கிற நான்கு வருணம் தமிழக குல அமைப்புகளில் பின்பற்றப்பட்டது. பவுத்த, சமண சமயம் வீழ்ந்த பிறகு அதைப் பின்பற்றியவர்களில் உயிருக்கு பயந்தவர்கள் நிலவுடைமைகளில் வேலை செய்யும் அடிமைகள் ஆக்கப்பட்டும், அவரவரர் செய்து வந்த தொழில் அடிப்படையில் சாதியாக அடையாளப்படுத்தப்பட்டும் தீண்டாமை கடுமையாக நுழைக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக இருந்த உயர்சாதி சூத்திரர்கள் வேளாளர்கள், கோவில் முழுமையும் பார்பனர் ஆதிக்கத்தில் சென்றதால் பிற்காலத்தில் அவர்களுக்கும் பார்பன ஆளுமையை எதிர்த்துள்ளனர் என்பதை மறைமலை அடிகளார் போன்றோர்களின் பார்பன எதிர்ப்பை வைத்து அறிந்து கொள்ளலாம். நான்கு வருணம் என்பது பார்பனர்களால் முன்மொழியப் பட்டாலும் பார்பனர் அல்லாதவர்கள் அனைவருமே பார்பனர்களைப் பொருத்த அளவில் சூத்திரர்களே, பார்பனர்கள் இன்றும் கூட பார்பனர் அல்லாதவர்களை சூத்திராள் என்றும் சொல்லும் வழக்கு இருந்து வருவதை ஒப்பு நோக்கு.

வானளாவி வளர்ந்து நிற்கும் தமிழக ஆகம வழி அமைப்பட்ட கோவில் கோபுரங்கள் அனைத்துமே சமூகம் கூறுபட்டதன் சாட்சிகளே. அவற்றை வரணாசிரமத்தின் தலைமை பீடங்கள் எனலாம். இவற்றையெல்லாம் அறிந்தோர். கோவில் கூடாது என்றோம் ஏனெனில் அவை கொள்ளையர்களின் கூடாரம் ஆகிப் போனதால் என்றார்கள். பொருள் பொதிந்தது தானே இதைப் பற்றிய எனது மற்றொரு பதிவு ஆகமம் ஆலயம் ஆன்மா !


********
பார்பனர்கள் நம்பும் அனைத்து சமூகத்திற்கான நால்வருண வாழ்க்கை என்பது சமூகச் சமச்சீர் அற்றது, முதலாளித்துவம் என்னும் தனியார் மேலாண்மை போற்றுவதுமாகும். எங்கே பிராமணன் என்கிற தேடல் குண அடிப்படையிலான பிராமணன் இருக்கிறானா ? என்கிற ஆராய்ச்சியை நோக்கியது கிடையாது, ஏனெனில் அப்படி ஒருவன் இருப்பதற்கான சாத்தியம் எக்காலத்திலும் ஏற்பட்டது இருந்தததில்லை என்பதை சோ இராமசாமி போன்ற பார்பனர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனாலும் தேடல் தொடர்கிறது என்பதன் அரசியல் பின்னனி அப்படி ஒரு உயர்வை பிராமணனுக்கு கற்பித்தால் தொடர்ந்து வர்க / பிறப்பு வழியாக தம்மை பிராமணர் என்று அழைத்துக் கொள்ளும் பார்பன/ஆரிய இனம் பிறசமூகத்தால் எந்த ஒரு செயலுக்காக இன்றியும் மதிக்கப் படலாம் என்கிற நப்பாசையே. பார்பனர்களும் பார்பனரல்லாத சமூகங்களும் சோ இராமசாமி போன்ற அடிப்படை மற்றும் பழமை வாதப் பார்பனர்களின் செயலை ஊக்குவிப்பது கற்காலத்துக்கு இட்டுச் செல்லும் வழியாகும். எங்கே பிராமணன் ? என்கிற தேடல் அனைத்து சமூகத்தாலும் நிராகரிக்கக் கூடிய ஒன்று.


பின்குறிப்பு : இன்றைய தேதியில் பல பார்பனர்கள் தம் முன்னோர் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு, தமிழக மக்களிடையே வேற்றுமைகள் களையப்பட்டதை வரவேற்கிறோம் என்பதாக மாறி இருக்கிறார்கள். எனவே இந்தக் கட்டுரை இன்றைய முற்போக்கு பார்பனர்களைக் குறித்ததும் அல்ல. இந்தக் கட்டுரையை பார்பன வெறுப்பு என்று வகைப்படுத்துவதை / பொதுப் படுத்துவதை நான் நிராகரிக்கிறேன்.

குறிப்புகள் : நூல் : கோவில் - நிலம் - சாதி ஆசிரியர் பொ. வேல்சாமி (காலச் சுவடு பதிப்பகம்)

16 டிசம்பர், 2009

பெண்ணுடலால் வளர்க்கப்படும் சாதீயம் !

மதங்கள் அனைத்தும் ஆண்கள் தலைமையில் உருவாகி இருந்தாலும் அன்னிய (மத/சாதி) ஆண் / பெண் ஈர்ப்பில் அந்த அமைப்பு சிதைந்துவிடாமல் இருக்கவும், அவ்வமைப்பில் குழப்பம் ஏற்படாமல் இருக்கவும் பெண்களின் வழியாக அவற்றைக் கட்டிக்காக்க முடியும் என்ற நம்பிக்கையில் மதக் கொள்கைகளின் வழியாக பெண்களின் மீதான கட்டுப்பாட்டில் அவை செயல்படுகின்றன. மதம் மாறி காதல் திருமணம் செய்துக் கொள்ளும் போது அங்கு பெண்களின் நிலை எப்போதுமே கவலைக்கிடம் தான். தான் இதுவரை வணங்கி வந்த கடவுள்களை மறந்து புதிய வகை வணக்கத்திற்கும், பழக்கவழக்கத்திற்கும் தன்னை அவள் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். ஒவ்வொரு மதத்திலும் அந்நிய ஆண்களிடம் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது சமயப் பாடமாகவே நடத்தப்படுகிறது. அவை பெண்களின் கண்ணியம், கற்பு என்கிற புனிதங்களாக நிறுவப்பட்டு இருக்கும்.

இந்தியாவின் சிறப்புத் தன்மையாகவும், இந்து மதத்தின் பொதுத் தன்மையாகவும் இருக்கும் சாதியத்தில் பெண்களின் நிலைகுறித்து பல்வேறு சாதிய சமூகங்களும் பல்வகைக் கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பதை அவர்கள் சார்ந்த ஆண் சமூகத்தின் விருப்பமே தீர்மணம் செய்திருக்கிறது. இதற்கு அனுமதித்த, மறுத்த சமூகங்கள் அனைத்திலும் பெண்கள் எடுக்க வேண்டிய முடிவுகளை ஆண்கள் சமூகமே பரிந்துரை செய்து வந்திருக்கிறது. மறுமணம் செய்வதில் உடன்பாடு உள்ள சில சாதியினரிடம் கூட அம்மறுமணம் கூட அப்பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை ஆண்களே முடிவு செய்துவிடுவார்களாம். கணவனை இழந்த பெண்கள் கணவரது தம்பியை திருமணம் செய்து கொள்வது கூட வழக்கில் இருந்திருக்கிறது. காரணம் சொத்து யாருக்கு என்பதில் அது உறவுமுறைகளைக் கடந்து வேறொருவருக்கு போய்விடக் கூடாது என்பதைத் தவிர்த்து மறுமணம் பெண்களின் மறுவாழ்வை மறு உறுதி படுத்துகிறது என்பதற்காக அல்ல என்பதாக இத்தகைய மறுமணங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.

பெண்களின் கற்பு என்பதை அவளுடைய பெண் குறியுடன் தொடர்பு படுத்தி புனிதம் கட்டமைக்கப்பட்டுவிட்டதால், கணவனின் இறப்பிற்கு பிறகு அவளது பெண் குறி வன்முறையாகத் தீண்டப்பட்டால் அவளுடைய தெய்வீகத் தன்மைக்கு இழுக்கு என்கிற சித்தாந்ததில் கணவன் பிணத்துடனேயே 18 ஆம் நூற்றாண்டுகள் வரை உயிருடன் பெண்கள் (உடன்கட்டை என்கிற) புனிதச் சடங்கு என்ற பெயரில் கொளுத்தப்பட்டு இருக்கிறார்கள், தமிழ் சூழலிலும் அது போன்ற நிகழ்வுகள் நடந்தேறியதாக புறநானூற்றுக் குறிப்புகள் உள்ளன. ஒரு ஆண் எத்தனைப் பெண்ணுடன் உறவு கொண்டிருந்தாலும், அவன் மாற்று சாதிப் பெண்களுடன் உறவு கொண்டிருந்தாலும் அவனுக்கு 'கற்பு' பாதிப்பு ஏற்படாது. ஆனால் ஒரு பெண் வன்முறையால் தீண்டப்பட்டால் கூட அவள் தீட்டுப்பட்டவள் ஆகிறாள் என்கிற சித்தாந்தங்களில், சாதியத்தின் நிலைப்பு அல்லது விளைச்சல் என்பது அந்த சாதியைச் சேர்ந்த பெண் அந்த சாதியைச் சேர்ந்த ஆணுடன் கூடிப் பெறும் குழந்தைகளினால் மட்டுமே ஏற்படக் கூடியவை என்பதால் பெண் குறியின் மீது ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதித்து 'பதிவிரதா, பத்தினி' தர்மங்கள், கோட்பாடுகள் எழுதப்பட்டன.

இன்னும் கூட உச்சமாக பெண்ணுக்கான ஆன்ம விடுதலை என்பது அவள் தன் கணவனுக்கு எவ்வளவு உண்மையாகவும், அவனுக்கே அற்பணிப்பாக வாழ்கிறாள் என்பதே முடிவு செய்துவிடும் எனவே பெண்கள் ஆண்களைப் போன்று கடுமையான சாதகப் பயிற்சியினால் ஆன்மிக முன்னேற்றம் அடைவதைவிட அது எளிய வழிகள் என்பதாகச் சொல்லப்பட்டன. ஆன்மிகம், சமூகம் அனைத்து வழியிலும் பெண்கள் மாற்று ஆடவரை திருமணம் செய்வது அவளுடைய புனிதத் தன்மைக்கு இழுக்கு என்பதாகவே சமூகம் கட்டமைத்து இருக்கிறது பெண் குறியை மூன்று தெய்வங்கள் காவல் காக்கின்றன என்பதாக மனுஸ்மிருதிகள் எழுதப்பட்டன. வேற்று (சாதி) ஆடவனை அங்கே எந்த சூழலிலும் அனுமதித்திவிட்டால் பெண் குறியை காவல் காக்கும் தெய்வங்களுக்கு தெரிந்து போய்விடும், அவள் தண்டனை அடைந்துவிடுவாள் என்கிற மனம் சார்ந்த பயத்தை பெண்களுக்கு ஏற்படுத்துவதன் முலம் பெண் தனது பிற ஆடவர் குறித்த மன அளவிலான சிந்தனையைக் கூட கட்டுபடுத்திவிட முடியும் என்கிற உளவியலுக்காக பெண் குறி தெய்வங்கள் அங்கே குடிகொண்டி இருப்பதாக கதைகள் உண்டாகின.

உயர்சாதி ஆண்களை காதல் மணம் புரியும் போது பெண்ணின் பெற்றோர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள், அவர்களுக்கு அது பெருமை என்பதாகவும், தாழ்ந்த சாதி ஆண்களை காதல் திருமணம் செய்து கொள்ளும் போது அந்தப் பெண்கள் பெற்றோர்களால் கைகழுவி விடப் பட வேண்டும் என்பது சமூக ஏற்பாடாகவே இருக்கிறது. காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்களெல்லோருக்கும் இந்த காலத்தில் எதிர்ப்பு அவ்வளவு இல்லை என்றாலும் தன்னுடைய அடையாளத்தை அவள் துறந்தாகவே வேண்டும் என்கிற நிலையில் தான் இன்றைய சமூக அமைப்பும் இருக்கிறது.

தற்போதைய திரைப்படங்களில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் அவளை அவனுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது போன்ற அபத்தங்கள் இல்லை என்றாலும், ஒரு பெண் ஒருவனை மனதார நினைத்துவிட்டால் அவள் சாகும் வரையில் பிற ஆணை நினைக்கமாட்டாள் என்கிற ஆண்கள் எழுதும் வசனங்களைப் பல்வேறு திரைப்படப் பாத்திரங்கள் பேசுவதைக் கேட்கிறோம். இவற்றின் வழியாகக் கூட பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும், மனது உடலும் ஒருமுறை யாருக்கேனும் கொடுக்கப்பட்டால் அவள் சாகும் வரையில் அப்படியே தான் இருக்க வேண்டும் என்கிற ஆணிய சாதித்துவ ஆசைகளை அப்படி வெளிப்படுத்தி எழுதிவிடுகிறார்கள். அந்த வசனத்தை பெண்களின் காதலைச் சொல்லும் உறுதியான மனவியல் வசனங்கள் என்பதைவிட முன்கூட்டியே பெண் எதிர்புகளை எல்லாம் சிந்தித்து அதன் பிறகே தனது மனதை ஒருவருக்குக் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அப்படியே அவள் இருக்க வேண்டியது தான் என்கிற சாதித்துவ ஆசைகள் அதில் அடங்கும். ஒரு பெண் ஏமாற்றப்பட்டாலும் அந்த ஒருவனைத் தான் நினைக்க வேண்டுமா இல்லையா என்பதைப் பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டுமேயன்றி ஆண்கள் எழுதும் வசனங்கள் அல்ல.

பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்துக் கொள்வது போன்றவை விதவைகளுக்கான புரட்சிகள் இல்லை, அவள் முறையாக மறுமணம் செய்து வைக்கபடவேண்டும் அதுவும் அவள் விருப்படியானதாக இருக்க வேண்டும் என்பதை சமூகம் சிந்திப்பது இல்லை. முடிந்த அளவுக்கு அதே சாதியில் ஒருவன் வந்து கட்டமாட்டானா என்றே காத்திருப்பார்கள். இன்றைய தேதியில் விதவைகளைத் திருமணம் செய்து கொள்ள ஆண்கள் பலர் முன்வந்தாலும் சாதியத் தடைகளை மீறி அத்தகைய திருமணங்கள் நடைபெறுவது அரிது.
குழந்தையற்ற விதவைகள் என்றால் திருமணம் செய்து கொள்கிறோம் என்பதாக சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கான விளம்பரமாக "நோ இஸ்யூ" அதாவது அவளுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை, என்பதும் கூட விளம்பரப்படுத்தப்படுகிறது.

மத அடையாளம், சாதிய அடையாளம் இவை அனைத்தும் மறு தலைமுறைக்கு பெண்களின் வழியாகவே அனுப்பப் படுகிறது என்பதை விழாக்கள், விருந்துகள், பண்டிகை காலங்களில் நன்கு அறியலாம். ஆண்கள் வெள்ளைகாரனின் உடையை அணிந்திருக்க, பட்டுபுடைவை சலசலக்க பெண்களை அங்கே அழைத்துவருவது தான் பெருமையானதும், பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் வழிமுறையாகவும் சுறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். குலதெய்வ வழிபாடு மற்றும் சாதிய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் ஆண்கள் வெளியே வெளி உலகில் காட்டாவிட்டாலும் பெண்களின் வழியாக அதைச் செய்தே வருகிறார்கள். தாய் மொழி மாறி திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் கூட தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய மொழியை தாய் மொழி ஆக்கிவிட முடியாது.

வெளிநாடுகளில் சாதியற்ற சமூகங்கள் உள்ளன, அங்கே பெண்கள் மறுமணம் செய்து கொள்வது புரட்சியாகப் பார்க்கப்படுவதும் இல்லை, அது ஒரு நிகழ்வு தான். இந்தியாவில் வேலைக்கு போகும் பெண்கள் கூட ஒழுக்க மற்றவர்கள் என 'வருண' பகவான் காஞ்சி சங்கராச்சாரியால் சொல்ல முடிகிறது, வெளி நாட்டுப் பெண்கள் அனைவருமே ஒழுக்கமற்றவர்களாக இந்திய பொது ஆணிய சமூகம் அடிக்கடி பரப்பிவரும் தகவல்களை ஒப்பு நோக்குக.

பெண்களின் மீதான சாதிய பிடிகள், கற்பு சித்தாந்தங்கள் முற்றிலும் உடைபடும் போது சாதியற்ற சமூகங்கள் மலரும். அதுவரை பெண்கள் வழியாக ஆணிய சமூகம் சாதியத்தின் நிழல் கூட சாகமல் காத்துக் கொணடே வரும். சாதிகளை / மத இறுக்கங்களை காக்கும் ஆயுதங்கள் அனைத்தும் பெண்களை புனிதத்துவப் படுத்துவதன், கண்ணியப்படுத்துவதன் மூலம் சமார்த்தியமாக ஆண்கள் சமூகம் அவளிடம் திணித்து வைத்திருக்கின்றன. பெண் சமூகம் அவற்றை ஒவ்வொன்றாக வீசி எறிய எறிய சாதி அற்ற சமூகம் சாத்தியப்படும். பெண் விடுதலையில் ஆணாதிக்க சமூகம் செயல்படுத்தும் சாதி வெறியின் விடுதலையையும் சேர்ந்தே உள்ளது.

15 டிசம்பர், 2009

இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் !

சதுர்வர்ணம் மாயா சிருஷ்டம் - இது பகவத் கீதையில் 'நானே நான்கு வருணங்களைப் படைத்தேன்' என்பதாக சொல்லப்படும் கண்ணனின் வாக்கு மூலம். பகவத் கீதை போர்களத்தில் சொல்லப்பட்டது என்றும் மகாபாரதத்தின் ஒரு பகுதி என்பதும் சான்று அற்றது, ஆனால் அப்படியாக நம்பப்படுவது வெறும் நம்பிக்கைதான். பகவத் கீதை மகாபாரத பகுதி அல்ல என்றே, அதன் சொற்கள் இலக்கிய அமைப்பு ஆகியவை மகாபாரதச் செய்யுள் இலக்கணத்திற்கு மாறுபட்டது என்பதாக அம்பேத்கார் உட்பட பல ஆய்வளர்கள் கருதுகின்றனர். பகவத் கீதை மகாபாரதத்தின் பகுதியா ? இல்லையா ? என்கிற ஆராய்சிகளை நான் பெரிதாக நினைப்பது இல்லை. மகாபாரதம் ஒரு கற்பனை இலக்கியம், பல்வேறு வட்டாரக் கதைகளை இணைத்துக் கொண்ட தொகுப்பு அல்லது ஒரு மூலக் கதைக்க்கு துணையாக அன்றைய கற்பனை இலக்கிய வாதிகள் எழுதிய பல்வேறு சிறுகதைகளின் மாபெரும் தொகுப்பு என்றுக் கூறப்படும் கருத்து சரியாக இருக்கும் என்றே என்னளவில் கருதுகிறேன்.

மகாபாரத இலக்கியத்தில் ஒரு லட்சம் செய்யுள்கள் வரையில் இருப்பதாகவும், அதில் இணைத்துக் கூறப்பட்ட கீதை தனியாக 18 பகுதிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மகாபாரதக் கதை காட்டும் தீர்வு 'தர்மம் வெற்றிபெரும் அதர்மம் அழியும், சூதாட்டம், பேராசை ஆகியவை சமூக ஒழுங்கீனங்களாக காட்டப்படுகிறது.முழுக்கதையைப் படித்தால் அதர்மம் எவ்வாறு அதர்மாகவே வெற்றிக் கொள்ளப் படுகிறது என்பது புரியும். அதாவது நேர்மையான போர் என்று சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து குறுக்குவழிகளும் கடை பிடிக்கப்பட்டு அதர்மம் அழிவதாக கதை எழுதப்பட்டு இருக்கும். ஓரளவு மகாபாரதக் கதை அனைவரும் அறிந்தது தான், அது எவ்வாறு அனைத்து இந்துக்களுக்குமான பொதுவான இலக்கியம் என்று முன் மொழியப்பட்டது, இந்திய பாரம்பரியம் அனைத்தும் பரத வம்சத்தைச் சேர்ந்தது என்று திரிக்கப்பட்ட அரசியலுக்கும் நான் போகவிரும்பவில்லை.

இதையெல்லாம் தவிர்த்து இந்து சமயவாதிகள் அடிக்கடிச் சொல்லும் அல்லது பரப்படும் ஒன்று 'வருணம் பிறப்பு அடிப்படை அன்று அது குணம் சார்ந்ததே, வருணம் தோற்றுவிக்கப்பட்டப் போது அல்லது வருணத்தின் பிரிவுகள் சரியாக 'அனுஷ்டிக்கப்பட்டபோது' நான்கு வருணத்தினரிடையே வேற்றுமைகள் இல்லை, பின்னால் வந்தவர்கள் வருணத்தைப் பிறப்பு அடிப்படையாக்கிக் கெடுத்துவிட்டார்கள்' என்பதே. இந்தக் கூற்றில் இம்மியளவும் உண்மை இல்லை. வருணம் இருந்த அன்றைய இன்றைய காலத்தில் அவை என்றுமே குண அடிப்படையில் அமைந்த ஒன்று அல்ல, அவை பிறப்பு அடிப்படையிலே பயன்பாட்டில் இருந்திருக்கிறது' என்பதே உண்மை. எனக்கு தெரிந்து எந்த ஒரு இந்து சமய இலக்கியத்திலும் சூத்திரன் ஒருவன் பிரமணாக உயர்ந்தான் என்றோ, சத்திரியன் ஒருவன் பிரமணானாக உயர்ந்தான் என்றோ படித்ததே இல்லை.

மகாபாரதக் கதையிலேயே கர்ணன் பிறப்பு அடிப்படையில் பல இடங்களில் தூற்றப்படுவான், இராதேயன், தேரோட்டி மகன் என்றும், தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்றும் தூற்றப்படுவன். வில்வித்தையை தானே கற்றுக் கொண்ட ஏகலைவனும் பிறப்பால் சத்திரியன் அல்ல அவன் வில்வித்தையை பயன்படுத்தக் கூடாது என்றே அவன் விரல் துரோனரால் 'குரு காணிக்கை' என்ற பெயரில் வஞ்சகமாக வெட்டப்படும். மகாபாரதக் கதையில் பிரவருணத்தினர் வேறு ஒரு வருணத்தினராக புரோமசன் அடைந்ததாக எந்த ஒரு கிளைக் கதையும் கூடக் கிடையாது. சூத்திரர் மற்றும் வருணமற்ற சண்டாளர்கள் (நான்கு வருணத்திற்குள் சேர்க்கபடாதவர்கள்) தவிர்த்து மற்ற மூன்று வருணத்தினர்களை இருபிறப்பாளர்கள் என்றும் அவர்களுக்கு உரிய வயதில் பூணுல் அணிவித்து இரண்டாம் பிறப்பைக் கொண்டாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது, அதாவது பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோருக்கு பூணுல் அணிவது உரிமையும், கடமையும் ஆக்கப்பட்டு இருந்தது.

பிராமணன் குண மேன்மையானவன் என்பது ஒரு சித்தாந்தமே அன்றி அப்படி வாழ்ந்த பிராமணர்கள் என்று எந்த ஒரு இதிகாசத்திலும் புராணத்திலும் கதை அளவில் கூட இடம் பெற்றிருக்கவில்லை என்பதை பழங்கதைகளைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். வேறு சில நூல்களை நான் வாசிக்க நேர்ந்த போது, இந்த நால் வருண பகுப்பு என்பது பார்பனர்களிடம் மட்டுமே அவர்களுக்குள் இருந்தது என்றும், அவர்கள் இந்திய அளவில் பரவி வாழ்ந்த போது பிராமணன் என்ற தகுதியை அவர்களே தக்கவைத்துக் கொண்டு அவரவர் செய்யும் வேலைக்கு ஏற்றார் போல் வருணப் பகுப்பை பார்பனர் அல்லாத சமூகத்திற்கும் பரிந்துரைத்தார்கள், அவர்கள் பல்வேறு அரசுகளின் அமைச்சரவைகளில் உயர்ந்த பதவியில் இருந்ததால் அரசர்களை வருணப் பரிந்துரைக்கு வேண்டுகோள் வைத்து சாதித்தாகக் கூறப்படுகிறது.

வருணப் பகுப்பு என்பது (என்றுமே இல்லாத மற்றும் பரிந்துரைக்கப்பட்ட) குண அடிப்படை வருணம் என்ற பெயரில், தொழில் அடிப்படையிலும், நிற அடிப்படையிலும் பகுப்புகள் வைத்திருந்தது வேற்றுமை பாராட்டியதுடன் அதை இன்றும் ஞாயப்படுத்தும் கேடு கெட்டச் செயல், இதன் மூலம் பார்பன சமூகம் தவிர்த்து பிற சமூகம் பெரிய அளவில் நன்மை அடையாவிட்டாலும், பார்பனர்களின் அடுத்த நிலையில் இருப்பவர்களாக இருக்கும் பார்பனர் அல்லாத பிற ஆளுமை வர்கத்தினர் பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களை இன்னும் அடிமையாகவே நடத்துவதற்கு அந்த வருணப் பகுப்பு வழி செய்துவிட்டது.

குண அடிப்படையில் மேலாணவன் என்று இதிகாச இலக்கியங்களில் சொல்லப்படும் பிராமணன் என்றும் வாழ்ந்ததே இல்லை, நாளை ஒரு நல்லவன் வருவான் என்று சொல்லும் நம்பிக்கைப் போலவே, பிராமணன் என்பவன் குண மேன்மையானவன், அவ்வாறு இருந்தான் என்பது வெறும் நம்பிக்கை, அல்லது வெறும் சித்தாந்தம் மட்டுமே. என்றுமே இல்லாத பிராமணனை சோ இராமசாமி போன்ற பிற்போக்கு, பழமை வாதப் பார்பனர்கள் இன்றும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

பார்பனர்களை பிராமணர் என்று பிற சமூகத்தினர் அழைப்பது தத்தம்மை தாழ்த்தி சூத்திரனாக ஒப்புக் கொள்வதாகும், எப்போதும் அப்படி ஒரு இருப்பை உறுதி படுத்துவதாகும் . அன்பு கூர்ந்து அந்த தவற்றைச் செய்யாதீர்கள். பிராமணர் என்று கூறப்படும் தன்மையுடன் எந்த ஒரு சமூகமும் அல்லது ஒருவரும் கூட வாழ்ந்தது கிடையாது. புராண இதிகாசங்களை சாதி மேலாண்மை ஆதரவுக்கு சப்பை கட்டி, காட்டி, பார்பனர்கள் இன்றும் தம்மை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வது சமூக விச(ம)த்தனம் !

***************************
நஹூஷனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த உரையாடல் வருமாறு..

ந : எவன் பிராமணன்? எது அறியத்தகுந்தது?

யு : சத்யம், தயை, பொறுமை, நல்ல நடத்தை, பூர்ணமாக ஹிம்ஸையை விலக்குதல், புலனடக்கம், கருணை என்ற குணங்கள் கொண்டவனே பிராமணன். சுக துக்கங்களைக் கடந்த பிரம்மமே அறியத்தக்கது. அதை அறிவதால் ஒருவன் பூர்ணத்துவம் பெறுகிறான்.

மேலும் படிக்க...
***************************

பெண்களில் பத்தினி யார் என்று கேட்கும் கேள்விக்கு சீதை, நளாயினி, சாவித்திரி என்று கதைச் சொல்லத் தெரிந்த பார்பனர்களின் கதைகளுக்கு, பிராமணன் யார் என்று கேட்கும் கேள்விக்கு இன்னார் என்று காட்ட ஒரு பிராமணனும் வாழ்ந்தது இல்லை என்பதே உண்மை.


பின்குறிப்பு : இந்திய வரலாற்றில், இந்து இதிகாசங்கள் எதோ ஒன்றில் எந்த ஒரு தனிமனிதனும், வரலாற்று நாயகனும் பிராமணத் தகுதி என்று சொல்லப்படும் சிறப்புத் தகுதியுடன் வாழ்ந்தான் என்று சுட்டிக்காட்டினால் நான் இந்த இடுகையையே எடுத்துவிடுகிறேன்

14 டிசம்பர், 2009

கலவை 14/டிச/2009 !

Paaர்த்தேன் : பச்சன்கள் நடித்த Paa படம் பார்த்தேன். இந்திக்காரர்களால் திரையரங்கு நிறைந்திருந்தது. இளையராஜாவின் இளையோடும் இசை. சிறுவன் மருத்துவமனையில் மரணப் படுக்கையாக படுத்திருக்கும் காட்சியில் அவனைப் பார்க்க அவனுடைய தாத்தா வருகிறார், சிறுவன் "டைம் ஓவர்" என்று சொல்ல, அவனைத் தேற்றும் விதமாக, "அதெல்லாம் ஒன்றும் இல்லை, நாம ஐரோப்பா போறோம், அமெரிக்கப் போகப் போறோம்...." என்று அளந்து கொண்டே போக, சிறுவன் "விசிடிங்க் டைம் ஓவர்" என்று சொல்ல அரங்கே சிரிப்பொலியில் அதிர்ந்தது. படம் நன்றாக இருந்தது.

பேராண்மை : படம் வெளியான ஒரு மாதம் சென்றே பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது, அதே போல் மலைசாதியினர் இன்னல் குறித்து சுகாசினி நடித்த 'ஓர் இந்தியக் கனவு' படம் 80 களில் வெளியானது. கம்யூனிச சிந்தாந்த பின்னனியில் எடுக்கப்பட்ட பேராண்மைப் படத்தில் ஜெயம் ரவி சிறப்பாகச் செய்திருந்தார். பெண்களால் எதுவும் முடியும் என எழுச்சி ஊட்டும் படம், சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் பதியவைத்துள்ளப் படம், இப்பெல்லாம் யாருங்க சாதிப் பார்க்கிறாங்க என்று சமுகம் சமத்துவம் அடைந்துவிட்டதாக நினைப்பவர்கள் பார்க்கலாம். ஆண்களின் சாதி வெறிகள் பலப்படங்களில் படமாக்கப்பட்டுள்ளது. பெண்களின் சாதிய ரிதியிலான ஆதரவு மென்மையாக இந்தப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

நான் அவனில்லை 2 : கதைக் களத்தை நம்பி படம் எடுப்பதைவிட சதைக் கோளத்தை நம்பி எடுக்கலாம் என்று இறங்கி இருப்பார்கள் போலும், இல்லத்தினரோடு செல்பவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் அயல் தேசங்களிலும் பெண்களின் உடல் தேசங்களிலும் படக்கருவி சுழல்கிறது. பணக்காரப் பெண்களை ஏமாற்றி பறித்தப் பணத்தை இலங்கையில் இருக்கும் உள்நாட்டு அகதிகள் மறு வாழ்வுக்கு அனுப்புகிறாராம் கதாநாயகன் - குப்பை கான்செப்ட். நேரடியாக தொண்டு நிறுவனங்கள் வழியாக செய்யும் உதவிகளே போய் சேராத நிலையில், இலங்கைத் தமிழர்களின் நிலையை படத்தின் கதாநாயகனின் திருட்டுத் தொழிலுக்கு ஞாயமாகக் காட்டப் பயன்படுத்திக் கொள்வது அருவெறுப்பாக இருக்கிறது. நான் அவனில்லை முதல் பகுதி போல் இருக்கும் என்று நினைத்து செல்பவர்களுக்கு 99 விழுக்காடு ஏமாற்றத்தை தரும் படம். நான் சென்று வந்த சில ஸ்விஸ் பகுதிகளில் படமாக்கி இருந்தார்கள் என்பது தவிர்த்து படம் எனக்கு எந்த விததிலும் பாராட்டும் வண்ணம் தெரியவில்லை. விரைவில் உலகத் தொலைகாட்சிகளில் முதல் முறையில் என இடம் பிடிக்கும் படங்களின் முந்தைய சாதனைகளை முறியடிக்கப் போகும் மற்றொரு பப்படம்.

கோலங்கள் தொலைக்காட்சித் தொடர் : பாலச்சந்தர் பாணி கதாநாயகி, குடும்பத்துக்கு ஓடி ஓடி உழைப்பதுடன், தனது பெயரையும் வளர்த்துக் கொள்ளும் படம். ஒரு பெண்ணின் சிறப்பைக் காட்ட அவர்கள் குடும்பத்தில் இருப்பவர் அனைவரையும் குற்றவாளிகள், பேராசைக்காரர்கள் ஆக்கி அதைச் செய்கிறார் திருச் செல்வம், குடும்பத் தொல்லைகளில் இருந்து ஆண்கள் சன்யாசம் வாங்கிச் செல்வது போல் தொடரில் தேவயானி உடல்குறையுற்றோர்களுக்கு சேவை செய்யப் புறப்படுவதாக கதை முடிந்திருக்கிறது. நமக்கு தெரிந்த குடும்பங்களின் கதைகள், அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள், ஒரு சில புதிய வரவு என்பது தவிர்த்து ஆண்டுகள் மாறினாலும் பெரிதாக ஒன்றும் மாறியிருக்காது, மெகா தொடர்களும் அப்படித்தான் போலும், பாத்திரங்களை முதல் 10 பகுதிகளில் தெரிந்து கொண்டுவிட்டால் 1000 ஆவது தொடர் பகுதி பார்க்கும் போது கதையின் போக்கு புரிந்துவிடும். :) அபி ஒரு மணிமேகலையாம் !

****

சென்னை: சென்னை யில் நடந்த இந்திய - ஜப்பான் வர்த்தக தொழில் கூட்டமைப்பு கருத்தரங்கின்போது குத்துவிளக்கேற்ற மத்திய ரயில்வே இணை அமைச்சர் இ. அகமது மறுப்பு தெரிவித்ததால் அதற்குக் கண்டனம் தெரிவித்து பிரபல பாடகர் ஜேசுதாஸ் விழாவிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

மத நம்பிக்கை என்பது தனிப்பட்ட மனிதர்களின் விருப்பம் என்றாலும் பொதுவாழ்வில் நுழைந்தவர்கள் அதில் அவ்வளவு இறுக்கம் காட்ட விரும்பினால் பொதுச் சேவைக்கு வரத் தேவை இல்லை என்பது என் கருத்து.

"வணக்குத்துக்கு உரியவன் இறைவன் ஒருவனே " என்பதை இருகை சேர்த்து கும்பிட்டபடி மேடைகளிலும், வாக்குச் சாவடி ஊர்வலங்களிலும் பொது மக்களை நோக்கி வாக்கு கேட்கும் போது மறந்துவிடும் இஸ்லாமிய வேட்பாளர்கள், பதவி பெற்ற பிறகு விளக்கு ஏற்றுவது இஸ்லாமிற்கு எதிரானது என்று நினைத்து மேடையில் குழப்பம் ஏற்படுத்துவது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.

எந்த ஒரு நிகழ்வையும் விளக்கேற்றி துவங்குவது இந்தியர்களின் வழக்கமாக இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் வண்ண நாடாவை (ரிப்பன்) வெட்டி, அல்லது அது தொடர்பான படங்களைத் திறந்து துவங்குவார்கள். நிகழ்வின் துவக்கம் ஒளியேற்றி துவங்குவதன் மூலம் அந்நிகழ்ச்சி வெளிச்சத்திற்கு வருவதாக அறிமுகம் கொடுக்கப்படுகிறது. விளக்கு ஏற்றுவதற்கும் மதத்திற்கும் தொடர்பு இல்லை, இறைமறுபபளர்களும் மேடையில் விளக்கேற்ற மறுப்பது இல்லை. எக்ஸ்ட்ரீமிசமாக போகும் எதுவுமே பொதுமக்களால் விமர்சனம் செய்யப்படும்.

*****

தொண்டர் 1: நம்ம தலைவருக்கும் பிரிவினையில் உடன் பாடு இல்லை போல இருக்கே

தொண்டர் 2 : ஆமாம் எல்லாம் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக இருக்கனும் என்றே விரும்புகிறார்

தொண்டர் 1 : அவ்வளவு நாட்டுப்பற்றா ?

தொண்டர் 2 : வீட்டுப்பற்று, தனது குடும்ப ஒற்றுமையைக் குறித்து தான் அப்படி நினைக்கிறார்

11 டிசம்பர், 2009

உண்ணா நோன்புகள் மிரட்டலா ? போராட்டமா ?

மிரட்டி ஒரு செயலை சாதிப்பது ஏற்க முடியாத ஒன்று, இல்ல அமைப்புகளில் இது பரவலாக நடைமுறையில் இருக்கிறது, ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும், பெண்கள் கண்ணீராலும் மிரட்டல் விடுவது இல்ல அமைப்புகளில் வழமையாக நடப்பவை. தன்னை வருத்திக் கொண்டேனும் நினைத்ததை முடிக்க வேண்டும் என்பது துணிவா அல்லது இயலாமையின் இறுதி முடிவா என்பது இன்னும் உளவியல் சிக்கலாகவே இருக்கிறது. ஞாயமான கோரிக்கைகள் புரிந்து கொள்ளப்படாதபோது அல்லது மறுக்கப்படும் போது இத்தகைய மிரட்டல் வழிகள் கைகொடுக்கிறது என்பது பரவலான உணர்வு (நம்பிக்கை அல்ல) ஆக இருக்கிறது.

எந்த வித ஆயுதமற்ற போராட்டமாக இருந்தாலும் அது அந்தக்கால உப்பு சத்தியாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி, இன்றைய வேலை புறக்கணிப்பு போராட்டங்களாக இருந்தாலும் சரி, ஞாயங்களை எடுத்துச் சொல்ல அவை மிரட்டல் கருவிகளாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒரு கோரிக்கையை ஞாயங்கள் சொல்லியும் பிடிவாதமாக ஏற்க மறுக்கும் போது அதை எதிர்நோக்க அதே பிடிவாதமான மிரட்டல் வழிகளை தேர்ந்தெடுப்பது உணர்வு பூர்வமாக சரியாகவே இருக்கும் என்று நம்புகின்றனர். இது மனித புரிந்துணர்வுகள் போராட்டங்களினால் ஏற்கப்படுவதும், வழியுறுத்தப்படுவதும் உளவியல் சிக்கல்.

ஆயுதப் போராட்டங்கள் தவிர்த்து கோரிக்கை ஒன்றை குறித்த பிறவகைப் போராட்டத்தில் மிரட்டல் என்பதன் வடிவமாக தற்காலிக வேலை துறப்பு, உண்ணா விரதம் ஆகியவை நடக்கின்றன. ஆனாலும் இதில் கவனிக்கத் தக்கது என்னவென்றால் எளியவன் ஒரு கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்தால் அவன் சாகட்டம் என்றே விட்டுவிடுவார்கள், ஆனால் பெரும் தலைவர்கள் அவ்வாறு உண்ணாவிரதம் இருக்கும் போது அதன் பாதிப்புகள் பெரிய அளவில் என்பதால் அதற்கான உடனடி பலன் கிடைத்துவிடுகிறது.

கடைசி முயற்சி என்பதாக உண்ணாவிரதம் வரை சென்ற பின் போராட்டங்களுக்கு அரசு தரப்பு ஒத்திசைப்பது என்பது அரசுகளின் சந்தர்பவாதமாகவே படுகிறது. அரசு தரப்புகளால் இதுவரை ஞாயமற்றது என்பதாக புறக்கணிக்கப்படும் கோரிக்கைகளை தலைவர்களின் உண்ணாவிரதங்களால் நிறைவேறுகிறது என்றால் அங்கே ஞாயங்கள் என்பது வெறும் தலைவர்களின் உயிரின் மதிப்பு, அதனால் ஏற்படும் சமூக கொந்தளிப்பு என்ற அளவிற்குள் சுறுங்கிவிடுகிறது.

எந்த ஒரு பொது கோரிக்கைகளுக்கும் பெரும்பான்மை ஆதரவு என்பதாக எண்ணிக்கைகளினாலே பார்க்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படுகிறது. தெலுங்கான கோரிக்கை தெலுங்கான பகுதிவாழ் பெரும்பான்மை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் போது அதை என்றோ ஆராய்ந்து முடிக்காமல் உண்ணாவிரதம், கடுமையான போராட்டம் வரை காந்திருந்து தீர்ப்பு சொல்வது ஏற்க முடியவில்லை. இவை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. போராடினால் தான், கடுமையாகப் போராடினால் தான் ஞாயங்களைப் ஆளும் வர்க்கத்திற்கு புரிய வைக்கமுடியும் என்கிற வரலாற்று பதிவாகவே தெலுங்கான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

உங்கள் கோரிக்கைகள் தீர்க்கபட வேண்டுமென்றால் நீங்கள் தலைவராக இருக்க வேண்டும், அப்படி இருந்தாலும் ஆளும்வர்கததை மிரட்டினால் தான் உங்கள் கோரிக்கையை சாதிக்க முடியும். என்பதை அரசுகள் வரலாற்றில் சுவடுகளாக விட்டுச் செல்கின்றன.

எப்போதும் எதாவது ஒன்றிற்கு எல்லா தரப்பினரும் அவ்வப்போது போராடுவதைப் பார்க்கும் போது பொது மக்களுக்கு எரிச்சல் ஏற்படும், ஏனெனில் நேரடியாக பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். ஆனால் எல்லாவற்றிற்கும் போராடத்தான் வேண்டி இருக்கிறது, என்பதை பொது மக்களாகிய நாம் புரிந்து கொள்ளவதில்லை. அனைத்து சமூகங்களுமே (ஆளும்) வர்க ரீதியாக வளர்ந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறது, ஞாயமே ஆனாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதை கவுரவக் குறைச்சலாகவே நினைக்கிறார்கள். மன்றாடினால், வேண்டினால் தான் நினைத்த காரியம் நடக்கும் என்பதை ஆன்மிக சித்தாந்தமாகவே சொல்லிக் கொடுக்கப்பட்டு சமூகம் வளர்ந்தால், எந்த ஒரு கோரிக்கையும் செயலுக்கு வர போராட்டம் தேவை என்பது விதியாகவே மாறி இருக்கிறது என்றே தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

உலகத்தில் வேறெந்த நாடுகளிலும் இல்லாத ஒரு வழக்கமாக உண்ணா நோன்பை போராட்டதிற்கு பயன்படுத்துவது இந்தியாவில் நடக்கும் அரசியல் கூத்தாகவே மாறி இருக்கிறது. சோற்றால் அடித்த பிண்டங்கள் அதைத் துறப்பது மிகப் பெரியதும், போராட்டத்தில் ஒன்று போலும்.

போராடுங்கள் வெற்றிபெறுவீர்கள் ! என்பது மக்கள் ஆட்சி தத்துவமாக மாறிவிட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் எருமைமாடுகளாக அசைந்து கொடுக்காத போது போராட்டங்கள் மிரட்டலாக மாறி இருப்பது தவறு அல்ல என்றே கருதுகிறேன்.

செய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைகாட்சி)

முதன்மை செய்திகள் : பணகரன் அலுவலகம் கொளுத்தியது நக்சலைட்டுகளாக இருக்கும் காவல் துறை சந்தேகம். புதிய மாநிலம் தலுங்கானா உதயம்...தமிழகத்தில் இடைத் தேர்தல் ஓட்டு வேட்டையில் முந்துகிறது ஆளும் கட்சி......

சென்ற ஆண்டு பணகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு மூன்று பேர் கொலையான வழக்கில் அரசு தரப்பு காவல்துறை தரப்பின் சாட்சிகளை போதிய ஆதாரம் இல்லை என நிராகரித்தது, நீதிபதி அரசு தரப்பு ஞாயங்களை ஏற்று காவல் துறை குற்றம் சுமத்தியவர்களை விடுதலை செய்தார், பொய் சாட்சிகளை கொண்டு வந்ததற்காக நீதிபதி காவல் துறைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க, பணகரன் அலுவலகம் தீவிரவாதிகளாலோ அல்லது முகமூடி கும்பல்களாலோ கொளுத்தப்பட்டு இருக்கலாம், விரைவில் பிடித்து விடுவோம் என்று தெரிவித்தனர். விடுதலை அடைந்த நிரபராதிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நீதிபதி தீர்ப்பு குறித்து கருத்துக் கூறிய பணகரன் நிறுவனர், திரு மாலாபதி விரைவில் தங்களுக்கு ஞாயம் கிடைக்கும் என்றும், நிரபிராதிகள் விடுவிக்கப்பட்டது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். பணகரன் அலுவலக விவாகரம் குறித்துக் கருத்துக் கூறிய ஆளும்கட்சி மத்திய அமைச்சர், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, எதிர்கட்சிகளின் சோடிப்பு வழக்கு என்பதால் தான் வழக்கு நிலைக்கவில்லை, என்றும் ஞாயம் எப்போதுமே வெல்லும் என்று தெரிவித்தார். பணகரன் அலுவகம் விவாகாரத் தீர்ப்பு குறித்து பணகரன் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளி இட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. தீர்ப்புக்கு பிறகு பணகரன் அலுவலகம் முன்பு அதன் ஊழியர்கள் கொண்ட்டாம் பற்றிய ஒரு சிறிய வீடியோ காட்சி. ...

தலுங்கானக் கோரிக்கையில் தலுங்கானக் கட்சியின் தலைவரின் 10 நாள் உண்ணாவிரதம் மத்திய அரசு தலுங்கான கோரிக்கையை ஏற்றதினால் முடிவுக்கு வந்திருகிறது, தலுங்கான பற்றி தமிழக அரசியல் தலைவரும் முக்கிய கட்சிதலைவருமான பாமுக தலைவர் பொறியாளர் பட்டைதாசுவிடம் கேட்ட போது, இது போல் தமிழகமும் பிரிக்கப்படவேண்டும் என்கிற தனது கோரிக்கை இப்பொழுது தான் தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும், தலுங்கான தனிமாநிலம் அமைவதை தாம் வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

தலுங்கான கட்சித்தலைவரின் உண்ணாவிரதம் பற்றிக் கூறிய தமிழக துணை அமைச்சர், வாழ்த்துவதாகவும், ஆனால் 10 நாட்கள் உண்ணாவிரதம் மிகவும் அதிகம் தான், இது போன்ற மக்கள் வாழ்வாதரப் பிரச்சனையில் எங்கள் தலைவர் மூன்றே மணி நேர உண்ணாவிரதத்தால் வெற்றிகரமாக சாதித்தார், அந்த சாதனை இன்று வரை உலக அளவில் யாராலும் முறியடிக்கபடாததாக இருக்கிறது என்றார்.

நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் கையே ஓங்கி இருக்கிறது, ஆளும்கட்சிக்கு பாமுக மறைமுக ஆதரவு தெரிவித்து வந்தவாசி தொகுதிகளில் ஓட்டு வேட்டையிலும் இறங்கி உள்ளனர். நீங்கள் ஓ போடப் போவதாகச் சொன்னீர்களே என்று கேட்ட செய்தியாளரை முறைத்த பொறியாளர் பட்டைதாசு நான் அவ்வாறு சொல்லவில்லை, செய்தியாளர்கள் அப்படி ஒரு தவறான தகவலை வெளி இட்டதாகவும், எங்கள் கட்சி எந்த ஒரு கட்சிக்கும் தொடர்ந்து எதிரியாக இருந்ததே இல்லை என்று குறிப்பிட்டார். ஆளும் கட்சிக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு காப்புறுதி என்றும் ஓட்டுப் போடாதவர்களுக்கு காப்பு உறுதி என்று ஆளும் கட்சிக்காரார்களால் வாக்காளர்கள் எச்சரிக்கப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

நன்றி வணக்கம்...

வாசித்தது கோவியார்

இது ஒரு காலம் தொலைகாட்சி (டைம் டிவி) யின் ஆக்கம்...

10 டிசம்பர், 2009

பொதுவுடமை, முதலாளித்துவம் !

பொதுவுடமை என்னும் சோசலிச கொள்கை மதவாதிகளாலும், முதலாளிகளாலும் அருவெறுப்பாகப் பார்க்கப்பட்டது. பொதுவுடமைக் கொள்கையும் மதவாதமும் முறையே பொருள் முதல்வாதம் மற்றும் கருத்து முதல்வாதம் என்பதாக புதிய சிந்தனையாளர்களால் சொல்லப்படுகிறது, இவற்றின் விளக்கங்களும், அரசியல், வரலாற்று ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இவை இரண்டும் சமூக சித்தாந்தங்கள் எனப்படுகின்றன. பொருள் முதல்வாதம் விதியை, இறைவனை நம்பாது, கருத்து முதல்வாதம் இரண்டையும் நம்பும். பொதுவுடமை அல்லது பொருள் முதல்வாதக் கொள்கையின் சித்தாந்ததின் முக்கிய கொள்கை, சொத்துகள், கருவிகள், அறிவியல் முன்னேற்றம் அனைவருக்கும் உடைமை உடையது. நவீன பொருள் முதல்வாத சித்தாந்தங்களைத் தோற்று வித்தவர்களாக மார்க்சும் ஏங்கெல்சும் அறியப்படுகிறார்கள்.

பொருள் முதல்வாதக் கொள்கைகளை அறிவியல் சித்தாந்தமாக மாற்றுவதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை தட்டி எழுப்ப முடியும் என்று கருதி அதை வெற்றிகரமாக செய்தி காட்டியவர் மார்க்ஸ். பொருளியல் சமச்சீர் அல்லது பொருளியல் வளர்ச்சிக்கு மார்க்ஸின் கொள்கை பயனளிக்கும் என்பதோடு அது முழு மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாகச் சொல்லப்பட்டது. முதலாளித்துவம் சொத்துகள், கருவிகள், மக்களின் உழைப்பு என்பதை தனிப்பட்ட ஒருவரின் உடமை ஆக்கிவிட் ஒப்புதல் அளிப்பதுடன் அல்லாமல் ஏழை மேலும் ஏழையாகவும், பணக்காரர் மேலும் பணக்காராக்கி சமூகத்தின் சமச்சீர் தன்மையை கெடுத்துவிடுகிறது என்பதே மார்க்ஸின் குற்றச் சாட்டு.

மார்க்ஸியம் தோற்றுவிட்டது அது ஒரு கற்பனை கொள்கை, செயல்படுத்த முடியாத ஒன்று என்றே முதலாளித்துவ நாடுகளால் பரப்பட்டது, இன்றும் அவை தொடர்ந்து சொல்லப்பட்டும் வருகிறது. மார்கிய வாதிகளின் பொதுவுடமை கொள்கை தோற்றுவிட்டதா ? என்று பார்த்தால் அவை அனைத்து சமூகங்களிலும் நாடுகளிலும் ஊடுறுவி நிற்கிறது என்றே தெரிகிறது. உதாரணத்திற்கு மார்கிய சிந்தாந்தப் பரவலுக்குப் பிறகே உலக நாடுகள் மன்னர் ஆட்சிகளை ஒழித்து மக்கள் ஆட்சி தத்துவத்திற்குச் சென்றன. அரசும், அரசுரிமையும் தனிப்பட்ட மனிதர்களின் சொத்து அல்ல, தகுதி உடைய எவரும் நாட்டை வழி நடத்திச் செல்லலாம் என்பது மக்கள் ஆட்சிக் கோட்பாடு. ஒற்றைத் தலைமைகள் தொடர்வது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்பதாக மன்னர் ஆட்சிகள் நீங்கின. ம்ன்னர் ஆட்சிகளுக்கு உலை வைத்தது மார்க்கிய சித்தாந்தம் தான் என்பதை முதலாளித்துவ நாடுகள் மறைத்துவிடுகின்றனர்.

நிலப் பிரபுத்துவ முறையை ஒழித்ததில் மார்கிய சித்தாந்தங்களின் முன்னெடுப்புகளே காரணம், நில உச்சவரம்பு சட்டங்கள் இயற்றப்பட்டு உபரி சொத்துகள் சீனா போன்ற நாடுகளில் அரசாங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கோவில்கள் கோவில் சொத்துகளின் ஆளுமைகள் குறைக்கப்பட்டு அரசாங்கத்திடம் கோவில் பொறுப்புகள் ஒப்படைப்பக்கட்டுள்ளது, வெள்ளையர் ஆட்சி அகன்ற பிறகு இந்தியாவில் குறுநில மன்னர்கள் ஆளுமைகள் ஒழிக்கப்பட்டது. மனித உழைப்பும், உற்பத்தியும் அதன் பலன்களும் தனிமனித உடமை அன்று என்ற மார்கிசிய கொள்கை உள்வாங்களின் அல்லது மார்க்கிய வாதிகளின் கலக் குரலின் பயனாக முதலாளித்துவ சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களே இன்று நடை முறையில் இருக்கும் அனைத்து மாற்றங்களும் ஆகும்.

முதலாளித்துவ அமைப்பு இனசார்ப்புடையது தட்டையானது, பொதுவுடமை அமைப்பு இனச்சார்ப்பு அற்றது அகண்டதுமாகும். பொதுவுடமைக் கொள்கையின் நடை முறைச் சிக்கல். உற்பத்திக்கான பயன்பாடு அனைவருக்கும் பொதுவானது என்றாலும் அதற்கான ஊக்கம் எந்த ஒரு தனிமனிதனும் பொதுவானது என்று கருதுவதற்கு வாய்ப்பு கிடையாது, எறும்புக் கூட்டங்களைப் போல் ஒன்று போல் திறமை, அறிவு இருக்கும் போது அங்கே ஊக்கம் என்பதற்கான தேவை இருப்பதில்லை. மனித சமூகம் ஒன்று போல் அறிவும் திறமையும் கொண்டது இல்லை. உழைப்பவர் மற்றும் கடுமையாக உழைப்பவர் இவர்களுக்கான பலன்கள் ஒன்றாக இருந்தால் அது அநீதி என்பது பொதுச் சிந்தாந்தம், இங்கே தான் மார்கிசிய பொது உடமை கொள்கை திணறுகிறது. இந்த வேறுபாட்டை அதாவது அனைவரையும் ஊக்கப்படுத்துவதற்கான அறிவியல் ரீதியான வழி என்பதாக மார்கிய கொள்கை சொல்லுவது பலனின் பயன் முழுமையாக புரியவைத்தால் அனைவரும் உந்துதலுடன் உழைப்பது என்பது சாத்தியமாம்.

நசுக்கப்படுபவர்கள் போராடுவது அவர்களது உரிமை என்ற அளவுக்கு சமூகப் புரிதலை மார்கியம் ஏற்படுத்தியதால் தான் இன்று தொழிற்சங்கங்கள் அற்ற நிறுவனங்கள் பார்ப்பது மிகவும் அரிது. அதிலும் குறுக்கு வழியாக தொழிற்சங்கத் தலைவர்களை சரி கட்டி சாதித்துக் கொள்வது முதலாளிகளின் முதலாளித்துவாதிகளின் செயல் முறையாக இருக்கிறது.

கடவுள் குறித்த பரந்த பொது மனப்பான்மையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று என்றோ சொல்லப்பட்டாலும், நடைமுறைக்கு வருவது பொதுச் சொத்து அனைவருக்கும் உரிமை உடையது என்ற மார்கிசிய புரிதல் ஏற்பட்டால் தான் சாத்தியம். மார்கிசியம் தோற்றது என்று பொய் பரப்பட்டாலும் அது அனைத்து சமூகங்களிலும், சமுக இயக்கங்களிலும் பெரும் மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை முதாலாளித்துவ வாதிகள் மறுப்பது இல்லை.

கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் அனைவருக்கும் பொதுவானது
அரசு பதவிகள் அனைவருக்கும் பொதுவானது
தகுதி அடிப்படைகளை புறம் தள்ளி, வேலை வாய்புகள் அனைவருக்கும் பொதுவாக்கியது
மொழிகள் அதன் மக்கள் உரிமைகள் அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது

- இவை பற்றிய புரிதல்களும் மாற்றங்களும் உலக அளவில் ஏற்பட்டதற்கு, மார்கிசிய புரட்சிகள் மற்றும் கலக் குரல்களால் எழுந்த அலைகளே காரணம்.

மக்கள் ஆட்சி, தனிமனித உரிமை என்றெல்லாம் பொதுவுடமை புரியவைக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் ஆட்சிகளிலும் வாரிசு அரசியல், தனிமனித ஆளுமைகளாக மனித உரிமைகள் முதலாளித்துவத்தின் காலடியில் வீழ்ந்துவிடுவதும் நடக்கிறது.

*****

என்னைப் பொருத்த அளவில் எந்த ஒரு கொள்கையும் முழு அளவில் வெற்றிகரமாக அமைந்ததா இல்லையா என்பதைவிட அது சமூகத்தில் ஏற்படும் மாற்றம் கணக்கில் கொள்ளப்படுவதைப் பார்க்கிறேன். கொள்கைகள் தோன்றுவதும், நீர்த்துப் போவதும், வீழ்வதும், புதுக் கொள்கைகள் ஏற்படுவதும் காலத்தின் கட்டாயம் அதாவது காலச் சூழலைப் பொறுத்தது, விதிகள் காலத்தாலும் முயற்சிகளாலும் மாறும்.

9 டிசம்பர், 2009

ஆன்மிகம் மிகைப்படுத்துதல், தூற்றுதல் !

"தெய்வமே நீங்க எங்கேயோ போய்டிங்க" என்று சொல்லும் போது அந்த வரியில் இருக்கும் மிகைப்படுத்துதல் ஒருவரின் செயலை கடவுளுக்கு ஒப்பாக குறிப்பிடுவது என்பதாகிறது. இது மிகச் சாதாரணமான பயன்பாடுதான்.

மதம், கடவுள் சித்தாந்தங்களில் இந்த மிகைப்படுத்துதல் புனிதம் அல்லது பக்தி என்னும் ஏனைய பெயர்களில் செய்யப்படுகிறது. மதத்திற்கு அறிவியல் சாயம் பூசுகிறவர்கள் இதை மிகுதியாகவே செய்கிறார்கள். முழுக்காலத்திற்கும், முழு மனித குலத்திற்கும் மாறாத உண்மைகளை எங்கள் மதம் கொண்டிருக்கிறது, கண்டிருக்கிறது என்பவை மிகைப்படுத்துதல் தான். இறைவன் மனிதர்களை நோக்கி நீங்கள் என் புகழை மிகைப்படுத்திப் பேசுங்கள் என்று எந்த மதத்திலும் கூறியது போல் தெரியவில்லை. மத நம்பிக்கையாளர்கள் அதை வலிந்து செய்யும் போது அவை பிறரால் விமர்சனம் செய்யப்படுகிறது. கடவுள் பற்றி கேள்வி கேட்பவர்கள் தவறு செய்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் மதங்கள் மற்றும் வேதங்கள் குறித்து தேவைக்கு மிகுதியாக கட்டமைக்கப்படுவது குற்றம் இல்லையா ? இட்டுக்கட்டும் உருவகங்கள், உருவங்கள் (சிலை வணக்கங்கள்) அனைத்தும் ஒன்றே, ஒன்று சொற்களால், மற்றது வடிவத்தால்.

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று மிகைப்படுத்தும் போது, சாணியில் இருப்பானா ? என்று கேட்பது அபத்தமான கேள்வியாகுமா ? சர்கரை என்கிற ஒரு பொருள் இருக்கிறது, அதை புகழ்ந்து பேச அதனுடன் சந்தனத்தை கலந்து வைத்தால் சர்க்கரையின் தனித் தன்மை என்பது அழிக்கப்பட்டுவிடும், அதை சானியில் கலந்து பேசுபவர்களின் செயல்மட்டும் தரம்தாழ்ந்தாகுமா ? சர்கரை எதனுடன் கலந்தாலும் சர்கரைக்கு தன்மை இழப்பு தான்.

இயல்புக்கு மாறாக ஒன்றை திரித்து திரித்து பெருமைபட பொருள் கூறுவதும் அதைத் தூற்றிப் பொருள் கூறுவது ஒன்றே. மதங்களின் கொள்கைகள் விமர்சனம் ஆகுவது அவை தேவைக்கு மிகுதியாக இட்டுக் கட்டிப் பொருள் கொள்வதினாலும் பொருள் கூறப்படுவதாலும் ஏற்படும் ஒவ்வாமையின் பக்க விளைவுகளே. மதம் சிறந்ததாக இருந்தால் பின்பற்றலாம், ஆனால் அறிவுறுத்தல் கொடுமையானது.

பொருள் முதல்வாதம் என்னும் பயன்பாடு ரீதியில் வளர்ந்தது அறிவியல், இன்றைக்கு அறிவியல் உண்மைகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சிந்திக்காமல் மனிதன் இருந்திருந்தால் அறிவியல் வளர்ந்திருக்காது. கருத்து முதல்வாதம் எனும் ஆன்மிக/மதவியாக்கானங்கள் அறிவியலை எதிர்த்தே வந்திருப்பது வரலாறு. ஏனெனிறால் ஆன்மிகம், மதம் இவை யாவும் விதியை நம்புபவை, விதிக்கு மீறியது அல்லது இறைவன் விட்ட வழிக்கு மாற்று கிடையாது என்கிற சித்தாந்தம் கொண்டவை. இவ்வுலக வாழ்க்கை என்பதே மறுவுலக வாழ்க்கைக்கான தேர்வு (பரிட்சை) என்று உலக வாழ்கைக்கு தற்காலிகமானது என்ற நம்பிக்கைக் கொண்டவை. ஆன்மிக, மதக் கருத்துக்களை புறம்தள்ளிவிட்டு, தனிமனிதனுக்கு வேண்டுமானால் இவை நிரந்தமற்றவையாக இருக்கலாம், ஆனால் மனித குலம் என்பது தொடர்ந்து இருப்பதே என்று கூறி சிந்தனையால் வளர்ந்தவையே அறிவியல், அதற்கு ஊட்டமளித்தது பொருள் முதல்வாதம். அதாவது அறிவியல் என்பது பொருள் முதல்வாதத்தின் குழந்தை, அதை பொருள் முதல்வாதம் என்றுமே வளர்த்துக் கொண்டிருக்கும். ஆனால் இந்த அறிவியலுக்கு மதவாதிகள் சொந்தம் கொண்டாடுவதும், அறிவியலை மதத்துடன் ஒட்டவைப்பதும் எந்தவிதத்திலும் ஞாயமே இல்லை.

மிகைப்படுத்தப்படும் ஆன்மிகம் அல்லது மதவாதம், மத நூல்கள் அனைத்துமே நாத்திக கருத்துகளை அதாவது இறைச் செயல் என்பதை மறுக்கும் அறிவியலை நோக்கி நகர்வது விந்தையாக இருக்கிறது. அறிவியல் இதுவரை 'இறை' என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மதம், ஆன்மிகம், இறைவன் இவற்றை மிகைப்படுத்தும் உரிமையை அவரவர் எடுத்துக் கொள்வதும் சரியா ?

மதங்கள், வேத நூல்கள், இறைவன் குறித்து இட்டுக்கட்டி மிகைப்படுத்துவதும், அதை நாத்திக வாதமாக தூற்றுவதும் ஒன்றே !

8 டிசம்பர், 2009

கலவை 08/டிச/2009 !

கதை முடிந்தது : கச்சத்தீவு கைகழுவப்பட்டது பட்டது தான் என்பதாக காங்கிரசு வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அறிவித்துள்ளார். யார் வீட்டு சொத்தை யார் தானம் வழங்குவது, கடைத் தேங்காய் வழிப்பிள்ளையார் கதையாக இலங்கைக்கு தானம் வழங்கிவிட அந்த பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் நாள்தோறும் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டும், கொல்லப்பட்டும், மீன்கள் கொள்ளையடிக்கப்பட்டும், சிறை தண்டனைப் பெற்றும் மேலும் சொல்லவெண்ணா துயரையெல்லாம் அடைகிறார்கள். ஒரே நாளில் 'கச்சத் தீவு கதை முடிந்ததாக அறிவிக்கிறார்'. மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி போதும், மாநில நிர்வாகத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற எழுதாத ஒப்பந்ததில் இயங்கும் தமிழக தலைமைக்கு கச்சத்தீவு பற்றி கவலை என்ன வந்துவிடப் போகிறது. மற்றொமொரு மவுன கண்ணீர் கவிதை கிடைத்தாலே மிகுதி. அண்டை நாடுகள் (சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ்) அடுத்தவர் நிலங்களை ஆக்ரமிப்பு நடத்துகிறார்கள். இருந்ததை கைகழுவி விட்டதாக, காங்கிரஸினர் தமிழக மீனவரின் இரத்தத்தை இலங்கைக்கு தானம் செய்தததாகச் சொல்கிறார்கள். ஒக்கனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கைவிடப் பட்டதாக அறிவிப்பும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

மனத் தடை : அலிகார் : "இந்தியாவில் பிரதமராவதற்கு மதமும், ஜாதியும் ஒரு தடையே அல்ல. தகுதி வாய்ந்த முஸ்லிம், நாட்டின் பிரதமராக முடியும்' என காங்., பொதுச் செயலர் ராகுல் கூறினார். - இவரு ஏன் தனது பாட்டனார் பெரோஸ் காந்தி ஒரு முஸ்லிம், நான் கூட அடிப்படையில் முஸ்லிம் வம்சாவளி தான் என்று சொல்லவில்லை ? அப்படியெல்லாம் சொல்ல பெருந்தன்மை இருந்திருக்க வேண்டும், காந்தியின் பேரன்களைப் போல் அல்லது காந்தியின் நேரடி வம்சத்தினர் (வெளி நாட்டினர் அப்படித்தான் நினைக்கிறார்கள்) என்பது போல் பெயருக்குப் பின்னால் காந்தி போட்டுக் கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். தென்னிந்திய காங்கிரசு செய்தித்தாள்கள் பிரியங்கா வதோராவை இன்னும் கூட பிரியங்கா காந்தி என்றே எழுதி வருவது குறிப்பிடத் தக்கது.

புதிய மாநிலம் : முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் தனி மானிலம் கோரிக்கை தெலுங்கானா வலுப்பெற்றுள்ளது. முன்பெல்லாம் தேர்தல் தோறும் தெலுங்கானா கோரிக்கையை ஆதரிப்பதாகக் கூறி மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைதத்து காங்கிரஸ். காங்கிரஸ் ஆட்சியில் வந்ததும் அது கிடப்பில் போடப்படும். தற்பொழுது ஆந்திர மாநில பாஜகவும் தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், விரைவில் ஆந்திராவில் இருந்து தனி தெலுங்கு மாநிலம் தெலுங்கான பிரியும் நாள் விரைவில் இல்லை. அப்படி பிரிந்தாலும் ஹைதராபாத் எந்த மாநிலத்துக்கு என்பதெல்லாம் முடிவு எட்டிவிடுமா என்பது தெரியவில்லை. இந்தியாவிலேயே தொடரும் என்கிற நிலையில் மாநிலங்களைப் பிரிப்பதால் மத்திய அரசு என்ன நட்டம் ? மொழிப்பற்று என்பதை உணர்ச்சி வடிவில் வைத்திருப்பதில் ஆந்திராவும் கர்நாடகாவும் ஒன்று போல் தான்.

குடமுழுக்கு நிகழ்ச்சி : மனைவியின் விருப்பத்தின் பேரில் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டி இருந்தது. சிங்கையில் செட்டியார்களால் அமைக்கப்பட்டு நடத்தப்படும் தண்டாயுத பாணி முருகன் கோவிலில் சென்ற நவ 27 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. கோவில் பணியில் பார்பனர்களும் இருந்தாலும் மூலவர் முருகன் சிலைக்கான பூசை முதல் அனைத்தும் செட்டியார்களே செய்கிறார்கள். அங்கே இருக்கும் சிவலிங்கம் மற்றும் அம்மனுக்கு பார்பனர்கள் பூசைக்கு அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். செட்டியார்களுக்கு உரிமையான கோவில், அவர்களின் கட்டுபாட்டில் இருக்கும் கோவில் என்பதைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் தமிழ் வழி வழிபாட்டிற்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பது பாராட்டத்தக்கது. வெளிப்படையாக தெரியாவிட்டாலும் கட்டுக் கோப்புடன் குழுவாக இயங்குவதில் செட்டியார் சமூகம் பார்பனர் சமூகம் போல் சாதி சார்ந்தே இயங்குகிறது. உயர்வு மனப்பான்மையில் பூணூல் அணியும் செட்டியார்களும் உண்டு. குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் எப்போது செட்டியாரின் குலதெய்வம் ஆனான் என்பது வரலாற்று ஆய்வுக்கு உட்பட்டது. தேவலோக இந்திரனின் மருமனாக்கி முருகனை பார்பனர்களும், அந்த கந்தபுராண கதையின் குறிஞ்சி நில குறவள்ளியின் மணாளன் என்பதால் நரிக்குறவர்களும் முருகன் மீது தனிப்பட்ட பக்தி வைத்துள்ளார்கள்.





கோவில் குடமுழுக்கை ஒட்டி நாள்தோறும் இசை நிகழ்சிகள் நடத்தப்படுகின்றன. இலவச அறுசுவை உணவு வழங்கப்படுகிறது.

நேற்று வீரமணி இராஜு வந்திருந்தார், ஐயப்பன் பாடல்களையும் அதைத் தொடந்து அம்மன் பாடல்களையும் பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் கே.வீரமணி. வீரமணி பாடல்களில் அவர் குரல் வளம், இசை அனைத்தும் கேட்போரை உருக வைக்கும், சீர்காழி கோவிந்தராஜன், டிஎம்.எஸ் பாடல்களைவிட பக்தி இசையில் என்னை ஈர்த்தது கே.வீரமணி பாடிய பாடல்களே. வீரமணி தாசன் என்பவர் வீரமணியின் குரலில் கிட்டதட்ட அதே போன்றே பாடுவார். அந்த நினைப்பில் வீரமணி இராஜுவின் பாடல் இருக்கலாம் என்றே நினைத்தேன். மாறாக வீரமணி இராஜு கே.வீரமணியின் பாடல்களை சொதப்பலாகவே பாடினார். புதுமை செய்கிறேன் பேர்வழி என்று பாட்டுகளின் ஏற்ற இரக்கம், இராகங்களை மாற்றிப் பாடினார், கேட்க சலிப்பு அடைய வைத்துவிட்டது. நான்கு பாடல்களே கேட்டுவிட்டு திரும்பிவிட்டோம். பக்திப் பாடல்களில் ரீமிக்ஸ் கேட்கும் போது அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. ஆயிரம் பேர் எஸ்பிபி போல் பாடினாலும் எஸ்பிபியே பாடுவதற்கு ஈடாகுமா ? வீரமணியின் பாடல்களை பிறர் பாடும் போது அப்படித்தான் நினைக்க வைக்கிறது.

தாண்டாயுதபாணி முருகன் கோவில் நிகழ்ச்சிகள் குறித்த இணையதளம் இங்கே

*****

தேவநாதன் புண்ணியத்தில் இரு நகைச்சுவை :

மனைவி : என்னங்க சாயங்காலம் சீக்கிரம் வந்திடுறிங்களா, எனக்கு தனியாகப் போக பயமாக இருக்கு
கணவன் : எங்கேடி ?
மனைவி : கோவிலுக்குத்தான்

நண்பர் 1 : வரவர என் மனைவியின் போக்கே சரி இல்லை, எப்படி கேட்கிறதுன்னு தெரியாமல் தவிக்கிறேன்
நண்பர் 2 : என்ன ஆச்சு ?
நண்பர் 1 : அடிக்கடி கோவிலுக்குப் போறாள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்