பின்பற்றுபவர்கள்

தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 மார்ச், 2014

மோடி அலையா ? அலையின் நுரையா ?

தற்பொழுது இந்தியாவின் பொதுப் பிரச்சனை என்றால் ஊழல் தவிர்த்து பெரிதாக ஒன்றும் இல்லை, ஊழலே இமாலயமாக எழுந்து நிற்பதால் மற்ற பிரச்சனைகள் பெரிதாகப் பேசப்படுவதும் இல்லை. ஊழல் பிரச்சனைகள் அடிக்கடி மறக்கடிக்கும்படி ஆட்சியாளர்களுக்கு பாலியல் வண்புணர்வு நிகழ்வுகள், குண்டுவெடிப்புகள் அல்லது வழிபாட்டு தலங்களில் பெரும் விபத்து, இயற்கை சீற்றத்தில் பலர் கொல்லப்படுதல் போன்ற தகவல்கள் வரும் பொழுது ஊழல் பிரச்சனைகள் தற்காலிகமாக மறக்கப்படும், 

மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் உள்ளடக்கிய இந்தியவில் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர், பொதுவான கட்சி என்று தம்மை முன்னிலைபடுத்தி வளர்ந்து செயல்படும் அளவுக்கு ஒரு தேசிய கட்சி வருங்காலத்தில் உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்தவரும் தத்தம் மாநில வளர்ச்சி அதில் உள்ள பிரச்சனைகள் தாண்டி, தேச வளர்ச்சி என்ற அளவுகோலில் வாக்களிப்பதற்கான வாய்புகள் குறைவு, மாநில கட்சிகள் பலம் பொருந்த்திய எந்த ஒரு மாநிலத்திலும் (தற்பொழுது இருக்கும்) தேசிய கட்சிகள் பெரிதாக வென்றுவிட முடியாது. இது பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்று உணர்ந்து வாக்களிப்பவர்கள் குறைவே.

உதாரணத்திற்கு ஆளும் தேசியகட்சி, (எதோ ஒரு மாநிலத்தில்) ஆளும் மாநில கட்சி ஆகிய இரண்டுமே ஊழல் கட்சி என்று பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிந்தால் வாக்குகள் அனைத்துமே மாநிலத்தில் அடுத்து பலம் பொருந்திய மற்ற கட்சிக்கு தான் வாக்குகள் சேரும், மற்றபடி அந்த கட்சி பிரதம வேட்பாளரை அறிவிக்காவிட்டாலும் மக்கள் வாக்களிப்பார்கள், அதைத்தான் எதிர்ப்பு வாக்குகள் என்கிறார்கள்.

மோடி அலை தமிழகத்தில் பலமாக வீசுவதாக தமிழக முதல்வர் நம்பி இருந்தால் பாஜகவுட கூட்டு சேர்ந்து  பாஜகவிற்கு 2 - 5  இடம் ஒதுக்கிவிட்டு 38 - 35 இடங்களிலும் அதிமுகவே நின்றிருக்கும்,  ஏனெனில் பாஜகவினர் தங்களுக்கு அதுவே மிகுதி என்றும் தேர்தலுக்கு பின்னர் ஆதரவும் தொடரலாம் என்று நம்பி சேருவார்கள். தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிர்ப்பே மிகுதியாக உள்ளது, அவை மோடிக்கு ஆதரவாகும் என்று நம்புவதற்கும் இல்லை, ஒருவேளை ஜெ மோசமாக ஆட்சி நடத்தி வந்திருந்தால் ஜெ விற்கு எதிரான மனநிலையில் பலம் பொருந்திய மாற்று கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். 

தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேசிய கட்சிகள் காங் மற்றும் பாஜகவே பலம் பொருந்திய கட்சியாக உள்ளன, அங்கெல்லாம் காங்கிரசின் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவிற்கு ஆதரவாக அமையலாம்,  தமிழ்நாட்டில் அவ்வாறு நடப்பதற்கு வாய்புகள் குறைவு, அதனால் தான் பாஜக முடிந்தவரை கூட்டணி பலத்தைக் கூட்டி 5 - 10 தொகுதிகளை வெல்லும் வாய்ப்பைக் கூட்டிக் கொள்ளலாம் என்று கூட்டணி அமைக்க தமிழக உதிரிகட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. 

பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள விஜய்காந்து தவிர்த்து மற்றவர்களுக்கு பெரிய ஆதயம் இருப்பது போல் தெரியவில்லை, என்ன தான் கூட்டணி உடன்படிக்கை என்றாலும் பாமக ஆதரவாளர்கள் யாரும் தேமுதிகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள், தேமுதிகவினரும் பாமகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள், தமிழகத்தில் வடமாநிலத்தில் மட்டுமே இந்த இரண்டு கட்சிகளுக்கும் கனிசமான வாக்களர்கள் உள்ளனர். தென் தமிழகத்தில் இவர்களுக்கு வாக்கு வங்கிகளே கிடையாது. 

இன்னும் திராவிடம் பேசும் வைகோவிற்கு தமிழக பாஜக தொண்டர்கள் வாக்களிப்பார்கள் என்பதும் ஐயமே. வாக்கு பதிவு முடிந்த பிறகு, மொத்த வாக்குகளில்  பாஜக கூட்டணி 15 விழுக்காடு பெற்றிருந்தால்  கூட, என்னுடன் சேர்ந்ததால் பாஜக கூட்டணிக்கு இவ்வளவு வாக்குகளாவது கிடைத்துள்ளது என்று அதனை தம் வாக்கு வங்கியாக விஜயகாந்து அறிவித்துக் கொள்வார். (ஒருவேளை) தோல்விக்கு காரணம் கூட்டணி சேர்ந்த கட்சிகள் எங்களுக்கு ஓட்டுப் போடாமல் ஏமாற்றிவிட்டனர் என்று சொல்லிவிடுவார், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு கிடைத்த வாக்குகளின் விழுக்காட்டு அளவை சாதமாக்கிக் கொண்டு செயல்படுவார். பஜாக கூட்டணிக்கு தேமுதிக சேர்ந்துள்ளதால் பாஜகவிற்கோ, தேமுதிகவிற்கோ எந்த இழப்பும் இல்லை, பாஜவிற்கு பலனும் இருப்பது போல் தெரியவில்லை.

இந்த தேர்தல் தமிழகத்தைப் பொருத்த அளவில் மும்முனை போட்டி மட்டுமே, ஒன்று அதிமுக, அடுத்து திமுக மூன்றாவது பாஜக கூட்டணி. மீண்டும் திமுகவின் மீது நம்பிக்கை வைக்கும் படி தமிழகத்தில் திமுக எந்த அதியத்தையும் செய்து காட்டாததால் அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்புகள் மிகுதி. எப்போதும் பாஜக ஆதரவு மனப்பாண்மை உள்ள 'மேட்டுக்குடிகள்' பாஜக நேரடியாக நிற்கும் தொகுதிகளில் பாஜகவிற்கும் மற்ற தொகுதிகளில் அதிமுகவிற்கும் வாக்கு அளிப்பார்கள். அவர்களின் வாக்கு எண்ணிக்கை குறைவு என்றாலும் வெற்றி தோல்வி சில இடங்களில் சில ஆயிரம் வாக்குகள் வேறுபாட்டில் மாறிவிடுகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும், மோடி அலை என்று காட்டுவதால் அதிமுக வாக்குக்கள் குறையும் என்று நான் நம்பவில்லை.


ஊழல் தேசிய பிரச்சனை என்று உருவாகி தமிழக்த்திலும் நுழைந்துள்ள ஆம் ஆத்மிக்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நம்பமுடியவில்லை. தமிழகம் ஒருவேளை ஊழல் மலிந்த மாநிலமாக உருவானால் ஆம் ஆத்மி வளரலாம். அந்த ஊழல் மலிந்த நிலையை தமிழகம் தொட தமிழர்கள் அனுமதிக்கமாட்டார்கள். மோடி அலை என்று தமிழகத்திலும் கிளப்பிவிடப்படும் மாயை தமிழகத்தில் தேர்தல் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது .

பிகு : எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும் (எழுதியதை திரும்பவும் படித்துப் பார்க்கவில்லை)

5 ஜூலை, 2013

இளவரசனைக் கொன்ற வருணாசிரமம் !

இளவரசனின் மரணச் செய்தி வருணாசிரமவாதிகளுக்கு சாதிகள் அழியாது என்று வயிற்றில் பால் வார்த்திருக்கும், சாதியம் என்பது மனித குல மேன்மைக்கு வேதங்கள் வழிவகுத்து காத்துவருபவை என்பதே வருணாசிரமவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. சாதியும் மதமும் சொந்த இனத்தையே கொன்று போடும் தன்மை வாய்ந்தவை என்பதைத் தான் நாம் இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்விலும் பார்த்துவருகிறோம். குலத்தொழிலையும் அதைச் சார்ந்தவர்களையும் சேர்த்து சாதியமாக மாற்றிய பிறகே செய்யும் தொழிலால் இழிவு என்று மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர்.

திருவள்ளுவர் காலத்தில் செய்தொழிலை வைத்து திருக்குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.....என்ற நிலையில் இருந்தவை ஒவ்வையார் காலத்தில் 'சாதி இரண்டொழிய......' என்ற சாதிய நடைமுறைக்குள் தமிழகம் வந்துவிட்டு இருந்ததை குறிப்பிடுவனயாகும், இன்றைய தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஒருகாலத்தில் புத்த மதத்தைப் பின்பற்றியவராக இருந்தனர், புத்தமதம் வீழ்ந்த பிறகு அதைப் பின்பற்றியவர்களை ஒடுக்கி, ஒதுக்கி, அவர்களது வழிபாட்டு சின்னங்களை அழித்து, வரலாறுகளை அழித்து, தம்முடைய வரலாறு என்ன என்பதையே அவர்கள் அறியாவண்ணம் நூற்றாண்டு காலங்களும் அவற்றின் சுவடுகளை அழிக்க, இந்த மண்ணில் பிறந்து, மண்ணிற்கு சொந்தமானவர்களையே தாழ்த்தி பார்த்து, தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்திருக்கும் அவலம், பாரத திருநாட்டைத் தவிர்த்து வேறெந்த நாட்டிலும் நடக்காத கொடுஞ்செயல்.

மனித உடம்பில் சாதிய உறுப்பு என்று ஒன்று இல்லாமலேயே 1000 ஆண்டுகளாக அவை மரபு ரீதியாக கடத்தப்பட்டு அதன் பலனை(?) இன்றும் அனுபவிக்கிறோம், வெளிநாட்டிலேயே தங்கியவர்கள் கூட கூடவே எடுத்துச் சென்ற சாதியை விடாமல் பின்பற்றியே வருகின்றனர், அப்படி என்ன தான் சாதியில் இருக்கிறது ? நினைத்துப் பார்த்தால் குல தெய்வ வழிபாடு, பரம்பரை பெருமை (அதுவும் சிலருக்கு தான்), திருமண உறவு இதைத் தாண்டி எதுவுமே இல்லை, வீட்டை விட்டு வெளியே வந்தால் பல்வேறு தரப்பினரிடம் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் சாதியின் பலன் என்று எதுவும் தனித்து இருப்பதாகத் தெரியவில்லை.

இன்றைய சாதியம் என்பவை ஓட்டு வங்கி என்ற நிலையை அடைந்திருக்கிறதன்றி, அந்தந்த சாதியில் ஏழையாக இருந்தவன் ஏழையாகத்தான் இருக்கிறான்,  எத்தனையோ சாதியத் தலைவர்கள் கல்லூரிகள் துவங்கி இருக்கிறார்கள், அந்தந்த சாதியைச் சார்ந்த ஏழைகளுக்கு இலவசமாக இடம் கொடுத்திருக்கிறார்களா ?

*********

மாநகரங்கள் தவிர்த்து தமிழக நகரங்கள், கிராமங்கள் இன்னும் சாதி பற்று நீங்காமல் தான் இருக்கின்றன, காரணம் சாதிக்கான தனித் தனி தெருக்கள் இன்னமும் உண்டு. நகரங்களில் / மாவட்ட தலைநகரங்களில் தாழ்த்தப்பட்ட சாதியைத் சார்ந்த ஆணை மாற்று சாதி பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டால், வெட்டிப் போடுவது, தற்கொலை நாடகம், இருதரப்புகள் அடித்துக் கொள்ளுதல் இவையெல்லாம் இருக்காது, அதற்கு பதிலாக பெண்ணின் பெற்றோர் பெண்ணை தலை முழுகிவிடுவார்கள், பெண்ணின் பெற்றோர் சார்ப்பு உறவினர்கள் கூட யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள், பெண்ணுடைய அப்பா / அம்மா  இறந்தாலும் அவளால் வீட்டு வாசலை மிதிக்க முடியாது, கூடப் பிறந்தவர்களே 'பரப்பய கூட ஓடிப் போனவளுக்கு உறவு என்ன வேண்டிக்கிடக்கிறது...........?' என்று தூற்றி விரட்டிவிடுவார்கள். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை, இவை எல்லோருக்கும் தெரிந்தவை தான்.

எங்கள் சொந்ததிலேயே அதுபோன்று தலை முழுகப்பட்ட பெண்கள் உண்டு, இதை எழுத எனக்கு கூசுகிறது, இதுபற்றி நானும் உறவுக்காரர்களிடம் பலமுறை பேசியும், யாரும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவும் இல்லை. இத்தனைக்கும் தாழ்த்தப்ப்ட்டவர்கள் அல்லாத சமூகம் சார்ந்த கலப்பு திருமணங்கள் எங்கள் உறவுக்காரர்களிடம் மிகுதி. வீட்டில் உள்ள மாடுகளை மேய்க்க, அவற்றை குளிப்பாட்ட, பால் கரக்க, வயலில் வேலை செய்ய எல்லாவற்றிற்கும் பறையன் / பள்ளன் ஆகுமாம், ஆனால் சம்பந்தி என்கிற வட்டத்திற்குள் கொண்டு வந்தால் ஊரு ஒலகம் தூற்றும் என்று அச்சப்படுவார்கள்.  பேருந்தில் சென்று வந்தால் உடனே குளிப்பவர்கள் கூட உண்டு, ஏனென்றால் அதில் கண்ட சாதிக்காரனும் ஏறி இருப்பான், கூட்டத்தில் அவர்களையெல்லாம் ஒருவேளை தொட நேரிட்டிருக்கலாம் என்பார்கள். 

கிரமங்களில் சாதிய மோதல் என்பவை எந்த சாதிக்காரகள் மிகுதியாக வசிக்கிறார்கள் என்பதைப் பொருத்ததே, தாழ்த்தப்பட்டவர்கள் மிகுதியாக வசிக்கும் இடத்தில் மற்ற சாதியினர் வசிக்கமாட்டார்கள், அடுத்த அடுத்த கிராமத்தில் வேறொரு சாதிக்காரகள் வசிப்பார்கள், இந்த பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்று முடிவெடுத்து யாரும் செயல்படுவதில்லை, இளம் பெண்களைப் பொருத்த அளவில் தன்னை நேசிப்பவர் மீது உடனேயே காதல் வயப்படுவது எங்கேயும் நடைபெருவதே, இன்றைய காலத்தில் பொருளாதரமும் கல்வித் தகுதியும் பெண்கள் உணர்ச்சி வசப்படுவதில் இருந்து கொஞ்சம் மட்டுப்படுத்தியுள்ளது, மற்றபடி ஒரு ஆண் தன்னை நேசிக்கிறான் என்று தெரியும் பொழுது ஒரு பெண் அவன் எந்த சாதியைச் சார்ந்தவன், மதத்தைச் சார்ந்தவன் என்றெல்லாம் பார்க்கவே மாட்டாள்,  இந்தவிதத்தில் பெண்களை கட்டுப்படுத்தும் எந்த சமூகம் அமைப்பும் அடிக்கடி தோல்வியையே சந்திக்கின்றன, எத்தனை ஆண்கள் தன்னை விட தாழ்ந்த சமூத்தில் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் ? கிராமங்களில் தாழ்த்தப்பட்ட கலப்பு திருமணங்கள் பெரும்பாலும் கொலை / தற்கொலையில் தான் முடியும்.

ஒரு ஆணுக்கு தான் தன்னுடைய காதல் கைகூடுமா ? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும், இளவரசன் செய்தது தவறு, சாதித் தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு வளைய கிராமத்தில் இருந்து கொண்டு காதல், ஓடிப் போய் திருமணம் என்றெல்லாம் சென்று மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இளவரசனின் மரணம் மிகவும் வருத்தமான நிகழ்வு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, சாதிகள் ஒழியும் என்று எந்த நம்பிக்கையும் அது ஏற்படுத்தவில்லை. 

தாழ்த்தப்பட்டவரை கலப்பு திருமணம் - திரைப்படத்தில் கூட காட்ட முடியாத அவல நிலை தான் தமிழகத்தில் உள்ள நிலை, சேரன் எடுத்த பாரதி கண்ணம்மா படத்தில் ஒரு முயற்சி எடுத்து அதிலும் காதலர்களைக் கொன்றுவிடுவார்.  தாழ்த்தப்பட்டவர்களை யாரும் கலப்பு திருமணம் செய்து கொள்வதில்லையா ? இருக்கிறார்கள் அவையெல்லாம் சென்னை போன்ற மாநகரங்களில் உண்டு, சிறு நகரங்களில் ஒதுக்கி வைக்கப்படுவது, கிராமங்களில் கொலை செய்யப்படுவதும் தான் நடைபெற்றுவருகிறது.

திவ்யாவின் அப்பங்காரன்  தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சாதிவெறியனா ?  என்றெல்லாம் சிலர் நினைக்க கூடும், இது சாதிவெறியால் நிகழ்ந்த தற்கொலை அல்ல, ஒரு பெண் வீட்டை விட்டு அதுவும் தாழ்த்தப்பட்டவருடன் திரும்ப முடியாத / கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு சென்றால் கொஞ்ச நாள் ஊருக்குள் கலவரம் நடக்கும், பின்னர் அமுங்கிவிடும், ஆனால் அக்கம் பக்கம் எதாவது சண்டை என்றால் மொத்த குடும்பத்தையே 'பரப்பய கிட்ட கூட்டிக் கொடுத்த குடும்பம் தானே உன்னது' என்று ஒரே வார்த்தையால் கூனிக் குறுக வைத்துவிடுவார்கள், அந்த அவமானத்தை நினைத்து தான் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும், தற்கொலை செய்து கொள்ள மனதில்லாதவர்கள் ஊரைக் காலி செய்து கண் காணாத இடத்திற்கு சென்றுவிடுவார்கள்.

*************

தமிழினக்காக முத்துக்குமார் உள்ளிட்டோர்  பலர் உடலில் தீ வைத்துக் கொண்டு தீயில் கருகினார்கள், அவர்களின் தியாகம் பேசப்படுகிறது, அவர்களை ஒப்பிட இளவரசனின் தற்கொலை / கொலை மரணம், திவ்யாவின் தந்தை தற்கொலை ஆகியவை ஒரு கிராமத்தில் நடந்த சாதி வெறியின் ஊடகக் படப்பிடிப்பு காட்சிகள் என்பது தவிர்த்து, மக்கள் மனதில் சாதி வெறிகள் நீங்காதவரை. வருணாசிரம வேதங்களை ஒழிக்காதவரை இவற்றைப் பற்றியே பேச ஒன்றும் இல்லை என்பது எனது சொந்தக் கருத்து, இவை தமிழக கிராமங்களில் எங்கும் எப்போதும் நடைபெறுவையே, பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகளின் அரசியலுக்காக அவை ஊடக வெளிச்சத்திற்குள் வந்துள்ளன.

14 பிப்ரவரி, 2013

தாவணி சரியான ஆடையா ?


முகநூலிலும் கூகுள் கூட்டலிலும் ஒரு அழைப்பிதழ் படமும் அதற்கான கருத்துகளும் நகைச்சுவையாக கிண்டல் அடிக்கப்படுகிறது. நான் அதற்கு மாற்றுக் கருத்தாக

"தாவணி என்பது அருகிவரும் வேளையில் இவற்றை வரவேற்போம், மஞ்சள் நீராட்டு விழா என்பது கொச்சையாக பார்க்கப்படுவதால் இப்பொழுது தாவணிக்கு மாறி இருக்கிறார்கள், அதையும் ஏன் தவிற்கும் படி நாம கமெண்ட் அடிக்கனும் ?""

அதற்கு நண்பரின் பதில் "தாவணி மாணவிகளுக்கு ஏற்ற உடை இல்லை, அதை பள்ளிகளும் தடை செய்துள்ளனர், தாவணி  அணியும் விழா மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவை நாம் வரவேற்க்கக் கூடாது" என்று எழுதினார்

நான் திரும்பவும் அவருக்கு மறுமொழி இட்டேன்.



1. பள்ளிகளில் தடை செய்துள்ளதாக நீங்கள் எந்த ஆதரத்தில் இவற்றை தெரிவிக்கிறீர்கள் என்று தெரியவில்லை, தனியார் பள்ளிகளில் அவ்வாறான நடைமுறைகள் இருக்கலாம், மாடர்ன் ட்ரெண்ட் என்ற முறையில் சல்வாருக்கு மாற்றிவிட்ட பெற்றோர்கள் இருந்தாலும், இன்னும் அரசு பள்ளிகளிலும் அரசு ஆதரவு பள்ளிகளிலும் தாவணி அணிந்து செல்பவர்கள் உண்டு, நான் பார்த்து இருக்கிறேன்.

2. தவாணி என்பது புடவையின் சிறிய வடிவம், அவற்றை அணிய பழக்கப்படுத்துவது பிற்காலத்தில் புடவை உடுத்த பழகிக் கொள்வார்கள் என்பதற்காகவும், தாம் இனி சிறுமி இல்லை, என்று ஒரு பெண் உணரவேண்டும் என்பதற்காகவும் தாவணி அணிவிக்கப்படுகிறது.

3. பூப்பு மற்றும் மஞ்சள் நீராடும் சடங்கு தற்போதும் தேவையற்றது என்று சொல்லாவிட்டாலும் பலர் அறிய நடத்துவது தேவையற்றது என்ற கருத்தை நானும் வழிமொழிகிறேன், தற்பொழுதெல்லாம் ஊர் கூட்டி பூப்படையும் சடங்கு செய்யாவிட்டாலும் வீட்டு உறவினர்களை மட்டும் அழைத்து செய்கிறார்கள், காரணம் மேற் சொன்னது போல் சிறுமி மன நிலையில் இருந்து பெண் குடும்ப பொறுப்புக்கு மாறவேண்ட்ம் என்கிற உளவியல் ரீதியான சடங்கு மட்டுமே.

4. முன்பெல்லாம் பெண் வயதுக்கு வந்த உடன் மணம் செய்து கொடுக்கும் பொறுப்பும் இருந்ததால் அதனை விமர்சையாக செய்வதன் மூலம் சொந்தகளுக்கு அறிவித்து சொந்தங்களிடம் இருந்து மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க முடியும், அல்லது பெண் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள் என்று அறிவிப்பு விழாவாகவே அது நடைபெறும், தற்போதைய சூழலில் உறவினருக்குள் திருமணம் செய்துவிட்டது கிட்டதட்ட முடிந்துவிட்ட நிலையில் ஊர் அறிய நடத்தும் பூப்பு விழா தேவையற்றது தவிற அந்த பெண்ணுக்கு கூச்ச உணர்வு தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் முன்பு முட்டாள் தனமாகதான் இந்த சடங்கை வைத்திருந்தார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

5. பள்ளி சீருடையாக குட்டைப் பாவடை அணிய வைப்பதைவிட சிருடையிலும் தாவணி எந்த விதத்திலும் தவறான தேர்வாக எனக்கு தெரியவில்லை. எனது சகோதரிகள் பள்ளிப்பருவத்தில் தாவணி அணிந்து தான் சென்றனர். குட்டைப் பாவாடையிலும் கவர்ச்சி தேடுபவர்கள் உள்ளனர் என்பதற்காக இதனை குறிப்பிட்டேன், மற்றபடி குட்டைப் பாவாடையில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை.

6. மஞ்சள் நீராட்டு விழா அறுவெறுப்பாக எப்பொழுது பார்க்கப்பட்டது, சமூகத்தில் அத்தகைய மன நிலை ஏன் ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. முன்பெல்லாம் பொது இடத்தில் குழந்தைக்கு முலைப்பால் ஊட்டுவது அருவெறுப்பற்ற நிலையில், அப்படி ஒரு சிந்தனைகளே இல்லாத போது அவ்வாறு ஊட்டப்பட்டது, மனித மன வக்கிரங்கள் வளர வளர இப்பொழுது யாரும் அவ்வாறு செய்வதில்லை என்பதை நாம் சமூக மாற்றமாகக் கொள்ள வேண்டும் என்பதைவிட நாம் மன நிலைகளில் வக்ரங்கள் குடியேறிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும்.

7. பூப்பு நீராட்டுவது அறுவெறுப்பான சடங்கு தேவையற்றது என்கிற கருத்து உருவாகியுள்ளது போல் ஏழு மாதத்தில் கற்பினி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதைக் கூட அருவெறுப்பாக காணும் நிலை நம்மிடம் வளரக் கூடும், காரணம் குழந்தை பெற்றுக் கொள்வது இருவர் கூடுவதால் ஏற்படும்  நிகழ்வு, ஒரு பெண் வயிறு முன் தள்ளி நிற்பதைப் பார்க்கவும், அவள் கணவனுடன் கூடினாள் என்பதை எல்லோருக்கும் வெளிப்படுத்த இந்த விழாவை நடத்துவது தேவை தானா ? என்கிற கேள்வியைக் கூட நான்கு பேர் அசட்டுத் தனமாக கேட்டு வைப்பார்கள்.


*****


பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தனக்கான தனிப்பட்ட விழா என்பதால் இது போன்ற சடங்குகளில் இயல்பாகவே ஆசை இருக்கும், ஆனால் நாம் நாகரீகம் என்ற பெயரில் அவற்றை புறக்கணிக்கத் துவங்கியுள்ளோம், நமது சமூகத்தில் பெண்களை மிகவும் தாழ்வாக வைத்திருந்தாலும் பெண்களுக்கு மட்டும் தான் தனிப்பட்ட சடங்குகள் நடைபெறுகிறது, சிறப்பு செய்யப்படுகிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது, அவை மறையும் பொழுது அந்த தனிச் சிறப்புகளையும் அவர்கள் இழந்துவிடுவார்கள்.

தாவணி அழகா இல்லையா ? தாவணிக்கு தமிழ் திரைப்படங்களில் சிறப்பான இடம் உண்டு, 16 வயதினிலே ஶ்ரீதேவி முதல் சண்டைக் கோழி மீரா ஜாஸ்மின் வரை தாவணிப் போட்ட தீபாவளியாக அழகாகத் தான் தெரிந்தார்கள், அதே போன்று திரைப்படங்களில் தாவணியை பூணூல் அளவுக்கு கவர்ச்சி உடையாகவும் ஆக்கினர்கள், புடவையை கவர்ச்சியாக கட்டுவது போல் தாவணியையும் அவ்வாறு காட்டியதால் என்னவோ தாவணி அணிவது அறுவெறுப்பானதோ என்று நினைக்க வைக்கப்படுகிறது, மேலும் உடுத்த எளிதனது பொதுவான உடை என்ற அடைப்படையில் சல்வார் தாவணிக்கு மாற்றாக வந்துவிட்டது, ஆனாலும் பள்ளியில் மாணவிகளை சீருடையாக உடுத்தச் சொல்லும் குட்டை பாவடையைக் காட்டிலும் தாவணி எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. எந்த உடையிலும் கவர்ச்சி தேடுபவர்கள் உண்டு, முழுக்க முழுக்க மூடி இருந்தாலும் உப்பிய பாகங்கள் உடையில் மேடுகளாக தெரிகிறதா என்று காமப் பார்வை உள்ளவன் பார்பான், ஒரு சில கேடுகெட்ட, எப்போதும் காம வயப்பட்ட ஆண்களின் காமப் பார்வை தான் பெண்களின் உடையை முடிவு செய்யக் கூடியது என்பதை நான் எப்போதும் எதிர்க்கிறேன்

16 அக்டோபர், 2012

மின்சாரம் இல்லைன்னா ?

இப்போதைக்கு ஏதோ டீசல் பெட்ரோல் வைத்து ஜெனரேட்டரைப் போட்டு மின்சாரம் இல்லாமல் செய்யும் வேலைகளை சமாளிக்கிறார்கள், எரிபொருளே இல்லை என்றால் மின்சார உற்பத்திக்கு வாய்ப்பே இல்லாத நிலையில்.

  • மின் தூக்கி இயங்காத நிலையில் ஒரு பயலும் அடுக்குமாடி வீட்டை வாங்க முன்வரமாட்டான்
  • மின்கலம் உற்பத்தித் திறன் ஆகியவை மின்சாரம் சார்ந்தே இருப்பதால் போதிய அளவுக்கு மின்கல உற்பத்தி செய்ய முடியாத நிலையில் அவற்றின் விலை உயர்வுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
  • காற்றாலை மற்றும் அனுமின்சாரம் ஆகியவை அடிப்படை வசதிகளுக்கே மட்டுமே வாய்ப்பு என்ற நிலையில் மிஸ்டு காலுக்கும் கட்டணம் என்றாகி  மிஸ்டு கால் கொடுப்பதற்கு மிகவும் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கும்,
  • பழையபடிக்கு வேப்ப மரக் காற்று தான் சிறந்த ஏசியாக இருக்கும்
  • சைக்கிள் விற்பனை படுஜோராக இருக்கும்
  • மாவாட்டும் வேலைக்கு நல்ல ஊதியம் கிடைக்கும்
  • மாட்டு வண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் வேலைக்கு மாடு குளிப்பாட்டும் தகுதி இருந்தால் போதும் என்று சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
  • மாடுமேய்க்கும் வேலையையோ, பன்றி மேய்க்கும் வேலையையோ யாரும் விமர்சனம் செய்யமாட்டார்கள்
  • குதிரை வண்டிகளை, ரிக்சாக்களை பழையபடி சாலையில் பார்க்கலாம்.
  • சாலைகள் எதுவுமே புதிதாகப் போடாமல், செப்பனிடாமல் கிடக்கும்
  • நான்கு குதிரை பூட்டிய வண்டிக்கு சொந்தக்காரர் பணக்காரன்
  • மின்சாரமே இல்லை என்றால் இணையமோ, இணைய இணைப்போ இருக்காது, பழையபடிக்கு கையெழுத்து படிவங்களாக செய்திகளுக்கு பகிர்ந்து கொள்ளப்படும்
  • மின்சாரம் சார்ந்து இயங்கும் பொறியல் துறையே முடங்கிவிட பட்டப்படிப்புகளைப் படிக்க யாருமே முன்வரமாட்டார்கள்
  • விவாசயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே தங்கும்
  • மனித வளத்தை சார்ந்திருக்கும் நாடுகள் பொருளாதார இழப்பை சந்திக்கும்
  • புனிதப் பயணம் செய்பவர்களுக்கு ஒட்டகம், குதிரை மாட்டுவண்டிகள் தான் ஒரே பயண நண்பன், இரண்டு ஆண்டுகள் கழித்து (போக வர) புனிதபயணத்தில் இருந்து திரும்பியதாக வந்து சொல்வார்கள்.
  • வீட்டுக்கு வீடு கிணறு தோண்டுவார்கள்
  • இயற்கை வளம் மிக்க நாடுகளை பலமிக்க நாடுகள் ஆக்கிரமிக்கத் துவங்குவார்கள்
  • சினிமா சார்ந்த தொழில்கள், தொலைகாட்சி ஊடகங்கள் முற்றிலுமாக செயல்படாது
  • பொழுது போக்குக்கு பழையபடி தெருகூத்து, பொம்மலாட்டம் களைகட்டத் துவங்கும்
  • பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அடிப்படைக் கல்வி தவிர்த்து வேறு படிக்க முன்வரமாட்டார்கள்
  • இல்லத்து ஆண்களின் துணித்துவைக்கும் வேலை கிண்டல் செய்யப்படாது
  • பலசரக்கு கடைகள், உணவு விடுதிகள் மட்டுமே நகரங்களில் வேலை வாய்ப்புள்ள நிறுவனங்களாக செயல்படும்
  • தண்ணீர் வரத்தும், ஓட்டமும் இல்லாத இடங்கள் பாலைகளாக மாறும்
  • வெள்ளைக்காரனையும், வெள்ளைத் தோலையும் பொறாமை கொள்ளத் தக்கது என்று எவரும் நினைக்கமாட்டார்கள்
  • வாழும் வாய்பிற்கு இனம் சார்ந்த குழுக்களே ஏற்பாடு செய்யும் என்ற நிலையில் இனம் சார்ந்து ஒன்று திரட்டல்கள் நிகழும்,
  • கோவில் மணி அடிக்கும் வேலைகள் ஆள் எடுப்பார்கள், கடுப்பேற்றும் மத வழிபாட்டு முழக்கங்களுக்கு ஸ்பீக்கர் இருக்காது
  • நெய்விளக்கும், ஆமணக்கு விளக்கும் தான் ஒளி உற்பத்திக்காக (பவர் சோர்ஸாக) இருக்கும் 
  • மின்சாரத்தை நம்பிய பெரு உற்பத்தி முற்றிலும் நின்று போக பட்டினிச் சாவால் மக்கள் தொகை மூன்றில் ஒரு பங்காக குறைந்து போகும்
  • பெட்ரோலுக்கே வழியில்லாத பொழுது ஏரோபிளேனுக்கு ஈத்தர் கிடைக்காது, பெரும் பாய்மரப் படகில் தான் நாடுவிட்டு நாடு பயணம்
  • நவீன மருத்துவ வசதிகள் அனைத்தையும் இழந்துவிடுவோம்
  • முடிந்த அளவுக்கு விமானப் பயணம் மற்றும் வாகனங்களை அனுசக்தி மூலம் இயக்க முயற்சிப்பார்கள், இதன் மூலம் அனுகதிர் வீச்சு, மற்றும் விபத்துகளும் மிகுதியாகும்.

நாம பகட்டு, வசதி என்று நம்பிக் கொண்டுருப்பவை நமது பொருளீட்டல் மற்றும் கல்வி சார்ந்தது மட்டுமே இல்லை, அவை எல்லாம் அறிவியல் கண்டுபிடிப்பான மின்சாரம் போடும் பிச்சையும் கூட. பெட்ரோலையும் மின்சாரத்தையும் நம்பி அம்மி கொத்துவது முதல் கைத்தரி நெசவு உள்ளிட்ட நேரடியாக செய்யும் தொழில்கள் அனைத்தையும் விட்டுவிட்டோம், நாளை மின்சார உற்பத்திக்கு வாய்பே இல்லாத நிலையில் பழைய வாழ்க்கைக்கு நம்மால் திரும்பிச் செல்லும் பொழுது கையறு நிலையில் தான் நாம் இருப்போம். தமிழ் நாட்டினர் தவிர்த்து வேறு எவரும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகி இருக்கமாட்டார்கள் என்ற நிலையில் தமிழினம் என்று வீழாது என்று இறுமாப்பு கொள்வோம். :)

எல்லாவற்றையும் கடவுள் படைச்சதுன்னு சொல்லும் முட்டாள்கள் உண்டு, நமக்கு தெரிந்து மின்சாரம் கடவுள் கொடுத்த கொடையன்று, மனித அறிவின் படிப்படியான வளர்ச்சியினால் கிடைத்த நன்மையே, மின்சாரத்தை கடவுள் படைக்காவிட்டாலும் அதைப் படைக்கும் ஆற்றல் உள்ள மூளையைக் கடவுள் தான் கொடுத்தார் என்று எடக்காகக் கூறினால் அதுக்கு முன்பு வாழ்ந்தவர்களை ஏன் இருட்டுக்குள்ளே கடவுள் இருக்கவிட்டார் நாம மட்டும் என்ன ஸ்பெசல் ?

கடவுள் கத்தியையும், துப்பாக்கியையும் வெடிகுண்டுகளையும், அனுகுண்டுகளையும் படைக்காத பொழுது மின்சாரத்தைப் படைத்ததாக மட்டும் பொறுப்பேற்றலாமா ?

4 மே, 2012

மதுரைக்கு நித்தி, காஞ்சிக்கு தேவ நாதன் ?

பாரம்பர்ய மிக்க சைவ மடத்தில் நித்தியானந்தன் ஆதீனமா ? ஐயோகோ என்று ஒப்பாறி வைக்கிறார்கள், இது வஹாபி மதவாத பதிவர்கள் இல்லை, தமிழ் இந்து தளத்தினர். இரண்டிற்கும் வேறுபாடு ஓநாய் ஆட்டின் மீது காட்டும் அக்கரை மற்றும் காலில் அப்பி இருக்கும் நரகலை கழுவாமல் அடுத்தவன் காலுறை (சாக்ஸ்) நாறுது என்று சொல்வதும் போன்றது தான்.

"ஒரு தனியார் அல்லது அரசாங்க அலுவலகம் இருக்கிறது. அதில் பணிபுரியும் அதிகாரி அல்லது ஊழியர் மீது குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்படுகிறது. அப்போது அந்த நிறுவனம் அல்லது அலுவலகம் என்ன செய்கிறது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்கிறது. அந்த விசாரணை முடிந்து அவர் மீது குற்றம் இல்லை நிரபராதி என்று முடிவாகும் வரை அவரை இடைக்கால பணி நீக்கம் செய்து வைக்கின்றனர். குற்றம் சுமத்திய பிறகு தான் அந்த குற்றத்தைச் செய்யவில்லை என்று அசைக்கமுடியாத ஆதாரங்களைக் காட்டி அதிலிருந்து வெளிவருவதுதான் சரியான வழி. குற்றச்சாட்டுக்கு ஆளான எவரும் முதலில் சொல்வது நான் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்பதுதான். ஆனால் குற்றம் சாட்டுபவர்கள் சான்றுகளைக் காட்டி குற்றத்தை நிரூபிப்பாரானால் குற்றம் உறுதியாகும். அப்படி அவர் குற்றம் செய்யாதவர் என்று விடுவிக்கப்பட்டாலும், அவர் மீது அந்த கறை படிந்துதான் இருக்கும். நீதிமன்றமும், பொதுமக்களும் அவர் குற்றம் செய்யவில்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் தர்மம் என்றாலும், மக்கள் மனத்தில் ஒரு நெருடல் இருந்து கொண்டுதான் இருக்கும். இன்னார் இன்ன குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ஆச்சே, இவர் இந்த பெரும் பதவியை வகிக்கலாமா என்ற எண்ணம் தோன்றத்தான் செய்யும். இப்படிப்பட்ட சூழ்நிலை தமிழகத்தில் தோன்றுவது இது முதன்முறை இல்லை. இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சி நடந்து இன்னமும் முடிவாக நிலையில் இருந்து வருகிறது." - தமிழ் இந்து.

இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சி நடந்து இன்னமும் முடிவாக நிலையில் இருந்து வருகிறது - என்று இவர்கள் காஞ்சி மட கசமுசாக்களைச் சொல்கிறார்களா ? அல்லது நித்தியின் கசமுசாக்கள் இன்னும் நீர்த்துப் போகமல் அதாவது அவை வதந்தி என்ற நிலையை அடையாமல் இருக்கிறது என்று சொல்ல வருகிறார்களா ? ஒன்றும் புரியவில்லை. ஒரு வேளை காஞ்சி மடம் பற்றிச் சொல்ல விரும்பினால் அதை நேரிடையாகச் சொல்லி இருக்க வேண்டியது தானே ? இல்லை நித்தியைத் தான் சொல்கிறார்கள் என்றால் காஞ்சி மடம் பற்றி பொத்திக் கொண்டு இருப்பது ஏன் ? நித்தியாவது காமம் கடந்த சாமியார் என்று பரப்பி திருமணம் ஆனப் பெண்ணுடன் காம லீலைகளில் ஈடுபட்டான் என்ற குற்றச் சாட்டு இருந்தாலும், நித்தியின் மீது கொலைக் குற்றச் சாட்டு எதுவும் பதியப்படாத நிலையில், கொலைக் குற்றச் சாட்டில் வாய்தா வாங்கி, நீதிபதியையே வளைக்க முயன்றார் என்ற குற்றச் சாட்டில் காஞ்சி சுப்புரமணி குப்புறக்கிடப்பதை இதே ரீதியில் கண்டிக்காமல் நித்தி தேர்வை குறைச் சொல்ல இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ? காஞ்சி மடத் தலைவர் விதவையைக் கூட விட்டுவைக்காதவர் என்கிற குற்றச் சாட்டு மக்கள் மனதில் பதிந்திருக்கும் போது அது குறித்து எதுவும் பேசாத இவர்கள் நித்தி பற்றி கட்டுரை எழுதுவதன் உள்நோக்கம் இந்து மத நன்மையா ?

தவிர சட்டமன்றத்தினுள் ஆபாசப் படம் பார்த்தார்கள் என்கிற சர்சைகளில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சிக்கி நாறிப் போய் இருக்கும் போது மதுரை ஆதினத்திற்கு யார் வந்தால் இவர்களுக்கு என்ன ? இந்திரன் ரிஷி பத்தினிகளை மாறுவேடம் கொண்டு புணர்ந்தான் என்பது போன்ற இந்து சமயங்களில் பல்வேறு பாலியல் குற்றச் சாட்டுகள் பண்பாட்டு தொன்மக் கதைகளாக காலம் காலமாக இருந்துவரும் போது நித்தி மட்டுமே முதன் முறை சிக்கி இருப்பது போன்றும் இதை கண்டிக்கும் தொணியில் எழுதுவதற்கு இவர்களுக்கு இருக்கும் அருகதை என்ன ? இந்திரனை இன்னும் தெய்வமாக வழிபடுபவர்களுக்கு நித்தியின் சரசம் தகாத செயலாக இருப்பதாக நினைப்பது முரண்பாடாக இருக்கிறது. இவர்கள் தெய்வ நிலையில் வைத்திருக்கும் இந்திரனே சபலக் கேசாகத்தான் காட்டப்படும் போது தான் சொக்கிப் போய் இருந்த ஒரு நடிகை தனக்கு சேவகம் செய்ய வந்த போது நித்தி உணர்ச்சிவசப்பட்டான்  என்பது என்ன நடக்கக் கூடாதா நிகழ்வா ? 

காரணம் ஒன்று தான், காஞ்சி மடம் பார்பனர் தலைமை எனவே அங்கு எது நடந்தாலும் தற்காக்க வேண்டும், பூசி மெழுக வேண்டும், முடியாவிட்டால் மவுனாமாக இருக்க வேண்டும், நித்தி ஒரு சூத்திர சாமியார், சூத்திரன் தப்பு செய்தால் அவனுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டும், பதவி கொடுக்கக் கூடாது. இதைத் தவிர இவர்கள் வேறு என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை. அப்படியும் இல்லை என்றால் பார்பன மேலான்மை ஓங்கும் மதுரை மீனாட்சிக் கோவிலை ஆதினம் வசம் கொண்டுவரும் பொறுப்பு நித்தியிடம் ஒப்படைக்கப்பட்டதால் ஏற்பட்ட பதை பதைப்பா ? அவன்கிட்ட இருக்கும் பணத்திற்கு செய்தாலும் செய்வான் என்று நினைத்து அஞ்சுகிறார்களோ.

இவர்களுக்கு அக்கரை இருந்தால் ஏற்கனவே வழக்குகளில் சிக்கி இருக்கும் காஞ்சி மடத்தலைவர்களை நித்திக்கு இவர்கள் சொல்லி இருக்கும் பரிந்துரைகளைப் போலவே சொல்லி ஓரம் கட்டிவிட்டு அதன் தலைமைக்கு தேவநாதனை கொண்டுவரலாம், தேவனாதனை இன்னும் குற்றவாளி என்று தீர்பளிக்கப்பட்டது போல் தெரியவில்லை, நித்தி தனக்கு சொன்னது போல் தேவநாதனின் விடியோக்கள் கிறிஸ்துவ மிசனறிகளில் கிராப்பிக்ஸ் வேலை என்று தேவநாதனனுக்கு ஆதரவாக இருக்கலாம், தேவநாதனும் புனிதம் அடைந்துவிடுவான், ஒன்று தான் இடிக்கிறது, காஞ்சி மடத்திற்கு பிரம்மச்சாரிகள் தான் வாரிசாக வரமுடியும். அப்பறம் அப்படி இல்ல்லாமல் இருப்பது வேற. தேவநாதன் தற்போது வாய்ப்புகளின்றி பிரம்மச்சாரியாகத்தான் இருப்பான் கூடவே பிறப்பால் அவர்கள் பாஷையில் பிராமணன், வேறென்ன தகுதி வேண்டும் ? ஒரே கல்லில் இரண்டு மாங்காய், காஞ்சி மடத்தலைவர்கள் மானமிக்கவர்கள் குற்றச் சாட்டுகள் நீர்த்துப் போகும் வரை பதவியில் நீடிக்க மாட்டார்கள் தவிர தேவனாதனின் தவறுகளையும் மறைத்துவிடலாம். செய்வார்களா ?

28 பிப்ரவரி, 2012

'மதராஸ்' உயர்நீதி மன்றம் தந்த அதிர்ச்சி !

நேற்று சன் செய்தியைப் பார்த்து அதிர்ந்தேன், சாலைப் பணியாளர்கள் உடனடியாக வேலைக்கு மீண்டும் அமர்த்தப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் சென்னை உயர் நீதி மன்றத்தின் முகப்பைப் காட்டினார்கள், முகப்பில் ஆங்கிலத்தில் 'Madras High Court' என்றும் 'தமிழில் மதராஸ் உயர் நீதிமன்றம்' என்றும் எழுதப்பட்டு இருந்தது, முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் இருக்கும், கடந்த ஆட்சியில் செம்மொழி மாநாட்டின் போது சிறிய ஐஸ்கிரீம் கடைகளைக் கூட 'பனிக்குழை நிலையம்' என்று மநாகராட்சியில் (மிரட்டிப் ?) பெயர் மாற்றம் செய்த போது, தமிழக அரசும் பொது மக்களும் அன்றாடம் சென்று வரும் ஒரு பொது நீதிமன்றத்தின் முகப்பில் 'மதராஸ்' என்று விட்டு வைத்திருப்பது வியப்பையே அளிக்கிறது, மதராஸை சென்னை என்று மாற்றி 20 ஆண்டுகளாகிறது, அதற்கான ஆணையும் கூட நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்திருக்கும் என்றே நினைக்கிறேன், அதிகார மீறல் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசை விமர்சனம் செய்யத் துணியும் நீதிமன்றங்கள், தங்கள் முகவரி காட்டும் பலகையில் 'மதராசை' விட்டு வைத்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

வெள்ளைக்காரர்களின் சட்டதிட்டங்களை நாம் பின்பற்றுகிறோம் என்பதற்காக இன்னும் அவர்கள் வைத்தப் பெயரையே வைத்திருக்க வேண்டும் என்பதற்கான நியாயங்கள் எதுவும் இல்லை வெறும் வரட்டுப் பிடிவாதமே.


கடந்த ஆட்சியில் 'மதராஸ் உயர்நீதி மன்றம்' என்பதை 'சென்னை உயர்நீதி மன்றம்' என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அரசு ஆணை வெளி இடப்பட்டு இருந்ததாம், ஆனால் இது செயல்படுத்தப்பட்டது போல் தெரியவில்லை, சன் டிவி காரன் தான் பழைய (படத்துடன்) பெயரைக் காட்டுகிறான்னு சரியாகத் தெரியவில்லை. பாரிமுனை, பூக்கடை பக்கம் செல்பவர்கள் பெயர் மாற்றம் நடைபெற்றிருக்கிறதா என்று படம் பிடித்து வந்து உறுதிப் படுத்தினால் நலம், நீதிமன்றம் வளாகம் 'சென்னை உயர்நீதி மன்றம்' என்று பெயர் மாற்றப்படாவிட்டால் கண்டனத்திற்கு உரியது தான், இதற்கு ஆட்சியாளர்களும் நீதிமன்ற நிர்வாகிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ் நாட்டில் தமிழ் பெயர் வைக்க தமிழ் பயன்படவில்லை என்றால் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ அல்லது சீனாவிலோ பயன்படுமா என்ன ?



(சன் தொலைக்காட்சி செய்தியை சற்று தொலைவில் இருந்து படம் எடுத்தேன், வெளிச்சம் காரணமாக சரியாக விழவில்லை)


16 ஆகஸ்ட், 2011

சென்றவார அறுசுவை உணர்வுகள் !

இனிப்பு : எங்க ஊரு நாகைக்குச் சென்று சென்ற வியாழன் அப்படியே (பாலையூர் - எ - பாலூர்) கிராமத்தில் இருக்கும் வயலுக்குச் சென்றிருந்தேன், கிழக்கு கடற்கரைச் சாலை அந்தப் பகுதியில் புதிதாகச் செல்வதால் இருசக்கர வாகனத்தில் சாலையில் கீழே இறங்கி ஒரு கி.மீ குறுகிய பாதையில் வண்டியை ஓட்டினால் போதும் அடைந்துவிடலாம், கிட்டதட்ட ஐந்து ஆறு ஆண்டுகள் ஆகிற்று அப்படிப்பட்ட பச்சைகளைப் பார்க்க. பெரும்பாலும் ஊருக்குச் செல்லும் காலம் மழைக்காலம் அல்லது அறுவடை முடிந்த பிறகு என்பதால் வயல்வெளிகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை. முன்பெல்லாம் விவசாயம் துவங்கி அறுவடை வரை ஊருக்குள் மக்கள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பார்கள், இப்போதெல்லாம் அவ்வாறு பார்க்க முடியவில்லை, வேலைக்கு ஆள் கிடைப்பதே கடினம்.

நகரங்களுக்கு பலர் பெயர்ந்துவிட்டார்கள், சிறுவிவசாயிகளே தங்கள் நிலங்களில் வேலை பார்த்துக் கொண்டு பிற விவசாயிகளுக்கும் செய்து தருகிறார்கள், வேலைக்கு ஆள் கிடைக்காத சூழலில், விவசாயம் பார்க்க முடியாததால் பல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவருகின்றன. கதிர் அறுக்க, நாற்று நட எந்திரங்கள் இருக்கின்றன, ஆனாலும் அவற்றை இயக்க முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டி இருக்கிறது, கிராமங்களில் மாட்டுவண்டிகளையோ, மாடுகளையோ பார்க்க முடியவில்லை, நெல் அறுத்து குவித்து வைத்த வைக்கோல் போர் விலை போகாமல், யாரும் வாங்காமல் அப்படியே தான் கிடக்கிறது. அம்மா காலம் வரையிலும் எங்க வயலில் தட்டுத்தடுமாறி விவசாயம் நடக்கும், அதன் பிறகு என்ன ஆகும் என்று இப்போது தெரியவில்லை, இதையெல்லாம் நினைத்துக் கொண்டு வயலில் இறங்கி நடந்தேன், முன்கூட்டியே அம்மா அங்கு சென்றுவிட்டதால் எதிர்கொண்டார்கள். வயல் வெளி என்ன ஒரு பசுமை, கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு கண் கொள்ளாக் காட்சி. வாய்க்காலுக்கு முதல் மடை என்பதால் வாய்க்காலில் தண்ணீர் வரும் போது தண்ணீர் பாய்ச்ச வசதியான வயல்வெளி தான். சிறுவயதில் படிக்கிற காலத்தில் அங்கு செல்ல விருப்பம் இருக்காது, ஏனென்றால் கொஞ்சம் கொஞ்சம் இறங்கி வேலை செய்யச் சொல்லுவார்கள். பயிர் சுனை பட்டால் கை காலெல்லாம் அரிக்கும், இப்ப பார்க்க குளிர்ச்சியாக இருக்கு, அதுவும் மாலை 5 மணிக்கு மேல் மஞ்சள் வெயிலில் சுற்றிலில் பச்சை வெளிகள்.

அம்மா





களையெடுக்கும் பெண்மணி


புளிப்பு : சென்னையில் நண்பர் வசிக்கும் அபார்ட்மெண்ட் எனப்படும் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றுக்குச் சென்றிருந்தேன், அது ஒரு 7ஜி ரயின்போ காலனி போல் குடியிருப்பு பகுதிகளுக்கு ச-ரி-க-ம-ப-த-நி- என்று ஏழு ஆங்கில எழுத்தில் பெயர் வைத்திருந்தார்கள், அன்றைய நாள் ஞாயிறு குடியிருப்பு வாசிகள் அனைவரும் சேர்ந்து 'நம் குடும்பம்' என்ற பெயரில் இணைந்து கொண்டாடினார்கள், கோலப் போட்டிகளெல்லாம் நடைபெற்றது, கோலங்களில் மயில் கோலம் முதல் பரிசாகவும், கதகளி முகம் இரண்டாம் பரிசாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது, கோலங்களில் பல மயில் கோலங்கள் இருந்தன.

பல மாநில மக்கள் அந்த குடியிருப்பில் வசித்தாலும் தமிழ் கோலத்திற்கு முதல் பரிசு. தமிழக மக்கள் இன்னும் கலை உணர்வோடு தான் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இருப்பிடங்களின் சூழல்களை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள இது போன்ற தனிப்பட்ட விழாக்கள் தேவை, அங்கு வசித்த அனைத்து சிறுவர் சிறுமியர்களையும் மேடை ஏற்றி எதோ அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வைத்து, ஒருவரையும் ஏமாற்றாமல் அனைவருக்கும் பரிசுகளைக் கொடுத்தனர். நல்லா தமிழும் ஆங்கிலமும் தெரிந்த எந்த இருவரும் கூட ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தது கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது, அங்கே வசித்த இந்திக்காரர்கள் அவர்களுக்குள் இந்தியில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரர்கள் தற்போது பேசாமல் விட்ட 'சார் சார்' தமிழகத்தில் வியாதியாகவே பரவி இருக்கிறது.



முதல் பரிசு பெற்றது



இரண்டாம் பரிசு பெற்றது




உப்பு : கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பயணித்தேன், இதுவரை பலமுறை அந்த வழியில் சென்றிருந்தாலும் பகலில் சென்றதில்லை, சோழிங்க நல்லூர் தாண்டி 'இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு கடற்கரைச் சாலை உங்களை இனிதே வரவேற்கிறது' என்ற வரவேற்பு பலகை இருந்தது. இயற்கை எழில் ஒன்றும் அவ்வளவாக ஈர்க்க வில்லை, உப்பளங்கள் இருக்கின்றன, வீட்டுமனைகள் வருவதற்கான கற்கள் நடப்பட்டு இருக்கின்றன, சாலைகளும் நேரானதாகவோ அகலமாகவே இல்லை, சாலை நடுவே தடுப்புகள் இல்லை, அந்த சாலையில் மணிக்கு 60 கிமி மேல் செல்வது பாதுகாப்பற்றது, நாள் தோறும் நடக்கும் விபத்துகளே கண்கூடு. இரவில் எந்த ஒரு போக்குவரத்து விளக்கும் கிடையாது. ஈசிஆர் சாலை எமன் குடியிருக்கும் சாலை தான்.

நான் கண்ட ஒரே இயற்கை எழில் லேசான மழை பெய்ததும் ஏற்பட்ட அழகான வானவில் தான். அதைத் தாண்டி பாண்டிச்சேரி சென்றேன் பாண்டி முதல்வர் இரங்கசாமிக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தநாளாம், 'அழகிரி டைப்' மிதமிஞ்சிய புகழ்ச்சி சுவரொட்டிகள் பாண்டி எங்கும் இரங்கசாமியின் பல்வேறு 'போஸ்களில்' சுவரொட்டிகள் முகம் சுளிக்க வைத்தது, அதில் ஒன்று தெய்வத்திருமகன் போஸ்டரின் நடுவே இரங்கசாமியின் படம் இருப்பது போன்றும் அடிக்கப்பட்டு இருந்தது, மனநலம் குன்றிய நாயகனாகக் காட்டப்பட்ட படத்தில் ரங்கசாமி முகம் ஒட்டுதல், வாழ்த்தா, வதையா ? ஒட்டியவர்களுக்கே வெளிச்சம். டிவிஎஸ் பிப்டியில் வரும் முதல்வருக்கு இவ்வளவு ஆடம்பர போஸ்டர்களா ? அடுப்பொடிகள் வேலைகள் தான், பாவம் வாழ்த்துவதற்கு பதில் வசைபாடி, முகம் சுளிப்போர் மிகுதி, எதுக்கு இத்தனை ஆடம்பரம், தேவையா அட போங்க சார். தமிழகம் - பாண்டியின் போஸ்டர் பண்பாடு ரசிக்க முடியவில்லை. இரங்கசாமிக்கு அடுப்பொடிகளே ஆப்பு வைத்துவிடுவார்கள் போல. பாண்டியைச் சேர்ந்த காரைக்காலில் சுவரொட்டிகள் கண்ணில் படவில்லை.






துவர்ப்பு : சென்ற வெள்ளிக்கிழமை சென்னை மெரினா சாலை வழியாக பயணித்தேன், கண்ணகி சிலை மிடுக்காக நின்று கொண்டிருந்தது, இன்னும் அம்மா விசுவாசிகள் கண்ணில் படவில்லையோ, இல்லை அதற்காகவே அந்தப்பகுதி சிலைகள் ஒட்டுமொத்தமாக அப்புறப்படுத்தப்படுமோ யார் கண்டது. பொதுச் சுவர்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது சென்னையில் கவர்ந்ததில் ஒன்று, அம்மாவுக்கு பிறந்த நாள் வரும் வரையில் அவைகள் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

கடந்த 20 ஆண்டுகளில் நான் பார்த்த வரையில் சென்னையில் மாற்றமே இல்லாத பகுதி பாரிஸ் கார்னர் தான். அங்கே இருக்கும் மொத்த விற்பனைக்கடைகளை சேட்டுகளும் மலையாளிகளும். கொஞ்சம் தெலுங்கர்களும் ஆக்கிரமித்துள்ளனர், அவர்களிடமிருந்து சில்லரை விற்பனைக்காக தமிழர்கள் பொருள்கள் வாங்கி வருகின்றனர். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மின்னனு சாதனங்களின் வாயிலாகவே அந்த இடங்கள் இருக்கின்றன, உலக நாடுகள் சீனப் பொருள்களைத் தவிர்த்தாலும் அவர்களுக்கு இந்தியா குறிப்பாக தமிழகம் 'சிவப்பு' கம்பளம் விரித்து வைத்துக் கொண்டுள்ளது.





காரம் : அந்தப் பகுதியில் அமைந்த சரவண பவனுக்குச் சென்றிருந்தேன், குளிர்சாதன அறையில் உட்கார இடம் கிடைக்கவில்லை. முன்பெல்லாம் சனி / ஞாயிற்றில் தான் உட்கார இடம் கிடைகாது, தற்போதெல்லாம் வெளியே சாப்பிடுவர்கள் மிகுந்துவிட்டார்கள், அல்லது வீட்டுச் சமையல்கள் குறைந்துவிட்டதோ என்று நினைக்க வேண்டி இருக்கிறது. சரவணா ஸ்பெசல் மீல்சாம். என்ன வென்று வாங்கினேன். 'அடப்பாவிகளா .........இவ்வளவு சாப்பிட்டுவிட்டு எப்படி உயிரோடு இருக்கிறீர்கள் ?' என்று நினைக்கத் தோன்றியது. அதில் அஜினமோட்டோ இல்லாத வகைகளே இல்லை, யாரு கேட்கிறார்கள். சுவை சுவை சுவையோ சுவை என்றே அனைத்து உணவு கடைகளிலும் அஜி(ர்)னமோடோ சேர்கப்படுகிறது.

உணவில் உப்பு அளவு, கொழுப்பு அளவு பற்றியாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. 'என்னன்னு தெரியலை சார், நேத்து வரைக்கும் நல்லாதான் இருந்தார், இன்னிக்கு டக்குன்னு போய் சேர்ந்துட்டார்' யாரேனும் சொன்னால் விசாரித்து பாருங்கள், நேற்று அவர் ஏதேனும் புல்மீல்ஸ் கட்டி இருக்கக் கூடும். சென்னையில் அசைவ உணவுக்கடைகள் சைவ உணவு கடைகள் அளவுக்கு பெருகிவிட்டது, முன்பெல்லாம் 'சுத்தமின்மை' (அதாவது அசைவம் நன்றாக தூய்மை செய்து சமைக்கமாட்டார்கள் என்பதாக) காரணமாக வெளியே அசைவம் சாப்பிட மக்கள் தயங்குவார்கள், இப்ப பழகிக் கொண்டார்கள் என்றே நினைக்கிறேன்.

வரும் போது ஏசி பேருந்து பயணம் மிகக் குறைந்த பயணிகள், ஒரு அரைக்கிறுக்கன் செருப்பணியாத தன் காலை யாருமற்ற இருக்கை மீது வைத்திருந்தான். நடத்தினர் சொன்னதும் எடுத்துக் கொண்டான். அவன் அரைக்கிறுக்கன் என்பது அவன் செருப்பே அணிந்து வந்திருக்கவில்லை என்பதால் உறுதிபடுத்திக் கொண்டேன். ஏசி பேருந்தில் செல்பவர்கள் சாதாரணப் பேருந்தில் செல்பவர்களை ஏளனமாகப் பார்ப்பார்களாமே, அவர்கள் அந்த அரைக்கிறுக்கன் கால் வைத்த இடத்தில் கூட உட்கார நேரிடலாம்.


(இந்தப்படத்திற்கு என்ன செய்தியா ? மேலே இருக்கும் படத்தைப் போன்று தான், எந்த மரியாதையும் கிடைப்பதாகத் தெரியவில்லை, 1000 கோடிகளை விழுங்கிவிட்டு மதிப்பற்று கிடக்கிறது)

அன்று மாலை தி.நகர் அஞ்சு மாடி சென்னை சில்க்ஸ் சென்றேன். உள்ளே இரண்டாம் மாடிக்குச் சென்று 'எங்கப்பா டாய்லெட் ?' 'மூனாம் மாடியில் இருக்கு சார்' நாளுக்கு கோடிகளில் விற்பனை ஆகும் கடையில் மூன்றாம் மாடியில் தான் கழிவறையா ? மக்கள் வீட்டை விட்டு வெளியே போனால் ஒண்ணுக்கு ரண்டுக்கு போகவே மாட்டாங்களா ? ஏனிப்படி ? ஐஞ்சு மாடிக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ?. உள்ளே அவசரத்துக்குச் சென்றால் 'வெஸ்டர்ன் டாய்லெட்' ஒண்ணே ஒண்ணு தான், அதிலும் சீட் கிடையாது, அதில உட்கார முடியுமா ? ஒருவழியாக முடித்து வந்தேன். ஏன் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் இவர்கள் வாடிக்கையாளர்களின் பணத்தில் வைத்திருக்கும் குறியின் கவனம் சிறிதேனும் வருபவர்களுக்கு நல்ல கழிவறை ஏற்படுத்தித் தர வைக்க முடியவில்லை. அரசுகளின் கவனமின்மையும் காரணம், வாடிக்கையாளருக்கு தேவையான வசதிகள் இல்லை என்றால் அனுமதிகளை நீக்கலாமே. அப்போது அலறி அடித்து வசதி செய்வார்களோ.




சென்னையில் ஆட்டோக்கள் குறைந்து அந்த இடத்தை மாருதி வேன் போன்ற கூட்டுப் பயண வாகனங்கள் நிறைய ஓடுகின்றன, 8 பேர் வரை பயணம் செய்ய ஏற்ற வகையிலும், 5 கிமிதொலைவு வரை 10 ரூபாய்க்கு அழைத்துச் செல்கிறார்கள். இவை ஓரளவு போக்கு வரத்து நெருக்கத்தை குறைத்து இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

சாலை குண்டு குழிகள், தண்ணீர் இன்மை, மின்சார துண்டிப்பு, கொசுக்கடி இவற்றில் எதையும் பற்றி கவலைப்படாமல் ஆடி வெள்ளி கூழ் ஊற்றும் நிகழ்ச்சி சென்னையில் அங்காங்கே சென்னையின் காலம்காலமாக வாழ்பவர்கள் நடத்திவருகிறார்கள், 'ஆத்தாள கும்புட்டு துண்ணூறு இட்டுனு போ....பாசாயிடுவ' எந்திரன் வசனம் நினைவுக்கு வந்தது.

கசப்பு : ஞாயிற்றுக் கிழமை மதியம் 1:15 விமானம், எல்லாம் முடித்து விமானத்திற்கு செல்லும் முன் காத்திருக்கும் அறைக்குச் சென்றேன், அந்த கூடத்தில் நடுப்பகுதிக்கு சற்று தள்ளி 'ஸ்மோக்கிங் அறைக்கு' எதிரே ஒரு நடுத்தரம் கடந்த பெண் மணி கிடத்தப்பட்டு இருந்தார், அவர் இறந்து விட்டார் என்பது அவரது அசைவற்ற உடலே சொன்னது. அவரது உடலில் இருந்த நகைகளை கழட்டி பாதுக்காப்பிற்காக கணக்கு வைத்துக் கொண்டிருந்தனர் ஒரு கடைநிலை ஊழிய பெண் மணி மூலமாக காவலர்கள், அங்கு நடப்பதைப் பார்த்தால் சென்ற அரைமணிக்குள் தான் அவர் இறந்திருக்கக் கூடும் என்றே தோன்றியது. இலங்கையில் இருந்து தமிழகத்தை சுற்றிப்பார்க்க வந்தவராம், திரும்பப் போகும் முன் இதய வலியால் உயிர் துறந்திருக்கிறார், அவர் தமிழர் , 55 வயது என்று காவலர்களின் உரையாடலில் இருந்து தெர்ந்தது, பெயர் ஊரைக் கூட யாருக்கு அலைபேசி வழியாக தெரிவித்து ஆணை யிட்டுக் கொண்டிருந்தனர், எனக்கு பெயரும் ஊரும் நினைவுக்கு வர இயலவில்லை.

கிட்டதட்ட 1.30 மணி நேரம் அவ்வாரே கிடத்தப்பட்டு இருந்தார், காவல் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தோர் அருகில் நின்று கொண்டிருந்தனர், அங்கு வந்த பயணிகள் ஒருவருக்கும் அந்தப் பகுதியை தாண்டி செல்ல மனம் செல்லவில்லை. இறந்தவர் தெரிந்தவராக இருக்க வாய்ப்பில்லை என்றே தவிர்த்தனர், வழக்கமாக 'புகைப்பிடிக்கும் அறைக்கு' செல்லும் ஒருசிலர் கூட பயத்தின் காரணமாக அங்கு செல்லவில்லை. நான் தொலைவில் இருந்து கூட உடலை படம் எடுக்க விரும்பவில்லை. எதிர்பாராவிதமாக மரண மடைந்த ஒருவரை காவல் துறை முறைப்படியான நடவடிக்கை ('புரோசிஜர்') என்ற பெயரில் அங்கேயே கிடத்தி இருந்தது முகம் சுளிக்க வைக்காவிட்டாலும் வருத்தம் ஏற்படச் செய்யதது, உறவினர்கள் யாரும் அற்ற ஒருவராக அவர் கிடத்தி இருந்தது ஏற்கத்தக்கதே அல்ல, அவர் உடலுக்கு கொஞ்சமேனும் மரியாதைக் கொடுத்து, புரொசிஜர் படி உடனே அவரை அப்புறப்படுத்தாவிட்டாலும் சுற்றிலும் தற்காலிக திரையாவது அமைத்திருக்கலாம்.

அவருக்கும் மரியதை கொடுக்காவிட்டாலும் கூட விமானத்தில் ஏறக்காத்திருந்தவர்களுக்கு ஒருவித அச்சம் இருந்தது ஏனெனில் அவர்களில் பலர் வயதான பெற்றோர்களை பிரிந்து வந்திருக்கக் கூடும், அவர்களை நினைத்தாவது உடலை மறைத்திருக்கலாம். மற்றும் வயதானவர்களே கூட இருக்கக் கூடும். வழக்கமாக விமானத்திற்கு காத்திருக்கும் போது பயணத்தின் போது அசைப்போட்டபடியும், சில நண்பர்களுக்கு அலைபேசிக் கொண்டு இருப்பேன், ஆனால் இந்த முறை 'பாவம் அந்த பெண்மணி, அவரது உயிருக்கு தெரிந்திருக்கிறது நாடுகள் என்பது பெயர்களால் பிரிக்கப்பட்ட ஒரே மண், எங்கு பிரிந்தால் என்ன ?' ஆனால் அருகில் உறவினர்கள் இல்லையே' என்பது தான்.

16 மே, 2011

எண்ணைத் தொட்டியை புறக்கணித்த ஜெ !

ஜெ ஆட்சியின் துவக்கமே, ஜெ தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளாமல் அதன் போக்கிலேயே செல்வதாக அமைந்திருக்கிறது, அதாவது தமிழக அரசின் அமைச்சரவை பழைய ஜார்ஜ் கோட்டையில் தான் செயல்படும் என்கிற ஜெ வின் முடிவு. முன்னதாக அவர் புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்திற்கு காலடி வைக்கம்மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக் கூறத்தக்கது.
po
*****

மேலே எண்ணைத் தொட்டி என்று நான் குறிப்பிட்டது வேறொன்றும் இல்லை, மு.மு.மு.கருணாநிதி (முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி) அவர்களால் கட்டவுட்டாகவும், கட்டி முடிக்கப்பட்டதாகவும் சுமார் 1000 கோடி செலவில் திறக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகம் தான் அது. அது ஏன் எண்ணைத் தொட்டி ?

பண்டைய காலம் தொட்டே தமிழர்களுக்கு என்றே தனிப்பட்ட கட்டிடக் கலையின் வரலாறுகள் உண்டு, மாளிகைகள் காலத்தால் அழிந்துவிட்டாலும், என்றும் அழியாக்காட்சியாக நிற்கும் கல்லணை, மற்றும் கோவில் கோபுரங்கள் எண்ணற்றவை, பவுத்த, சமண விகாரங்கள் அதன் பிறகு எழுந்த சைவ வைணவக் கோவில்கள் அனைத்தும் தமிழகத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் தமிழகக் கட்டிடக் கலையின் காட்சிகள். பாறைகளை சிற்பமாக வடித்து காட்சிக் கூடங்களாக ஆக்கி அமைத்த மாமல்லபுரச் சிற்பக் கலைக் கோவில்கள், பல்வேறு கோட்டைகள் என தமிழகமெங்கும் தமிழகக் கட்டிடக் கலையின் வரலாறுகள் நினைவுச் சின்னங்களாக இருக்க, இவற்றில் ஒன்றைக் கூட நினைவு படுத்தாத மாபெரும் கச்சா எண்ணைத் தொட்டி போன்ற ஒரு கட்டிடத்தை 1000 கோடி செலவில் கட்டத் துவங்கி, திறப்பு நாளுக்குள் முடிவுக்கு வராமல் போக கட் அவுட் வைத்து திறந்து காட்டி, பின்னர் மீண்டும் முறைப்படி திறந்தார் கருணாநிதி.

தமிழக மன்னர்களைப் பற்றிய காவியங்கள் எழுதிக் குவித்த கருணாநிதி, தமிழகத்தின் முதற்சின்னமாக தொலைகாட்சிகளின் அடிக்கடிக்கடிக் காட்ட வேண்டிய தலைமைச் செயலகத்தின் வடிவமைப்பில் சிறுதும் கவனம் செலுத்தாமல் போனதுடன், அதைத் திறக்க விரைவு காட்டியதைத் தவிர்த்து வேறெந்த அக்கரையும் இருந்திருக்கவில்லை.

பெங்களூரின் தோற்றப் பெருமையே அதில் அமைந்திருக்கும் 'விதான் சவுதா' எனப்படும் தலைமைச் செயலகத்தின் தோற்றப் பொலிவுதான், உண்மையாகச் சொல்லுங்கள் கருணாநிதி கட்டிய எண்ணைத் தொட்டி அப்படியான ஒரு தோற்றப் பொலிவை சென்னைக்குத் தந்திருக்கிறதா ?

1000 கோடிகளை ஏப்பம் விட்டு விழுங்கி அமர்ந்திருக்கும் புதிய தலைமைச் செயலகம் திமுக ஆட்சியின் அவலாமாகவும் நினைவுச் சின்னமுமாக இருப்பதைத் தவிர்த்து வேறொன்றும் உருப்படியாகச் செய்ய முடியாதா ? முடியும், உள்ளமைப்புக் கட்டுமானத்தில் மாறுதல் செய்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடலாம்.


கருணாநிதி இந்த எண்ணைத் தொட்டியைக் கட்டும் முன் எதிர்கட்சிகளை கலந்தாலோசிக்கவில்லை என்பதே எதிர்கட்சிகளின் குற்றச் சாட்டு, அதனைச் சாக்கிட்டே ஜெவும் புறக்கணித்துள்ளார், மற்றபடி ஜெவின் ஈகோ அதாவது கருணாநிதி கட்டியதில் தான் அமரவிரும்பவில்லை என்பதும் அடங்கும்.

1000 கோடிகளை ஏப்பம் விட்டு விழுங்கி இருக்கும் தலைமைச் செயலகம் பற்றி எதுவும் கருத்து தெரிவிக்காத நக்கீரன், பழைய தலைமைச் செயலகம் புதுப்பிக்கப்படுவதற்கு 50 கோடி செலவாகி வருவதாகக் கட்டுரை எழுதியுள்ளது. 1000த் தில் 50 கோடி என்பது 5 விழுக்காடு தானே. 1000 கோடி புதிய தலைமைச் செயலகம் ஈராண்டுக்கு மட்டுமே செயல்பட்டது, அடுத்து 5 ஆண்டுக்கு செயல்படும் பழைய தலைமைச் செயலகத்தில் 50 கோடி செலவு என்பது ஒப்பிடுகையில் பெரிய நட்டமில்லை :)

நான் ஜெவின் செயலை ஞாயப்படுத்தவில்லை, 'நான் தான் திறந்தேன்' வராலாற்றை எழுதிக் கொள்பவர்களின் தான் தோன்றித்தனத்தையும் வரலாறுகள் தானாகவே எழுதிக் கொள்கின்றன என்பதைக் குறிக்கவே இதனை எழுதியுள்ளேன், மற்றபடி கருணாநிதியின் நினைவு தடங்களை ஜெ அழிப்பதும், ஜெவின் நினைவுத்தடங்களை கருணாநிதி அழிப்பதும் ஆட்சி மாற்றத்தின் போது நடப்பவைதான், பாவம் தமிழக பேருந்து ஊழியர்கள், எத்தனை பேருந்துகளின் 'நாம் என்றால் உதடு ஒட்டும், நான் என்றால் உதடு ஒட்டாது' என்கிற கருணாநிதியின் பொன்மொழியை இரவோடு இரவாக அழிக்க கடினமாக உழைத்தார்களோ !

*******


30 நவம்பர், 2010

சென்னை அருகே ஒரு போலி சுங்கச் சாவடி !

மகளின் பள்ளி விடுமுறையை அடுத்து மகனையும் மகளையும் தமிழகத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டமாக ஒருவார காலம் சென்று வந்தேன். மழைகாலம், எல்லோரையும் பார்த்துவருவது இயலாத செயல், ஒருவார காலமே இடைவெளி என்பதால் நண்பர்களிடம் சொல்லிக் கொள்ளவில்லை. சென்னை சென்றது ஓடபோன் இணைப்புப் பெற்று கூகுள் பஸ்ஸில் அறிவித்திருந்தேன். அதைப் பார்த்து அழைத்தவர்கள் கேபிள், அப்துல்லா, லயன் சுதாகர் (பித்தனின் வாக்கு), இவர்களுடன் கேஆர்பி செந்திலையும் சந்திக்க முடிந்தது.
கேஆர்பி செந்தில் மற்றும் கேபிள் சங்கர்
பித்தன் வாக்கு சுதாகர், அப்துல்லா
அப்துல்லா மற்றும் செங்கதிர்

20 ஆம் தேதி சென்னைச் சென்றேன், 22 ஆம் தேதி சென்னையில் சிறு வேலை இருந்ததால் சென்னையில் 22 ஆம் தேதி வரை தங்கினேன். சிங்கையில் இருந்து சென்னைச் செல்லும் பயணிகளில் 90 விழுக்காடு தமிழர்கள், ஆனாலும் ஏர் இந்திய விமான சேவையின் அறிவிப்புகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் வருகிறது. இறுக்கையில் டிவி வைத்திருக்கிறார்கள், மருந்துக்கு ஒரு தமிழ் படம் கூடப் போடவில்லை. இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதில் என்ன ஒரு கொல வெறியோ. இந்தி ஒழிகன்னு விமானத்தின் நடுப்பகுதிக்கு வந்து கத்தனும் போல் இருந்தது. அவனுங்களுக்கு தமிழ் தெரியாதேன்னு விட்டுவிட்டேன். வழக்கம் போல் பாட்டிகளே விமானப் பணிப் பெண்ணாக வந்தார்கள். உலகிலேயே ரிடையர்ட் வயது விமானப் பணிப் பெண்ணை ஏர் இந்தியா சேவையில் தான் பார்க்க முடியும். திரும்பும் போதும் அதே கதைதான். இந்தியாவிற்குச் செல்லும் விமானங்களில் கட்டுப்படி கட்டண (பட்ஜட்) சேவை இல்லாத பொது விமான சேவையில் மிகவும் மட்டமான சேவைக்கு பதக்கம் கொடுத்தால் ஏர் இந்தியாவுக்குக் கொடுக்க நான் வாக்களிப்பேன். விமானங்களில் பார்க்க முடியாத தமிழ் விமான நிலையத்தில் பார்க்க முடிந்தது, அறிவிப்புகள் தமிழில் இருந்தன. சென்னை செல்லும் பிற நாடுகளின் விமானங்கள் தமிழில் அறிவிப்புகள் செய்யும் போது ஏர் இந்தியா விமானத்திற்கு மட்டும் என்ன எழவு நேர்ந்தது ?

*****

தமிழக பயணத்தின் ஊடாக பிறந்த ஊருக்குச் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு, மதுரையில் டிபிசிடி மற்றும் சீனா ஐயா அழைப்பின் பேரில் மதுரைக்குச் சென்று வந்தேன். மழை மிகுதியாக இருந்ததால் ஏற்கனவே சந்தித்தவர்கள் தவிர்த்து யாரையும் அழைத்து தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 24 ஆம் தேதி பின்னிரவில் பேருந்தில் ஏறி தஞ்சை சென்று அங்கிருந்து புதுக்கோட்டை வழி மதுரையை அடைந்தேன். காலை 6 மணி ஆகி இருந்தது. மாட்டுத் தாவணி பேருந்து நிலையை எதிரே உள்ள விடுதிகளில் ஏற்கனவே தங்கி இருந்து பட்டதால் அங்கு தங்க விருப்பம் இன்றி வேறுறொரு விடுதி முகவரியைக் கேட்டு அங்கு சென்றேன், அன்று மங்கல நாளாம் விடுதிகள் அனைத்தும் அறைகள் இல்லை என்று கை விரித்தன. அப்பறம் அங்கு டிபிசிடி வந்து வேறொரு விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கும் இல்லை, அறை இல்லை என்றவரிடம் அண்ணனை எழுப்பிவிடுவேன் என்று டிபிசிடி மிரட்டிப் பார்த்தார். அண்ணனுக்கு அங்கு மதிப்பு இல்லை, திரும்பி எதிரே இருந்த மற்றொரு விடுதியில் இடம் இருந்தது, 300 ரூபாய் என்றார்கள், பணத்தை முன்பணமுமாகச் சேர்த்து 600 கொடுத்துவிட்டு அறைக்கு சென்றால் அரசு மருத்துவ மனையின் ஒரு அறையில் படுக்கைப் போட்டது போல் இருந்தது, பினாயல் வாடை போதாக் குறைக்கு பச்சை நிறத்தில் படுக்கை. எந்த வசதியும் இல்லை, 300க்கு இவ்வளவு தான், ஆனாலும் அறை கிடைக்காத சூழலில் ? அங்கே விட்டுச் சென்ற டிபிசிடி 10 நிமிடத்தில் அழைத்தார். அண்ணே இங்கு சாரதா இராஜனில் டிலக்ஸ் ரூம் 2,500 டபுள் ரூம் 1,700 என்றார். 1,700 க்கு உள்ளதை பேசி முடித்துவிடு என்றேன், கீழே வந்து அறையைக் காலி செய்வதாகச் சொல்ல, 300ம் அம்பேல்.
சீனா ஐயா
ஜாலி ஜம்பர்
தருமி ஐயா
டிபிசிடி
கோவியார் என்கிற நான்

சாரதா இராஜனில் அறையை எடுத்துவிட்டு சீனா மற்றும் தருமி ஐயாவை அழைத்து வருகையைச் சொன்னேன். 30 நிமிடத்தில் காலை 9.30 மணி அளவில் சீனா ஐயா வந்தார். அவருடன் காலை உணவு எடுத்துவிட்டு பேசிக் கொண்டு இருந்தோம், பிறகு தருமி ஐயா வந்தார், மதிய உணவு நேரம் ஆகி இருந்தது, அருகில் இருந்த மீனாட்சி பவனில் உணவு அருந்தி சிறிது ஓய்வு எடுத்துவிட்டு மாலை 3:30 மணிக்கு தருமி ஐயா விடைபெற்றார், பிறகு வீட்டுக்கு உணவு அருந்த சென்ற சீனா ஐயா குட்டித் தூக்கம் போட்டுவிட்டு மாலை 5 மணிக்கு வந்தார், பிறகு ஜாலி ஜம்பர் வந்தார், பேசினோம்... பேசினோம் மாலை 6 ஆகி இருந்தது, பிறகு டிபிசிடி திரும்பவும் வந்து மூவருடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு நேரம் ஆகவே மாலை 7 மணிக்கு அறையை காலி செய்து அனைவரிடம் விடை பெற்று பிறந்த ஊருக்குத் திரும்பினேன் வந்து சேரும் போது இரவு 3 மணி ஆகி இருந்தது. மதுரையில் பிற பதிவர்களையும் சந்திக்க ஆவல் இருந்தாலும், அன்று வியாழன் வேலை நாள், நல்ல மழை என்பதால் அழைத்த நண்பர்களை மட்டும் பார்த்துத் திரும்பினேன்.

*********

போலி சுங்கச் சாவடி (Poli-Toll)


தமிழகத்தில் சாலை வசதிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளது, 120 கிமீ விரைவில் வாகனங்கள் பயணித்தன. இது போன்ற விரைவு சாலைகளை வெளிநாடுகளில் மட்டுமே முன்பு பார்க்க முடியும்,
வாஜ்பாய் அரசு துவங்கிய சாலை நல்ல திட்டம், செயல்படுத்திய அரசுகளை பாராட்டவேண்டும். ஆனாலும் அரசு ஆதரவுகளோடு விரைவு சாலைகளில் தில்லுமுல்லு நடக்கின்றன, புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தேன், நண்பருடைய கார் தான். மூன்று நண்பர்களாக பாண்டியில் இருந்து சென்னைக்கு பயணித்தோம், முன்னதாக இருவர் ஏற்கனவே சென்னையில் இருந்து புதுவைக்கு அதே காரில் வந்திருந்தனர், திரும்பும் போது என்னையும் அழைத்துச் சென்றனர். திண்டிவனத்திற்கும் மதுராந்தகத்திற்கு இடையே ஒரு டோல் கேட். நண்பர் விவரம் அறிந்தவர் என்பதால் அந்த டோலில் நிற்காமல் போனால் ஒண்ணும் கண்டு கொள்ள மாட்டார்கள், காரணம் ஒரு எம் எல் ஏ தான் தன்னுடைய ஆட்களைப் போட்டு டோல் நடத்திவருகிறார், அந்த இடத்தில் முன்பு டோல் இருந்தது பிறகு வேறொரு இடத்தில் செங்கல்பட்டு தாண்டி சென்னையில் நுழையும் முன்பாக மாற்றிக் கொண்டு சென்றுவிட்டார்கள், ஆளும் கட்சியின் எம் எல் ஏ நேரடியாக இந்த டோலை நடத்துவதால் அரசுகளின் ஆதரவோடு பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றார். திண்டிவனம் மார்க்கமாக ஒரு நாளைக்கு சென்னைக்குச் செல்லும் தனியார் வாகனங்கள் குறைந்தது 10,000 என்றால் டோல் கட்டணம் 20 வைத்துக் கொண்டாலும் நாள் ஒன்றுக்கு 2 லட்ச ரூபாய் கிடைக்கும், 10 பேருக்கு யூனிபார்ம் போட்டு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு மாத வருமானம் 60 லட்சம். 10 பேருக்கு நபர் ஒன்றுக்கு 5 ஆயிரம் சம்பளம் கொடுத்தாலும் மீதம் 59+ லட்சம் பகல் கொள்ளையாக நடக்கிறது. நண்பர் காவல் துறையில் இருந்ததால் அவருக்கு இது போலி டோல் என்பது தெரியும், அவருக்கு மட்டுமல்ல, அந்த வழியாகச் செல்லும் அரசு பேருந்துகளுக்கும், நாள் தோறும் சென்று வருபவர்களுக்கும் தெரியும், அவர்களும் இந்த ஏமாற்றுக் கூத்து தெரிவதால் சுங்கம் செலுத்துவதில்லை. நாங்கள் காரை அங்கு நிறுத்தவும் இல்லை, அவர்களும் எங்களை துறத்திப் பிடிக்கவும் இல்லை.

*****

தமிழகம் எங்கும் நல்ல மழை பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுராந்தகம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது.

(எனது நண்பர்கள் இராம் என்கிற இராமநாதன் மற்றும் ஜெ.கண்ணன்)

சென்னையில் முதன்மையான சாலைகள் தவிர்த்து தெருக்களில் குண்டும் குழியும், சேறுமாக நிற்கிறது. சிங்காரச் சென்னை மழைகாலத்தில் அசிக்காரச் சென்னையாக நிற்கிறது. முழுவதும் சுரங்க இரயில் பாதைகளைப் போடலாம், மெட்ரோ ரயில் திட்டம் அவ்வளவாக பயனளிக்குமா என்று தெரியவில்லை. சென்னை மக்கள் தொகைக்கு மெட்ரோ இரயிலெல்லாம் போதாது. வெளிநாடுகளில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டிய வசதிகள் என்பதை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள். இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தேவைப்படும் வசதியைத்தான் ஏற்படுத்தித் தருகிறார்கள் இரண்டாம் வரிசை அலைக்கற்றை ஊழல் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியாம். இதில் எத்தனையோ நல்ல திட்டங்களைப் போட்டிருக்கலாம், கிடைக்கும் சில ஆயிரம் கோடி கையூட்டுகளுக்காக அரசு வருமானம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அம்பேல்.


***

நெருங்கிய பதிவர் நண்பர்களின் அலைபேசி எண்கள் கைவசம் இருந்தும் தொடர்பு கொள்ள இயலவில்லை. சென்று பார்க்க இயலாத கடுமழைச் சூழலில் அழைத்துப் பேசி பிறகு பார்க்காமல் திரும்பவும் மனதில்லை என்பதால் தவிர்த்தேன். மன்னிக்கவும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்