பின்பற்றுபவர்கள்

தகவல் தொழில் நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல் தொழில் நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 செப்டம்பர், 2016

வலைப்பதிவுகள் குறைந்து வருவது ஏன் ?

வலைப்பதிவுகள் வளர்ச்சி குறைந்ததற்கு முகநூல் மற்றும் வாட்ஸப் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி என்பது மேம்போக்கான கருத்து மட்டுமே

உண்மையில் மொபைல் இயங்குதளம் வந்தபிறகு ஒவ்வொருவரின் மடிக்கணிணி மற்றும் மேசை கணிணி பயன்பாடு குறைந்துவிட்டது, என்னேரமும் மொபைல் மற்றும் ஆப்சுகள் கையில் இருப்பதால் முகநூல் மற்றும் வாட்ஸப் பயன்பாடுகள் எளிதானது, பொதுவாகவே நாம எல்லோருமே சோம்பேரிகளே, எது வசதியோ, எளிதானதோ அதைத்தான் பயன்படுத்துவோம்

வலைப்பதில் எழுத மொபைல் பயன்படுத்துவதும் அதன் ஒருவிரல் தட்டச்சும் போதுமானதாக இல்லை, ஒரு வலை இடுகை எழுத 5-10 நிமிடம் பிடிக்கும், ஒற்றைவிரலால் அதை தட்டச்சுவது அயற்சி (boring) ஏற்படுத்தும், இந்த காரணங்களினால் வலைப்பதிவில் எழுதுவது வதைதான்

மற்றபடி முகநூல் வலைப்பதிவுகளுக்கு ஆப்பு வைக்கவில்லை, வைத்தது ஆப்பிள் மற்றும் ஆண்டராய்ட் செயலிகளே, கூடவே நம் சோம்பேறித்தனமும், தற்போது வலைப்பதிவில் எழுவதை சூழல் என்னும் காரணி பங்குவகிக்கிறது, முதலில் விசைப்பலகையுடன் கூடிய கணிணி மற்றும் ஒரு இடத்தில் அமர்வதற்காக நேரம் ஒதுக்குவது, இதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது

வலைப்பதிவுகள் மொபைல் ஆப்சுகளால் எளிமைபடுத்தபட்டால் மீண்டும் எழும், பிரபலங்களைத்தவிர என்னதான் எழுதினாலும் வலைப்பதிவின் வீச்சுகளை முகநூல் தந்துவிடாது

வலைபதிவுகள் திரட்டிகள் ஆப்சுகளுக்கு மாறி சரிசெய்து கொண்டால் வலைபதிவுகள் வளர்ச்சியுறும், இல்லை என்றால் ஜெமோ சொன்னது போல் வலைப்பதிவர்கள் வெறும் புற்றீசல்கள் தான் அவர்களால் தொடர்ந்து எழுத முடியாது என்ற கூற்று உண்மையாகிவிடும், நாம எழுத தற்போதைய கட்டுப்பாட்டில் முதன்மையானது மொபைல் தொழில் நுட்பமே

வலை எழுத்தை கைவிட்ட பின் தலைக்கு பின்னால் இருந்த ஒளிவட்டங்கள் மங்கி வருவதை பிரபலபதிவர்கள் உணர்ந்துவருகிறார்கள்,

உண்மை தானே ?

இதை ஒருவிரலால் தட்டச்சவே தாவு தீர்ந்துவிட்டது, இந்த அளவு தட்டச்ச விசைபலகையில் ஐந்து நிமிடம் என்றால் இதை மொபைலில் நான் 25 நிமிடம் தட்டச்சினேன் :(

இன்னமும் வலைப்பதிவில் எழுதுபவர்களில் 90 விழுக்காட்டினர் தங்கள் பதிவுகளை விசைப்பலகை வழியாக தட்டச்சிப் போடுவதினால் தான் அவர்களால் தொடர முடிகிறது. விசைப்பலகையை பயன் குறைந்து பற்பயன் (ஸ்மார்ட் ஃபோன்) பேசிக்கு அனைவருமே மாறிவிட்டால் நீண்ட பதிவுகளை எழுதுவது இயலாததாக ஆகிவிடும், தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

*****

பழைய வலைப்பதிவர்கள் எழுதுவதற்கு ஆர்வமாக உள்ளனர், ஆனால் எழுதும் சூழல் மாறிவிட்டதால், இரண்டு வரி டிவிட்டர், கூகுள் + மற்றும் முகநூல்களில் படங்கள் மற்றும் ஐந்துவரிகளுக்கு மிகாமல் இரண்டு மார்க் கேள்விக்கான விடைகள் போன்று சுருக்கிக் கொண்டனர், நான் வலைபதிவில் எழுதவில்லை ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் 10K டிவிட்டுகளை எழுதிவந்துள்ளேன். நான் மடிக்கணிணியை தொட்டே இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

வலைப்பதிவு திரட்டிகள் போன்று முகநூல் பதிவு திரட்டிகள் வந்தால் தமிழ் சமூக எழுத்து ஆர்வலர்களை ஒன்று திரட்ட முடியும், அப்படி இருந்தாலும் நீளமான கட்டுரைகளை கண்டிப்பாக மொபைலில் தட்டச்ச முடியாது.

வலைப்பதிவை இன்னார் தான் படிக்க வேண்டும் என்று மறைக்க முடியாது. வலைப்பதிவு கட்டற்ற ஊடகம், முகநூல், கூகுள் + இவற்றிற்கு மாற்றாக வரமுடியாது, தொழில் நுட்பங்கள் நம் வசிதிக்காக மாறிக் கொண்டே இருக்கும், ஒருவிரலால் தட்டச்ச முடிவதில்லை என்ற சூழல் வரும் போது அதற்கும் மாற்றுவரும், நம் சோம்பேறித்தனத்தை கைவிட்டால் வலைப்பதிவில் நின்று ஆடலாம், ஏனெனில் வலைப்பதிவுகள் போன்று முகநூல் பலதரப்பு நண்பர்களை பெற்றுத் தராது.


8 ஆகஸ்ட், 2012

யுனிக்ஸ் மற்றும் விண்டோஸின் மதங்கள் !


இன்றைக்கு பரவலாக இருக்கும் ஆப்ரேட்டிங்க் சிஸ்டம் (OS) எனச் சொல்லப்படும் இயங்கு தள மென் பொருள்கள் இவை இரண்டு தான். இவை வளர்ந்தவிதம் பற்றி எளிமையாக விளக்க ஆப்ரகாமிய மற்றும் இந்திய மதங்களை ஒப்பிட்டு விளக்கலாம், விண்டோஸ் இயங்கு தள மென் பொருள் ஆப்ரகாமிய மதங்களின் வளர்ச்சியைப் போன்றது அதாவது MS-DOS தான் ஆப்ரகாம், அதிலிருந்து பழைய விண்டோஸ் 3.1 வெர்சன், பின்னர் 3.2, 95, 98, 98SE, Me, 2000, XP, Win 7 மற்றும் தற்போதைய Windows 8 வரை ஒற்றையாக பரிணாமம் கண்டவை. அதே போன்று Unix இந்தியாவின் துவக்க மதம் , பின்னர் சமணம், பவுத்தம், சாக்கியம், சைவம், வைணவம் என்று பல பரிணாமங்களைக் கொண்டது போன்று BSD, Novel, Solaris, Linux, Red-hat Linuz, HpUX, Mac, Ubundu என்று தனித் தனியாக ஒன்றிலிருந்து கிளைந்து 100க் கணக்கான யுனிக்ஸ் வகை இயங்கு தளங்கள் தனித்தனியாக வளச்சி கண்டன. யுனிக்ஸ் வகை பரிணாமங்களில் இந்திய சமய அடிப்படையில் புதிய மதம் ஏற்படவும், புதிய சாமி(யார்)கள் ஏற்படவும் நிறைய வாய்ப்புகள்  உள்ளன என்பது போல் யுனிக்ஸ் அதன் அடிப்படையைச் சார்ந்து  நீங்களும் உங்களுக்கு தேவையானபடி யுனிக்ஸை வடிவமைத்துக் கொள்ளலாம், அப்படித்தான் லினெக்ஸ், மேக், உபுண்டு போன்றவை தனித்தனியாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. 

விண்டோஸ் வளர்ச்சி விகிதம் இதற்கு மாறாக முன்பு இருந்த பழைய விண்டோக்களை புறக்கணிக்கும் படி வெளிப்படையாகவே கூறி புதிய வடிவத்தைப் பற்றி பேச வைக்கும், இருந்தாலும் XP அளவுக்கு, Win 7 அல்லது Vista வைப்பிடிக்க வில்லை என்று கூறி XP யிலேயே தொடர்வார்கள் உண்டு. Win 7 வைப் பொறுத்த அளவில் அதனால் XP ஐ புறக்கணிக்க முடியாது, ஏனெனில் அதன் பரிணாமமாக வளர்ந்தவை தான் Win 7. இதைவைத்து ஆப்ரகாமிய மதங்கள் அதாவது மைக்ரோ சாப்ட் மென்பொருளைப் போல் புகழ்பெற்றுள்ளன என்று சொல்லவரவில்லை, அப்படி ஒப்பிடப் போனால் மைக்ரோசாப்ட் இயங்குதளம் உறுதியான கட்டுமானம் கொண்டவை அல்ல போதிய பாதுகாப்பற்றது என்ற நிலையில் பெரிய நிறுவனங்களுக்கும், மென் பொருள் விலை தொடர்பில் பணம் இல்லாதவர்களாலும் வாங்க முடியாத நிலையில் இருக்கின்றது என்பதையும் ஒப்பிட வேண்டும். குறிப்பாக யுனிக்ஸ் தனிப்பட்ட நபரின் கண்டுபிடிப்பு அல்ல, அவை குழுவாக உருவாக்கிப் பின்னர் பல பரிணாமங்களில் வளர்ந்து சென்றவை, மைக்ரோ சாப்ட் ? ஆப்ரகாமைப் படைத்த ஜெஹோவா / அல்லாவைப் போல் (அல்லாவை ஜெஹோவாவிற்கு இணைவைக்கலாமா ? இஸ்லாமிய அன்பர்கள் விளக்கினால் ஏற்றுக் கொள்கிறேன்) பில்கேட்ஸ் ஒருவரால் உருவாகி வளர்ந்தது. இவை போன்ற காரணங்களால் யுனிக்ஸ் மற்றும் விண்டோஸ் முறையேயான ஒப்பிடுகளை செய்துள்ளேன். சரி அதைவிடுவோம், 

**********

கணிணிகளைப் பொருத்த அளவில் அதன் ப்ராசசர் (Intel, AMD உள்ளிட்ட CPU or Processor) எனப்படும் கணிணி சில்லு தான் முதன்மையானவை,  இதனுடன் நேரடி தொடர்பில் இருக்கும் கணிணி மொழியை Machine Languageஅல்லது Binary Language என்று சொல்லுவார்கள், Machine 
Language புரோக்கிராம் வடிவத்திற்கு கடினமானவை என்பதால் இயங்கு தள மென் பொருள் புரோகிராம் (VB, C, Java)  மொழிகள் மூலம் எழுதப்பட்ட அப்ளிகேசன் எனப்படும் பயனீட்டு மென்பொருள்களை அமைத்து அதனை Kernel (Core OS) எனப்படும் தொடர்பு அமைப்பில் தொடர்பு கொள்ள Kernel அதனை மெசின் லாங்க்வேஜிற்கு மாற்றி கணிணி சில்லுடன் தொடர்பு கொண்டு பேச நமக்கு தகவல்கள் கிடைக்கின்றன.


இந்த Kernel வடிவமைப்பில் இருந்து தான் UNIX and Windows மாறுபடுகின்றன, ஒவ்வென்றும் தமக்கேற்ற Kernel அமைத்து அதன் பிறகு User Interface எனப்படும் பயனீட்டாளர் தொடர்பு முகப்பு மென்பெருளை அமைக்கின்றன, User Interface இதைத்தான் ஆப்ரேட்டிங்க் சிஸ்டம் அல்லது இயங்குதளம் என்கிறோம், மைக்ரோசாப்ட் விண்டோஸ்களில் என்ன பிரச்சனை என்றால் வாங்குபவருக்கு பயன்படுகிறதோ இல்லையோ Buffet உணவு போல் எல்லாவித அப்ளிகேசன்களையும் சேர்த்தே தருவார்கள், பயன் இருக்கிறதோ இல்லையே பல மென்பொருள்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். 

இதற்கு மாற்றாக யுனிக்ஸ் பயனீட்டாளர் எது தேவையோ அதை மட்டும் தேவையின் போது பயன்படுத்தும்படி அமைத்துக் கொள்ளலாம், அதனால் தான் யுனிக்ஸ் பலரால் பலவடிவங்களில் பல பயனீடுகளுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு சந்தையில் கிடைக்கிறது, ஆனாலும் அடிப்படையில் அவற்றின் செயலாக்கம் ஒன்று தான். உதாரணத்திற்கு ஆப்பிள் கணிணி Mac மென் பொருளில் இயங்குகிறது, இதுவும் யுனிக்ஸ் வகை தான், ஒரு ஆப்பிள் கணிணியில் பயனீடு என்ற வகையில் கிராபிக்ஸ் அப்ளிகேசன் மற்றும் இணைய உலவி மற்றும் எழுதி (வேர்ட் ப்ராசசர்) இவற்றை மட்டுமே வைத்து விற்பனைக்கு அனுப்புவார்கள், வேறு எதாவது குறிப்பாக மைக்ரோசாப்ட் ஆபிஸ் போன்றவை நிறுவத் தேவையாக இருந்தால் அதனை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம். இதுபோல் மற்ற யுனிக்ஸ் இயங்குதளங்களான Solaris, HpUX மற்றும் Redhat Linux and Ubundu போன்றவை பயனீட்டாளரின் பயனுக்கு ஏற்ற வகையில் அதன் Graphical User Interface எனப்படும் முகப்புகளும், அப்ளிகேசன்களும் அமைக்கப்பட்டு இருக்கும். அதாவது உணவகங்களில் எல்லாமே இருக்கும், நமக்கு தேவையானதும் இருக்கும் அது தவிர அவர்கள் Value Meals என்று சிறப்பு வகை உணவுகளும் இருக்கும், நமக்கு தேவையானதை, நமக்கு பயனானதை நாம் வாங்கிக் கொள்ளலாம். அது போன்றதே யுனிக்ஸ் வகை இயங்கு தளங்கள்.

Server எனப்படும் வழங்கிச் சேவைகளில் 2000 ஆண்டு வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் ஆதிக்கம் செலுத்த இயலவில்லை, அதற்கு முன்பு சிறிய அளவில் Win NT 4 உருவாக்கி இருந்தாலும் அதன் செயல்பாடுகள் சிறப்பாகவும் இல்லை, தவிர எப்போது நீல திரையைக் காட்டும் என்றே தெரியாத நிலையில் Window Server களை உருவாக்கிவதில் மைக்ரோசாப்ட் பின்னடைந்திருந்தது. Windows Server 2000 முதன் முறையாக பல குறைபாடுகளை நீக்கி வெளியிட்டார்கள். அதற்கு முன்பு மைக்ரோசாப்டின் விற்பனை உத்தி மிகவும் அபாரமானது, யுனிக்ஸ் ஒரு கணிணியில் நிறுவ ஓரளவு யுனிக்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டிய நிலையில் திருட்டு சீடி சீரியல் எண்ணுடன் (Pirated Windows CD with Serial No) கிடைத்தால் கணிணி பற்றிய குறைந்த அறிவுள்ளவரே விண்டோஸ் இயங்குதளத்தை கணிணியில் பொருத்திக் கொள்ள முடியும் என்ற நிலையில் காப்பிரைட்டுகள் பற்றி அதிகம் கவலைப்படாமல் தாரளமாக மைக்ரோசாப்ட் நடந்து கொள்ள Windows 98 SE Desktop user பயன்பாடு என்ற அளவில் தனிப்பட்டவர்கள் பயன்படுத்தும் 90 விழுக்காடு கணிணிகளில் நிறைய பயனீட்டாளர்கள் மைக்ரோசாப்ட் அடிக்டட் என்ற நிலைக்கு மாற மைக்ரோசாப்ட் கணிணி மென்பொருள் மற்றும் இயங்குதள உலகில் ஆழமாக கால் பதித்து அடுத்த XP உள்ளிட்ட வர்சன்களில் காப்பிரைட் ஆன்லைன் ஆக்டிவேசன் உள்ளிட்டவற்றை செயல்படுத்த, பயனீட்டாளர்கள் ஏற்கனவே விண்டோஸ் மட்டுமே பயன்படுத்திய நிலையில் அதனை வாங்கத் துவங்கினார்கள். இருந்தாலும் கார்ப்ரேட் வழங்கி (Server) சேவை மைக்ரோசாப்டிற்கு கைகொடுக்கவில்லை. ஆனால் பெரும்பாலன கார்ப்ரேட்டுகளின் டெஸ்க்டாப் விண்டோஸ் இயங்கு தளமாக இருக்கும் வண்ணம் Unix Server தொடர்பு மென்பொருளையும் அவற்றிற்கான Protocol எனப்படும் அடிப்படை இணைப்புகளையும் இணைத்திருந்ததே மைக்ரோசாப்டின் சிறப்பான் வியாபார உத்தி.

வழங்கி சேவை இயங்குதளங்களை உருவாக்குவதும் அதனை பிழைகள் இன்றி இயக்குவதும் மைக்ரோசாப்டின் அரைகூவல் என்ற நிலையில் Windows Server 2000 க்கு பிறகு மேம்பட்ட வர்சனாக Windows Server 2003 ஐ உருவாக்கியது, அதுவரை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் வழங்கி சேவைகளுக்கு யுனிக்ஸ் வழங்கியைத் தான் பயன்படுத்தி வந்தது, பிறகு .Net Frame எனப்படும் புதிய தொழில் நுட்பத்துடன் வழங்கி சேவைகளை Windows Server 2003 புகுத்த மைக்ரோசாப்டின் வழங்கி சேவைகளை கார்ப்ரேட் நிறுவனங்கள் நுகரத் துவங்கியது, அதற்கு முன்பே வழங்கி சேவைகளின் RFC Std எனப்படும் பரிந்துரைகள், வழிகாட்டல் ஆகியவற்றுடன் யுனிக்ஸ் சேவைகள் திறம்பட செயல்பட அவற்றின் மாதிரிகளை மைக்ரோ சாப்ட் விண்டோஸ் வழங்கிகளில் உருவாக்குவதி மைக்ரோசாப்டிற்கு எளிதாக ஆகியது.

மைக்ரோசாப்ட் எதையுமே புதிதாக உருவாக்குவதில்லை, ஏற்கனவே அவை உருவாகி பிரபலம் அடைந்திருந்தால் அதை மைக்ரோசாப்ட் உள்வாங்கிக் கொண்டு தனக்கு ஏற்ற அளவில் மாற்றி அமைத்துக் கொள்ளும். Word Perfect > MS Word, Lotus 123 > Ms Excel, Story Board > Ms Power Point, (IBM) Lotus Notes > Ms Exchange,  Novell NDS > Ms Active Directory, Unix DNS > Ms DNS , Adobe Flash > Ms SilverLight இது போன்று எல்லாமும் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த நிலையில் அதன் விண்டோஸ் வடிவங்களாக மைக்ரோசாப்ட் மாற்றி க் கொண்டது தான் மைக்ரோசாப்ட் செய்தவை, Mac முகப்பைப் பார்த்து அதனை Vista மற்றும் Windows 7 ல் வடிவமைத்துக் கொண்டார்கள், புதிதாக எதையும் செய்துவிடவில்லை, ஏற்கனவே Sony PlayStation சக்கைப் போடு போட்ட பிறகு கேமிங் வடிவமைப்பில் இறங்கி  Xbox வெளியிட்டது மைக்ரோசாப்ட், பின்னர் அலைபேசி மென்பொருள் மைக்ரோசாப்டின் Windows CE அவ்வளவாக போகவில்லை என்றாலும் ஆப்பிள், ஆண்ட்ராய்டு அபாரமான வளர்ச்சியைப் பார்த்து விண்டோஸ் மொபைல் மென்பொருள்களை அமைத்துப்பார்த்தது, பெரிதாக விற்பனை ஆகவில்லை, இருந்தாலும் கொஞ்சம் காலத்திற்குபிறகு ஆப்பிள் ஆண்ட்ராய்ட் போல் முகப்புகளை மாற்றி விண்டோஸ் மொபைல் வெளிவரும் மேலும் ஆண்ட்ராய்ட் போல் இலவசமாக எவரும் பொருத்திக் கொள்ளவும் அனுமதிப்பார்கள் என்றே நினைக்கிறேன், முதலில் ஆழம் பார்ப்பது பின்னர் விற்பனைப் படகை செலுத்துவது மைக்ரோசாப்டின் கைவந்த கலை என்பதால் மொபைல் போன் இயங்குதள விற்பனையையை கண்டிப்பாக விட்டுவைக்கமாட்டார்கள்.

மைரோசாப்ட் இயங்குதளங்களில் Windows 95 to Windows 98SE பெரிய வேறுபாடுகள் இல்லை  Windows 95 Service Pack களையெல்லாம் ஒன்றாக இணைத்து முகப்பின் நிறத்தை மாற்றி Windows 98SE என்று புதுவர்சனாக விற்பனை செய்வார்கள், பின்னர் Vista மற்றும் Windows 7, Windows 2008 Std  to Windows 2008 R2 கூட அப்படித்தான். பிழைகளை சரிசெய்து அதை புதிய வர்சனாகவே மைக்ரோசாப்ட் அறிவிக்கும். அடுத்து Windows 8 மடிக்கணிணி மற்றும் மேசை கணிணி பயனீட்டாளர்களுக்கும், Windows 2012 Server வழங்கி சேவையாகவும் புதிய பரிணாமத்துடன் வெளி இட இருக்கிறார்கள்.

இதற்கிடையே VMWare, Citrix ஆகியவை மெய்நிகர் (Virtual Server / Client OS)  மற்றும் Cloud Computing தொழில் நுட்பத்துறையில் கார்ப்ரேட் நிறுவனங்களை ஆட்கொள்ள அந்த மெய்நிகர் தொழில் நுட்பத்தையும் விட்டுவைக்கக் கூடாது என்பதாக் Hyper-V மற்றும் Windows Azure ஆகியவற்றை விற்பனையில் இறக்கிவிட்டிருக்கிறது மைக்ரோசாப்ட் அதன் வளர்ச்சி விகிதம் இனிமேல் தான் தெரியும் இருந்தாலும் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த பல இலவச அறிவிப்புகளையும் ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீ பாணியில் கடைவிரித்திருக்கிறது. இவை அனைத்தும் ஏற்கனவே Unix வழங்கிகளிலும் பயனீட்டு கணிணிகளும் வந்துவிட்டன. யுனிக்ஸை வீழ்த்தும் பல்வேறு முயற்சிகளில் யுனிக்ஸில் இருக்கும் Shell Script மற்றும் வெற்று இயங்கி (Core Operating System) எனப்படும் தொழில் நுட்பங்களையெல்லாம் இணைத்து Power Shell மற்றும் Windows Core ஆகியவற்றையும் மைக்ரோசாப்ட் அமைத்து சந்தைக்குள் இறக்கி இருக்கிறது. இன்னும் எழுத ஏராளம் உண்டு.

************

எனக்கும் மைக்ரோசாப்ட் தொழில் நுட்பம் தான் சோறு போடுது, மில்லியன் கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றதற்கு மைக்ரோசாப்ட் தான் காரணம், தவிர 1000க் கணக்கான மில்லினியர்களை உருவாக்கியவர் பில்கேட்ஸ் என்பதால் பில்கேட்ஸ் மீது மதிப்பும், நன்றியும் உண்டு, அவருடைய தொழில் தர்மம் மற்றும் தொழில் நுட்ப நேர்மை மட்டுமே விமர்சனம் செய்யப்பட்டே வருகிறது. மைக்ரோசாப்ட்டினால் பல மென்பொருள் நிறுவனங்கள் மூடுவிழா கண்டது குறிப்பாக NDS க்கு பதிலாக MS Active Directory வழங்கி சேவையாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு Novell காலி, ஆனாலும் முழுதாக யுனிக்ஸ் வளர்ச்சியை அவர்களால் வீழ்த்த / கட்டுப்படுத்த முடியவில்லை.

மைக்ரோசாப்ட் தொழில் நுட்பமும் உத்தியும் ஓரிரைக் கொள்கையாளர்களைப் போன்றது மாறாக யுனிக்ஸ் வகை இயங்குதளங்கள் இந்திய சமயங்களைப் போன்று தனித்தனி பரிணாமம் பெற்றிருந்தாலும் ஒன்றுக் ஒன்று தொடர்ப்புடையது. வல்லவனுக்கு வல்லவன் என்ற ரீதியில் எதிர்காலத்தில் கூகுள் மைக்ரோசாப்டை வீழ்த்தலாம் ஏற்கனவே இணைய சேவைகளில் மைக்ரோசாப்டை வீழ்த்திவிட்டார்கள். அடுத்து இயங்குதளங்களை உருவாக்கிவருகிறார்கள்,  மைக்ரோசாப்ட் ஆட்டம் காணும் நாள் தொலைவில் இல்லை.

9 மே, 2012

செல்பேசிகள் முட்டையை வேக வைக்குமா ?

இயக்கத்தில் இருக்கும் இரு செல்பேசிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளிகளுக்கிடையே வைக்கப்படும் முட்டை சாப்பிடும் பதத்திற்கு வெந்துவிடும் என்கிற தகவல்களை மின் அஞ்சல் அல்லது செய்திகள் வாயிலாக நீங்கள் அறிந்திருக்கக் கூடும். ஆனால் அவை வெறும் வதந்திதான் என்கிறது வதந்தி பற்றி தகவல் வெளியிடும் இணையத் தளம். 65 நிமிடங்கள் இணைப்பில் (தொடர்ந்த பேச்சில்) இருக்கும் செல்பேசிகள் முட்டையை வேக வைத்துவிடும் என்கிற தகவல் இணையத்தில் வேகமாகப் பரவியது. இதனைப் பரப்பியவர்களின் நோக்கம் செல்பேசி பயன்பாடுகளைக் குறைத்து சுற்றுச் சூழலுக்கு நன்மை செய்ய முடியுமா ? என்று நினைத்து செய்தார்களோ, அல்லது வெறும் வதந்தியைப் பரப்பச் செய்தார்களோ, ஆனால் தகவல் 100 விழுக்காடு வதந்தி என்கிறது அந்த இணையத் தளம். சுற்றுச் சூழலுக்கும், தனிமைச் சூழலுக்கும் கேடுவிளைவிப்பது செல்பேசி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, தேவைக்கு மட்டுமே செல்பேசி பயன்படுத்துபவர்களுக்கு இந்த அச்சுறுத்தல் (அதாவது மூளை பாதிப்பு ஏற்படும் என்பது போன்ற தகவல்) தேவையற்றது தான். இயந்திர மய, விரைவு வாழ்க்கையில் சுற்றுச்சூழல் கேடு அதன் தவிர்க்க முடியாத பக்க விளைவு என்பதால், சுற்றுச் சூழல் குறைபாட்டிற்கு செல் பேசியை மட்டுமே குறைச் சொல்ல ஒன்றும் இல்லை. தற்பொழுது உலகெங்கிலும் இயக்கப்படும் கணிணிகள் அவை வெளியிடும் வெப்பம் இவற்றை ஒப்பிட செல்பேசியால் சூடேறும் வெப்பம் மிகவும் நுண்ணியதே, பழுதடைந்த செல்பேசிகளை முறையாக அழிப்பதற்கு வாய்ப்பில்லாத சூழல் தான் உள்ளது, இவை அனைத்து எலெக்ட்ரானிக் பொருள்களுக்கும் பொருந்தும்.

[T]he claim that RF energy from two mobile phones can cook an egg in 60 minutes cannot be true as it is impossible for the egg's temperature to rise to a level that will cook the egg. We can demonstrate this as follows: even if you assume that each mobile phone is emitting RF energy at its maximum average power of 0.25 W (based on a peak power of 2 W per phone) for 60 minutes; and even if the total power (2 X 0.25 W = 0.5 W) of both phones was completely absorbed by the egg (assuming it weighs 50 g), then the result would be a maximum temperature rise after 60 minutes of only 13 C. Even if the egg was at room temperature before starting the experiment, the result would still be far below the temperature actually needed to cook an egg (which is approx. 65- 70 C). 

செல்பேசியில் இருந்து வெளிப்படும் RF எனப்படும் ரேடியோ அலைகள் 60 நிமிடத்தில் முட்டையை வேக வைத்துவிடும் என்பது உண்மை இல்லை, ஒரு செல் பேசி வெளியிடும் வெப்ப அளவு 60 நிமிடத்திற்கு வெறும் 13 டிகிரி தான், அதுவும் சுற்றுச் சூழல் வெப்பத்தால் உரிஞ்சப்பட முட்டைக்கு தனியாக வெப்பம் செல்ல வாய்ப்பே இல்லை. முட்டை வேக 65 - 70 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் தேவைப்படுகிறது. எனவே செல்பேசி முட்டையைச் சூடேற்றி வேக வைக்கும் என்பது 100 விழுக்காடு வதந்தியாகப் பரப்பட்டத் தகவலே.

உங்களுக்கு மின் அஞ்சலில் இது அல்லது இது போன்ற தகவல் வந்தால் அவற்றை சரிபார்க்காமல் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள், வதந்திகள் என்பதே சிந்தித்து பார்க்க நேரமில்லாதவர்களால் பரப்பப்படும் வெறும் கவன ஈர்ப்புத் தகவல் தான்.

இன்று எனக்கு வந்த மின்னல் ஒன்றில்,


A very important message to everyone, please read it carefully. 
1 Egg & 2 Mobiles 
65 minutes of connection between mobiles. 


We assembled something as per image: Initiated the call between the two mobiles and allowed 65 minutes approximately... 
During the first 15 minutes nothing happened; 
25 minutes later the egg started getting hot; 
45 minutes later the egg is hot; 
65 minutes later the egg is cooked. 





Conclusion: The immediate radiation of the mobiles has the potential to modify theproteins of the egg. Imagine what it can do with the proteins of your brains when you do long calls.  
Please try to reduce long time calls on mobile phones and pass this mail to all your friends & Family you care for.

மேற்கண்ட படத்தைக் காட்டி, கீழே காட்டப்படும் வெந்த முட்டையும் செல்பேசியால் தான் வேக வைக்கப்பட்டது என்பதற்கு எந்த ஒரு ஆதரமும் இல்லை. வதந்தியைப் பரப்ப இவர்களே ஏற்கனவே வெந்த முட்டையை வைத்து இருப்பர்.

9 ஏப்ரல், 2012

* எதிர் கிருமி (Anti-Virus) மென்பொருள் இல்லாமல் கணிணிகளை இயக்க முடியுமா ?

உங்களில் பலர் மென்பொருள் துறையில் அன்றி அல்லது வேலை செய்யும் துறையில் கணிணியில் வேலை செய்யாமல் தனி உடைமையாக வீட்டினுள் கணிணி வாங்கிப் பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள், அதை இயக்கும் அல்லது பயன்படுத்தும் அளவுக்கு திறன் பெற்றவர்களாக இருப்பீர்கள்.  பொதுவாக இவ்வாறு தனிப்பட்ட முறையில் கணிணி பயன்படுத்டுபவர்களுக்கு பயன்படுத்துவதில் அச்சம் இருக்கவே செய்யும், அதில் சிலர் வீட்டில் யாரையும் தொடவும் விடமாட்டார்கள், காரணம் எதோ ஒரு காரணத்தினால் இயங்காமல் போனால் கணிணி பயன்படுத்துவது தடையாகிவிடும் என்கிற அச்சம் தான், பொதுவாக இந்த அச்சம் தேவையற்றது, தெரியாமல் விசைப்பலகையில் ஒரு விசையை அமுக்குவதால் கணிணி செயல்படாமல் போகும் என்ற அளவுக்கெல்லாம் இயங்கு மென் பெருள் (Operating System) அமைக்கப்பட்டிருக்காது, எல்லோரும் பயன்படுத்தும் வகையில் தான் அமைத்திருப்பார்கள், முதன் முதலில் பயன்படுத்தும் போது கண்ணைக் கட்டி விட்டிருப்பதைப் போல் இருந்தாலும், நாளடைவில் நாம் அதில் பயன்படுத்தும் எழுதிகளையும் (வேர்ட் ப்ராசசர்), அட்டவணைகளையும் (எக்ஸெல்), மற்றும் இணைய உலவிகள் (இண்டெர் நெட் எக்ஸ்ப்ளோரர்)  பயன்படுத்தத் தெரிவதால் பின்னர் அந்த அச்சம் போய்விடும்.

கணிணி வைரஸ் என்பது இயங்குதளத்தின் நுட்பத்தை குறுக்குவழியாக பயன்படுத்தி கணிணியை முடக்கும் ஒரு மென் பொருள் தான், இணைய பயன்பாடு இல்லாத காலங்களிலேயே இவைகள் சேமிப்பு தட்டுகளின் (ப்ளாப்பி டிஸ்க்) மூலம் வேக மாகப் பரவின, தற்பொழுது இணையம் வழியாக பரவுகின்றன, வைரஸ் எழுதிவிடுபவர்கள் முன்பு போல் நோக்கமின்றி ஒரு அரைகூவலாக எழுதி விட்டு வேடிக்கைப் பார்ப்பது போல் தற்பொழுது செய்வதில்லை, பெரும்பாலும் வியாபாரம் தொடர்பில் அவை எழுதப்பட்டு உங்கள் கணிணிக்கு அனுப்பப்பட்டு மிகப் பெரிய அளவில் மின் அஞ்சல்களை அனுப்புவம் அந்த மின் அஞ்சலை படிப்பவர்களிடம் பொருள்களை விற்பனை செய்யும் தந்திரமாக அவை செயல்படுகின்றன, இவற்றை மால்வேர் என்பர். இணையம் வழியாக பரவுபவை பெரும்பாலும் இந்த வகை வைரஸ்களே, இவை கணிணீயில் செயல்படும் போது கணிணி மையச் சில்லின் (CPU) மொத்தத் திறனையும் எடுத்துக் கொள்வதால் இயல்பாக நாம் பயன்படுத்தும் கணிணி வேகம் குறைந்துவிடும் அல்லது செயல்பாடு முடக்கப்படும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆண்டி வைரஸ் மென்பொருள்களை பயன்படுத்துகிறோம். அதை விற்பனை செய்யும் நிறுவனமும் பெருந்த லாபம் அடைகிறது, 90 விழுக்காட்டு வைரஸ்கள் ஆண்டிவைரஸ் நிறுவனங்களால் இணைய வெளியில் அனுப்பப்படுகின்றவை, ஏவுகணை தாக்குதலை ஏவுகணைத் தாக்குதலால் முறையடிப்பது போல் மற்ற ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் அதற்கான தற்காப்பு மென் பொருளை அமைக்கும், உருவாக்கியவர்களே கூட ஆண்டி வைரஸ் மென்பொருளையும் விற்பார்கள், இவையெல்லாம் தொழில் நுட்ப அறிவுத்திறனை குறுக்குவழியில் பயன்படுத்துவது ஆகும், போட்டித்தன்மை மிக்க உலகில் இவை எதிர்பார்த்தது மற்றும் இயல்பானது தான்.

கணிணி வைரஸ்கள் பற்றி அறியாதவர்கள் இந்த மென் பொருளை வாங்கிப் பயன்படுத்துவது தேவை என்ற அளவில் தான் நிலைமை உள்ளது, அதுவும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என்கிற நிபந்தனைகள் மற்றொரு பக்கம். ஆனாலும் கணிணியின் செயல் கட்டுப்பாடுகளை நாம் மாற்றி அமைப்பதன் மூலம் இத்தகைய மென்பொருள் இல்லாமலேயே நாம் கணிணியை இணையங்களிலும் கூட பயன்படுத்த முடியும். எப்படி என்று பார்ப்போம்.

விண்டோஸ் எக்ஸிபி மற்றும் அதற்குப் பிறகான மைக்ரோசாப்ட் இயங்குதள மென்பொருளில் (Operating System) அட்மின் பயனர் (administrator account) கணக்கு ஒன்று இயங்குதள மென்பொருளை அமைக்கும் போதே அமைந்துவிடும், விண்டோஸ் மென்பொருளை நிறுவும் போது அட்மின் பெயருக்கான கடவுச் சொல்லை தெரிவு செய்யச் சொல்லிக் கேட்கும், அதை வெற்றாக (empty) விடாமல் 8 எழுத்துகளுக்கும் மேலான எண்ணிக்கையில் கடவுச் சொல்லை பொறுத்திக் கொள்ளுங்கள், அது தவிர முதல் பயனர் உள்ளிட்ட 5 பயனர்கள் பெயரை பின்னர் கேட்கும், அதில் பெரும்பாலும் முதல் பயனர் கணக்கில் தங்கள் பெயரை அல்லது இல்லத்தில் உள்ளவர்கள் பெயரையோ கொடுப்பார்கள், இந்த முதல் பயனர் கணக்கும் அட்மின் பயனர் கணக்கும் Installation Rights எனப்படும் மென்பொருள் நிறுவிக் கொள்ளும் admin உரிமை பெற்றிருக்கும், நீங்கள் அட்மின் பயனர் கணக்கு பயன்படுத்தாவிட்டாலும் முதன் முதலாக அமைக்கும் பயனர் கணக்கு அட்மின் உரிமையுடன் தான் இருக்கும். அதை பயன்படுத்தி கணிணியை இயக்காமல் புதிதாக ஒரு பயனர் கணக்கைத் துவங்கி அதில் 'Change Account Type' என்பதை தெரிவு செய்து 'Limited' என்று மாற்றிக் கொண்டு அந்தக் கணக்கை பயன்படுத்துங்கள்.

Limited User கணக்கை நுழைவு (Login) கணக்காகப் பயன்படும் பொழுது எந்த ஒரு மென் பொருளையும் புதிதாக நிறுவ முடியாது, பெரும்பாலும் கணிணி வைரஸ் அல்லது மால்வேர்கள் அட்மின் உரிமை உள்ள கணக்கின் வழியாக நுழையும் பொழுது வைரஸ் அல்லது மால்வேர் மென்பொருள்களை அந்த அட்மின் உரிமை மூலமாக நிறுவிடுகின்றன  Limited User ஆகப் பயன்படுத்தும் போது அவற்றால் செயல்படமுடியாது, ஒரு சில மால்வேர்கள் தனிப்பட்ட பயனராக இங்கும் நுழையும், அதை அகற்றுவது மிக எளிது தேவையான கோப்புகளை / படங்களை சேமித்துவிட்டு, அந்த  Limited User கணக்கை மொத்தமாக நீக்கிவிட்டால் அந்த மால்வேரும் அழிந்துவிடும், பிறகு பழைய படி அதே பயனர் கணக்கை அமைத்துக் கொண்டு தொடர்ந்து பயன்படுத்தலாம்.






விண்டோஸ் Firewall ன்னும் தடுப்பு சுவரை 'ON' செய்வதன் மூலம் மால்வேர்கள் நுழைவதையும் தடுத்துவிடலாம். விண்டோஸ் Firewall ஐ அட்மின் கணக்கின் வழியாகத்தான் ON/OFF செய்ய முடியும், Limited User பயன்படுத்திவரும் பொழுது புதிய மென் பொருளை கணிணியில் சேர்க்க வேண்டுமெனில் Logout செய்துவிட்டு அட்மின் உரிமை உள்ள கணக்கை பயன்படுத்தி உள்ளே நுழைந்து மென் பொருளை அமைத்துவிட்டு Logout செய்துவிட்டு மீண்டும் Limited User  கணக்கின் வழியாக நுழைந்து புதிய மென் பொருள் அமைக்கப்பட்டதை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு பயன்படுத்தும் பொழுது கணிணி வைரஸ்கள் உள்ளே நுழைந்தாலும் தானாக செயல்படும் ஆற்றல் வெகுவாக குறைக்கப்படுவதுடன் ஆண்டி வைரஸ் மென்பொருள் இன்றியே கணிணியை பயன்படுத்த முடியும்

கணிணி வைரஸ் மற்றும் மால்வேர்கள் கணிணியினுள் செல்லாமல் இருக்க பொதுவாக கடைபிடிக்க வேண்டியவை :

  • தேவையற்ற அல்லது அனைத்து Tool Bar களையும் இணைய உலவியில் இருந்து நீக்குங்கள்
  • பொதுவாக ஆபாச இணையத் தளங்கிலிருந்து தான் மால்வேர் மற்றும் வைரஸ்கள் பரவுகின்றன, அவற்றிற்கு தெரியாமல் அல்லது தெரிந்தே சென்றால் எதாவது pop-up விண்டோஸ் வந்து OK, Yes எதாவது கேட்டால் உடனேயே மூடிவிடுங்கள், அப்படி மூடமுடியாமல் போனால் Task Manager (ctrl+alt+del, then select Star Task Manager, under Process, Select the Browser Name then Kill Process Tree ) வழியாக அந்த உலவியின் செயல்பாட்டை நிறுத்திவிடுங்கள். \
  • உலவிகளின் Plug-in வகைகளில் தேவையற்றதன் செயல்பாடுகளை (Disable) நிறுத்திவிடுங்கள்


IE Plug-in



  • உலவியின் Cookies' களை அடிக்கடி அழித்துவிடுங்கள் (Clean)
மேலே சுட்டியுள்ளபடி Limited User பயன்படுத்துவதில் ஏதேனும் ஐயம் இருந்தால் தெரியப்படுத்தவும். விண்டோஸ் XP க்கு என்று எடுத்துக்காடுகள் கொடுத்திருந்தாலும் விண்டோஸ் 7 மற்றும் 8 ஆகியவைகளிலும் இதே முறைகள் தான் பின்பற்றப்படுகின்றன.

மற்றொரு பதிவில் admin user கடவுச் சொல் மறந்துவிட்டால் அல்லது செயல்படாவிட்டால் கணிணி தகவல்களை எப்படி மீட்டெடுப்பது என்று பார்ப்போம்.

13 மார்ச், 2012

தேடு பொறிகளின் சுருக்கமான வரலாறு !

இணைய தொழில் நுட்பம் அறிமுகமான பொழுது இருந்த மிகப் பெரிய அறைகூவல், தகவல்களை எங்கிருந்து பெற்றுக் கொள்வது, எப்படி பயனாக்கிக் கொள்வது என்பது தான். இணைய பயன்பாட்டுக்கு முன்மாதிரி விளம்பர தட்டிகள் தான், இணைய தொழில் நுட்பம் முதன் முதலாக கணிணிகளை இணைத்துச் செயல்படும் திட்டமாகத்தான் அறிமுகமானது, அதன் படி அலுவலக கணிணிகளை ஒன்றினைத்து தகவல் சேமிப்புகளையும் பயன்பாடுகளையும் பொதுப் படுத்திக் கொள்ளுதல் என்ற அளவில் துவங்கி பின்னர் தொலைபேசி கம்பி வழியிலான தொடர்புகளை சேர்த்துக் கொண்டு வலைப் பின்னல்களாக உருவாகி தகவல் பரிமாற்றத்திற்கு பயனானது, முதலில் மின் அஞ்சல் பயன்பாட்டிற்கும் பின்னர் வலைத்தள உருவாக்கத்திற்குமாக இணைய தொழில் நுட்பங்கள் மாறிக் கொண்டது.

நிறுவனம் சார்ந்த உற்பத்தித் தகவல், செய்தித்தகவல், அறிவியல் தகவல், தொழில் நுட்பத் தகவல் என்று இணைய தளங்கள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு குறிப்பிட்டத் தகவலை எப்படி அறிந்து கொள்வது அல்லது தேடிப் பெருவது என்ற கேள்வியின் விடையாக தேடு பொறி தொழில் நுட்பங்கள் உருவாகின. தேடு பொறி தொழில் நுட்பம் உருவாகி வெறும் 20 ஆண்டுகளே ஆகிறது. முதன் முதலாக அமெரிக்காவின் மெகராஹில் மாணவர்களின் 'ARCHIE'. இந்தத் தேடு பொறி இணையப் பக்கங்களின் ஐபி எண்ணையும், இணையப் பக்கத்தின் கோப்புத் தலைப்புகளையும் சேமித்து தேடுவோருக்கு தந்தது, இதன் குறைபாடு ஏற்கனவே தேடியவற்றின் குறிப்புகளை சேமிக்க வசதி செய்யப்படாததால் ஒவ்வொரு முறையும் ஏற்கனவே தேடியதைத் தேடும் பொழுது மிகுதியான நேரங்கள் எடுத்துக் கொண்டது, அண்மைய நுட்பங்களில் இண்டெக்ஸ் எனப்படும் குறிப்புகள் தேடப்படும் தகவல்களுடன் தேடுபொறிகளின் தேடு பட்டியலில் சேமிக்கப்படும், புதிதாக இடம் பெறும் பக்கங்களிலும் அந்தச் சொல் இருந்தால் தானகவே அதே இண்டெக்ஸில் இணைத்துக் கொள்ளும், இதன் வழியாக தகவல்களை தேடும் போது விரைவாக அவை ஏற்கனவே சேமிப்பில் உள்ளவை என்பதால் நமக்கு கிடைக்கிறது, இங்கு தான் விளம்பரத் தொழில் நுட்பத்தையும் புகுத்தி, நாம் தேடுவதில் அவர்களுக்கு விளம்பரமாக அமைந்திருக்கும் பக்கங்களை முதலில் காட்டுவார்கள்.

ARCHIE க்கு பிறகு செப் 2, 1993ல் W3Catalog என்ற தேடுபொறி இணையப் பக்கங்களை வரிவடிவங்களுக்கு மாற்றித் தகவல்களை சேமித்து தேடுவோரை தொடர்புடைய இணையப் பக்கங்களுக்கு வழி காட்டியாது. அதே ஆண்டில் World Wide Web Wanderer எனப்படும் இணைய ரோபோ உருவாகி இரண்டு ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது, இதுவும் குறிச் சொற்களை சேமித்து வைத்து தேடும் இணையப் பக்களின் ஐபி எண்களுக்கு திருப்பிவிடடுக் கொண்டு இருந்தது, இதன் பிறகு இணைய தளங்களில் குறிச் சொற்களையும் சேர்த்தே அமைக்கும் HTML பக்கங்கள் உருவானதும் அதனைப் பயன்படுத்தி அதே காலகட்டத்தில் நவம்பர் 1993ல் Aliweb என்கிற இரண்டாவது குறிசொல் தேடல் வகை தேடு பொறி உருவானது.

WebCrawler எனப்படும் தானியங்கி தேடு பொறி 1994ல் பொதுப் பயன்பாட்டிற்கு பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது, இதன் சிறப்பு என்னவென்றால் புதிதாக இணையப் பக்கங்களை இணையத்தில் சேர்க்கப்படும் பொழுது இந்த தேடுபொறி அதில் இடம் பெறும் அனைத்துச் சொற்களையும் குறியீடுகளாக எடுத்து சேமித்துக் கொள்ளும், இணையத்தில் இடம் பெறும் அனைத்து இணையப் பக்கங்களையும் இவை தானாகவே குறிப்பெடுத்துக் கொள்ளும், அதன் படி தேடுவோருக்கான தகவல்களைக் காட்டி குறிப்பிட்ட இணைய பக்கத்தை நாம் தேர்வு செய்ய அங்கு திருப்பிவிடும்.

1994க்கு பிறகு தேடுபொறி என்பது வியாபாரம் சார்ந்த ஒன்றாக மறுவடிவம் எடுக்க, அதாவது தேடுவதில் எதைக் கொடுப்பது என்பதை தேடுபொறி முடிவு செய்யும் என்ற நிலையில் அதனை வியாபாரம் சார்ந்த ஒன்றாக மாற்றிக் கொண்டனர். அதாவது நாம் படிப்பு / வாங்கப் போகும் பொருள் சார்ந்த ஒன்றைத் தேடும் போது ஏற்கனவே அதே படிப்புத் தொடர்பில் தங்களது இணையப் பக்கங்களை முதலில் காட்டப்பட வேண்டும் என்கிற வியாபார ஒப்பந்ததில் அவை முதலில் காட்டப்பட்டு அடுத்து அதே படிப்பு / பொருள் தொடர்புடைய பிற இணையத் தளங்களைக் காட்டும் முகமாக தேடுபொறிகள் மாறின.

1994 - 1995ல் துவங்கப்பட்ட Magellan, Excite, Infoseek, Inktomi, Northern Light, and AltaVista போன்றவை விற்பனை நோக்கமாக இயங்கி வந்த தேடுபொறிகள் தான். இவற்றில் AltaVista யாகூ நிறுவனத்தால் பின்னர் வாங்கப்பட்டது. தேடுபொறிகளின் இணையத் தளங்களை தாமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது ? அதை ஏன் உலவில் சார்பாக மாற்றக் கூடாது ? என்கிற போட்டப்போட்டியில் Netscape, IE ஆகியவை போட்டியில் குதித்தன, அதுவரையில் அவை வெறும் உலவி என்ற அடிப்படையில் தான் இணையப் பக்கங்களைக் காட்டி வந்தன, Netscape அப்போது வளர்ந்து வந்த தேடுபொறிகளான Yahoo!, Magellan, Lycos, Infoseek, and Excite ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தனது உலவியின் அலுவல் ஆளுமைக்கான (Official) தேடுபொறிகளாக அமைத்துக் கொண்டது, இதன் படி Netscape உலவியின் முகவரி கட்டத்தில் தட்டச்சு செய்து தேடினால் அது ஒப்பந்தம் செய்திருக்கும் தேடுபொறியின் வழியாக தேடிய தகவல்களைக் காட்டியது. அதே போன்று IE தனக்குரிய MSN தேடு பொறியை அமைத்துக் கொண்டது.

இவைகளின் ஆட்டம் 2000 ஆம் ஆண்டு வரையில் தான், September 4, 1998ல் துவங்கப்பட்டு வளர்ந்திருந்த கூகுள் உள்ளே நுழைய, அதன் எளிமை அதாவது முகப்பில் எந்த விளம்பரங்களையும் காட்டாமல் விட்டிருந்தது தேடுவோருக்கு பிடித்துப் போகவும், அதன் விரைவான தேடல் மற்றும் உடனடி கிடைக்கும் தகவல் என்று வளர பிற தேடுபொறிகள் ஆட்டம் கண்டு, ஏற்கனவே இருந்த Overture, Alltheweb ஆகியவை போட்டியை சமாளிக்க யாகூ நிறுவனத்தால் வாங்கப்பட்டது. கூகுளின் துவக்கத்தில் யாகூ அதை 2004 ஆம் ஆண்டுவரை பயன்படுத்திக் கொண்டு இருந்தது, பிறகு யாகூ தனது தேடுபொறியையே பயன்படுத்த கூகுள் தனியாக இயங்க வேண்டிய கட்டாயத்தில் மலேசியாவில் இருந்த பிரிந்த சிங்கப்பூர் போல் வேகமாக வளர்ந்தது.

கூகுள் தற்பொழுது தேடுபொறிகளின் வெல்லமுடியாத அரசனாக நிற்கிறது, கூகுள் எர்த், கூகுள் மேப், கூகுள் ராங்கிங்க், சமூக வலைதளங்கள், படம் தேடல், விடியோ தேடல், க்ரோம் உலவி, ஆண்ட்ராய்ட் செல்பேசி மென்பொருள் என இணையத்தளங்களின் அத்தனை பரிணாம வளர்ச்சியாக நின்று கொண்டு இருப்பதால் முந்தைய தேடுபொறிகள் அனைத்தும் காணாமல் போயின, யாகூவும், மைக்ரோ சாப்பிடின் தற்போதையை Bing ஆகியவை தேடுபொறி என்ற பெயருக்கே இயங்கிவருகின்றன.

நான் 2005 வரையில் பயன்படுத்திய

goto.com, alltheweb.com, overture.com. looksmart.com, excite.com, infoseek.com, lycos.com ஆகியவை முற்றிலுமாக மறைந்து போய்விட்டன.

செல்பேசி விற்பனையில் ஆப்பிள் நுழையும் வரையில் நோக்கியா சக்கைப் போடு போட்டது போல் கூகுளின் ஆட்டம் இன்னும் சில ஆண்டுகளுக்குக் கூட இருக்கலாம், இருந்தாலும் கூகுளின் தற்போதைய கட்டுமானம் அவ்வளவு எளிதாக சரிந்துவிடாது என்றே நம்புகிறேன்.

ஒரு பக்கவாட்டு தகவல், கூகுளின் ப்ரெட் வேகாமல் போனது சீனாவில் மட்டும் தான், சீனா கூகுளை புறக்கணித்து தங்களுடைய நாட்டைச் சார்தவர்களால் சீன மொழியில் உள்ள தேடுபொறியையே பயன்படுத்துகிறது, அதன் பெயர் Baidu.com, சீனாவின் நெ 1 பணக்காரர்களில் Baidu நிறுவனரும் ஒருவர், அவருக்கு பல பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு. சீனா கண்டு கொள்ளாமல் இருந்தால் அவ்வளவு பணமும் கூகுளிடம் சென்றிருக்கும், விழித்துக் கொள்பவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள் என்பதை சீனாவின் கூகுள் தடையால் புரிந்து கொள்ளலாம்.



இணைப்பு : http://en.wikipedia.org/wiki/Web_search_engine

பின்குறிப்பு : பதிவு எழுத ஒன்றுமே இல்லை என்று நினைப்போர், தங்களது ஆங்கிலப் புலமையை வைத்து விக்கிப் பீடியாவில் இருந்து நல்ல தகவல்களில் தேவையான அளவு எடுத்து மொழிப்பெயர்பாக தமிழில் பதிவாக்கலாம், நமக்கும் இணையத்தில் கூடுதலாக ஒரு தமிழ் பக்கம் கிடைக்கும், வலைப்பதிவும், மொழிப் பெயர்ப்புத் திறனும் வளரும்.

15 செப்டம்பர், 2011

க்ளவுட் கம்யூட்டிங் - எளிய அறிமுகம் !

கணிணி தொழில் நுட்பம் நாளுக்கு நாள் மாறுதல் அடைந்தே வருகிறது, அதற்கான காரணங்களில் முதன்மையானது

போட்டித் தன்மை மிக்க உலகில் வேலையை விரைவாக முடிப்பது மற்றும் குறைந்த செலவில் சேவையை தருவதும் பெறுவதும் ஆகும், இந்த இரண்டு காரணங்களினால் வாடிக்கையாளர்களை தம் வசம் வைத்திருக்க நிறுவனங்கள் விரும்புகின்றன, அதற்காக தொழில் நுட்பங்களை ஆராய்ந்து அவ்வப்போது புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்துகின்றனர். 'போன் என்றால் பேசுறதற்கும் மட்டும் தான்' என்ற நிலையில் அலைபேசி நிறுவனங்கள் செயல்பட்டு அதில் பல்வேறு வடிவம் அமைப்பு வசதிகளை வைத்து அலைபேசி நிறுவனங்கள் இயங்கிவந்தன, குறிப்பாக நோக்கிய 2006 வரை சக்கைப் போடு போட்டது, பின்னர் வந்த ஆப்பிள் நிறுவனம் 'ஸ்மார்ட் போன்' எனப்படும் ஆப்பிள் மொபைலை அறிமுகப்படுத்தி பல்வேறு செல்பேசி நிறுவனங்களை மூட வைத்தது, 'உள்ளங்கையில் உலகம்' என்பதை ஆப்பிள் நிறுவனம் நிருபனம் செய்த பிறகு பல்வேறு செல்பேசி நிறுவனங்களும் 'போன் என்பது பேசுவதற்கு மட்டும் அல்ல' என்பதாக தற்போது வியாபாரங்களில் கடைவிரித்திருக்கின்றன. இருந்தாலும் ஆப்பிளின் தரத்திற்கு பின்னால் தான் அவர்கள் வருகிறார்கள். நோட்புக் எனப்படும் மடிக்கணிணிகள் கூட அலுவலகம் தவிர்த்து வெளியில் எடுத்துச் செல்வோர் வாங்குவது குறைந்து அந்த இடத்தில் புதிய மிண்ணனு பலகைகள் (ஸ்மார்ட் PAD) பிடித்துக் கொண்டுள்ளன. தற்போது பல்வேறு நிறுவனங்கள் 'ஆண்ட்ராய்ட் செயலி' பயன்படுத்தி பலகைகளை தயாரித்து விற்கிறார்கள், மின்னனு பலகையிலும் ஆப்பில் நிறுவனமே முன்னனியில் நிற்கிறது, காரணம் அது போன்ற பலகைகள் ஏற்கனவே விற்பனையில் இருந்தாலும் ஆப்பிள் போனின் நீட்சியாகவும் அதே தொழில் நுட்பத்திலும் இருப்பதால் ஆப்பிள் நுறுவன பலகைகளே பயன்படுத்த எளிது என்ற வகையில் பலகை விற்பனையிலும் முன்னனியில் உள்ளது. சரி அதற்கும் க்ளவுட் கம்யூட்டிங்க் என்பதற்கும் தொடர்பு என்ன ?

குறிப்பிட்ட சிம்கார்ட் (தனிப்பட்ட தகவல் அட்டை) வர்சன் ஏற்றுக் கொள்ளத் தக்க செல்பேசி மாடல்களில், அந்த சிம்கார்ட் எந்த மாடல் / எந்த நிறுவன செல்பேசியிலும் பொறுத்திப் பேசலாம், அதாவது செல்பேசிகளின் விலைக்கும் சிம்கார்டிற்கும் தொடர்பு இல்லை. அதே போன்று அடிப்படை மின்சாரம் என்பது வீட்டில் இருக்கும் அனைத்து மின் சாதனங்களுக்கும் பொதுவானவை, சிலமாற்றிகள் மூலம் ஒரே மின்சாரத்தைத் தான் அனைத்து மின்சாதனங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. தற்போதைய கணிணி ஹார்ட்வேர் தொழில் நுட்பங்களுக்கு ஏற்றவாறு தான் மென்பொருள் வடிவமைக்கப்படுகிறது, குறிப்பாக பழைய மாடல் கணிணியில் பழைய மென்பொருள் இயங்கும் ஆனால் புதிய மென்பெருள் இயங்காது, இதை லீகசி சாப்ட்வேர் என்பர், நிறுவனங்கள் புதிய தொழில் நுட்பங்களுக்கு உடனடியாக மாறாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் பயன்படுத்திய மென்பொருள் புதிய தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு இருப்பதில்லை என்பதால் தான். மேலும் ஒவ்வொரு தொழில் நுட்ப மாற்றத்தின் போது பயனீட்டாளர்கள் அல்லது பயன்படுத்துபவர்களுக்கு பயிற்சி கொடுத்தாகவேண்டும் பெருள் செலவு மிகுதியாகப் பிடிக்கும்.

ஸ்மார்ட் போன்கள் மற்றும் பலகைகள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு பொதுவாக அலுவலகத்தில் பயன்படுத்தும் மென்பொருள்களை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை, காரணம் அவற்றின் தொழில் நுட்பங்கள் வேறுவேறானவை. இந்த சூழலில் மடிக்கணி, அலுவலகக் மேசைக் கணிணி மற்றும் ஸ்மார்ட் போன்கள் ஆகியவற்றில் இயங்கக் கூடிய ஒரே தொழில் நுட்பம் வடிவமைக்க முயற்சித்து இன்றைய இணைய வேகத்தின் நீட்சியை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதே க்ளவுட் கம்ப்யூட்டிங்க் எனப்படும் புதிய கணிணி தொழில் நுட்பம். இது ஏற்கனவே இருந்த வெப்பேஸ்ட் அப்ளிகேசன்' என்பதன் நீட்சி தான் என்றாலும். அதைத் தாண்டிய பயனீடாக பல்வேறு மென்பொருள்களை இயக்கிக் கொள்வதுடன் அவற்றை கணிணி அல்லது கைபேசியில் நிரந்தரமாக நிறுவத் தேவை இல்லை என்பதை க்ளவுட் கம்யூட்டிங்க் நுட்பம் சொல்கிறது,

இதன்படி எக்சல், வேர்ட், பவர் பாயிண்ட் எழுதி மென்பொருள் போன்றவையும் ஆட்டோகேட், போட்டோ ஷாப் போன்ற வரைவு மென்பொருளையும் ஒருவர் பயன்படுத்த அவற்றை நிறுவிக் கொள்ளத் தேவை இல்லை என்பது தான் இதன் சிறப்பு. டேட்டா சென்டர்கள் எனப்படும் சேவைக்கணிக் கூடங்களில் தேவையான அனைத்து மென்பொருள்களும் நிறுவப்பட்டு, Pay By Service என்ற அடிப்படையில்
தேவைப்படுவர்கள் தங்கள் கணிணியின் இணைய உலாவி வழியாகவே அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும், மேலும் பயனீட்டாளர் பயன்படுத்தும் கணிணிகள் எந்த வகை தொழில் நுட்பம் இருந்தாலும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும், கணிணிகள் அல்லாது ஸ்மார்ட் போன்கள் மற்றும் பலகைகள் வழியாகவும் அந்த மென்பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதனால் பயன் என்ன ?

ஒவ்வொரு மென்பொருளுக்கும் லைசன்ஸ் (உரிமம்) வாங்கத் தேவை இல்லை, அவற்றைப் பயன்படுத்த ஆண்டு / மாத / மணித்துளிகளுக்கான சந்தா செலுத்தினாலே போதும், இவை உரிமப் பெற கொடுத்த விலையைவிட பல்மடங்கு குறைவானது, எடுத்துக்காட்டுக்கு ஒருவர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருள் வாங்க 8000 ரூபாய் செல்வளிக்கிறார் என்றால் க்ளவுட் சேவை வழியாகக் கிடைக்கும் அதே சேவைக்கு ஆண்டுக்கு 1000 ரூபாய்க்கும் குறைவாக செலுத்தினாலே போதும் (இது வெறும் உதாரணம் தான்)

குறிப்பாக இந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் இதை என்ன செய்து விற்பனை செய்கிறார்கள் என்றால் இதற்கு மறுபெயர் க்ரீன் கம்யூட்டிங். இந்த தொழில் நுட்பம் பயனீட்டாளர்களின் ஹார்ட்வேர் தேவைகளை வெகுவாகக் குறைக்கிறது, அதாவது நீங்கள் மிகப் பெரிய சேமிப்பு அளவு உள்ள ஹார்ட் டிஸ்க் வாங்குவதைத் தவிர்க்கலாம், அல்லது பயன்படுத்தும் மென்பொருளுக்கும் ஏற்ற ஹார்ட்வேர்கள் சேர்ப்பதைத் தவிர்க்கலாம். அதாவது ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒருவர் இரண்டாவதாக மடிக்கணிணி வாங்கத் தேவை இல்லை. இதன் மூலம் பயன்படுத்திய எலக்ட்ரானிக் கழிவுகள் வெகுவாக குறையும் என்கிறார்கள்.

தற்போது இணையத்தின் விரைவு (ஸ்பீட்) முன்னேற்றத் தொழில் நுட்பங்களால் அனைத்தும் இணைய வழியான சேவையாக மாறிவருகிறது, விரைவில் டிஸ் ஆண்டனாக்கள் மற்றும் செட்டப் பாக்ஸுகள் ஒழிந்துவிடும் என்றே நினைக்கிறேன். விரைவில் உலக தொலைக்காட்சி சேவைகள் அனைத்தும் இணைய வழியாகவே கிடைக்குமாறு தொழில் நுட்ப முன்னேற்றம் ஏற்படும், அப்போது எங்கும் எப்போதும் எவரும் தொலைகாட்சிகளில் விருப்ப சேனல்களைப் பார்க்க முடியும்.

க்ளவுட் கம்ப்யூட்டிங்க் நிறுவனங்களை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு நாடுகளில் இயங்கும் ஒரு நிறுவனம் ஒரே தளத்தில் தனது நிறுவனம் தொடர்பான அனைத்து பணிகளையும் இணைத்துக் கொண்டு செயல்பட முடியும் என்கிறது இந்த புதிய தொழில் நுட்பம், ஏற்கனவே வெப் பேஸ்டு அப்ளிகேசன் எனப்பட்டவைகள் இருந்தாலும் அவை அனைத்தும் கணிணி மற்றும் அதில் இயங்கும் மென்பொருளைச் சார்ந்தே இயங்கி வந்தது, க்ளவுட் கம்யூட்டிங்க் அந்த குறையை தவிர்க்கும் விதமாக அனைத்து வகை ஹார்ட்வேர் நுட்பங்களில் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாக உள்ளது. நாம் வாங்கும் கணிணி குறைந்த செயல்திறன் மிக்கதாக இருந்தாலே போதும் என்ற அளவில் க்ளவுட் கம்யூட்டிங்க் நுட்பம் அதற்கு கைகொடுக்கிறது.

இதிலும் சில குறைகள் உண்டு, தன்னுடைய நிறுவன தகவல்கள் பாதுகாப்பாக இருக்காது என்று அச்சம் தெரிவிக்கின்றனர் நிறுவன உரிமையாளர்கள், ஆனாலும் இந்த பாதுகாப்புக் குறைபாடு அவர்களுக்கும் அவர்கள் எடுத்திருக்கும் டேட்டா சென்டரின் சேவைத் தரத்திற்கும் உள்ள பிரச்சனை தான் அவை.

டேட்டா சேமிப்பு எனப்படும் தகவல் சேமிப்புகளை க்ளவுட் கம்யூட்டிங்க் வழங்கும் சேவை நிறுவனங்களே கவனித்துக் கொள்கின்றன என்பதால் கணிணி பழுதடைந்து பயனற்றதாகப் போனாலும் அவற்றை வேறொரு கணிணி / ஸ்மார்ட் போன் வழியாக பயன்படுத்தமுடியும். தற்போது மின் அஞ்சல் மற்றும் இணையப் பக்கம் செயல்பாடுகள் ஆகியவற்றிற்கு மட்டுமே பிற டேட்டா செண்டர்களில் நிறுவனங்கள் கணக்கு வைத்திருக்கின்றனர், விரைவில் தங்களது பணித் தொடர்பான அனைத்து மென்பொருள்களின் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளத் துவங்குவர்.

இது பழைய தொழில் நுட்பம் சிந்தனை தான் என்றாலும் இதனை செயல்படுத்த விரைவான வேகம் கொண்ட இணையம் தேவைப்பட்டது, தற்போது பைபர் (மென்னிலை) இண்டர்நெட் வசதிகளினால் 300 மெகபைட் அளவுக்குக் கூட இணைய வேகம் வாய்ப்பாகி இருப்பதால் தற்போது க்ளவுட் கம்யூட்டிங்க் தொழில் நுட்பம் பரவிவருகிறது

*****

அதற்கு ஏன் க்ளவுட் கம்யூட்டிங்க் என்ற பெயர் வந்தது ? க்ளவ்ட் என்பது இணையத்தைக் குறிப்பிட பயன்படுத்தும் மற்றொரு சொல்லாம் அவ்வளவு தான். இண்டர்நெட் வழியாக / பயனாக வழங்கப்படும் தொழில் நுட்பம் என்பதே அதன் பொருள்.

இந்த நுட்பம் முழுமையான செயல்பாட்டிற்கு வர 10 ஆண்டுகள் கூடப் பிடிக்கலாம், முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும் போது உரிமம் முறையில் மென்பொருள் விற்பனை செய்யும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய மென்பொருள் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் குறையும்.

இது தொடர்பான விக்கிப்பீடிய ஆங்கிலக் கட்டுரை.

29 அக்டோபர், 2007

ப்ளாக்கர் பாஸ்வேர்டை திருடுவது சுலபம் ?!

கவனக்குறைவாக கணனி பயன்படுத்துவர்களிடமிருந்து இணைய தளவழி மின் அஞ்சல் (web based email) கடவுச் சொல்லை (password) கைப்பற்றுவது சுலபம். இது தொடர்பாக முன்பு எழுதிய இடுகை உடனடிதேவையாக எழுதியது. ஏனென்றால் பல பதிவர்கள் ஜிமெயிலை திறக்கவே அச்சமுற்றனர். அப்படி திறந்தால் எதாவது மின் அஞ்சல் ஆர்குட் தளத்துக்கு அழைக்குமோ என்ற கலவரப்பட்டனர். அதற்கு காரணம் பல வதந்திகள். பிரச்சனைகள் இதுவாக இருக்குமோ ? என்ற ஊகத்தில் எழுதப்பட்டவைகள். அவைகள் பிரச்சனை இருப்பதை மட்டும் பேசின. இங்கே செல்லாதீர்கள் என்று ஒரு குறிப்பிட்ட தள முகவரியை கொடுத்து அதை சொடுக்காதீர்கள் என்று தங்கள் கண்டு கேட்டதில் சற்று தன் கருத்தையும் ஏற்றி வந்த இடுகைகள் ஒரு வித பீதியை ஏற்படுத்தியது. அத்தகைய குழப்பங்களை தவிர்பதற்காக தொழில் நுட்ப ரீதியில் சிலவற்றை விளக்கி எழுதி இருந்தேன். அதன் பிறகு வதந்தீகள் அடங்கியது என்று நண்பர்கள் தெரிவித்தனர். இன்னும் இரண்டு நாள் இதை வைத்து கும்மி அடித்திருக்கலாம் என்று எவரும் நினைத்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் என்மீது கோபம் வந்திருக்கும் :) - விடுங்க சார் கும்மி மேட்டருக்கு எப்போதும் பஞ்சமேயில்லை:)

சரி தலைப்புக்கு வருகிறேன். ஆர்குட்டில் நுழைய சொல்லி பாஸ்வேர்டை அபேஸ் செய்வதை விட ப்ளாக்கர் வழியாக அதை செய்வது சுலபம். ஏன் ஆர்குட் போலியாக பயன்படுத்தப்பட்டது ? என்று பார்க்கும் போது ஆர்குட் குழுமங்களின் தாக்கமே காரணம் என்று நம்ப வேண்டி இருக்கிறது. ஏனென்றால் ஆர்குட் குழுமத்தில் பெரும் குழுக்களாக இணைந்து கொண்டு சமுதாய கட்டமைப்பை ஏற்படுத்துகிறார்கள். நம் வலைப்பதிவில் (ப்ளாக்கரில்) குழுப்பதிவுகள் என்பது ஆர்குட் குழுமத்தை ஒப்பிட்டு பார்க்கையில் மிக மிக குறைவு. என்னதான் ப்ளாகர் வழி எழுதினாலும், திரட்டிகளின் சேவையை பயன்படுத்திக் கொள்ளும் போதே எழுத்துக்கள் குறிப்பிட்ட அளவினர் படிக்கின்றனர். 'சூடான தமிழ் செய்திகள்' என்ற பெயரில் வலைப்பதிவு இருந்து அதனை எந்த திரட்டியிலும் இணைக்காமல் இருந்தால், அதில் 'பின் லேடன் பிடிபட்டான்' என்ற செய்தி இருந்தாலும் எவருக்கும் தெரிவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

ஆனால் ஆர்குட் குழுமங்கள் பல உறுப்பினர்களால் இயங்குகின்றன. ஒவ்வொரு பெரிய ஆர்குட் குழுமும் ஒரு திரட்டிக்கு சமம். இத்தகைய குழுமங்கள் வெறும் அரட்டை கச்சேரிகளாக இருந்தால் எவருக்கும் தலைவலியே இல்லை. இவற்றின் வளர்சியும் பயனும் (நன்மை / தீமை) வலைப்பூக்களை விட வீச்சு அதிகம் கொண்டதாக உள்ளது. சில நாடுகளில் ஆர்குட் தளங்களை தடை செய்யும் அளவுக்கு ஆர்குட் குழும செயல்பாடுகள் நாட்டிற்கு எதிரான கருத்துக்களை கொண்ட குழுவாக நின்று அச்சமூட்டுகின்றன.

ஆர்குட் மூலம்.


வரலாற்றை திரிக்கலாம்
வரலாற்றை கட்டமைக்கலாம்
ரகசியமாக செயல்படலாம்
ஒரு அமைப்பாக குழுக்களை திரட்டலாம்


- இவை ஒரு நாட்டிற்கு எதிராக இருக்கும், தீவிர வாத குழுக்களுக்கு ஆதரவானதாக கூட இருக்கும், ஒரு சமுகத்தை தற்காப்பதற்காக இருக்கும், குறிப்பிட்ட சமூகத்தை கீழறுப்பதற்க்காக இருக்கும். வதந்திகளை கிளப்புவதற்க்காக இருக்கும், ஆபாசங்களை வெளிச்சம் போடுவதாக இருக்கும். பல பயன்கள் (நன்மை / தீமை) குழுக்களுக்கு கிடைப்பதால்... அரசாங்களுக்கே ஆர்குட்டின் அசுரவளர்ச்சி அச்சமூட்டுவதாகவே உள்ளது. இதை உடைப்பதற்கு, அப்படி குழுக்களாக செயல்படுபவர்கள் பற்றியும், என்ன தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன என்பதை அறிய ஆர்குட் பாஸ்வேர்டை கைப்பற்றுவதைத் தவிர வேறு வழி அரசாங்களுக்கு கூட இல்லை.

அரசாங்கங்கள் உள்நாட்டில் தளத்தை தடை செய்ய முடியும் ஆனால் உலக அளவில் செய்ய முடியாது. ஆர்குட் குழுமங்களினால் பாதிக்கப்படும் ஒரு அமைப்பு, ஆர்குட் தளங்களை கைப்பற்ற ஹேக்கர்களை ( பாதுகாப்புவிதி மீறிகளை) நாடுவர். அவர்கள் அதை வெற்றிகரமாக செய்து முடித்தால் பணம் கைமாறும். இது ஒரு லாபம் (பிஸினஸ்) தரும் தொழில் போலத்தான். ஆர்குட் தவிர்த்து வேறு சில தகவல் தொடர்பில் பல நிறுவனங்கள் எதிரி நிறுவனங்களின் ரகசியங்களை அறிந்து கொள்ள ஹேக்கர்களையே நாடுவர். மாட்டிக் கொள்ளாமல் அதை செய்து முடிக்கும் ஹேக்கர்கள் மில்லியன் கணக்கில் பணத்தை அள்ளிவிடுவர். மாட்டிக் கொள்ளாமல் செய்வதற்கென்றே கணனிக்குள் 64,000 ஓட்டைகள் (port - இது பற்றி பிறகு விபரமாக எழுதுகிறேன்) இருக்கின்றன. தொழில் நுட்பம் தெரிந்தவர் அதில் எந்த ஓட்டை அடைக்கப்படாமல் இருக்கிறது என்று அறிந்து அதன் வழியாக சென்று விபரங்களை பெற்றுவிடுவர். ஆர்குட் செயல்பாடுகள் பற்றி நான் அறிந்த வரையில் எழுதி இருக்கிறேன். ஆர்குட் பற்றி அதில் இணைந்துள்ளவர்களுக்கே அதன் செயல்பாடுகள் குறித்து நன்கு தெரியும்.

****

ஆர்குட் - ஐ கைப்பற்றுவதற்கான காரணம் ஆர்குட் - ன் பயமுறுத்தும் வளர்ச்சியே என்று நினைக்கிறேன். அதன் குழுக்களை உடைக்க முடியும் என்று பாதிக்கப்பட்டவர்கள் நினைக்கிறார்கள். ப்ளாக்கரை கைப்பற்றினால் பெரிய அளவில் ஒன்றும் நடக்காது. எல்லாம் இலவச கணக்கு, ஒன்று போனாலும் 100 திறந்து கொள்ளலாம். எழுதியவை கூகுள் கேச்சில் இருந்து ஓரளவு எடுத்துவிட முடியும்.

ப்ளாக்கர் பாஸ்வேர்டை எப்படி கடத்துவார்கள் என்று பார்ப்போம் :

உங்களுக்கு கூகுள் ப்ளாக்கில் இருந்து மின் அஞ்சல் வருவது போல் வரும்,

Dear Blogger,

We have updated new features in to google blogs, please follow the link blogger.com. have a nice day !

Enjoy!

The Gmail Team

இது கூகுளில் இருந்து வந்திருக்கிறது என்று நினைத்து சந்தேகம் கொள்ளாமல் மேல் குறிப்பிட்டிருக்கும் லிங்கை சொடுக்குவீர்கள். ஆனால் அது ப்ளாக்கர் தளத்துக்குச் செல்லாமல் போலி ப்ளாக்கருக்கு சென்றுவிடும். எநத் சொல் மீதும் ஒரு லிங்க் சேர்ப்பது எளிது. blogger.com மீது blogger.blogs.com என்று லிங்க் சேர்த்திருந்தால் நமக்கு உடனடியாக தெரிவதற்கான வாய்ப்பு குறைவே. நீங்கள் blogger.com என்று மின் அஞ்சலில் குறிப்பிட்டு இருக்கும் லிங்கை சொடுக்குவீர்கள், அதில் இணைக்கப்பட்டு இருப்பதோ blogger.blogs.com,



எனவே அது அங்குதான் செல்லும். அந்த பக்கம் blogger.com போன்றே செய்து வைத்திருப்பார்கள். உங்களுக்கு சந்தேகம் வராது. வழக்கம் போல் லாகின் செய்வீர்கள். சரியான பாஸ்வேர்டு அடித்திருப்பீர்கள். பாஸ்வேர்டு 'பிழை' என்று சொல்லிவிட்டு உண்மையான blogger.com திருப்பி (redirect) அனுப்பபட்டுவிடும். அங்கு அதே கடவுசொல்லை அடிக்கும் போது ஒரிஜினல் பளாக்கராக இருப்பதால் உள்ளே சென்றுவிடும்.


உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் பாஸ்வேர்டும் களவாடப்பட்டு இருக்கும். அதை எடுத்த போலி ப்ளாக்கர் எப்போது வேண்டுமானாலும் உங்கள் ப்ளாக்கையோ, ஜிமெயிலையோ திறக்க முடியும். பாஸ்வேர்டையும் விருப்பம் போல் மாற்றிக் கொள்ள முடியும். இதுவும் பிஸ்ஸிங் தொழில் நுட்பம் தான். இதை செயல்படுத்துவதற்கு மிக்க பொருள் செலவு ஆகும், எதாவது நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தால் மட்டுமே இதையெல்லாம் ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு செய்வார்கள். அதைத் தவிர வேறு எவரும் வேலை அற்று இதை செய்தாலும், முன்பு சொல்லிய பலன் தான் கிடைக்கும். ப்ளாக்கர் தொடர்புடைய ஜிமெயில் , ப்ளாக்கர் எல்லாம் குப்பை கூளங்களாகவே ( திராவிட - ஆரிய - சாதி - அரசியல் சாக்கடைகள்) தான் இருக்கிறது. மீறியும் ஒருவன் கைப்பற்றினால் அதை கைப்பற்றுபவன் கிறுக்கனாகத்தான் இருக்க முடியும்.

blogger.blogs.com - இங்கு நான் கொடுத்திருப்பது ஒரு உதாரணத்திற்காக மட்டுமே . 'blogs' என்ற இடத்தில் வேறு பெயர் பயன்படுத்துவார்கள். அது போலியான சர்வரின் தற்காலிக பெயர்.

எவர் அஞ்சல் அனுப்பி இருந்தாலும், அந்த மின் அஞ்சல் வழி ப்ளாக்கரில் நுழையும் முன் அது blogger.com தானா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்