பின்பற்றுபவர்கள்

சமயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 ஜனவரி, 2010

இராமானுஜர்,வடகலை, தென்கலை !

இராமானுஜரின் பெயர், அவருடைய விஷிட்டாத்வைதம் தத்துவம் பரவலாக்கம் செய்யப்பட்டு பெயர்பெற்றதாக இருப்பதை வைத்து அவருடைய காலம் கிமுவாக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்வதுண்டு. பொதுவாக இராமானுஜர், ஆதிசங்கரர் ஆகியோர்களின் பிறப்பை தெய்வீகப் பிறப்பு என்று சொல்லி வருவதன் மூலம் அவர்கள் காலத்திற்கு அப்பாற்பட்டவர்களாக நினைக்க வைத்துவிடுகிறது, இவர்கள் இருவருமே கிமுக்கு பிறகு பிறந்தவர்கள் தாம். இராமனுஜர் கிபி 1017 - 1137 (இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர்)

இராமனுஜரையும், அவரைப் பின்பற்றியவர்களையும் சைவ சமயத்தினர் துன்புறுத்தியதாகத்தான் வரலாற்றில் சொல்லப்படுகிறது. தசவதாரம் படத்திலும் அப்படி ஒரு காட்சி இருக்கும். இராமனுஜரை கொலை செய்ய முயன்றவர்கள் பலர், அதில் கிருமி கண்ட சோழனும் ஒருவன், அந்த நிகழ்வில் இருந்து அவரை தப்பிக்க வைக்க அவருக்கு பதிலாக அவர் பெயரில் சென்றவர் தான் கூரத்தாழ்வார் என்கிறார்கள். கூரத்தாழ்வர் இராமானுஜர் அல்ல என்று ஒற்றர்கள் மூலமாக தகவல் பெற்ற சோழன் கூரத்தாழ்வாரின் கண்களைப் பிடிங்கிவிடுவாரென்றும் அல்லது ஆழ்வாரே பிடிங்கிக் கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.

இராமனுஜரின் காலமும் பக்தி இயக்கம் என்ற பெயரில் வைதீக சைவமும் ஒரே காலத்தில் தான் தோன்றி வளர்ந்திருக்கின்றன. சைவம் ஆதிசங்கரரின் அத்வைதத்துடன் இணைந்த வைதீக சைவமாக வளர்ந்து வந்தது, இதற்கு உரமிட்டவர்கள் மூவர் தேவரம் பாடியதாகச் சொல்லப்பட்ட அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர். இதில் அப்பர் தவிர்த்து மற்ற இருவரும் பார்பனர்கள். இராமனுஜரும் பார்பனரே. முழுமுதல் கடவுள் யார் என்பதை முன்னிறுத்துவதில் தான் சைவத்திற்கும் வைணவத்திற்கும் போட்டியே, இரண்டுமே வேத சார்ப்புடையது வேதங்களில் தங்கள் தெய்வத்தைதான் போற்றி இருப்பதாக இருவரது வாதமும். ஆனால் வேதம் சிவனையோ, கிருஷ்ணனையோ போற்றி இருக்கிறது என்றால் உண்மையில் அவ்வாறு இல்லை, வேதங்களில் பிந்தைய மண்டலங்களில் தான் இருவரும் அறிமுகம் ஆகின்றனர். ரிக்வேதத்தின் முக்கிய இறைவணக்கமே இந்திரனுக்கு உரியதுதான். வேதம் பாஷ்யங்கள் (விளக்கம்) மற்றும் உபநிஷத்துகள் (வேத சாரம் என்பார்கள்) ஆக வளர்ச்சி பெற்றபோது சிவனும் விஷ்ணுவும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அந்த காலகட்டத்தில் ஏற்கனவே ஜைனமும், பவுத்தமும் நன்கு வளர்ந்திருந்தது, வேத விளக்கங்களுக்கு இந்திரன் தவிர்த்து ஆரியர் அல்லாதவர்களின் நடைமுறையில் இருக்கும் தெய்வங்களை இணைத்துக் கொண்டால் தான் வேதங்களைப் பரவலாக்கம் செய்ய முடியும் என்பதால் சிவன், விஷ்ணு, வினாயகர் போன்ற வணக்கங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

அவ்வாறு இணைக்கும் போது கந்தபுராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம் போன்ற கதைகளை எழுதி சேர்ப்பதன் மூலம் இந்த தெய்வங்களுக்கு வேத தெய்வங்கள் என்கிற தகுதியும் கொடுக்கப்பட்டது, வழக்கமாக கதையின் அரசியல் (அதை வேண்டுமானால் தத்துவம் என்பதாக கொள்க) என்ன வென்று தெரியாமல் கதையை மட்டும் உண்மை என்று நம்பும் வழக்கத்தால் இந்த தெய்வங்கள் முன்னிலைக்குச் சென்று, மூல வேதத்தில் போற்றப்பட்ட இந்திரன் காணாமல் போனான். மேலும் மிகுதியாக வைதீகமயமாக்கியதில் தம்மையும் மறந்து இந்திரன் குறித்து மிகவும் ஆபாசமான கதைகளை புனைந்து இந்திரன் என்பவன் ஒரு காமவெறியன் என்ற அளவுக்கு கதையை கேட்பவர்கள் நினைக்க இந்திரனின் சிறப்புகள் எனக் கூறப்பட்டவை அனைத்தும் மறைந்து, நாட்டார், தொல்திராவிட தெய்வங்கள் வேதமயமாயின. மாயோன் (கிருஷ்ணன்), சேயோன்(முருகன்), துர்கை, சிவன் ஆகியவை வேதம் போற்றாத காலத்தில் பார்பனர்கள் அல்லாதவர்கள் வணங்கி வந்தவையே. கருப்பு நிறந்தில் இருந்த கிருஷ்ணன், முருகன் போன்ற தெய்வங்கள் இப்பொழுது பலிங்கு வெண்மைக்கு மாறி பூணூலுடன் வைதீக தெய்வமாக மாறிக் கொண்டன.

பழம் இந்தியா முழுவதிலும் கிருஷ்ணனை வழிபட்டவர்கள், சிவனை வழிபட்டவர்கள் என்பதாகத்தான் தனித்தனி நம்பிகையுடன் இருந்தனர். வேத சார்பில் இவ்விரு தெய்வங்களையும் வேதமயமாக்கியவுடன் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் ஏன் பெரும் குழப்பம் ஏற்பட்டது என்றால் இத்தெய்வங்களை வழிபடுபவர்களிடம் ஆளுமை செலுத்த இரண்டையும் ஒன்றாக்குவதும், ஒன்றை மட்டும் உயர்த்துவது என்பது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. வழி வழி வந்த வழிபாடுகளை விட்டுவிட எவரும் துணியாததால். வைதீக மயமாக்கப்பட்ட கிருஷ்ணன் மற்றும் சிவ வழிபாடுகள் முறையே வைதீக வைணவம், மற்றும் வைதீக சைவம் என்று இரண்டுமே பார்பனத் தலைமையால் பிரிந்தன.

சைவ(பக்தி இயக்க) சமண சண்டையைப் போல், வைண சைவ சண்டை பெரிதாக நடக்கவில்லை, காரணம் இரண்டுமே வேத சார்ப்புடையது என்பதால் தான். மற்றபடி இரண்டிற்கும் ஏற்பட்ட சிறு பூசல்கள் அரச ஆதரவு பெறுவது யார் என்பதில் ஏற்பட்ட பிணக்குகளே. வைணவ பெற்றோர்களுக்கு பிறந்த இராமனுஜர் முறைப்படி வேத கல்வி பெற அத்வைத குரு யாதவ பிரகாசரிடம் சென்றார், அவர் கொடுத்த விளக்கங்களில் இராமனுஜர் மனநிறைவு அடையவில்லை.

'தஸ்ய யாதகப்யாஸம் புண்டரீக மேவமக்ஷிணி' இந்த வேத மந்திரத்திற்கு அத்வைத குரு கொடுத்த விளக்கம் 'பிரம்மனின் கண்கள் குரங்கின் பின்புறம் போல் சிவந்து இருந்தது' இதைக் கேட்ட இராமனுஜர் அதிர்ச்சியுற்றார், ஏனெனில் இராமனுஜருக்கு அத்வைதம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் வடமொழி புலமை பெற்றவர், புண்டரீகம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு, குருவின் விளக்கத்திற்கு மாற்றாக 'பிரம்மனின் கண்கள் (செந்)தாமரை போன்று சிவந்திருந்தது' என்று சொல்கிறது என்றார். குரு அதிர்ச்சியுற்றாலும், இராமனுஜர் தன்னை மறுக்கிறார் என்று நினைத்து சினம் அடைந்தார் என்றும், மேலும் குரு சொல்லிக் கொடுக்கும் 'நான் கடவுள்' என்று சொல்லும் அத்வைத சித்தாந்தை பலமாக மறுத்து வந்தவர் என்பதாலும் அத்வைததிற்கு ஆபத்து என்று அலறிய யாதவ பிரகாசர், இராமனுஜரை தீர்த்துக்கட்ட முயன்றார், இராமனுஜரை கங்கைக்கு பயணப்பட வைத்து அங்கு மற்ற மாணக்கரில் ஒருவர் மூலமாக கங்கை ஆற்றில் இராமனுஜரை தள்ளிக் கொல்லும் திட்டம், இராமனுஜர் உறவினர் ஒருவர் உதவியால் தப்பித்து வந்துவிடுவார், அன்றிலிருந்து குருவும், இவரும் பிரிந்துவிடுவார்கள். இது தான் இராமனுஜரை கொலை செய்ய முயற்சிக்கும் முதல் நிகழ்வு, அதன் பிறகு சோழன், அதன் பிறகு திருவரங்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மற்ற பார்பனர்கள், இராமனுஜர் பிச்சை ஏற்கும் போது பிச்சையிடும் ஒருவரின் உணவில் விசம் வைத்துக் கொள்ள முயன்றதாகவும் அதிலும் இராமனுஜர் பிச்சையிட்டவரின் அப்போதைய முகபாவம் வைத்து தெரிந்து கொண்டு தப்பினார் என்கிறது இராமனுஜர் பற்றிய (இந்திரா பார்த்தசாரதியின் இராமனுஜர்பற்றி நூல்)

இராமனுஜரின் விஷ்டாத்வைததில் இருந்து பிரித்ததே மத்வரின் த்வைதம், இராமனுஜர் போற்றிய அனைத்து சாதிகளையும் அடக்கிய வைணவம் 18 ஆம் நூற்றாண்டில் தான் யார் காஞ்சியா ?, திருவரங்கமா ? யார் ஆளுமை செலுத்துவது என்கிற போட்டியில் மனவாள மாமுனிகள் (தென்கலை, லட்சுமி வணக்கம், சாதிவேறுபாடு கூடாது என்பவர்) மற்றும் வேதாந்த தேசிகர் (வடகலை பார்பனர் தலைமையே சிறப்பு என்பவர்)ஆகியோர்களை பின்பற்றிவோர் களுக்கிடையேயான போட்டியாக வடகலை (வட மொழி வேதம் போற்றுபவர்கள்), தென்கலையாக (நாலாயிரம் திவ்ய பிரபந்தம் போற்றுபவர்கள்) பிரிந்தது என்கிறது இராமனுஜர் பற்றிய தொடர்புடைய தகவல்கள்.

மற்றபடி சைவ சித்தர்கள் 18, நாயன்மார்கள் கதைகளுக்கும், வைணவ 12 ஆழ்வார்கள் கதைகளுக்கும் பூச்சுற்றல் அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை, சமயம் வாய்க்கும் போது ஆழ்வார்கள் பற்றி எழுதுகிறேன்.

இன்றைக்கு பலரை போலி சாமியார்கள் என்கிறோம், காரணம் தோற்றம் ஒன்றாகவும் செயல் வேறொன்றாகவும் இருக்கும், பொதுவாக வைதீக சமயங்களில் சமயத்தலைவர்கள் முற்றிலும் மழித்துக் கொள்வது வழக்கத்தில் இருந்தது இல்லை. சிறிய உச்சிக் குடுமி உண்டு. பழைய புராணங்களில் இருக்கும் அனைத்து ரிஷிகளும், குருமார்களும் சடைமுடி வைத்திருப்பதாகத்தான் காட்டினார்கள். இராமனுஜரும் சரி, ஆதிசங்கரரும் சரி அப்போது முழுதாக மொட்டை அடித்துக் கொள்ளும் சமண, பெளத்தர்களைப் போல் தாங்களும் முழுதாக மழித்துக் கொண்டார்கள், இவர்கள் பரப்பியது இவர்களது வேதமே என்றாலும் கூட அவர்களின் கோலங்கள் பெளத்தசாமியார்களைப் போன்றே இருந்தது, இதில் ஆதிசங்கரர் பெளத்தர்களின் மாயவாதத்தை புதிய ஞானமாக திரித்து அதை அத்வைதம் என்றார். அத்வைதம் முழுமுதற்கடவுள் என்று எதையும் காட்டவில்லை என்பதால் அத்வைதத்தை 'பிரசன்ன பவுத்தம்' அதாவது போலி பவுத்தவாதம் என்று பழித்தவர்களில் இராமனுஜரும் ஒருவர்.

துறவிகள் போலி வேசம் போடுவது புதியதும் அல்ல, இந்தியாவுக்கு பிரச்சாரத்திற்கு வந்த கிறிஸ்துவ பாதிரியார்கள் இந்துசாமியர்களைப் போல் தான் உடை அணிந்திருந்தார்கள். மக்கள் எதை சிறப்பாக கருதுகிறாகளோ அந்த வேடத்தைத்தான் துறவிகள் போட்டுக் கொள்கிறார்கள். நாளடைவில் அது அவர்களது அடையாளமாகவே போய்விடுகிறது. எனக்கு இராமனுஜர் உருவத்தைப் பார்க்கும் போது நாமம், கொடிகளை எடுத்துவிட்டுப்பார்த்தால் நீண்ட காது மற்றும் மொட்டையுடன் சமண மற்றும் பவுத்த துறவி போன்றே தெரிகிறார். பெளத்த, சமண புலால் மறுத்தலை உயர்வாக இராமனுஜர் மற்றும் சங்கரர் பின்பற்றி வரித்துக் கொள்ள பிறகே தென்னிந்திய பார்பனர்கள் சைவ உணவுக்கு மாறினார்கள்.

9 ஜூலை, 2009

மகாலட்சுமியும் மட்டன் பர்கரும் !

மட்டன் பர்கரில் மகாலஷ்மி படம் போட்டுவிட்டார்கள், அதானால் இந்துக்கள் கொதித்தார்கள், பர்கர் நிறுவனம் மன்னிப்புக் கேட்டதாக தினமலர் செய்தி ஒன்றை வெளி இட்டு இருக்கிறது. வழக்கமாக செய்திகளில் தொடர்புடைய படம் போடும் தினமலர் இதில் வெறும் பர்கர் படம் மட்டும் தான் போட்டு இருக்கிறது.

தினமலர் சென்ற ஆண்டு முகமது நபியின் கார்டூன் வெளி இட்டாதால் இஸ்லாமியர்களிடம் கண்டனம் பெற்றது. அரேபிய நாடுகளில் இணைய தினமலர் பதிப்பு தடை செய்யப்பட்டது. அதையெல்லாம் படத்தோடு வெளி இட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட தினமலர், மகாலட்சுமி மட்டன் பர்கரில் அமர்ந்திருக்கும் படத்தை வெளி இட்டு (இல்லாத) நடுநிலையை மெய்பிக்க திணறுவது ஏன் ?

***

தினமலர் மற்றும் அதேபோன்ற எண்ணம் கொண்டோர் அனைவரிடம் கேட்கும் கேள்வி, மட்டன் இறைச்சிக்கும் இந்துக்கடவுளுக்கும் தொடர்பே இல்லை என்றால், மனித இறைச்சிக்கு தொடர்புகள் உண்டா ?


இது தமிழர்கள் வணங்கும் பெரியாச்சி என்கிற தெய்வத்தின் படம், கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் குலம் தெய்வம் இது என்றும் சொல்லப்படுகிறது.

Periyachi is non-vedic (not based on holy books) and non-brahmic (not a priestly class and non-vegetarian). - இந்த படத்துக்கு மேற்கண்ட ஆங்கில வியாக்கானத்தை இந்த ஆங்கிலப் பதிவில் படித்தேன், இவர்களுக்கு தமிழர்கள் வணங்கும் தெய்வங்கள் என்றால் இளக்காரம் தான். குடலை உறுவி மாலை போட்டுக் கொள்வதால் அது வேதவழி தெய்வம் இல்லை என்றும், பார்பனர்கள் அதற்கு பூசை செய்யவில்லை என்று குறிப்பிட்டவர், அடுத்தவரியில் தற்பொழுது பார்பனர்ர்களும் பெரியாச்சிக்கு பூசை செய்வதாகக் குறிப்பிடுகிறார்.

வடக்கில் காளி என்றும் துர்கை என்று வணங்கப்படும் பெண் தெய்வம் பெரியாச்சியை விட எந்த விதத்திலும் உயர்ந்தது கிடையாது, பெரியாச்சி தமிழ் நில பெண் தெய்வம், துர்கை வடவர் வழிபாடும் பெண் தெய்வம். அதுவும் குடலை உறுவி மாலையாகப் போட்டுக் கொள்வது, மண்டை ஓட்டு மாலை அணி என்றே காட்டப்படுகிறது. அதையும் 'வேதவழி தெய்வம் இல்லை' என்று எழுதத் துணிவார்களா ?

சைவம் - அசைவம் காரணம் சொல்லி மகாலட்சுமி மட்டன் பர்கரில் போட்டது தவறு என்றால் மனித இறைச்சி உண்ணுவதாகக் காட்டப்படும் மாகா காளியும், மகா துர்காவும் பர்கரில் பொறிக்கப்பட்டால் சரியான தேர்வாக இருக்குமா ?

இந்து தெய்வத்தை பர்க்கரில் அச்சிடலாமா கூடாதா என்பது தான் பிரச்சனை அன்றி அது சைவமாக இருக்கிறதா அசைவமாக இருக்கிறதா என்றோ அசைவம் தாழ்ந்தது சைவம் உயர்ந்தது என்றெல்லாம் கட்டமைப்பது தவறு.

23 மார்ச், 2009

ஹிந்து மதத்தின் வீழ்ச்சி ஏன் !

'ஹிந்து மதம்', 'ஹிந்து' என்ற சொல் இந்திய சமயத்தினர்கள் மீது வெள்ளைக்காரர்கள் திணித்ததே. இந்தியாவில் மதம் என்ற பெயரில் எதுவுமே இருந்தது கிடையாது, தமிழில் சமயம் என்றும் வடமொழியில் 'தர்ம(ம்)' என்றே வழங்கப்பட்டு வந்தது. சடங்குகளையும், கொள்கைகளையும் சார்ந்தது சமயங்கள் அவற்றின் வேறுபாடுகளை வைத்து வைதீகம் (பார்பனர்களின் சமயம்), பவுத்தம், ஆசிவகம், சமணம், வைணவம், சைவம், சிறுதெய்வ சமயம் என்று பல்வேறு பெயர்களில் வழங்கப் பெறலாயிற்று. ஆதி இந்தியர்கள் இவற்றில் எதோ ஒரு சமயம் சார்ந்தவர்களாக இருந்தனரேயன்றி அனைத்தையுமே ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். பெளத்தன் சமணனை சாடுவதும், இருவருவரும் ஒருவருக்கொருவர் சாடுவதும், சேர்ந்து வைதீக சமயத்தைச் சாடுவதுமாக இருந்தனர்.

இந்திய புறச் சமயத்தினரான வெள்ளைக்காரர்களும், அவர்களுக்கு முன்பே வந்த லோடி வம்சமும், கஜினி முகம்மதுவும் இங்கே இந்தியாவில் நிலவிய சமயங்கள் அனைத்தையும் பொதுவான ஒன்றாகவே பார்த்தனர், சிந்து நதிக்கு கிழக்கே இருப்பதால் 'இந்தியா' என்று இங்கு நிலவிய சமயங்கள் அனைத்திற்கும் பொதுவான பேராக 'ஹிந்து' சமயம் என்றும் பெயரிட்டனர். அந்த பெயர்கள் அவர்களுக்குள் அழைத்துக் கொள்வதற்காக வைக்கப்பட்டதே அன்றி, பாரத நாட்டினரான நீங்கள் இன்று முதல் இந்தியராகவும், இந்துக்களாகவும் அழைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் ஆணை பிறப்பிக்கவில்லை. அதாவது சைனா நாட்டினரை சீனர்கள் என்கிறோம், ஒரு சீனரிடம் சென்று நாம் அவர்களை 'சீனர்கள்' என்று சொல்வதைச் சொன்னால் தான் அவனுக்கு அப்படி அழைக்கப்படுவதே தெரியும். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தங்களை 'சீனர்கள்' என்று அழைக்கிறார்கள் என்பது சீனருக்கு தெரியாது. இப்படி புறசமயத்தினர் தங்களுக்குள் அழைத்துக் கொண்ட ஒன்றை, விடுதலை போராட்ட்ட காலத்தில் இந்திய சமயத்தினரை ஒன்று திரட்ட இங்குள்ளவர்கள் பயன்படுத்தத் தொடங்கிய போது தான் 'இந்தியா', ஹிந்து என்ற சொல் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது. அதுவரை மக்களின் முகவரிகள் எதோ ஒரு இந்திய சமயம், பாரத தேசத்தை / நாட்டை சேர்ந்தவன் என்பதாகத் தான் இருந்தது. கடவுள் கொள்கை என்றால் அதை மதம் என்றே அழைத்து பழகிய புறசமயத்தினர் (வெளிநாட்டினர்) பாரத சமயங்களை மதம் என்ற ஒற்றைச் சொல்லுடன் 'ஹிந்து' என்ற பெயருடன் அழைத்தனர், அதுவே 'ஹிந்து' மதம் ஆகிற்று.

இந்தியர்களை ஒருங்கிணைக்கும் சொல் அல்லவா ? என்று நினைக்கலாம். ஆனால் இந்தியா என்பது பல்வேறு கலச்சார நம்பிக்கைகள் கொண்டது, அவரவர் நம்பிக்கையே அவரவர்களுக்கு உயர்வானது, சைவ - வைணவ சண்டைகள் இன்றும் தொடர்வதையும், யானைக்கு வடகலை நாமமா ? தென்கலை நாமமா ? என்கிற வழக்கு இன்று முடிந்தபாடில்லை என்றே சொல்கிறார்கள். இப்படி இருக்கையில் 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லால் யாருக்கு லாபம் ? வேற்றுமையில் ஒற்றுமை காணப்பயன்படுகிறதா ? அப்படி எல்லாம் இருப்பது போல் தெரியவில்லை. இன்றும் வைணவர்கள் சிவனை பொருட்டாக நினைப்பது இல்லை, சைவ சமயத்தினரும் அப்படியே. ஆதிசங்கரின் அறுசமயமும் கொள்கையாக ஏற்கப்பட்டதே அன்றி, அதைத் தவிர்த்து அவை யாதொரு வளர்ச்சியும் பெறவில்லை, ஏனெனில் அவை வலிந்து புகுத்தப்பட்ட ஒன்று. அதாவது சமயங்களை ஒற்றைப் புள்ளியில் இணைப்பது, அல்லது அந்த புள்ளியில் இருந்து பிரிப்பது, அப்படி பிரித்து வழங்க முற்பட்டதே ஆதிசங்கரின் அறு சமயம், ஆனால் அதன் பிறகு இராமனுஜர் போன்றவர் அவருக்கென கொள்கைகள் வைத்திருந்தால் ஆதிசங்கரரின் அறுசமயம் வளர்ச்சியடையவில்லை. எதுக்கு இதைச் சொன்னேன் என்றால், ஒற்றைத் தன்மையில் அடைக்க முயலும் எதுவுமே வெற்றிபெறுவதில்லை என்பதற்காக சுட்டினேன்.

மேலே சொன்னது போல் சுதந்திர போராட்ட காலத்தில் இந்தியாவில் இருந்த சமயங்களை ஒருங்கிணைக்க சமயவாதிகளால் புறசமயத்தினர் கொடுத்த 'ஹிந்து' இந்தியா பெயர்கள் பயன்படுத்த முயற்சி நடந்தது, ஆனால் அவை இன்றும் கூட வெற்றி பெறவில்லை என்பதே உண்மை. நமக்கு ஆவணங்களில் 'ஹிந்து' இந்தியா என்று போட்டுக் கொள்கிறோம், கொடுக்கிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால் தமிழனை இந்தியனாக நினைக்கும் கர்நாடகத்தவர் இல்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் மொழிகளால் இந்தியா வேறுபட்டது. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வது போல் 'புண்ணாக்கு' விற்பனெல்லாம் தொழில் அதிபர் என்கிறான் என்பது போல், கார்ப்ரேட் சாமியார்களாலும், போலி சாமியார்களாலும் 'ஹிந்து' என்ற சொல் ஆன்மிக விற்பனையின் லேபிளாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது பொண்ட்டியின் தொல்லையில் இருந்து தப்பிக்க ஓடியவனெல்லாம் தன்னை 'ஹிந்து' சாமியார் என்று அழைத்துக் கொள்வதால் 'ஹிந்து' சமயத்தின் பெயர் வெகுவாகவே பாதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. அதுமட்டுமில்லாமல் வாயில் வந்ததையெல்லாம் உளறி கொட்டி அதை சமய இலக்கியம் என்றும், அறிவுக்கு ஒவ்வாத கதைகளையும் புராணங்களையெல்லாம் 'ஹிந்து' என்ற பெயரில் சேர்த்துக் கொள்வதால், அவற்றிக்கு விளக்கமும் சப்பைக் கட்டுகளையும் செயயும் வீன் வேலைக்கு ஆன்மீக வாதிகள் தள்ளப்படுகின்ரனர். மூட நம்பிக்கைகளுக்கு
முட்டுக் கொடுப்பதே வேலையாகப் போனால் சமயங்களையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் ஊட்டுவது எங்ஙனம் ? இராமகிருஷ்ணர், விவேகநந்தர் போன்ற எத்தனையோ மகான்கள் தோன்றினாலும், புற்றீசல்கள் போல் போலிசாமியார்களும் தோன்றி சமய நம்பிக்கைகளை சீர்குலைப்பதால் உண்மையான ஆத்திகருக்குக் கூட சமய நம்பிக்கைள் மீது சந்தேகங்கள் எழும். இவை அனைத்திற்கும் காரணமே தேவைக்கு மிகுதியாக கட்டுக் கதைகளை அவைகள் 'ஹிந்து' மதததைப் போற்றுகிறது என்ற பெயரில் உள்வாங்கியதே.

'ஹிந்து' மதம் என்கிற ஒற்றைச் சொல் ஒருங்கிணைப்பால் இந்திய சமயங்கள் வீழ்ந்ததேயன்றி எழவேயில்லை. பிரித்தாழும் சூழ்ச்சி போல் இவை சேர்த்தறியும் சூழ்ச்சி போலாகும். இந்திய சமயங்கள் அனைத்தும் சேர்ந்து ஒவ்வொன்றின் முரண்பாடுகளையும் ஏற்றுக் கொள்வது தான் ஹிந்து மதம் என்றும் அவனே 'ஹிந்து' என்ற கட்டாயத்துக்கு இட்டுச் சென்றுவிட்டது. எவனோ ஒருவன் நரபலி இடுவதை 'இந்து சமய நம்பிகை இல்லை' என்று நம்மால் துணிந்து சொல்ல முடியவில்லையே, இப்படி 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லில் நம்மை நாமே அழைத்துக் கொள்ளாமல் இருந்தால் 'நரபலி இடும் பழக்கம்' சைவ, வைணவத்தில் இல்லை என்று சொல்ல முடியும். இந்திய சமயத்தினர் தங்களின் சமயப் பெயரை விட்டு தம்மை 'ஹிந்து' என்று அழைத்துக் கொள்வது முட்டாள் தனமானது. அப்படி அழைத்துக் கொள்வது இந்திய சமய, தத்துவ நம்பிக்கைளை வீழ்ச்சிக்கே அழைத்துச் செல்லும், அப்படி நடந்ததால் தான் தீண்டாமையால் தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பலர் இந்திய சமய நம்பிக்கைகள் மீது நம்பிக்கை இன்றி புற சமயங்களை நாடி இருக்கின்றனர். பகுத்தறிவு வாதிகளும் இந்திய சமயங்களின் நம்பிகை எது ? மூட நம்பிகை எது ? என்று அறியாமல் ஒட்டுமொத்தமாக 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லைக் குறிவைத்தே செயல்படுகின்றனர். ஹிந்துத்துவா வாதிகளும் அரசியல் நோக்கிற்காக 'ஹிந்து' என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் மேற்கொண்டு என்ன சொல்ல ? மீண்டும் இடுகைத் தலைப்பு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்