பின்பற்றுபவர்கள்

செங்கதிர் பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செங்கதிர் பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஆகஸ்ட், 2012

இரண்டாம் அகவை !


கால ஓட்டத்தின் கணக்கு வழக்குகளை பின்னுக்கு தள்ளும் குழந்தைகளின் வளர்ச்சி வியக்க வைக்கிறது, மணமானவர்கள் பெற்றோர்களானதும் அவர்களின் வாழ்நாள் இறக்கைகட்டிப் பறக்கும். குழந்தைகளின் ஒவ்வொரு 10 ஆண்டு அகவைகளும் பெற்றோர்களின் மண வாழ்க்கை மற்றும் அகவைகளை பத்து ஆண்டுகள் கூட்டிச் செல்லும். மகள் பிறந்ததே நேற்றைய நிகழ்வு போல் 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மகன் பிறந்தது முன்னிரவு நிகழ்வு போல் இருந்து, ஓராண்டு ஆகி, ஈராண்டும் ஆகிவிட்டது. ஒரு வயதில் எழுந்து நடக்கத் தெரியும், பசிக்கு அழத்தெரியும், சிரித்து மகிழவும், கையை நீட்டி வாங்கவும் தெரியும் என்று நிலையில் இரண்டாம் ஆண்டை எதிர் கொள்ளும் குழந்தைகள் விருப்பங்களை முடிவு செய்து அடம் பிடிக்கத் துவங்குகிறது,  தனக்கு வேண்டியவை, வேண்டாதவை, கூடவே மொழியைப் புரிந்து கொண்டு பேச முயற்சிக்கும் ஆற்றல் இவைகளை வளர்த்துக் கொள்கிறார்கள், பெண் குழந்தைகள் 18 மாதங்களின் பேசத் துவங்கினால் ஆண் குழந்தைகள் பேசத் துவங்க கூடுதலாக இரண்டு மாதங்கள் ஆகிறது, எங்கப் பையன் 'சிவ செங்கதிர்' கோர்வையாகப் பேசாவிட்டாலும், 'அப்பா மியாவ்' என்று கூறினால் பூனைகளைப் பார்க்க வெளியே அழைத்துச் செல்லச் சொல்கிறான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும், 'அம்மா தண்ணீ' அல்லது 'தண்ணீ' என்றூ சொன்னால் தண்ணீர் கேட்கிறான் என்று பொருள். கூடவே 100க் கணக்கான சொற்களை கற்றுக் கொண்டு தேவையின் போது சொல்கிறான், அக்கம் பக்கம் குழந்தைகளை பெயர் சொல்லி அழைப்பது  உள்ளிட்ட அவனது மழலைப் பேச்சு இனிக்க வைக்கிறது. அழுது அடம் பிடித்தால் எப்படியும் கொடுத்துவிடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதை ஒரு கருவியாகவே பயன்படுத்துகிறான். குழந்தைகள் 2 - 3 வயதில் குணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள், பிடித்தது - பிடிக்காததெல்லாம் இந்த வயதில் அவர்களாக முடிவு செய்பவைகள் அவர்களின் குணங்களாக மாறுகிறது என்றே நினைக்கிறேன்.

ஒண்ணரை வயது வரை விரும்பி நடப்பார்கள், பிறகு தூக்கிச் செல்லச் சொல்லி அடம் பிடிப்பார்கள், நடப்பதால் ஏற்படும் (பிஞ்சுக்) கால்வலி உணர்வும், தூக்கிச் செல்வதால் கால் வலிகாது என்று தெரிந்துவிடுவதால் நடந்து செல்ல விரும்ப மாட்டார்கள், தண்ணீரில் ஆட்டம் போட இந்த வயதில் ரொம்பவே விருப்பம் இருக்கும், மற்ற விளையாட்டுப் பொருள்களைவிட தண்ணீர் விளையாட்டு ரொம்பவும் பிடிக்கும், தண்ணீர் அவர்களின் விருப்பதிற்கேற்ப வளைந்து கொடுப்பதால் தண்ணீரில் விளையாட கொள்ளை விருப்பம் இருக்கும், தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை, வாலிகளை அவர்களுக்கு எட்டும் படி வைக்கக் கூடாது, முடிந்த அளவுக்கு வெற்றுப் பாத்திரங்களையும், குளியல் அறைக் கதவுகளை மூடி வைத்திருப்பதும் நலம். 

********

குழந்தைகளுக்கு தாய்மொழிப் பேச்சு வழக்கு குழந்தைப் பருவத்தில் பயிற்றுவைக்காவிட்டால் பின்னர் அவர்களுக்கு அதன் மீது கவன ஈர்ப்பு வரவே வராது, முடிந்த அளவுக்கு தாய்மொழியில் பேசி வளர்ப்பது தான் குழந்தைகளுக்கு நல்லது,  மூன்று வயதில் பாலர் பள்ளியில் குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக் கொள்வது எளிது, மூன்று வயதில் எதையும் கற்றுக் கொள்ளும் ஆற்றலில் ஆங்கிலம் கற்றுக் கொள்வது அவர்களுக்கு சுமையான ஒன்று இல்லை,  பாலர் பள்ளிக்குச் செல்லும் பொழுது குழந்தைகள் ஆங்கிலம் தெரியாமல் இன்னல் படுவார்கள் என்பது பெற்றோர்களின் தவறான எண்ணம், அனுபவப்பட்டவன் என்ற முறையில் தான் இதனை எழுதுகிறேன், மகளை 2 1/2 வயதில் சிங்கையில் பாலர் பள்ளியில் சேர்த்த போது அவளால் மற்றக் குழந்தைகளுடனும், காப்பாளருடனும் உரையாடமுடியவில்லை என்பது உண்மை தான், ஆனால் இவையெல்லாம் ஒரு மாதங்களில் சரியாகிவிட்டது, ஆங்கிலமே பேசி வளர்த்திருந்தால் அவளால் இயல்பாக பேசக் கூடிய தாய் மொழியை கற்றுக் கொள்ள முடியாமல் போய் இருக்கும், குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட 'சூழல்' என்று வரும் பொழுது எதையும் கற்றுக் கொள்வார்கள். தாய்மொழியை ஒவ்வொரு தலைமுறைக்கும் சரியாகப் பயிற்று வைத்து அடுத்தத் தலைமுறைக்கு மொழியையும் கூடவே அழைத்துச் செல்வது தாய்மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்ட ஒவ்வொருவரின் கடமையும் கூட. ஒரு குழந்தைக்கு தாய்மொழியை பயிற்றுவிப்பதன் மூலம் தாய் மொழியின் புழக்கத்தை இன்னும் ஒரு 80 - 100 ஆண்டுகளுக்கு நம்மால் நீட்டிக்க முடியும், நம்புங்கள்,  தமிழ் நாட்டில் கன்னடம் மற்றும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள் குழந்தைகளிடம் அம்மொழியில் தான் பேசுவார்கள், பின்னர் பள்ளியிலும் வெளியிலும் தமிழில் உரையாடுவதற்கு அவர்கள் எந்த ஒரு இன்னலையும் சந்தித்தது கிடையாது, இதை ஏன் ஆங்கிலத்திற்கும் பொருத்திப் பார்க்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை, கண்டிப்பாக ஆங்கில வழிக் கல்விதான் குழந்தை படிக்கப் போகிறது என்று தெரிந்தும் ஏன் அவற்றை குழந்தைப் பருவத்தில் இருந்து திணிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியது மற்றும் சமுகம், கலை இலக்கியத் தொடர்பிற்கு மிகவும் தேவையானது என்ற அளவில் தாய்மொழி தான் குழந்தைக்கு உணவுடன் சேர்த்து ஊட்டப்பட வேண்டும். 

எனக்கு தெரிந்த நெருங்கிய நண்பர் 'பையன் சிரமப்படுவான் என்று ஆங்கிலத்தில் பேசி வளர்த்தோம், தற்பொழுது அவனுக்கு தமிழ் புரிந்தாலும் பேச தடுமாறுகிறான், அந்த தவறை மகள் பிறந்த பிறகு செய்யக் கூடாது என்பதற்காக அவளிடம் தமிழிலும் பேசுகிறோம்' என்றார். குழந்தைகளுக்கு எளிய ஆங்கிலமும் தமிழுடன் சேர்த்துச் சொல்லிக் கொடுப்பது நல்லது, ஆனால் ஆங்கிலமே போதும் என்று நினைப்பது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மற்றொரு மொழி ஆற்றலை முளையிலேயே கிள்ளி எரிவது போன்றது. நாம் வாரிசுகளுக்கு முறைப்படியாக கொடுக்கும் அழியாதச் செல்வங்களுல் தாய் மொழியும் ஒன்று. போதிய ஊக்கம் கொடுத்தால் ஏனையவற்றை அவர்களே வளர்த்துக் கொள்வார்கள்.

ஒரு குழந்தைக்கு தாய்மொழியில் பெயர் சூட்டுவதால் தாய் மொழிப் பெயர்கள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நிலைக்கும், ஒரு குழந்தைக்கு தாய் மொழி பயிற்றுவித்தால் மொழி சார்ந்து இயங்கும் கலைகளும், இலக்கியங்களும் இன்னும் ஒரு 100 ஆண்டுகளுக்கு படைக்கப்படும் வாய்பையும், தேவையையும் ஏற்படுத்தும், தாய்மொழி எதுவாக இருந்தாலும் அந்த மொழிப் பேசுபவர்களின் கடமை என்ற அளவில் இவை செயலாக்கம் பெரும் போது மொழிகளுக்கு அழிவு என்று யாரும் பேசவே முடியாது. தமிழ் இல்லத்து குழந்தைகளுக்கு  99 விழுக்காட்டு தாய்மொழிப் பெயர் வைக்கும் பழக்கம் இல்லை என்பது நாம் பெருமைப் படக் கூடிய ஒன்று இல்லை. 'ஸ்டைல். பெயர் ராசி' என்ற முடிவில் தாய்மொழிப் பெயர் வைக்கும் பழக்கம் அற்று போய்விட்டது.

இதையெல்லாம் ஏன் இங்கே எழுதுகிறேன் என்றால் என் பையன் தன்னைப் பற்றி அப்பா என்ன எழுதி இருக்கிறார் என்று ஆவலுடன் படிக்கும் பொழுது தனக்கு தமிழ் பெயர் வைத்ததன் காரணத்தையும் சேர்த்தே தெரிந்து கொள்வான், அவனுடைய வாரிசுகளுக்கும் தமிழ் பெயர் வைக்க விரும்புவான்.

*****


கடந்த ஞாயிறு (19 ஆகஸ்டு 2012) செங்கதிரின் இரண்டாம் அகவை நிறைவுற்றது, அக்கம் பக்கம் குழந்தைகளுடன் மிக சிறிய விழாவாக வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தோம், அவனுக்கு பாண்டா கரடி பொம்மை மிகவும் பிடிக்கும் அதானல் அவனுக்கு பிடித்த பாண்டா கேக்.

அலைபேசி, மின் அஞ்சல் மற்றும் கூகுள் கூ(ட்)டல் வழியாக வாழ்த்திய அனைத்து பதிவுலக உறவுகள் மற்றும் நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

25 ஆகஸ்ட், 2011

ஒன்றாம் அகவை !

பிறந்த குழந்தைகள் எவ்வாறு வளருகிறார்கள் என்பதை அறிவதற்கான வாய்ப்பு மகள் பிறந்த போது கிடைக்கவில்லை, அவள் தமிழகத்தில் வளர்ந்து பின்பு இரண்டு வயதிற்கு பிறகே எங்களுடன் இருக்கத்துவங்கினால், கூடவே வைத்து வளர்க்க இயலாத வேலைச் சூழல், போதிய அனுபவமின்மை. ஆனால் மகனை அவ்வாறு விட்டுவிடக் கூடாதென்று இருந்தோம். குழந்தை வளர்ப்பு எளிதல்ல, உறவினர்கள் அற்ற வெளிநாடுகளில் எங்களைப் போன்று கணவன் - மனைவி இருவரும் வேலை பார்க்கும் சூழலில் எளிதே அல்ல. முதல் நான்கு மாதங்களுக்கு மனைவியின் தாயார் உடனிருந்ததால் நல்ல விதமாக சென்று கொண்டிருந்தது, அவரையே தொடரச் செய்வதும் முறையாகாது என்பதால் வீட்டில் முழுநேர உதவியாளர் அமர்த்தி தான் பார்த்துக் கொள்கிறோம்.

ஒரு குழந்தை ஒரு ஆண்டு நிறைவதற்குள் என்ன என்ன வற்றையெல்லாம் கற்றுக் கொள்கிறது வியப்பாகத்தான் இருக்கிறது, நாமும் அவ்வாறு தான் வளர்ந்திருப்போம் என்றாலும் அந்த வளர்ச்சியை நம்மால் உணர்ந்திருக்க முடியாது. முதல் ஒரு மாதத்தில் வைத்த இடத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது கண்விழித்துப் பார்த்துவிட்டு மெலிதாகச் சிரிக்கும், அங்கும் இங்கும் தலையை திருப்பாமலே அசைவதையெல்லாம் பார்க்கும், பசித்தால் அழும், பால் குடித்துவிட்டு தூங்கிவிடும், அடுத்த மாதம் கால் கைகளை ஆட்டி ஆட்டி உதைத்து அழும், விளையாடும், கொலுசு அணிவித்திருந்தால் அந்த கொலுசொலி எந்த இசைக்கும் ஈடாகாது, நள்ளிரவில் விழித்துக் கொண்டால் தெரிய வேண்டும் என்பதற்காகவே ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்துவிடுகிறார்கள். மூன்றாம் மாதம் தலையை அசைக்கிறது, ஒருக்களித்து படுக்கிறது.

நான்காம் மாதம் துவக்கத்திலேயே தலை நிற்க, யார் வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொள்ள முடியும், ஐந்தாம் மாதம் துவங்கும் முன்பே குப்புறப்படுத்துக் கொள்கிறது, விழித்திருக்கும் எப்போதும் குப்புத்துக் கொள்ளவே விரும்புகிறது, அந்த நிலையில் தலையை எந்த பக்கமானாலும் பார்க்க முடிவதால் அதனை விரும்புகிறது, அதன் பிறகு அப்படியே நகரவும் துவங்கும், அடுத்த இரண்டு மாதங்கள் தண்ணீரில் நீச்சல் அடிப்பது போல் தரையில் உந்தி உந்தி உந்தி நகரும், 8 மாதாம் உட்கார வைத்தால் உட்கார முயற்சிக்கும், பின் சாயும், பிறகு சில நாட்களில் உட்காரவைக்க முடியும், அதுவாக உட்கார்ந்த பிறகு தான் தானே மண்டிப் போட்டு தவழ துவங்குகிறது, எட்டாம் முதலே தவழத்துவங்கும், ஆண் குழந்தைகள் 9 மாதாத்திற்கு பிறகு மண்டியிட்டு செல்லத் துவங்குன்றன, பெண் குழந்தைகள் அதற்கும் முன்பாகவே மண்டியிட்டு நகர்கின்றன. பத்தாம் மாதம் துவங்கும் முன்பே எதையாவது பிடித்து எழுந்து நிற்கும். பத்தாம் மாதம் முடியும் முன்பே முன்னம் பற்கள் மேலே கிழே இரண்டாக முளைத்துவிடுகின்றன. எங்கள் மகன் 11 மாதம் தான் நன்றாக மண்டிப்போட்டு ஊறினான், அதற்கு முன்பு குப்புறப்படுத்து நகர்ந்து வருவான்.

12 ஆம் மாதம் கையைப் பிடிச்சு நடத்தினால் கூடவே நடப்பான், தன்னிச்சையாக எழுந்து கொள்கிறான், நாற்காலியை தள்ளி நடக்கிறான், நடவண்டியையும் தள்ளுகிறான், சாவி துளையில் சாவியை நுழைக்க முற்படுவது, பாட்டில் மூடிகளை கழட்ட முற்படுவது என கற்றுக் கொண்டுள்ளான்.





சென்ற வெள்ளிக்கிழமை 19 ஆகஸ்ட் 2011 அவனது பிறந்த நாள், அடுத்த நாள் சிறிய பிறந்த நாள் விழா முடிந்தும் விட்டது. என்னை நெருக்கமாக கருதிய நண்பர்கள், அலுவலக சீன நண்பர்கள், அக்கம் பக்கம் குடியிருப்பாளர்கள் நேரில் வந்திருந்து வாழ்த்தி, பரிசுகளைக் கொடுத்துச் சென்றனர். கூகுள் பஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் ஏராளமான நண்பர்கள் வாழ்த்தி இருந்தார்கள், அனைவருக்கும் மிக்க நன்றி. குழந்தை பிறந்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது அதற்குள் ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. குழந்தை பெற்று வளர்ப்பதில் தூக்கம் கெடுவது, ஓய்வின்மை என பல தொந்தரவுகள் இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு முன்பு அவை ஒன்றுமே இலலை.

பின்குறிப்பு : எனது மற்ற பதிவர் நண்பர்களுக்கு பகிரவே இப்பதிவு.

18 ஜூலை, 2011

மொட்டை !


குழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு சென்று மூன்று வயதிற்குள் அடிக்க வேண்டுமாம். எனக்கு இந்த சடங்குகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், வீட்டில் உள்ளவர்களின் அறிவுறுத்தல், சென்டிமென்ட்ஸ் மற்றும் இதர வகைகளினால் ஒருவயதிற்குள் மொட்டையடிப்பது என்று முடிவாகியது. மேலும் குழந்தையாக இருக்கும் போது முதல் மொட்டை போட முடி கரு கருவென்று வளர்வதற்கு வழிசெய்யும். சிலருக்கு இளம் வழுக்கையை மறைத்து இளமையாக்க மொட்டை பயன்படுகிறது. மகளுக்கு பள்ளி விடுமுறை அடுத்து டிசம்பரில் தான் என்பதாலும் அதற்குள் ஒரு வயது ஓடிவிடும் என்பதால் சிங்கப்பூர் - மலேசியாவில் ஏதோ ஒரு கோவிலில் மொட்டையடிக்கலாம் என்று முடிவாகி, சின்ன சுற்றுலாவாக மலேசியாவிற்குச் சென்று அங்குள்ள பத்து மலையில் மொட்டையடிக்கலாம் என்று உறுதி செய்து பயண ஏற்பாடுகளை செய்தேன். பயண ஏற்பாடுகளுக்கான முன்பதிவுகளை செய்து கொடுத்ததும் கூடவே பயணம் முழுவதும் எங்களுடன் இருந்தார், பதிவர் நண்பர் வெற்றிக்கதிரவன் (எ) விஜயபாஸ்கர். ஒரு நாள் விடுப்பு வெள்ளி அதன் தொடர்ச்சியாக வார இறுதி சனி ஞாயிறு என மூன்று நாள் பயணமாக மலேசியாவிற்குக் கிளம்பினோம்.

சிங்கையிலிருந்து கிளம்பி, அதனை அடுத்துள்ள மலேசியா ஜோகூரில் இருந்து இரவு நேர படுக்கை வசதியுள்ள ரயிலில் தான் பயணம், வியாழன் நள்ளிரவில் கிளம்பிய ரயில் வெள்ளி விடிய காலை 6:30 மணிக்கு கோலாலம்பூர் சென்ட்ரல் சென்று அடைந்தது. அங்கிருந்து மகிழுந்துவில் பயணத்து ஓட்டல் அறையை அடைந்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு கிட்டதட்ட 11 மணி வாக்கில் மற்றொரு மகிழுந்தில் பயணித்து பத்துமலை சென்றோம். கிட்டதட்ட 20 நிமிட பயணம் தான். மலை அடிவாரத்தை நெருங்கும் முன் தொலைவிலேயே பத்து மலை முருகனின் மிகப் பெரிய சிலை வியக்க வைத்தது, இதற்கு முன்பு அங்கு சென்றிருக்கிறேன் என்றாலும் சிலை அமையப் பெற்ற பிறகு சென்றது முதல் முறை என்பதால் அந்த இடமே மாறுபட்டத் தோற்றத்தில் இருந்தது. உருவ வழிபாட்டை புறக்கணிக்கும் இஸ்லாமியர்கள் நிறைந்து இஸ்லாமிய நாடாகவே இருக்கும் மலேசியாவில், இந்திய சமய நம்பிக்கைகளின் ஒன்றான குறிப்பாக தமிழர் நம்பிக்கைகளின் சாட்சியாக கழுத்து சுளுக்கும் அளவுக்கு நிமிர்ந்து பார்க்க வைக்கும் சிலை உருவம், மலேசிய மக்களின் மதச் சகிப்புத் தன்மையின் சாட்சியாக விளங்கியது. இது போன்ற மாபெரும் சிலையை நான் இதுவரை எங்கும் பார்த்தது இல்லை.


சிறுது நேரம் சிலையை நிமிர்ந்து பார்த்துவிட்டு நிழல்படங்களை எடுத்துக் கொண்டு முடி இறக்கும் இடத்திற்கு வந்தோம், கோவில்களில் இருப்பது போன்று முடி இறக்க தனியாக இடம் இல்லை என்பதை நண்பர் முன்பே தெரிவித்திருந்தார், ஆனால் அங்கு அடிவாரத்தில் இருக்கும் முடித்திருத்தகத்திலேயே 'முடி இறக்கும் இடம்' என்ற அறிவுப்பு பலகை இருந்தது,
அங்கு சென்று 10 ரிங்கிட் (மலேசிய நாணயம்) சீட்டு வாங்கி, குழந்தைக்கு மொட்டை ஏற்பாடு செய்தோம், குழந்தையை வெற்றிக்கதிரவன் மடியில் இருத்திக் கொண்டார்,
சிறிது நேரம் அமைதியாக இருந்த குழந்தை அழத் துவங்கினான், பிறகு அவன் அம்மாவிடம் கொடுத்து புட்டிப்பால் புகட்டிக் கொண்டே மொட்டை மொட்டை அடிக்கப்பட்டது, பாதியிலேயே வீரிட்டுக் கத்தத் துவங்கினான்.
மொட்டை அடிக்கும் வேலை 3 நிமிடங்கள் தான் என்பதால் அழுகையை கண்டு கொள்ளாமல் அழுத்திப் பிடித்து கொண்டு மொட்டையை நிறைவு செய்தாகிவிட்டது, கீறல் விழாமல் மொட்டையடித்தைப் பாராட்ட கூடுதலாக 10 ரிங்கிட்டுகள் கொடுத்தோம். குழந்தைகளை குளிப்பாட்ட மின்சார சாதன வெந்நீர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், குளித்து முடித்து, புத்தாடை அணிவித்து தலையில் சந்தனத்தைத் தடவி கோவில் படிக்கட்டுகளை நெருங்கினோம் அதுவரை அழுது கொண்டிருந்தான் பிறகு அங்கிருக்கும் புறாக்களைப் பார்த்து அமைதியானான். நம்மை எதோ செய்கிறார்கள் என்கிற பயம் இருக்கும் போல் குழந்தைகளுக்கு, அங்கு பிறந்த ஒரே மாதம் ஆனக் குழந்தைகளைக் கூட மொட்டை அடிக்க அழைத்துவருகிறார்கள், உச்சிக் குழி மூடாமல் மொட்டையடிப்பதை நினைத்தால் பதட்டமாகவே இருக்கிறது, சீனர்களும் கூட அவர்கள் வழக்கத்தில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு மாதத்தில் மொட்டை அடிப்பதாக முன்பு என்னிடம் தெரிவித்திருந்தார்கள்.


செங்குத்தான படி, 15 - 20 படிக்களுக்கு இடையே கொஞ்சம் அகலமான படிக்கட்டுகளுடன் 300க்கு மேலான படிக்கட்டுகளுடன் படிகள் அமைக்கப்பட்டுள்ளன, முக்கால் பங்கு தொலைவு மேலே ஏறியதும் தான் முருகன் சிலையின் தலை உயரம் வருகிறது, உயரமும், அதன் பின் இருக்கும் மாலை அலங்காரமும் மொத்த சிலையும் கலை அமைப்புடன் 'விசுவ ரூப' தோற்றம் என்று வடமொழியில் கடவுள் குறித்தான கதையாடலில் சொல்ல்படுவதன் சாட்சியாகக் காணப்படுகிறது. அமைப்பாளர்களைப் பாராட்டலாம்.





படிகளின் கைப்பிடிச் சுவர்களில் அங்கங்கே குரங்குகள் விளையாடுகின்றன, சுற்றுலாவாசிகள் படமெடுக்கிறார்கள், மேலே சென்றால் பெரிய குகை, மலைகள் உருகி கூம்புகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன
அவற்றில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டு இருந்தன, நல்ல குளுமை, மழைத் துளிபோல் குகையின் திறந்த பகுதிகளில் மேலிருந்து தண்ணீர் துளிகள் எப்போதும் விழுந்து கொண்டிருக்கின்றன. குகையின் நடுவே தனியாக இருக்கும் முருகன் கோவிலும்,
அதைக் கடந்த படிக்கட்டுகளில் மேலே ஏற அதனை அடுத்து வள்ளி தெய்வானையுடன் நிற்கும் முருகன் கோவிலும் உள்ளது, குகையின் சுவர்களில் சுற்றுலாவாசிகள் பெயர்களை எழுதி இருக்கிறார்கள், அதனைத் தடுக்க 'சுவர்களில் எழுதாதீர்கள்' என்ற அறிவிப்பும் அங்கங்கே இருக்கிறது, குகைச் சுவர்களில் அங்கங்கே பல்வேறு சாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடமே இயற்கைச் சூழலுடன் அமைதியாகவும் காணப்படுகிறது.



அங்குள்ள பூசாரிகளிடம் (இங்கு பார்பனர்கள் அர்சகர்களாக இல்லை, முழுக்க முழுக்க தமிழ் வழிபாடு தான்) திருநீறு குங்குமம் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு திரும்பினோம்,
ஏராளமான ஐரோப்பியர்கள் அங்கு வந்து செல்கிறார்கள், தன் மதம் பற்றிய தெளிவுகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அல்லது புறம் தள்ளிவிட்டு அங்கு கோவிலில் இருக்கும் பூசாரியிடம் மணிக்கட்டில் மஞ்சள் கயிற்றைக் கட்டிக்கொள்கிறார்கள். இந்தக் காட்சியை பிறமதவாதிகள் பார்த்தால் 'இந்தப் பூசாரி சைலண்டாக பிற மதத்தினரை மதம் மாற்றுகிறார் பார்...' என்றும் இந்துமதவாதிகள் பார்த்தால் 'இந்து ஞானமரபினைப் போற்றி இந்து கோவிலுக்கு ஆர்வமாக வரும் கிறித்துவர்கள்' என்றும் சொல்லுவார்கள் நண்பரிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன், கயிறு கட்டிக் கொண்டவர்களில் இஸ்லாமியர்கள் யாரும் இல்லை (வாகபிகள் 'இன்சா அல்லா' என பெருமூச்சு விடலாம்), ஆனால் சுற்றுலாவாசிகளாக குகைகளில் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்கிறார்கள்.






நடக்க இயலாதவர்கள் படிக்கட்டு வழியாக மேலே வர வாய்ப்பில்லை, பிற ஏற்பாடுகள் எதுவும் இல்லை, அவர்கள் கிழிறிந்து பார்த்துக் கொள்ள வேண்டியது தான், இழுவை ரயில்கள் இன்னும் அமைக்கப்படவில்லை, எதிர்காலத்தில் அவை வரலாம். முன்கூட்டியே வேட்டி எடுத்துவந்த்தால் மடித்துக் கட்டிக்கொண்டு ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வசதியாகத்தான் இருந்தது, சுற்றுலாவாசிகள் காலணிகளுடன் ஏறுகிறார்கள், அவை தடைசெய்யப்படவில்லை, இந்துக்கள் காலணிகளை கீழேயே விட்டுவிட்டு ஏறுகிறார்கள்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். ஒருவிதத்தில் பத்து மலை மலேசியாவின் ஆகச் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு தமிழர் பண்பாட்டு சின்னங்களை அமைத்திருப்பது அடுத்து செல்லும் நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது, அவர்களின் உழைப்பும், ஈடுபாடும் போற்றுதலுக்குரியது. பிற நாடுகளில் வாழும் சீனர்களுக்கு அடுத்து தங்களுக்கான அடையாளங்களை உருவாக்கிக் கொள்வதில் தமிழர்கள் முனைப்புடன் தான் இருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்றாகும் என்பதை நினைத்துக் கொண்டே திரும்பினேன்.

பின்குறிப்பு : குழந்தைப் படங்களை பதிவுகளில் போடுவதற்கு நிறைய நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்து தனிப்பட்ட முறையில் நன்கு சொல்லி இருக்கிறார்கள், இதில் ஏன் போடுகிறேன் என்றால், எனக்கு இருக்கும் பதிவர் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய மகிழ்ச்சியான பொழுதுகளை பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ந்து பிறகு இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவணமாகத் தான் போடுகிறேன்.

5 ஜனவரி, 2011

குப்புறப் படுத்தாலும்......

பால் குடிக்க மட்டும் கற்றுக் கொண்டு பிறக்கும் குழந்தை நாள் அடைவில் செய்யும் செயல்கள்...வியப்போ வியப்பு...நாமும் அதையெல்லாம் செய்திருப்போம், ஆனால் நாம பார்த்திருக்க மாட்டோம். குழந்தைகளின் தலை நிற்கவே நான்கு மாதங்கள் ஆகும், அப்பறம் தான் பிரண்டு படுக்க முயற்சி செய்வார்கள். எங்க வீட்டு குட்டிப் பையன் சிவ செங்கதிர் நேராகவே படுத்திருந்தது போதும்னு முடிவு செய்து குப்புற படுத்து தலையைத் தூக்க துவங்கி இருக்கிறான்.



ரெடி ஸ்டார்ட்......




கையை எடுக்க வரலையே.....



கையை கஷ்டப்பட்டு எடுத்தாலும்....தலையைத் தூக்கினால் தான் ஒப்புக் கொள்ளுவாங்களாம்....




தலையை நிப்பாட்டவே எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும்...



தலையைத் தூக்கிட்டோம்லே.....



எப்பூடி.......!!! எல்லோரும் ஜோராக ஒரு தடவை கைத்தட்டுங்க....
மீசையில் ஒண்ணும் மண்ணு ஒட்டல....வாயிலேர்ந்து கொஞ்சம் ஜொள்ளு தான்......

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்