பின்பற்றுபவர்கள்

தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 ஜூலை, 2009

மின்னணு வாக்கு இயந்திரங்களை முற்றிலும் அழிக்கலாம் !

மின்னணு வாக்குப் பதிவு வரவேற்க்கக் கூடிய ஒன்று தான். இதன் மூலம் கள்ள வாக்குப் பதிவை தவிர்க்க முடியாதெனினும் விரைவாக வாக்கு எண்ணிக்கைக்கு வழி வகை செய்கிறது. ஆனால் இவற்றிற்கும் ஆன செலவுகளுக்கான பலனை இவைத் தரவில்லை என்பதே உண்மை, வாக்குப் பதிவின் போது இயந்திரங்கள் பழுதானதும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் தங்கள் அடுப்பொடிகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்களை கைப்பெற்றிக் கொண்டு தங்களுக்கே வாக்களித்துக் கொண்டு வாக்களர்களைத் துறத்தினார்கள் என்றும் செய்திகள் வந்தன. வாக்குப் பதிவை வீடியோ எடுப்பது போன்ற நடவெடிக்கைகள் வெறும் வாக்களர் கண் துடைப்பாகத்தான் நடைபெறுகின்றன. வாக்காளர்களின் சான்றாவணங்களில் எதோ ஒன்று இருந்தால் போதும் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டி வாக்களிக்க முடியும் என்றெல்லாம் தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்தாலும் மின்னனு வாக்குப் பதிவு முழு வெற்றிப் பெறவில்லை. தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளின் குற்றச் சாட்டுகளை மறுப்பதற்கும் திணறுகிறது. முறைகேடு நடைபெறுவதில்லை என்கிற தேர்தல் ஆணையத்தின் வெறும் நம்பிக்கை வழியுறுத்தல் மட்டுமே என்பதாகவே எதிர்கட்சிகள் கருதுகின்றனர்.

உலகில் முதன் முறையாக, உலகில் மாபெரும் மின்னணுவாக்குப் பதிவு என்பதெல்லாம் வெறும் சாதனை வாக்கியங்கள் தானா ? மின்னணு வாக்குப் பதிவை முறை படுத்த முடியாதா ? கண்டிப்பாக முறைப் படுத்த முடியும். அதற்கு முதலில் வாக்குப் பதிவு மின்னணு எந்திரங்களை எல்லாம் ஒரு பெரிய திடலில் குவித்து வைத்து புல்டவுசரை விட்டு ஏற்றி அழித்துவிட்டு மக்கும் குப்பையாக மாற்றி ஆழக் குழியில் புதைக்க வேண்டும். தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டது, இன்றும் இந்த பழைய முறை வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்துக் கொண்டிருந்தால் தேர்தல் தோறும் குழப்பமே வரும். மின்னணு வாக்குப் பதிவை தற்போது இருக்கும் தொழில் நுட்ப முறையில் இன்னும் சிறப்பானதாக 100 விழுக்காடு நம்பகத் தன்மையுடன் நடத்த முடியும்.

எப்படி ?

இன்று உள்ள சிறப்பான மின்னணு தொழில் நுட்பங்கள் இதற்கு உதவி செய்யும்
1. கிளைன்ட் சர்வர் எனப்படும் பொதுவான டேட்டாபேஸ் சர்வர் மற்றும் அதனை தொடர்பு கொள்ளும் கணிணிகள்
2. தொடுதிரைகள்
3. கம்பியில்லா (வயர்லெஸ்) இணைப்பு
4. வாக்களர்களின் ஆள்காட்டி விரல் ரேகை பதிவு (நன்றி பதிவர் அறிவிலி - இராஜேஷ் குமார்)

வாக்காளர்களின் பெயர் மற்றும் முகவரியுடன், புகைப்படம் மற்றும் அவர்களின் விரல் ரேகைகளை தொகுதிக்கு ஒன்றாக சர்வர் கணிணியில் பதிந்துவிட்டு, அந்த சர்வர் கணிணியை பல்வேறு வாக்குச் சாவடியில் வைக்கப்படும் க்ளைண்ட் கணிணியுடன் இணைத்து, கைரேகை படிக்கும் கருவியுடன் இணைத்துவிட்டால் போதும்.
ஒவ்வொரு வாக்களர் வாக்களிக்கும் போதும் கைரேகையை ஒப்பிட்டு வாக்களிக்க அனுமதிக்கும் படி மென்பொருள் அமைத்துவிட்டால் போதும். வாக்களர்கள் கைரேகையை சரிபார்த்தவுடன் விரும்பிய வேட்பாளரின் சின்னத்தை தொடுதிரையில் தொடுவதன் மூலம் வாக்குப் பதிவை செய்யலாம். ஒரு 17" தொடுதிரைக்கு 20 வேட்பாளர் வரை விரல் தொடுவதற்கு ஏற்ற அகலங்களுடன் வடிவமைத்து வைக்க முடியும். 40 வேட்பாளர் இருந்தால் அருகருகே இரண்டு தொடுதிரை வைத்துவிட்டால் போதும், கணிணிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடுதிரை இணைக்க கிராபிக்ஸ் வன்பொருளை (Video Graphic Cards) அதே எண்ணிக்கையில் சேர்த்தாலே போதும். கணிணிகளில் இந்த வசதியை சேர்ப்பதும் எளிதுதான். மிகுந்த அளவாக 100 வேட்பாளர்கள் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரு கணிணியும் 5 தொடுதிரைகளும் போதுமானது. இன்றைய தேதிகளில் இதற்கு ஆகும் செலவு ஒரு தொகுதிக்கு ரூ 50,000 மட்டுமே, இந்த கணிணிகளை தகுந்த மின் கலன் Backup உடன் வைத்துவிட்டால் திடீர் மின்சாரம் தடைபெற்றாலும் தொடர்ந்து இயங்கும். 32" தொடுதிரைகளைப் பயன்படுத்தினால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடுதிரைகள் தேவை இருக்காது.

வாக்குப்பதிவு க்ளைண்ட் கணிணிகள் அணைத்தும் சர்வர் கணிணியுடன் வயர்லஸ் இணைப்புடன் இருப்பதால் பாதுகாப்பான இடத்தில் இருந்தால் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பில்லை.
வாக்களித்தவர் மீண்டும் வாக்களிக்காத வண்ணம் விரல் ரேகை பதிவை ஒப்பிட்டு கணிணி மென் பொருள் தடுக்கும் வண்ணம் அமைத்துவிட்டால் போதும். வாக்குப் பதிவை ஆளில்லா பணமெடுக்கும்
இயந்திரம் அமைப்பது போல் அமைத்துவிட்டு ஒரு ஏகே 47 னுடன் ஒன்று/இரண்டு காவல் அலுவலரைப் போட்டாலே போதும், வேண்டுமென்றால் பாதுகாப்பு கேமரா ஒன்றே ஒன்று பொருத்தலாம். வாக்குப் பதிவுக்கு இவ்வளவு அலுவலர்களும் அவர்களின் பந்தாக்களும் வெகுவாக குறைக்க முடியும்.

அனைத்து சர்வர் கணிணிகளையும் (ஏற்கனவே) தலைமை சர்வர் கணிணியுடன் இணைத்துவிட்டால் போதும், வாக்குப் பதிவு முடிந்ததும் சில நொடிகளில் வெற்றியாளர்களையும், அணைத்து வாக்குப் பதிவு விவரங்களையும் அறிவித்துவிட முடியும். இன்று வளர்ந்துள்ள தொழில் நுட்பத்தில் இதைச் செயல்படுத்துவது மிகவும் எளிது, பழைய வாக்குப் பதிவு இயந்திரங்களைவிட வாக்களிக்கும் முறையும் எளிது, மிகவும் பாதுகாப்பானது. வாக்குப் பதிவு க்ளைண்ட் கணினியைத் தூக்கிக் கொண்டு ஓடினாலும், தண்ணீரையே அதில் கொட்டினாலும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாக்குகளை ஆளுமை அதிகாரவர்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த முறை மின்னணு வாக்குப் பதிவின் தேர்தல்கள் பூசல், புகார்கள் குறைந்து அமைதியாகவும் நம்பகத் தன்மையுடனும் நடக்கும்.

20 மே, 2009

பாரதிராஜா சூடு : 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள்'

தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற (இடைத்?) தேர்தல் முடிவுக்கு பிறகு,
இயக்குனர் பாரதிராஜாம் ஜூனியர் விகடன் பேட்டியில் ஐயத்திற்கிடமின்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில்,

''ஈழத் தமிழர் பிரச்னையைக் காரணம் காட்டி, காங்கிரஸாருக்கு எதிராகப் பிரசாரத்துக்குப் போனீர்கள். ஆனாலும், காங்கிரஸ் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் ஜெயித்துவிட்டதே..?''

''தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். தமிழர்களிடம் வாக்கு வாங்கி அமைச்சரான ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு ஆகியோர் அதை வேடிக்கை பார்த்தார்கள். அவர் களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் எங்களுடைய தமிழீழ திரைப்பட ஆதரவு இயக்கத்தின் சார்பில் பிரசாரத்துக்குப் போனோம். அதை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டோம். இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு ஆகியோருக்கு எதிராக மக்கள் தீர்ப்புகள் வந்திருக்கிறது. ப.சிதம்பரம் கணக்கே வேறு. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பின்தங்கியிருந்தார். கடைசி நேரத்தில் எப்படி ஜெயித்தாரோ, அது தெரிய வில்லை..! 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள். அதன் பிறகு, ஆகவேண்டியதைப் பார்த்துக்கொள்ளலாம்...' என்று டெல்லியிலிருந்து உத்தரவு வந்ததாகச் சொல்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது அவருக்கும் தோல்விதான்!''




பசிக்கு பிச்சை இட்டது இப்படித்தானா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ஆளும் கட்சியின் கூட்டணியின் இணைந்த "கைகள்" தேர்தல் பதிவு அலுவலகம் அனைத்திலும் கனிசமான அளவுக்கு செயல்பட்டுள்ளதால், 40(39+1) தொகுதியிலும் நடந்த தேர்தல், இடைத்தேர்தல் போல் இருந்தது என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது உண்மையான வெற்றி என்றும் பெரும் சாதனை என்றும் சொல்கிறார்கள்.

16 மே, 2009

திமுக கூட்டணி வெற்றி குறித்தும்... ஈழத் தமிழர்களுக்கும் !

முடிவுகள் முழுதாக வெளிவராத இன்னிலையில் திமுக கூட்டணி 27 இடங்களையும் அதிமுக கூட்டணி 9 இடங்களையும் பெற்றிருக்கிறது. 40க்கு 40 வெற்றி பெற்ற திமுக அணி இந்த முறை 10 இடங்களை இழந்திருக்கிறது. அதன் பழைய கூட்டணியில் இருந்த பாமகவின் தொகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கிறது. 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துவிட்டு, திமுகவுடன் ஈகோ யுத்தம் காரணமாக, அணிமாற ஈழத்தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி, அணிமாறி கூடுதலாக ஒரு இடம் பெற்று வெற்றி பெறலாம், செல்வாக்கை வளர்க்கலாம் என்ற பாமகவின் நினைப்பில் தமிழக வாக்களர்கள் மண்ணை தூவி உள்ளார்கள். முதல் முறையாக திருமாவளவன் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளார்.

இதை திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றி என்று சொல்வதற்கில்லை. சென்ற முறை பாராளுமன்ற உறுப்பினர்களே இல்லாத அதிமுகவிற்கு, பிரதமர் யார் என்றே முன்னிறுத்த முடியாத நிலையிலும் 10 தொகுதிகள் வரை கிடைத்திருப்பது திமுக கூட்டணியின் செயல்பாடுகளில் அதிருப்தி அலை வீசி இருப்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். வீரவசனம் பேசிய காங்கிரஸ் பெரும் தலைகள் தோல்வியைத் தழுவியது தமிழுணர்வாளர்களுக்கு கிடைத்த வெற்றி. ப.சிதம்பரம் முதலில் தோல்வி என்றார்கள் பிறகு வெற்றி என்றார்கள், என்ன மாய்மாலமோ தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம்.

எதிர்கட்சிகள் திமுக ஆட்சியை தேர்தலுக்கு பிறகு அகற்றுவோம் என்பதை முன்னிறுதி தேர்தலில் பரப்புரை செய்தது அந்த கட்சிகளுக்கு எதிராகவே அமைந்திருக்கிறது, இன்று எதிராக பேசுபவர்கள் தேர்தலுக்கு பிறகு அவர்கள் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார்கள் என்பதை நடுநிலை வாக்காளர்கள் புரிந்து கொண்டு எதிர்கட்சிகளின் திடிர் ஈழ ஆதரவை முன்னிறுத்தி வாக்களிக்காமல் திமுகவிற்கே வாக்களித்துவிட்டனர். அதாவது பாராளுமன்ற தேர்தலில் அளிக்கப் போகும் வாக்கு மூலம் தமிழக அரசை மாற்ற வழி ஏற்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.

இந்த தேர்தலில் திருமா வெற்றி பெற்றிருப்பதை வரவேற்கிறேன். திமுக கூட்டணிக்கு முழுமையான வெற்றி தந்துவிடாத தமிழக வாக்காளர்களைப் போற்றுகிறேன். ஏனெனில் 40க்கு 40 பெற்றிருந்தால் தாம் வைத்ததே சட்டம், தாம் எதைச் செய்தாலும் மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்றே அவர்கள் செயல்படுவார்கள், அது ஓரளவு தடுக்கப்பட்டு இருக்கிறது. திடீர் திடீர் கொள்கை மாற்றம் முழுமையான வெற்றியைத் தந்துவிடாது என்பதை ஜெ - உணர்ந்து கொள்வார்.

தொடக்க காலத்தில் கள்ளவோட்டு, பிறகு கவர்ச்சி மிகு இலவச திட்டங்கள், தற்பொழுதைய ட்ரெண்டாக கரன்சி இரைப்பு ... ஆகியவற்றை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி ஜெனநாயகத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்று பரிணாமம் பெற்றிருக்கும் திராவிட சித்தாந்தம் வாழ்க !வாழ்க !

*****

வாக்கு பதிவு முடிந்த நிலையில் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்பதை (நேற்றுதான் அறிந்து கொண்டது போல்) குறிப்பிட்டு கருணாநிதி நேற்று மீண்டும் மத்திய அரசை வலியுறுத்த, மீண்டும் தபால் / தந்தி அனுப்பி இருக்கிறார். அரசியல் / தேர்தல் சாணக்கியர் கருணாநிதிக்கு பாராட்டுகள்.

ஈழத்தில் முழுமையாக வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் அரசு - இராஜபக்சே அரசு ஆகியவற்றிற்கும் வாழ்த்துகள் !


*****

நான் முன்பே எழுதியபடி தமிழகத்தில் ஈழ உணர்வை முன்னிலைப்படுத்தி யாரும் வாக்களிக்கவில்லை, காங்கிரஸின் பெரும்தலைகள் பெற்ற தோல்வி திரைத்துறையினர் காங்கிரஸின் தொகுதிகளில் செய்த பிரச்சாரம் மூலம் ஓரளவுதான் சாத்தியப்பட்டு இருக்கிறது. 15 பேர் வரை தீக்குளித்துள்ளார்கள். தமிழக தமிழர்கள் அந்த அளவுக்குத்தான் ஈழத்தமிழர்கள் பற்றிய உணர்வில் செயல்பட்டு இருக்கிறார்கள். மற்றபடி தமிழகத்தில் முழுமையான மாற்றம் என்பதை ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பது வீண். இலங்கைவாழ் தமிழர்களே இலங்கை அரசில் அங்கம் வகித்து தமிழர்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது வேறு நாட்டில் வசிக்கும் தமிழர்கள் வெறும் இன உணர்வு அடிப்படையில் ஓரளவுக்கு உணர்ச்சி காட்டி செயல்படுவதை ஆறுதலாகவே கொள்ள வேண்டும். நாளை மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் தமிழக தமிழனை செருப்பால் அடித்து துறத்திவிட்டு தமிழகத்தை ஆக்கிரமித்தால் வரலாற்றில் இத்தகைய நிகழ்வுகள் இயல்பானது என்றே நினைத்து கொண்டு இருந்துவிடுங்கள். ஏற்கனவே தமிழன் கர்நாடகம், மலேசியா ஆகிய நாடுகளில் செருப்படி படும் போது நாங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து பழகி இருக்கிறோம். நீங்கள் தமிழ், தமிழுணர்வு என்றெல்லாம் பெரிய பெரிய எதிர்ப்பையெல்ல்லாம் மூட்டைக் கட்டிவிடுங்கள்.

ஈழத்தில் வீழ்ந்த, கொலை செய்யப்பட்ட, வாழ்வுரிமை இழந்த அன்புத் தமிழர்களே ! இறை நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், இனி எடுக்கும் எந்த பிறவியிலும் ஒரு தமிழனாகவே பிறக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள் !

சீமான், பாரதிராஜா பரப்புரை வெற்றி !

தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் சீமான், பாரதி ராஜாவின் பேச்சு எடுபட்டுள்ளது. காங்கிரசு மத்திய அமைச்சர்கள் அனைவரும் தோல்வியை தழுவும் முகத்தில் இருக்கின்றனர்.

நம்ம செதம்பரம் ஐயா, தங்கபாலு, ஈகேவிஎஸ் இளங்கோவன், அய்யர் அனைவரும் பின்வாசல் வழியாக மந்திரியாகும் முயற்சியில் இறங்க ஆயத்தம்.

40க்கு 40 வாய்ச்சொல்லுக்கு ஆப்பு !

14 மே, 2009

எக்சிட் போல் முடிந்ததும் ...

"தலைவரே 39 தான் கிடைக்கும் னு சொன்ன மாதிரியே..."

"அது போதாதும், ஒண்ணு தானே குறைச்ச போனால் போகுது, இது மாபெரும் வெற்றிதான்"

"அட அதச் சொல்லலை தலைவரே உங்க பையன் +12 ரிசல்டுல கணக்கில் 39 வாங்கி பெயிலாகி இருக்கானாம்"

****

நிருபர் : "சார் உங்க கட்சி இந்த தேர்தலில் பின்னடைஞ்சிருக்கிறதா எக்ஸிட் போல் கணிப்பு சொல்லுதே"

தலைவர் : "அது மூணுமணி நிலவரம், அதுக்கு பிறகுதான் எங்க ஆளுங்க குத்தவே ஆரம்பிச்சாங்க"

நிருபர் : !!!! (கள்ள ஓட்டைச் சொல்றாரோ ?)

****

"நம்ம தலைவர் தான் இந்தியாவிலேயே தேர்தல் முடிந்ததுமே... ரிசல்டு வருவதற்குள் வேகமாக செயல்படுகிறார்..."

"தொகுதி பணிகளுக்கு திட்டம் தீட்டச் சொல்லி வேட்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்கிறாரா ?"

"கூட்டணி மாறிட்டார்"

***

"நம்ம கட்சி எப்படியும் இந்த தேர்தலில் தோத்துடும் போல இருக்கு..."

"என்னய்யா சொல்றே...நம்ம பாரம்பரிய வாக்களர்கள் போட்டாலே ஜெயிச்சிடுவோமே"

"இல்ல தலைவரே...நமக்கு 49 ஓ வில் ஓட்டுப் போடச் சொல்லி எதிர்கட்சிக்காரர்கள் நம்ம கட்சியின் கரைவேட்டியைக் கட்டிக் கொண்டு சென்று பொய் பிரச்சாரம் செய்துட்டாங்க......விழந்தது பூரா 49 ஓ வுக்காம்"

"........!"

***

"இந்த தொகுதியில் நாமதான் செயிப்போம் என்று எப்படி உறுதியாகச் சொல்றிங்க"

"இனிமே எம்பியை தொகுதிப் பக்கம் பார்க்க முடியாதுன்னு தீர்மானம் போட்டு, நம்ம கட்சி வேட்பாளரைக் கண்டு பிடிக்கச் சொல்லி அந்த தொகுதி மக்கள் ஆள்கொணர்வு மனு போட்டு இருக்காங்களாம்"

***

"நம்ம தலைவர் கூட்டணி கட்சி மீது கடுங் கோபமாக இருக்கிறார்"

"ஐயோ என்ன ஆச்சு"

"அவங்க நிற்காத தொகுதிகளில் எதிர்கட்சிகளிடம் கள்ள உறவு வைத்திருந்து அவர்களுக்கு வாக்களித்தது தெரிஞ்சுபோச்சாம்"

திவாலாகும் வாக்கு வங்கிகள் !

வாக்காளனின் தேவை சமூக மாற்றம், நாடு விடுதலைப் பெற்ற பிறகு குறிப்பாக தமிழகத்தில் காங்கிரசு ஆட்சிக்கு மாற்றாக திராவிட சித்தாந்தம் முன்வைக்கப்பட்டது பண்ணையார் முறை தலைமைத்துவமும், காங்கிரசு ஆட்சி அதற்கு ஆதரவாக இருப்பதும் மக்கள் முன் வைக்கப்பட்டது, கல்வி / வேலை வாய்ப்பு / தாய்மொழி / சமத்துவம் ஆகியவற்றை முன்வைத்து திராவிட சித்தாந்தம் திகவில் இருந்து பிரிந்த அரசியல் கட்சியாக திமுக என்னும் கட்சி உருவானது. 10 ஆண்டுக்குள் பெரும் வளர்ச்சி பெற்று காங்கிரசை தமிழக சட்டமன்ற தலைமை ஆக்கிரமிப்பில் இருந்து துறத்தி அடித்தது. பாமரனும் கட்சிப் பதவியையும் அதன் மூலம் அரசு துறைகளை வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததால், திமுக விற்கு பெரும் வரவேற்பும், அதன் மூலம் நேர்மையாளர், எளிமையானவர் என்று சொல்லப்பட்ட காமராசரும் கூட காங்கிரசு என்கிற கட்சியிலேயே தொடர்ந்ததால் தோற்கடிக்கப்பட்டார்.

அண்ணாவிற்கு பிறகு தேர்தல் களம் கண்ட திமுகவில் கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு திமுக உடையவே எம்ஜிஆர் தலைமையில் அதிமுக ஏற்பட்டது. அடுத்த அடுத்த தேர்தலில் திராவிட சித்தாந்தம், திராவிடக் கொள்கைகள் ஆகியவற்றில் நீக்கு போக்கும், நீர்த்து போதலும் இரு கட்சிகளிலுமே ஏற்பட்டது, அதன் காரணமாக காங்கிரஸ் எதோ ஒரு திராவிடக் கட்சிகளில் இணைந்து கூட்டாகவே தேர்தலை சந்தித்து வந்திருக்கிறது. காங்கிரசுக்கு மாற்று என்று மக்கள் முன் முழங்கிய முன்வைக்கப்பட்ட திராவிடக் கட்சி(கள்) காங்கிரசுடனேயே கை கோர்த்து களம் கண்டன. இதில் ஓரளவு சமரசம் ஏற்பட்டாலும் திராவிட மற்றும் காங்கிரசுக்கு தேசிய அறைகூவலாக, பாஜக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வந்தது. வேறு வழியின்றி, திராவிட, காங்கிரசு, கம்யூனிஸ்டுகள் இணைய வேண்டிய காலகட்டத்திற்கு பாஜக இக்கட்சிகளை தள்ளிவிட்டது.

பாஜகவிற்கு எதிர்ப்பு என்பதை மக்கள் முன் தெளிவாக, பயம் கொடுத்து சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு இந்த கட்சிகள் சென்றன. திராவிட - காங்கிரஸ் சித்தாந்த முரண்பாட்டை முழுப்பூசனிக்காயக மறைக்க கிடைத்த இலைச் சோறாக 'மதவாதம்' என்ற சொல்லாடலை மக்கள் முன் வைத்தனர். ஊருக்குள் புதிய திருடன் நுழைந்தால் பழைய திருடர்கள் தொழில் பாதிப்பு அடைவதை உணர்ந்து இணைந்து புதிய திருடனை காட்டிக் கொடுப்பது போல், பாஜக மதவாதக் கட்சி என்று மக்கள் முன் திராவிட, காங்கிரசு, கம்யூனிச (தமிழக கட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்) பயம் காட்டி தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ள முயன்றன. இராசீவ் மரணத்திற்கு பிறகு, காங்கிரசின் நரசிம்ம ராவ் ஆட்சிக்கு பிறகு பாஜக பெரிய வளர்ச்சி பெறவே, மூப்பனாரின் தமாக திமுகவை ஆதரிக்க, எஞ்சி இருந்த சில்லரை காங்கிரசு காரர்கள் அதிமுகவை ஆதரிக்க அந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது, குஜ்ரால் / தேவகவுடா (?) தலைமையில் ஏற்பட்ட மத்திய அரசில் தாமக உட்பட பல உதிரிக்கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன, அதுவும் குறுகிய காலம், பிறகு ஜெ-வின் ஆதரவுடன் பாஜக ஆட்சி ஏற்பட்டு கவிழ்ந்தது.

அதுவரை மதவாத பாஜக என்று கூறிவந்த திமுக, 'பாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல' என்ற ஒரு ஸ்டேட் மெண்ட் கொடுத்துவிட்டு பிஜேபியிடன் கூட்டணி அமைத்து ஆட்சியிலும் 5 ஆண்டுகள் பதவி பெற்றது. பின்னர் பாஜக செல்வாக்கு சரியவே காங்கிரசுடன் இன்று வரை ஒட்டிக் கொண்டு இருக்கிறது. ஜெ காங்கிரசு கூட்டணிக்கு முயன்றார். திமுகவுக்கு - காங்கிரசுக்கும் அப்படி என்ன ஸ்பெக்டரம் பந்தமோ இணை பிரியாமல் தற்போதைய தேர்தல் முடிவு வரை தொடர்கிறார்கள்.

********

இதெல்லாம் எதுக்கு எழுதினேன் ?

அதாவது கட்சி / கொள்கைகள் என்றெல்லாம் எந்த ஒரு கட்சிக்கும் தொண்டர்களாக சேருபவர்கள் அக்கட்சியின் தொடக்க காலத்தில் மட்டுமே, திமுக உடைந்த போது அதிமுகவிற்கு தொண்டர் அளவில் வந்தவர்களும் / அங்கேயே இருந்தவர்களும் அவர்களின் வாரிசுகளில் சிலரும் தான் இன்று வரை அடிப்படட தொண்டர்களாக வாக்கு வங்கியாக தொடர்கிறார்கள். அதிலும் பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற சாதிக் கட்சிகள் தொடங்கப்பட்ட பிறகு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் ஹவாலா அளவுக்கு ஓட்டை விழுந்துவிட்டது.

இவர்களுக்கே இப்படி என்றால் காங்கிரசுக்கு வாக்கு வங்கிகள் என்பது மூப்பனார் காலத்து சில பெருசுகளும், அவர்களின் சொத்துக்களை காக்கும் பேரன்களுமே மிச்சம், புதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் பெரும அளவில் காங்கிரசின் கொள்கை பிடித்து கடந்த முப்பது ஆண்டுக்குள் காங்கிரசுக்கு வந்தவர்கள் என்றால் தமிழகத்தைப் பொறுத்த அளவில் சில ஆயிரங்கள் என்ற அளவில் இருக்கும், மூப்பனாருக்கு பிறகு இளைஞர்கள் காங்கிரசில் சேருவதற்கான எந்த ஒரு கொள்கையோ கவர்ச்சியோ இருந்தது இல்லை. அதிமுக ஜா - ஜெ என்று பிரிந்ததால், அந்த தேர்தலில் தனித்து களம் கண்ட காங்கிரசு 25 சட்ட மன்ற இடங்களைப் பெற்றது. அது நடந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தற்போதைய நிலையில் அதிமுக, திமுகவைத் தவிர எந்த ஒரு கட்சியும், தனித்து நின்றால் ஒரு இடம் பெருவது கூட அரிதே, முதல் முறை என்பதால் வி.காந்து மட்டும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தின் எந்த ஒரு தொகுதியிலும் இருக்கும் வாக்களர்களில் 50 விழுக்காட்டிற்கும் மேல் ஒரே கட்சிக்கு வாக்களிப்பர்கள் இல்லை. அதுவே இன்றைய நிலைமை. கட்சித்தொண்டர்கள் என்று பார்த்தால் அதிமுக, திமுக கட்சிகளுக்கே 10 விழுகாடு இருந்தால் அதுவே மிகுதி, காங்கிரசு ? உங்க அக்கம் பக்கம் வீட்டுக் காரங்க அல்லது தெருவில் எத்தனை காங்கிரசு காரர்கள் என்று தேடிப்பாருங்க விரல் விட்டே எண்ணிவிடலாம்.

பாமகவை மட்டுமல்ல, காங்கிரசையும் திமுக, அதிமுக கட்சிகள் முதுகில் ஏற்றிக் கொள்ளவில்லை என்றால் தமிழகத்தில் காங்கிரசும் காணாமல் போகும். தமிழகத்தில் காங்கிரசுக்கு உயிர் தண்ணீர் ஊற்றிவருபவர்கள் திராவிடக் கட்சியினர் தான். திராவிடக் கட்சிகளுகே தமிழகத்தில் வாக்கு வங்கிகள் சிறுசேமிப்பு திட்டம் போல் பிழைப்பை ஓட்டி வருகின்றன. இதில் காங்கிரசுக்கு வாக்கு வங்கி ? எங்காவது குக்கிராமத்தில் இருந்தால் உண்டு :)

சோற்றுக்கே வழி இல்லாமல், அடிமைப்பட்டால் தான் பெரும் புரட்சி ஏற்பட வேண்டும் சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வாக்காளர்கள் அனைவருமே ஒன்று போல் சிந்தித்து வாக்களிப்பாளர்கள், அப்படி பட்ட நிலையில் மக்கள் நிலை இல்லை. தங்களுக்கு பெரிய அளவில் வாக்குவங்கிகள் இருப்பதாக அரசியல் கட்சிகள் சொல்வது ஏமாற்ற வேலை, இன்றை ஓட்டுக்கள் அனைத்துமே நோட்டுகளாலும், சாதி, மதத் தலைமையினாலும், சில நடுநிலையாளர்களின் ஊழல் எதிர்ப்பு என முவ்வகையில் தீர்மாணிக்கபடுகின்றன. பெரும்பான்மை சாதியினர் இருக்கும் ஊர்களில் சிறுபான்மையினரைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்கும் நிலைக்கு எந்த ஒரு பெரிய கட்சிகளும் தயாராக இல்லை, ரிஸ்க் எடுப்பதும் இல்லை.

தற்போதும், எப்போதும் அனைத்து கட்சிகளுமே, தேர்தலில் பணத்தில் விளையாடுவதும், கூட்டங்களுக்கு லாரிகளில் ஏற்றிச் செல்வதுடன், மூன்று வேளை உணவுடன், பிரியாணி கொடுத்து, நாள் ஊதியம் கொடுத்து மக்களை அழைத்துச் செல்வதிலிருந்தும், முடிந்த அளவு மாபெரும் கூட்டணி என்று காட்ட முயல்வதிலிருந்தே வாக்கு வங்கிகள் திவாலாகி வருவது கண்கூடு.

13 மே, 2009

மாடாக உழைக்கும் இந்த பிள்ளைக்கு ஓட்டுப் போடக் கூடாதா ?




யப்பா பதிவர் சஞ்செய், தம்பி ராகுலுக்கு கூலி கிடைச்சுதான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க, கிடைக்கலைன்னா போட்டுக் கொடுப்போம். :)

வேர்த்து விறுவிறுத்து பயபுள்ள எப்படி உழைக்குது, பார்க்கிறவங்களுக்கு ரத்த கண்ணீரே வந்துடும் போல.

குறிப்பு: மின் அஞ்சலில் வந்தப்படம்

40 க்கு 40 ! :)

கற்பனைக்கு காசா / பணமா ? எக்சிட் போல் காத்திருப்பில்......சும்மா டைம் பாஸ்,

*******

மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து பெரு மகிழ்ச்சி தெரிவித்த விஜயகாந்த், மனைவி பிரமலதா விஜயகாந்தின் அனுமதி பெற்று "இது மக்களுக்கு கிடைத்த வெற்றி, கடவுளுக்கு கிடைத்த வெற்றி, இனி பாகிஸ்தான் பார்டரை தாண்டி ஒரு தீவிரவாதியும் வரமுடியாது"
(எல்லையில் அகழி வெட்டுவாங்களோ ?)

மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து மற்றற்ற மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி, "மீண்டும் வெற்றிக்கனியை பெற்றுத்தந்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன், சூழ்ச்சிக்காரர்கள் பேச்சற்று வீழ்ந்துவிட்டார்கள், ஏச்சுக்காரர்கள் மூச்சற்று சாய்ந்துவிட்டார்கள், கூச்சல்காரர்கள் ஓய்ந்து மாய்ந்துவிட்டார்கள், இனி தமிழக ஏழைகளுக்கு போனசாக 50 ரூபாய் மளிகை சாமான்களுடன் ஒரு மாதத்திற்கு தேவையான குழந்தைகளுக்கான குச்சிமிட்டாய்களையும் இலவசமாகத் தருவோம்"
(ஆரம்பிச்சிட்டாங்கய்யா)

மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து கருத்து தெரிவித்த செல்வி ஜெயலலிதா, "என்னுடைய தலைமைக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல,கருணாநிதியின் சிறுபான்மை மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான வெற்றி, இதை தனது ஆட்சியின் தோல்வியாக ஏற்றுக் கொண்டு கருணாநிதி பதவியையும் ஆட்சியையும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும், அதிமுக தலைமைக்கு துணை பிரதமர் பதவி கொடுக்கும் தேசிய கட்சிக்கே அதிமுக பிரதமர் வாக்கெடுப்புக்கு ஆதரவு கொடுக்கும்... அந்த வகையில் காங்கிரசுக்கு..."
(அடக் கொடுமையே ! )

மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி - சமக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது,
(போட்டி இட்டதே 30க்கும் குறைவான இடம் தானே ? இவங்க 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மற்ற 10 இடங்களில் வெற்றிப் பெற்றவர்கள் இவங்க கூட்டணியை ஆதரிக்கப் போறாங்களாம் அதான்)

இது குறித்து சபதம் மேற்கொண்ட இல.கனேசன், "போலி மதச்சார்பின்மை தோற்றுவிட்டது, ஹிந்து தேசிய உணர்வு வெற்றி பெற்றுவிட்டது, அத்வானிஜி தலைமையில் அகண்ட பாரத வல்லரசை உருவாக்குவோம். என்றார்
(கிழிஞ்சிடும் !வல் அரசு வாழ்க !)

12 மே, 2009

ஈழம் - வாக்களிப்பில் பெரிதாக மாற்றம் ஏற்படுத்தாது !

கடந்த 10 நாட்கள் தமிழகத்தில் இருந்த போது கண்ட உண்மை இது. வலைப்பதிவில் ஈழம் தேர்தலில் ஒலிக்கும் என்று காரசாரமாகப் பேசுகிறோம். ஆனால் சரியான திட்டமிடல் மூலம் ஈழப் பிரச்சனை தேர்தலில் ஒலிக்க வண்ணம் வெற்றிகரமாக தவிர்க்க முடியும் என்பதை திமுக கழக கூட்டணிக் கட்சிகள் சாதித்து இருக்கின்றன. தொடக்கம் முதலே ஈழம் பற்றிய விழிப்புணர்வு பேச்சாளர்களை சிறையில் தள்ளி தேர்தல் வரையில் ஈழம் தொடர்பான செய்திகள் மக்களை எட்டா வண்ணம் மிகுந்த கவனம் எடுத்து கையாளப்பட்டு இருக்கிறது. ஊடகங்கள் பெரும்பாண்மை ஆளும் கட்சி சார்பிலும், ஈழப் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இருந்ததால் சீமான் போன்றோரின் பேச்சுகள் ஒரு சில தொலைகாட்சிச் சானல் தவிர்த்தும், நேரடியாக கேட்ட மக்களைத் தவிர்த்தும் ஈழப் பிரச்சனை மக்களிடம் கொண்டு செல்லப்படவே இல்லை. ஏன் கொண்டு செல்ல வில்லை என்பதற்கான காரணம் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை.

எங்கள் தெருவில் இருந்த வாக்களிக்கும் சிலரிடம் கேட்ட பொழுது, 'ஈழத்தில் சண்டை நடப்பதாக கேள்விப்பட்டேன்' என்ற அளவில் தான் சொன்னார்கள். வாக்கு யாருக்கு என்று கேட்ட போது, திமுக கூட்டணிக்கு மாற்றாக வாக்களிக்கப் போவதாகவும், அதற்குக் காரணமாக ஜெவின் பேச்சைக் குறிப்பிட்டார்கள், அதாவது திமுக ஊழல் செய்துவிட்டதாகவும், ரவுடிகள் மிகுந்துவிட்டதாகவும், விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும், மின் வெட்டையும் குறிப்பிட்டனர்.

தேநீர் கடையில் இருவர் பேசிக் கொண்டதில், 'சீமான் பேசினதைக் கேட்டிங்களா, மனுசன் அழறான், கேக்க பாவமாக இருக்கு, நான் இந்த முறை அதிமுகவுக்கு ஓட்டுப் போடப் போறேன்' என்றார்கள். மற்றபடி ஈழம் தொடர்பில் திமுக - காங்கிரசு கூட்டணிக்கு எதிர்ப்பு ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை இல்லாமலேயே ஆட்சி முறை, வாரிசு அரசியல் இதைக் காரணம் சொல்லி அதிமுகவிற்கு வாக்களிக்கப் போவதாக சொல்பவர்களே மிகுதி.

திமுக கட்சிக்காரர்களைப் பொருத்த அளவில் எதைச் சொல்லி பரப்புரை செய்வது என்பதில் தெளிவற்று இருப்பதால், சன் டிவி உட்பட ஆளும்கட்சி மீடியாக்கள் ஜெ வின் பழைய ஆட்சியில் நடந்த வற்றை 'ஞாபகம் வருதே' என்ற பாடல் பின்னனியில் காட்டுவதில் இருந்தே, சாதனை என்று எதையுமே மக்களிடம் கொண்டு செல்ல இவர்களிடம் எதுவுமே இல்லையா ? என்றே எண்ண வைக்கிறது. 3 ஆண்டு மானிலத்திலும், 5 ஆண்டு நடுவன் அரசிலும் இடம் பிடித்த கூட்டணி 'ஜெ வின் ஆட்சியை நினைவு படுத்தி மக்களை பயமுறுத்தி வாக்கு பெற முடியும் என்று நம்புவதைப் பார்க்கும் போது அந்த கூட்டணி தங்கள் செயல்பாடுகளில் நம்பிக்கை இழந்திருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது, அந்தோ பரிதாபம் !!!

தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரசை ஆதரிக்கும் என்று யார் கிளப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை. திமுகவினரிடம் பேசும் போது அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் அப்படி பரப்பப்பட்ட செய்தி திமுகவினருக்கு பாதகமாகவே அமைந்திருக்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் வாக்களியுங்கள் என்று வெளிப்படையாக சொல்ல முடியாமல் திணறுகின்றனர். இதனால் கூட்டணி வெற்றி என்ற அளவில் அப்படி பரப்பப்பட்ட செய்தி திமுகவைப் பொறுத்தவரை பின்னடைவே. இராச தந்திரம் என்ற பெயரில் இப்படி எதையாவது அபத்தமாக செய்வது திமுகவிற்கு வாடிக்கை தான். பலமுறை ஆட்சியை இழந்ததற்கும், கூட்டணிக்குள்ளே இழுபறி ஏற்பட்டதற்கும் காரணமே இத்தகைய மட்டமான இராச தந்திரமே காரணமாக அமைந்திருக்கிறது.

ஈழம் பற்றிய பாதிப்பு இந்த தேர்த்தலில் 10 விழுக்காட்டிற்கும் குறைவே என்பது களத்தில் பார்க்கும் போது தெரிந்த கண் கூடு. அதற்குக் காரணம் மீடியாக்கள் வழியாக அந்த செய்திகளை எடுத்துச் செல்லாமலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்தியாக வலிந்து சொல்ல முயன்றதே. ஜெ பிரச்சாரத்தின் போது ஓரளவு ஈழம், தமிழ் மக்கள் கொல்லப்படுவது, தனி ஈழம் தீர்வு பற்றிப் பேசினார். இரட்டை இலை வாக்கு வங்கிக்கு அந்த தகவல் வெறும் தகவல் தான். மற்றபடி தமிழ் உணர்வாளர்களை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும், ஆனால் விழுக்காட்டு அளவில் தமிழ் இன உணர்வாளர்கள் வாக்காளர்களில் குறைவே. நடுநிலை வாக்காளர்கள் ஈழம் தொடர்பில்லாமலேயே மின்சாரம் மற்றும் பல பிரச்சனைகள் தொடர்பில் திமுக கூட்டணிக்கு எதிராகவே திரும்பி இருக்கின்றனர்.

அதிமுக கூட்டணி 29 இடங்களும்,

திமுக கூட்டணி 11 இடங்களும் பெரும்,

ப.சிதம்பரம் தோற்கடிக்கப்படுவார் என்றும் சொல்கிறார்கள்

28 ஏப்ரல், 2009

தேசிய பாது'காப்பு' சட்டமும், ஆட்சியாளர்களின் குறுமதியும் !

இறையாண்மையைக் காக்கிறோம் என்கிற பெயரில் கடுமையான சட்டங்களை இயற்றுகிறார்கள். ஆனால் அந்த சட்டங்களை பயன்படுத்தும் தேர்தெடுக்கப்படும் அரசியில் கட்சிகளின் அரசு, அதைத் தங்களின் அரசியல் நோக்கிலேயே தன்னலத்திற்காக பயன்படுத்துகின்றன.

பொடா சட்டம், தடா சட்டம் போன்றவை இந்த வகைதான். தடா சட்டம் என்ற ஒரு சட்டம் முன்பு இருந்தது, அதைக் கொச்சைப் படுத்தியவர் ஜெ. முன்பு சு.சாமிக்கும் ஜெ-வுக்கும் இடையிலான கடுமையான முட்டல் மோதல்கள் இருந்த நேரம் தடா சட்டம் என்கிற ஒரு சட்டம் இருந்தது, அதில் தீவிரவாதிகள் என்று ஐயப்படுபவர்களை விசாரணையின்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைக்கலாம். அதில் சிக்கிய கைதி ஒருவரின் புகைப்படத்தை சு.சுவாமியுடன் இணைத்து, 'இதோ பாருங்கள், சு.ஸ்வாமி தடா இராவியுடன் போஸ் கொடுக்கிறார், எனவே சு.ஸ்வாமியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள். தடா இரவி - சு.ஸ்வாமி புகைப்பட இணைப்புக்கு தி.க ஐயாவே அறிவுறுத்தல் கொடுத்தார் என்று அப்போது பரவாலாகப் பேசப்பட்டது. பிறகு தடா புகைப்படம் தடவியல் ஆய்வாளர்களால் போலியானது என்று சொல்லப் பட்ட பிறகு அடங்கியது. இணையப் பக்கங்களில் தேடிப்பார்த்தால் தடா ரவி - சு.ஸ்வாமி இணைந்த போலி புகைப்படம் கிடைக்கலாம். சு.ஸ்வாமி நல்லவர் வல்லவர் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. தடா சட்டத்தை எப்படி பயன்படுத்த முயன்றார்கள் என்பதற்காகச் சுட்டினேன்.

அடுத்து பொடா சட்டம் அதில் வைகோ விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்ற குற்றச் சாட்டில் ஓராண்டுக்கும் மேலாக வைக்கப்பட்டார், பிறகு வழக்கு போதிய ஆதராமின்றியும், தீவிரவாதத்திற்கு இந்தியாவில் இடம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசவில்லை என்பதால் பிசுபிசுத்தது, வைகோவும் வெளியே வந்தார். அதே காலகட்டத்தில் வைகோ மட்டுமல்ல நக்கீரன் கோபால் போன்றவர்கள் மீதும், 17 வயது சிறுவன் மீதும் கூட பொடா சட்டம் பாய்ச்சப்பட்டது. சிறுவன் மீது பாய்ச்சப்பட்ட பொடாவிற்கு நீதிமன்றத்தால் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு சாதாரண சிறுவர் குற்ற வழக்காக மாற்றப்பட்டது. நக்கீரன் கோபால் செய்த குற்றம் ? வீரப்பனைப் பேட்டியெடுத்ததும், அதில் ஜெ பற்றிய கடுமையான விமர்சனங்கள் இருந்ததும், தொடர்ந்து அதிமுக, ஜெ, சசிகலா பற்றி நக்கீரனில் எழுதி வந்ததும் தான் காரணம். மற்றபடி நக்கீரனை பொடாவில் போட எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. நக்கீரன் கோபால் தனது வாதங்களை வைத்துவிட்டு எளிதாக வெளியே வந்தார்.

தற்பொழுது சீமான், கொளத்தூர் மணி போன்றவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்ற அதே குற்றச் சாட்டில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். சீமான் வெற்றிகரமாக வைகோ பாணியில் வெளியே வந்துவிட்டார். கொளத்தூர் மணியும் வெளியே வருவார்.

ஆட்சியாளர்களுக்கு இது நிற்கும் வழக்கு இல்லை என்று தெரியாதா ? தெரியும். ஆனால் இந்த வழக்கில் சிக்க வைப்பதன் மூலம் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தொடர்புடையவர்கள் என்று குற்றம் சுமத்தப்படுபவர்களை உள்ளே வைத்து காழ்புணர்வை தீர்த்துக் கொள்கிறார்கள். சீமான் போன்றோரை உள்ளே வைப்பதன் மூலம் அவர் மூலம் எடுத்துச் சொல்லப்படும் விழிப்புணர்வை குறுகிய காலத்திற்கு தடுக்க முடியும் என்று நம்புகிறார்கள், அதன் படியே நடக்கிறார்கள். மற்றபடி இது செல்லாத வழக்கு என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால் இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்த வித இழப்பீடும் கிடைக்கவில்லை என்பதையும் சட்ட இயற்றுபவர்கள் பார்ப்பது இல்லை. இது போன்ற சட்டங்களினால் ஒருவர் பாதிக்கப்பட்டு அது அரசியல் காழ்புணர்வினால் எடுத்த பழிவாங்கள் நடவடிக்கை என்று குற்றவாளி உறுதிப்படுத்தும் (நிரூபணம்) போது அந்த சட்டத்தில் முகாந்திரமின்றி அரசியல் நோக்கிற்காக கைது செய்யப்பட்டதற்கு தக்கதொரு இழப்பீடு கொடுக்கப் படவேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் சட்ட அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்ற ஒரு பிரிவுகளும் இருந்தால், இது போன்று பழிவாங்கும் கைது நடவெடிக்கைகள் குறையும்.

ஒரு சில சட்டங்களை இயற்றும் போது பலர் அதற்கு எதிராக திரும்பப் பெறும் படி போராடுவது எதற்கென்றே தற்பொழுது தான் புரிகிறது. நேர்மையற்ற அரசியல் ஆட்சியாளர்களின் கையில் சட்டம் அவர்களது எதிரிகளைப் பழிவாங்கும் இன்னொரு ஆயுதமாகவே செயல்படுகிறது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கூட்டணி வெற்றிப் பாதுகாப்புக்காக முறைகேடாக பயன்படுத்துவது அரசியலில் மாபெரும் அசிங்கம், அதை மக்கள் ஆட்சி (ஜெனநாயக) படுகொலை என்றும் வகைப்படுத்தலாம்.

27 ஏப்ரல், 2009

என் ஓட்டும் ஜெ-வுக்கே !

தேர்தல் நெருங்க யாருக்கு ஓட்டு என்கிற முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்திற்குள் வந்தாச்சு. காங்கிரசுதான் தமிழர் எதிரி (கர்நாடகம் - தமிழகம் காவேரிப் பிணக்குகள், ஒக்கனேக்கல் பிணக்குகள், இராமேஸ்வரம் மீனவர் கொல்லப்படுவது ஆகியவற்றை இதுவரை காங்கிரசுவாதிகள் கண்டுகொண்டதில்லை, கூடுதலாக ஈழவிடுதலையை இராசீவ் காந்தி கொலையை சாக்கிட்டு நசுக்குவது) எனவே காங்கிரசை தேர்தலில் வீழ்த்துவதே சரியான முடிவு என்கின்றனர். கூடவே கருணாநிதியின் மீது இருக்கும் பழைய பாசம் காரணமாக திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்கின்றனர். எது லாஜிக் படி எப்படி சரி என்று கேட்டால், தேர்தலுக்குப் பிறகு ஜெ எப்படி வேண்டுமானாலும் மாறுவாராம், காங்கிரசுக்கே ஆதரவு கொடுப்பாராம். இதே நிலையை திமுகவும் எடுத்திருக்கிறது, மதவாதக் கட்சி மதவாதக் கட்சி என்று பாஜக பற்றி கருத்துக் கூறி வந்த திமுக, பாஜக தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் வளர்ந்து ஏற்கனவே பிரதமர் பதவியில் அமர்ந்த பிறகு ஜெவினால் கவிழ்க்கப்பட்ட பாஜக அரசை காப்பாற்றி பதவி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுகவும் கொள்கைக்கு எதிராக, தொண்டர்களின் எதிர்ப்புக்கு எதிராக, திகவின் எதிர்ப்புக்கும் எதிராக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.

ஐந்தாண்டு ஆட்சிக்கு பிறகு இந்திய அளவில் பாஜக செல்வாக்கு இழக்கவே காங்கிரசுடன் கைகோர்த்தது திமுக, அப்போதும் எப்போதும் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி ஏற்படாததற்குக் காரணம் ஜெ சோனியாவை பதிபத்தி இல்லாதவர், வெளிநாட்டைச் சேர்ந்தவர், ஆண்டனோ மொய்னோ என்ற தனிப்பட்ட விமர்சனங்கள் செய்தது தான், மேலும் 1992 தேர்தலில் இராசீவ் மரணத்தால் நான் வெற்றிபெறவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார், அதையும் மீறி காங்கிரசார் சிலர் அதிமுகவுடன் கூட்டணி தொடர முயன்ற போது மூப்பனார் தலைமையில் தமாக உருவாக திமுகவும் அதனை ஆதரிக்க சட்டமன்றத்தில் திமுக ஆட்சி தொடர்ந்தது, மீண்டும் தமாக, காங்கிரசு இணைந்தது. அந்த தேர்தலில் அதிமுக - காங்கிரசு கூட்டணி வெற்றிபெறவில்லை, ஜெ திடிரென்று பாஜகவை 13 மாதங்களுக்கு ஆதரித்தார், பிறகு கவிழ்த்தார். மேலே குறிப்பிட்ட படி பாஜகவை திமுக ஆதரித்தது. மற்றபடி தமிழக காங்கிரசு தலைவர்களும், மற்ற காங்கிரசு புள்ளிகளும் ஜெவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினர். அந்த கூட்டணி ஏற்படாமல் போனதற்கு சோனியா - ஜெவுக்கு இடையே நடந்த நீயா நானா போட்டிதான். மீண்டும் காங்கிரசு ஆட்சிக்கு ஜெவின் தயவு தேவைப்பட்டால் சோனியா இறங்கிவருவார். எந்த ஒரு நிபந்தனையுமின்றி ஜெ காங்கிரசுக்கு ஆதரவளிப்பார் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

*****

ஈழ விடுதலையை விடுதலை புலிகளைக் காரணம் காட்டி பேச மறுத்த காங்கிரசார், 'நான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை, ஈழ விடுதலையை ஆதரிக்கிறேன்' என்று கூறிய ஜெ வை தேச தூரோகம், இறையாண்மைக்கு எதிரானவர் என்று விமர்சிக்கின்றனர். இதன் மூலம் ஈழத்தமிழர்களின் நலனில் காங்கிரசு அக்கரை கொண்டிருக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஈழ விடுதலைக்கு எதிராக இலங்கை அரசுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தமும் அதன் தொடர்பில் ஈழத்தில் இந்திய இராணுவம் அமைதி என்ற பெயரில் செய்த அட்டூழியங்களினால் இராசீவ் காந்தி படுகொலை வரை சென்ற பிறகு ஈழ விடுதலையே கேள்விக் குறியானது, காங்கிரசார் தமிழர்கள் விடுதலைப் பெற்றுவிடக் கூடாது என்கிற இராசீவின் நிலைப்பாட்டையே இன்றும் தொடர்கிறார்கள் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெரிந்துவிட்டது. காங்கிரசுவுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக 'ஈழ விடுதலை கிடைத்தால் மகிழ்வோம்' என்று ஒரு செய்தி விமர்சனம் என்ற அளவில் ஈழம் பற்றி பேசுகிறது. ஈழத்தின் உண்மை நிலை அனைவருக்கும் தெரியாமல் இல்லை, ஆனால் அதற்காக குரல் கொடுப்பவர் என்பதைப் பார்த்தால் ஜெ-வின் குரலே ஓங்கி ஒலிக்கிறது. ஜெ - செய்வாரா ? இல்லையா ? கூட்டணி மாறுவாரா ? என்ற கேள்விகளையும், ஊகங்களையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அப்படி ஒரு (ஆறுதல்) குரலை ஈழ ஆதரவாளர்கள் எதிர்நோக்கி இருந்தனர் என்பதே உண்மை.

ஒரு வேளை இது அரசியல் நாடகமென்றாலும் அதையும் செய்யத் துணியாத திமுகவிற்கு, தமிழர் நலனில் மெத்தனம் காட்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவிற்கு , ஈழவிடுதலைக்கு எதிரான காங்கிசாருடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவிற்கு எதன் அடிப்படையில் இந்த தேர்தலில் ஆதரவு கொடுக்க முடியும் ? திமுக தமிழகத்தில் இலவசங்களை வழங்கி சிறப்பாக(?) செயல்பட்டது என்பதற்காக ? அப்படிப் பார்த்தால் ஜெவின் ஆட்சிக்கு பிறகு ஜெ மீது இதுவரை எந்த ஊழல் வழக்குகளும் பதியப்படவில்லை. ஐயா இது சட்டமன்ற தேர்தல் இல்லை என்றாலும் கூட, மத்திய ஆட்சியில் அமைச்சர் பதவியை அடைபவர்களில் தமிழர்களும் இருக்கிறார்களே. ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு அதிமுக காங்கிரசை ஆதரித்தாலும் காங்கிரசு சவாரி செய்யும் குதிரையாக இருக்காது, காங்கிரசு என்னும் குதிரையை இழுத்துப் பிடிக்கும் கடிவாளமாகவே இருக்கும், என்பதால் என் ஓட்டு ஜெ-கூட்டணிக்கே.

13 ஏப்ரல், 2009

வாக்காள பெருங்குடி மக்களே ... 1

ஸ்டாலின் : மத்திய சென்னை வாக்காளர்கள் மீண்டும் தயாநிதி மாறன் அவர்களை மத்திய அமைச்சர் ஆக்க உதவ வேண்டும்.
பொது மக்கள் : சன் டிவியிடம் இனி அழகிரி அண்ணன் பற்றி கருத்து கணிப்பு நடத்தமாட்டோம் என்பதை கைப்பட எழுதி வாங்கிட்டிங்களா ?

அத்வானி : பாஜக கூட்டணியில் அதிமுகவை சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. தேர்தலுக்குப் பிறகு பாஜக தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்றார்.
பொது மக்கள் : அதுக்கும் முன்பு 'டீ' பார்டிகள் நடத்தும் ஓட்டல்களை விலை கொடுத்து வாங்கிவிடுவோம் என்பதை எப்போது அறிவிப்பீர்கள் ?

ஜெ: எந்த அரசியல் கட்சியுடனும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்துக் கொள்வதற்கான எந்தவித பேச்சுவார்த்தையும் அதிமுக சார்பில் நடத்தவில்லை.
பொது மக்கள் : தேர்தல் முடிந்ததும் தானே முழு செலவுக் கணக்கும் தெரியும். முன்பே பேச்சு வார்த்தை நடத்தி நட்டப்பட அம்மாவுக்கு அரசியல் அனுபவம் போதாதுன்னு நாங்களும் நினைக்கலையே

இல.கணேசன் : தமிழகத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. ஆனால் கடந்த 10 நாட்களாக அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை.
பொது மக்கள் : அரசி சூட்டிங்க்கு சித்தி அவுட்டோர் போய் இருப்பாங்க, எதுக்கும் ஒருவாரம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்


திருமாவளவன் :நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர்
பொது மக்கள் : யாரோ விசமிகள் சத்திய மூர்த்தி பவனில் கல் எரிந்ததை விசமிகள் விடுதலை சிறுத்தைகள் செய்ததாக கிளப்பிவிட்டனர் என்பதை விட்டுவிட்டீர்களே.

விஜயகாந்த்: கருமவீரர் காமராஜரின் மணி மண்டபத்தைக் கூட பராமரிக்க முடியாத காங்கிரசார் காமராஜர் ஆட்சி அமைப்பதாக கூறுவது ஏமாற்று வேலை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் : கேப்டன் ...கேப்டன் நீங்க தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவராக இருந்த போது சிவாஜிக்கு மணி மண்டபம் அமைத்த வேகத்துக்கு தமிழக காங்கிரஸ் ஈடு கொடுக்க முடியாது

இராமதாஸ் : தமிழகத்தில் திமுக அரசு 3 மாதத்தில் கவிழும், சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் வரும்.
பொது மக்கள் : அப்போதைய அரசியல் சூழலில் பாமக எந்த கூட்டணியில் இருக்கும் என்பதை முடிவு செய்வார் குடிதாங்கி ஐயா

கொஞ்சம் புலம்பல் !

விடுதலைப் புலிகள் வைகோவிடம் அதிமுக கூட்டணியில் தொடரும் படிக் கேட்டுக் கொண்டதாலேயே வைகோ நான்கு இடங்களுக்கு உடன்பட்டு அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக சிங்கை தமிழ் முரசு நாளிதழில் தகவல் வெளி ஆகி இருந்தது. ஏன் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு விடுதலைத் தரப்பு சொல்லி இருந்த காரணம்,

1. ஜெ, ஈழத்தில் தமிழர்களுக்கான சுய ஆட்சி முறை வேண்டும் என்று வழியுறுத்துகிறார்
2. போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்று கருத்துரைக்கிறார், உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

என்றும் மேலும் சில காரணங்களும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இலங்கை அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வரும் காங்கிரசு அரசு, ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறோம் என்பதை இரட்டை வேடம் என்பதாகத்தானே எடுத்துக் கொள்ள முடியும், மேலும் இந்த தேர்தலில் தமிழகத்தைப் பொருத்த அளவில் ஈழத்தமிழர்களின் நலனை முன்னிறுத்தி வாக்கு கேட்பவர்களுக்கே மிகுதியாக வாக்கு கிடைக்கும் போல் தெரிகிறது. ஆனால் யார் உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைத்துக் கட்சிகளும் அறிக்கைப் போர்களாக அடித்துக் கொள்ளும் வேளையில், யாருடைய கூட்டணி வெற்றி ஈழத்தமிழர்களுக்கு நன்மைசெய்ய முடியும் என்று முடிவு செய்யும் ஈழத்தமிழர்களின் குரலாக போராளிகளின் எண்ணம் வெளிப்பட்டதாகவே கருத முடிகிறது.

விடுதலைப் புலிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிமுக ஜெ கூட்டணி வெல்வதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கிறதா இல்லையா என்பதெல்லாம் தற்போதைய அரசியல் வாதிகளின் மன நிலையை வைத்து எவரும் சரியாக சொல்ல முடியாது. இருந்தாலும்

தமிழின மக்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் காங்கிரசு கூட்டணிக்கு எதிராக தமிழக மக்களின் எதிர்ப்பை பதிய வைத்ததாக அமையும். ஒருவேளை அதிமுக தேர்தல் வெற்றிக்கு பிறகு காங்கிரசை ஆதரித்தால் ? அப்போது திமுக எதிர்கட்சி தானே, அவர்களே அதிமுக - காங்கிரசு கூட்டணியின் சந்தர்பவாதம் பற்றிப் பேசுவார்கள். எப்படியும் எந்த கூட்டணியும் எந்த நன்மையும் செய்யப் போவதில்லை, வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் 'காங்கிரசுக்கு எதிராக' என வாக்குகளைப் அளிப்பதன் மூலம் எதிர்ப்பு பதிய வைக்கப்படுகிறது. இதைத்தான் ஈழத்தமிழர்கள் விரும்புகிறார்கள், அதைத்தான் வைகோவிடம் போராளிகள் சொல்லி வைகோவை அதிமுகவில் தொடர கேட்டுக் கொண்டுள்ளார்கள் என்பதாக நினைக்க முடிகிறது.

காங்கிரசை அதிமுக கூட்டணிக்கு மறைமுகமாக அழைத்துப் பார்த்ததில் ஒன்றும் பலனில்லை என்பதால் மாற்று வழிகளில் செல்ல வேண்டிய முடிவுக்கு வந்தவராக ஜெ ஈழ அரசியலை கையில் எடுத்தார் என்பது அரசியல் நோக்கர்கள் அறிந்த ஒன்றுதான். ஈழத்தமிழர்களின், தமிழக மீனவர்களின் நலனைவிட காங்கிரஸ் - திமுக கூட்டணியும், நட்பும் உறுதியானதா ? இந்த உறுதிக்கு பெவிக்கால் ஆனவை இரண்டு

1. சிறுபாண்மை உறுப்பினர்களுடன் தொடரும் திமுக அரசின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்கிற தொடர் மிரட்டல்
2. திமுகவின் ஸ்பெக்ட்ரம் ரகசியம் அறிந்துள்ள காங்கிரசு மே(லி)டம்

ஒரு வேளை ஜெ வென்றால் அதன் பிறகு திமுக - காங்கிரசு கூட்டணியை உடைக்க, காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு அமைந்ததும், திமுக அரசை கவிழ்த்துவிட்டு விட்டு, டெல்லியில் ஒரு தேனீர் விருந்தில் கலந்து கொண்டு காங்கிரசையும் கவிழ்பார், அதன் பிறகு என்ன ? அதிமுக, காங்கிரசு, திமுக தனித்தனியாக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும், இதன் மூலம் இமேஜை உயர்த்திக் கொண்டு, சில்லரைக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் தமிழக அரியணை ஏறலாம் என்பதே அதிமுகவின் அரச தந்திர திட்டம் என்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்

யாரும் காப்பாற்ற முடியாது, அறிவும், ஆள் பலமும், பணமும் கூடவே ஏமாற்றும் வழிகளும் தெரிந்தவனே பிழைப்பான்

7 ஏப்ரல், 2009

பதிவர் தமிழ் ப்ரியனுக்கு பாராட்டுகள் !

வலையுலகம் சாராத நண்பர்களிடமும் அவர்களின் சாதி என்ன என்று அறிய விரும்புவதில்லை, இங்குள்ளது (பதிவுலகில்) போல் ஒருவரின் சாதியை எப்படியாவது தெரிந்து கொண்டு எவனோ செய்யும் தப்புக்கெல்லாம் கேள்வி கேட்டு அந்த சாதிக்காரனைப் பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லி தூற்றுவது (சாதிப் பெருமை பேசுபவர்களை அவ்வாறு தூற்றவும் செய்யலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து) குறைவு என்பதால் வெளி உலக நண்பர்கள் எதோ ஒரு காரணத்திற்காக தங்கள் சாதி என்ன என்று வெளிப்படுத்தினாலோ, அல்லது எப்படியோ தெரியவந்தாலோ பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. பதிவுலகம் சாராத வன்னிய நண்பரிடம் இராமதாஸ் கூட்டணி மாறியதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

"அவன் கிடக்கிறான்ங்க.....அவனால வன்னியர்களுக்கு என்ன நன்மை ?, ஜால்ரா அடிக்கும் ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு வானளாவிய சொத்து சேர்த்து இருக்கிறான், அதற்கு ஆதரவு கொடுத்து தொண்டர்கள் என்ற பெயரில் ஒட்டிக் கொள்கிறவர்கள் பதவி பெறுகிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.....இதனால் ஒட்டுமொத்த வன்னியர்களுக்கு என்ன லாபம் ?......என்னைக் கேட்டால் வன்னியர்கள் அனைவரும் சேர்ந்து பாமகவைத் தோற்கடிக்கனும், ஓட்டு வங்கியை உருவாக்கி சுயலாபம் அடைந்தது தவிர்த்து இராமதாஸ் வன்னிய சமூகத்துக்கு பெருசா ஒண்ணும் பண்ணிவிடவில்லை" என்றார்

"உங்க சாதி ஆளுங்களுக்குத்தான் பிரதி நிதித்துவம் கிடைக்குதே... அதுல உங்களுக்கு பெருமை இல்லையா ?...ஒரு வன்னியர் மத்திய மந்திரியாக இருப்பது வன்னியர்களுக்குத் தானே லாபம் ?" என்று அவரிடம் கேட்டேன்.

"ஆகுறான்..ஆகட்டம்... இவன் ஒரு ஆள் மத்திய மந்திரி ஆகிவிட்டால் வன்னியர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடுமா ?... தான் வன்னியர் என்று சொல்லி ஓட்டு வாங்கி வெற்றி பெறுகிறான்...அவ்வளவு தான்...அவனோட வாழ்க்கைத் தரம் மட்டும் தான் உயரது... இதுல பெருமை பட என்ன இருக்கிறது...மத்திய மந்திரியாக இருப்பதாலேயே வன்னியர்களுக்கு என்று குறிப்பிட்டு எதையும் வாங்கிட முடியாது....அந்தந்த பகுதியில் எதாவது நலத் திட்டம் அறிவிக்கலாம்...அதுலையும் பாதி காசை கமிசன் அடிச்சிடுவானுங்க, இது தானே நடக்குது....இதுல வன்னிய மக்களுக்கு தனிப்பட்ட பலன் இருப்பதாக எனக்குத் தெரியலைங்க....என் ஜாதிக்காரன் மந்திரியாக இருக்கிறான் என்று சொல்வது ஒரு வரட்டு கவுரவம் தான்... பைசா ப்ரோயஜனம் இல்லை" என்றார்

சாதிப் பெயரில் ஆதரவு திரட்டி பெரிய பதவிகளைப் பெருவதன் மூலம் சாதிக்காக எதையும் யாரும் சாதிப்பதில்லை, வெளிப்படையாக அவ்வாறு செய்ய சட்டத்திலும் இடம் இல்லை என்பதாகத் தான் அவரது கருத்தை புரிந்து கொண்டேன். எனவே சாதிப் பெயரைச் சொல்லி 'நம் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப் பாடுபடுங்கள்' என்னும் தேர்தல் கால ஜாதிப் பற்று கோஷங்களை 'தாழ்த்தப்பட்டவர்கள்' தவிர்த்து எவரேனும் சொன்னால் அது புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றே.

*****

இதெ கருத்தில் பதிவர் தமிழ் ப்ரியன் "முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்! " என்ற அதிரை POST பதிவில் பின்னூட்டத்தில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.

தமிழ் பிரியன் said...
திமுக ஒரு முஸ்லிமுக்கு சீட் கொடுப்பதன் மூலம் அவர் வந்து முஸ்லிம்களுக்கான ஒன்றையும் கிழிக்கப் போவதில்லை... முஸ்லிம்கள் அல்லாதவர்களே முஸ்லிம்களுக்கு சிறப்பு செய்கின்றார்கள். முஸ்லிம்களின் ஓட்டை வாங்கி சட்டமன்றம், பாராளுமன்றம் செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள் சொத்தை மட்டுமே சேர்க்கின்றனர். இதில் எல்லா எழவுகளும் அடக்கமே.. அது முஸ்லிம் லீக்காக இருந்தால் என்ன? மமகவாக இருந்தால் என்ன ?


*****

அதைப் படித்ததும் உண்மையில் மிக்க நெகிழ்சியாக இருந்தது, மனிதம் மறந்து சாதியையும், மதத்தையும் வளர்க்க வேண்டும், அதைத் தூண்டவேண்டும் என்று நினைப்போருக்கு தமிழ் ப்ரியனின் பின்னூட்டம் சரியான சவுக்கடி. தமிழ் ப்ரியன் ஒரு இஸ்லாமிய பதிவர் நண்பர் தான். மத உணர்வின் வழி உணர்ச்சித் தூண்டலை இவரைப் போல் பலரும் புறக்கணித்தால் தமிழகத்தில் மதச் சண்டைகள் இல்லாது இருக்கும். தமிழ் ப்ரியனைப் பாராட்டி மகிழ்கிறேன்.

எல்லா மாநிலங்களில் ஓரளவு பலமும், பெரும்பான்மையோ பெரும் நிலையில் இருக்கும் பாஜக தமிழகத்தில் பரிதாப நிலையில் இருப்பதைப் பாருங்கள், தமிழகத்தில் 'பெரும்பான்மை இந்துக்கள்' என்கிற சொல்லாடலை 'தமிழக இந்துக்கள்' யாரும் காதில் போட்டுக் கொள்வதே கிடையாது. இதே மனநிலையில் 'முஸ்லிம்' பெயரைச் சொல்லும் சக்திகளுக்கு எதிராக 'தமிழக இஸ்லாமியர்கள்' நடந்து கொண்டால், தமிழகத்தில் மதவாதங்களும் அதன் வழி மதவெறி நுழைந்து வன்செயல் நடத்திவிட முடியாது

5 ஏப்ரல், 2009

வி.காந்துடன் கற்பனைப் பேட்டி !

நிருபர் : வணக்கங்க கேப்டன்

வி.காந்த் : நான் மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணி

நிருபர் : ஐயோ கேப்டன்... நான் நீங்க யாரு கூட கூட்டணின்னு கேட்கவரல... இதையே சொல்லிக் கிட்டு இருந்தால் அப்பறம் ஆடுமாடுகள் எங்கள் கூட கூட்டணி அமைக்கவில்லையான்னு கேட்டு போர்கொடி தூக்கும்

வி.காந்த் : பின்னே என்ன கேட்க வந்த இங்க, திமுக அரசின் உளவு படை ஆளா நீ

நிருபர் : உளவும் இல்லை களவும் இல்லை, நான் உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கிறேன்

வி.காந்த் : திமுகவும், அதிமுகவும் மாறி மாறி கொள்ளையடித்திருக்கிறார்கள்

நிருபர் : உங்களுக்கும் ஒரு சான்ஸ் வேணுங்கிறிங்க, அதைத்தான் எல்லா மேடையிலும் சொல்லி இருக்கிங்களே, அது பத்திக் கேட்கல, ஈழ தமிழர் நலனுக்காக தேர்தலை புறக்கணிப்பேன் என்று சொன்னிங்க, ஆனால் பெரிய கட்சிகளையெல்லாம் முந்திக்கிட்டு வேட்பாளர் அறிவிச்சு...தேர்தல் பிரச்சாரமெல்லாம் பண்ணுறிங்க

வி.காந்த் : நீ எந்திரி...நீ கருணாநிதியோட ஆளேத்தான்....இருந்தாலும் சொல்றத கேட்டுட்டுப் போ... நான் நிக்காமல் இருந்தால் எனக்கு வர்ற ஓட்டையெல்லாம் அள்ளிடலாம் என்று கருணாநிதி நினைக்கிறார், நீ அவரோட ஆள்

நிருபர் : நான் ப்ரஸ்காரனுங்க

வி.காந்த் : இன்னொன்னும் சொல்றேன், நான் புறக்கணிக்கிறேன் என்று சொன்னதை வச்சுதான் செல்வி ஜெயலலிதா ஈழ ஆதரவுக்கு உண்ணாவிரதம் இருந்தாங்க....சோ....என்னோட திட்டத்தையெல்லாம் காப்பி அடித்து அதிமுகவும், திமுகவும் செயல்படுத்து, ஈழமக்கள் ஆதரவு தமிழர்கள் எனக்குத்தான் ஓட்டுப்போடுறாங்க, கருணாநிதி ஒரு கருநாகப் பாம்பு, ஜெயலிதா ஒரு செந்தேள்

நிருபர் : வாரிசு அரசியலை வாய்க்கு வந்தப்படி திட்டினிங்க, இப்ப ஒங்க மச்சானையே வேட்பாளராக நிறுத்தி இருப்பதாக

வி.காந்த் : இந்த விஜயகாந்த் மொதலமச்சர் ஆன பிறகும் வாரிசு அரசியலை வளர்த்தால் வந்து கேளுங்க, என் மச்சான் என்றாலும் அவரும் இம் மண்ணின் மைந்தன், அவருக்கும் போட்டி இட எல்லா உரிமையும் இருக்கு

நிருபர் : என்ன இருந்தாலும் மக்கள் வாரிசு அரசியல் என்று தானே சொல்லுவாங்க

வி.காந்த் : என்னது மக்கள் கேட்பாங்களா ?: அவங்கக் கூடவும் தெய்வத்துக் கூடவும் தான் என் கூட்டணி, என்னோட மக்கள் என்கிட்ட எப்படி கேட்பாங்க, என்னோட தெய்வம் என்கிட்ட எப்படி கேக்கும்...நீ கருணாநிதியோட ஆளே தான்.... எந்திரு

நிருபர் : கடைசியாக ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.... முன்னால் முதல்வர்கள் ஊர அடிச்சு ஒலையில் போடுறதா சொல்ற நீங்க.... ஆட்சியில் இல்லாத போதே...மதுராந்தகம் பக்கம் பொறம்போக்கு நிலங்களை வளைச்சுப் போட்டு...மின்சார வேலி அமைச்சிருக்கிங்களாமே...அது பற்றி முன்பு பலமாக பேச்சு அடிபட்டதே

நிருபருக்கு சரமாரியாகவும், பலமாகவும் அடிபட்டது

3 ஏப்ரல், 2009

ஜெ - வைகோ தொகுதி உடன்பாடு !

புலியை பிடறியைப் பிடித்து பொடாவில் போட்டதும், அடிபட்ட புலின்னு நெனச்சா... பூனையாக்கி போயாஸ் தோட்டத்தில் கட்டியதால் என்னவோ சூடுபட்ட பூனையாக கூட இல்லாமல்... தொகுதி உடன்பாட்டு சந்திப்பு (கற்பனைதான்)

ஜெ : மிஸ்டர் வைகோ, உங்கக் கட்சியில் தான் இப்ப யாருமே இல்லையே, எப்படி 6 சீட் கேக்குறிங்க ?

வைகோ : கருங்காலிகள் ஓடிவிட்டார்கள், கோடிக்கணக்கான கட்சித்தொண்டர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள்

ஜெ : மிஸ்டர் வைகோ...நாம பொதுக்கூட்டம் போடப் போறதுல்ல...பஸ்ஸில லாரியில் ஆள் அழைச்சிட்டு வர...பொதுத் தேர்தல்.... உங்க கட்சியில் இருப்பவர்களெல்லாம் வெறும் தொண்டர்கள்...அதுல யாரை நிறுத்துவிங்க

வைகோ : அது வந்து....

ஜெ : மூணு சீட் தருகிறேன்......அத வச்சு

வைகோ : (இந்த அம்மா மூணு சீட்டை வச்சு தியேட்டர் வாசலில் மூணு சீட்டு போட்டு பொழச்சிக்கச் சொல்லுதா ? ன்னு நினைச்சு....ச்சே அப்படியெல்லாம் இருக்காது....ன்னு) 6 சீட் கிடைச்சா

ஜெ : மூனே மூணு சீட்டுதான்.....அதுவும் வேட்பாளர்களோட ஜாதகம் வேணும்.....வேண்டுமென்றால் ஒண்ணு செய்கிறேன் நீங்க கேட்கிற 6 சீட்டும் தருகிறேன்......ஆனா இரட்டை இலையில் தான் நிற்கனும்

வைகோ : மனதுக்குள் அந்த ஆளாவது இதயத்தில் இடம்னு சொல்லுவார்.....இந்த அம்மா அதிமுகவாகவே நிற்கச் சொல்லுது......கடைசியில் அதிமுகவுக்கு பேசாமல் வட்டச் செயலாளர் ஆகிடுங்க...பார்த்து செய்வோம் என்கிற ரேஞ்சுக்கு சொல்லுதே.....ன்னு நினச்சு.....அதெல்லாம் சரிவராது.....மதிமுகவுக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு, போராட்டம் அது இது என்று பலமுறை ஜெயிலுக்கு போய் இருக்கிறோம்.....பொடாவுலேயே ஒரு வருசத்துக்கும் மேலாக இருந்திருக்கிறேன்... ஒரு ஐஞ்சு சீட்டுக் கொடுத்தால் கவுரமாக இருக்கும்

ஜெ : மிஸ்டர் வைகோ உங்களை கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றியதற்காக கொஞ்சம் கீழே இறங்கி வரப்படாதா ?

வைகோ : நேற்று வந்த இராமதாசுக்கெல்லாம்....

ஜெ : தி இஸ் லிமிட்....அது என்னோட டெஸிசன்...அதப்பத்தி எல்லாம் பேசக்கூடாது.... மூணு சீட்டுத் தரலாமுனு இருந்தேன்....என்னை விமர்சித்தால இரண்டே சீட்டுதான்

வைகோ : :(மனதுக்குள் மொதலுக்கே மோசம் ஆகறத்துக்குள்ளே...)எதோ பார்த்து செய்யுங்க ....வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் வரைக்கும் வெயிட் பண்ணுவோம்... இல்லாட்டி

ஜெ : இல்லாட்டி என்ன மிஸ்டர் ?

வைகோ : இரண்டு சீட்டுலேயே நிற்போம்னு சொல்ல வந்தேன்... (நம்ம பொழப்பு வடிவேலு காமடிக் கணக்காக ஆகிவிட்டதேன்னு நெனச்சு மனசுக்குள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

2 ஏப்ரல், 2009

ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட் வைகோ ஆவேசம் !

கூட்டணி என்பதே மக்கள் ஆட்சித் தத்துவத்தின் மாபெரும் ஏமாற்று வேலை. மூன்று வேட்பாளர்கள் சம பலத்துடன் நிற்கும் தொகுதியில் முறையே 33, 33, 34 விழுக்காடுகள் பெரும் போது 34 விழுக்காடு பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறார். அதாவது 66 விழுக்காட்டினர் வாக்களிக்க விரும்பாத ஒருவர் அந்த தொகுதியின் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதை அரசியல் கட்சிகள் வெற்றிகரமாக முறியடிப்பது தான் கூட்டணியாக வேட்பாளரை நிறுத்துவது என்கிற முடிவுகள். மூன்று கட்சிகள் நிற்கும் இடத்தில் இருகட்சிகள் கூட்டணியாக இணைந்தால் இருகட்சியின் ஆதரளவாளர்களின் 66 விழுக்காடு பெற்று கூட்டணி உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்தல் முறைகளும் உறுப்பினர் வெற்றி பெறும் விதம் ஆகியவை குளறுபடிகளுடன் தான் நடக்கிறது.

இவர் பிரதமர் என்று சுட்டிக்காட்டி கூட்டணிகள் வாக்கு கேட்கும், வாக்குகளைப் பெற்றவுடன் குதிரை பேரத்தில் கூட்டணிகள் பிரியும், மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ அவர்களுக்கு பட்டையும் நாமமும், குல்லாவும் தான். இதையெல்லாம் பார்க்கும் போது மன்னர் ஆட்சியும் சர்வாதிகார ஆட்சியும் எவ்வளவோ பரவாயில்லை என்ற மனநிலைக்கு நாளடைவில் மக்கள் வந்துவிடுவார்கள் போலும். எந்த சித்தாந்தமும் காலவெள்ளத்தில் நீர்த்துப் போகக் கூடியது என்பது மக்கள் ஆட்சித் தத்துவத்திற்கும் பொருந்தும்.

மக்கள் சேவை என்ற பெயரில் அரசியலில் நுழைபவர்கள் நாளடைவில் பதவி, அதற்குரிய மரியாதை, அதில் இருக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றம், ஊழல் செய்வது, குற்றங்களில் இருந்து தப்புதல், இனி வரும் அவர்களுடைய சந்ததிகளுக்கு வானளாவிய சொத்துக்களை சேர்த்து வைப்பதுடன், கட்சியின் வரும்கால தர்மகர்த்தாக்களாக அவர்களையே வைத்துவிடுவார்கள், முட்டாள் தொண்டனும், குடும்ப அரசியலுக்கு ஊது குழலாகவே இருப்பான். ஆதாயம் எதிர்ப்பார்க்காத தொண்டர்களே அரிது, ஆதாயம் எதிர்பார்க்காமல் தொண்டர்களாக இருப்பவர்கள் தலைமை தவறு செய்யும் போது தட்டிக் கேட்பார்கள், அப்படி செய்யாமல் தன்னை எந்தக் கட்சிக்கும் தொண்டன் என்று கூறிக் கொள்பவர்களை நன்றியுள்ள நாலுகால் விலங்கு என்று சொல்லலாம். ஏனெனில் இவர்கள் ஆதரவின்றி எந்த தலைவனும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது. நாயைப் பொருத்தவரையில் தன் எஜமானன் திருடனாக, கொலைகாரனாக இருந்தாலும் விசுவாசத்துடன் தான் இருக்கும்.

*****


இடுகை தலைப்பை ஒட்டி வரவில்லையா ? பேரம் படியாமல் தானே கூட்டணி மாறுகிறார்கள், இதில் பரிதாபப் பட என்ன இருக்கிறது. வயிற்றெரிச்சலில், ஆதங்கத்தில் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் சாடுவர், அதுவும் ஒரே ஒரு தேர்தல் கால அளவுக்கு மட்டுமே, அடுத்த தேர்தலில் புகழ்மாலையுடன், பொக்கே புகைப்பட போஸ் கொடுப்பார்கள். இன்றோ, நாளையோ, மறுநாளோ.....வைகோ சொல்லப் போகும் வாக்கியங்கள் அவை என்பதைத் தவிற வேறு அதில் ஆராய ஒன்றுமே இல்லை. :)

31 மார்ச், 2009

மல்லாந்து எச்சில் துப்புவது கலைஞருக்கு அழகா ?

தேர்தல் லாவனிகள் ஒருபக்கம் நகைச்சுவையாக இருந்தாலும் மறுபக்கம் இவ்வளவு கேவலமானவர்களா ? அரசியலுக்காக அம்மணமாகக் கூட நிற்கிறார்களே என்று நினைக்கவும் வேண்டி இருக்கிறது. அரசியலில் எந்த காலத்திலும் நாகரீகம் இருந்தது இல்லை. அத்திபூத்தார்போல் சில தழுவல்கள் கூட வரும்காலத்தில் நாங்களெல்லாம் நாகரீகமாக நடந்து கொண்டோம், இளைய அரசியல் வாதிகள் அவ்வாறு இல்லை என்று காட்டுவதற்கான நாடகமே அன்றி வேறொன்றும் இல்லை,

வைகோ திமுகவின் வருங்காலத் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைத்திருந்தார், முயன்றார் என்பதை எதோ குற்றாச் சாட்டு போல் கவிதை வடித்து இருக்கிறார் கலைஞர்.

தலைவர் பதவிக்கு குறி வைத்த தம்பி - கருணாநிதி கவிதை

பெரியாருடன் அண்ணா இணைந்த பிறகு அண்ணாவின் எழுத்தாற்றல், பேச்சு கண்டு பெரியார் மகிழ்ந்து பாராட்டி, இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்த தட்டிக் கொடுத்தார். தலைமைப் பண்பின் அடையாளம் என்பது ஆற்றல் மிக்க தொண்டர்கள் வளர்வதைப் பாராட்டி மேலே கொண்டு விட தூண்டு கோலாக இருப்பது தான். பெரியாரிடமிருந்து பிரிந்தது அண்ணா பிரிந்தது வேறு கதை, அது கட்சி அபகரிப்புத் திட்டத்தில் வராது. அதே போன்று அண்ணாவினால் தொடங்கப்பட்ட திமுக கழகத்தில் மேடை நாடகம், திரையுலகம், இலக்கியம் போன்றவற்றிலும், அரசியலிலும் திரம்பட செயல்பட்டதால் அண்ணாவின் அன்பு தம்பி என்ற பாராட்டைப் பெற்ற கருணாநிதி அண்ணாவின் ஆட்சி அமைக்கிறேன் என்று அண்ணாவிற்கு பிறகு திமுகவை நடத்தி வருகிறார். அண்ணாவுக்கு பிறகு திமுக தலைவர் ஆகும் தகுதி தனக்கு இருக்கிறது என்கிற நினைப்பு கலைஞருக்கு இருந்திருக்காதா ? ஒரே நாளில் 'தலைவா....அண்ணாவுக்கு பிறகு நீ தான் தலைமை ஏற்கவேண்டும்' என்று கூறி முள் கிரிடத்தை தொண்டர்கள் கலைஞரின் தலையில் வைத்தார்களா ? கட்சிவிசுவாசிகள், கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்கள் யாரும் தியாகிகள் கிடையாது, நாளை தனது உழைப்பு அங்கீகரிக்கப்படும் என்று நினைப்பது மனித இயல்பு, அதுவும் அரசியலில் நோக்கமின்றி உழைப்பவர்கள் எவருமே கிடையாது.



வைகோ எதோ படுபாதகம் செய்யத் துணிந்தது போல் கவிதை தீட்டி இருக்கிறார் கலைஞர். அதோடு மட்டுமின்றி வைகோ அதை யாருடன் ஆலோசித்தார் என்பதை குறிப்பிடும் விதமாக

"ஆனால் -
துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி!
ஆற்காட்டாரோ -அசல்; கண்ணாடிப் பேழை -
எனினும்
ஆண்டுகள் சில பல கடந்த பிறகே;
அன்றைய குமரி முனையில் குமுறிய எரிமலையின்
குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு!"


அந்த கவிதையை படித்ததும் மனதில் ஏற்படும் எண்ணங்கள், இரும்பு பெட்டி ஆண்டுகள் பல ஆனதும் துரு ஏறி உடைந்து விட்டதா என்று தெரியவில்லை. ஆக வைகோ சொன்னதை என்னிடம் இவர்கள் போட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்வதாகத் தான் அதனை புரிந்து கொள்ளமுடிகிறது. மூவரின் நம்பகத் தன்மைகளை கேலி செய்வதாக நினைத்து குடும்ப அரசியலை ஞாயப்படுத்தும் விதமாக ஸ்டாலினின் அருமை பெருமைகளைச் சொல்லி தன்னையே கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறார் கலைஞர்.

வைகோவுக்கு கவிதை பாடியவர் அதே போன்று எம்ஜிஆருக்கு பாடி இருக்க முடியாது, ஏனெனில் எம்ஜிஆர் 'திமுகவை நீயே வைத்துக்கொள்' என்று உதறித்தள்ளி, வெளி ஏறி, திமுகவையும், கலைஞரையும் ஓரம் கட்டினார். வைகோவும் அதே போல் வளர்ந்திருந்தால் இந்த கவிதை திமுக கழகத்தினரையே கேலி செய்யும். எப்படியோ...கலைஞரின் பெரும்தன்மை இன்மையால் அண்ணாவின் திமுக. அதிமுக, மதிமுக என மூன்றாகியது.

****

விஜயகாந்து திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தார் கலைஞர், விஜயகாந்த் நன்றி மறந்தவராக கலைஞரை தாக்குகிறார் என்று பேராசிரியர் சொல்லிக் காட்ட, பதிலடியாக நான் திரையுலகினரை திரட்டி கருணாநிதிக்கு விழா எடுத்தேன், தங்கப்பேனா கொடுத்தேன் என்கிறார் விஜயகாந்த். இவர்களெல்லாம், ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பை வைத்தே எதையும் செய்துவிட்டு மக்கள் மேடையில் இந்த கருமாந்திரங்களைப் பேசி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்.

நான் இங்கே வைகோ தூய்மையானவர், விஜயகாந்த் சொக்கத் தங்கம் என்று சொல்லவரவில்லை, 30 ஆண்டுகளுக்கும் திமுகவின் தலைமை ஏற்று பலமுறை முதல்வராக இருந்தவரின் மேடைப் பேச்சுகளும், கவிதைகளும் இவர் மீது அரசியல் பொதுப்பார்வையாளர்களுக்கு எரிச்சலையே ஊட்டுகிறது. முதிர்ச்சி இன்மை பற்றி கலைஞர் பேசினால் அது இனி காமடிதான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்