பின்பற்றுபவர்கள்

புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தாண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஜனவரி, 2012

மீண்டும் வந்துவிட்டது டிராகன் !

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டின் ராசி விலங்கு (Shēngxiào (Chinese: 生肖)) டிராகனாம், நான் சிங்கையில் பார்ப்பது இரண்டாவது டிராகன், 12 ஆண்டுக்கு ஒரு முறை 12 விலங்குகளின் சின்னம் மாறி மாறி வரும். எலி, எருது, புலி, முயல், டிராகன்(யாளி), பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆகியன பணிரெண்டு விலங்குகள்.

சீனர்கள் பிறரின் வயதை அறிந்து கொள்ள நீங்கள் எந்த விலங்கில் பிறந்தீர்கள் என்று கேட்பார்கள், அதை வைத்து அகவை (வயதை) கணக்கிடுவார்கள், உடல் தோற்றம், தலை மயிர் அடர்த்தி, நிறம், தோல் அமைப்பு வைத்து நாம் பார்க்கும் எவரையும் கிட்டதட்ட வயது முடிவு செய்யமுடியும், ஒருவர் குதிரை ஆண்டு பிறந்திருந்தால் அவரது தோற்றத்தை வைத்து அந்த சுழற்சில் 12, 24, 36, 48 என்ற அளவில் கிட்டதட்ட அவரது வயது தெரிந்துவிடும், கூடவே இந்த ஆண்டு என்ன விலங்கு என்ன ? என்று தெரிந்து வைத்திருப்பதால் சரியான வயதை கண்டுபிடிக்க முடியும். இந்த ஆண்டு டிராகன் என்றால் 40+ வயது மதிக்கத் தக்கவர் தாம் குதிரை ஆண்டு பிறந்தவர் என்று சொன்னால் அவரது சரியான வயது 46 என்று அறிய முடியும், டிராகனில் இருந்து குதிரை ஆண்டு வர இரு ஆண்டுகள் ஆகும் அப்போது தான் அவருக்கு 48 ஆக இருக்கும். வயதை மறைப்பதையே அவர்களும் விரும்புகிறார்கள் என்பதால் எதாவது பேச்சு வாக்கில் 'நீங்கள் எந்த விலங்கு ?' என்று போட்டு வாங்கித் தான் கண்டுபிடிப்பார்கள். சீனர்கள் இந்த பனிரெண்டு விலங்கு பெயர்களையும் அவை வந்து சென்ற ஆண்டையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள், 1970 ஆ ஆண்டு என்ன விலங்கு ? என்று கேட்டால் 12 வாய்ப்பாட்டில் கூட்டிக் கழித்து அந்த ஆண்டு என்ன விலங்கு (சேவல்) என்று உடனேயே சொல்லிவிடுவார்கள்.

சீனர்களின் சோதிடம் இந்த 12 விலங்குகளையே சார்ந்தது, அதாவது குறிப்பிட்ட ஆண்டில் பிறந்த அனைவருக்கும் ஒன்று போல பலன் தான், மொத்தம் 12 வகையான பலன்களில் ஒவ்வொருவருக்கும் மான பலன் பார்க்கப்படுகிறது, அதாவது 12 பேரில் ஒருவருக்கு ஒருவர் பலன் மாறுபடும், இந்த ஆண்டில் (டிராகனில்) பிறந்தவர்களுக்கும் 2024 ஆம் ஆண்டு பிறப்பவர்களுக்கும், 2000 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கும் ஒரே பலன் தான், பிற ஆண்டுகளில் பிறந்தவர்களின் பலன் ஆண்டில் விலங்கு ஏற்றவாறு மாறி இருக்கும்.

ஆண் குழந்தை மோகம் என்பது இந்தியர்களுக்கு மட்டுமே இல்லை, பொதுவாக ஆசிய இனத்தின் பண்பாகத்தான் இருக்கிறது, சீனர்களும் குடும்பத்தின் அடுத்தகட்ட தொடர்சிக்கும், கடைசி கால பாதுக்காப்பிற்கும் ஆண் குழந்தை கட்டாயம் தேவை என்பதை விரும்புவர்களாக இருக்கிறார்கள், சீனாவின் மக்கள் தொகை கட்டுப்பாட்டினால் வேறு வழியின்றி அரசை பின்பற்றுகின்றனர். என்னுடன் பணி புரியும் சீனப் பெண் இரண்டு பெண் குழந்தைக்கு பிறகு மூன்றாவதாக ஆண் குழந்தைப் பெற்றதும் மிக மகிழ்ச்சியாக இப்போது என்னால் குழந்தை உற்பத்தியை நிறுத்திக் கொள்ள முடியும் என்று கூறினாள்.

மேற்சொன்ன விலங்கு ஆண்டுகளில் டிராகன் மற்றும் புலிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது, பல சீனர்கள் இந்த ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள், மற்ற விலங்குகளை விட இந்த இரு விலங்குகள் மிகவும் அதிர்ஷடம் வாய்ந்ததாம். திருமணம் ஆனவர்கள் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து இந்த ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவர்களாகவும் பலர் இருக்கின்றனர், மற்ற ஆண்டுகளைவிட சீன மக்கள் தொகையில் பிறப்பு விகிதம் இந்த இரு ஆண்டுகளில் ஓரளவு கூடுதலாகவே இருக்கும்.

******

சீனப் புத்தாண்டின் போது சீனா முழுவதும் ஒருவார அரசு விடுமுறை, அரசு அலுவலங்கங்கள், பொது நிறுவனங்கள் இயங்காது, அவரவர் அவரவரது பிறப்பிடங்களில் தொடர்பு இருந்தால் சென்றுவிடுவார்கள், வனிக வளாகங்கள் வெறிச்சோடி கிடக்கும், சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பான்மை என்பதால் அவர்கள் நடத்தும் உற்பத்தி சார்ந்த நிறுவங்கள் பெரும்பாலானவை ஒருவார விடுமுறையை கடைபிடிக்கின்றனர். எங்கள் அலுவலகமும் ஒருவாரம் விடுப்பு தான், சீனப் புத்தாண்டு இரண்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது, பழைய பொருளில் பயன்படுத்த முடியாதவற்றை வெளியே தூக்கி வைத்துவிடுவார்கள், பழைய கணிணி, தொலைகாட்சி பெட்டிகள் கூட வெளியே வைக்கப்பட்டு பார்த்திருக்கிறேன்,

சீனப் புத்தாண்டுக்கு சீனர்கள் பெரும் செலவு செய்வார்கள், ஏராளமான இனிப்பு பண்டங்கள், ரொட்டிகளை வாங்குவார்கள், குழந்தைகளுக்கு ஹங்பாவ் (ரெட் பாக்கெட்) எனப்படும் பணப்பரிசு கொடுப்பார்கள், அதற்கே அவர்களுக்கு ஆயிரம் வெள்ளிகள் வரை தேவைப்படுமாம், சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளில் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று அல்லது பொது இடங்களில் குடும்பங்களாகக் கூடி உண்டு மகிழ்வர். சீனப்புத்தாண்டின் இருநாட்களும் சிங்கையில் பொதுப் போக்குவரத்தில் சீனர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும், பெரும்பாலும் அன்றைக்கு உறவினர்கள் வீடு அல்லது பிற இடங்களுக்குச் செல்ல வாகன வசதி இல்லாதவர்கள் வாடகைக்காரில் தான் செல்வார்கள். இந்த இரு நாட்களில் சுற்றுலா தளங்களில் சீனர்களைப் பார்ப்பதே அரிது. பேருந்துகள், தொடர்வண்டிகள் கூட்டம் குறைவாகவே இருக்கும். சிங்கையில் வசிக்கும் சீனர்களில் ஏரத்தாள முப்பது விழுக்காட்டு சீனர்கள் அண்டை நாடு மலேசியாவில் இருந்து வந்து தங்கியவர்கள், சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது மலேசியாவிற்கு திரும்பிவிடுவர். அது போலவே பிற நாட்டு சீனர்களும் தாயகம் திரும்பி இருப்பார்கள்.

சீனரின் பாரம்பரிய நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை இன்றும் தொடர்கின்றனர், குறிப்பாக இறந்த உறவினர்களுக்கு தாள்களை எரிப்பது, தாள்களினால் செய்யப்பட்ட இறந்தவர்களுக்கு விருப்பமான பொருள்களை செய்து எரிப்பது, சுற்றுச் சூழல் கெடுதல் என்ற வகையில் சிங்கப்பூர் அரசு அவற்றை தடுக்காவிட்டாலும் எரிக்கும் இடங்கள், அவற்றின் புகை, கரி பரவல் குறித்த கட்டுபாடுகளை விதித்திருக்கிறது. சீனர் நம்பிக்கை பழங்காலத் தொடர்பில் இருந்தாலும் எங்களுடைய நம்பிக்கையே உயர்ந்தது என்று அவர்கள் பிறரை வலியுறுத்துவதோ, தாழ்த்துவதோ கிடையாது. என்னைப் பொருத்த அளவில் எந்த ஒரு குழுவும், அமைப்பும் மூட நம்பிக்கையைக் கடைபிடித்தாலும் அவற்றினால் பிறருக்கு தீங்கு இல்லாவிட்டால் அவற்றை விமர்சனம் செய்ய ஒன்றுமே இல்லை.

சீனப் புத்தாண்டுகள் அடிப்படையில் சீனர்கள் விரும்பும் சிவப்பு வண்ணம் மயமானது, பாரம்பரிய சோதிட நம்பிக்கையின் தொடர்சி, ஆண்டு முறையின் தொடர்சி என்றாலும் அவற்றை பல்வேறு மதத்தைச் சார்ந்த சீனர்கள் யாவரும் சேர்ந்தே கொண்டாடுகின்றனர். சீனர்களைப் பொருத்த அளவில் முதலில் சீன இனம், பிறகு பேசும் மொழி, பிறகு பழக்கவழக்கம் பண்பாடு, அதன் பிறகு இறுதியில் தான் மதம் சார்ந்தவற்றிற்கு இடம் ஒதுக்கியுள்ளார்கள்.

மனித இனம் நிறங்களினாலும், தோற்றங்களினாலும் பல்வேறு இனகளாக அடையாளம் கொண்டுள்ளது என்னும் போது அவ்வினங்களுக்குள்ளான பொது அடையாளத்தை தொடர்ந்து பேணுவதால் மட்டுமே அவர்களுக்குள் ஒற்றுமையை நிலைத்திருக்க முடியும் என்று சீனர்கள் நம்புவதால் சீனப்புத்தாண்டு சீனர்களுக்கு பொதுவானதாகும்.

*****

மனிதர்கள் தங்களுக்குள் பல்வேறு இனங்களுடன் பழகிவருவதால் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கான முயற்சி எடுத்துவருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது சமூக நல்லிணக்கத்தின் நோக்கங்களுள் ஒன்று தான், ஆனால் அந்த எண்ணம் மட்டுமே அவற்றை ஏற்படுத்திவிடாது, காரணம் மனிதன் பல்வேறு இனங்களுடன் இணக்கம் கொண்டிருக்க விரும்பினாலும் தத்தமது இன அடையாளங்கள் காக்கப்படவேண்டும் மற்றும் தாமே ஆளுமை மையமாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறான். பல்வேறு இனங்கள் வசிக்கும் ஒரு நாட்டில் புதிதாக ஒருவரைப் பார்க்கும் போது அவர் ஆணா பெண்ணா என்பதைவிட நம் மனம் கணக்கிடுவது இவர் இந்த இனம் சார்ந்தவர் என்பதைத் தான். பல்வேறு தோற்றங்களுடன் மனித இனம் பரிணாமம் பெற்றிருப்பது இயற்கையின் சதியா ? இயற்கையின் ரசிப்பா ? ஒரே வகைப் பூக்களை, நாய்களை பல்வேறு நிறத்தில் பரிணமிக்கப்பட்டு அழகு காட்டுவதைப் போல் மனிதனின் நிறத்தை/ தோற்றத்தை ஒருவித ரசனைக்காக இயற்கை ஏற்படுத்திவிட்டு இருக்கலாம். ஆனால் இனத்தோற்றங்களை வைத்து மனிதர்கள் தான் உயர்வு, தாழ்வு மற்றும் ஆளுமை எண்ணங்களை ஆறாம் அறிவின் தொடர்பில் வளர்த்துக் கொண்டுள்ளனர்.

பிற இனங்கள் சீனர்களைப் பழிக்க அவர்கள் பாம்புகறி உண்ணுபவர்கள், பன்றி இறைச்சி உண்ணுபவர்கள், பூரான் பல்லி வகைகளைக் கூட விட்டுவைக்காதவர்கள் என்று அவர்களில் சிலரின் உணவு முறையே சுட்டிக் காட்டப்படுகிறது. சீனர்கள் இடம் பெயரும் போது அங்கு ஒரு நாட்டை அமைத்துவிடுகிறார்கள், தங்களது பண்பாடுகளை அங்கு கொண்டு வந்துவிடுகிறார்கள், குறிப்பாக இடம் பெயர்ந்தால் பிறகு அங்கு திரும்பிச் செல்வதே இல்லை, அதனால் தான் சீன இனம் பல்வேறு நாடுகளில் நீண்டுள்ளது மேலும் சிங்கப்பூர் போன்ற நாட்டில் ஆளுமை சக்தியாக வளர்ந்துள்ளது. இடம் பெயரும் ஊரை சொந்த நாடாகவே மாற்றி அங்கேயே உழைத்து வாழ்பவர்கள் ஆசியாவில் சீனர்கள் தான். சிங்கப்பூரில் இந்தியர்களின் பெருமூச்சுகளில் ஒன்று 'நம்மால் பெரிய அளவில் சீனர்களுக்கு போட்டியாக வரமுடியவில்லை' என்பது தான், காரணம் கால் காசு சேர்த்தாலும் அதை இந்தியாவில் முதலீடு செய்துவிட்டு ரிடையர்மெண்ட் காலத்தில் அங்கு சென்று அமைதியாக வாழலாம் என்ற எண்ணத்தில் பெரும்பாலோர் செயல்படுவது தான், ஒரு நிலையான அடித்தளத்தை சிங்கையிலோ பிற நாடுகளிலோ தமிழர்களாலும் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது, இந்தியர்கள் சீனர்களை ஒப்பிட மிகச் சிலரே சென்ற நாட்டையும் முன்னேற்றி தானும் முன்னேறி இருக்கிறார்கள், சீனர்களில் பெரும்பான்மையினர் அவ்வாறு இல்லை, சென்று வசிக்கும் இடமே அவர்களது எதிர்கால தாய்நாடு.

3 ஜனவரி, 2011

காலம் மலையேறிவிட்டது !

மாறவே மாறாது என்று நினைத்தவை முற்றிலும் மாறிப் போய் இருப்பதைத்தான் காலம் மலை ஏறிவிட்டதாகச் சொல்லுவார்கள். ஒரு காலத்தில் மலை ஏறுவது என்பது அத்தனை கடினமான செயலாக இருந்திருக்க வேண்டும். தற்காலத்தில் மலை ஏறுதல் மிக எளிதானது, எத்தகைய செங்குத்தான வழியே இல்லாத மலை என்றாலும் உச்சிக்கு ஹெலிக்காப்டரில் சென்று கயிறு கட்டி இறங்கி விட முடியும். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மலை ஏற்றம் அவ்வளவு எளிதான ஒன்றாக இல்லை. கைலாய மலைக்குச் சென்றவர்களில் எத்தனை பேர் திரும்பினார்கள் என்று தெரியாது. தென்னிந்தியர்களுக்கு பழக்கப்படாத கடுங்குளிர், பனி கைலாய மலைக்குச் சென்றவர்களில் எத்தனை பேர் மீண்டு இருப்பார்கள் ? அப்படியும் சென்று திரும்பியவர்கள் உள்ளனர், முடியாது என்று நினைத்தவை அதனை உடைத்துக் காட்டுவதை மலையேற்றத்துடன் தொடர்புபடுத்திப் பேச மலையேற்றம் மிகக் கடினமாக இருந்திருக்க வேண்டும். அதுவும் சாமானியர்களால் சாதிக்கப்பட்டுள்ளது என்பதனைச் சொல்ல மலையேறிவிட்டது என்கிற உவமையாக மலையேறிவிட்ட பழமொழி வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எந்த காலத்தில் இருக்கிங்க, நீங்க நினைப்பது எல்லாம் எப்போதே மலையேறிவிட்டது, மாற்றம் என்கிற ஒன்றைத் தவிர அனைத்தும் மாறக் கூடியது என்பதை இப்படியெல்லாம் கூடச் சொல்லி வைத்துள்ளார்கள்


ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது தான் அந்த ஆண்டு விரைவாகச் சென்றதாக நினைக்கிறோம். மற்றபடி எந்த ஒரு ஆண்டும் முன்னை விட விரைவாகச் சென்றிருக்க வாய்ப்புகள் இல்லை. கடந்தவை நினைவு என்பதாக சேமிக்கப்படுவதால் அதன் சுருக்கத்தை மட்டும் தான் நம்மால் நினைத்துப் பார்க்க முடியும். ஒராண்டுகளில் நடந்த நல்லது கெடுதல்களில் எவையெல்லாம் நமக்கு முதன்மையாகப் பட்டதோ அது மட்டுமே நினைவில் நிற்கும், அவற்றை நொடிகளில் நினைத்துப் பார்க்க முடியும். அதனால் தான் பின்னோக்கிய காலம் வெகு விரைவாக கடந்து சென்றதாக உணர்கிறோம். மற்றபடி சென்ற ஆண்டின் நாட்களைப் போன்று தான் இந்த ஆண்டின் (ஆங்கில) புத்தாண்டு பிறப்பும் வெகுவிரைவாக கரைந்தது. திருமணம் உறுதிப்பட்டோர்களுக்கு திருமண நாள் வரை வரப்போகும் காலம் மெதுவானது தான். உதவியாளர் தேதிப்படி செயல்படும் தொழில் நடத்துவோர்க்கு எந்த ஆண்டுமே (தனிப்பட்ட) நேரம் என்பதே இருக்காது. (சார் இன்னிக்கு உங்க ப்ரோக்ராம்...... இரவு 8 மணிக்கு பார்க் ஷர்டனில் உங்கள் மனைவி, குழந்தைகளோடு உங்களுக்கு டின்னர்), அன்றாடம் ஒன்று போல் வேலை செய்பவர்களுக்கு, (தன்னுடைய வயது, மனைவி வயது குழந்தைகளின் வயது என்பது தவிர்த்து) புத்தாண்டு என்ன மாற்றம் கொண்டுவரும் ? பொதுவாக நம் வாழ்க்கை முறையில் ஓர் ஆண்டுகான நிகழ்வுகள் இவை என்பதாகத் தான் பெரும்பாலோனர்களின் ஆண்டுகள் ஓடிப் போய்விடுகின்றன. பருவ சுழற்சி இல்லை என்றால் ஆண்டுகள் பற்றிய கணக்கே நாட்களின் தொகுப்பை அறிவிக்கும் ஒரு அளவீடு என்ற அளவில் தான் இருக்கும்.

நினைத்துப் பார்த்தால் வியப்பாகவே உள்ளது, வள்ளுவர் வாக்கின் படி ஒவ்வொரு நாளும் செல்லும் போது நம் வாழ்நாளின் ஒரு நாளும் கூடவே செல்கிறது, புதிதாக ஒரு ஆண்டில் நம் வாழ்நாளில் ஒரு ஆண்டு எண்ணிக்கையும் சேர்ந்தே செல்கிறது, இது பற்றி எண்ணம் சிறிதும் இன்றி புத்தாண்டுகளைக் கொண்டாடத்தான் செய்கிறோம். மலையேறுவது அவ்வளவு எளிதல்ல, அப்படி ஏறினாலும் எதுவும் திரும்பாத காலத்தில் காலம் மலையேறி விட்டது என்பதை உவமையாகக் சொன்னார்கள், அப்படித்தான் 2010 மலையேறிப் போய்விட்டது. 2010 மட்டுமல்ல 2009ம் எனக்கு இனிமையான ஆண்டாகவும் பல நல்வரவுகளை பெற்றுத் தந்த ஆண்டாகவும் இருந்தது, வரும் ஆண்டுகள் இந்த அளவுக்குச் சிறப்பாக இல்லாவிட்டாலும் கிடைத்தவை செழிக்க வேண்டும் என்பதைத் தவிர்த்து புத்தாண்டில் வேறெதையும் நினைக்க வில்லை.

பிறந்த ஊருக்குச் சென்ற போது நான் சிறுவயதில் பார்த்த போது இளமை துடிப்புடன் வீறு நடை போட்டவர்கள், முதிய தோற்றத்தில் இருக்கிறார்கள். நண்பர்களின் தலையிலும் சிலரின் மீசையிலும் கரு...கரு..மை. மனித தோற்றத்தை ஜீன்களின் படி நிலை முடிவு செய்கின்றன.வாரிசுகளின் நிகழ்கால நிழலில் இளைப்பாறுவதால் நமது நிகழ்காலம் கண்டுகொள்ளப்படாமலேயே கடந்து செல்லுகிறது. கால சுழற்சியும் முதுமையும் மரணமும் இல்லை என்றால் புது உலகம் என்று எதையும் சொல்ல முடியாது, ஒவ்வொரு இழப்பிலும் உலகம் புதுப்பிக்கப்படுகிறது. காலம் மலையேறி முடித்துவிடவில்லை, மலையேறுதலில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

14 ஜனவரி, 2010

பொங்க(ல்) வச்சாச்சு !

வேலை நாளில் பொங்கல் வந்தால் சிங்கையில் பொது விடுப்புக் கிடைக்காது, அதி காலையில் , மாலையில், விடுப்பு எடுத்து மூனு வழியில் பொங்கல் வைக்கலாம். விடுப்பு எடுத்து வைத்தால் தொலைக்காட்சிகளின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் சிக்க வேண்டி இருக்கும் என்பதால் அதைத் தவிர்க்க. காலையில் எழுந்து வைப்பது என்று முடிவு செய்தோம்.

அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, காலை 5:15 மணிக்கு செய்ய துவங்கி சேனை, பனங்கிழங்கு, பரங்கிக்காய், பூசனிக் காய், வாழைக்காய், பச்சை மொச்சை, பச்சை துவரை, வள்ளிக் கிழங்கு, கத்திரிக்காய், உருளை கிழங்கு, முருங்கை காய் எல்லாம் போட்டு பொங்கல் கறி மற்றும் சர்கரை வெண் பொங்கல் செய்து முடிக்க காலை 6.15 ஆச்சு.




ஒரு மணி நேரத்தில் மிகவிரைவாக எல்லாம் முடித்து 6:30க்கு படையல் போட்டு முடிந்தது. (பொங்ல் வைக்க நாள்காட்டியில் நேரம் இருக்குமாம், நமக்கு நாள் நட்சத்திரத்தில் நம்பிக்கை இல்லை, எல்லா நாளும், நேரமும் நல்ல நாள் தான்)



எல்லாம் முடித்து சாப்பிட அமர்ந்து சன் தொலைக்காட்சியை ஓடவிட்டால் நமீதா பொங்கல் கிண்டுறாங்க.




பொங்கல் புத்தாண்டு சேர்த்தே கொண்டாடினாலும் புதுத் துணி எடுக்கும் வழக்கம் இன்னும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அடுத்த ஆண்டுக்கு புத்தாடைகளுடன் பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாடவேண்டும் என்பது இந்த ஆண்டு பற்றுறுதி.

சென்ற ஆண்டு, பொங்கல் பதிவு:

பொங்கல் புராணம் !



அனைவருக்கும் இனிய விழாக்கால வாழ்த்துகள் !

சித்திரைக்கு புத்தாண்டு கொண்டாட இருப்பவர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளையும், மற்றவர்களுக்கு (கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து சொல்லனுமா ? இல்லையா ?) பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

13 ஜனவரி, 2010

தமிழ் புது புத்தாண்டு வாழ்த்துகள் !

நான் தை 1ஐ புத்தாண்டாக கொண்டாடுவதற்கு மாறிவிட்டேன். கடந்த இரு ஆண்டுகளாக பொங்கலையும் தமிழ் புத்தாண்டையும் சேர்த்தே கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. ஏப்ரல் 14 ? வழக்கம் போல் ஒரு நாளாக செல்கிறது.

இது பற்றி சென்ற ஆண்டுகளில் எழுதிய பதிவுகள்.

பொங்கல் புராணம் (ஆன்மீக பதிவு அல்ல) (2009) !
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ! (2008)

வைப்பதற்கும் சிரைப்பதற்கும் அது என்ன மீசையா தேதியை மாற்றி மாற்றி வைக்க என்று வழக்கம் போல் தை 1 ஐ தமிழ் புத்தாண்டு என்று சொன்னால் சிலர் சினந்து எழுகிறார்கள்.

நானும் 'தீபாவளி', 'மகர சங்கராந்தி', 'கிருஷ்ண ஜயந்தி', 'ஆவணி அவிட்டம்', 'அட்சய திருதியை', 'கோகுலாஷ்டமி', 'புரட்டாசி சனிக்கிழமை', 'பங்குனி உத்திரம்', 'மாசி மகம்', 'சித்திரா பவுர்ணமி', 'ஆடி அமாவாசை', 'ஆடி பூரம்', 'வைகாசி விசாகம்', 'வைகுண்ட ஏகாதேசி', 'சிவ ராத்திரி', 'மாளய அமாவாசை' 'சித்திரை விசு','ரஜினி பிறந்த நாள்', 'விஜய் பிறந்த நாள்' இவையெல்லாம் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருக்கிறதா ? இவை சங்கத்தமிழர்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன், கிடைக்கவே இல்லை. இவை யெல்லாம் சத்தமில்லாமல் நுழைந்து அவற்றையும் ஏற்றுக் கொண்ட பிறகு ஒரே ஒரு நாள் தமிழறிஞர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றி அமைப்பதால் தமிழுக்கு எந்த குடியும், தமிழர் குடியும் முழுகிவிடாது என்று தெரிந்தது. நம்மைக் கேட்காமலேயே எவ்வளவோ மாற்றம் புகுத்தப்பட்டு புகுந்து நிகழ்ந்திருக்கிறது. தை 1 புத்தாண்டாக அறிவித்ததும் இருந்துவிடட்டுமே என்றே நினைக்கிறேன்.




வழக்கமாக கொண்ட்டாடும் புத்தாண்டுக்கு பதிலாக இந்த ஆண்டு தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகவும் பொங்கலாகவும் கொண்டாடும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துகள். மற்றவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள், அவர்களையும் வரும் காலம் மாற்றும்.

தமிழ் புத்தாண்டும் சீனர்களின் சீனப் புத்தாண்டு போல் மதச் சார்பற்று அல்லது அவரவர் மத வழக்கப்படி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடுவது எதிர்காலத்தில் நடக்கும் என்று நம்புவோமாக.

14 ஜனவரி, 2009

பொங்கல் புராணம் (ஆன்மீக பதிவு அல்ல) !

சிங்கையில் இந்திய, தமிழ் பண்டிகைகள் கொண்டாடுவதில் எந்த குறையில்லாமல் கொண்டாடலாம். பொங்கலுக்கு தேவையான மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, மண் பானை, அகப்பை, கரும்பு அனைத்தும் கிடைக்கும். எங்கள் வீட்டில் மண் பானையில் செய்வது இல்லை, வாங்கினால் பொங்கல் முடிந்ததும் அதை தூக்கிப் போடனும், இல்லை என்றால் கவனமாக உடையாமல் வைத்து பாதுகாத்து அடுத்த ஆண்டுக்கு பயன்படுத்தனும், இரண்டுமே கடினம் தான். அதனால் இரு சிறிய எவர்சில்வர் பானைகளில் தான் கடந்த 9 ஆண்டுகளாக பொங்கல் வைக்கிறோம். மூவருக்கு அதில் வைப்பதே மீந்து போகும்.

தீபாவளிக்கு கிடைப்பது போல் பொங்கலுக்கு பொதுவிடுமுறை கிடையாது, எப்போதாவது சனி / ஞாயிற்றில் பொங்கல் வந்தால் பொறுமையாக செய்ய முடியும், இந்த ஆண்டு புதன் கிழமை வந்ததால் எல்லாம் விரைவாகவே செய்து முடிக்கவேண்டிய கட்டாயம். மஞ்சள் / இஞ்சி கொத்து போகி அன்று வாங்கினால் கழிபட்டதே கிடைக்கும் என்பதால் இரண்டு நாட்களுக்கு முன்பே பச்சரிசியுடன் சேர்த்து வாங்கிவிட்டோம். நேற்று புத்தம் புதிய பொங்கல் காய்கறிகளை வாங்கினேன். பொங்கல் கறியில் மொச்சை, மற்றும் அனைத்து கிழங்குவகைகளையும் போட்டு செய்வது வழக்கம், சக்கரை வள்ளிக் கிழங்கு வாங்குவதற்காக மூன்று கடை ஏறி இறங்கி ஒருவழியாக அரைநெல்லிக்காய், சர்கரைவள்ளிக்கிழங்கு, தலைவாழை மற்றொரு கடையில் கிடைத்தது. மற்ற நாட்களை விட பொங்கலுக்கு முதல் நாள் சற்று விலை கூடுதலாக இருக்கும், பண்டிகையில் தானே விற்பனையாளர்களும் கொஞ்சம் காசு பார்க்க முடியும் என்பதை நினைத்துக் கொண்டு வாங்குவேண்டியதுதான். சிங்கை தவிர மற்ற வெளிநாடுகளில் செங்கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, தலை வாழை இலை நினைத்துப் பார்க்க முடியுமா ? அதைக் கொண்டு வந்து விற்பதற்காக சற்று கூடுதலாகக் கொடுத்தால் ஒன்றும் குறைவில்லை என்றே நினைக்கத் தோன்றும்.

பொங்கலுக்கு தேவையான சாமான்கள் ஆயத்தம் ஆச்சு. பொங்கல் எத்தனை மணிக்கு வைப்பது? சிங்கையில் ஞாயிற்றெழுச்சி காலை 7 மணிக்கு மேல் தான். விடுமுறை நாள் இல்லையே, நான் நாள் தோறும் காலை 6.15 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் தான் வேலை செய்யும் இடத்தை அடைய 8.15 ஆகும், அதனால் பொங்கல் வைப்பதை அதிகாலை (பிரம்ம நல்வேளை - பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்) சான்றோரை (மனைவிதான்) கலந்து ஆலோசித்து, 4.30 மணிக்கு தொடங்க,

10 நிமிடத்தில் பொங்கியது. அந்நேரத்துக்கு மகளை எழுப்பி 'பொங்கலோ...பொங்கல்' சொல்லும்மா....என்றால், 'இன்னிக்கு நம்ம வீட்டில் என்ன ?' என்று எழுந்திருந்தாலும் தூக்க கலக்கத்தில் கேட்டாள், இத்தனைக்கும் நேற்று இரவே 'நாளை பொங்கல்' என்று சொல்லி வைத்தோம். பொங்கல்களை நான் பார்த்துக் கொள்ள, பொங்கல் காய்கறி சமையலை மனைவி முடித்தார்.



(எங்கள் வீட்டில் எப்போதும் பூசைப் போடும் பணி என்னுடையதாம்)

எல்லாவற்றையும் எடுத்து வைத்து, பூசையெல்லாம் போட்டு, ஆதவன் இருக்கும் இடத்தை நோக்கி கற்பூரம் காட்டிவிட்டு, சாப்பிட்டுவிட்டு மணியைப் பார்த்தால் 6.45 ஆகிவிட்டது. பொங்கலை சிறிது உண்டுவிட்டு (சர்கரை பொங்கலில் முந்திரி மிகுதியாக போட்டுவிட்டிங்க, திகட்டுது என்று அம்மணியின் புலம்பல்), நண்பகல் உணவிற்காக பொட்டலம் கட்டிவிட்டு, 7 மணிக்கு மகளை பள்ளியில் விட்டுவிட்டு, அலுவலகம் வந்து சேர காலை 9.00 மணி ஆகிவிட்டது. இன்று 45 நிமிடம் அலுவலகம் நேரத்தை பொங்கலுடன் சேர்த்து விழுங்கியாச்சு.

பொதுவிடுமுறை நாளாக இல்லாததால், சன் தொலைக்காட்சியிலும், விஜய் தொலைகாட்சியிலும் நடிகர்/நடிகைகளின் பொங்கல் வாழ்த்துகளை கேட்கபெறமுடியாத துர்பாக்கிய சாலி ஆகிவிட்டதில் பெரிய வருத்தம் தான்




(ஹைய்யா......புது சட்டை ! )

அனைவருக்கும் தைப்பொங்கல், மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

31 டிசம்பர், 2007

இந்துக் கடவுள்கள் புத்தாண்டை புறக்கணிக்கிறதா ?

ஆங்கில நாள்காட்டி முறையே உலகம் தழுவிய அளவில் பயன்படுத்துப்படுகிறது, மாத ஊதியம் ஆங்கில மாத அடிப்படையிலேயே உலகம் முழுவது வழங்கப்படுகிறது. அனைத்துலக பயண தேதிகள் ஆங்கில முறையிலேயே இருக்கிறது. ஆங்கில நாள்காட்டித் தவிர்த்து உலகம் ஒரே இல்லம் என்பதற்கு வேறெந்த பொதுத்தன்மையும் கிடையாது. இதிலும் மதவாதிகள் மூக்கை நுழைத்து ஆங்கில முறை புத்தாண்டாக வரும் ஜனவரி ஒன்றையும், புத்தாண்டு பிறக்கும் இரவையும் புறக்கணிக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் ஆங்கில புத்தாண்டு வழக்கம் கிறித்துவ மதம் சார்ந்ததாம்.

உலகில் எந்த ஒரு மனிதனும் தனக்கு வயது இது என்பதை ஆங்கிலம் தவிர்த்து தமிழ் உட்பட வேறு எந்த மொழியின் மாதத்தை வைத்து, ஆண்டை வைத்து எந்த கணக்கையும் சொல்ல முடியாது, பிறந்த தேதியை குறிப்பிட அந்தந்த மொழியின் மாதத் தேதியை வேண்டுமானல் குறிப்பிட முடியும், ஆண்டைக் குறிப்பிட வேண்டுமானல் ஆங்கில முறை ஆண்டைத் தவிர்த்து குறிப்பிடவே முடியாது. உதாரணத்திற்கு ஒருவர் திருவள்ளுவர் ஆண்டு 2210ல் சித்திரை 13ல் பிறந்தேன் என்று சொன்னால், கண்டிபாக உங்கள் வயது என்ன என்று கேட்டால் தான் வயதை கண்டுபிடிக்க முடியும்.

வழக்கம் போல் வரட்டு *வேதாந்திகள்* நாள்காட்டி முறையில் இந்துத்துவ தீ(யவை)யை வளர்க்க முயற்சிக்கிறார்கள். அதற்கு சொல்லப்படும் காரணம் கோவில்களில் எந்த நேரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற முறை இருக்கிறதாம். அதன் படி நள்ளிரவு தாண்டி கோவிலை திறக்கக் கூடாதாம். இந்து முறைப்படி சூரிய உதயத்தை வைத்தே நாள் தீர்மானிக்கப்படுகிறதாம், அந்த கணக்குபடி, சூரிய உதயம் காலை 6.05 மணிக்கு என்றால் அந்த தேதி காலை 6.05க்குத்தான் பிறக்கிறதாம். நல்ல வேளை நம் இந்தியாவில் டைம் சோன் எனப்படும் நேர பகுதி முறை இல்லை, இருந்தால் மேலும் பலகுழப்பங்கள் இருக்கும், பஞ்சாங்கங்கள், ஜோதிடம் எல்லாமே குழப்பமாக இருந்திருக்கும், ஒருவர் இராகுகாலம் பார்த்து, முடிந்துவிட்டது என்று புறப்பட்டால் ரோட்டுக்கு அந்த பக்கம் இராகுகாலம், இப்படியெல்லாம் கூட இருக்கும் டைம் சோன் -க்கு ஜோதிடத்தில் பரிகாரம் செய்வார்களோ ? :)

கிராம புறங்களில் இரவு 12 மணிக்கு மேல் மதுரை வீரன் வேட்டைக்கும், ஊர் காவலுக்கும் செல்லும் என்று சொல்லுவார்கள். இந்து கோவில்களில் நடை சாத்துவது, என்ற பெயரில் தாலாட்டுப் பாடி கோவில் கதவு சாத்தும் அன்றாட நிகழ்வு உண்டு. அதன் பிறகு காலையில் பள்ளி எழுச்சி பாடுவார்கள். வைகுண்ட ஏகாதேசி அன்று விடிய விடிய விழித்திருப்பார்கள் இதெல்லாம் ஒரு வழக்கம் என்று வைத்துக் கொள்ளலாம், ஆனால் அதையே காரணம் காட்டி புத்தாண்டுக்கு கோவிலுக்குச் சென்று வணங்கினால் அந்த ஆண்டுமுழுவதும் நல்லது நடக்கும் என்ற *நம்பிக்கையில்* வருபவர்களை சாடுகிறார்கள். சாமி பக்தர்களுக்காக ஒருநாள் கண்விழித்தால் குறைந்து போய்விடுமா ? சாமி தூங்கிக் கொண்டிருந்தால் இரவு நேரத்திலும் திருப்பதி, சபரிமலை ஏறுபவர்களுக்கு அந்தந்த சாமி ஆபத்து நேர்ந்தால் விழித்தெழுந்து கருணை காட்டாதா ? சாமி தூங்குகிறது என்பதே ஒரு அபத்தம்.

நமெல்லாம் கோவணம், வேட்டி, புடவை எல்லாவற்றிலிருந்தும் மாறிவிட்டோம், கோவில் மண்டபங்களில் மாடவிளக்குக்கு பதில் மின்விளக்குகள் எரிகிறது. சில இடங்களில் குளிசாதன வசதியும் வந்துவிட்டது, ஒலிப்பெருக்கி, மணியில் கூட எலெக்ட்ரானிக் வந்துவிட்டது. நமக்கெல்லாம் வாகனம் மாறி கான்டசா, எமகா, ஏரோப்ளேன் என்று உலகை சுற்றுகிறோம். ஆனால் சாமிகள் மட்டும் மிக பழைய ஸ்டைல் காஸ்ட்யூம்சில், விலங்குகளின் வாகனத்தில் தான் இன்னும் இருக்கிறது.

********

ஒருநாள் இரவு 12 மணி தாண்டி கோவிலை திறந்தால் சாமிகள் கோவில்களை விட்டு ஓடிவிடுமா ? கோவில்கள் புத்தாண்டை புறக்கணிப்பது போல் தெரியவில்லை. இந்துத்துவாக்கள் பக்தர்களின் நம்பிக்கையில் மண்ணைப் போடுவதுடன், குருக்கள்களின் வருமானத்தில் :) பாராங்கல்லையும் போடுகின்றனர். இந்தியாவில் 12 மணிக்கு தூங்கிய அதே சாமி அதே நேரத்தில் அமெரிக்காவிலோ, லண்டனிலோ கொட்ட கொட்ட கண் விழித்திருக்காதா ? :)

மதங்களின் வளர்ச்சி என்பது அது எந்த அளவு பழமை வாதத்தில் இருந்து மீண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது என்பதில் தான் இருக்கிறது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதில் உள்ள அடிப்படை வாதிகளுக்கு இதெல்லாம் புரியவே புரியாது.

*********

பதிவர்கள், திரட்டிகள், பதிவை படிப்பவர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்