படத்தில் அந்த இரு காட்சிகளுமே இல்லை, ஆனால் வீட்டினுள் பிடிக்கப்பட்டக் காட்சி காட்டப்பட்டு இருந்தது. கதை படி சாயாஜி சிண்டே வில்லனுக்கு ஆதரவான உயர் காவல் அலுவலர். அவரது சின்னவீடு தான் அந்த வீட்டில் இருப்பார். வில்லன் அவரது சின்ன வீட்டையும் வளைத்துவிட வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளி ஏறுவார். வீட்டுனுள் வில்லனும், சின்னவீடும் இருக்கும் காட்சியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாத விரக்தியில் வெளியே வருவார். வெளியே வந்ததும் சின்ன வீடும், பங்களாவும் கைவிட்டுப் போய்விட்டதே என்று வெறுத்து, வெறுப்பில் பார்த்துவிட்டு ஜீப்பில் ஏறுவார். வீட்டுனுள் எடுக்கப்பட்ட காட்சியை நான் பார்க்கவில்லை. வெளியே எடுத்தக் காட்சியைத் தான் பார்த்தேன். படத்தில் வீட்டுனுள் எடுத்தக் காட்சியே இடம் பெற்றிருந்தது. வெளியே எடுத்தக் காட்சி நீளம் கருதி வெட்டப்பட்டதாக நினைக்கிறேன். காரணம் ஏற்கனவே படம் 3 மணி நேரத்திற்கும் மேல் மாபெரும் இழுவை. வேட்டைக்காரன் படத்தில் சிறப்பாக செய்திருந்தவர்களில் சாயாஜி சிண்டேவும் ஒருவர்.






படப்பிடிப்பைப் பார்த்துக் கொண்டே எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து நான் படம் எடுத்துக் கொண்டிருத்தேன். எடுக்கக் கூடாது என்று சைகை காட்டினார்கள். சரி என்று சொல்லிவிட்டேன். எடுத்த வரை ஆறு படங்கள் இருந்தது. ஒரு திரைப்படம் உருவாக பலரது உழைப்பும், பெரிய அளவில் பணமும் புழங்குகிறது, திரை உலகம் என்பது மபெரும் தொழிற்சாலை தான். வெற்றி பெற்றால் பணத்துடன் புகழ் வெளிச்சமும் சேர்ந்தே கிடைக்கிறது. அதிலும் டைட்டில் எனப்படும் படத் தலைப்பில் தனியாக பெயர் போடப் படுபவர்களுக்கு மட்டுமே. மற்றவர்களது உழைப்பு பெரிதாக வெளியே தெரியாது என்றாலும் ஒரு படம் தோல்வி அடைந்தால் அந்த மற்றவர்கள் பாதிப்பு அடையமாட்டார்கள், தனியாக பெயர் போடப்படுபவர்கள் தான் பாதிப்பு அடைவார்கள். திரையுலகம் கலை சார்ந்தது என்றாலும் அது ஒரு மாபெரும் சூதாட்டம், ஒரு இயக்குனர் வரிசையாக இரண்டு தோல்வி படங்கள் கொடுத்தால் பிறகு அவருக்கு தயாரிப்பாளரே கிடைக்க மாட்டார். ஆனால் நடிகர்கள் ? நான்கு படம் தோல்வி அடைந்து ஐந்தாவது வெற்றிப்படம் அமைந்தால் அதன் காரணமாக அடுத்த நான்கு தோல்விப் படங்களுக்கு அவருக்கு இயக்குனரும், தயாரிப்பாளர்களும் கிடைப்பார்கள். ஏனென்றால் முகராசி என்பதை திரையுலகம் வெகுவாகவே நம்புகிறது அதுவும் நடிகைகளுக்குக் கிடையாது. எந்த ஒரு வெற்றிப்படமாக இருந்தாலும் பொதுமக்களிடம் நேரடி அறிமுகம் பெற்றவர் என்பதால் ஒரு நடிகரின் புகழ் அந்தப் படத்தின் இயக்குனரை விட வெகுவாகவே பரவும், இயக்குனரின் புகழ் திரையுலகிலும், நடிகர்களைத் தாண்டி திரைப்படங்களை ரசிப்பவர்களிடம் மட்டும் தான் பரவும்.
என்னைப் பொருத்த அளவில் திரைக் கலைஞன் என்றால் முதலில் இயக்குனரே அதன் பிறகு இயக்குனரின் கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் நடிகர் நடிகைகள். வளர்ந்த நடிகர்களைப் பொருத்த அளவில் ஒரு படத்தின் தோல்வி என்பது அந்த படத்தை இயக்கியவர்களின் தோல்வி (இவளவு பெரிய நடிகரை வச்சே பணம், படம் பண்ணத் தெரியலையே என்பார்கள்). ஒரு படத்தின் வெற்றி அந்த நடிகரின் வெற்றி என்பதாகவும் திரையுலகினுள்ளேயே பிரித்து அறியப்படுகிறது. வளர்ந்த நடிகர் தோல்வி படமானால் அடுத்தப் படத்துக்கு இயக்குனரை மாற்றிக் கொள்வார். வெற்றிப்படம் மென்றால் அடுத்தப்படத்தில் அதைவிட நிறைய செலவு செய்யும் படமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரையே மாற்றிக் கொள்வார். திரையுலகம் ஒரு கனவு தொழிற்சாலை என்று சரியாகச் சொல்கிறார்கள். சில கனவுகள் பலிக்கும், பல கனவுகள் பழிக்கும். இதில் நட்டம் அடைபவர்கள் என்றால் இயக்குனரோ, நடிகர்களோ கிடையாது வட்டிக்கு பணம் வாங்கி தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் எனப்படும் படம் வெளியீட்டாளர்களும் தான். இயக்குனர்கள், நடிகர்கள் படு தோல்வி என்றாலும் அவர்கள் தஞ்ச மடைய சின்னத் திரையுலகம் இருக்கு. தயாரிப்பாளர் தோல்வி அடைந்தால் கடன் தொல்லையில் தப்பிக்க விடுதி அறையில் தஞ்ச மடைந்து முழம் கயிற்றில் முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இது சன்/திமுக, ஏவிஎம் குடும்பம் போன்று பெரிய அளவிலான பலதொழில் புரியும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பொருந்தாது, வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுப்பவர்களுக்குத்தான் அந்த நிலை.
பின்குறிப்பு : வேட்டைக்காரன் விமர்சனம் எழுதினால் பதிவுலகில் இருந்து தள்ளி வைக்கப்படுவீர்கள் என்று பலமான எச்சரிக்கை பல தரப்பினரிடம் இருந்து வந்ததை முன்னிட்டும், வேறு வழியே இல்லாததால் என் பங்குக்கான வேட்டைக்காரன் பதிவு இது என்ற அளவில் எடுத்துக் கொள்ளுமாறு விஜய் ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். :)