வழக்கமாக தைப்பூசம் என்றால் குட்டி இந்தியா பக்கம் எட்டிப் பார்ப்பதுண்டு, பொதுவாகவே காவடி குட்டி இந்தியா பெருமாள் கோவிலில் இருந்து...இந்த இடத்தில் ஒரு இடைச் சொருகல், தமிழகத்தில் தான் சைவத்திற்கும் அசைவத்திற்கும் ஆகாது, அதாவது சிவன் தொடர்புடைய கோவில் நிகழ்வுகள் அல்லது பட்டையடிக்கும் கோவில் நிகழ்வுகளுக்கும் வைணவ கோவில்களுக்கும் யாதொரு தொடர்பும் இருக்காது, ஒரு ஐயங்காரை சிவன் கோவிலுக்கு கூப்பிட்டுப் பாருங்கள், பெருமாளை சேவிக்கிறவா சைவாள் கோவிலுக்கெல்லாம் வரமாட்டா, அபச்சாரம்' என்பார்கள். சிங்கப்பூரிலும் பெருமாள் கோவிலுலும் நாமம் போட்ட ஐயங்கார்ஸ் தான் இருக்கிறார்கள் என்றாலும் தைப்பூசத்திற்கு தெண்டபாணி முருகன் கோவிலுக்கு காவடிகள் பெருமாள் கோவிலில் இருந்து தான் துவங்கும், இங்கே உள்ளவர்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை, மாறாக காவடிச் சீட்டு, பால்குடம் என்று புறப்படும் ஒவ்வொன்றுக்கும் கட்டணச் சீட்டு விற்பார்கள், வருமானம் தான், தவிர சின்ன ஊரில் சைவம் - அசைவம் பிரச்சனை செய்தால் ஒரு பய கோவிலுக்குள் எட்டிப்பார்க்க மாட்டான்.
எங்கே விட்டேன் ? குட்டி இந்தியா பெருமாள் கோவிலில் இருந்து 5 கி.,மி தொலைவில் உள்ள தெண்டபாணி முருகன் கோவிலுக்கு இடைபட்ட இடத்தில் இறங்கி அதனை பார்வையிட்டபடி காவடி செல்லும் திசைக்கு எதிர்பக்கமாக நடந்து குட்டி இந்தியாவரை நடந்து வந்து பார்த்துவிட்டு திரும்புவேன், நாகையில் இருக்கும் வரை ஆண்டுக்கு இருமுறை இது போன்ற காவடி நிகழ்வுகளைப் பார்த்து அதில் கலந்து கொண்டு வந்ததால் சிங்கப்பூரில் அத்தகைய நிகழ்வுக்கு சென்று வருவது ஞாபகங்களை மீட்டுத் தரும், மற்றபடி சிங்கப்பூர் தைபூச நிகழ்வுகளில் என்னை ஈர்க்கும் படி பெரிதாக இல்லை, இங்கே காவடிக்கு மேளம் அடிப்பது உள்ளிட்ட கொண்டாடம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை, தவிர காவடிகள் அனைத்தும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கும், ஒரே வேறுபாடு, சீனர்களில் ஒரு சிலர் கூட காவடி எடுத்துவருவார்கள்,
இந்த ஆண்டு பாஞ்சாபி குடும்பம் ஒன்று காவடி எடுத்து வந்தது. நான் வழக்கமான இடத்தில் இறங்கி செல்லாமல் இன்றைக்கு முன்கூட்டிய திட்டம் எதுவும் இடாமல் ஞாயிற்றுக் கிழமை வழக்காமாக கறிகாய் வாங்கச் செல்லும் மாலை ஏழு மணிக்கு நேராக லிட்டில் இந்தியாவில் பெருமாள் கோவில் அருகே இறங்கினேன், முத்ல் நாள் நள்ளிரவு துவங்கும் காவடிகள் மறுநாள் இரவு 9 - 10 மணி வரை கூட சென்று கொண்டு இருக்கும், எடுத்துப் போன அலங்கார காவடிகளை திரும்ப எடுத்து வந்து மற்றவர்களும் எடுத்துச் செல்வார்கள், சிங்கப்பூர் இந்து இந்தியர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு ஊழியர்களாக தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு வந்தவர்களில் சிலரும், இங்கு நிரந்தரவாசியாக இருப்பவர்களும் வேண்டுதல் தொடர்சியாக இங்கேயே காவடி எடுப்பார்கள், அன்று ஒரு நாள் மட்டும் குட்டி இந்தியாவில் கண்டுகொள்ளப்படாத குப்பை மயமாக இருக்கும்,
பெருமாள் கோவில் அருகே இறங்கிப் பார்த்தால் கட்டுகடங்காத கூட்டமும் காவடி ஊர்வலத்தின் ஆரவாரமும், வாய்குள் முனுகுவது போல் கொட்டு அடித்துக் கொண்டு ஆடல் பாடல் என வெகு அமர்களமாக காவடிகள் சென்று கொண்டிருந்தது, சிறிது நேரம் பார்வையிட்டுவிட்டு வந்த வேலையை முடிக்க கறிகாய்களை வாங்கிவிட்டு காவடி செல்லும் திசையை குறுக்காக அடைந்து குட்டி இந்தியா பகுதிக்குள் சென்று விட்டேன், சாலையை முற்றிலும் முடக்காமல் ஒருபக்கம் தடுப்பு அமைத்து காவடிகளுக்கு வழிவிட்டு ஆங்காங்கே தற்காலிக காவலர்களை நிற்க வைத்து பார்வையாளர்களும், பொருள் வாங்க வந்தவர்களும், ஞாயிற்றுக் கிழமை சந்திப்புகளுக்காக குட்டி இந்தியாவில் கூடியவர்களும் சாலையைக் கடக்க ஏற்பாடு செய்திருந்தனர், அப்படியே சாலையைக் கடந்துவிடலாம் என்று ஒரு அதற்கான ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தேன், காவடிகள் சென்று கொண்டு இருந்தன,
ஒவ்வொரு காவடியுடனும் எடுப்பவர்களின் உறவினர் நண்பர்கள் என ஒரு 20 பேராவது உடன் செல்வார்கள் அவர்களில் சிலர் ஆடியும் பாடியும், விசிலடித்தும் செல்வார்கள், பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு காவடியுடன் வந்த காவடி எடுப்பவரின் உறவுக்காரரான நடுத்தரவயது பெண், தற்காலிக பாதுகாவலுக்கு இருக்கும் ஒரு பணியாளரிடம் (அவர் இந்தியாவில் இருந்து வந்தவர் என்று பார்ததும் தெரிவதால்) நீ போக்குவரத்தை ஒழுங்கு செய்யாமல் காவடி எடுப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தால் நான் 'கொம்ப்ளய்ண்ட்' பண்ணிடுவேன் என்று மிரட்டல் தொணியில் இரண்டு முறை சொன்னார், நீல சீருடை அணிந்த சிங்கப்பூர் காவலர்களிடம் இதுபோல் இந்தம்மா பேசுமா ? எளக்காரம் தானே என்று எரிச்சலாக நினைத்தேன், அந்த பெண்ணும் அந்த காவடியும் நகர்ந்த உடன் அந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியாளர் என்னைப் பார்த்து சிரித்தார் , நானும் சிரித்தேன், அருகில் இருந்த மற்றொருவர் 'எல்லாம் நம்ம நேரம்' என்றார். சிரித்தேன், ஆனால் இன்னொருவன் இன்னொன்னு சொன்னான் பாருங்க......
'அவ மூஞ்சியப் பார்த்தால் பறச்சி மாதிரி தெரியுது......எப்படி பேசிட்டுப் போறா.......' அதைக் காதில் கேட்டவுடன் எனக்கு 'சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று கோவம் தலைக்கேறியது, அப்படிக் கேட்டவர் பார்க்க வேலை அனுமதிச் சீட்டில் கட்டிட வேலை அல்லது குறைந்த ஊதிய பணிக்கு வந்தவர் போல் தான் இருந்தார்.
'மற்றதெல்லாம் ஓகே......இங்க வந்து எதுக்கு சாதியைப் பேசுறிங்க, மனுசங்க எல்லோருக்கும் கையு காலு எல்லாம் ஒண்ணு தான், அவங்க சாதிகாரன் வேறயாராவது இதை காதில் கேட்டு உங்களை செருப்பால் அடித்தால் வாங்கிக் கொள்ள தயாரா ?' என்று திரும்பி முறைத்து சற்று கோபமாகவே கேட்டேன், கேட்ட நபர் உடனேயே அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டான், அங்கே நின்ற மற்றவர்களிடம் 'பொழைக்க வந்த இடத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தானே, இங்க வந்து ஏன் மற்றவர்களை தாழ்த்திப் பேசனும் ?' நீங்கச் சொல்றது சரிதான் என்றனர், அதற்குள் சாலையைக் கடக்க வழிகிடைக்க நானும் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
தமிழகத்தில் பறையர்கள் பன்றி சாப்பிடுகிறார்கள் என்று தான் அவர்கள் மீது தீண்டாமையுடன் தாழ்த்தியும் வைத்திருந்தினர் . சாப்பிடுவது விலங்குகள் என்ற வகையில் ஒருத்தன் பன்றியை சாப்பிட்டால் என்ன ? மாட்டை சாப்பிட்டால் என்ன ? ஆடுகோழியை சாப்பிட்டால் என்ன ? கேடுகெட்ட சாதிவெறிப்பிடித்த நாய்கள் இன்றும் சாதியைப் பற்றி பேசினாலும் அதை தாழ்த்தும் பொருளுடன் பேச என்ன தேவை ? சீனன் கழுவதுகிடையாது, பேப்பரில் துடைத்து தான் கொள்கிறான், வேலைக்கு என்று வந்து பன்றியை விரும்பி உண்ணும் சீனனுக்கு சலாம் போட்டு, அவனுக்கு பயந்தபடியே வேலை பார்க்கும் நம்மவர்கள் சீனன் என்றால் கழுவி விடக் கூடத் தயாராக இருக்கும் பொழுது ஒரு சமுகம் எதனால் தள்ளி வைக்க்கப்பட்டது ? என்ற எந்த ஒரு அறியாமையும் இன்றி 'பறையன், பறைச்சி' என்று முகத்தைப் பார்த்து எடைபோட்டு பேசும் அளவுக்கு சாதிவெறியில் மூளை மழுங்கடிக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் ?
உயர் கல்வி, நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு என்று தன்னைப் பற்றி எந்த ஒரு உயர்ந்த நிலையையும் இல்லாத ஒரு நபர் கூட ஒருவரை தாழ்த்த அல்லது ஒருவரை கேவலப்படுத்த சாதியென்னும் ஆயுதத்தை எடுத்து வீசுகிறாகளே ? நாம் பிறந்த நாட்டைப் பற்றி நாம் என்ன தான் பெருமை பேசினாலும் அவை வீண் பெருமை தான் என்றாகிறது.
சிங்கப்பூர் இந்தியர்களால் எள்ளலாகச் சொல்லப்படும் "ஊர்காரன்" மட்டுமல்ல, தமிழகத்தில் பிச்சைக்காரன் கூட உயர்ந்த பதவியில் உள்ள பறையர் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை 'போடாப் பறப்பயலே' என்று தூற்றி கூணிக் குறுக வைக்க முடியும்...........இந்த நிலை நாடுகளை தாண்டியும் நம்மவர் இடையே உள்ளது,. தமிழன் முன்னேறாமலும் உலகினருக்கு சான்றாக இல்லாததற்குக் காரணம் அவனவனிடம் உள்ள எல்லைகளற்ற, காலத்தால் அழியாத சாதிப்பற்றும், சாதிவெறியுமே யாகும்.