பின்பற்றுபவர்கள்

இந்தோனேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தோனேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஜூன், 2013

பாமெண்ணையால் வந்த வினை !

செய்திகளில் படித்திருப்பீர்கள், கடந்த மூன்று நாட்களாக கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் புகைமூட்டம், ஜூன் மாதம் துவங்கி அக்டொபர் வரையிலும் இந்த பகுதிகளில் புகைமூட்டம் இருக்குமாம், இந்தோனேசியா சுமத்திரா தீவில் காட்டுத்தீ 'ஏற்படும்' அதனால் தான் புகை என்றே நான் இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறேன், வெயில் காலத்தில் காட்டில் தீ பற்றுவது இயல்பு, அது காட்டுத்தீயாக பரவி புகை மூட்டம் கிளம்பும் போல என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். 

சிங்கப்பூர் துவங்கி மலேசியா கோலாலம்பூர் நோக்கிய பேருந்து பயணத்தில் வழியெங்கும் பாம் எண்ணை மரங்களைக் காணலாம், ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் காட்டுப்பகுதிகளை அழித்து தான் அவை உருவாக்கியுள்ளனர் என்பது அவற்றைப் பார்க்கும் பொழுதே விளங்கிக் கொள்ள முடியும். தென்னை மரங்களைவிட பாம் எண்ணை மரங்கள் மகசூல் மிகுதியாகக் கொடுத்து முதலாளிகளுக்கு மிகுதியான பணம் ஈட்டித்தருவதால் மலேசியாவில் கிட்டதட்ட பாதி நாட்டு பரப்பளவில் பாமாயில் விவாசயம் தான். 

கடந்த மூன்று நாளில் இன்று உச்சமாக சுற்றுச் சூழல் காற்று எண் 290 (PSI index) தொட்டு இருக்கிறது, முன்பு 1997ல் 224 ஆக இருந்ததே உயரிய அளவாம், அது இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. காலையில் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது 120....140... பகல் 2 மணிக்கு 160 பின்னர் 4 மணிக்கு 172 ஐ நெருங்கியது. பிறகு குறையவே அலுவலகம் முடிந்து மாலை 8 மணிக்கு 190ஐ தொட்டது, 100க் மேல் சென்றாலே புகை வாடையையும் உணர முடியும், 190 என்று தெரிந்தவர்கள் முகத்தில் முகமுடியுடன் சென்றார்கள், இரவு 9 மணிக்கு PSI 290 ஐ தொட்டு இருக்கிறது, 300க்கும் மேல் சென்றால் எதிரே வருபவர்கள் தெரியாது, போக்குவரத்திற்கு வாய்ப்பில்லை, கப்பல் விமானப் போக்குவரத்துகள் முற்றிலும் நிறுத்தப்படும், அல்லது பாதிவழியிலேயே நிறுத்தப்படும், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மூச்சு திணறலால் பாதிக்கப்படுவார்கள்.

வழக்கமாக இரவு 11 மணி வரை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் ஆள் அரவே இல்லை, அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர், சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன, அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட இடம் தாண்டி புகைப்பிடித்தால் தண்டம் கட்ட வேண்டிய சிங்கப்பூரில் எல்லா இடத்திலுமே புகை. நிலமை இன்னும் சில நாட்கள் நீடித்தால் .....அவசரகால அறிவிப்புகள் கூட வெளிவந்தால் வியப்பில்லை, எங்கள் வீட்டில் முடிந்த அளவு பகல் பொழுதில் கூட சன்னல் கதவுகள் அனைத்தையும் சாத்திதான் வைத்திருக்கிறோம், இருந்தும் வீட்டினுள்ளும் புகை நெடியை உணர முடிகிறது.


வரலாறு காணாத புகை மூட்டம் என்று தலைப்பிட்டு தொலைகாட்சியிலும், இணைய செய்திகளிலும் தகவல்கள் வெளி இடுகிறார்கள். சுற்றுலா வந்தவர்களுக்கு மோசமான அனுபவங்கள், நிலமை சரியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால் இவை வெறும் காட்டுத் தீயால் ஏற்பட்டது தானே என்று என்னைப் போல் நினைத்தவர்களுக்கு. கிடைக்கும் தகவல்கள் மனித பேராசைகளே இதற்கு காரணம் என்று தெரியவர அதிர்ச்சி தான். புகையை கட்டுப்படுத்த ஏதாவது செய்யுங்கள் என்று சிங்கப்பூர் சுற்றுச் சூழல் அமைச்சு இந்தோனேசியாவை கேட்க, அவர்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், ஆனால் அதற்கு முற்றிலும் உதவ எங்கள் நாட்டில் முதலீடு செய்துள்ள சிங்கப்பூர் - மலேசிய முதலாளிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பதில் கூறியுள்ளனர். அதாவது



சமையல் எண்ணை நிறுவனங்கள் மலேசியா முழுவதும் பாம் எண்ணை மரங்களை நட்டு விளைச்சல் பார்த்தது போதாது என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தோனேசியா காடுகளிலும் கை வைத்துள்ளனர், இவற்றில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் சிங்கப்பூர் மலேசியாவை சேர்ந்த முதலாளிகளாம், காடுகளை அழித்து அவற்றை கொளுத்திவிட்டு அங்கே பாம் எண்ணை மரங்களை நடுவது ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி நடைபெறும் செயலாம். இந்த ஆண்டு கூடுதலான பகுதிகளை அழித்திருக்க வேண்டும், அதன் எதிர்விணையைத் தான் தற்பொழுது நாங்கள் அனுபவிக்கின்றோம்.

இந்தோனேசியா ஏழை நாடு இத்தனை ஆண்டுகளுக்கு பாமாயில் மரங்களுக்கு குத்தகைக்கு இடம் வேண்டும் என்றால் காடுகளை கைகாட்டிவிட்டு கையெழுத்து போட்டு ஒப்பந்தம் செய்து கொள்வார்கள், அவர்களையும் குறை சொல்ல முடியாது. போட்டித் தன்மை நிறைந்த உலகத்தில் எதையாவது அழித்தால் வருமானம் வந்தால் சரி என்று நினைக்கும் முதலாளிகளை குறைச் சொல்ல முடியாமல் அரசுளும் கையை பிசைகின்றன, ஏனென்றால் எல்லாம் அரசாங்கம் அனுமதித்தப்படியே நடக்கின்றன, விளைவு ? மக்களுக்கு தான் எல்லா வகையிலும் இழப்பு.

பாமாயில் வாங்குவதை நிறுத்தினால் ஒருவேளை காடுகள் பாமாயில் பண்ணைகளாக மாற்றப்பட்டுவதை தடுக்கலாம்,  ஆனால் அவையெல்லாம் கடல்கடந்து வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற நிலையில் அதற்கும் வாய்ப்பில்லை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து பாமாயிலுக்காக முதலிடு செய்யப்படுவதை தடுத்தால் எரியும்  காடுகளை தடுக்கலாம். பெரிய அளவு உயிர் சேதம் நடந்தால் ஒருவேளை அவர்கள் அது பற்றி யோசிக்கக் கூடும். அதுவரை இவை வழக்கம் போல் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகிவிடும்.

இதை எழுதி முடித்துவிட்டுப் பார்த்தால்

The three-hour Pollution Standards Index (PSI) soared to 321 at 10pm local time 

Singapore haze hits 'hazardous' levels of PSI 321.

பொழைச்சு கிடந்தால் பின்னர் பார்ப்போம். (குறைந்துவருவதாகவுக் குறிப்பிட்டுள்ளனர்.

14 ஜூன், 2012

திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 3 !


விடுதியில் முதல்நாள் காலைப் பொழுதிற்கும், அடுத்த நாள் காலைப் பொழுதிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, வழக்கம் போல் எழுந்து நான் மட்டும் விடுதியை விட்டு வெளியே கடற்கரைக் பகுதிக்கு வந்தேன், முதல் நாள் போன்றே கடல் உள்வாங்கி இருந்தது. அப்படியே கடற்கரை ஓரமாக நடக்க பறவைகள் வைத்திருந்த இடம் நோக்கிய நடைச் சாலை, அது பிரியும் இடத்தில் நேராக நடந்து சென்று பார்ப்போம், அங்கும் எதோ விடுதிகள் போன்று தெரிகிறதே என்று நினைத்தேன், பிறகு தான் தெரிந்தது அந்த இடம் நேற்றே விடுதி இலவசப் பேருந்தில் ஏறி அங்கு ஏற்கனவே வந்திருக்கிறோம் அது தான் படகு மற்றும் நீர் விளையாட்டுகளுக்கான இடம் என்று தெரிந்தது, எல்லாம் ஒரே வளாகம் அருகருகே இருப்பது தான் பேருந்தில் வரும் போது சற்று சுற்றி வருவதால் அது வேறு இடம் போன்று தோற்றம் அளித்திருந்தது, கடற்கரைக்கு அருகே பாதுகாப்பு மற்றும் விளையாட்டுகளை நடத்தி தருபவர்களுக்கான சிறிய குடில், குளியல் அறைகள் இருந்தன, ஒரு பணியாளரிடம் இந்த சுற்றுலாத் தளம் ஏன் இவ்வளவு ' எக்ஸ்பென்சீவ் ?', பாலி கூட இவ்வளவு எக்ஸ்பென்சீவ் இல்லையே ? என்று கேட்டு வைத்தேன், அவரும் எத்தனை நாள் இங்கு தங்குகிறீர்கள் என்றெல்லாம் அக்கரையாக விசாரித்துவிட்டுச் சொன்னார், 'இந்த சுற்றுலாத் தளம் இந்தோனேசியா அரசும் சிங்கப்பூர் முதலாளிகளின் முதல்களாலும் நடத்தப்படுகிறது, இங்கு தங்குபவர்கள் அனைவருமே சிங்கப்பூர் வழியாக வருபவர்கள், எனவே தான் இங்கு சிங்கப்பூர் வெள்ளி தான் பணமாகப் பயன்படுத்தப்படுகிறது, பாதுகாப்புக் கருதி வெளி ஆட்கள் யாரையும் எதற்கும் அனுமதிக்காததால் மலிவானப் பொருள்களை இங்கு நீங்கள் வாங்க முடியாது, பாலி சென்று வந்ததால் உங்களால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது, மற்றவர்கள் விலை ஏற்றம் பற்றி கவலைப்படுகிறார்களா என்று தெரியாது என்றார். 

அவர் சொல்வது சரிதான், பெரும்பாலும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் சொந்த செலவில் தங்குபவர்களுக்கு இங்கு பணம் செலவு செய்வதற்கு 'அழமாட்டார்கள்' ஆனால் சராசரி சிங்கப்பூர்காரர்கள் ? ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு தான் பார்ப்பார்கள், பின்டனுக்கு வரும் சிங்கப்பூரைச் சேர்ந்த பயணிகள் மிகக் குறைவு, நிறுவன விழா அல்லது தேனிலவு என்று அவர்கள் வந்தால் உண்டு, பள்ளி விடுமுறைகளில் ஒரு சிலர் குழந்தைகளுடன் வருகிறார்கள், மற்றபடி பின்டன் வருபவர்களில் பெரும்பாலோனோர் சிங்கப்பூர் வழியாக வரும் வெளி நாட்டு பயணிகள் தான், சிங்கப்பூரர்களிடையே பின்டன் அவ்வளவாக புகழ்பெறவில்லை, காரணம் கூடுதல் செலவு என்றாலும் சிங்கப்பூர்களுக்கு பிடித்த அடுத்த நாடு மலேசியா, பின்னர் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் கடைசியாக ஜப்பான். தொலை தூரம் சென்றுவருவதைத்தான் சுற்றுலா என்று நினைப்பதால் பின்டன் வரும் சிங்கப்பூர் வாசிகள் மிகக் குறைவு தான். சிங்கப்பூர் வாசிகள் மலேசியாவின் விடுமுறைத் தளங்களுக்குச் செல்வது கட்டுபடியான செலவு என்று நினைப்பதால் அவர்களை பின்டன் தங்குமிடத் தளங்கள் (ரிசார்ட்) பெரிதாக ஈர்க்கவில்லை. குறிப்பாக சாப்பாடு அவர்களுக்கு பிரச்சனை இங்கே, விருப்பப்படி 10 வகை உணவுகளுடன் இரவு உணவு சாப்பிடுபவர்களுக்கு இங்கு ப்ரைட் ரைஸ் 12 வெள்ளி என்னும் போது பின்டன் அவர்களுக்கு கட்டுப்படியாகாது, குறிப்பாக சிங்கப்பூர் சீனர்களைத்தான் சொல்கிறேன். சிங்கப்பூர் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப பாலியில்(Bali) உணவு வகைகள் கிடைப்பதால் அருகே இருக்கும் பின்டனைவிட பாலிக்கு செல்லும் சிங்கப்பூர் பயணிகள் மிகுதி.

******

விடுதி அறைக்குச் சென்று குளித்துவிட்டு நாங்கள் அனைவரும் காலை உணவிற்காக விடுதி உணவகத்திற்கு வந்தோம், நேற்றைக்கும் இன்றைக்கும் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் இல்லை, அவற்றின் இடங்களை மாற்றி வைத்திருந்தனர், நேற்று சாப்பிட்ட அரிசு மாவு கூழ் நன்றாக இருந்தது, அரிசி மாவை நன்றாக வேக வைத்து அதில் பனைவெல்லம் தேங்காய்பால் சேர்த்து கலந்து வைத்திருந்தார்கள், இனிப்பு கூடுதல் தான், நன்றாகத்தான் இருந்தது, இன்றைய உணவில் அதற்கு மாற்றாக ப்ரெட் புட்டிங், ப்ரெட்டை புட்டு மாதிரி செய்து வைத்திருந்தனர், சுவைக்க இனிப்புடன் நன்றாகத்தான் இருந்தது, மற்றபடி பழங்கள், காப்பி, கெலாக்ஸ் கலவை மற்றும் ஒரு கோப்பை பச்சரிசி கஞ்சி காலை உணவு முடிந்தது. பின்னர் குழந்தைகளைக் கூட்டி கடற்கரைக்கு சென்றோம் மணி காலை 10 ஆகி இருந்தது, 12 மணிக்குள் விடுதி அறையை ஒப்படைக்க ஏற்கனவே நினைவுபடுத்தி இருந்தனர், இன்னும் 2 மணி நேரம் இருக்கே ? கடற்கரை வழியாக நடந்தோம், நேற்று பார்த்த படகு விளையாட்டு இடம் அருகில் தான் இருக்கிறது என்று கூறி அழைத்துச் சென்றேன், துடுப்புபடகில் இலவசமாக ஒரு மணி நேரம் துடுப்புப் போட அனுமதி கூப்பான் இருந்தது, ஆனால் அதை எடுத்துவர மறந்துவிட்டோம். அங்கிருந்து 5 நிமிடத் தொலைவில் விடுதி அறை இருப்பதால் விடுதிக்கு திரும்பி அறையையும் ஒப்படைத்துவிட்டு வந்துவிடலாம் என்று அறைக்கு திரும்பிவிட்டோம். 

ஒருவழியாக கூப்பானை தேடி எடுத்து, பயணப் பெட்டிகளை புறப்பட எடுத்து வைத்து, அதை விடுதி வரவேற்பில் வந்து ஒப்படைத்துவிட்டு பணம் கட்டிவிட்டு, திரும்ப படகு செலுத்தும் கடற்கரைக்கு சென்று சேரவும் பையன் கண் அசரவும் சரியாக இருந்தது, அம்மாவும் பெண்ணும் துட்டுப்படகுக்கு அனுப்பிவிட்டு பையனின் தூக்கத்திற்கு நான் காவல் இருந்தேன், மகளுக்கு நீச்சல் தெரிந்தாலும் மனைவிக்கு தெரியாது, பாதுகாப்பு சட்டைகள் போட்டுத்தான் படகில் ஏறினார்கள், இரண்டு பேர் அமர்ந்து துடுப்புப் போடும் கயாக்கிங்க் வகை படகு, ஒரு 10 அடி செல்வதற்குள் படகு கவிழ அணிந்திருந்த ஆடைகள் நனைந்துவிட்டது, அதன் பிறகு இன்னும் 10 அடி தொலைவுக்குச் சென்று ஒரு ஐந்து நிமிடத்தில் மனைவி 'பயமாக' இருக்கு என்று திரும்பிவிட்டாள், அதன் பிறகு நானும் என் மகளும் படகை செலுத்தினோம், படகுனுள் ஈரம் எனது உடைகளை நனைத்தது,

கரையில் இருந்து படகைக் கிளப்ப கொஞ்சம் முயற்சி மற்றும் சக்தி தேவையாக இருந்தது அதன் பிறகு துடுப்புப் போடவும் திருப்பவும் எளிதாக இருந்தது, 200 மீட்டர் அளவுக்கு கடலுக்குள் சென்றேன், மகளுக்கு நீச்சல் தெரிந்தாலும் பயந்து தான் உட்கார்ந்திருந்தாள், அதற்குள் அந்த பக்கமாக வந்த பாதுகாப்பாளர்கள் அவ்வளவு தொலைவெல்லாம் செல்லாதீர்கள் இங்கு நீரோட்டம் மிகுதி (High Current), அப்படியே கடலுக்குள் இழுத்துச் செல்லும் என்றார், அவர் சொன்னதை கவனிக்காமல் இருந்த மகள் என்ன சொன்னாங்க ? என்று என்னிடம் கேட்க, இங்கே ஆழம் வரக்கூடாது என்று சொன்னார்கள் என்றேன், இழுத்துச் செல்லும் என்று சொல்லி இருந்தால் பயந்து இருப்பாள், மீண்டும் கரைக்கு திரும்பி, திரும்பவும் அதே போல் கடலுக்குள் ஒரு வட்டம் அடித்து வர அரை மணி நேரத்திற்கும் கூடுதலாக ஆகி இருந்தது, பின்னர் விடுதிக்குச் சென்று எடுத்து வைத்த துணிகளை பெட்டிகளைக் கேட்டு வாங்கி மாற்றுடைகளை அணிந்து கொண்டு சிங்கப்பூருக்கு திரும்ப, படகுத்துறைக்கு அழைத்துச் செல்லும் பேருந்துக்காக ஒரு மணி நேரம் காத்திருந்தோம். அதற்கு மேல் சுற்றிப்பார்க்க அங்கே எதுவும் இல்லை, உடலில் பலமும் இல்லை. வீட்டுக்கு போய் எப்படா சோற்றைக் கண்ணால் பார்ப்போம் என்றாகிவிட்டது.

பேருந்து அழைத்துச் சென்று படகு முனையத்தில் விட்டது, அங்கும் ஒரு மணி நேர காத்திருத்தல், பின்னர் படகில் அனுமதிக்க சிங்கப்பூர் வந்து சேர்ந்தோம், புறப்படும் போது 3 மணி பயணம் ஒரு மணி நேரம், சிங்கை வரும் போது 5 மணி, நேர வேறுபாடுகளால் ஒரு மணி நேரம் இழப்பு, செல்லும் போது கிடைத்த ஒரு மணி நேரத்தை சாப்பிட்டு ஏப்பம் விட்டது, இந்தப் பகுதியில் கடல் மாசு மிகுதி, படகில் வரும் வழியெங்கும், குப்பைகள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவை அங்காங்கே மிதப்பதை காண முடிந்தது. 

*****

ஏன் 'திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம்' என்றேன் ?

1. இரண்டு நாளுக்கு தங்குவதற்கு படகு கட்டணம், விடுதிக்கட்டணம் உள்ளிட்டு செய்த செலவு 800 வெள்ளிகள், இதில் 75 விழுக்காடு செலவுக்கு மலேசியா கேமரான் குளுகுளு மலையில் / லங்காவியில் தங்கிவிட முடியும், அங்கு பகல் முழுவதும் ஊர்சுற்ற, நம் விருப்பம் போல் சென்று வர இடங்கள் உண்டு, இங்கு பின்டன் ரிசார்டுகள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே, அதில் ஒரு நாளைக்கு மேல் தங்குவதில் எந்த ஒரு மகிழ்வும் இல்லை, அதற்கு பதிலாக வீட்டில் இருப்பதுடன் பக்கத்தில் இருக்கும் கடற்கரை பூங்காவிற்குச் சென்றுவருவதும் ஒன்றே, பைசா செலவே இல்லாமல் முடிந்துவிடும்

2, ஹோட்டல் செக் இன் டைம் என்ற பெயரில் மாலை மூன்று மணிக்கு மேல் அறை தரும் விடுதி நிர்வாகம், 12 மணிக்குள் செக் அவட் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள், 3 மணிக்கு முன்னால் முன்கூட்டிய செக்கின் செய்யும் போது மணிக்கு, நபருக்கு  20 வெள்ளி என்ற அளவில் கூடுதல் கட்டணம் வாங்குகிறார்கள், ஒரு நாளைக்கு மேல் தங்காவிட்டால் விடுதியில் தங்கும் நேரம் 24 மணி நேரம் கிடையாது 21 மணி நேரம் மட்டுமே. 

3. கடற்கரையில் அமைந்த ஒரு விடுதி என்பது தவிர்த்து பெரிய சிறப்புகள் எதுவும் இல்லை. இது போன்று நிறைய கடற்கரை விடுதிகள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உண்டு, இதைவிட கட்டணங்களும் குறைவு

4. உணவுப்பொருள் உள்ளிட்ட அனைத்து அன்றாடப் பொருள்களும் சிங்கப்பூரைக் காட்டிலும் விலைக் கூடுதல்.

5. குழந்தைகளை ஈர்க்கும் எந்த ஒரு நிகழ்ச்சிகளும், இடங்களும் இங்கு இல்லை

6. வெளிநாடு சென்று வந்தோம் என்ற திருப்தி எதுவும் கிடைக்கவில்லை, காரணம் பின்டன் ரிசாட்டை விட்டு வெளியே செல்லும் வாய்ப்புக் குறைவு. அந்த நாடு எப்படி இருக்கும் என்பதை பின்டன் ரிசாட்டைவைத்து முடிவு செய்ய முடியவில்லை. பொதுமக்களை காணவோ, அங்கு வசிப்பிடச் சூழல், கடைகள் எதையும் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை

*******



மற்றபடி நல்ல பாதுகாப்புச் சூழல் உள்ளது, மாற்றத்திற்காகவும் மன அமைதிக்காகவும் செல்ல விரும்புவர்கள் செல்லலாம், முதல் உதவி என்ற வகையில் மருத்துவ அறை ஒன்றையும் மருத்துவர் ஒரிருவரை வைத்திருக்கிறார்கள் ,மற்றபடி உயிர்காக்கும் அவசரசிகிச்சை உடனடி மருத்துவம் என அந்த ரிசார்டை விட்டு மருத்துவமனைகளுக்குச் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேல் பயணிக்க வேண்டி இருக்கும்.

பாலித் தீவு சென்று வந்ததை 10 இடுகைகளாக எழுதினேன், இங்கும் செலவிட்டது அதே 3 நாள் 2 இரவு என்றாலும் 'பின்டன்' பற்றி எழுத இதற்கு மேல் நான் அறிந்த வகையில் எதுவும் இல்லை.

13 ஜூன், 2012

திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 2 !

எதிர்ப்பார்ப்புகளுடன் எங்கு சென்றாலும் அது கொஞ்சமேனும் நிறைவேறாவிட்டால் பிறகு எதையும் ரசிக்க முடியாது, 'பின்டன்' ரிசார்டுகள் அவ்வளவு மோசமில்லை என்றாலும் என் போன்றவர்கள் சுற்றுலாத் தளத்தில் பகல் முழுவதும் சுற்றி சுற்றி வந்து எதாவது செய்து ((Activities) கொண்டு அந்த இடத்தை முற்றிலும் சலிக்கும் வரை இல்லாவிட்டாலும் கால் வலிக்கும் வரை சுற்றிவர விரும்புவர். 

******

இங்கு 'பின்ட'ன் சுற்றுலா வளாகம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே என்பதால் நம் விருப்பப்படி சுற்றிவர எதுவும் இல்லை, அதற்கான வசதி வாய்ப்புகளும் இல்லை என்ற எண்ணம் வர நாளைய பொழுதை எப்படி கழிப்பது ? என்றவாறு நினைத்துத் தூங்கி காலை 7:30 மணிக்கு எழுந்தேன், குழந்தைகளும் எழுந்து கொண்டார்கள், அவர்களை கிளப்பச் சொல்லிவிட்டு ரெடிமேட் காப்பியை சுடுநீரில் கலக்கி குடித்துவிட்டு அறையை விட்டு கடற்கரைக் பகுதிக்கு வந்தேன்.


நேற்று மாலைப் பார்த்த கடலா இது ? கடல் தண்ணீர் 200 மீட்டர் தொலைவு வரை உள் வாங்கி இருந்தது, கடற்கரை பாறைத் திட்டுகள் மற்றும் பாசிகளால் நிறைந்திருந்தது, ஒரு 100 மீட்டர் தொலைவு வரை உள்ளே சற்று பயத்துடன் தான் நடந்தேன், ஏனெனில் கடல் தரைகளை நம்ப முடியாது, புதை மணலாக இருந்து உள்ளே இழுத்தால் ? அப்படி ஒரு ஆபத்தான அனுபவம் வீட்டருகே இருக்கும் கடற்கரையில் எனக்கு நேர்ந்ததால், நிதானமாக காலடிகளை எடுத்து வைத்தேன், ஈரம் என்பது தவிர்த்து கட்டாந்தரை போல் தான் இருந்தது நேற்று மாலையில் கடல் நீர் இருந்த பகுதிகள். 200 மீட்டர் உள் வாங்க 2 மீட்டர் உயரத் தண்ணீர் கீழே இறங்கி இருக்க வேண்டும், ஆனால் அவை எங்கு சென்றது ? ஒரு வேளை சுனாமி ? அந்தப் பகுதிகளில் நிலநடுக்கம் இருந்தாலும் சுற்றிலும் நாடுகள் அரணாக இருப்பதால் பெரிய சுனாமிக்கு வாய்ப்பில்லை. அந்தப் பகுதியில் கடல் நீரோட்டங்கள் அந்தக் கடற்கரைப் பகுதி நீரை உயர்வாகவும் தாழ்வாகவும் ஆக்குகிறது என்பது பிறகு தான் புரிந்தது, நான் சென்று வந்த பிறகு சரியாக ஒரு மணி நேரத்தில் நேற்று மாலைப் பார்த்த அளவுக்கு கடல் நீர் கரை வரை வந்திருந்தது. மறுநாள் காலையும் இதே போன்று தான் கடல் நீர் உள்வாங்கி இருந்தது.



கடற்கரையைச் சுற்றிவிட்டு முந்தைய நாள் சென்ற விலங்குகளின் காட்சிக் குடில் வழியாக திரும்பவம் விடுதியை அடைந்தேன், இது போன்ற 3 - 5 நட்சத்திர அந்தஸ்து உள்ள விடுதிகளில் காலை உணவு இலவசம் தான், 50க்கும் மேற்பட்ட உணவு வகைகளை விருப்பம் போல் எடுத்து திண்ணும் பபே முறையில் அமைத்திருப்பார்கள், பழச்சாறுகள் மற்றும் காபி, தேனீர் கூட இருக்கும், ரொட்டி வகைகள், நூடுல்ஸ், சோறு, கஞ்சி, ஆம்லேட், ஆப்பாயில், வெட்டிய பழங்கள், சோள மாவில் செய்யப்பட்ட கெல்லாக்ஸ் வகைகள், எல்லாமும் இருக்கும், சைவ உணவு தான் சாப்பிடுவது வழக்கம் என்பதால் எனக்கு ப்ரெட், கெல்லாக்ஸ் மற்றும் கஞ்சி தவிர்த்து வேற எதுவும் ? கொஞ்சம் தள்ளி சூடான இட்லிகள், வடைகள், பில்டர் காபி இருந்தது, அதனருகில் இந்திய முகங்கள் நிறைய பேர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர், ஆனால் தமிழ் குரல் எதுவும் கேட்கவில்லை,  ஆகா இட்லி என்று நினைத்து அருகே சென்றால் அது தனியாக ஒரு தனியார் நிறுவனம் அவர்கள் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதாம்,  விடுதியில் தங்கி இருப்பவர்களுக்கு அதில் பங்கு இல்லை என்றார்கள், போச்சுடா.....சரி என்று சொல்லிவிட்டு அறைக்கு திரும்பி குளித்துவிட்டு தயாராக இருந்த குழந்தைகளை கூட்டி வந்து அதே உணவகத்திற்கு வந்து, சாப்பிட முடிந்த வகைகளை மட்டும் சாப்பிட்டோம், அடுத்து எங்கு செல்வது என்கிற திட்டம் எதுவும் இல்லாததால் பொறுமையாக சாப்பிட்டு முடிக்க 45 நிமிடம் ஆகியது. அங்கிருந்து கடற்கரைப் பகுதிக்கு வந்தோம் முன்பு சொன்னது போல் கடல் நீர் கரை வரை வந்திருந்தது, சுற்றிப் பார்த்துவிட்டு 15 நிமிடம் நடந்து நேற்று உருட்டு பந்து விளையாண்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

மழைத்தூறல் இருந்தது, விடுதியில் கொடுத்த பொழுது போக்கு விளையாட்டுகளுக்கான கூப்பானில் நடைபெறும் பல்வேறு பொழுது போக்கு நிகழ்வுகளுக்கான இடம் அங்கு தான் இருந்தது, கொஞ்சம் உயரமானப் பகுதி அது கீழே இறங்க கடற்கரையில் முடிந்தது, அதாவது  ஒரு பக்கம் கடற்கரையில் விடுதி மறுபக்க கடற்கரையில் இந்த பொழுது போக்கு திடல். துப்பாக்கி சுடுவது மற்றும் வில் அம்பு ஆகியவற்றை செயல்படுத்த நமக்கு அனுமதி இருந்தது, 30 அம்புகளைக் கொடுத்தார்கள், எதிரே 30 மீட்டர் தொலைவில் இருந்த வட்டக் குறியில் (டார்கெட்) அடிக்க வேண்டும், நானும் மகளும் அம்புகளை எய்தினோம் (இந்த 'எய்' என்கிற தமிழ் வினைச் சொல்லில் இருந்து தான் Aim வந்திருக்குமோ ?) . பயிற்சிகள் இல்லாததால் பாதிக்கு மேல் டார்கெட்டில் விழவில்லை, அதன் பிறகு மழை பொழிந்ததால் அம்பு எய்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கும் சில வட இந்தியர்கள் குழந்தைகளுடன் வந்து கரே முரே என்று பேசிக் கொண்டு வந்துவிட்டார்கள், பின்னர் துப்பாக்கி சுடுதலில் கொஞ்சம் நேரம் சுட்டுவிட்டு வந்தேன், முப்பது குண்டுகள் வரைக் கொடுத்தார்கள், இரண்டு மிமி நீளம் உள்ள மிக சிறிய ஈயக்குண்டு தான், பொருத்துவதும் எளிதாகத்தான் இருந்தது.  குறிப்பார்த்து துப்பாக்கிச் சுடுவது எளிதாகத்தான் இருந்தது. மழை கொஞ்சம் குறைந்திருந்தது, அடுத்து ? யானை ஏற்றம் குதிரை ஏற்றம் எல்லாம் அங்கே நடப்பதாகச் சொனனர்கள், ஆனால் அதெல்லாம் மாலை மூன்று மணிக்கு மேல் தானாம். அங்கிருந்து விடுதி இலவசப் பேருந்திற்கு ஒரு 20 நிமிடம் காத்திருந்து ஏறினோம், நான் முந்தைய நாள் இரவு உணவு வாங்கிய விடுதிக்கு அருகே இறக்கிவிட அங்குள்ள கடற்கரையை ஒட்டி நடந்தோம், சற்று தொலைவில் கடற்கரை படகு விளையாட்டுகளுக்கான பகுதி இருந்தது, அங்கும் வட இந்தியர்கள் தான் கடல் விளையாட்டுகளில் மும்மரமாக இருந்தனர். 


வட இந்தியர்களெல்லாம் பணக்காரர்களா ? பெயருக்குக் கூட தென்னிந்தியர்கள் ஒருவரையும் பார்க்க முடியவில்லை, வட இந்தியர்களைப் பொருத்த அளவில் பணக்காரர்கள் ஏழைகள் என்கிற இரண்டே வர்கம் உண்டு போலும், பணக்காரர்கள் குடும்பமாக வந்து நன்றாக நாடுகளை சுற்றிப் பார்த்து அனுபவிக்கிறார்கள். பணத்தை தண்ணீராக செலவு செய்கிறார்கள். அந்தப் பகுதியில் சற்று நேரம் நின்றுவிட்டு மணியைப் பார்க்க மாலை 2 ஐ நெருங்கியது, அங்கிருந்து பேருந்தை எடுத்து விடுதிக்கு வந்தோம், விடுதி முகப்பில் இந்தோனேசிய பாரம்பரிய சிறிய நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டு இருந்தது, சற்று நேரம் பார்த்துவிட்டு அறைக்குச் சென்று, ரெடிமேட் நூடுல்ஸ் உள்ளிற்றவற்றை தின்றுவிட்டு ஓய்வெடுத்துவிட்டு விடுதி மையப்பகுதிக்கு வந்தோம்.

மாலை 3 மணி, இந்த விடுதியை விட்டு பிறப் பகுதிகளைப் பார்க்கவே முடியாதா ? பேருந்தில் 10 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு கடைத்தெருவுக்கு கூட்டிச் செல்வதாகச் சொன்னார்கள், ஆனால் பேருந்திற்கு பெரியவர்களுக்கு 5 வெள்ளியும் குழந்தைகளுக்கு 3 வெள்ளியும் கட்டணமாம், எப்படியாவது இங்கிருந்து சென்றால் சரி தான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம், அதற்குள் யானை ஏற்றமும் குதிரை ஏற்றமும் நினைவுக்கு வர, மீண்டும் காலையில் சென்ற பொழுது போக்குப் பகுதிக்குச் சென்றால் அங்கு உயரமான கோபுரத்தில் (டவரில்) இருந்து கயிற்றில் தொங்கிவரும் மற்றொரு செயல்பாடுகளும் துவங்கி இருந்தது, எனக்கு உயரம் அச்சமில்லை என்றாலும் மனைவியும் மகளும் விரும்பினார்கள், சிறுவனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களை கயிற்றில் தொங்கிவரும் அந்த விளையாட்டுக்கு அனுப்பி வைத்தேன், 70 அடி உயர கோபுரத்தில்  50 அடி உயரத்தில் இருந்து கயிறு 200 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு உயரம் குறைவான பகுதியில் இணைக்கப்பட்டு இருக்கும், அதில் பாதுகாப்பு பட்டிகளைக் மாட்டிவிட்டு தொங்கவிடுகிறார்கள், 20 வினாடிகளில் மறுபக்கம் சறுக்கியபடி வந்துவிடமுடியும், அதில் தொங்கி வரும் போது கைகளை விரித்து வந்தால் பறப்பது போல் ஒரு அனுபவம் கிடைக்கும், அனுபவம் நன்றாக இருந்ததாக மனைவியும் மகளும் தெரிவித்தார்கள்.


அந்தப் பகுதிக்குச் சற்று கீழே யானைச்  ஏற்றத்திற்கான  இடம் இருந்தது, 7 யானைகள் வரை வைந்திருந்தார்கள், அதில் 4 பெண் யானைகளாம், 3 ஆண் யானைகளாம், யானை மீது பயணம் செய்பவர்கள் பாகனின் தொள் பட்டையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும், அம்பாரியெல்லாம் கிடையாது, மகளும் மனைவியும் அச்சப்பட நான் மட்டும் தான் யானைச் ஏற்றத்திற்கு சென்றேன், அது இலவசம் தான், ஓட்டல் கட்டணத்துடன் இணைந்தது தனியாக பணம் கொடுக்கத் தேவை இல்லை. யானைகளில் ஏறுபவர்களும் பாகனும் காலணி அணிந்திருந்தனர், எனக்கு யானை கணபதி, வினாயகர் என்கிற எண்ணம் எல்லாம் எதுவும் இல்லை, அது தவிர்த்து உட்காரப் போகும் யானை ஆணா பெண்ணா (பெண் யானையும் பிள்ளையாரா ?) என்றெல்லாம் தெரியாது, இருந்தாலும் காலணியை கழட்டுவது என்றே நான் முடிவு எடுத்து இருந்தேன். காரணம் யானை மனிதர்களுடன் நெருக்கமாக, அன்பாகப் பழகும் ஒரு விலங்கு அதன் மீது காலணியுடன் ஏறுவதற்கு எனக்கு மனதில்லை.  நெல்லு மூட்டை அடுக்கிய மாட்டு வண்டியில் மூட்டை மீது ஏறி உட்கார்ந்திருப்பதைப் போன்று தான் இருந்தது, யானை அசைந்து நடக்க கொஞ்சம் அதன் தசைகள் அசைய, நமக்கு  இருக்கமான மூட்டையில் அமர்ந்திருப்பதைக் காட்டிலும் நொழ நொழ உணர்வு ஏற்படும்,  தொலைவில் பார்க்க பாறை உடம்பு போல் இருக்கும் யானை, மேல் அமர்ந்து பார்க்க முதுகில் கூரான முடிகள் நெருக்கமாக இருந்தது, மேலே துணி இருந்ததால் முடி என் உடலில் குத்தவில்லை. யானைப் பாகன் உற்சாகமாகப் பேசினார். 8 ஆண்டுகளாக பாகனாக இருக்கிறாராம், நாள் தோறும் அவருடைய ஊரில் இருந்து 30 கிமீ பைக்கில் வந்து செல்வாராம், ஊதியமாக சிங்கை வெள்ளி மதிப்பில் 700 வெள்ளிகள் கொடுக்கிறார்களாம். 7 யானைக்கும் சேர்ந்து 10 பேர் பணியில் இருக்கிறார்கள், யானை காடு போன்ற பகுதிகுள் நடந்து சென்றது, அங்கிருந்து சற்று சரிவில் ஏறிச் சென்றது, மேலே உட்கார்ந்திருக்கும் போது சற்று அச்சமாகத்தான் இருந்தது, தமிழில் தானே இருக்கிறது யானைக்கும் அடி சறுக்கும் பழமொழி. பயப்படாதீர்கள், யானை ரொம்பவும் வலிமையான விலங்கு நிதானமாக ஏறும் என்றார், 10 நிமிடங்களில் புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து விட்டார், இறங்கி காலணிகளை அணிந்து கொண்டேன், அடுத்து யானைகளை வைத்து (வித்தை) காட்சியாம். துவங்க இருந்தார்கள், ஆனால் அதற்கு கட்டணம் பெரும் தலைக்கு 20 வெள்ளி, சிறியவர்களுக்கு 10 வெள்ளி. 50 வெள்ளி அழ என்னால் முடியாது தவிர யானை வித்தைகளை ஏற்கனவே சிங்கை விலங்கியல் பூங்காவில் பார்த்து 2 திங்கள் கூட ஆகாத நிலையில் அங்கிருந்து கிளம்பிவிட்டோம் ஒரு யானை ஏற்றத்திற்கான மற்ற கூப்பனும் பயன்படுத்தவில்லை.


மணி மாலை 4:30 ஆகி இருந்தது, விடுதிக்குச் சென்று கட்டணப் பேருந்தில் ஏறி அவர்கள் குறிப்பிட்ட விடுதிக்கு வெளியே 10 கிமீ தொலைவில் இருக்கும் கடைத் தெருவைச் சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்து அதற்கான பேருந்து வந்ததும் ஏறினோம். விடுதி வளாகத்தைவிட்டு சோதனைச் சாவடி தாண்டி ஒரு சாலையில் பிரிந்து சென்றது வாகனம், அந்த பகுதிகள் உயரம் குறைவான மரங்களாலும், செடிகளாலும் புதர்கள் அடங்கிய காட்டுப் பகுதி நடுவே சாலைகள் அமைத்திருக்கிறார்கள்,  சாலைக்கு அருகே மின் கோபுரங்களும் இருந்தன. அந்தப் பகுதியில் சுற்றுலாத் தளங்கள் தவிர்த்து பொது மக்களுக்கான குடியிருப்போ, நகங்களோ இல்லை, சுமார் 20 கிமீ பரப்பளவில் பல்வேறு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன, 15 நிமிடப் பயணத்திற்கு பிறகு இது தான் அந்த கடைத் தெரு என்று ஒரு இடத்தில் பேருந்து நின்றது.



அந்த கடைத்தெருவின் பெயர் 'பசர் ஒளே ஒளே(Pasar/Bazar Ole Ole)' பெரிய ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸுகள் இருக்கும் என்று நினைத்து வந்த இடத்தில் 20 மர வீடுகளை அமைத்து அதில் கடைகள் இருந்தன, அவற்றில் மசாஜ் குடில்கள் மற்றும் சுற்றுலா பரிசு பொருள்கள், உணவு பொருள்கள் விற்கும் கடைகள் தவிர்த்து எதுவும் இல்லை, பேருந்து கட்டணமாக 13 வெள்ளிகள் செலுத்தி வந்தது இதைப் பார்க்கத்தானா ?

திரும்பப் போகலாம் என்று பார்த்தால் அடுத்து பேருந்து ஒரு மணி நேரம் சென்று தான் கிளம்புமாம், ஒரு மணி நேரம் அங்கே பொழுதை ஓட்டுவது கடுப்பாகத்தான் இருந்தது, அங்கு தண்ணீர் பாட்டில் விலை குறைவாக இருந்தது 2 வெள்ளிக்கு இரண்டு பாட்டில் கிடைத்தது, இதுவாவது விலைக் குறைவாக இருக்கிறதே என்று நினைத்தே வாங்கினேன், பின்னர் அக்கம் பக்கம் வீடுகளுக்குக் கொடுக்க நினைவுப் பொருள்கள் சில வற்றை வாங்கினோம், இளநீர் கிடைத்தது ஒரு இளநீர் 3 வெள்ளி, பெரிய இளநீர் தான் என்றாலும் அதே இளநீர் ஜோகூரில் 3 ரிங்கிட் அதாவது அந்த விலையில் பாதிக்கும் குறைவே, மலேசியாவை ஒப்பிட இந்தோனேசியா ஏழை நாடு தான். இங்கு விலைகள் எல்லாம் டிமாண்ட் என்ற வகையில் ஏற்றமாகவே விற்கிறார்கள், சுற்றுலாவருபவர்களுக்கு வேறு எங்கேயும் வாங்க வாய்ப்பில்லாத நிலையில் அவர்களிடம் இருந்து கரந்துவிட முடியும் என்றே விலைக் கூடுதலாகவே விற்கிறார்கள். கடைத்தெரு என்று விடுதி காட்டிய இடமும் விடுதியினரால் புறநகரில் அமைக்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர்த்து சிறப்பாக அதில் ஒன்றும் இல்லை, மசாஜ் செய்து கொள்ளாதவர்கள், உணவு விடுதிக்குள் செல்லாதவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு அந்த இடத்தில் 10 நிமிடத்திற்குமேல் வேலை இல்லை. ஒரு மணி நேரத்தை நகர்த்திவிட்டு பேருந்து நின்ற இடத்திற்கு வந்து பேருந்தில் ஏற பேருந்து புறப்படது, மாலை 6:30 ஆக விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

விடுதிக்கு பின்னே இருந்த மாலை நேரக் கடற்கரையில் சற்று நேரம் சுற்றிவிட்டு அலைகளில் கால் நனைத்துவிட்டு விடுதி அறைக்கு வந்தோம், பொடியன் பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் செய்யவில்லை, அவ்வப்போது ஐபோனைக் கேட்டு அடம்பிடித்து வாங்கி விளையாடினான். இரவு உணவு ? நேற்று சாப்பிட்ட நாண் வகை உணவு இன்னிக்கும் சாப்பிட சலிப்பு என்றார்கள் மகளும் மனைவியும், பின்னர் விடுதியில் அமைந்த உணவகத்தில் அறைக்கே உணவு எடுத்து வந்து தரும் ஏற்பாடுகள் இருந்ததால் வெஜிடேரியன் ப்ரைட் ரைஸ் மற்றும் ப்ரைட் நூடுல்ஸ் பட்டியலில் இருக்க அதைத் தேர்வு செய்து அழைத்துக் கேட்டுக் கொள்ள உணவு வந்து சேர்ந்தது, ஒரு ப்ளேட் 12 வெள்ளி மொத்தம் 24 வெள்ளி அதனுடன் சேவைக்கட்டணம், வரி உள்ளிட்டவைச் சேர்த்து 30 வெள்ளிக்கு கட்டண ரசீதும் வந்தது, பகிர்ந்து சாப்பிட்டுவிட்டு போததற்கு ரெடிமேட் நூடுல்ஸ் போட்டு சாப்பிட்டுவிட்டு, தொலைகாட்சியை ஓடவிட்டோம் சிங்கை தொலைகாட்சியின் மணல் கயிறு திரைப்படம் ஓடிக் கொண்டு இருந்தது, படுத்தப்படியே பார்த்துக் கொண்டு இருந்தோம், நான் பாதியில் தூங்கிவிட்டேன். 

அடுத்த நாள் பெரிய திட்டம் ஒன்றும் இல்லை, அதற்கு வாய்ப்புகளும் இங்கு இல்லை, 

மறுநாள் நன்பகல் விடுதி அறையை ஒப்படைக்க வேண்டும், அதுவரை என்ன செய்வது ?

12 ஜூன், 2012

திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 1 !

மனித வாழ்க்கையில் வேலை, உண்ணுவது உறங்குவது தவிர்த்து பொழுது போக்கும் ஒரு பகுதி தான், அவ்வப்போது மாறுபட்ட சூழலை தூய்துவருவதன் மூலம் அன்றாட வாழ்க்கையில் புத்துணர்வைக் கூட்டிக் கொள்ள முடியும், இங்கு சிங்கையில் ஜூன் திங்கள் முழுவதும் பள்ளிவிடுமுறை தான், குழந்தைகளைக் கூட்டிச் செல்ல புதிய  இடமாகவும், செலவுக் குறைவாக இருக்க வேண்டுமே என்று எண்ணி அருகே இந்தோனேசியா தீவுடன் இணைந்த பின்டன் (Bintan) தீவிற்கு செல்ல முடிவெடுத்து மூன்று நாள் இரு இரவு (3D2N) பயணத்திற்கு ஏற்பாடு செய்தோம்.

******
கடந்த வியாழன் முதல் சனி வரை சுற்றுலாவில் இருப்பது என்று முடிவாகி இருந்தது, 'பின்டன்' தீவு சிங்கையில் இருந்து கடல் வழியாக விசைப்படகு பயணத்தில் 45 நிமிடத்தில் அடையும் தொலைவில் இருக்கிறது, நாடுவிட்டு நாடு பயணம் என்பதால் கடவு சீட்டு இத்யாதிகளுடன் அதே போன்று 2 மணி நேரத்திற்கு முன்பாகச் சென்று வழிமுறைகளை முடித்துக் கொள்ள வேண்டும், படகு முனையமும் சாங்கி விமான நிலையத்திற்கு அருகே தான் உள்ளது, பேருந்து அல்லது வாடகை உந்திகளில் அந்த முனையத்தை அடைய முடியும். படகு முனையத்தில் உணவுக் கடைகள் உண்டு, விலைகள் வெளியே இருப்பதைக் காட்டிலும் ஒன்னறை மடங்கு கூடுதல். மாலை 3:00 மணி படகு பயணத்திற்கு 1 மணிக்கெல்லாம் முனையத்திற்குச் சென்று குடிநுழைவு சோதனைகளை முடித்துக் கொண்டு விசைப்படகிற்காக 30 நிமிடங்கள் காத்திருந்தோம்.


300 பேர்கள் அமர்ந்து செல்லக் கூடிய சுற்றிலும் கண்ணாடி சன்னல்கள் அமைக்கப்பட்ட குளிர்சாதன பெரிய விசைப்படகு எங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது, இரண்டு அடுக்குகளாக இருந்த படகில் மேல் தளம் உயர்வகுப்பு பயணிகளுக்காகவும், முதல் தளம் மற்றபயணிகளுக்காகவும் ஒதுக்கி இருந்தனர் படகு முற்றிலும் பயணிகளால் நிறைந்திருந்தது, ஒரு நாளைக்கு இரண்டு பக்கமும் இரண்டு படகுகளில் 5 ஏற்றங்களில் (சவாரி)  சுமார் 1500 + 1500 பயணிகளை சிங்கப்பூருக்கும் - பின்டனுக்கும் இடையே பயணிக்க வைக்கிறார்கள், அதாவது சிங்கப்பூர் படகு முனையம் / துறையில் இருந்து ஒரு நாளைக்கு 1500 பேரை பின்டனுக்குச் சென்று சேர்க்கிறார்கள். பிற படகுகள் மற்றும் விமானம் உள்ளிட்ட பிற போக்குவரத்து வழிகளில் இருந்தும் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 2000 சுற்றுலாப் பயணிகள் பின்டனை வந்து அடைகிறார்கள்.

நாங்கள் சென்ற படகு நிரம்பி இருந்தது, குடிக்க இலவச பானம் எதுவும் கொடுக்கவில்லை, ஆனால் படகில் சிறிய திண்பண்ட மற்றும் பானக் கடை ஒன்று இருந்தது, பசி தாகம் என்றால் வாங்கலாம் என்பது தவிர்த்து பொழுது போக்குக்கு கொறிக்க வாங்கினால் கை புண்ணாகிவிடும் விலை கூடுதலாகத் தான் இருந்தது. தெரிந்திருந்தால் வெளியில் இருந்து வாங்கி வந்திருக்கலாமே ந்ன்று நினைத்தேன், பையன் படகுக்குள் ஓடிக் கொண்டு இருக்க அவனைத் துறத்தி துறத்தி இழுத்து வந்து உட்கார வைக்க 45 நிமிடங்களும் ஆகி முடிக்க படகு பின்டன் முனையத்தை அடைந்திருந்தது. மாலை மறுபடியும் 3 மணி தான். இங்கு சிங்கையைக் காட்டிலும் ஒரு மணி நேரம் நேரக் குறைவு.


வழக்காமான குடி நுழைவு சோதனைகள் இந்திய கடவுச் சீட்டுகளுக்கு 10 அமெரிக்க வெள்ளி குடி நுழைவுக் கட்டணமாக வாங்குகிறார்கள், உடைமைகளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தோம், பையன் அவன் தான் இழுக்கனும் என்று ஒரே அடம், அவன் இழுத்துச் செல்வதைப் பார்த்தோர்கள் அனைவரும் புன்னகையுடன் கடந்து சென்றார்கள், பின்டன் படகு முனையத்திற்கு வெளியே நாட்டுச் சின்னமாக இறக்கை விரித்த பருந்தின் சிலை இருந்தது. தங்கும் விடுதியின் பேருந்தும் ஆட்களும் வந்திருந்தார்கள், அந்த விடுதிக்குச் செல்லும் அனைவரின் உடைமைகளையும் பெற்றுக் கொண்டார்கள், பையன் கொடுக்கமாட்டேன் என்று அழுது அடம்பிடித்தான், பின்னர் ஒருவாரு அமைதியடைய வைத்து பேருந்துனுள் ஏறி அமர்ந்தோம். பேருந்து புறப்பட்டது.


15 நிமிடத்தில் ஒரு சோதனைச் சாவடியைக் கடந்து விடுதியின் முகப்பில் இறக்கிவிட்டது,  முகப்பில் யானை சிலைகள், வண்ண மீன் குளங்களுடன் விடுதி இருந்தது, அனைவருக்கும் வரவேற்பு பானம் வழங்கினார்கள். வரவேற்பு அறைக்குச் சென்று பதிவு செய்துவிட்டு (ஏற்கனவே முன்பதிவு செய்த விடுதி தான்)  , இந்த விடுதியின் பெயர் நிர்வாணா ரிசார்ட் ஓட்டல், ஐந்து நட்சத்திர வசதி கொண்டதாம், மிகப் பெரிய கட்டிடமாக இல்லாமல் கடற்கரைப் பகுதிக்கு ஏற்ற வகையில் நீளவாக்கில் வளைவாக மூன்று மாடிகளாகக் கட்டி இருந்தார்கள். அறை எண் மற்றும் சாவியைப் பெற்றுக் கொண்டு அறைக்குச் சென்றோம்,  பொழுது போக்கு விளையாட்டுகளுக்கான பற்றுச் சீட்டுகளையும் கொடுத்திருந்தார்கள், அறையின் சன்னலைத் திறந்தால் எதிரே நீலவண்ணத்தில் அமைதியான கடற்கரைத் தெரிந்தது. அறையில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு விடுதி மையத்திற்கு வந்து கடற்கரைச் சென்றடைந்தோம். செல்லும் வழியில் நீச்சல் குளம் அமைத்திருந்தனர்.



கடற்கரையில் 20 செமி உயர அலைகள், களங்கள் அற்ற தெளிவான தண்ணீர், ரவாவை மாவாக அரைத்தது போன்று மென்மையான கடற்கரை மணல், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது, கடலில் கால் நினைத்துவிட்டு கடற்கரை ஓரமாக நடந்தோம், இரண்டு மரங்களுக்கு இடையே வலையூஞ்சல் கட்டி இருந்தனர், அதில் கொஞ்ச நேரம் ஆடிவிட்டு அப்படியே நடக்க அருகில் ஜெல்லி மீன் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இருந்தது, இன்னும் சற்று தள்ளி நடக்க வழித்தடங்கள் பிரிந்து ஒன்று விடுதியை நோக்கியும் மற்றொன்று நேராகவும் சென்றது, விடுதிப் பக்கம் உள்ள பாதையில் நடந்தோம், அங்கே முயல்கள், எலிமான் போன்ற விலங்குகளையும், கிளிகள், வல்லுறு மற்றும் பருந்து ஆகியவற்றை வைத்து அறைகள் அமைத்து காட்சிக்காக வைத்திருந்தனர், அதைத் தாண்டி ராஜநாகம், மலைப்பாம்பு ஆகியவற்றின் குடில்களும், முதலைகள், ஆமைகள் மற்றும் மீன்கள் ஆகியவற்றிற்கான காட்சி இடங்களும், அதைத்தாண்டி மான்களுடன் ஒரு தோட்டப் பகுதியும் இருந்தது, இன்னும் சற்று நடக்க விடுதி முகப்பு வந்துவிட்டது.





பின்னர் அங்கிருந்து விடுதிக்கு முன்பான வழித்தடத்தில் நடக்க அது அங்கு அன்றாடம் நடைபெறும் விளையாட்டுகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்வுகளின் இடத்திற்கு அழைத்துச் சென்றது, பொழுதும் இருட்டத் துவங்கியதால் அருகே இருந்த பொழுது போக்குக் கூடத்திற்குள் நுழைந்தோம், அது ஒரு உருட்டு பந்து கூடம் (பவுலிங்), எங்களுக்கு கொடுத்த பற்றுச் சீட்டில் இலவசமாக அங்கு விளையாட அனுமதி இருந்தது, ஆனாலும் காலுறை மற்றும் அவர்கள் தரும் காலணிகளை அணிந்து தான் விளையாட வேண்டுமாம், அதற்கு கட்டணம் 4 வெள்ளி. வேற வழி ? பற்றுச் சீட்டைப் பயன்படுத்த வேண்டும் மகளும் விளையாட ஆவலாக இருந்தாள். இரண்டு ஆட்டங்கள் விளையாடினோம், தண்ணீர் விலை விசாரித்தேன், 1 1/2 லிட்டர் பாட்டில் 9 வெள்ளியாம், தலை சுற்றியது. பின்னர் விடுதிக்கு வந்தோம். மாலை 7:30 ஆகி இருந்தது, காலையில் சாப்பிட்ட பிறகு, விடுதிக்கு வந்ததும் எடுத்து வந்த இட்லிகள் தவிர்த்து உணவாக எதுவும் சாப்பிடவில்லை, அவ்வப்போது எடுத்து வந்த திண்பண்டங்கள் ஓரளவு பசியை கட்டுப்படுத்தி இருந்தாலும் இரவு உணவுக்கு ஏதாவது சாப்பிட்டே ஆகவேண்டும். சைவம் சாப்பிடும் எங்களுக்கு என்ன கிடைக்கும் ? அந்த விடுதி வளாகம் மிகப் பெரிய கேம்பஸ் போன்றது அதனுள் பல விடுதிகளை அவர்களே அமைத்திருக்கிறார்கள், வெளி ஆட்கள் யாரும் வரமுடியாத அளவுக்கு கட்டுப்பாடு மிக்க இடம், அதனுள்ளேயே பல்வேறு இடங்களுக்குச் சென்றுவர பேருந்துகள் வைத்திருக்கிறார்கள், கட்டணம் எதுவும் கிடையாது, 30 நிமிடத்திற்கு ஒரு முறை சென்றுவரும், இந்திய உணவு 'மாயாங்க் சாரி' என்னும் பெயர் கொண்ட விடுதியில் அமைந்துள்ள உணவகத்தில் கிடைக்கும் என்றார்கள். இந்திய உணவு என்ற பெயரில் வட இந்திய 'சுட்ட சப்பாத்தி(Naan)' வகை உணவே இருப்பதாக உணவுப் பட்டியலையும் காட்டினார்கள், அனைவரையும் அறைக்குச் செல்லச் சொல்லிவிட்டு நான் உணவு வாங்கி வருவதாகச் சொன்னேன், விடுதி வளாகப் பேருந்தில் ஏற வட இந்தியக் கூட்டம் ஒன்றும் ஏறி கரே முரே என்று கத்திக் கொண்டு வந்தார்கள், ஐந்து நிமிடப் பயணத்தில் உணவகம் வந்தது, வட இந்தியர்களும் இறங்கிக் கொண்டனர்.

இரண்டு செட் 'நான்' மற்றும் அதற்கான கறிகளை வாங்கினேன், விலை ? அரசு வரி, சேவை வரி உள்பட 35 வெள்ளிகள், இதே உணவுப் பொருள் சிங்கையில் இதில் 60 விழுக்காடு தான் இருக்கும். 'நான்' தவிர்த்த கறி (பன்னீர் பட்டர், பருப்பு) மசலாக்கள் எல்லாம் ஏற்கனவே அடைத்து வைத்த (MTR Ready-made) பாக்கெட்டுகளை எடுத்து சூடாக்கித்தான் தருகிறார்கள் பிறகு ஏன் கொள்ளை விலை ? யோசிக்க, வியாபார சூத்திரம் என்பதே இன்றைய உலகில் வாய்ப்புகள் உள்ள இடத்தில் கூடுதலாக விற்று லாபம் பார்ப்பது தானே என்று நினைப்பதைத் தவிர்த்து வேறொன்றும் தோன்றவில்லை, அருகில் சுற்றுலா பரிசு பொருள்கள் விற்கும் கடையில் தண்ணீர் பாட்டில் 3 வெள்ளிகளுக்குத் தருவதாகச் சொன்னார்கள், பாட்டில் ஒன்றுக்கு முன்பு விடுதிக்கு அருகே இருக்கும் கடையில் அதே பாட்டில் தண்ணீர் 9 வெள்ளிகள். அதை  ஒப்பிட்டு இரண்டு பாட்டில் வாங்கினேன், திரும்பவும் பேருந்து எடுத்து விடுதிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, பருப்பு மசாலா கெட்டுப் போய் இருந்தது மற்றதெல்லாம் பரவாயில்லை. நாளைக்கு என்னச் செய்வது ? எங்கே சுற்றுவது  ? என்று பயண வழிகாட்டி அட்டைகளைத் தேடினால் அந்த சுற்றுலா தளம் தவிர்த்து வெளியே சென்றுவர வாடகைக் கார் கட்டணங்கள் எல்லாம் தலையைச் சுற்றும் அளவுக்கு 80 வெள்ளி, 100 வெள்ளி என்றெல்லாம் போட்டிருந்தார்கள். சுற்றுலா என்று கிளம்பி வந்தது தனித் தீவில் சிக்கிக் கொண்டது போல் உணர்வு ஏற்பட்டது. இரண்டு காரணம் அங்கு பொருள்களின் விலை சிங்கையைக் காட்டிலும் மிகுதி, அந்த வளாகத்தைத் தவிர்த்து வேறு எதுவும் பார்க்கச் செல்ல இயலாது.

பேசாமல் வேறு எங்காவது சென்று வந்திருக்கலாமோ ? என்று நினைத்தவாறு...



தொலைகாட்சியை ஓடவிட்டு சிறிது நேரம் பார்த்துவிட்டு தூங்கிவிட்டோம்.

தொடரும்...


மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்