கடவுள் நம்பிக்கைக் குறித்து நம்பிக்கையுள்ளவர்களிடம் கேள்வி எழுப்பினால் விடை சொல்லத் தடுமாறும் நிலையில் கடைசியாக நமக்கு கிடைக்கும் பதில் அல்லது மழுப்பல் 'நமக்கு மேல் ஒருவன் இருக்கான்னு நான் நம்புறேன் அவ்வளவு தான்' என்பதாக முடியும், இந்த பதிலில் நம்பிக்கை சார்ந்த தம் சடங்கு, சம்ப்ராதயம், வேதப் புத்தகம், வேள்வி, வழிபாடு முறை, நோன்பு, படையல், நரகம், சொர்கம் இவற்றையெல்லாம் தற்காலிகமாக புறக்கணித்துவிட்டு / தவிர்த்துவிட்டு தான் அதனை முடிவாக சொல்கிறார் என்பதும் அடங்கும்.
இனக்குழுக்கள் தங்களுக்கான அடையாளம் என்ற அளவில் தான் வழிபாட்டு முறைகளையும் அவரவர் கடவுள்களையும் ஏற்படுத்திக் கொண்டனர், எதிரி நாட்டுப் படையெடுப்பு எப்படியெல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்கிறதோ, கொள்ளையடிக்கிறதோ அதனால் பாதிப்பு பொருளியல் ரீதியானது மட்டுமே, ஆனால் அவர்கள் அவ்விடத்தில் முடிவாக தொடர்ந்து தங்கும் நிலை ஏற்பட்டால் அவர்களது வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்களையும் புதிய இடத்தில் திணிப்பர், ஏனெனில் தம்முடைய பண்பாட்டு தொடர்ச்சி பேணப்படவேண்டும், மற்றவர்களுடைய பண்பாடு நம்முடையதல்ல என்று தெளிவாகவே அதைச் செய்வர். படையெடுப்புகள் இல்லாமல் எந்த மதங்களும் பரவியதில்லை.
தற்காலத்தில் படையெடுப்புகளால் மதம் பரவச் செய்வது எளிதன்று. மக்கள் எல்லோரும் தெளிவாகவே இருக்கிறார்கள், மதம் என்பது நிலம் சார்ந்த பண்பாடுகளை அழிக்கக் கூடியது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர், அதனால் மதவாதிகளின் தற்போதைய உத்தி மனித இனத்தில் ஏற்றத் தாழ்வு, மற்றும் நிற வேறுபாடுகளை சுட்டிக்காட்டி அங்கு கடைவிரிப்பது தான்.
இனக்குழு கடவுளை பொதுக் கடவுளாக முன்வைக்கப்படும் உத்தி தான் 'ஏக' இறைவன் பற்றிய கருத்துகட்டுமானங்கள், இந்தியாவிலேயே ஏகப்பட்ட ஏக இறைவன்கள் உண்டு, சமண மதத்தை எடுத்துக் கொண்டால் ஏக இறைவன் 'ஆதி பகவன்' என்ற பெயரில் இருபபர், அவரை அருகன் என்றும் சொல்லுவார்கள், ஒரு சமணருக்கு அருகனைத் தவிர வேறு இறைவன் கிடையாது, அவர்களைப் பொறுத்த அளவில் அருகன் ஏக இறைவன், பிறகு பவுத்த மதம், புத்தர் தன்னை கடவுளாகக் கூறிக் கொள்ளாவிட்டாலும் பவுத்தர்களுக்கு ஏக இறைவன் புத்தர் தான், புத்தனைத் தவிர வெற இறைவன் இல்லை என்பார்கள்.
சைவம் மதம் சிவன் தான் முழு முதல் கடவுள் ஏக இறைவன், மற்ற கடவுள்களெல்லாம் சிவனுக்கு ஏவல் செய்யும் கடவுள்கள் தான், சிவனுக்கு கட்டுப்பட்டவை, வைணவர்களுக்கு கிருஷ்ணன் தான் ஏக இறைவன், கிருஷ்ணனை வழிபடுவது அன்றி முக்திக்கு வாய்ப்பில்லை என்பார்கள், இஸ்கான் அமைப்பும் முழுக்க முழுக்க கிருஷ்ணன் தான் ஏக இறைவன் என்று பிரச்சாரம் செய்துவருகிறது. சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் முயற்சியில் புதிதாக ஒரு ஏக இறைவன் முன்வைக்கப்பட்டார் அவர் தான் பிள்ளையார், முழு முதற்கடவுள் விநாயகனே என்று ஒருசாரர் கூறுவர், சக்தி வழிபாட்டுக் குழுவினர் எல்லாம் ஆதி சக்தியில் இருந்து உண்டானவை எனவே ஆதிக்கு தொடர்புடையவள் ஆதி சக்தி, அவளே ஏக இறைவன்(ள்) என்பார்கள். சீக்கியர்களுக்கும் (Waheguru ) ஏக இறைவன் வழிபாட்டாளர்கள்.
இது தவிற ஒவ்வொரு இல்லத்திற்கும் குல தெய்வம் என்று ஒன்று உண்டு, அவரவர் இல்லத்திற்கு அவரவர் குல தெய்வமே ஏக இறைவன், அதைத் தாண்டிய வழிபாட்டு முறைகள் இரண்டாம் பட்சமே.
ஆபிரகாமிய மதங்களில் ஏகப் பட்ட ஏக இறைவன் உண்டு, யூதர்கள் பழைய ஏற்பாட்டு ஜெகோவா, அல்லோலேயாவின் பரிசுத்த ஆவி, கிறித்தவர்களுக்கு ஏசு. இஸ்லாமியர்களின் அல்லா இவர்களெல்லாம் ஏக இறைவன் பட்டியலில் உள்ள மேற்கத்திய ஏக இறைவன்கள், இதில் இஸ்லாமியர்கள் குறிப்பிடும் அல்லா யூதர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் பொதுவானவர் என்று முஸ்லிம்கள் கூறிக் கொண்டாலும், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டது போல் தெரியவில்லை.
மேற்கத்திய மதங்களுக்கும் கிழக்கு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு, முழுமுதற்கடவுள் நேரடியாகப் பேசமாட்டார், தூதர் ஒருவர் இருக்க வேண்டும், அதனால் தான் தூதர் இல்லாத மதங்களை மேற்கத்திய மதத்தினர் மதங்கள் மதமாக நம்புவதில்லை, ஆனால் கிழக்கில் இந்த பார்முலா 'அவதாரம்' என்ற பெயரில் வருகிறது, சங்கராச்சாரியார் முதல் சாயிபாபாவரை எல்லோரையும் அவதாரங்கள் என்றும் சிலர் அவர்கள் தான் மனித உருவில் வந்த ஏக இறைவனின் துளி என்றும் நம்புவார்கள். இந்திய மனங்கள் இறைவனுக்கு தமக்கும் இடையே தூதர் / தரகர் தேவை இல்லை என்று நினைக்கும் அதனால் தான் இந்திய மதங்கள் இறைத்தூதர்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை, பகவானுக்கும் பக்தனுக்கும் இடையில் பூசாரி எதற்கு ? இப்படித்தான் புனித நூல்களை வேதங்களை உருவாக்கிக் கொண்டு, இறைவனே தன் வாக்கினால் கீதையை உருவாக்கி புனித நூலாக்கினார், இது வேறெந்த புனித நூல்களைக் காட்டிலும் நேரடியானது மிகப் பழமையான பெருமை கொண்டது என்பர்
ஏக இறைவன் கோட்பாடு மேற்கத்திய மதங்களிலும் சரி, கிழக்கு மதங்களில் சரி எந்த ஒரு ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த வில்லை, காரணம் இவர்கள் சுட்டிக்காட்டும் ஏக இறைவனின் பண்பு நலன்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை, என்ன தான் ஏக இறைவன் என்றாலும் மதப்புத்தகம், அதில் காட்டும் சொர்கம் நரகம் இவற்றில் வேறுபாடுகள் இருப்பதால் நமது ஏக இறைவன் தவிர ஏகப்பட்ட பிற ஏக இறைவனெல்லாம் ஒன்றல்ல என்று நம்புகிறார்கள்.
கிரேக்க நாகரீக காலத்தில் வாழ்ந்த ஏக இறைவன்கள் நாகரிகம் மாறிய பொழுது மறைந்து போனார்கள்.
நமக்கு மேல ஒரு கடவுள் உண்டு நம்புவதோடு விட்டுவிட்டு அது எந்த மதம் குறிப்பிடும் கடவுள் என்று ஆய்ந்து பார்த்தால், இதுக்கு பதிலாக நாமே ஒரு ஏக இறைவன் ஆகிவிடலாமோ என்று தோன்றலாம், இப்படித்தான் நித்தி, கல்கி போன்ற சாமியார்கள் தன்னை ஏக இறைவனாக ஆக்கிக் கொண்டனர், மதங்கள் கட்டமைக்கும் கடவுள் எல்லாம் பித்தலாட்டம் என்று தனிமனிதனாக ஒருவர் நம்பாவிட்டாலும் அவர் சார்ந்திருக்கும் மதக்கடவுள் தவிர்த்து அனைத்தும் பித்தலாட்டம் என்றே நம்புவர். இந்தியர்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் என்கிற நம்பிக்கை இருந்தது, அதனால் தான் மேற்கு மதங்கள் ஊடுறுவிய பொழுது அவர்கள் அதை வரவேற்காவிட்டாலும் பெரிதாக எதிர்க்கவில்லை, ஆனால் அதற்கும் இந்துத்துவவாதிகள் வேட்டு வைத்த பிறகு ஏக இறைவன் கோட்பாடுகள் உலகினர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் படி தெளிவாக வரையறுக்கப்படவில்லை, வரையறுக்கவும் முடியாது என்றே சொல்லலாம், ஏனெனில் எந்த ஏக இறைவன் கோட்பாடு என்றாலும் அவை நிலம் சார்ந்த பண்பாடுகளை உள்ளடக்கியதாகவும் ஆண் பெண் மற்றும் பிற உயிரினங்களுக்கு பொதுவானதாக இருக்க வேண்டும்,
கூகுள் தேடலில் 'one and only God' என்று தேடினால் பலவேறு படங்கள் தான் வருகின்றன. என்னைக்காவது கூகுள் ஹேக் செய்யப்பட்டு ஒரே படம் வந்தால் ஏக இறைவனின் ஒரே மாதிரியான படம் வரலாம், மற்றபடி எந்த காலத்திலும் ஏக இறைவனுக்கு ஒரே படம் தேடலில் வர வாய்ப்பில்லை.
பணம் இருக்கிறவர்களுக்கு பாதுகாக்க வங்கி தேவைப்படும், அன்றாடம் காய்சிகள் ஏழைபாழைகள் கதவுக்கு பூட்டு இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டார்கள், கடவுள், மதம் இத்யாதிகள், எல்லாம் பணம் காசு உள்ளவர்களுக்கு அடிக்கடி தேவைப்படும் வஸ்து. முக்தி, சொர்கம், நரகம் இதுபற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுவார்கள், ஆனால் ஏழைகளுக்கு உணவே சொர்கம், பசியே நரகம். இதில் ஏழைகளிடம் ஏக இறைவன் பற்றிய அறிவை எங்கனம் ஊட்டுவது ?
நம்ம தல அஜித் கூட ஏக இறைவன் தான் அவர் ஏகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் அவரது ரசிகர்களுக்கு அவரே ஏக இறைவன்