எதோ விஸ்வரூபம் படத்தில் மட்டும் தான் கமலஹாசன் முல்லா ஓமர் மற்றும் ஆப்கானிய தலிபான்களை தீவிரவாதிகளாகவும், அவர்கள் கையில் வைத்து புனித போருக்கு அழைப்பு விடுக்கும் புனித புத்தகத்தை தீவிரவாத நூலாகக்கி கேவலப்படுத்தி இழிவு படுத்தினார் என்பதில்லை, கமலஹாசன் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதை ஏற்கனவே துவங்கிவிட்டார், அவ்வை சண்முகி படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே கமல் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இருப்பதை தெரிந்து கொள்ளலாம், அந்த படத்தில் கமலின் நண்பராக வரும் நாசர் ஒரு முஸ்லிம் சமையல்காரனாக காட்டப்பட்டு இருப்பார், காலம் காலமாக தமிழ் சினிமாவில் கடத்தல் காரர்களாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்களை கமல் இந்தப்படத்தில் சமையல்காரனாக சித்தரித்திருந்ததை முஸ்லிம் பார்த்திரத்திற்கு புரோமோசன் கொடுத்திருப்பதாக நினைக்காதீர்கள், அந்த சமையல்காரன் வேடத்திலும் முதலாளியிடம் பணத்தை கையாடல் செய்த நபராகத்தான் நாசரைக் காட்டி இருப்பார், இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் இஸ்லாமியர்கள் படிப்பறிவு அற்றவர்கள், சமையல் வேலைக்கு தான் சரியாக இருப்பார்கள், இருந்தாலும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைக்க வைக்குமா வைக்காதா ?
நன்றாக பேசும் நாசரை அடுத்தக் காட்சியில் ஊமையாக்கி ஒரு பார்பனர் வீட்டில் பொய் சொல்லி வேலைக்குச் சேரும் ஆளாகவும் காட்டி இருப்பதால் இஸ்லாமியர்கள் பொய் சொல்ல ஊமையாகக் கூட நடிக்கத் தயங்கமாட்டார்கள் என்பதுடன், அவர் வாய்பேச இயலாத நிலையில் சொல்லும் இறை வேத மந்திரங்களை எதோ காயத்திரி மந்திரம் சொல்லுவதாக டெல்லிகனேஷ் எடுத்துச் சொல்வதாக அவர்களுடைய வழிபாட்டை கொச்சைப்படுத்தி இருப்பார், மீனா வழுக்கி விழ தரையில் எண்ணையைக் கொட்ட நாசர் சொல்லித்தருவது போலவும், குறுக்குவழிக்கு வழி சொல்லுபவர்களாகவும் ஒரு இஸ்லாமியரைக் காட்டி இருப்பதை இவ்வளவு நாள் யாரும் பார்க்காமல் விட்டது வியப்பாக இருக்கிறது. ஐந்துவேலை நமாஸ் செய்யும் நாசருக்கு நெற்றியில் பட்டைப் போட்டு ஊமையாக்கி.........கமலஹாசன்.........
தசவதாரம் படத்தில் ஒரு நெட்டை பையனை ஆப்கான் உடையில் காட்டி இஸ்லாமியர்கள் என்றால் இப்படி இருப்பார்கள் என்றெல்லாம் ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கி இருந்தார், அதுமட்டுமன்றி பலதெய்வ வணக்கம் அம்மன் வேட நடிகையான கேஆர் விஜயாவை இஸ்லாமிய பெண்மணியாக காட்டி இருப்பது இஸ்லாமியர்களின் மீதான தொடர்சியான இழிவாகவும், வண்மமாகவும் இருந்தும் இதுவரையாரும் கண்டுகொள்ளாமல் கண்டனம் தெரிவிக்காமல் விட்டது வியப்பளிக்கிறது. கமல் மட்டுமா ? ஆர்யா என்கிற இஸ்லாமிய நடிகரை இந்து சாமியாராக்கி நெற்றியில் பட்டைப்போட்டு இஸ்லாமியர்களுக்கு முற்றிலும் மாற்றான 'நான் கடவுள்' என்ற கடவுள் நிராகரிப்பு தலைப்பில் இஸ்லாமிய நடிகரை இழிவு படுத்தி இருந்தார் இயக்குனர் பாலா.
வடிவேலு ? ஒரு பைத்தியத்திடம் பின்லேடன் அட்ரஸ் பற்றிய காட்சியை நகைச்சுவையாக்கி பின்லேடன் என்கிற இஸ்லாமியரை இழிவுபடுத்தி இருந்தது,.........தொடர்ச்சியாக தமிழ் பட உலகம் இஸ்லாமியர்களை இழிவு படுத்துகிறது படுத்துகிறது........ப...டு,,,த்,,,து,,,,கி,,,,ற,,,து.
எனக்கு ஒரு ஐயம்.......பின்லேடனுக்கும், முல்லா ஓமருக்கும் அட்ரஸ் தமிழ்நாடா ? அவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தை பார்த்தும், பின்னே ஏன் இவர்கள் இஸ்லாமியர்கள் இழிவுபடுத்தப்படுவதாக விஸ்வரூபத்தின் கழுத்தில் கத்தி வைத்து தலிபான் பாணியில் தண்டிக்க விரும்புகிறார்கள் ? ஞாயமாக தங்கள் ஒட்டுமொத்தப் பெயரையும், புனித நூலையும் கெடுத்த பின்லேடன், முல்லா ஓமர்மீதல்லா இவர்களுக்கு கோபம் வரவேண்டும் ? பின்லேடன் இறப்புக்கு சிறப்பு தொழுகை நடத்தும் பொழுது இழிவுபடாமல் இருந்த இஸ்லாமிய சமூகம், முல்லா ஓமர் பற்றிய படத்தால் இழிவுபடுத்துப்பட்டுவிடுமா ?