பின்பற்றுபவர்கள்

25 மே, 2006

வேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு...

இட ஒதுக்கீடு பற்றி பல்வேறு கட்டுரைகளை ஆதரித்தும், எதிர்த்தும் எழுதும் நண்பர்கள் இந்த கவிதைக்கு என்ன பதில் சொல்வார்கள் என்பதைப் பார்பதற்கு மிகுந்த ஆவலாக இருக்கிறேன்.

வேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு !

மயானத்தில் பிணம் சுடவும்,
மாநகராட்சி குப்பை அள்ளுவதற்கும்,
பினவறையில் சவம் அறுக்கவும்,
தினை அறுத்து தூற்றுவதற்கும்,
ஊசி பாசி விற்பதற்கும்,
ஊரார் ஆடைகள் வெளுப்பதற்கும்,
ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கும்,
ஆடு மாடு மேய்த்திடவும்,
சேற்றிலிறங்கி நாற்று நடவும்,
மாற்றான் தோட்டம் காத்திடவும்,
நைந்த செருப்பை தைத்திடவும்,
நாவிதம் நயமுடன் செய்திடவும்,

நாமும் கேட்போமே இடஒதுக்கீடு !

அப்பாவும் மகனும் !

மூன்று வயதுவரை தாய்ப்பால் எனக்கு,
மூன்றே மாதத்தில் புட்டிப்பால் உனக்கு !

பாசத்தின் தாலாட்டில் தூங்கினேன் நான்,
பணிப் பெண்ணுக்கு பயந்தே தூங்கினாய் நீ !

ஐந்து வயதில் ஆரம்ப பள்ளி எனக்கு,
தவழ்ந்த வயதில் பாலர்பள்ளி உனக்கு !

கரும்பலகையில் கைவலிக்க எழுதிபடித்தேன் நான்,
கணனியில் விரல் வைத்து வியக்க வைத்தாய் நீ !

கோலி, கில்லி, பரமபதம் விளையாடினேன் நான்,
கேம்பாயும், வார்கிராப்ட் புகுந்து விளையாடுகிறாய் நீ !

நண்பர்களுடன் கூடி விளையான்டேன் நான்,
கேர்ள் பிரண்டுடன் பாடி மகிழ்கிறாய் நீ !

அன்று தீப்பெட்டி தொலைபேசி எனது,
இன்று வீடியோ சொல்போன் உனது !

தந்தை சொல் தட்டாத தனயன் நான்,
தகப்பன் சாமியாகிப் போனாய் நீ !

24 மே, 2006

பின்னூட்ட (அ)நாகரிகம்

ஒரு நாளைக்கு சராசரியாக 120 பதிவுகள் (இடுகைகள்), சராசரியாக 600 பின்னூட்டங்கள் என்ற எண்ணைக்கையாக தமிழ் மணம் தொகுப்பில் தகவல் இருக்கிறது. படிப்பதற்காக எழுதப்படும் பதிவுகளைக் காட்டிலும் பின்னூட்டத்திற்கு முன்னோட்டமாக எழுத்தப்படும் பதிவுகள் அதிகம்.
இந்த 600 பின்னூட்டங்களில், பின்னூட்டம் அளித்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக வைத்துக் கொள்ளலாம், மீதம் 300 பதிவாளர் பின்னூட்ட மிட்டவருக்கு எழுதிய பதில் பின்னூட்டம் அல்லது நன்றி என்று வைத்துக் கொள்ளலாம்.

இங்கு போலியாக சென்று பின்னூட்டமிடும் பதிவாளர்களைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் பொதுவாக எழுதப்படும் விவாதப்பதிவுகளில் பின்னூட்டங்கள் நாகரீகமாக வருகிறாதா ?. எதிர்வினைப் பதிவுகளில் அநாகரிக பின்னூட்டங்களே அதிகம் வருகின்றன. ஒருமையில் எழுதுதல், குடும்பத்தினரை இழுத்து, இழித்து கூறுதல் இன்னும் எத்தனையோ.
முகமும், வயதும் ஏன் இடமும் கூட தெரிவிக்காமல் பதிவாளர்கள் எழுதுகிறார்கள். அதில் நன்மையும் கூட. எல்லோரும் செய்வதுதான் அது. இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதே போல் பின்னூட்டம் இடுபவர்களின் பின்புலமும் இருக்கிறது.

20 வயது முதல் 70 வயதுவரை உள்ள பதிவாளர்கள் இருக்கிறார்கள். மூத்த வயதுள்ள ஒரு பதிவாளர் எழுதுகிறார் என்று தெரியாமல் எத்தனையோ இளசுகள் மரியாதை குறைவான ஒருமை சொற்களை பின்னூட்டத்தில் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் பதிவு எழுதுபவர் இவருக்கு அப்பா வயது உடையவராக கூட இருக்கலாம்.

முன்பு ஒருமுறை நான் ஒரு பதிவாளருக்கு பின்னூட்டமிட்ட போது, அந்த பதிவாளர் 'ஏன் அந்த கட்சியை உயர்வாக சொல்கிறீர்கள், அவருக்கு உங்கள் தங்கையை திருமணம் செய்து கொடுப்பீர்களா ?' என்று கேள்வி எழுப்பினார்.

நான் அவர் பதிவை ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவு செய்து பின்பு மறுமொழியாக பின்னூட்டம் இட்டதற்காக, இவர் வந்து என் தங்கைக்கு வரன் பார்ப்பாராம். இப்படித்தான் இருக்கிறது பின்னூட்ட நாகரீகம்.

இன்னும் சில ஏனய்யா இப்படி சொல்கிறீர் என்று கேட்பார்கள், ஏன் ஐயா என்பதற்கும் ஏனய்யா என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளனவே.ஏனய்யாவோ, ஏன் ஐயாவோ போட தேவையில்லை, வெறும் பெயரை குறிப்பிட்டாலே போது.

ஆகவே பதிவாளர் ஆணா, பெண்ணா, வயது தெரியாதவரையோ, அவர் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும் மரியாதைக் குறைவாக விளித்து பின்னூட்டம் இடுவது பண்பாடல்ல. வயது குறைந்த பதிவாளர்களாக இருந்தாலும் மூத்தப் பதிவாளர்கள், அவர்களையும் மரியாதைக் குறிய செற்களைப் பயன்படுத்தி விளித்து எழுதினால் ஒன்றும் பெரிய குறையாகாது.

பின்னூட்டத்திற்கு மறுமொழியிடும் போது, பதிவாளர்கள் ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும், உங்களை இழித்துக் கூறினாலும் உங்கள் பதிவை நேரம் செலவழித்துப் படித்துவிட்டுதான் பின்னூட்டமிடுகிறார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும், அதற்கு தக்கவாறு மறுமொழியோ, மட்டுறுத்தலோ செய்தால் நலம்

சோனியா செய்தது சரியா ?

லாபம் தரும் பதவிகளை வைத்திருபோர், பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என்ற ஒரு சட்டம் மத்திய அரசால் ஏற்றப்பட்டு, அதன்படி, சோனியா, ஜெயாபச்சன் மற்றும் ஏனையோரின் எம்.பி.பதவி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இத்தகைய அறிவிப்பில் தன் பெயர் வரும் முன்னே சோனியா தடாலடியாக தனது எம்.பி பதவியை விட்டுவிட்டு தேர்தலை சந்திப்பதாக அறிவித்து வெற்றியும் பெற்றார். ஜெயாபச்சனின் பதவியை மத்திய அரசே பறித்தது.

சோனியா நடந்து கொண்டது நேர்மையானது என்று பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். 4 லட்சம் வாக்கு வித்யாசத்தில் ரேபரோலியில் மீண்டும் வெற்றிப்பெற்றதாக செய்திதாள்களும் சோனியாவிற்கு புகழ்மாலை சூட்டினர்.

இவர் உள்ளே வெளியே ஆடியதால் யாருக்கு நஷ்டம். பொதுமக்களின் வரிப்பணம். தேவையில்லாமல் ஒரு தேர்தலுக்கு செலவானது மக்களின் வரிப்பணமே. இந்திய அரசாங்கம் மூலம் செலவளிக்கப்பட்ட இந்த பணத்தை வெற்றிபெற்றதால் திரும்ப கொடுக்க காங்கிரஸ் முன்வந்ததா ?

இந்த தேவையற்ற ஒரு தேர்தலை நடத்துவதற்கு பாஜகாவும், அந்த மானில கட்சிகளும் கூட காரணம். பலத்த செல்வாக்குடன் சோனியா வெற்றி பெறுவது உறுதி என்று இந்த கட்சிகளுக்கு தெரியாதா ? இவர்கள் போட்டியிடவில்லை யென்றால் சோனியா போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டிருப்பார். மிகப் பெரிய தேர்தல் செலவான பொதுமக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டிருக்காது.

இவர்கள் வீன், வரட்டு பிடிவாதங்கள் தான் தேவையற்ற தேர்தலும், தேர்தல் செலவும்
பாஜக போன்ற கட்சிகள் தாங்கள் சோனியாவிற்கு எதிராக போட்டியிடாமல் ஒதுங்கி இருப்பதற்கு சரியான காரணம் மக்கள் வரிப்பணம் வீன் விரயம் ஆக விரும்பவில்லை என்று சொல்லியிருந்தால் அந்த கட்சிகளின் மேல் பொதுமக்களுக்கு மதிப்பு கூடும்.
சோனியா நேர்மையானவராக இருந்திருந்தால் பதவியை துறந்தவுடன் மறுபடி போட்டியிட்டிருக்க கூடாது. வேறு ஒருவரை போட்டியிடச் செய்திருக்கலாம், அடுத்த பொதுத் தேர்தல்வரை காத்திருந்து பிறகு போட்டியிடலாம்.

காங்கிரஸ் கட்சி மக்கள் நலனில் அக்கரை கொண்டிருந்தால், இந்த தேவையற்ற தேர்தலுக்கான செலவு அவர்களுடைய கட்சி வேட்பளாரால் ஏற்பட்டது என்பதால் அந்த செலவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

பாஜக கட்சி நேர்மையானதாக இருந்திருந்தால் இப்படி ஒரு தேவையற்ற தேர்தலே நடந்திருக்காது.

இவர்கள் போடும் ஆட்டத்துக்கு இறைப்பது ஊரார் பணம்

22 மே, 2006

தமிழக மாணவர்கள் முதலிடத்தில்

அகில இந்திய அளவிலும் தமிழ்னாட்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர், இதைப்பற்றிய இந்திய டுடே வெளியிட்டுள்ள மதிப்பெண் பட்டியலுடன் இணைத்து, அந்த மான்புமிகு மாணவர்களின் புகைப்படங்களை வெளியியிட்டுள்ளது தமிழ்முரசு. பீகார் மணவருக்கும் தமிழக மாணவர்களுக்கும் கடும் போட்டி நிலவியதாக மேலும் அது தெரிவித்தது.

வெற்றி பெற்ற மாணவர்களை நாமும் வாழ்துவோம்.

தேவை நாய் பிடி வண்டிகள்

மனிதர் உலாவும் இடங்களில் நாய்கள் தொல்லை. இதற்கு இன்றைய சில பதிவுகளே சாட்சி. எதற்கும் இருக்கிறது ஒரு எல்லை. எல்லையைத் தாண்டி நாய்களின் இனப்பெருக்கம் அதைத் தான்டி பெரும் ஊளைச்சத்தம், நம் இடம் பறிபோனதால் எல்லோருக்கும் ஒரே புழுக்கம். நாய்கள் நன்றி உடையது தான், பாரட்டப்பட வேண்டியதும் கூட ஆனால் எல்லாம் அதற்கு வெறிபிடிக்கும் வரை மட்டும் தான்.

கட்டிப் போடுகிறார்களா என்று பாருங்கள் இல்லையென்றால், ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து மனிதனைக்கடிக்கும் முன் கூப்பிடுங்கள் நாய் வண்டியை.

நீயும் நானும்

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல்
உன்னை எனக்கு தெரியும்.

என்னைப் போல்தான் நீயும் இருக்கிறாய்
என்பதால் உன்னை எனக்கு பிடிக்கும்

அறுபடைவீடுகொண்ட பணக்கார நண்பனாய்
உன்னை நினைத்து உவகைகொண்டேன்

நீ இருக்கும் இடமெல்லாம் உன்னைத்
தேடி தேடி நான் அடைந்தேன்

தமிழுக்கு தெய்வம் என்று போற்றிய
உன்புகழில் நானும் குளிர்காய்ந்தேன்

என்னைப் போலவே நீ இருப்பதால்
நம் இருவருக்கும் நல்ல ஒற்றுமை என்றிருந்தேன்

உன்னையும் விட்டு என்னால் விலகமுடியும்
என்று ஒருநாளும் நினைத்ததில்லை

ஒருநாள் தான் தெரிந்தது உன்னைப் 'பற்றிய
நூலிழை' வேறுபாடு உனக்கும் எனக்கும் இருந்தது

உன்னை 'இடையில் பற்றிய நூலிலை'
என்னிடம் நீ நெருங்குவதிலிருந்து தடுக்கிறது.

பிறகு நான் எப்படி நம் இருவரும், தெரிந்தே
ஒன்றென்று பொய்யாக எண்ண முடியும் ?

உன் உருவத்தை என் உள்ளத்திலிருந்து
உடைத்தெரிந்து அருவத்தை மட்டும் வைத்துக்கொண்டேன்

அதுவும் நீ என்னோடு எனக்குமுன் பிறந்தவன்
என்னைச் சேர்ந்தவன் என்பதற்காகத் தான்

நீ என்றாவது என்னை காண ஆவல் கொண்டால்
புற அடையாளங்களை, 'நூலிலை' வேறுபாட்டையும்

துறந்து விட்டுவா.

அதுவரை உன்மேல் கோபமாக ஏதோ ஒருமலைக்
குன்றில் உன்னை எண்ணி அமர்ந்திருப்பேன்

புதிய வலைப் பதிவாளர்களுக்கு வழிகாட்டி 1...

  1. டெம்பிளேட்டை வடிவமைப்பது எப்படி என்று சொல்லுவதற்கோ, மட்டுறுதி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வதைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. செய்திக் கருத்துக்கள் இருக்க வேண்டும் அதுவும் தமிழில் இருக்கவேண்டும் அதுதான் முதன்மை.

    பதிய வலைப்பதிவாளர்களே, பதிவுகள் எழுதும் முன்பும் பின்னூட்டம் இடுவதற்கும் கீழ்க்கண்ட விசயங்கள் ஓரளவிற்கு தெரிந்திருக்க வேண்டும். அவைதான் பின்னாளில் நீங்கள் எத்தகைய பதிவுகளை எழுதப் போகிறீர்கள் என்பதற்கு தூண்டுகோலாக இருக்கும்

    தமிழ் வலைப்பதிவுகளையும், வலைப்பதிவாளர்களையும் கீழ்க்கண்ட பிரிவுகளாக பிரிக்கலாம்

    1. தமிழ் வலைப்பதிவுகளின் தொடக்ககாலம்
    2. முதலாம் மதச்சண்டைகள் தோன்றிய காலம்
    3. பின்னூட்ட போலிகளின் காலம்
    4. முதலாம் சாதிச் சண்டைகள் தோன்றிய காலம்
    5. இரண்டாம் மதச்சண்டைகள் நடக்கும் காலம்


    இதைப்பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்.

    தமிழ் வலைப்பதிவுகளின் தொடக்ககாலம் : சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் யுனிக்கோடு என்னும் புதிய இணைப்புச் சாலை கனனி இணையத்தில் தொடங்கப்பட்ட போது, வலைப்பதிவாளர்கள் கால்பதிக்க தொடங்கினர். பல்வேறு தமிழ் ஆர்வலர்களுக்கு அது நல்ல பாதையாக தெரிந்ததால் அவர்கள் அந்த சாலையில் வெற்றி நடைப் போட்டார்கள். சிலர் வேகமாக நடைபோட்டு வலைப்பதிவுகள் மட்டுமின்றி தனியாத தாகத்தினால் தனித் தனியா இணைய பக்கங்களும் தோற்றுவிக்கப்பட்டன.இந்த கால கட்டத்தில் பல்வேறு எழுத்துருக்கள் தோன்றி தமிழில் தட்டச்சு செய்வதற்கு பெரிதும் உதவின. இந்த காலகட்டம் சரியாக இரண்டு ஆண்டுகள் நிலைத்தது.

    முதலாம் மதச்சண்டைகள் தோன்றிய காலம் : சென்ற ஆண்டின் தொடக்கம் முதல் மத துவேசங்கள் ஒரு சின்ன தீக்குச்சியாக உரசப்பட்டது. அத்தகைய மதப்பதிவாளர்கள் யார் யார் என்று சொல்லி அவர்களின் பொல்லாப்புக்கு ஆள் ஆவதை நான் விரும்பவில்லை என்பதால், அந்த வலைப்பதிவாளர்களின் முகவரிகளை நாம் ஆராயத்தேவையில்லை. தீக்குச்சி உரசியதை, பூனைக்கு மணிக்கட்டுவதாக இவர்கள் பெருமையாக பேசிக்கொள்ள, தமிழ் பதிவுகள் பற்றி எரிய ஆரம்பித்தது. இந்த கால கட்டத்தில் வலைப்பதிவாளர்களும், புதிதாக பதிய வருபவர்களும் சார்பு நிலைக்குள் மாட்டிக் கொண்டனர். ஆரம்பத்தில் பின்னூட்டம் என்ற அளவில் ஆதரவு கொடுக்க ஆரம்பித்து, பின் தன்னுடைய ஆதரவாளர்கள் மனம்பிறழ்ந்து எழுதினாலும் சார்பு நிலை என்னும் சப்பைக் கட்டுக்குள் சிக்கிக்கொண்டனர். தமிழ் பதிவாளர்கள் தங்களுடைய ஆற்றலை இழந்தது இந்த காலக் கட்டத்தில் தான்.

    பின்னூட்ட போலிகளின் காலம் : ஏற்கனவே எப்படி வலைப்பதிவாளர்கள் சார்பு நிலைக்கு உள்ளானவர்கள் என்று பார்த்தோம். இந்த சார்ப்பு நிலை கொஞ்சம் தீவிரமாக ஆனதும் சரியாக ஒருவருடம் முன்பு வலைப்பதிவாளர்கள் வசை பாடுவதற்காக தங்களுக்கு தாமே எடுத்த புதிய முகங்கள் தான் போலி வலைப்பதிவுகளும், ஆபாச பின்னூட்டங்களும், இத்தகைய பின்னூட்டங்கள் மதப்பதிவுகளுக்கு எதிராகவும், சாதிகளை முற்படுத்துபவர்களுக்கும் எதிராகவும் தோன்ற ஆரம்பித்தது. சம்பந்தபட்ட வலைப்பதிவாளரின் புகைப்படங்களை வைத்து போலியாக வலைப்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டு, நிஜ வலைப்பதிவாளர்களுக்கு பெரும் மனவுலைச்சலைக் கொடுத்தனர், இந்த காலம் தொடந்து கொண்டுதான் இருக்கிறது. போலிகளையாரும் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

    முதலாம் சாதிச் சண்டைகள் தோன்றிய காலம் : மேலே கடைசியில் கண்ட இரண்டு காலங்களில் தமிழ்மண தொகுப்பாளரும் மனவுளைச்சலுக்கு உள்ளாகி பதிவுகள் தொகுப்பில் சில மாறுதல்கள் கொண்டுவந்தார். அதன்படி, மதச்சார்புள்ள பதிவுகளும், தொடராத பதிவுகளும் திரட்டுவதை தடைவிதிப்பதாக அறிவித்தார். அதன்படி மதப்பதிவுகளுக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டது. அத்தகைய பதிவுகள் மணத்தை இழந்து, ஓவியத்தை அடைந்தது. ஒருவழியாக சண்டைச் சச்சரவுகள் ஓய்ந்ததால் சிறிதுகாலம் அதாவது சென்ற ஆண்டின் இறுதியிலிருந்து இந்த ஆண்டின் தொடக்கம் வரை தமிழார்ந்த விசயங்களுடன், குஷ்பு, தங்கர், சுகசினி போன்றோர்களும் இடம் பெற்றனர். குஷ்புவுக்கு ஆதாரவு நிலையும், எதிர்ப்பு நிலையும், பெண்ணியம், பெரியாரிசம், கலாச்சார சீரழிவு என்று சீரியஸ் பதிவிகள் எழுதப்பட்டன. இந்த விவாதங்களில் சத்தமில்லாமல் சாதிகளும் கலந்து கொண்டு, ஆரம்பித்த விவாதங்களைத் தாண்டி சாதி துவேசங்களாகவும், தனிப்பட்ட தாக்குதல்களாகவும் மாறி இன்றளவும் தொடர்கிறது.

    இரண்டாம் மதச்சண்டைகள் நடக்கும் காலம் : சட்டமன்ற தேர்தல் செய்திப் பதிவுகள் மூலம் மேற்கண்ட சாதிச் சண்டைகள் காலம் சற்று வலுவிழந்து தேர்தலுக்கு பின் மீண்டு (?) வருகிறது. இதே கால கட்டத்தில் தமிழ்மணம் திரும்பவவும் தடைகளை நீக்கிக் கொள்ள, சிறிது காலம் அமிழ்ந்திருந்த மதப்பதிவுகள் தலையெடுக்க தொடங்கின. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை என்று வாதிகளும், விமர்சனங்களுக்கு இடமும் அவசியமும் இல்லை என்று எதிர்வதிகளும் மீண்டும் சொற்போரை தொடங்க முற்றுப்புள்ளி காற்ப்புள்ளியாக்கி காழ்புகளை தொடங்கினார். போதாக்குறைக்கு டாவின்சிக் கோடும் சேர்ந்து கொள்ள இவர்களுக்கு ரோடுபோடவும் சொல்லித்தரத் தேவையில்லை என்று நீண்டு கொண்டிருக்கிறது. மேற்கண்ட இரண்டு காலமும் தற்பொழுது சமகாலத்தில் நடந்து வருகிறது. மற்றொரு முயற்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அதன் செயல்பாடுகளைப் பொறுத்து பின்னர் அவற்றின் தாக்கம் பின்பு தெரியவரும் என்று மட்டும் கூறிக் கொள்கிறேன்.

    புதிய பதிவாளர்களே ! சரி, இதையெல்லாம் தெரிந்து கொண்டு நான் என்ன செய்யட்டும், படிப்பதற்கே ஒருமாதிரியாக இருக்கிறது ஓடிவிடட்டுமா ? என்று கேட்பீர்கள் இல்லையா ?

    வேண்டாம் !

    பதிலை அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.

19 மே, 2006

வைகோவுக்கு இனி தடையில்லை.

வைகோஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து மதிமுகவை வெளியேற்ற மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி முடிவெடுத்ததாக தெரிகிறது. இதன்படி ஐமு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு மதிமுக தலைவர் வைகோவுக்கு அழைப்பு அனுப்பப் படவில்லை, மேலும் பிரதமர் மன்மோகன் சிங் அளிக்க உள்ள விருந்துக்கும் மதிமுக எம்.பிக்கள் அழைக்கப்படவில்லை.

அணி மாறினாலும் இது நாள் வரை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை தேர்தல் களத்தில் விமர்சனம் செய்யாமல் இருந்து வந்தார் வைகோ. இனி அவரது சொல்லாடல் காங்கிரசை நோக்கி திரும்பும் என்று நினைக்கத்தோன்று கிறது. தேர்தல் பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி தூரோகிகளுக்கு பாடம் புகட்டவேண்டும் என்று கூறியதையும் இங்கு நினைவு கூறத்தக்கது.

வைகோ தொடர்ந்து அரசியல் களத்தில் பொதுமக்களிடம் தன் கட்சியையும் விரிவுபடுத்துவதற்கு முன்னைவிட முனைப்புடன் செயல்படுவார் என்று நினைக்க முடிகிறது. சிறந்த பார்லிமென்டேரியன் என்று பெயர்வாங்கிய வைகோ தன் கட்சி எம்பிக்களை எப்படி வழிநடத்துவார் என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பு

என் இனம் உயர்ந்தது ?

வெளிநாடு வாழ்மக்களுக்கு இன உணர்வு உண்டு, எப்பொழுதும் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி எப்பொழுதும் உயர்வான எண்ணம் உண்டு. அது தவறும் அல்ல. இனங்களைத் தாண்டி எல்லோரும் ஓர் இனம் என்ற உணர்வும் இருக்க வேண்டும் என்று நம் தமிழர்களே 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று வழியுறுத்துகிறார்கள். அதைப் பற்றிய சிந்தனையாக எழுத நினைத்து எழுதியது இது.

இனம் என்பதற்கு பதில் சாதிக்கும் இது நன்றாக பொருந்தும்.

இனம் கண்டேன் !

அன்றாடச் செய்தித் தாள்களில்,
அனைவரின் கவனமாக, குற்றச்செயல் செய்திகள் !
அச்செய்திகள் காட்டும் பெயர்கள்,
அவைக்கு வந்த அவப்பெயர்கள் மட்டின்றி,
அவைகள் இனாமாக 'இனம்' காட்டும் முகப்பருக்கள்.

ஏனையதில் உயர்வாக நான் கருதும்,
என் இனத்தின் பெயர், செய்தியின் சேதி,
எல்லாம் தனிமனித ஒழுங்கீனம் என்ற ஆறுதல் !
ஏனைய மாற்று இனப் பெயர், அவை
எல்லாம் இன ஒழுங்கீனமென்ற இழித்தல் !

என் இனத்தோரால் நான் காயப்பட்டபோது
எனக்குள் வந்த மின்னல் வெளிச்சத்தில்,
என்னை, நானே இனம் கண்ட பொழுது,
எனக்குள் பேரிடி உணர்ந்து, முதன்முதலில்
என்னை, நான் பார்த்து உரக்கக் கேட்டேன்,

களவு, சூது, வஞ்சகம், பொய் மற்றும் விபசாரமென
ஊறு, கேடுசெய்யும் பஞ்சமா பாதகர்கள்,
உன் இனத்தில் ஒருவரும் இல்லையா ? இருந்தால்,
நீ பெருமைப்பட்டுக் கொள்ளலாம்,
உன் இனம் உயர்ந்ததென. அதுவரை என்றுமே
உலக மக்கள் யாவரும் ஒர் இனம் !

- கோவி.கண்ணன்

18 மே, 2006

உதய சூரியன் சாமி ...

பக்த கோடிகளுக்கு ஒரு நற்செய்தி, அர்சகர் ஆவதற்கு திமுக சார்பில் ஒரு சாமியார் தயாராகிவிட்டது போல் தெரிகிறது. எல்லோரும் போய் ஆசிர்வாதம் வாங்கிகொண்டு வாருங்கள்.

சாமி ஒரு நாள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது உதய சூரியன் தெரிந்ததாம், அப்போது 'ஏ மானிடனே, நான் தான் உதய சூரியன், இந்த பூமியை படைத்து, காத்து, வளர்பவன், என்னை விட்டு விட்டு இந்த மானிட பதர்கள் இல்லாத ஒன்றை கடவுளாக நினைக்கிறார்கள். இவற்றை எடுத்து சொல்லி என்னை வணங்கச் சொல் இல்லையென்றால் வரும் 2007 பிப்ரவரி மாதம் 29ம் தேதி சூரிய உதயம் இருக்காது, இருட்டு நரகத்தில் எல்லோரும் அழிந்து போவார்கள். என்று எச்சரித்தாம்.

சாமி பயந்து வியர்த்துவிட்டதாம், சாமி சந்தேகத்துடன் தன் மனைவியிடம் , 'ஏன்டி இங்க யாராவது வந்து பேசினார்களா' என்று கேட்க.

வழக்கமாக 'கலை பத்து மணியாகியும் உனக்கு குடிபோதை ஓயலையா, இப்படித்தான் நிதம் ஏதாவது சொல்லி என்னை சந்தேகப் படுவே' என்று எடுத்தெரிந்து பேசினார்களாம் சாமியாரின் மனைவி.

மறுபடியும் அதே அசரிரி அவர் மனைவிக்கும் கேட்க, சாமி என்னை மண்ணித்துக் கொள்ளுங்கள் என்று சாமியின் காலில் விழுந்துதார்களாம். இப்படியாக வேல்சாமி உதய சூரியன் சாமியான கதையை அவர் மனைவி விவரித்தார்.

பக்தர்கள் காணிக்கையாக சூரியன் உதயத்திற்கு முன் கரந்த பாலும், டார்ச்சி விளக்கும் கொடுக்க வேண்டும். காணிக்கை பணமாக தரத்தேவையில்லை. விருப்பமுள்ளோர் உண்டியலிலும் போடலாம். சாமி, பக்தர்கள் எடுத்துவரும் டார்ச்சி லைட்டை பக்தர்கள் முகத்துக்கு நேராக காட்டி குறி சொல்வார். ஏழை எளியோர் பேட்டரி மட்டும் வாங்கிவந்தால் போதும். ஒரு பக்தருக்கு உபயோகித்த பேட்டரி மறுபடியும் உபயோகிப்பட மாட்டது.

படம்: நன்றி தமிழ்முரசு

17 மே, 2006

இரண்டு ரூபாய் தமிழ்முரசு 16 பக்கங்களாக குறைந்தது

சன் குழுமத்தின் மாலை நாளிதழான தமிழ் முரசு நேற்றுவரை 20 பக்கங்களுடன் வெளிவந்த மாலை நாளிதழ் இன்று முதல் 4 பக்கங்களை குறைத்து 16பக்கங்களில் வெளிவருகிறது.

தேர்தல் முடிந்ததும், நோக்கம் நிறைவேறிவிட்டதால் பக்கங்கள் குறைக்கப் பட்டதாக நினைக்க முடிகிறது. தினகரனும் 1ரூபாயில் நிற்குமா என்று தெரியவில்லை. எல்லாம் அந்த சூரியனுக்கே வெளிச்சம்

இன்றைய முக்கிய செய்தி: சன் தொலைக்காட்சியின் கோலங்கள் தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரேத்தா என்ற சின்னத்திரை நடிகை தற்கொலை.


மேலும் படிக்க
இன்றைய தமிழ்முரசு படிக்க கீழ்க் கண்ட தொடுப்புகளுக்கு செல்க

http://epaper.tamilmurasu.in/2006/may/17/1.html
to ....
http://epaper.tamilmurasu.in/2006/may/17/16.html

15 மே, 2006

இந்தி யா ?

ச்சே கருணாநிதி இந்தி படிக்காம விட்டதால நான் கேவலப்பட்டு போய்டேன் என்று நண்பர்கள் சிலர் புலம்புவது போல சாடமுயல்வது சிலபதிவுகளில் படிக்க நேர்ந்தது.

தமிழர்கள் அனைவரும் காஷ்மிர் முதல் கன்னியாக குமரி வரை நேசனல் பர்மிட் லாரி ஓட்டுவதற்காக தவம் செய்வது போலவும் இந்தி தெரியாததால் அத்தகைய வேலை வாய்ப்புகளை பெற்றோர் சிலர் அவமானப்படுபது போல சொல்ல விழைகிறார்கள். நம் தமிழ்னாட்டிருந்து பஞ்சம் பிழைக்க வட மானிலங்களுக்கு செல்வோர்கள் பலர் அடிப்படையில் இந்தி தெரியாதவர்கள். அவர்களுக்கு படிப்பு அறிவும் கூடக் குறைவே. அத்தகையோர் ஆறே மாதங்களில் நன்றாகவே இந்தியில் வெளுத்து வாங்குகிறார்கள்.

இந்த மெத்தப் படித்த மேதாவிகள் தாங்களுக்கு உள்வாங்கும் திறன் குறைவு என்று ஒப்புக் கொள்ளாமல், கருணாநிதியும், அண்ணாவும் குறுக்கே நின்றார்கள் என்று சொல்லுகிறார்கள். இன்று உலகமயம் பற்றி பேசுகிறோம், எல்லோரும் வேறு வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றுகிறோம். வேலை நிமித்தமாக ஜெர்மன் சென்ற ஒருவர் அங்கு தடுமாறினால் தான் இந்தியனாக இருப்பதால்தான் இந்த தடுமாற்றம். அதுவும் இந்தியாவில் ஜெர்மன் சொல்லிக் கொடுக்கப்படவில்லை அதனால் தான் தனக்கு இந்த இழிநிலை என்றும் சொல்லுவாரா ?

யாரோ சிலர் ஏதோ காரணத்தால் வடநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக மொத்த தமிழகத்திலும் இந்தி நுழைய வைத்து தேவையற்றோரும் கட்டாயமாக படிக்க வேண்டுமாம். இந்தி படிக்கவேண்டாம் என்று யாரும் பிரம்பை வைத்துக் கொண்டு நிற்கவில்லை. கட்டாயமாக்கப் படக்கூடாது என்று மட்டுமே சொல்லுகிறார்கள்.

குறிப்பாக தமிழர்களுக்கு அடிப்படையில் எந்த ஒரு மொழியையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் இருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர்கள் வடநாட்டிற்கு செல்வதைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். அத்தகையோர் அரபி அறிந்து கொண்டா செல்கிறார்கள்? அல்லது கேரள அரசும், தமிழக அரசும் அரபியை பாடத்திட்டத்தில் வைக்கவில்லை என்று புலம்புகிறார்களா? அரபு தேசத்திலிருந்து திரும்பும் அனைவரும் நன்றாக அரபி பேசுகிறார்கள். பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பவர்கள் அவர்களுக்கு நடுவில் ஆங்கிலத்தில் உறையாடுகிறார்கள். அவர்களுக்கு அரபியும் தேவை யில்லாமல் போய்விடுகிறது.

இவர்களின் இந்தி பிரேம வாதப்படி தமிழர்கள் அனைவரும் இந்திபடிக்கவேண்டும் என்பது சரியென்றால், தமிழகத்தில் வாழும் சவுக்கார்பேட்டை சேட்டுகளுக்கும், சேட்டுகளிடம் சென்று அடகு வைக்கும் போது பேரம் பேச மட்டுமே அது தமிழர்களுக்கு பயனளிக்கும்

13 மே, 2006

விஜயகாந்த் தயவால் வெற்றி பெற்ற அதிமுக, மதிமுக

தினமலரின் குறுக்குவழியில் சென்று தினகரன் வெளியிட்டுள்ள பட்டியல்.இவங்க ராவடி எப்போ தீரும்னே தெரியவில்லை.Add Image

12 மே, 2006

விஜயகாந்த் கட்சியால் வெற்றி பெற்ற திமுக

இந்த தேர்தலில் விஜயகாந்தின் கட்சி பெரும் விவாதப் பொருளாகிவிட்டது. விஜயகாந்தின் தயவில் திமுகவுக்கு 43 இடங்கள் என்று ஒரு அட்ட வணையை தினமலர் வெளி யிட்டிருக்கிறது. அந்த அட்டவணை மூலம் விஜயகாந்த் தனித்து நின்றதால் திமுக வெற்றி பெற்றதாக சொல்கிறது. விஜயகாந்தில் கட்சி அதிமுகவுடன் இணைந்திருந்தால் அதிமுக அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்குமாம்.

அதாவது கேட்பவன் கேனையன் என்றால் கேல்வரகில் இருந்து நெய் எடுக்களாம் என்று சொல்வார்களாம் அதுமாதிரி இருக்கிறது தினமலரின் செய்தி. விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக கூட்டணியாக கருதப்பட்டே மக்கள் வாக்களிப்பார்கள் அதில் விஜயகாந்தின் ஆதரவு வாக்குகள் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் நடந்த தேர்தலில் விஜயகாந்தின் கட்சிக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் திமுக - அதிமுக அரசியல் பிடிக்கா தவர்கள் அல்லது புதியவர்கள். அவர்களுடைய வாக்கு எப்படி தேமுதிக-அதிமுக கூட்டணி கட்சிக்கு கிடைக்கும் என்று கொள்ளமுடியும் ? விஜயகாந்த் தனித்து நின்றதால் அந்த வாக்குகளை பெற்றிருக்க முடிந்தது. இல்லையென்றால் அந்த வாக்குகள் இரு கூட்டணி கட்சிகளுக்கும் பிரிந்தே கிடைத்திருக்கும். மேற்கண்ட திமுகவின் வெற்றியைப் பற்றிய அறிய கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் ஜல்லி.

விஜயகாந்திற்கு தன் ஸ்டார் அந்தஸ்தினாலும், பாமகவின் சாதி அரசியலும் பிடிக்காத மாற்று இனத்தாரின் வாக்குகளாலுமே விருத்தாலத்தில் விஜயகாந்திற்கு விருந்துகிடைத்து. அவருடைய செல்வாக்கு எங்கும் இருக்குமானால் மற்ற தொகுதிகளில் இரண்டாவது இடத்திற்கு அவருடைய கட்சி வந்திருக்கும். வீன்பிடிவாதத்தில் அவர் கூட்டணி சேராமல் கிடைக்ககூடிய சில தொகுதிகளை கூட இழக்க நேரிட்டது. அப்படி சேர்ந்திருந்தாலும் அது எதிர்பார்க்கும் அளவுக்கு, அதாவது ஆட்சி அதிகாரத்தை மாற்றும் அளவுக்கு இருக்கும் என்றெல்லாம் சொல்லமுடியாது. சைதாப்பேட்டையில் பாமக தோற்றதும் அக்கட்சியின் மீதுள்ள சாதிமுத்திரைக்கு எதிராகவே வாக்குகள் கிடைக்க, பாமக சைதையில் தோல்வி அடைந்தது. சைதையில் திமுக நின்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கும்.

மேலும் ஜெயலலிதாவை திருப்தி படுத்த தினமலர் ஒரு படம் போட்டுவிட்டு பாகங்களை மட்டும் குறிக்காமல் விட்டுவிட்டுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக திமுகவைவிட அதிமுக 7% அதிக வாக்குகள் பெற்றுள்ளதாம். காங்கிரசைவிட தேமுதிக 0.55% அதிகம் பெற்றுள்ளதாம். இவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை என்று குறிப்பிடவில்லை. அதிகம் பெற்றுள்ளதில் என்ன ஆச்சரியம் ? திமுக நின்றது 132 தொகுதிகள் அதிமுக நின்றது 180+ தொகுதிகள் கண்டிப்பாக வாக்குவித்யாசம் இருக்கத்தானே செய்யும். அதேபோல் 48 தொகுதிகளில் மட்டுமே நின்ற காங்கரசும், 234 தொகுதிகளில் நின்று 0.55% அதிகம் பெற்ற தேமுதிகவும் ஒன்றா ? இது மாபெரும் சாதனை என்று இளிக்கிறார்கள்

இவர்களும் இவர்களின் கணக்கையும் பார்க்கும் போது எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று சொல்வார்களே அதுதான் ஞாபகம் வருகிறது.

வைகோ பழிதீர்த்துக் கொண்டார் ?

இந்த தேர்தால் நிறைய ஊகங்களை விட்டுச் சென்றிருக்கிறது. தேர்தலுக்கு முன்புவரை திமுகவின் பின் நின்ற வைகோ ஒரே நாளில் ஜெ-வை த்தேடி போனது எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்சியாகவும் இருந்தது. பெட்டிவாங்கி கொண்டாரென்றும், கட்சியை அடகுவைத்து விட்டார் என்றும் துரோகி என்றும் முத்திரை குத்தப்பட்டார்.


அவர் சிறையில் இருந்து வெளியே வந்த போது 'ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை மக்கள் சக்தியை கொண்டு முறியடிப்பேன் என்று அறைகூவல் விடுத்ததை சன் தொலைக்காட்சியும் மறு ஒளிபரப்பு செய்ததது. இதையெல்லாம் பார்க்கும் போது. வைகோ ஏன் அதிமுகவிற்கு ஆதராவாக சென்றார் ? அவருக்கு அரசியல் அனுபவம் குறைவா ? என்றெல்லாம் விவாத்தித்தார்கள். அவர் சரியாகத்தான் முடிவு மேற்கொண்டார் என நினைக்கத் தோன்றுகிறது. ஜெயலலிதாவுக்கு எதிராக சந்தர்பவாதம் என்று முத்திரை குத்தப் படவேண்டும் என்று அவர் திட்டமிட்டு செயல்பட்டதாக நினைக்கத் தோன்று கிறது.


அதற்கு தன் கட்சியும் தானும் விமர்சனத்துக்கு ஆளாகினாலும் பரவாயில்லை, ஜெயலலிதாவின் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் அதே சமயத்தில் திமுகவின் தயவில் தன் கட்சி வளர்ந்தாக திமுக வோ மற்ற கட்சிகளோ நினைத்து விடக் கூடாது என்று அவர் நினைத்திருக்க கூடும்.


அவருடைய சபதத்தில் அவர் வெற்றி பெற்றுருக்கிறார். ஜெயலலிதா ஆட்சி அகற்ப்பட தன்னாலான முயற்சியில் அவர் தன் கட்சியை நன்கு பயன்படுத்தியிருக்கிறார். அதேசமயத்தில் அவருடைய கட்சிக்கும் முதன் முறையாக ஆறு இடங்கள் கிடைத்திருக்கிறது.


இன்னும் மூன்று மாதங்களில் அவர் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி, விஜயகாந்துடன் இணைவார் தமிழகத்தில் அந்த கூட்டணி இரு முக்கிய கட்சிகளுக்கு மாற்று சக்தியாக விளங்கும்.

10 மே, 2006

முடிவுகள் இப்படியா ?

ஜெயித்தவர்கள் எல்லோருக்கும்

போட வரிந்து கொண்டிருக்கும் போது,


தோற்றவர்களுக்காக இவர்கள்

உடனேபோட்டு கொண்டார்கள் என்ன அது ?

Ctrl + A Please

மொட்டை

கலைகளின் உறைவிடம் ...

நம் நாட்டில் ஓவியர்கள் நிறைய பேர் ஒரு இருட்டு அறைக்குள்ளேயே திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். சில ஓவியங்கள் குகை ஓவியங்கள் போல கோடுகளாக காணப்படும், முன்பெல்லாம் அருவருப்பாக பார்த்த ஓவியங்கள், பின்பு அதில் மறைந்துள்ள கலைதான் நினைவுக்கு வந்தது, இவர்களின் அறிவு மட்டும் நேராக இருந்தால் இவர்களால் நல்ல கார்டூனிஸ்டாக வரமுடியும் என்று நினைத்துக் கொள்வேன் அத்தகைய கருப்பு வெள்ளை ஓவியங்களை பொதுக்கழிப்பிடங்களுக்கு செல்லும் போது நீங்கள் பார்த்திருக்கலாம். சிலர் காமக்கவிதை எழுதுவதும், சிலர் தத்துவங்களை எழுதுவதும் இங்குதான்.

நான் பார்த்ததில் மிகவும் சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் இடம் எது என்றால் சென்னை போன்ற மாநகரங்களில் கழிப்பிடத்திற்காக காலை நேரங்களில் வரிசையில் நின்றுகொண்டு இருப்பதுதான். பொறுமையை சோதிப்பது போல் உள்ளிருந்து நிதானமாக வெளியே வரும் சிகரெட் புகை, அந்த நேரத்தில் உள்ளே இருப்பவரை வெட்டிக் கொல்லாம் போல இருக்கும். தண்ணீரையும் ஊற்றாமல் ஏதோ சொத்து சுகங்களை பொதுமக்களுக்கு எழுதிவைத்தது போல், நிம்மதி பெருமூச்சுடன் சிலர் கம்பீரமாக வெளியே சென்று விடுவார்கள். அரசு மருத்துவமனைகளில் இருக்கும் கழிவரைகளுக்கு சென்றுவந்தால், நமக்கு நோயாளிகள் இங்கு எப்படித்தான் உயிரோடு இருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றும்.

அரசாங்கங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க எடுக்கும் முயர்ச்சிகள் போல் நகர் புறங்களில் சுகாதாரமான நல்ல கழிவரையை கட்டிக் கொடுத்து தனியாருக்கு டெண்டர்விட்டு கண்காணித்தால் நல்லது. அரசு ஊழியர் பெரும்பாலும் மெத்தனமாக இருப்பதால் இத்தகைய பொது வசதிகளை தனியார் வசம் விடுவதுதான் நல்லது.

கழிவறை விசயத்தில் பெரும் அவதிக்கு ஆளாகுபவர்கள் நகர்புறத்திலும், மாநகரிலும் பெண்களே. பெண்கள் அருகில் வருவதைக் கூட சட்டை செய்யாமல் சிலர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடத்துகிறார்கள், சிலர் மட்டும் ஏதாவது ட்ரான்ஸ்பாமர் தெரிகிறாதா என்று தேடி போய்விடுகிறார்கள். பெண்கள் அமைப்புகள் போராடும் போராட்டம் பெரும்பாலும் ஆண்வர்கத்திற்கு எதிராகவே போராடி தங்கள் சத்தி விரயமாவதாலா ஏனோ பெண்களுக்காக சுகாதார பொதுக் கழிப்பிடங்களை கட்டித்தரவேண்டும் என்று அவர்கள் போராடுவதில்லை.

அறுசுவையான உணவு எங்கே கிடைக்கும் என்றால், சரவணபவன், ரெத்னாபவன், முனியாண்டி, செட்டினாடு என நாம் ஆயிரம் இடங்களை காட்ட முடிகிறது. சுத்தமான கழிப்பிடம் ஒன்றையும் நம்மால் காட்ட இயலாமல் போவது நம்மூடைய சமூக ஒழுங்கீனத்தின் அடையாளம்.

வெளிநாடுகளில் பொதுச் சுகாதர இயக்கங்களும், ஹேப்பி டாய்லட் அசோசியேசன், தன்னார்வ தொண்டு நிறுவணங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதாரங்களை வழியுறுத்துகின்றன. நம் நாட்டில் இளைஞர்கள் நடிகர்களுக்கு ரசிகராக இருப்பதிலும், கட்சிக்கு தொண்டனாக இருப்பதிலும் பெருமையாக நினைக்கிறார்கள். பொதுசுகாதார தொண்டூழிய அமைப்பை ஏற்படுத்துவதற்கோ, அத்தகை அமைப்புகளில் பங்குகொள்வதற்கோ யாரும் முன்வருவதில்லை என்பது நம் பொறுப்பின்மையை காட்டுகிறது.

தற்போதைக்கு நன்றாக இழுத்து மூச்சை விடுங்கள்.

சுகாதாரம் மீண்டும் தொடரும் ...

இரட்டை விரல் ...

இரட்டை விரல் என்றதும் ஏதோ தேர்தல் பதிவு என்று நினைத்து விடாதீர்கள். நம்மவர்களுக்கு எவ்வளவு சமையல் கட்டு முக்கியமோ அதைவிட முக்கியம் வெளிநாட்டினருக்கு ரெஸ்ட் ரூம் எனப்படுகின்ற கழிப்பறை. கழிப்பறை என்ற சொல்லை கேட்கும் போது வாந்தி வருவது போல் நமக்கு உணர்வு ஏற்படுவது ஏன் ? நம் கண்முன்னோ மூக்கு முன்போ உடனே உணரவைக்கும் பொதுகழிவறைகள் தான். நல்ல தமிழ் சொல் பஞ்சமோ தெரியவில்லை. கழிப்பறை என்ற சொல்லே குமட்ட வைக்கிறது. இலங்கை ஏற்போட்டில் இறங்கிய போது கவனித்தேன், டாய்லெட் என்பதை மல சலக்கூடம் என்று தமிழ் படுத்தியிருந்தார்கள், படித்தவுடனே உள்ளே செல்லவே யோசிக்க வேண்டி ஆகிப்போனது. பாத்ரூம் - டாய்லட் - ரெஸ்ட் ரூம் என ஆங்கிலத்தில் பரிணாமம் அடைந்திருக்கும் அந்த அறை நம் தமிழ் மொழியில் மட்டும் கழிவறை, கழிப்பறை என்றே இருக்கிறது. தமிழ் ஆர்வலர்கள் நல்ல முறையில் தமிழ்படுத்த முன்வரவேண்டும்.
இந்தியா என்று சொல்லும் பொழுது வெளிநாடு வாழும் இந்தியர்களுக்கு முதலில் நாட்டை பற்றி அக்கறை கொள்ளும் முதன்மை விசயமாக பொதுக் கழிவறைகளே முதலில் நினைவு வருகிறது. ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்களாம் என்று உள்ளே சென்றால் வாந்தியும் எடுத்துவிட்டு வயிறுகாலியாகி அப்பாட என்று மூச்சு முட்டவைத்த நினைவுதான் ஞாபகம் வருகிறது.


கம்யூட்டரில் வேலை செய்பவனை விட கழிவறை சுத்தம் செய்பவனுக்கு ஊதியம் அதிகம் கொடுத்தால் ஒருவர் கூட வெளிநாட்டிற்கு அந்த வேலைக்காக செல்ல மாட்டார்கள். நாம் காசு கொடுத்தால் கழிவறை சுத்தம் செய்யவும் தயாராகவே இருக்கிறோம் என்பதை வெளிநாட்டு ஊழியர்கள் செய்து காட்டியும், அதைப் பற்றி அக்கறை செலுத்ததாமலே இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு 75% வருமான வரியை செலவு செய்யும் இந்திய அரசு ஒரு அரை சதவிகிதம் கூட பொதுக் கழிப்பறைகளின் சுத்தங்களுக்காகவோ, சுகாதார விழிப்புணர்வுகளுக்கோ செலவிடுவதில்லை என்பது வேதனையான விசயம். தேர்தல் காலங்களில் கிராமங்கள் தோறும் இலவச கழிப்பிடம் கட்டித் தருவோம் என்று சொல்லுவதுடன் அரசியல் வாதிகளின் அக்கறை முடிந்து விடுகிறது. அப்படி கட்டித்தந்த பொது கழிப்பிடங்கள் சுகாதாரமாக இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுவதில்லை.

எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு சென்ற பொழுது புதிதாக நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்தது, ஆனால் உபோயகப் படுத்தவில்லை. ஏன் என்று கேட்ட போது சொன்னார்கள், உள்ளே தண்ணீர் இல்லை தம்பி, வீட்டிலேர்ந்து தண்ணீர் எடுத்துவரவேண்டும், நாம அங்கே செல்வது ஊருக்கே தெரிந்துவிடும், அதுமட்டுமல்ல உள்ள போனாலே முக்கு அடைப்பு வந்திடும், வேற வழியில்லாம வாய்க்கால் வரப்பிற்கு போகிறோம் என்றார்கள்.


இதில் முகம் சுளிக்க வைக்கும் மற்றொரு விசயம் அத்தகைய சுகாதாரமில்லாத நகர்புற கழிவறைகளில் பாலியல் தொழில் நடப்பது தான். இந்திய கழிவறைகள் சுத்தமாகும் போது இந்தியா நிஜமாகவே ஒளிரும்.

அடுத்தபதிவில் வீட்டு சுகாதாரம் ....

9 மே, 2006

யார் யாருக்கெல்லாம் வெற்றி ...

ஓட்டு பதிவு முடிந்துவிட்டது. எல்லோரும் ஒருவிதத்தில் வெற்றி பெற்றுருக்கிறார்கள்.

கட்டுக் கோப்புடன் கூட்டணிக்கு தொகுதி பங்கு பிரித்ததது கொடுத்தததும், தேர்தல் வாக்குறுதியில் முத்திரை பதித்ததால் கருணாநிதிக்கு வெற்றி.

பழமொழி : தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் (ஜெ விசயத்தில்)

சிறையில் தள்ளி பழி தீர்த்துக் கொண்டுவிட்டதும் இல்லாமல், தன்னை பேய் என்று தூற்றி, மக்கள் சக்தியை திரட்டி பாசிச ஜெயலலிதாவை தூக்கி எறிவேன் என்றவரை தன் காலடியில் மீண்டும் விழவைத்தது ஜெயலலிதாவின் வெற்றி

பழமொழி : பணம் பாதளம் வரை பாயும்

தன்னை அமுக்கி கட்சியை திமுக ஜோதியில் கலக்க வைத்துவிடுவார் கருணாநிதி என்று சமயத்தில் உணர்ந்து, மதிமுக முடங்கிவிடாமல் காத்ததில் வைகோவிற்கு வெற்றி.

பழமொழி : தனக்கு இரண்டு கண்களும் போனாலும் ஆகாதவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் (கருணாநிதி விசயத்தில்)

திரையில் எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுபவர்கள் மக்களை நேரடியாக சந்திக்க முடியாது என்று சொல்லுபவர்களுக்கு தலையில் ஒரு குட்டுவைத்து போல் தமிழகம் முழுவதும் சுற்றி தானும் ஒரு தொகுதியில் போட்டியிட்டதில் விஜயகாந்தின் தைரியம் வெற்றிதான்.

பழமொழி : முயற்சி உடையார் இகழ்சி அடையார்

கூட்டணி ஆட்சி என்றதும் எகிறி குதித்தவர்களுக்கு கடிவாளமாக 48 சீட்டுகள் வாங்கி, திமுக சின்டை பிடித்துக் கொள்ள தயார் படுத்திக் கொண்டதில் காங்கிரஸ் வெற்றி.

பழமொழி : தும்மை (கயிறு) விட்டுவிட்டால் வாலை பிடிக்க முடியாது

போதும் உன் சகவாசம் என்று திராவிடக் கட்சிகள் தூக்கி எரிந்த நிலையில், 1000 விண்ணப்பங்களை பெற்றதே பாஜகவின் சாதனை தான். இந்த தேர்தல் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு பேர் என்று பாஜக ஓட்டுவங்கியின் கணக்கை சொல்லிவிடும் என்று நம்பிக்கையில் 222 தொகுதிகளில் டெபாசிட் இழக்கத் தயாரனதே பா.ஜவின் வெற்றிதான்

பழமொழி : முடியைக் கட்டி மலையை இழு, வந்தால் மலை போனால் முடி



8 மே, 2006

மதிமுக சில எண்ணங்கள் ...

இந்த பதிவு இன்றைய ஓட்டுப் பதிவை பாதிக்காது என்பதால் எழுதுகிறேன்.


திரு மு.க தன்னை எதிர்த்து கட்சி ஆரம்பித்து தன்னிடமே கூட்டணி பேசும் வைகோவை நாடாளுமன்ற தேர்தலில் சேர்த்துக் கொண்டாலும், தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற முயற்சியில் அவருக்கு பின்னடைவு என்ற சொல்லலாமா ?

வைகோவை கட்டுப்பாட்டில் வைப்பதைவிட தனித்து விடுவதே வருங்கால திமுகாவினற்கு நல்லது என்ற நோக்கமாகவும் இருக்கலாம், ஒருகாலும் திமுக தொண்டர்களின் அனுதாபம் வைகோவிற்கு வந்து விடக்கூடாது என்ற நோக்கிலும், அதே சமயத்தில் மதிமுக தொண்டர்கள் திமுகவின் பக்கம் சாய வைக்க வேண்டும் என்று காய் நகர்த்தப்பட்டதாகவும் அனுமானிக்க முடிகிறது.


ஒரு வேளை வைகோ 15 சீட் கேட்டிருந்தால் கூட இவர்கள் 13 சீட்டு மேல் தரமுடியாது என்று சொல்லியிருப்பார்கள். சீட்டே கேட்கவில்லை யென்றாலும், திமுகவிற்கு ஆதரவாக மேடை ஏரவேண்டாமென்று சொல்லியிருப்பார்கள்.


போடோ சிறைவாசத்தினால் வைகோ எப்படியும் தனித்து நிற்கவே துணிவார், தங்களை மிரட்டுவதற்காகவே ஜெ அணியில் சேருவதாக போக்கு காட்டிவருகிறார் என்றுதான் நினைத்திருந்தது அதன் படியே, திருச்சி மாநாட்டு திடலில் வைகோவின் கட்வுட் கடைசி நிமிடம் வரை வைக்கப்பட்டிருந்தது.


வைகோ திமுகவின் எண்ணங்களை நன்கு அறிந்திருந்தார், அவர் திமுகவிற்கு நல்ல பதிலடி கொடுக்கவேண்டு மென்றால் ஜெவுடன் கூட்டணி சேருவது சரி என்று பலத்த யோசனைக்கு பிறகு முடிவெடுத்தார். அதற்கு முன் சொந்த ஊரிலாவது ஒரு கருத்து கணிப்பு நடத்திவிட்டு சேர்ந்திருக்கலாம், செய்யாமல் விட்டது பெருந்தவறு ஆகி மக்கள் மன நிலையை கணிக்க தவறிவிட்டார்.


மக்கள் மனநிலை அப்படியா இருக்கிறது, சிறையில் சந்தித்து வெளியில் வரக்கோறிய கருணாநிதியை விட்டு விட்டு சிறையில் அடைத்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததை யாரும் ரசிக்கவில்லை என்றே தேர்தல் கால எஸ் எம் எஸ் கலாட்டாக்கள் தெரிவிக்கிறது.

மு.கவை திட்டியிருந்தாலோ, இளைய தளபதியை திட்டியிருந்தாலோ யாரும் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார்கள், அதிமுகவின் செயல்திட்டங்களையும், வாக்குறுதிகளைமட்டும் தொட்டு பேசியிருக்கலாம். மாறாக, ஜெவை புண்ணியவதி என்று புகழ்ந்ததை யாரும் ரசிக்கவில்லை மாறாக வெறுப்பையே தந்தது என்று சொல்லாம், மக்கள் அங்குதான் சந்தர்ப்பவாதி என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.


வைகோ தலைமையில், பாஜக, தேமுதிக, மற்றும் சிறிய கட்சிகளுடன் பேசி மூன்றாவது அணி அமைத்திருந்தால் நிச்சயம் 60 சீட்டுகளாவது இந்த கூட்டணிக்கு கிடைத்திருக்கும்.


மருத்துவர் ராமதாஸ் அணி மாறினால் பொதுமக்களும், கட்சிகளும் கூட பெரிய விசயமாகவோ நினைப்பதில்லை. இதே வழியில் சென்று வைகோ எதிர்காலத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயங்காமல் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அனுபவத்தை தற்போதைய சந்தர்பவாதம் எனப்படுகின்ற இன்றைய ஜெ கூட்டணி போன்றே மற்றக் கட்சிகளுடன் தொடருமானால், அது அவருக்கும் அவருடைய கட்சிக்கு பா.ம.க போல் வளர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


சந்தர்பவாதம் என்ற குற்றச் சாட்டை தொடர்ந்து சொல்லமுடியாது,பல சந்தர்ப்ப வாதங்களினால் கிடைத்த தொடர் வெற்றி பின்னாளில் சாணக்கியம் எனச் சொல்லப்படுவதை வரலாறு காட்டுகிறது.

அதற்கு மருத்துவர் ராமதாஸ் நல்ல உதாரணம்.


வைகோ சாணக்கியராக மாறுவாரா ? காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

பின்குறிப்பு : ஜெயகுமார் குளிர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். என்ன ஜெயக்குமார் சந்தோசம் தானே ?

6 மே, 2006

இது என்ன கலாட்டா ?

இப்ப இப்படித்தான் கையை விரித்து காட்டுவிங்க, அப்புறம் ஓட்டுபோட்டுவந்து நெத்திய காட்டிபுடுவிங்க

முன்னாள் பகுத்தறிவு வாதிகளின் பரிமாணம்

சொன்னதை திரும்ப திரும்ப சொன்னால், மக்கள் நம்பி விடுவார்கள் என்ற நம்பிக்கையில், திமுக், அதிமுக நன்றாகவே வேசம் போட்டு வருகிறது. தன் கூட்டணியை குறைத்து மதிப்பிட்ட கருத்து கணிப்புகளை தாம் நம்பவில்லை என்று கூறிய திமுக கூட்டணி, இன்று கருத்து கணிப்புகளை காட்டியே பலம் சேர்க்க நினைக்கிறது. முன்பு கருத்துகணிப்புகளை மக்களின் மனநிலையாக கருதிய அதிமுக, இப்பொழுது பத்திரிக்கைகள் திமுகவிற்கு துணைப் போனதாக திரித்து வெளியிடுவதாகவும் தெரிவிக்கிறது.
வழக்கமாக சோசியத்தில் தீவிரமாக இருக்கும் அதிமுகாவை பின்னுக்கு தள்ளும் விதமாக சோதிட நம்பிக்கையை வைத்து திமுக நாளிதளான தினகரன் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

உன்மையோ, பொய்யோ திரும்ப திரும்ப சொன்னால், அதன் மேல் சந்தேகம் வலுப்படும் என்பது இன்னும் தாங்கள் பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியாது போலும்.

5 மே, 2006

சிறுத்தையும் மாம்பழமும்.

எலியும் பூனையுமாக இருந்தவர்கள் தொல்.திருமாவளவனும், மருத்துவர் ராமதாஸ¤ம், தமிழ் பாதுகாப்பு என்ற பெயரில் இணைந்துவிட்டார்கள். எதிரணியில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளாது தேர்தல் வரையில் தொடர்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சென்ற முறை தேர்தலில் வடமாவட்டங்களுக்கான தேர்தலுக்கு துணை ராணுவம் வேண்டுமென்ற திருமாவளவன் இந்த முறை பா.ம.க பற்றி மூச்சு விடவில்லை.

சகட்டு மேனிக்கு எதிரணியை தாக்கும் மருத்துவர் ராமதாஸ¤ம், சிறுத்தைகளை சீண்டுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அணிமாறி வசைமாரி பொழிபவர்கள் அதாவது, வைகோ, இன்பத்தமிழன், விஜய டி ராஜேந்தர், சரத்குமார் போன்றோர்கள் முந்தைய நாள் வரை கட்சியில் இருந்துவிட்டு காரி உமிழ்பவர்கள் தொல்.திருமாவளன் மற்றும் மருத்துவர் ராமதாசிடமிருந்து கற்றுக் கொள்வார்களா ?


தொல்.திருமாவளவனும், மருத்துவர் ராமதாஸ¤ம் சேர்ந்து இருப்பது வடமானிலங்களில் தேர்தல் அமைதியாக நடக்கும் என்று நம்பிக்கையை கொடுக்கிறது. மாம்பழம் பழத்து விட்டதாகவே தெரிகிறது. சிறுத்தையும் பழகிவிட்டதாக தெரிகிறது. சிறுத்தையும் மாம்பழமும் நகையும் சதையுமாக இருப்பது எல்லோருக்கும் நல்லது. பெரிய கட்சிகளுக்குத்தான் ஏமாற்றம்.



இவர்களை தமிழ் இணைத்திருக்கிறது என்பதில் எமக்கெல்லாம் மகிழ்ச்சி.

பரிணாம வளர்ச்சி - ஸ்டாலின் மீது திடீர் பாசம்

முன்பு திராவிடக் கட்சிகளை குறை சொல்பவர்கள், பெரியாரையும், பகுத்தறிவு வாதத்தையும் குறைகூறிவந்தார்கள். அவர்கள் வாய் அடையும் படி திமுக இரண்டாக உடைந்து, அதிமுக என்னும் கட்சி எம்ஜிஆர் தலைமையில் உதயமானது. இருந்தாலும் கருணாநிதிக்கு எதிர்நிலை எடுக்க வேண்டும் என்றால் எம்ஜிஆரையும், அதிமுகவையும் ஆதரிக்க வேண்டுமே என்று திராவிடக் கட்சி கொள்களை குறைகூறுவதை ஓரளவுக்கு குறைத்துக் கொண்டார்கள்.

கருணாநிதியின் திராவிட அரசியலை குறைசொல்ல வேண்டுமே, விட்டுவிடுவார்களா ?, இருக்கவே இருக்கு குடும்ப அரசியல் என்று ஸ்டாலினையும், அழகிரியையும் சாடி வந்திருந்தார்கள், ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் முட்டல் மோதல் என்று எழுதிப்பார்த்தார்கள். அவர்கள் இருவருக்கும் சண்டை மூட்டிவிட எவ்வளவோ முயன்றார்கள், இதை உணர்ந்ததால் தானோ அவர்கள் அடக்கி வாசிக்க, ஸ்டாலின் இரு முறை மேயர், துணைப் பொதுச் செயலாளர் என்று அரசியலில் திமுகவில் ஒரு தவிற்க முடியாத சக்தியாகிவிட்டார்.

சற்று முன்பு வரை, கட்சியில் மூத்த தலைவர்கள் என பேராசிரியர் அன்பழகன் முதலியோர் இருக்க, கருணாநிதி மகனுக்கு மகுடம் சூட்டப் பார்க்கிறார் என்றார்கள். அன்பழகன் போன்றோரை எப்படியாவது திமுகவிலிருந்து விலக வைக்க வேண்டும் என்று போட்ட திட்டம் பலிக்க வில்லை. அதற்கு பதில் போலவே பேராசிரியரும், அடுத்த முதல்வர் திமுக சார்பில் ஸ்டாலின் தான் என்று வழிமொழிந்து முற்றுப் புள்ளிவைத்தார்.

நான் வளர்கிறேனே மம்மி என்று ஸ்டாலின் படிப்படியாக அரசியலில் வளர்ந்துவிட்டார். பத்திரிக்கை துறையிலும், தொலைக்காட்சியிலும் சன் டீவி நிறுவனதினர் வளர்ந்து பிராமன பத்திரிக்கைகளுக்கு வேட்டு வைக்க தொடங்கியதும், இப்பொழுது தான் பிராமணப் பத்திரிக்கைகளுக்கு ஸ்டாலின் மீது திடீர் பாசம் வந்துள்ளது. அதாவது மாரன் மகன்கள் ஆன தயாநிதி மாரனும், கலாநிதி மாரனும், திமுகவை கைப்பற்றி ஸ்டாலினை அமுக்க பார்க்கிறார்களாம். கதை எப்படி போகுது பாருங்க.

ஆக ஸ்டாலினை வளர்த்து விட்டவர்களே இவர்கள் தாம்.

4 மே, 2006

தேர்தல் முடிவு 5:

முன்பு எழுதிய தேர்தல் முடிவு 1 முதல் 4 வரை என்ற வலைப் பக்கங்களில், முடிவு 1ம் 2ம் சாத்தியக் கூறுள்ள பதிவுகள், இப்படியும் நடக்கவேண்டும் என்று ஆதங்கத்தில் தேர்தலில் நிர்பவர்களுக்காக முடிவு 3ம், 4ம் எழுதப்பட்டது. சரி விசயத்துக்குள் வருவோம்

அலைகள் வீசாத தேர்தல் உண்டா ? இல்லை என்றுதான் சொல்லவேண்டும், ஆனால் அலைகள் எப்போதும் ஒருபக்கமாகவே வீசியிருக்கிறது. இந்த தேர்தலுக்கு முன்பே பெரிய அலை சுனாமி வடிவத்தில் வீசியதால், இந்த தேர்தலில் அலை வழுவிழந்து காணப்பட்டாலும், இரு கூட்டணிக் கட்சிகள் பக்கமும் வீசுகிறது.

வயதான தமிழ் காவலருக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தும் வீசும் அலை, வாரிசு அரசியல் என்ற எதிர்காற்றில் திருப்பி அனுப்பபட்டு எதிர்கட்சி பக்கமாகவும் வீச வைக்கிறது.

கூட்டணி கட்சிகளின் பலம் திமுகவிற்கு இருப்பது போல், சந்தற்ப வாத அரசியல் என்ற குற்றச்சாட்டு அதிமுக அணிக்கு ஏற்பட்டு இருப்பதை யாராலும் முழுவதும் மறுக்க முடியாது. அதிமுக ஐந்தாண்டு காலம் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் இப்படி கூட்டணிக்காக கதவை திறந்து வைத்திருக்க வேண்டியிருந்திருக்காது என்பதை அவர்களும் உணர்ந்துள்ளனர், பொதுமக்களும் உணர்ந்துள்ளனர்.

கருணாநிதியின் இலவச அறிவிப்புகள் ஏழை எளிய மக்கள் எவரையும் கவரவில்லை என்று எந்த பத்திரிக்கைகளும் இது வரை சொல்லவில்லை அதனால் ஏழை மக்களின் பெருவாரியான வாக்குகள் திமுக கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்க வாய்பு இருக்கிறது.

சினிமா படம் பார்த்துவிட்டு ஓட்டு போடுவது என்பது எம்ஜிஆருக்கு பின் குறைந்திருப்பதாலும், அப்படி ஓட்டு போடுபவர்கள் இன்னும் சினிமா விசுவாசிகளாகத்தான் இருப்பார்கள், அதன்படி தே.மு.தி.க விற்கு கிடைக்கும் ஓட்டுகள் அனைத்தும் எம்.ஜி.ஆர் ஓட்டுகள். கார்திக் பிரிக்கும் தேவரின ஓட்டுகளாலாலும் அதிமுகவிற்கு பின்னடைவு.

வைக்கோவிற்கு கிடைக்க வேண்டிய குறிப்பிட்ட சாதி ஓட்டுகள் இந்த முறை பிரிந்து தே.மு.தி.க விற்கு கிடைக்கும். திருமாவளவன் அதிமுக கூட்டணியில் உள்ளதால் வடமாவட்டங்களில் தோற்றாலும் அதிக வாக்கு விகிதம் இருக்காது.

சென்ற 2001ல் நடந்த தேர்தலில், மதிமுக பிரித்த ஓட்டுகளால் திமுக தோல்வியை தழுவியதே, அதே நிலைமை அதிமுக கூட்டணிக்கு தேமுதிக கட்சியால் ஏற்படப் போகிறது. தேர்தல் முடிவுக்கு பின்பு அதிமுக-மதிமுகவினர், தேமுதிக எங்கள் கூட்டணியில் இருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்று சொல்வார்கள்.

திமுக கூட்டணியின் பெரிய பலம் அது காங்கிரஸ¤டன் கூட்டணி வைத்திருப்பது தான், காங்கரசுடன் கூட்டணி கட்சிகளே இதுவரை ஆட்சியில் அமர்ந்திருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற பா.ம.க கூட்டணி, மற்றும் சிறுபாண்மையினர் ஆதரவு.

இப்பொழுது செய்தி : மே 11. கடந்த மே 8ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணி 167 இடங்களை கைப்பற்றியது. இதன்படி திமுகாவிற்கு 98 இடங்களும் (முஸ்லிம் கட்சிக்கும் சேர்த்து), காங்கிரஸ¤க்கு 31 இடங்களும், பமகாவிற்கு 23 இடங்களும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 15 இடங்களும் கிடைத்தது. திமுகாவிற்கு பெரும்பண்மை கிடைக்காத நிலையில் அதன் தலைவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அதன் தோழமை கட்சிகளை கூட்டணி ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

மே. 12. கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்ததால் தனது மகன் ஸ்டாலின் எதிர்காலத்தில் முதல்வர் ஆவதற்கு கூட்டணி கட்சிகள் குறுக்கே நிற்காது என்று கருதியே கருணாநிதி கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தெரிவித்தார்.

மே. 13. திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று 5வது முறையாக தமிழ முதல்வர் பதவியை ஏற்றார். அமைச்சர்கள் யார் என்பதும், இலாக்காக்களும் இரு நாட்களில் முடிவு செய்யப்படுவதாகவும், காங்கிரஸ¤ம், பா.ம.கவும் அமைச்சர் அவையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

1 மே, 2006

தேர்தல் முடிவு 4:

மே.10 கடந்த மே8ல், தமிழ்னாடு மட்டுமல்லாது, இந்தியாவே திரும்பிபார்க்கும், அதிர்ச்சியாக தமிழக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. இதன்படி தான் போட்டியிட்ட 225 இடங்களில் 148 இடங்களை பா.ஜ.க வென்றுள்ளது. இது தமிழக பாரம்பரிய கட்சிகளான திராவிடக் கட்சிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெருத்த பின்னடைவையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதனைப் பற்றி குறிப்பிட்ட் பா.ஜ.கவின் தமிழக தலைவர் இல.கனேசன் திராவிடக்கட்சிகளும், காங்கிரஸும் தமிழக மக்களை வஞ்சித்து வந்ததாகவும். மாறி மாறி ஏமாற்றியதாகவும், அதனால் ஒட்டுமொத்த தமிழகமே எழுந்து புரட்சி செய்து பா.ஜ.காவை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் திரு சி.பி.இராதகிருஷ்னன் தெரிவித்த கருத்துக்களில், ஒட்டுமொத்த உலகத்தின் ஒரே ஜெகத் குரு ஷ்ரீ ஷ்ரீ ஷ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, கடவுளின் அவதாரம், மகாபுருஷர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தமிழக அரசு பொய்வழக்கில் கைது செய்த போது ஏற்ப்ட்ட அனுதாபம் காரணமாக எழுந்த அலைகாரணமாக தாங்கள் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் இத்தகைய விரும்ப தகாத நிகழ்வுகளினால் தமிழகம் சுனாமி போன்ற சோகங்களை சந்தித்ததாகவும், இன்நிலை தொடரக்கூடாது என்று பரிகாரமாக பா.ஜ.கவை மக்கள் தேர்ந்தெடுத்ததாக அவர் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

மே.11. நடந்த தமிழக சட்டசபை
தேர்தலில் பா.ஜ.க பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து, மாகா ஷிரி ஜெயேந்திர சரஸ்வதிகள் சுவாமிகள் தலைமையிலான உயர்மட்ட குழு யாரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதை ஆலோசித்து வருகிறது. அவர்களுடைய கட்சி வெற்றி பெறும் என்பது முன்னமே தெரியாது போனதால் தற்பொழுது திடீர் தேர்தல் வாக்குறுதி அறிக்கை தயாரித்ததாகவும் அதன்படி, இந்துக்கள் அனைவரது தெருக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பிள்ளையார் கோவில் இலவசமாக கட்ட இருப்பதாகவும், மசூதிகள் சர்சுகள் அனைத்து ஸ்தலங்களும் இந்து கோவில்கள் போல் அரசே நிர்வாகம் செய்ய இருப்பதாகவும், பழைய இடஒதுக்கீடு முறையை ஒழித்து சீர்திருத்தப் போவதாகவும், அரசு பள்ளிகளில் சீருடையில் காக்கி அரைக்கால் டவுசர் அறிமுகப் படுத்தப் படுமென்றும், தமிழக அரசின் சட்டதிட்டங்களை பரிசீலித்து , சீர்படுத்த மடாதிபதிகள் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் அதன் பிறகே , அமைச்சரைவைக்கு ஒப்பு(தலு)க்கு அனுப்பபடும் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

மே. 12. கிரக திசைகளும், பலன்களும் இன்று சரியில்லாத காரணத்தால், முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் குழு இரண்டு நாட்களுக்கு செயல்படாது என்ற பத்திரிக்கை குறிப்பு மட்டும் பா.ஜ.க அலுவலகம் லோட்டசிலிருந்து அனுப்பி வைக்கப் பட்டது.


மே. 15. ஜெயேந்திரர் தலைமையிலான பா.ஜ.க வேட்பாளர் குழு, ஜெனத கட்சி தலைவர் திரு சு.சாமி எனப்படுகின்ற சுப்ரமணிய சுவாமியை தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்தது. அதன் செய்தி அறிக்கையில், திரு சு.சுவாமி, ஜெயேந்திரர் கைதுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியதிற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்திருந்தது.

திரு சு.சாமி தனது கருத்தை சற்று ஆவேசமாக, மாமி என்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை குறிப்பிட்டு, அவரை வீட்டுக்கு அனுப்பியது தன் வாழ்னாள் சாதனை என்று குறிப்பிட்டு, ஜெ. வை விரைவில் ஜெயிலுக்கு அனுப்ப போவதாகவும் தெரிவித்தார்.


பின்குறிப்பு : பாஜக வெற்றியைப் பற்றி தமிழக கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நீங்கள் பின்னூட்டமாக பதிய வேண்டுகிறேன். அப்படியே இந்த பதிவிற்கான பின்னூட்டங்களையும் தெரிவியுங்கள்


அடுத்து ஒரு சீரியஸ் பதிவு அது தேர்தல் முடிவு 5: இது நான் மிகவும் எதிர்ப்பார்பது, எதிர்பாருங்கள் அடுத்த பதிவில்... தேர்தல் முடிவுகள் பற்றிய இறுதி பதிவு.



தேர்தல் முடிவு 5: தொடரும்...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்