மரண தண்டனைகளை பாதிக்கப்படுபவர்களின் மன நிலையில் இருந்து பார்க்கவேண்டும், மற்றும் நம் உறவினர்கள் பாதிக்கப்பட்டால் நாம் மரண தண்டனைகளுக்கு எதிராக பேசுவோமா ? என்றெல்லாம் கூட சிலர் வியாக்கானம் கூறுகிறார்கள். என்னைப் பொருத்த அளவில் பாதிப்பு அடைந்தவர்கள் அதே போன்ற பாதிப்பு, பாதிப்பு ஏற்படுத்தியவர்களும் அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்பதாக சொல்லுகிறார்கள் என்று புரிந்து கொள்கிறேன். மரணம் அதன் வலியும் கொலைகாரர்களின் குடும்பங்களுக்கும் ஏற்பட்டால் தனக்கு ஏற்பட்ட மன வலிகள் ஆறும் என்பதாகக் கொள்ள வேண்டுமாம். பலிவாங்கும் மனநிலையால் காயங்கள் ஆறும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கிட்டதட்ட என் வாரிசுகள் உன்னை கொன்றுவிட சம்மதம் என்றால் என்னை கொன்றுவிட உன்னை நான் அனுமதிக்கிறேன் என்பது போன்ற கொலைகளை அங்கீகரிக்கும் மறைமுக ஒப்புதல் போன்றவையே பலிக்கு பலி சரி என்பதான மனநிலைகள்.
மரண தண்டனைகள் என்பவை மன்னர் ஆட்சி முறைகளின் நீட்சியாகத் தொடர்கிறதே அன்றி இன்றைய சமூக சூழலில் இன்றும் அவை தேவையான சட்டம் என்று சொல்வதற்கு எனக்கு ஒன்றும் இல்லை. நிரபராதிகள் தண்டிக்கப்பட்ட பிறகு அவற்றை சரிசெய்ய 'மவுனம், வருத்தம்' என்பது தவிர நம்மிடம் எந்த வித சட்டங்களும் இல்லை என்னும் போது கொலையாளிகளுக்கான மரண தண்டனைகள் சட்டங்கள் என்ற அளவில் நாம் சரி என்பது, எந்த விதத்தில் மனித உரிமைக்கான சட்டங்கள் தான் மரண தண்டனை சட்டங்கள் என்று கொள்ள முடியும் ?
கொலைக்கு கொலையாக மரண தண்டனை சரி என்றால் (அரசுகளின் தண்டனைக்கு பயந்து முன்கூட்டியே) கொலைகளை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதோ, மனித வெடிகுண்டுகளின் செயல்களையோ கண்டிக்க நமக்கு என்ன ஞாயாமோ, உரிமையோ, பொருளோ இருக்கிறதா ? மரண தண்டனைக்கும் பயப்படுபவன் கொலை செய்யமாட்டான் என்றால் தற்கொலை தாக்குதல்களை எந்த வகை கொலையில் சேர்ப்பது ? மரண தண்டனைகளினால் சமூகக் குற்றங்கள் குறைந்துவிட்டதற்கான ஆதாராங்கள் எதுவுமே இல்லை, உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்வதும், சூழலால் கொலை செய்வதும் எங்கும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது. சமூகக் கொடுங்கோலர்களை தடுக்க அவர்களை நிரந்தரமாக தனிமை படுத்துவதைத் தவிர்த்து நிரந்தரமாக கொலை செய்வது கொலையாளிகளின் செயல்களுக்கும் அரசுகளின் செயல்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. குற்றத்திற்கான தண்டனைகள் குற்றவாளிகள் மனம் திருந்த வாய்ப்பு, அதன் மூலம் அவர்களின் தொடர் குற்றங்களை தடுக்கலாம் என்பதே அடிப்படை சட்டங்களின் நோக்கம்.

இடுகையில் ஒட்டு மொத்தமாகச் சொல்ல வந்தது, பொதுவானவர்கள், சமூக நோக்கர்கள் 'கொலைகளுக்கு மரண தண்டனை சரி' என்றால் மனித நேயம் பேசி மனித வெடிகுண்டுகளின் செயல்களையோ, தற்கொலை தாக்குதல்களையோ நிறுத்த, கண்டனம் தெரிவிக்க யாருடைய உயிர் என்றாலும் மனித உயிர் மேன்மையானது என ஒப்பீட்டு அளவில் சொல்ல நமக்கு எந்த ஒரு வழியோ, ஞாயமோ தென்படவில்லை என்பதும் சரிதானே ?