திட்டமிடுவதைவிட தற்செயலாக நடப்பது பல வேளைகளில் நன்றாகவே இருக்கும், நட்சத்திரப் பதிவு எழுத இரண்டு வார முன்கூட்டியே தகவல் கிடைத்து, நேரம் கிடைத்திருந்தை வைத்து, நூலகத்தில் இருந்து சில நூல்களை எடுத்து வந்து அதில் இருப்பவற்றில் சிலவற்றை எழுதலாம் என்றிருந்தேன், ஆனால் இடைப்பட்ட காலத்தில் காதில் விழுந்தவைகளை வைத்து எழுதுவதே சிறப்பு என்று எடுத்துக் கொடுப்பதாக சில நடந்தேறியது. இந்த இடுகையையும் தற்பொழுது (இன்று) எழுதுகிறேன்.
********
நானும் அலுவலக தோழர் / தோழிகளும் அலுவலகம் முடிந்ததும் ஒன்றாக செல்வது வழக்கம், அதில் வாகனம் வைத்திருப்பவர் அழைத்துச் சென்று அருகில் உள்ள தொடர்வண்டி நிலையத்தில் அல்லது பேருந்து நிறுத்ததிற்கிடையே விடுவார். அப்படிச் செல்லும் போது எதையாவது பேசிக் கொண்டு செல்வோம், சென்றவாரம் உடன் பணிபுரியும் பெண் தோழர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூரில் குடியேறி குடியுரிமை பெற்றவர், பேச்சின் தொடர்பில் சொன்னார், 'சிங்கப்பூரில் இருந்து மலேசியா பிரியும் முன் சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான நாடு'. அதற்கு மற்றொரு நண்பர், அவரும் மலேசியவாசிதான் ஆனால் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கும் உரிமை பெற்றவர், 'அப்படியெல்லாம் இல்லை, நீ போய் வரலாற்றைப் படி, நீ வரலாறு பாடத்தை பள்ளியில் சரியாகப் படிக்கவில்லை" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். எனக்கும் ஓரளவு சிங்கப்பூர் வரலாறு தெரியும் ஆதலால் அவர் சொன்னதை ஆமோதித்தேன்.
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள் தவிர்த்து குடியேறிய பிறரும், மலேசியர்களும் சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான மாநிலமாக முன்பு எப்போதும் இருந்தது என்றே நம்புகிறார்கள், ஆனால் வரலாறு வேறுவிதமாகத்தான் இருக்கிறது, சிங்கப்பூர் தனி நிலமாகத்தான் வெள்ளைக்காரர்கள் மற்றும் ஜப்பானியர்களின் ஆளுமைக்குள் விழுந்திருந்தது, வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்த மலேசியா, சாபா, சரோவாக் ஆகிய பகுதிகள் விடுதலை அடைந்த போது சிங்கப்பூரும் விடுதலை அடைந்தது, அப்போதே தொழில் துறை மற்றும் கப்பல் கட்டுமானங்களில் சிங்கப்பூர் தனித்து இயங்கியது. வெள்ளையர்களிடம் இருந்து விடுதலைக் கிடைத்த பிறகு சிங்கப்பூர் தனிநாடாக இயங்கப் போதிய இயற்கை வளங்கள் இல்லை என்பதால் அப்போதைய சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் மலேசியாவின் மாநிலப் பகுதியாக இணைந்து கொண்டனர், இது நடந்தது 31 ஆகஸ்ட் 1963, இதன் பிறகு சிங்கப்பூர் அரசியல்வாதிகள் சிங்கப்பூருக்கு சிறப்பு உரிமைகள் கோரவே, ஏற்றுக் கொள்ளாத மலேசிய தலைமை சிங்கப்பூர் தனித்து இயங்கலாமே என்று கூறி 9 ஆகஸ்ட் 1965ல் சிங்கப்பூர் தனித்து விடப்பட்டது, இருந்தாலும் நீர் மற்றும் போக்குவரத்திற்கான ஒப்பந்தங்களுடன் சிங்கப்பூர் தனித்தே இயங்கலாம் என்ற துணிவுடன் தனிநாடு என்று அறிவித்துக் கொண்டதுடன், சிங்கப்பூரை உலக வர்தக மையமாக மாற்றி, சில ஆண்டுகளிலேயே சிங்கப்பூர் வெள்ளியை மதிப்பு மிக்கதாக மாற்றி ஆசியாவின் முதலில் முன்னேறிய நாடு என்ற பெருமையைப் பெற்றுத்தந்தார் சிங்கபூர் முன்னாள் பிரதமரும் இன்றைய மதியுரை அமைச்சருமான திரு லீ க்வான் யூ. இது கடந்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் பற்றிய சுருக்கமான வரலாறு.
சிங்கப்பூர் மலேசியாவின் மாநிலமாக இயங்கிவந்தது வெறும் இரண்டே ஆண்டுகள் தான். மற்றபடி சிங்கப்பூர் வரலாற்றில் மலேசியாவின் பகுதியாக சொந்தமாக இருந்த வரலாறே கிடையாது, தவிர மலேசியாவும் பல்வேறு குறுநில மன்னர் ஆட்சிகளால் ஒரே மொழிப் பேசுபவர்களின் தனித்தனி மாநிலமாகவே இருந்தது, மலேசியாவின் பழங்குடிகள் மலைவாசிகள் தான், இன்னும் அவர்கள் மலைவாசிகளாகவே சொல்லப்பட்டு அவர்களை பூமி புத்ரா என்று கூறித் தனிச்சலுகையும் பெறுகிறார்கள், பின்னர் இந்த பூமி புத்ரா சலுகைக்குள் மலாய்காரர்களும் பெரும்பான்மை என்னும் அரசியல் காரணங்களுக்காக இடம் பெற்றுவருகின்றனர், அங்கேயே பிறந்து வளர்ந்த சீனர்களுக்கு அந்த உரிமை கிடையாது.
இதே போன்று தான் இந்தியச் சொல்லாடல்களில் பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்து பிரிந்து சென்றது அல்லது பாகிஸ்தான் என்பது இந்தியாவிலிருந்து பிடுங்கிக் கொள்ளப்பட்ட பகுதி என்கிற கருத்தியல் இந்திய மக்களிடம் வரலாறாகச் சொல்லப்படுகிறது, பரதன் ஆண்டான் என்கிற எழுதப்படாத நம்பிக்கைத் தவிர்த்து மொத்த இந்தியாவையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட மன்னர்கள் இந்தியாவில் இல்லை, பல குறுநில மன்னர்கள் மொழி வாரி அடிப்படையில் ஆட்சி செலுத்தி வந்தனர், அவர்களுக்குள் ஒற்றுமைகள் என்பதே இல்லாமல் இருந்தது, தமிழகத்தைப் பொருத்த அளவில் சேர, சோழ, பாண்டிய பரம்பரைகளும் அவர்கள் ஆளுமைக்குட்பட்டவைகள் மூன்று நாடுகளாக அறியப்பட்ட வரலாற்றை ஒப்பிட்டு மொத்த இந்தியாவையும் பார்க்க நூற்றுக் கணக்கான மன்னர்கள் இந்தியாவெங்கும் பல்வேறு நாடுகளாகப் பிரித்து ஆட்சி செய்திருக்க வேண்டும், ஒரே மன்னரின் ஆளுகைக்குள் இருந்திருந்தால் மொகலாயர்களோ அதற்கு முன் லோடிகளோ, கில்ஜிகளோ இந்தியாவிற்குள் நுழைந்து கைப்பற்றி இருக்க முடியாது, தவிர இஸ்லாமிய மொகலாய ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலம் வெறும் 200 ஆண்டுகள் தான் அவர்களாலும் மொத்த இந்தியாவையும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை, அல்லது அந்த முயற்சிக்கு முன்பே வெள்ளையர்கள் வசம் இந்தியா வீழ்ந்ததால் ஒட்டுமொத்த இந்தியாவை ஆண்ட பெருமையை வெள்ளையர்களே பெற்றார்கள்.
மதவாத இஸ்லாமியர் மற்றும் பெரும்பான்மை இந்துக்கள் என்ற அடிப்படையில் வெள்ளையர்கள் விட்டுச் சென்ற பாரதம், பாகிஸ்தான் என்றும் இந்தியா என்றும் தனித்தனி பகுதிகளாக தற்பொழுது அறியப்படுகிறது, பாகிஸ்தானில் அங்குள்ளப் பாடத்திட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்ட / பிடுங்கப்பட்ட பெரும்பகுதி நிலப்பகுதியே இந்தியா என்று சொல்லப்படுகிறது என்கிற பாடம் இருந்தால் நமக்கு ஏற்பாக இருக்குமா ? ஆனாலும் இந்தியப் பாடங்களாக தேசப்பற்று என்ற ஊசியாக போடப்படுவது பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்தது என்பதே, கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் அரசியல் ரீதியாக பிரிந்த பிறகும் பங்களாதேஸ் பாகிஸ்தானின் பகுதியாக இருந்தது என்று எப்படிச் சொல்ல முடியாதோ அப்படித்தான், அப்படி இருந்திருந்தால் பாகிஸ்தானின் பெயர் இன்றும் மேற்கு பாகிஸ்தான் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கும், அரசியல் காரணங்களுக்காக நிலப் பரப்புகளின் பெயர்களை வைத்துக் கொள்கிறார்களே தவிர ஒன்றில் இருந்து மற்றொன்று பிரிந்தது என்பதெல்லாம் வெறும் அரசியல் பேச்சுகள் தான், வடகொரியா தென்கொரியா இவைகளில் உண்மையான கொரியா எது என்பதற்கு விடைகள் கிடையாது, கொள்கை ரீதியாக அவர்களின் அரசியல் சார்ந்த நிலம் பிரிந்து பெயர் வழங்கப்படுகிறது.
ஒரு பேச்சுக்கு அல்லது வெற்றிகரமாக இந்தியாவை வளர்ப்பதற்கு இந்தியா வட இந்தியா தென் இந்தியா என்று பிரிவதாக வைத்துக் கொள்வோம், அப்போது எது இந்தியாவில் இருந்து பிரிந்தது என்று எப்படிச் சொல்வது எதை உண்மையான இந்தியப் பகுதி என்று எப்படிச் சொல்வது ?
- சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான நாடு இல்லை
- பாகிஸ்தான் இந்தியாவிற்கு சொந்தமான நாடு இல்லை (வேண்டுமானால் பிரிட்டிஸ் இந்தியாவின் பகுதிக்குள் பாகிஸ்தான் இருந்தது என்று சொல்லலாம், அதே பிரிட்டிஸ் இந்தியாவின் பகுதிக்குள் இலங்கையும் உண்டு)
- பங்களாதேஸ் பாகிஸ்தானுக்கு சொந்தமான நாடு இல்லை
- இலங்கை எந்த ஒரு காலத்திலும் இந்தியவிற்கு சொந்தமான நாடாக இருந்ததே இல்லை.
- அந்தமான் நிக்கோபார் நில அமைப்பின் படி இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் தொடர்ச்சியாக இருக்கிறது, ஞாயமாகப் பார்த்தால் அது இந்தோனேசியாவின் பகுதியாக அல்லது தாய்லாந்தின் பகுதியாக தொடர்ந்திருக்கும், இந்திய கைதிகளை அடைக்கப் பயன்படுத்தியதால் வெள்ளைக்காரர்கள் அதை கொடையாக இந்தியாவிற்குக் கொடுத்து இந்தியப் பகுதியாக மாற்றிச் சென்றனர்.