பின்பற்றுபவர்கள்

31 மே, 2009

தமிழீழம் மலரும் !

உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளம் ஆகிக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, இன்னும் எஞ்சி இருப்போரை அழிக்கும், தூண்டும் சொற்களான 'தமிழீழம் மலரும்' என்பதை படிக்கும் போது வெறுப்பும், விரக்தியும் மிஞ்சுகிறது. காலத்தின் கட்டாயத்தில் எதுவும் நடக்கட்டும், இப்போது காலத்தின் கட்டாயம் காயத்தை குணப்படுத்துவது தான். உயிருக்கும், உடைமைக்கும், உறவுகளை தொலைத்தவர்களுக்கு சாய்ந்து கொள்ளத் தோள். போர்கள வீரவசனத்திற்கான காலம் முடிந்துவிட்டது. எஞ்சி இருப்போரையாவது காப்பதற்கு முடிந்தவரை உரிமைக் குரல் கொடுப்போம், நம்பிக்கையான உலக அமைப்புகள் மூலம் உதவிகள் செய்யும் திட்டம் வெளியிடப் பட்டால் கைகளாக இணையுவோம். சுனாமி பேரைச் சொல்லி சுருட்டியது போல், ஈழத்தமிழர்களின் கண்ணீரைக் காசாக்கிக் கொள்ளும் திடீர் நலக்குழுக்கள், தனிநபர்கள் பணம் வசூல் செய்யப் புரப்படுவார்கள். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உலக அளவில் செஞ்சிலுவை சங்கம் போன்ற நம்பிக்கை உடைய அமைப்புகள் மூலமாக மட்டுமே உதவி செய்ய முன்வருவது இந்த நேரத்தில் சரியான உதவியாக அமையும்.

தமிழீழம் மலரும், மலரவேண்டும் என்பதே தமிழுணர்வாளர்கள் அனைவரின் விருப்போம், ஆனால் அந்த விருப்பதை இப்போதும் திணிப்பதால் இழப்பு எண்ணிக்கையை கூடுதலாக்குவது தவிர்த்து வேறொன்றும் நடைபெறப் போவதில்லை. மனமும் வலியும் போன்று நெருப்பும் புகையும் ஒன்றை ஒன்று சார்ந்தது. இப்போதைக்கு நாம் அதை ஊதிவிடாமல் இருப்பதே நல்லது. தண்ணீர் வேட்கையில் தவிப்பவர்களிடம் 'நாளை உனது தாகம் தீரும்' என்று நம்பிக்கை ஊட்டிக் கூறுவது இன்றைய தாகம் தீர்ப்பதற்கான தீர்வல்ல.

28 மே, 2009

திராவிடம் பேசுறாராம் திமுக தலைவர் !

1971ம் ஆண்டு தேர்தலின் போது சில பத்திரிகைகள் திமுகவுக்கு எதிராக இருந்தன. ராஜாஜி, காமராஜரை ஆதரித்தார். பெரியார் மீண்டும் நம் பக்கம் வந்தார். அப்போது நாம் முன்பு இருந்த இடத்தை விட கூடுதலாக 20 இடங்களைப் பிடித்து அமோக வெற்றி பெற்றோம்.

அப்போது நடந்தது போன்று மீண்டும் திராவிடர்-ஆரியர் போராட்டம் இப்போது நடக்கிறது. இந்த சிந்தனையை தட்டி எழுப்ப என்னைப் போன்ற லட்சக்கணக்கான சிப்பாய்கள் இருக்கிறார்கள் என்றார் கருணாநிதி.

*****

பிரச்சனைகள் இருந்த போது எதைத் தூண்டி மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தார்களோ, அதை மீண்டும் கையில் எடுக்கிறார் கருணாநிதி.. திராவிடக் கழகங்களை பெரியாருக்கு முன், பெரியாருக்கு பின் என்று தான் பார்க்க வேண்டும், பெரியார் பார்ப்பன எதிர்பை முதன்மையாகக் கொண்டிருந்தாலும், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கை, சமத்துவமின்மை ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு தளங்களில் இயங்கினார். பெண்ணடிமைத்தனம் இன்றைய தேதியில் பெரிதாக இல்லை, அதை விட்டுவிட்டாலும், அவரைப் பின்பற்றி வந்தவர்கள் மற்றதையெல்லாம் மறந்து பார்பன எதிர்ப்பை மட்டுமே திராவிட அடையாளமாக அடிக்கடி மக்கள் முன் வைக்கின்றனர், இதற்கு வசதியாக இவர்கள் கையில் எடுத்துக் கொள்வது தமிழுணர்வு.

ஆறிப்போன ஒன்றை கையில் எடுத்து 'ஆரிய திராவிடப் போர்' என்கிறார், ஊடகங்களும், பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகளும் பார்பனர்களின் கையில் இருந்தது உண்மைதான் என்றாலும் கருணாநிதிக் குடும்பத்தினரிடம் தமிழக அளவில் இருக்கும் ஊடகங்களையும், நிறுவனங்களையும் ஒப்பிட்டால் அது சொற்பமே. தேர்தலுக்கு முன்பு புலம்பி இருந்தாலும் எதோ பொருள் இருக்கிறது என்று சொல்லலாம், தேர்தலுக்கு பிறகு ஆரிய திராவிடப் போர் என்பது எதைக் குறிக்கிறது ? ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யும் வண்ணம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை, மக்கள் எழுச்சியை தடுக்கும் வண்ணம் அவசர உண்ணாவிரதமும், அதைத் தொடர்ந்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக அறிவித்து, பின்னர் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என அப்போது தான் அறிந்த செய்தி போல் வாக்குப் பதிவு முடிந்த பிறகு அறிவித்தார். நார்வே போன்ற மேற்கத்திய நாடுகள் அடையும் பதற்றங்களில் ஒரு சிறு அளவேனும் இவர் இவரை 'தமிழின தலைவர்' என்று சொல்லும் தமிழர்களின் குரலாக ஒலித்திருக்க வேண்டும். ஆனால் இலங்கைப் பிரச்சனை தேர்தலில் பாதிக்காது (பாதிக்க விடமாட்டோம் என்பதே அதன் மறைமுகப் பொருள், அது போல் தான் திமுக சார்பு ஊடகங்கள் நடந்து கொண்டன) என்று வெளிப்படையாக அறிவித்திலிருந்தே தமிழ் தமிழினம் என்பதெல்லாம் வெறும் ஓட்டு அரசியல் என்று தெரிந்துவிட்டது.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் எதைச் சொல்லி 'திராவிடம்' பேசமுடியும், 'திராவிடக் கட்சியாக' காட்டிக் கொள்ள முடியும், என்று உட்கார்ந்து யோசித்து 'மீண்டும் திராவிடர்-ஆரியர் போராட்டம் இப்போது நடக்கிறது' என்கிறார். 'சோ' இராமசாமியை மனதில் வைத்துச் சொன்னால், 'சோ' இராமசாமியை எத்தனை பேர் சீந்துகிறார்கள் என்றே தெரியவில்லை. வட இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு தெரிந்த ஒரே பத்திரிக்கையாளர் சோ என்பதால் அவரைப் பேட்டி எடுத்திருப்பார்கள். மற்றபடி அந்த பேட்டியை எத்தனை தமிழன் பார்த்தான் படித்தான் என்றே தெரியவில்லை. அரசியலுக்கு திராவிடம் பேசுவது எடுபடாது. திமுக உண்டியல் குலுக்கும் கட்சி என்றால் இதையெல்லாம் பேசமுடியும், ஆனால் திமுகவின் வாரிசு அரசியல் அசுர வளர்ச்சி தடைபடாமல் இருக்க திராவிட - ஆரியபோராட்டம் என்கிற கூப்பாடுகள் யானைக்கு சோளப் பொறி போன்றதே. பயனளிக்ககது

இன்றைய திராவிடக் கட்சிகள் எதுவுமே திராவிடக் கொள்கைகளில் முனைப்புக் காட்டுவதில்லை, அல்லது அவற்றிக்கான தேவையும் தீவிரமும் குறைவு என்பதே உண்மை. தாலியைப் பார்க்கும் போது புருஷன் நினைவு வருவது போல் கட்சிப் பேரை படிக்கும் போது 'திராவிட' சித்தாந்தம் ஊற்றெடுத்து உடனே அடங்கும் போலும்.

ஏமாளிகள் இருக்கும் வரை...ஏறி மிதிப்பவர்கள் மிதிப்பார்கள்.

சுதர்சனத்தின் நிதர்சனம் !

வழக்கமாக இளங்கோவன் கிளப்பும் 'ஆட்சியில் பங்கு' பீதியைத் தற்போது காங்கிரசின் தமிழக சட்டப் பேரவை தலைவர் சுதர்சனமும் கிளப்புகிறார். இனி திமுக முரண்டு பிடித்தாலும் காங்கிரசின் மைய அரசுக்கு பாதிப்பு இல்லை என்பதால் சட்டப்பேரவை அமைச்சர் அவையில் இடம் பெறும் கோரிக்கை வலுத்துவருகிறது. கடந்த 5 ஆண்டுகள் அடக்கி வாசித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு பங்கு கேட்பது காங்கிரசின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. திமுகவிற்கு இது தேவைதான். டெல்லிக்கு படை எடுத்த கருணாநிதி எதிர்பார்த்த அளவுக்கு அமைச்சர் பதவி அறுவடை கிடைக்கததால் முன்கூட்டியே சென்னைக்கு திரும்பினார். வெளியில் இருந்து ஆதரவு என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஒண்ணும் இல்லை என்பதற்கு பதிலாக எதோ கிடைக்கிறது என்கிற ரீதியில் கிடைத்ததைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து முன்பு அமைச்சராக பொறுப்பேற்றவர்கள் தற்பொழுது தோல்வி அடைந்திருந்தாலும், அந்தப் பதவிகள் தமிழகத்திற்கு கிடைத்தால் கட்சிக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது தான். ஆனால் இவை எல்லாம் தேசியவாதிகளிடம் எடுபட வேண்டுமென்றால் மாநில கட்சியின் உதவி இன்றி ஆட்சியைத் தொடர முடியாது என்ற நிலை இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை சென்ற தேர்தலைவிட கூடுதலாக பெற்றிருந்தாலும் 'வலியுறுத்திக்' கேட்டால் ஆட்சிக்கே ஆப்பு வைத்துவிடுவார்கள்.

தோற்றதன் கடுப்பில் இளங்கோவனின் தூண்டுதலோ அல்லது சுதர்சனம் சரியாகத்தான் அவருடைய கட்சி சார்பில் செயல்படுகிறாரோ திமுகவிற்கு இத்தகைய சந்தர்ப்பவாத அச்சுறுத்தல் தேவைதான். இதே சந்தர்ப்பவாதத்தில் முன்பு காங்கிரசிடம் மத்திய அமைச்சர் பதவிகளை திமுகவும் பெற்றது. காங்கிரசு மேலிட அழுத்தம் தொடர்ந்தால் கருணாநிதிக்கு வேறு வழி இல்லை. காங்கிரசை எதிர்க்க தோன்றிய திராவிட இயக்கம் பரிணாமம் கண்டு 'கை'க்குள் சிக்கி இருப்பதும், 'கை'க்கு பயந்து பதுங்குவதும், சாமரம் வீசுவதும், தும்மை விட்டு விட்டு வாலைப் பிடித்தக் கதையாகி இருக்கும் 'திராவிடக் கூத்து'.

திராவிடம், திராவிடம் என்று பேச என்ன இருக்கு ? திராவிட நிலைப்பாட்டில் ஆதரவு கொடுப்பவர்கள் யோசிக்க வேண்டிய ஒன்று.

25 மே, 2009

பிரபாகரன் மீண்டும் வருவாரா ?

போர் தொடங்கிய போது பிராபகரன் போர் களத்தில் இருந்தார் என்பதே ஐயத்துக்குரியதாக இருக்கிறது. பிராபகரன் நீரிழிவு நோயாளி என்பதால் போர்களத்தில் இருந்து போரை வழிநடத்திச் சென்றிருப்பது ஐயமே. பிரபாகரன் போருக்கு முன்பே இயற்கை மரணம் அடைந்திருக்கலாம். இது உண்மையெனில்

இதை உளவுத்துறைகள் மூலம் அறிந்து கொண்ட சிங்கள அரசு போர் செய்து அந்த பகுதிகளை கைப்பெற்ற திட்டம் தீட்டி இருக்கலாம்

ஈழக்கனவு நிறைவேறத சூழலில் பிரபாகரன் மரணத்தை வெளியே கசியவிட வேண்டாம் என்று விடுதலை புலிகள் தரப்பு பொட்டு அம்மன் தலைமையில் செயல்பட்டு இருக்கலாம்

போரில் வெற்றி என்பதை வழியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த இலங்கை இராணுவத்திற்கு பிரபாகரன் 'உடல்' தேவைப்பட்டு இருக்கிறது, அதைக் காட்டியும் இருக்கிறார்கள். ஏற்கனவே பிராபகரன் மரணம் அடைந்திருந்தால் விடுதலைப் புலிகளின் அமைப்பு அதை வெளிப்படுத்த திணறும் என்பதைக் காரணமாக வைத்து பிரபாகரனின் 'உடலை'க் காட்டினார்கள் என்று ஊகிக்க முடிகிறது.

புலிகள் பிரபாகரனின் இறப்பை காலம் சென்று உறுதிப்படுத்துவது ஏன் ?

பிரபாகரன் இறந்தால் இரத்த ஆறு ஓடும் என்கிற வைகோவின் பேச்சைக் கேட்டு அச்சமுற்ற அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு தற்காலிக மறுக்கும் படி விடுதலைப் புலிகளின் வெளியுறவு அமைப்புகளிடம் கேட்டு கொள்ள ஆனது ஆயிற்று என்பதால் விடுதலைப் புலிகள் தரப்பு அந்த வேண்டுகோளை ஏற்றிருக்கக் கூடும்.

பிரபாகரன் போர்களத்தில் போரிடும் போது இறந்தார் என்று சொல்வது அவரை பெருமைப் படுத்தும் என்பதாலும் காலம் தாழ்த்திச் சொல்கிறார்கள் போலும்.

எது எப்படியோ போர் தொடங்கும் முன்பே பிராபகரன் மரணமடைந்திருக்கக் கூடும், ஏனெனில் போர் தொடங்கிய பிறகு பிரபாகரன் போர் களத்தில் இருந்தது போலவோ, வேறு நடவெடிக்கைக் குறித்தோ இதுவரை எந்தப்படமும் விடுதலைப் புலிகள் தரப்பில் வெளி இடப்படவில்லை.

இன்னும் சில விடுதலை புலிக்களின் குழுக்கள் பிரபாகரன் உத்தரவிற்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தப்பிவிட்டதாக சொல்லப்பட்ட இந்த ஒருவார காலம் உத்தரவிடவோ, இருப்பை வெளிப்படுத்தவோ போதாதா ?

நடப்புகளை எல்லாம் பார்க்கும் போது எனது ஊகம் பிரபாகரன் போருக்கு முன்பே மரணமடைந்திருக்கக் கூடும் என்பதே. இது தெரியாத இந்திய அரசை, இலங்கை அரசு பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் அழிக்கப் போவதாகச் சொல்லி இந்திய அரசின் உதவிகளைப் பெற்று அப்பாவி தமிழர்களை அழித்திருக்கிறார்கள்.

மற்றபடி பிரபாகரன் மீண்டும் வருவார் என்று எதிர்பார்ப்பது அவர் மீது வைத்திருக்கும், மதிப்பையும் நம்பிக்கையையும் பொருத்ததே. அப்படி நம்பிக்கை உடையவர்களில் நானும் ஒருவன்.

24 மே, 2009

ஈழம் : கட்டாந்தரையில் புல் முளைக்கும் !

ஈழப் போரில் விடுதலைப் புலிகளை அழித்ததாகக் கூறிக் கொண்டு வன்னி / முல்லைத் தீவு மக்களின் வாழ்வுரிமையை கீழே போட்டு புல்டவசரால் நசுக்கி இருக்கிறது இலங்கை இராணுவம் மற்றும் அதற்கு உதவிய இந்தியா உட்பட பலநாடுகள். திபெத் ஆக்கிரமிப்பையும் போராட்டக்காரர்களையும் நசுக்குவதை ஞாயப்படுத்த சீனா இலங்கைக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவி இருக்கிறது. இங்கு இந்தியாவில் சீன தாங்கி கம்யூனிச கட்சிகள் எதுவும் இதுவரை சீனாவுக்கு எதிராக மூச்சு விட்டது கிடையாது. காங்கிரசு அரசின் இலங்கை ஆதரவு வெளிப்படையானது, பாஜக தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கவில்லை. வழக்கமாக 'இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள்' என்று இந்து அரசியல் பிழைப்பு நடத்தும் பாஜகவிற்கு ஈழத்தமிழர்கள் இந்துக்களாகத் தெரியவில்லை. இதற்குப் பின்னனியும் உண்டு, விடுதலைப் புலிகள் சாயிபாபாவை பல்வேறு சமயங்களில் விமர்சித்தவர்கள், சாயிபாபா பாஜக தொடர்பு நாடறிந்தது தான். அதற்கு மேல் அவர்கள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க முன்வரவில்லை என்பதை விளக்கவும் வேண்டுமா ? பாரளுமன்றத்தில் வேறு பிரச்சனைகள் இல்லாதபோது ஓரிரு சமயங்களில் 'இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள்' என்று பேசினார்கள். அதற்கு எந்த ஒரு அழுத்த்தையும் கொடுத்து போராடவே இல்லை. தேசிய கட்சிகள் அனைத்துமே ஈழப் பிரச்சனையில் தங்களால் முடிந்த அளவுக்கு சொந்தப் பகையை முடித்துக் கொள்ளவும், வெறும் அரசியலுக்காகவும் மட்டுமே பயன்படுத்தின. தமிழகத்தில் திமுக சார்ப்பு ஊடகங்கள் ஈழப் பிரச்சனை தேர்தல் தலைவலியாக மாறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து தனது மீடியாக்களின் மூலம் காமடி திரைப்படங்களைப் போட்டு வெற்றிகரமாக செய்திகள் செல்லாவண்ணம் கவனமாக நடந்து கொண்டன.


(தமிழனாக பிறந்ததால் இந்த தண்டனையா ?, இனி தமிழனாக பிறக்காதீர்கள் குழந்தைகளே...)

இதோ எல்லாம் முடிந்துவிட்டதாக அறிவித்து இலங்கையில் வெற்றி அறிவிப்பு இட்டாகிவிட்டது. 30 ஆயிரம் பொதுமக்கள் அழிந்ததையும் பொருட்படுத்தாது அந்நாட்டு சிங்களர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள் என்றெல்லாம் தொலைக்காட்சிகள் படம் பிடித்துக் காட்டின. பார்க்கும் நமக்கே எரிச்சல் ஆகும் போது, அங்கே கொழும்பிலும், சிங்களர் பெரும்பாண்மையாக வசிக்க்கும் இடங்களில் வசிக்கும் தமிழர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பெரும் வேதனையை அடைந்திருப்பார்கள். வெற்றி வெற்றி என்றால் எது வெற்றி ? 30 ஆயிரம் தமிழர்களைக் கொன்றதா ? அல்லது அவர்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்ததா ? விடுதலைப் புலிக்கட்டுப்பாட்டு பகுதியில் கல்வி, மருத்துவம், வங்கிகள் அனைத்துமே அமைக்கப்பட்டு தனிநாடு போலவே தான் செயல்பட்டு இருந்தனர். அங்கிருந்த மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் முற்றிலுமாகவே அழிக்கப்பட்டதாகவே தெரிகிறது.

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக எந்நேரம் போர் நடக்கும், என்கிற பீதியிலே வாழ்ந்தவர்கள், வாழ்க்கை என்றாலே போர் தானோ என்ற அளவில் சிறுகுழந்தைக்கும் மனதில் பதிந்தும், இனி குடும்பத்தில் ஒன்று அல்லது மேற்பட்டவர்களை இழந்தோ, தானே கை, கால் இல்லாமல் ஊனமுற்றோ இருப்பார்கள். இவைதான் இலங்கை அம்மக்கள் மீது கொண்ட வெற்றி என்பது அந்த நாட்டு சிங்கள குடிமகனுக்குத் தெரியாதா ? முல்லைப் பெரியார் பகையை வைத்துக் கொண்டும், சிங்களர்களுக்கு நேரடியாக உதவிய மலையாளிகளின் தலைமைகளை நினைத்தும் வெறுப்படையும் நாம் நாளை கேரளாவில் பூகம்பம் ஏற்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டால் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பட்டாசு வெடிப்போமா ? ஆனால் அது போன்ற இழிசெயலைத்தான் சிங்களக் குடிமக்கள் செய்திருக்கின்றன. பிரபாகரனோ, விடுதலைப் புலிகளோ பாராசூட் வழியாக ஈழ மண்ணில் குதித்தவர்கள் அல்ல. பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு தமிழனும் பிரபாகரன்களாக உருவானால் ஈழப் பிரச்சனை சுற்றுப் புறச் சூழலால் உலகம் அழியும் வரை (உண்மையிலேயே அப்படி ஒன்று நடந்தால் நான் மகிழ்வேன், ஏனென்றால் எந்த ஒரு கொடுமையும் தொடந்து நடப்பதை இயற்கைக் கூட பொறுத்துக் கொள்வதில்லை) கூட நிகழும். இராமர் பாலம் பற்றிய கதைகளை புறக்கணித்தாலும் இலங்கை 'இராவண' தேசம் என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

கோழைகளுக்கு வரலாற்றின் பின்குறிப்பில் கூட இடம் இருந்ததில்லை, கோழைகள் உண்ணுவதையும் பொருளீட்டளையும் தவிர்த்து சொந்த வாழ்கையிலும் கூட எதையும் சாதிப்பது இல்லை, தனக்கான பிரச்சனை இல்லாதவரை தலையிட வேண்டாம் என்று அமைதியாக இருப்பவர்கள் அனைவருமே கோழைகள் தான். எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாத இந்த கோழைத்தனம் தான் ஒரு இனத்தை இன்னொரு இனம் அடிமைப்படுத்த வழியாக அமைகிறது. இந்தியர் கோழைத்தனமே முகலாயர் படையெடுப்பு, வெள்ளைக்காரர் படையெடுப்பு என்பதாக வரலாறு. தமிழனின் கோழைத்தனம் தான் இராஜராஜனுக்கு பிறகு பிற மாநில மன்னர் ஆட்சி. இவை அனைத்துமே தான் பாதிக்கப்படவில்லை என்கிற பொறுப்பின்மையினாலும், சுயநலத்தினாலும் ஏற்பட்டவை, அதற்கு சாதகமாக எதிரிகள் வைக்கும் விலைக்கு விலைபோகுபவர்களின் சுயநலம், ஒரு ஆயிரம் பேரை அடிமைப்படுத்த அந்த கூட்டத்தில் ஒருவனை விலைபேசினாலே அவன் அனைவரையும் காட்டிக் கொடுத்துவிடுவான். ஆனாலும் விழித்துக் கொள்ளும் போது ஓரளவு மீண்டு வெளியே வரத்தான் செய்கிறார்கள். இது இயற்கை மற்றும் உலக நடப்பு. இன்றைய தேதியில் சுயநலம், இனநலம் ஓங்கி இருப்பதால் எந்த ஒரு வெற்றியும், தோல்வியும் உண்மையானதோ, நிலையானதோ அல்ல.




மேலும் படங்களுக்கு


முழுதுமாக உழுதுவிட்டு, தீவைத்துக் கொளுத்தினால் கூட நம்பிக்கை தூறலில் புற்கள் முளைப்பது இயற்கை. திடலாகிப் போன வன்னி, முல்லைத்தீவு மீண்டும் எழும். அதை எந்த ஒரு சக்தியாலும் முடக்கிவிடவே முடியாது.

23 மே, 2009

30 ஆயிரம் புலிகளைக் கொன்றது இராணுவம் ?

புலிகளை அழித்துவிட்டோம், போர் முடிந்துவிட்டது என்று சொல்லிய இலங்கை இராணுவம், போர் பகுதியைப் பார்வையிட ஊடகங்களுக்கும், பொதுசேவை அமைப்புகளுக்கும், ஐநாவுக்குமே மறுப்பு தெரிவிப்பது ஏன் ?

கிட்டதட்ட 30 பொதுமக்கள் வரை இராசாயண குண்டு மூலம் கொன்றொழிக்கப்பட்டதாக தெரிகிறது, மிகப் பெரிய சர்வதேச போர் குற்றத்தில் இருந்து தப்பிக்க பிரபாகரனைக் கொன்றதாக நாடகம நடத்தப்பட்டுள்ளது.

இந்த சாவு எண்ணிக்கைத் தெரிந்துவிட்டால் உலகநாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகவேண்டி இருக்கும்,

முகாம்களில் உள்ளவர்கள் உண்மையை வெளியே செல்லிவிடுவார்கள் என்கிற அச்சம்

30 ஆயிரம் உடல்களை அப்புறப்படுத்த கால அவகாசம் எடுத்துக் கொள்ளவேண்டும், அத்தனை உடல்களையும் புதைத்தால் என்றாவது ஒரு நாள் தோண்டி எடுக்கப்பட்டு உண்மைகள் வெளியே வரலாம் என்பதால் மொத்தமாக தடையங்கள் அனைத்தையும் அழிக்க குறுகிய கால அவகாசம் தேவைப்படும்.

ஆகிய காரணங்களே போர் பகுதிகளை பார்வையிட பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி தடை செய்திருக்கிறார்கள். துரோகி கருணா தைரியமாக அங்கு சென்று வர முடிகிறதென்றால் ஏனென்று கேட்க அங்கு நாதிஇல்லை, பாதுகாப்பு ஆபத்துகள் இல்லை என்று தானே பொருள்.

கொல்லப்பட்ட அனைவருக்கும் புலிகளின் ஆடைகளை மாட்டிவிடும் அளவுக்கு ஆடைகள் கையிருப்பு இருந்தால் 30 ஆயிரம் புலிகளை நாங்கள் போரில் கொன்றோம் என்று சொல்லி இருப்பார்கள்.

இராசீவ் காந்தி கொலைக்கு பலிவாங்கும் விதமாக சோனியா காந்தியின் உத்தரவின் பேரிலேயே இந்திய அரசு இலங்கை அரசின் துணை இராணூவம் போலவும், இந்திய நாட்டு பிரச்சனை போலவும் முனைப்புடன் செயல்பட்டதாக பல்வேறு தரப்பும் சொல்லப்படுவதில் உண்மை இல்லாமல் இருக்கவில்லை.

அமைதிப் படைகள் என்ற பெயரில் நடந்த கொடுமைகளைக் கண்டு புறப்பட்ட சிவராசனும், தனுவும் இந்தியாவில் ஊடுறுவி வெற்றிகரமாக ஒரு படுகொலை நடத்தி இருப்பதைப் பார்க்கும் போது, ஈழத்தமிழர்களின் பெரும்பான்மையினரின் கனவான தமிழ் ஈழக் கனவையும், 30 ஆயிரம் பொதுமக்களை அழித்த பிறகு, மீண்டும் வரலாறு திரும்பும் விதமாக எத்தனை சிவராசன்கள், தனுக்கள் வரப்போகிறார்களோ ?

பொம்மை அரசை ஏற்படுத்தி சதாமை தூக்கிலிட்டு ஈராக்கில் அமைதி திரும்புவதாக கூறிய அமெரிக்க இராணுவம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே தான் இருக்கிறது, இருக்கும் நிலையிலும் ஈராக்கில் தற்கொலை தாக்குதல் நடக்காத நாளே இல்லை, அமெரிக்க இராணுவம் வெளி ஏறிவிட்டது என்று அறிந்தாலே மீண்டும் ஈராக்கில் இனக்கலவரம் பெரிதாகவே வெடிக்கும். எந்த ஒரு மூன்றாவது நாடும் தலையிட்டு ஒரு நாட்டிற்குள் அமைதியை ஏற்படுத்திவிடவே முடியாது, வரலாற்றில் இருந்து இந்தியாவும், எந்த நாடுகளும் பாடம் படிக்கவில்லை. விடுதலைப் புலிகளை அழிப்பதை வரவேற்கும் விதமாக இலங்கை அரசுக்கு ஆதரவாக கொண்ட இந்தியா, பின்னர் இலங்கைக்குள் தற்கொலை படை தாக்குதல் நடவாமல் இருக்க கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களன் உட்பட ஏனைய பொதுமக்களுக்கு எந்த விதமான பாதுகாப்பை கொடுக்கும் ?

பழிக்கு பழி என்று பாதிகப்பட்டவர்களின் உறவினர்களாக தன்னிச்சை குழுக்கள் தோன்றி இந்திய அரசியல்வாதிகளை குறிவைத்தால் இந்தியாவல் என்னேரமும் விழிப்பாக இருக்க முடியுமா ?

இலங்கைப் போரில் இந்திய தலையீடு கொள்ளிக்கட்டையை தலையில் சொறிந்து கொண்டதாகவே தெரிகிறது.

22 மே, 2009

சிங்கை பதிவர் சந்திப்பு (நாளை) !

நாளை சனிக்கிழமை மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சிங்கைப் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது.

இடம் : பாசரிஸ் கடற்கரை (சிறுவர் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள கடற்கரைப் பகுதி)



பேருந்து : பாசரிஸ் மையம் பேருந்து மாற்று நிலையத்தில் (Pasir Ris Central, Bus Interchange) இருந்து

88, 359 (Berth 7) , 15, 58 (எலியாஸ் மாலில் இருந்து 10 நிமிட நடைத் தொலைவு)

403, பாசரிஸ் கடற்கறைப் பூங்காவிற்கே வரும்.

சிங்கைப் பதிவர்கள் அனைவரும் வருக !

தொடர்பு கொள்ள,

ஜோசப் பால்ராஜ் : 93372775
முகவை இராம் : 90526257
கோவி.கண்ணன் : 98767586

21 மே, 2009

இராசீவ் காந்தி நினைவு நாள் !

1990ல் சென்னையில் வில்லிவாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் நண்பர்களுடன் இருந்தேன், இராசீவ் கொலையான மறுநாள் காலையில் தான் தகவல் தெரிந்தது. அப்போதும் பலகட்டங்களாக தேர்தல் நடந்ததால் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு சென்னை வந்த நிலையில் இது நடந்திருந்தது. பொது வேலை நிறுத்தம் போல் அனைத்துக் கடைகளும் சென்னையில் மூன்று நாட்களுக்கும் மேல் மூடப்பட்டு இருந்தன. ஒரிறி நாளில் கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கியதாக ஜோல்னா பை வைத்திருந்த ஒருவர், அவருடன் ஒரு பெண், கூடவே இரட்டை சடை போட்டிருந்த சிறுமி ஆகியோரின் படங்கள் வந்தன. மறுநாள் அனைத்து பத்திரிகைகளும் கொலையாளி இப்படி இருப்பான் என்பதாக ஓவியர்கள் வைத்து முக அமைப்புடன் பல்வேறு வேடத்தில் இப்படி இருப்பார்கள் என ஒரு ஆண் பெண் புகைப்படங்களை வெளி இட்டிருந்தன, அதன் பிறகே இவை விடுதலைப் புலிகள் தொடர்பால் நடந்த கொலை என பரவலாகப் பேசப்பட்டது. புகைப்படங்கள் மூலம், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பெயர், கொலையாளிகள் பெயர் ஆகியவை தெரிய ஆரம்பித்தன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலையில் இருந்த 90 விழுக்காட்டினார் வெறுக்கத் தொடங்கினார்கள். வழக்கமாக தேசியவாத பம்மாத்தில் உயிர்சாதி சார்பு ஊடகங்கள் பரப்பப்படும் செய்திகளை அப்போது ஊடகங்கள் சார்பு நிலை உடையவை என்று அறியாததால் என்னைப் போல் பலரும் 'அமைதிப் படை அனுப்பி அமைதி ஏற்படுத்த முயன்ற வெள்ளைப் புறாவின் சிறகொடித்து வீழ்த்துவிட்டார்களே' என்று சினந்தோம். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதே போன்ற நினைப்பில் தான் என்னைப் போல் பலரும் இருந்தனர்.

பிறகு சார்புடகம் சாராதோர் எழுதிய கட்டுரைகள் மூலம் ஈழத்தில் அமைதிப் படை என்ற பெயரில் நடத்திய அட்டகாசங்கள் அமிழ்த்தப்பட்ட மனிதனின் மூச்சுத் திணறல் போல் ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றாக வெளியே வர வர, என்ன இருந்தாலும் தமிழக மண்ணில் இராசீவ் காந்தி படுகொலை நடந்திருக்கக் கூடாத வரலாற்றுப் பிழை' என்பதாக சிந்தனைகள் மாறியது, அகதிகள் வர வர ஈழத்தவர்கள் மீது பரிதாபம் வரத் தொடங்கியது.
தற்கொலைத் தாக்குதல் என்பது ஒரே நாளில் ஒருவரை மூளை மாற்றம் செய்வதன் மூலம் நடந்திருக்க முடியாது, அதற்கு பின்னால் இருக்கும் பாதிப்புகள் ஒருவரை அந்த நிலை எடுக்கக் காரணமாக இருக்கும் ஞாயங்கள் குறித்தும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையும் ஏற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக ஈழப் பிரச்சனைக்குக் காரணமே அடிப்படை இனவெறியில் சிங்களப் பெரும்பான்மை நடத்திய வெறி ஆட்டமே என்பது புரிந்து கொள்ள்ளப்பட்டது.

சிறுபான்மை பெறும்பான்மை பேசும் முதலாளித்துவ நாடுகளின் நடைமுறையில், சிறுபான்மை மதத்தவர்களை அரசியல் இயக்கங்கள் கண்டு கொள்ளாமல் அவர்களின் ஓட்டுகளில் கவனம் செலுத்திவருவதெல்லாம் பார்க்கும் போது இந்து வெறியின் மூலம் பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவை பெற முயலும் பாஜகவிற்கும், சிறுபாண்மையினர் பாதுகாவலராகக் காட்டிக் கொண்டு அவர்களின் வாக்குகளையும், நடுநிலையாளர்களின் வாக்குகளை குறிவைக்கும் காங்கிரசின் அரசியல் செயல்பாடுகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதால் பலரும் திமுக - பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

காங்கிரசின் தேர்தல் பலமாக, இந்திராகாந்தி படுகொலை, இராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து அவர்கள் அந்த அனுதாபத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் அடுத்த அடுதத் தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாமல் போகவே தலைமையிலான ஆட்சி என்ற உத்திக்கு மாறி தற்பொழுது கூட்டணிகள் மூலம் ஆட்சியை தக்கவைத்துக் கொள்கின்றனர். நேரடியாகவோ மறைமுகமாகவோ காங்கிரஸ் அரசு தொடர பலமுறை தமிழர்களே காரணமாக இருந்தும் எந்த ஒரு தமிழக காங்கிரசு தலைவரையும் பிரதமர் ஆக்கிப் பார்க்கும் மூடில் காங்கிரசு இருந்ததில்லை. பழிக்கு பழியாக இராசீவ் காந்தி படுகொலை நடந்துவிட்டது, அதையே சாக்கிட்டு ஈழத்தமிழர்களின் கனவான தமிழ் ஈழத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தவர்களை முற்றிலும் துடைத்தொழிக்கப் போவதாக அறிவிக்கபப்டாத காங்கிரசின் சபதம் போல் காங்கிரசு தலைமையிலான இந்திய அரசின் முழு ஒத்துழைப்புடன் ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு விட்டனர். மனித உயிர்களை அத்தனை மலிவாக நினைப்பவர்களுக்கு இராசீவின் உயிர் மட்டும் உயர்வாகத் தெரிவதை எந்த வித மனிதம் என்று எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. பெரிய ஆலமரம் சாயும் போது அதிர்வுகள் ஏற்படும் என்று இந்திராகாந்தி படுகொலையை தொடர்ந்த காங்கிரச்சாரின் சீக்கிய படுகொலை ஞாயப்படுத்தியவர் இராசீவ் தான்.
காந்தியின் பெயரை பின்னால் வைத்திருப்பதாலேயே யாரும் உத்தமரோ, அமைதி விரும்பிகளாகவோ இருக்க முடியாது என்பதாக வெளிக்காட்டினார்.
டெல்லியில் இருந்த பல இஸ்லாமியர்களுக்கு கட்டாய குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பணித்தார் சஞ்சய்காந்தி என்கிற குற்றச் சாட்டுகள் இப்போதும் உண்டு. பயிற்சி விமான விபத்தில் பலியாகமல் இருந்தால் சஞ்செய் கூட கொல்லப்பட்டு இருப்பார் என்றே சிலர் சொல்லுவார்கள்.

அதிகாரவர்க்கம் அரசியல், இராணுவ ரீதியாக இரும்புக் கரம் நீட்டும் போது, அதற்கு எதிராக மறைவாக நக்கசல் இயக்கங்கள் தோன்றி அச்சுறுத்தலாக அந்த இரும்புகரத்தின் மீது தொலைவில் இருந்து பெட்ரோல் குண்டுகளை வீசும். அதாவது தீவிரவாதிகளை தோற்றுவிப்பவர்களே அடக்குமுறை ஆட்சியாளர்களும் அவர்களின் செயல்பாடுகளும் தான். இதில் ஞாயம் எது என்று எப்படிச் சொல்ல முடியும் ?

இராசீவ் காந்தி ஆவி மன்னிக்காது என்று பேசும் காங்கிரசார் இனிமேலாவது, ஆவி அரசியல் நடத்துவதை நிறுத்திவிட்டு தங்களால் ஏற்பட்ட பிழைகளை சரிசெய்து கொள்ளவேண்டும். இராசீவ் அரசியல் ரீதியாக எப்படிப் பட்டவராக இருந்தாலும் தகவல் தொழில் நுட்பத் துறைமூலம் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சிக்கு கைக்காட்டி இருக்கிறார். அதன் மூலம் இந்தியர்கள் தொழில் நுட்ப துறையில் அச்சமின்றி அடி எடுத்து வைக்க வழி ஏற்பட்டு இருக்கிறது. நம்மைப் போல் பெரிய நாடு என்றாலும் சீனர்களால் இந்தியர்களை இந்த துறையில் விஞ்சமுடியவில்லை. அதற்கு அடிகோலிட்டவர் இராசீவ் காந்தி. தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றி வளர்ந்தவர்கள் இராசீவ் காந்திக்கு பாராட்டு தெரிவிக்க கடமைப் பட்டவர்கள். அந்த வகையில் இராசீவின் மறைவை ஒட்டிய இந்நாளில் அவருக்கு பாராட்டையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

20 மே, 2009

பாரதிராஜா சூடு : 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள்'

தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற (இடைத்?) தேர்தல் முடிவுக்கு பிறகு,
இயக்குனர் பாரதிராஜாம் ஜூனியர் விகடன் பேட்டியில் ஐயத்திற்கிடமின்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில்,

''ஈழத் தமிழர் பிரச்னையைக் காரணம் காட்டி, காங்கிரஸாருக்கு எதிராகப் பிரசாரத்துக்குப் போனீர்கள். ஆனாலும், காங்கிரஸ் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் ஜெயித்துவிட்டதே..?''

''தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷே அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். தமிழர்களிடம் வாக்கு வாங்கி அமைச்சரான ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு ஆகியோர் அதை வேடிக்கை பார்த்தார்கள். அவர் களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் எங்களுடைய தமிழீழ திரைப்பட ஆதரவு இயக்கத்தின் சார்பில் பிரசாரத்துக்குப் போனோம். அதை நாங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டோம். இளங்கோவன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு ஆகியோருக்கு எதிராக மக்கள் தீர்ப்புகள் வந்திருக்கிறது. ப.சிதம்பரம் கணக்கே வேறு. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பின்தங்கியிருந்தார். கடைசி நேரத்தில் எப்படி ஜெயித்தாரோ, அது தெரிய வில்லை..! 'ப.சிதம்பரம் ஜெயித்தார் என்று முதலில் அறிவியுங்கள். அதன் பிறகு, ஆகவேண்டியதைப் பார்த்துக்கொள்ளலாம்...' என்று டெல்லியிலிருந்து உத்தரவு வந்ததாகச் சொல்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது அவருக்கும் தோல்விதான்!''




பசிக்கு பிச்சை இட்டது இப்படித்தானா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

ஆளும் கட்சியின் கூட்டணியின் இணைந்த "கைகள்" தேர்தல் பதிவு அலுவலகம் அனைத்திலும் கனிசமான அளவுக்கு செயல்பட்டுள்ளதால், 40(39+1) தொகுதியிலும் நடந்த தேர்தல், இடைத்தேர்தல் போல் இருந்தது என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதையும் மீறி 12 தொகுதிவரை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது உண்மையான வெற்றி என்றும் பெரும் சாதனை என்றும் சொல்கிறார்கள்.

ஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கையில் கிடைக்க கூடாது !

ஈழத்தில் போர் தொடங்கிய பிறகு நக்கீரன் இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில்,

"இவர்களே (இலங்கை அரசு) ஊடகங்களில் என்னைப் பற்றி ஊதிப் பெரிதாக்கி வைத்துவிட்டார்கள், அவர்கள் பயப்படும் அளவுக்கு நான் மிகப் பெரிய ஆளே அல்ல, நான் இளம் வயதில் மிகச் சாதாணமானவனாகத்தான் இருந்தேன், அப்போது கொழும்பில் இனவெறியில் என் கண் முன்னே பல தமிழர்கள் கொல்லப்பட்ட போது அதற்கு எதிராக கொதித்து கிளம்பினேன். தற்போதைய சூழலில், ஒருவேளை நான் எதிரியின் கைகளில் சிக்கும் நிலை ஏற்பட்டால் என்னால் முடிந்த அளவுக்கு அவர்களை அழித்துவிட்டு அதன் பிறகு நானும் அழிந்துவிடுவேன். எரிக்கப்பட்ட என் உடலின் ஒரு பிடி சாம்பல் கூட எதிரிகளின் கைகளில் கிடைத்துவிடக் கூடாது என்பதில் இயக்கத்தினரும் உறுதியாகவே உள்ளனர்"

என்று பிரபாகரன் பேட்டி அளித்திருந்தார். அதைப் படித்த பிறகு பிரபாகரன் உயிருக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று தொல்.திருமாவளவன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

******

இவ்வளவு தூரம் தன் முடிவும், அதைத் தொடர்ந்து நடக்கவேண்டியவைப் பற்றி இயக்கத்தினரிடம் விழிப்புணர்வு வைத்திருந்தவரை 'ஆம்புலன்சில் தப்பிக்கும் போது சுட்டதாக' இலங்கை இராணுவத்தகவல்கள் படம் போட்டு காட்டுகிறது. அந்தப்படத்தில்

* யுத்த களத்தில் பளபளவென சேவ் செய்யப்பட்ட முகம்

* கிட்டதட்ட 50 வயதுக்கும் மேலாகும் அவருக்கு நரையில்லா கருகரு மீசை, (ஷேவ் செய்யவே நேரமிருக்குமா என்று ஊகிப்பதே தலைவலியாக இருக்கும் போது, மீசைக்கு பொறுமையாக டை அடித்திருக்க முடியுமா ?

* தொலைகாட்சி வழியாக அண்மையில் 2008ல் மாவிரர் நாள் உரையில் பேசியபோது இருந்ததைவிட 20 வயது இளமையான தோற்றம்

இவை எல்லாம் எப்படி சாத்தியமா ? மொத்தமாக தலை, முகம், நிறம் ஆகியவற்றை மாற்றி புஷ் வேடம் போட்டு தோற்றத்தை மாற்றிக் காட்டிய தசவாதாரம் படத்தின் நடிகர் கமலைக் கேட்டால் எதாவது க்ளூ கொடுப்பார் என்றே நினைக்கிறேன்.

பிரபாகரன் போல் தோற்றம் இருப்பதால் அந்த படத்தில் இருபவருக்கும் கண்ணீர் அஞ்சலி !

மாவீரனுக்கு மரணமில்லை !

19 மே, 2009

ஆண்கள் இனி அணிய வேண்டியதில்லையாம் ! (18+)

திருமணம் ஆன ஆண்களுக்கு பயனான செய்தி, திருமணம் ஆன தம்பதிகளிடையே நெருக்கத்தை மேலும் மிகுக்கும் தகவல். அதை வாங்க செல்லும் வெட்கத்தை விட, வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல், குழந்தைகள் கண்ணில் சிக்காத அளவுக்கு பாதுகாப்பது கொஞ்சம் ரிஸ்க். அதுக்கு மாத்திரை பரவாயில்லை. டிஸ்போஸ் பண்ணும் பிரச்சனையும் இல்லை.

தற்காலிக கருத்தடை மாத்திரை திருமணம் ஆனவர்களுக்கு ரிஸ்க் என்றாலும் மான / அவமான பிரச்சனை இல்லை. ஆனால் 18+ வயது வந்தவர்கள் மாத்திரை பயன்படுத்துவது ரிஸ்க் தான். :)

தகவல் இங்கே,

Published in : ஆரோக்கியம், உடலே நலமா?


மாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் : இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் க‌ல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆபிதீன் தனது ஆராய்சிப் படிப்பை முடித்து. மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

மேலும் படிக்க...


பின்குறிப்பு : கருத்தடை மதத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று போர்கொடி தூக்கும் இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து சாகீர் உசேனை அல்லாதான் காப்பாற்ற வேண்டும் :)

பிரபாகரன் கொல்லப்பட்டதாக பொய் பரப்பபடுவது ஏன் ?

நேற்று தேசியத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி கேட்டு தமிழ் உணர்வாளர்களும், ஈழ ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தது உண்மைதான். இந்திய ஊடகங்கள் குறிப்பாக தமிழில் சன் செய்தி முதற்கொண்டு 'பிரபாகரன் போரில் மரணமடைந்ததாக தகவல் வெளியிட்டது' இருப்பினும் இந்த செய்தியின் நம்பகத்தன்மை குறித்து யாதொரு படத்தொகுப்பும் வெளி இடப்படவில்லை. அனைத்து ஊடகங்களுமே இலங்கை இராணுவ செய்தியை மேற்கோள்காட்டியும், அவர்கள் அளித்த தகவலை வைத்தும் செய்தி வெளி இட்டார்கள்.

போர் என்றால் பிரபாகரன் ஒரு ஏகே 47 வைத்துக் கொண்டு சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராடியாதைப் போல் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அப்படி பார்த்தால் இராஜபக்சேவும், பொன்சேகாவும் ஆளுக்கொரு துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு போர்களத்தில் இருக்க வேண்டும் அல்லவா. பிரபாகரன ஈழ போராட்டத்தின் தலைவர், போர் உத்திகளை, போர் முறைகளை வகுத்து அதனை வழிநடத்த பயிற்சி கொடுத்துக் கொண்டு நிலமைகளை அனுக்கமாக கவனித்து வரும் தகவல்களை சேகரித்து போர் உத்திகளை மாற்றுவதற்கு பாதுகாப்பான ஒர் இடத்தில் இருந்து கொண்டு அதனை செய்து கொண்டிருப்பார். இவைதான் அனைத்து போராட்டக் குழுவிலும் நடைமுறை.

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் சாலைகள் இருக்கிறதா என்பதே ஐயம் தான். பிரபாகரன் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட செய்திகளில் வீரப்பனை சுடப்பட்டது போல் ஆம்புலன்சில் தப்பிச்செல்ல இருந்த போது சுட்டதாகச் சொல்லுவது பூச் சுற்றப்பட்ட செய்தியாகத்தான் தெரிகிறது. போர் நடக்கும் இந்த 6 மாதத்திற்கும் மேலான காலங்களில் போர்களத்தில் பிரபாகரன் இருப்பது போல் விடுதலை புலிகளும் எந்த படத்தையும் வெளி இடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொண்டால், பிரபாகரன் பற்றிய செய்திகள், திரிக்கப்பட்ட அல்லது உள்நோக்கம் கொண்ட தகவலாகவே தெரிகிறது.

இப்படி செய்வதால் என்ன லாபம் ? பொய்யான கொண்டாட்டத்திற்கு சிங்களர்களை தூண்டி பிறகு உண்மை வெளியே தெரிந்தால் அவமானமாக இருக்காதா ? அது சிறிய அவமானம் தான். ஏனெனில் விடுதலை புலிகளைக் கொல்வதாகச் சாக்கிட்டு ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் அப்பாவி பொதுமக்களை மூன்று நாட்களுக்குள் அழித்ததாக தகவல் கசிவதால் ஐநா அந்த இடங்களை பார்வை இட வேண்டும் என்று இலங்கை அரசை நெருக்குவதால், 'இது இறுதி தாக்குதல், பிரபாகரனை அழிக்க எடுத்த நடவடிக்கை' என்று சொல்லிவிட்டால் போர் குற்றத்தில் இருந்து தப்பிவிடலாம் என்று சிங்கள அரசு கணக்கிட்டு பொய் பரப்புவதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.

அதுமட்டுமல்ல இன்னும் போரைத் தொடர பல்வேறு சிங்களர்களுக்கு ஒப்புதல் இருப்பது போல் தெரியவில்லை. இருபக்கமும் பெரிய உயிரழப்பு ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க முதற்கொண்டு பள்வேறு நாடுகள் சுட்டிக் காட்டும் உள்நாட்டு போர் ஏற்படும் அச்சம் இருப்பதால், போர் முடிந்துவிட்டதாகவும், பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் இனிப்பான செய்தியாக அதை வெளி இடுவதன் மூலம் கலகங்களை தவிர்த்துவிட சிங்கள அரசு நினைத்திருக்கக் கூடும். இதில் இருபக்கமும் புரிந்துணர்வு, பொதுமக்கள் இழப்பையும், கலகங்களையும் கணக்கிட்டு சமரசம் ஏற்பட்டு இருப்பதால் தானோ என்னவோ விடுதலைப் புலிகளும் துப்பாக்கிக்கு ஓய்வு கொடுத்துவிட்டதாக தன்னிச்சையாக அறிவித்திருப்பதாக ஊகிக்க முடிகிறது.

இராஜபக்சே மண்ணை முத்தமிட்டாரா ? கவ்வினாரா ? உண்மைகள் ஒரிரு நாளில் வெளியாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்கிடையே வருகிற 22 ஆம் தேதி ஐநாவின் கண்காணிப்புக் குழு போர் பகுதிக்குள் சென்று பார்வை இட இருக்கிறது.




இந்த வேளையில் சிலர் கருத்து என்ற பேரில் 'இவ்வளவு பேர் இழப்பிற்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதத்தைக் கீழே போடுவதை முன்கூட்டியே செய்திருந்தால் இழப்பை தவிர்த்திருக்கலாமே... ஏன் செய்யவில்லை' என்பது போல் வழக்கமாக விடுதலைப் புலிகள் மீது இருக்கும் வெறுப்பை கருத்தாக வெளியிட்டு ஈழ ஆதரவாளர்களை ஆமாம் சாமி போட வைக்க முடியுமா என்றெல்லாம் முயலுகிறார்கள். இவர்களைப் போல் ஆசாமிகள் நாட்டின் இராணுவத் தலைமையில் இருந்தால் எதிரி நாடு போர் தொடுக்கும் வருவதாக செய்தி வந்தாலே 'பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் ' என்று சாக்கு கூறி வடிவேலு புலிகேசி பாணியில் மக்களை எதிரிநாட்டு இராணுவத்திற்கு விருந்து வைத்துவிட்டு நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள் போலும்.

18 மே, 2009

உறுதிப்படாத தகவல் என்பதால் இடுகை நீக்கப்பட்டது !



உறுதிப்படாத தகவல் என்பதால் இடுகை நீக்கப்பட்டது !

17 மே, 2009

விருந்தில் பாயாசம் வேண்டாம் !

இலங்கை மற்றும் இந்திய அரசியல் வெற்றியைத் தொடர்ந்து தங்களுக்கு கொடுக்கப்படும் விருந்தில் பாயாசம் வேண்டாம் என்று தமிழர் தலைவர்(!), இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்குக் காரணமாக ஏற்கனவே திகட்ட திகட்ட சாப்பிட்ட இனிப்புக்கு பிறகும், உடல் நிலையை கருத்தில் கொண்டும் இனிப்பை தவிர்க்க விரும்புவதாக குறிப்பிட்டார்.

இனிப்பைத் தவிர்த்த தங்கள் தலைவரின் பெரும் தன்மையைப் பாராட்டி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தலைவருக்கு புகழாராம் தெரிவித்து அனுப்பிய தந்தி மலையில் இந்திய தபால் தந்தித்துறை விழிபிதுங்குவதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இழவு வீட்டில் கொட்டுச் சத்தமாம்,
எதிர்த்த வீட்டில் கெட்டி மேளமாம் !

- இந்த பதிவுக்கும் கீழே உள்ள கேஆர்எஸ் பதிவுக்கும் தொடர்பேதும் இல்லை.




"மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!
இது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது!


"ஈழத்தில் போர்முனையில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ள ஐம்பதாயிரம் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்" என்று டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்!

"இதனால் மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு இல்லை என்று பொருளாகி விடாது! அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்" என்று இன்று கூடிய தி.மு. கழக செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறி உள்ளது!

16 மே, 2009

திமுக கூட்டணி வெற்றி குறித்தும்... ஈழத் தமிழர்களுக்கும் !

முடிவுகள் முழுதாக வெளிவராத இன்னிலையில் திமுக கூட்டணி 27 இடங்களையும் அதிமுக கூட்டணி 9 இடங்களையும் பெற்றிருக்கிறது. 40க்கு 40 வெற்றி பெற்ற திமுக அணி இந்த முறை 10 இடங்களை இழந்திருக்கிறது. அதன் பழைய கூட்டணியில் இருந்த பாமகவின் தொகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கிறது. 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்துவிட்டு, திமுகவுடன் ஈகோ யுத்தம் காரணமாக, அணிமாற ஈழத்தமிழர் பிரச்சனையை முன்னிறுத்தி, அணிமாறி கூடுதலாக ஒரு இடம் பெற்று வெற்றி பெறலாம், செல்வாக்கை வளர்க்கலாம் என்ற பாமகவின் நினைப்பில் தமிழக வாக்களர்கள் மண்ணை தூவி உள்ளார்கள். முதல் முறையாக திருமாவளவன் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளார்.

இதை திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றி என்று சொல்வதற்கில்லை. சென்ற முறை பாராளுமன்ற உறுப்பினர்களே இல்லாத அதிமுகவிற்கு, பிரதமர் யார் என்றே முன்னிறுத்த முடியாத நிலையிலும் 10 தொகுதிகள் வரை கிடைத்திருப்பது திமுக கூட்டணியின் செயல்பாடுகளில் அதிருப்தி அலை வீசி இருப்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். வீரவசனம் பேசிய காங்கிரஸ் பெரும் தலைகள் தோல்வியைத் தழுவியது தமிழுணர்வாளர்களுக்கு கிடைத்த வெற்றி. ப.சிதம்பரம் முதலில் தோல்வி என்றார்கள் பிறகு வெற்றி என்றார்கள், என்ன மாய்மாலமோ தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம்.

எதிர்கட்சிகள் திமுக ஆட்சியை தேர்தலுக்கு பிறகு அகற்றுவோம் என்பதை முன்னிறுதி தேர்தலில் பரப்புரை செய்தது அந்த கட்சிகளுக்கு எதிராகவே அமைந்திருக்கிறது, இன்று எதிராக பேசுபவர்கள் தேர்தலுக்கு பிறகு அவர்கள் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார்கள் என்பதை நடுநிலை வாக்காளர்கள் புரிந்து கொண்டு எதிர்கட்சிகளின் திடிர் ஈழ ஆதரவை முன்னிறுத்தி வாக்களிக்காமல் திமுகவிற்கே வாக்களித்துவிட்டனர். அதாவது பாராளுமன்ற தேர்தலில் அளிக்கப் போகும் வாக்கு மூலம் தமிழக அரசை மாற்ற வழி ஏற்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.

இந்த தேர்தலில் திருமா வெற்றி பெற்றிருப்பதை வரவேற்கிறேன். திமுக கூட்டணிக்கு முழுமையான வெற்றி தந்துவிடாத தமிழக வாக்காளர்களைப் போற்றுகிறேன். ஏனெனில் 40க்கு 40 பெற்றிருந்தால் தாம் வைத்ததே சட்டம், தாம் எதைச் செய்தாலும் மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்றே அவர்கள் செயல்படுவார்கள், அது ஓரளவு தடுக்கப்பட்டு இருக்கிறது. திடீர் திடீர் கொள்கை மாற்றம் முழுமையான வெற்றியைத் தந்துவிடாது என்பதை ஜெ - உணர்ந்து கொள்வார்.

தொடக்க காலத்தில் கள்ளவோட்டு, பிறகு கவர்ச்சி மிகு இலவச திட்டங்கள், தற்பொழுதைய ட்ரெண்டாக கரன்சி இரைப்பு ... ஆகியவற்றை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி ஜெனநாயகத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்று பரிணாமம் பெற்றிருக்கும் திராவிட சித்தாந்தம் வாழ்க !வாழ்க !

*****

வாக்கு பதிவு முடிந்த நிலையில் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என்பதை (நேற்றுதான் அறிந்து கொண்டது போல்) குறிப்பிட்டு கருணாநிதி நேற்று மீண்டும் மத்திய அரசை வலியுறுத்த, மீண்டும் தபால் / தந்தி அனுப்பி இருக்கிறார். அரசியல் / தேர்தல் சாணக்கியர் கருணாநிதிக்கு பாராட்டுகள்.

ஈழத்தில் முழுமையாக வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் அரசு - இராஜபக்சே அரசு ஆகியவற்றிற்கும் வாழ்த்துகள் !


*****

நான் முன்பே எழுதியபடி தமிழகத்தில் ஈழ உணர்வை முன்னிலைப்படுத்தி யாரும் வாக்களிக்கவில்லை, காங்கிரஸின் பெரும்தலைகள் பெற்ற தோல்வி திரைத்துறையினர் காங்கிரஸின் தொகுதிகளில் செய்த பிரச்சாரம் மூலம் ஓரளவுதான் சாத்தியப்பட்டு இருக்கிறது. 15 பேர் வரை தீக்குளித்துள்ளார்கள். தமிழக தமிழர்கள் அந்த அளவுக்குத்தான் ஈழத்தமிழர்கள் பற்றிய உணர்வில் செயல்பட்டு இருக்கிறார்கள். மற்றபடி தமிழகத்தில் முழுமையான மாற்றம் என்பதை ஈழத்தமிழர்கள் எதிர்பார்ப்பது வீண். இலங்கைவாழ் தமிழர்களே இலங்கை அரசில் அங்கம் வகித்து தமிழர்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது வேறு நாட்டில் வசிக்கும் தமிழர்கள் வெறும் இன உணர்வு அடிப்படையில் ஓரளவுக்கு உணர்ச்சி காட்டி செயல்படுவதை ஆறுதலாகவே கொள்ள வேண்டும். நாளை மலையாளிகளும், கன்னடர்களும், தெலுங்கர்களும் தமிழக தமிழனை செருப்பால் அடித்து துறத்திவிட்டு தமிழகத்தை ஆக்கிரமித்தால் வரலாற்றில் இத்தகைய நிகழ்வுகள் இயல்பானது என்றே நினைத்து கொண்டு இருந்துவிடுங்கள். ஏற்கனவே தமிழன் கர்நாடகம், மலேசியா ஆகிய நாடுகளில் செருப்படி படும் போது நாங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து பழகி இருக்கிறோம். நீங்கள் தமிழ், தமிழுணர்வு என்றெல்லாம் பெரிய பெரிய எதிர்ப்பையெல்ல்லாம் மூட்டைக் கட்டிவிடுங்கள்.

ஈழத்தில் வீழ்ந்த, கொலை செய்யப்பட்ட, வாழ்வுரிமை இழந்த அன்புத் தமிழர்களே ! இறை நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், இனி எடுக்கும் எந்த பிறவியிலும் ஒரு தமிழனாகவே பிறக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள் !

சீமான், பாரதிராஜா பரப்புரை வெற்றி !

தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் சீமான், பாரதி ராஜாவின் பேச்சு எடுபட்டுள்ளது. காங்கிரசு மத்திய அமைச்சர்கள் அனைவரும் தோல்வியை தழுவும் முகத்தில் இருக்கின்றனர்.

நம்ம செதம்பரம் ஐயா, தங்கபாலு, ஈகேவிஎஸ் இளங்கோவன், அய்யர் அனைவரும் பின்வாசல் வழியாக மந்திரியாகும் முயற்சியில் இறங்க ஆயத்தம்.

40க்கு 40 வாய்ச்சொல்லுக்கு ஆப்பு !

15 மே, 2009

மதமல்ல மார்க்கம் !

மதவாதிகளிடம் புழங்கும் சொற்களில் 'மதமல்ல மார்க்கம்' என்று சொல் பெருவாரியாக புழங்கும் சொற்களில் ஒன்றுதான். எல்லா மதங்களுமே இந்தச் சொல்லை பயன்படுத்திவருகின்றன. இதற்குக் காரணம் மதம் என்ற சொல் 'மதம்' அதாவது வெறிபிடித்த என்ற பொருளில் வழங்கப்படுவதாலும் மத நம்பிக்கையின் இன்றைய நிலையும் அதுதான் என்பதாலும் மதம் பற்றி பரப்புரை செய்யும் புதிய சொல்லாடலாக 'மதமல்ல மார்க்கம்' என்ற சொல் வழங்கப்படுகிறது.

உலகில் எந்த ஒரு மதத்தையும் இறைவன் தோற்றுவித்ததாக வரலாறு கிடையாது, மாறாக மதகுருமார்களால் மதமும் அந்த மதத்திற்கான கடவுள்களும் தோற்றுவிக்கப்பட்டன, இயேசு, மகாவீரர், புத்தர் போன்ற மத குருமார்களையே கடவுளாக்கிய மதங்களும் உண்டு. மதப் பரப்புரைகளின் நோக்கம் பற்றி உண்மையைக் கூர்ந்து பார்த்தால் அவை இன ஆளுமையை முன்னெடுக்கும் ஒரு வழிமுறையாக உள்ளதைக் காணலாம். புனித தலங்களில் நடக்கும் மதச் சடங்குகள் பெரும்பாலும் மதங்கள் தோன்றிய அந்த இனத்தவருக்கே முன்னுரிமை குறித்து செய்யப்பட்டும், பிற இனத்தினருக்கு வழிபாட்டு உரிமை என்ற அளவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார். ஐரோப்பியர் அல்லாதோர் போப் ஆண்டவராக வரமுடியாது, காஃபாவினும் நுழைந்து தொழும் உரிமை அரபு வம்சாவளிகளுக்கே உரியது மற்றவர்கள் அதைச் சுற்றி வெளியே தொழுகை நடத்தலாம். இந்தியாவிலும் பெரிய இந்துக் கோவில்களில் நடத்தப்படும் சடங்குகள், பூசைகள் பார்பனர்களாலேயே நடத்தப்பெறுவதும், பிறருக்கு மறுக்கப்படுவதும் அதற்கு பாதுகாவலாக ஆகமம், நியமம், பரம்பரை என்கிற கட்டுபாடுகளை வைத்திருப்பதைப் பார்க்கிறோம்.

எந்த இனம் எப்போது தோன்றியது என்று இன்று அறுதி இட்டுக் கூறமுடியாத நிலையில், புழக்கத்தில் இருக்கும், வரலாற்றுடன் தொடர்புடைய, காலத்திற்குள் அடங்கும் மதங்களை இறைவன் வடிவமைத்தான் என்று நம்பலாம் ஆனால் அதை வழியுறுத்திச் சொல்வது நகைப்புக்கிடம். அதனை விமர்சனம் செய்ய யாருடைய அனுமதியும் பெற வேண்டியதில்லை.

மதங்கள் எப்போதும் அது தோன்றிய நாடுகளின், இனங்களின் பழக்க வழக்கங்களை, வாழ்வியல் முறைகளை உள்ளடக்கியது. எதோ ஒரு புதிய மதம் வடதுருவத்தில் தோன்றினால் அதைப் பின்பற்றுபவர்கள் குளிர்காரணமாக குளிரைதாங்கும் ஆடைகள் அணிந்திருப்பார்கள், அந்த மதம் ஒருவேளை மற்ற நாடுகளிலும் பரவினால் மத அடையாளமாக அந்த குளிருடையும் சேர்ந்தே மத விதிமுறையாக பரவும். ஆனால் வெப்ப நாடுகளில் அவை பொருத்தமானதா என்று பார்த்தால் அறிவு விதிப்படி பொருத்தமற்றது. அது வடதுருவ மக்களின் அன்றாட உடை என்ற அளவில் இருக்கிறது என்ற அளவில் மட்டுமே பொருந்தும். இது போல் தான் மதங்களில் இருக்கும் மதம் சார்ந்த அடையாளங்கள் அனைத்தும். ஆனால் இவற்றையெல்லாம் இன்றைய காலத்தில் அறிவியலுடன் முடிச்சுப் போட்டு புனிதம் கற்பிக்கப்படுவதுடன், மறைமுகமாகச் சொல்லப்படும் மனித குல மேன்மைக்கான வழிமுறை என்று இட்டுக் கட்டப்படுவதெல்லாம் அறிவீனம்.

"நல்ல வேளை பன்றிக்காய்ச்சலால் எங்கெளுக்கெல்லாம் ஆபத்து இல்லை...ஏனெனில் நாங்கள் பன்றி இறைச்சி உண்பது இல்லை...இதை 1400 வருடங்களுக்கு முன்பே தீர்க்க தரிசனமாக உணர்ந்ததால் குரானில் பன்றி இறைச்சி தடைசெய்யப்பட்டு இருகிறது" என்றார் ஒரு நண்பர்.

"பறவைக்காய்ச்சல், மாடுகளுக்கு வரும் கோமாரி நோய் பற்றி குரானில் முன்னெச்சரிக்கை எதுவும் கொடுத்து தடை செய்யவில்லை. இல்லை என்றால் கோழி பிரியாணியும், மாட்டு இறைச்சியும் உண்ணும் பாக்கியம் கூட உங்களுக்கு கிடைத்திருக்காது' என்று அந்த நண்பருக்கு சொன்னேன்.

"விதண்டாவாதம்" என்றார்.

"அப்ப அதை வெறும் மத நம்பிக்கை, மதக்கட்டுபபாடு என்று சொல்லிவிட்டுப் போங்கள், அதையும் பன்றிக்காய்சலையும் ஏன் தொடர்பு படுத்துகிறீர்கள்...ஐரோப்பியர்களும், சீனர்களுக்கும் முக்கிய உணவே பன்றி தான்...அது இழிவானது என்று சொல்லித் தடுக்கப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்கு வருத்தம் ஏற்படாதா ?" என்றேன்

"உங்க பேச்சில் இந்த்துத்துவா வாசனை அடிக்கிறது" என்றார்

அதுக்கு மேல் அவரிடம் விவாதிக்க நானும் விரும்பவில்லை.

இன்னொரு நண்பர்,

"ஐரோப்பிய கிறித்துவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியர்கள் இன்றும் கோவனத்துடன் தான் இருப்பார்கள்" என்றார்

"ஐயா சாமி, கிறித்து பிறப்பதற்கு முன்பே, உலகின் முதல் பல்கலை கழகம் நாளந்தாவில் நம் இந்தியாவில் தான் தொடங்கப்பட்டது, யுவான் சுவாங் மற்றும் பல சீன மாணவர் வந்து தங்கிப் படித்துச் சென்றார்கள்" என்றேன்

******

மதம் அதன் கொள்கைகள் நல்லவையாகவே இருந்துவிட்டுப் போகட்டம், ஆனால் அதைப் பற்றி பெருமை பேசும் போது மறைமுகமாக பிற மதங்களை மட்டம் தட்டுக்கிறோம் என்ற உணர்வும் பிறர் புண்படுவார்கள் என்று பலரும் நினைப்பதே இல்லை. எந்த ஒரு மதத்திலும் தனிச் சிறப்பு இருக்கும், ஆனால் எந்த ஒரு மதத்திற்கு தனிப் பெருமை என்பது இல்லவே இல்லை. மதமில்லா காலத்தில் வாழ்ந்து இறந்தவர்களை நினைத்துப் பார்த்தால் இன்று இருக்கும் மதம் நாகரீக வளர்ச்சியில், இனத்தைக் காக்க வந்து ஒட்ட வைக்கப்பட்ட ஒன்று என்பது விளங்கும்.

தொடர்புடைய சுட்டி : மதம் - வெறி ?- துவேஷம் ??- அவசரம்??? யாருக்கு???? - லோஷன்

14 மே, 2009

எக்சிட் போல் முடிந்ததும் ...

"தலைவரே 39 தான் கிடைக்கும் னு சொன்ன மாதிரியே..."

"அது போதாதும், ஒண்ணு தானே குறைச்ச போனால் போகுது, இது மாபெரும் வெற்றிதான்"

"அட அதச் சொல்லலை தலைவரே உங்க பையன் +12 ரிசல்டுல கணக்கில் 39 வாங்கி பெயிலாகி இருக்கானாம்"

****

நிருபர் : "சார் உங்க கட்சி இந்த தேர்தலில் பின்னடைஞ்சிருக்கிறதா எக்ஸிட் போல் கணிப்பு சொல்லுதே"

தலைவர் : "அது மூணுமணி நிலவரம், அதுக்கு பிறகுதான் எங்க ஆளுங்க குத்தவே ஆரம்பிச்சாங்க"

நிருபர் : !!!! (கள்ள ஓட்டைச் சொல்றாரோ ?)

****

"நம்ம தலைவர் தான் இந்தியாவிலேயே தேர்தல் முடிந்ததுமே... ரிசல்டு வருவதற்குள் வேகமாக செயல்படுகிறார்..."

"தொகுதி பணிகளுக்கு திட்டம் தீட்டச் சொல்லி வேட்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்கிறாரா ?"

"கூட்டணி மாறிட்டார்"

***

"நம்ம கட்சி எப்படியும் இந்த தேர்தலில் தோத்துடும் போல இருக்கு..."

"என்னய்யா சொல்றே...நம்ம பாரம்பரிய வாக்களர்கள் போட்டாலே ஜெயிச்சிடுவோமே"

"இல்ல தலைவரே...நமக்கு 49 ஓ வில் ஓட்டுப் போடச் சொல்லி எதிர்கட்சிக்காரர்கள் நம்ம கட்சியின் கரைவேட்டியைக் கட்டிக் கொண்டு சென்று பொய் பிரச்சாரம் செய்துட்டாங்க......விழந்தது பூரா 49 ஓ வுக்காம்"

"........!"

***

"இந்த தொகுதியில் நாமதான் செயிப்போம் என்று எப்படி உறுதியாகச் சொல்றிங்க"

"இனிமே எம்பியை தொகுதிப் பக்கம் பார்க்க முடியாதுன்னு தீர்மானம் போட்டு, நம்ம கட்சி வேட்பாளரைக் கண்டு பிடிக்கச் சொல்லி அந்த தொகுதி மக்கள் ஆள்கொணர்வு மனு போட்டு இருக்காங்களாம்"

***

"நம்ம தலைவர் கூட்டணி கட்சி மீது கடுங் கோபமாக இருக்கிறார்"

"ஐயோ என்ன ஆச்சு"

"அவங்க நிற்காத தொகுதிகளில் எதிர்கட்சிகளிடம் கள்ள உறவு வைத்திருந்து அவர்களுக்கு வாக்களித்தது தெரிஞ்சுபோச்சாம்"

திவாலாகும் வாக்கு வங்கிகள் !

வாக்காளனின் தேவை சமூக மாற்றம், நாடு விடுதலைப் பெற்ற பிறகு குறிப்பாக தமிழகத்தில் காங்கிரசு ஆட்சிக்கு மாற்றாக திராவிட சித்தாந்தம் முன்வைக்கப்பட்டது பண்ணையார் முறை தலைமைத்துவமும், காங்கிரசு ஆட்சி அதற்கு ஆதரவாக இருப்பதும் மக்கள் முன் வைக்கப்பட்டது, கல்வி / வேலை வாய்ப்பு / தாய்மொழி / சமத்துவம் ஆகியவற்றை முன்வைத்து திராவிட சித்தாந்தம் திகவில் இருந்து பிரிந்த அரசியல் கட்சியாக திமுக என்னும் கட்சி உருவானது. 10 ஆண்டுக்குள் பெரும் வளர்ச்சி பெற்று காங்கிரசை தமிழக சட்டமன்ற தலைமை ஆக்கிரமிப்பில் இருந்து துறத்தி அடித்தது. பாமரனும் கட்சிப் பதவியையும் அதன் மூலம் அரசு துறைகளை வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததால், திமுக விற்கு பெரும் வரவேற்பும், அதன் மூலம் நேர்மையாளர், எளிமையானவர் என்று சொல்லப்பட்ட காமராசரும் கூட காங்கிரசு என்கிற கட்சியிலேயே தொடர்ந்ததால் தோற்கடிக்கப்பட்டார்.

அண்ணாவிற்கு பிறகு தேர்தல் களம் கண்ட திமுகவில் கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு திமுக உடையவே எம்ஜிஆர் தலைமையில் அதிமுக ஏற்பட்டது. அடுத்த அடுத்த தேர்தலில் திராவிட சித்தாந்தம், திராவிடக் கொள்கைகள் ஆகியவற்றில் நீக்கு போக்கும், நீர்த்து போதலும் இரு கட்சிகளிலுமே ஏற்பட்டது, அதன் காரணமாக காங்கிரஸ் எதோ ஒரு திராவிடக் கட்சிகளில் இணைந்து கூட்டாகவே தேர்தலை சந்தித்து வந்திருக்கிறது. காங்கிரசுக்கு மாற்று என்று மக்கள் முன் முழங்கிய முன்வைக்கப்பட்ட திராவிடக் கட்சி(கள்) காங்கிரசுடனேயே கை கோர்த்து களம் கண்டன. இதில் ஓரளவு சமரசம் ஏற்பட்டாலும் திராவிட மற்றும் காங்கிரசுக்கு தேசிய அறைகூவலாக, பாஜக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வந்தது. வேறு வழியின்றி, திராவிட, காங்கிரசு, கம்யூனிஸ்டுகள் இணைய வேண்டிய காலகட்டத்திற்கு பாஜக இக்கட்சிகளை தள்ளிவிட்டது.

பாஜகவிற்கு எதிர்ப்பு என்பதை மக்கள் முன் தெளிவாக, பயம் கொடுத்து சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு இந்த கட்சிகள் சென்றன. திராவிட - காங்கிரஸ் சித்தாந்த முரண்பாட்டை முழுப்பூசனிக்காயக மறைக்க கிடைத்த இலைச் சோறாக 'மதவாதம்' என்ற சொல்லாடலை மக்கள் முன் வைத்தனர். ஊருக்குள் புதிய திருடன் நுழைந்தால் பழைய திருடர்கள் தொழில் பாதிப்பு அடைவதை உணர்ந்து இணைந்து புதிய திருடனை காட்டிக் கொடுப்பது போல், பாஜக மதவாதக் கட்சி என்று மக்கள் முன் திராவிட, காங்கிரசு, கம்யூனிச (தமிழக கட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்) பயம் காட்டி தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ள முயன்றன. இராசீவ் மரணத்திற்கு பிறகு, காங்கிரசின் நரசிம்ம ராவ் ஆட்சிக்கு பிறகு பாஜக பெரிய வளர்ச்சி பெறவே, மூப்பனாரின் தமாக திமுகவை ஆதரிக்க, எஞ்சி இருந்த சில்லரை காங்கிரசு காரர்கள் அதிமுகவை ஆதரிக்க அந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது, குஜ்ரால் / தேவகவுடா (?) தலைமையில் ஏற்பட்ட மத்திய அரசில் தாமக உட்பட பல உதிரிக்கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன, அதுவும் குறுகிய காலம், பிறகு ஜெ-வின் ஆதரவுடன் பாஜக ஆட்சி ஏற்பட்டு கவிழ்ந்தது.

அதுவரை மதவாத பாஜக என்று கூறிவந்த திமுக, 'பாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல' என்ற ஒரு ஸ்டேட் மெண்ட் கொடுத்துவிட்டு பிஜேபியிடன் கூட்டணி அமைத்து ஆட்சியிலும் 5 ஆண்டுகள் பதவி பெற்றது. பின்னர் பாஜக செல்வாக்கு சரியவே காங்கிரசுடன் இன்று வரை ஒட்டிக் கொண்டு இருக்கிறது. ஜெ காங்கிரசு கூட்டணிக்கு முயன்றார். திமுகவுக்கு - காங்கிரசுக்கும் அப்படி என்ன ஸ்பெக்டரம் பந்தமோ இணை பிரியாமல் தற்போதைய தேர்தல் முடிவு வரை தொடர்கிறார்கள்.

********

இதெல்லாம் எதுக்கு எழுதினேன் ?

அதாவது கட்சி / கொள்கைகள் என்றெல்லாம் எந்த ஒரு கட்சிக்கும் தொண்டர்களாக சேருபவர்கள் அக்கட்சியின் தொடக்க காலத்தில் மட்டுமே, திமுக உடைந்த போது அதிமுகவிற்கு தொண்டர் அளவில் வந்தவர்களும் / அங்கேயே இருந்தவர்களும் அவர்களின் வாரிசுகளில் சிலரும் தான் இன்று வரை அடிப்படட தொண்டர்களாக வாக்கு வங்கியாக தொடர்கிறார்கள். அதிலும் பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற சாதிக் கட்சிகள் தொடங்கப்பட்ட பிறகு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் ஹவாலா அளவுக்கு ஓட்டை விழுந்துவிட்டது.

இவர்களுக்கே இப்படி என்றால் காங்கிரசுக்கு வாக்கு வங்கிகள் என்பது மூப்பனார் காலத்து சில பெருசுகளும், அவர்களின் சொத்துக்களை காக்கும் பேரன்களுமே மிச்சம், புதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் பெரும அளவில் காங்கிரசின் கொள்கை பிடித்து கடந்த முப்பது ஆண்டுக்குள் காங்கிரசுக்கு வந்தவர்கள் என்றால் தமிழகத்தைப் பொறுத்த அளவில் சில ஆயிரங்கள் என்ற அளவில் இருக்கும், மூப்பனாருக்கு பிறகு இளைஞர்கள் காங்கிரசில் சேருவதற்கான எந்த ஒரு கொள்கையோ கவர்ச்சியோ இருந்தது இல்லை. அதிமுக ஜா - ஜெ என்று பிரிந்ததால், அந்த தேர்தலில் தனித்து களம் கண்ட காங்கிரசு 25 சட்ட மன்ற இடங்களைப் பெற்றது. அது நடந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தற்போதைய நிலையில் அதிமுக, திமுகவைத் தவிர எந்த ஒரு கட்சியும், தனித்து நின்றால் ஒரு இடம் பெருவது கூட அரிதே, முதல் முறை என்பதால் வி.காந்து மட்டும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தின் எந்த ஒரு தொகுதியிலும் இருக்கும் வாக்களர்களில் 50 விழுக்காட்டிற்கும் மேல் ஒரே கட்சிக்கு வாக்களிப்பர்கள் இல்லை. அதுவே இன்றைய நிலைமை. கட்சித்தொண்டர்கள் என்று பார்த்தால் அதிமுக, திமுக கட்சிகளுக்கே 10 விழுகாடு இருந்தால் அதுவே மிகுதி, காங்கிரசு ? உங்க அக்கம் பக்கம் வீட்டுக் காரங்க அல்லது தெருவில் எத்தனை காங்கிரசு காரர்கள் என்று தேடிப்பாருங்க விரல் விட்டே எண்ணிவிடலாம்.

பாமகவை மட்டுமல்ல, காங்கிரசையும் திமுக, அதிமுக கட்சிகள் முதுகில் ஏற்றிக் கொள்ளவில்லை என்றால் தமிழகத்தில் காங்கிரசும் காணாமல் போகும். தமிழகத்தில் காங்கிரசுக்கு உயிர் தண்ணீர் ஊற்றிவருபவர்கள் திராவிடக் கட்சியினர் தான். திராவிடக் கட்சிகளுகே தமிழகத்தில் வாக்கு வங்கிகள் சிறுசேமிப்பு திட்டம் போல் பிழைப்பை ஓட்டி வருகின்றன. இதில் காங்கிரசுக்கு வாக்கு வங்கி ? எங்காவது குக்கிராமத்தில் இருந்தால் உண்டு :)

சோற்றுக்கே வழி இல்லாமல், அடிமைப்பட்டால் தான் பெரும் புரட்சி ஏற்பட வேண்டும் சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வாக்காளர்கள் அனைவருமே ஒன்று போல் சிந்தித்து வாக்களிப்பாளர்கள், அப்படி பட்ட நிலையில் மக்கள் நிலை இல்லை. தங்களுக்கு பெரிய அளவில் வாக்குவங்கிகள் இருப்பதாக அரசியல் கட்சிகள் சொல்வது ஏமாற்ற வேலை, இன்றை ஓட்டுக்கள் அனைத்துமே நோட்டுகளாலும், சாதி, மதத் தலைமையினாலும், சில நடுநிலையாளர்களின் ஊழல் எதிர்ப்பு என முவ்வகையில் தீர்மாணிக்கபடுகின்றன. பெரும்பான்மை சாதியினர் இருக்கும் ஊர்களில் சிறுபான்மையினரைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்கும் நிலைக்கு எந்த ஒரு பெரிய கட்சிகளும் தயாராக இல்லை, ரிஸ்க் எடுப்பதும் இல்லை.

தற்போதும், எப்போதும் அனைத்து கட்சிகளுமே, தேர்தலில் பணத்தில் விளையாடுவதும், கூட்டங்களுக்கு லாரிகளில் ஏற்றிச் செல்வதுடன், மூன்று வேளை உணவுடன், பிரியாணி கொடுத்து, நாள் ஊதியம் கொடுத்து மக்களை அழைத்துச் செல்வதிலிருந்தும், முடிந்த அளவு மாபெரும் கூட்டணி என்று காட்ட முயல்வதிலிருந்தே வாக்கு வங்கிகள் திவாலாகி வருவது கண்கூடு.

13 மே, 2009

மாடாக உழைக்கும் இந்த பிள்ளைக்கு ஓட்டுப் போடக் கூடாதா ?




யப்பா பதிவர் சஞ்செய், தம்பி ராகுலுக்கு கூலி கிடைச்சுதான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க, கிடைக்கலைன்னா போட்டுக் கொடுப்போம். :)

வேர்த்து விறுவிறுத்து பயபுள்ள எப்படி உழைக்குது, பார்க்கிறவங்களுக்கு ரத்த கண்ணீரே வந்துடும் போல.

குறிப்பு: மின் அஞ்சலில் வந்தப்படம்

40 க்கு 40 ! :)

கற்பனைக்கு காசா / பணமா ? எக்சிட் போல் காத்திருப்பில்......சும்மா டைம் பாஸ்,

*******

மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேமுதிக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து பெரு மகிழ்ச்சி தெரிவித்த விஜயகாந்த், மனைவி பிரமலதா விஜயகாந்தின் அனுமதி பெற்று "இது மக்களுக்கு கிடைத்த வெற்றி, கடவுளுக்கு கிடைத்த வெற்றி, இனி பாகிஸ்தான் பார்டரை தாண்டி ஒரு தீவிரவாதியும் வரமுடியாது"
(எல்லையில் அகழி வெட்டுவாங்களோ ?)

மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து மற்றற்ற மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி, "மீண்டும் வெற்றிக்கனியை பெற்றுத்தந்த தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன், சூழ்ச்சிக்காரர்கள் பேச்சற்று வீழ்ந்துவிட்டார்கள், ஏச்சுக்காரர்கள் மூச்சற்று சாய்ந்துவிட்டார்கள், கூச்சல்காரர்கள் ஓய்ந்து மாய்ந்துவிட்டார்கள், இனி தமிழக ஏழைகளுக்கு போனசாக 50 ரூபாய் மளிகை சாமான்களுடன் ஒரு மாதத்திற்கு தேவையான குழந்தைகளுக்கான குச்சிமிட்டாய்களையும் இலவசமாகத் தருவோம்"
(ஆரம்பிச்சிட்டாங்கய்யா)

மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது, இது குறித்து கருத்து தெரிவித்த செல்வி ஜெயலலிதா, "என்னுடைய தலைமைக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல,கருணாநிதியின் சிறுபான்மை மக்கள் விரோத ஆட்சிக்கு எதிரான வெற்றி, இதை தனது ஆட்சியின் தோல்வியாக ஏற்றுக் கொண்டு கருணாநிதி பதவியையும் ஆட்சியையும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும், அதிமுக தலைமைக்கு துணை பிரதமர் பதவி கொடுக்கும் தேசிய கட்சிக்கே அதிமுக பிரதமர் வாக்கெடுப்புக்கு ஆதரவு கொடுக்கும்... அந்த வகையில் காங்கிரசுக்கு..."
(அடக் கொடுமையே ! )

மே 16 : நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி - சமக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது,
(போட்டி இட்டதே 30க்கும் குறைவான இடம் தானே ? இவங்க 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மற்ற 10 இடங்களில் வெற்றிப் பெற்றவர்கள் இவங்க கூட்டணியை ஆதரிக்கப் போறாங்களாம் அதான்)

இது குறித்து சபதம் மேற்கொண்ட இல.கனேசன், "போலி மதச்சார்பின்மை தோற்றுவிட்டது, ஹிந்து தேசிய உணர்வு வெற்றி பெற்றுவிட்டது, அத்வானிஜி தலைமையில் அகண்ட பாரத வல்லரசை உருவாக்குவோம். என்றார்
(கிழிஞ்சிடும் !வல் அரசு வாழ்க !)

12 மே, 2009

ஈழம் - வாக்களிப்பில் பெரிதாக மாற்றம் ஏற்படுத்தாது !

கடந்த 10 நாட்கள் தமிழகத்தில் இருந்த போது கண்ட உண்மை இது. வலைப்பதிவில் ஈழம் தேர்தலில் ஒலிக்கும் என்று காரசாரமாகப் பேசுகிறோம். ஆனால் சரியான திட்டமிடல் மூலம் ஈழப் பிரச்சனை தேர்தலில் ஒலிக்க வண்ணம் வெற்றிகரமாக தவிர்க்க முடியும் என்பதை திமுக கழக கூட்டணிக் கட்சிகள் சாதித்து இருக்கின்றன. தொடக்கம் முதலே ஈழம் பற்றிய விழிப்புணர்வு பேச்சாளர்களை சிறையில் தள்ளி தேர்தல் வரையில் ஈழம் தொடர்பான செய்திகள் மக்களை எட்டா வண்ணம் மிகுந்த கவனம் எடுத்து கையாளப்பட்டு இருக்கிறது. ஊடகங்கள் பெரும்பாண்மை ஆளும் கட்சி சார்பிலும், ஈழப் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இருந்ததால் சீமான் போன்றோரின் பேச்சுகள் ஒரு சில தொலைகாட்சிச் சானல் தவிர்த்தும், நேரடியாக கேட்ட மக்களைத் தவிர்த்தும் ஈழப் பிரச்சனை மக்களிடம் கொண்டு செல்லப்படவே இல்லை. ஏன் கொண்டு செல்ல வில்லை என்பதற்கான காரணம் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை.

எங்கள் தெருவில் இருந்த வாக்களிக்கும் சிலரிடம் கேட்ட பொழுது, 'ஈழத்தில் சண்டை நடப்பதாக கேள்விப்பட்டேன்' என்ற அளவில் தான் சொன்னார்கள். வாக்கு யாருக்கு என்று கேட்ட போது, திமுக கூட்டணிக்கு மாற்றாக வாக்களிக்கப் போவதாகவும், அதற்குக் காரணமாக ஜெவின் பேச்சைக் குறிப்பிட்டார்கள், அதாவது திமுக ஊழல் செய்துவிட்டதாகவும், ரவுடிகள் மிகுந்துவிட்டதாகவும், விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும், மின் வெட்டையும் குறிப்பிட்டனர்.

தேநீர் கடையில் இருவர் பேசிக் கொண்டதில், 'சீமான் பேசினதைக் கேட்டிங்களா, மனுசன் அழறான், கேக்க பாவமாக இருக்கு, நான் இந்த முறை அதிமுகவுக்கு ஓட்டுப் போடப் போறேன்' என்றார்கள். மற்றபடி ஈழம் தொடர்பில் திமுக - காங்கிரசு கூட்டணிக்கு எதிர்ப்பு ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை இல்லாமலேயே ஆட்சி முறை, வாரிசு அரசியல் இதைக் காரணம் சொல்லி அதிமுகவிற்கு வாக்களிக்கப் போவதாக சொல்பவர்களே மிகுதி.

திமுக கட்சிக்காரர்களைப் பொருத்த அளவில் எதைச் சொல்லி பரப்புரை செய்வது என்பதில் தெளிவற்று இருப்பதால், சன் டிவி உட்பட ஆளும்கட்சி மீடியாக்கள் ஜெ வின் பழைய ஆட்சியில் நடந்த வற்றை 'ஞாபகம் வருதே' என்ற பாடல் பின்னனியில் காட்டுவதில் இருந்தே, சாதனை என்று எதையுமே மக்களிடம் கொண்டு செல்ல இவர்களிடம் எதுவுமே இல்லையா ? என்றே எண்ண வைக்கிறது. 3 ஆண்டு மானிலத்திலும், 5 ஆண்டு நடுவன் அரசிலும் இடம் பிடித்த கூட்டணி 'ஜெ வின் ஆட்சியை நினைவு படுத்தி மக்களை பயமுறுத்தி வாக்கு பெற முடியும் என்று நம்புவதைப் பார்க்கும் போது அந்த கூட்டணி தங்கள் செயல்பாடுகளில் நம்பிக்கை இழந்திருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது, அந்தோ பரிதாபம் !!!

தேர்தலுக்கு பிறகு அதிமுக காங்கிரசை ஆதரிக்கும் என்று யார் கிளப்பிவிட்டார்கள் என்றே தெரியவில்லை. திமுகவினரிடம் பேசும் போது அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் அப்படி பரப்பப்பட்ட செய்தி திமுகவினருக்கு பாதகமாகவே அமைந்திருக்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கும் வாக்களியுங்கள் என்று வெளிப்படையாக சொல்ல முடியாமல் திணறுகின்றனர். இதனால் கூட்டணி வெற்றி என்ற அளவில் அப்படி பரப்பப்பட்ட செய்தி திமுகவைப் பொறுத்தவரை பின்னடைவே. இராச தந்திரம் என்ற பெயரில் இப்படி எதையாவது அபத்தமாக செய்வது திமுகவிற்கு வாடிக்கை தான். பலமுறை ஆட்சியை இழந்ததற்கும், கூட்டணிக்குள்ளே இழுபறி ஏற்பட்டதற்கும் காரணமே இத்தகைய மட்டமான இராச தந்திரமே காரணமாக அமைந்திருக்கிறது.

ஈழம் பற்றிய பாதிப்பு இந்த தேர்த்தலில் 10 விழுக்காட்டிற்கும் குறைவே என்பது களத்தில் பார்க்கும் போது தெரிந்த கண் கூடு. அதற்குக் காரணம் மீடியாக்கள் வழியாக அந்த செய்திகளை எடுத்துச் செல்லாமலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்தியாக வலிந்து சொல்ல முயன்றதே. ஜெ பிரச்சாரத்தின் போது ஓரளவு ஈழம், தமிழ் மக்கள் கொல்லப்படுவது, தனி ஈழம் தீர்வு பற்றிப் பேசினார். இரட்டை இலை வாக்கு வங்கிக்கு அந்த தகவல் வெறும் தகவல் தான். மற்றபடி தமிழ் உணர்வாளர்களை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும், ஆனால் விழுக்காட்டு அளவில் தமிழ் இன உணர்வாளர்கள் வாக்காளர்களில் குறைவே. நடுநிலை வாக்காளர்கள் ஈழம் தொடர்பில்லாமலேயே மின்சாரம் மற்றும் பல பிரச்சனைகள் தொடர்பில் திமுக கூட்டணிக்கு எதிராகவே திரும்பி இருக்கின்றனர்.

அதிமுக கூட்டணி 29 இடங்களும்,

திமுக கூட்டணி 11 இடங்களும் பெரும்,

ப.சிதம்பரம் தோற்கடிக்கப்படுவார் என்றும் சொல்கிறார்கள்

11 மே, 2009

Good Touch ... MM அப்துல்லா !

இந்த முறை ஊர் திருவிழாவிற்காக நாகை சென்று (அது பற்றி தனி இடுகைகள் வரும்) சிங்கை திரும்பும் முதல் நாள் (நேற்று) தம்பி அப்துல்லாவை எதிர்நோக்கும் வாய்ப்புக் கிடைத்தது, 'அண்ணன் எங்கே இருக்கிங்கன்னு சொல்லுங்க' நானே வந்து அழைச்சிட்டுப் போகிறேன்' என்றார். சென்ற முறை சென்னையில் அவரை பார்க்க நேரமில்லாமல் போனதால் இந்த முறை நான் தமிழகம் வருவதை அறிந்த தம்பி என்னை பார்க்க ஆவல் கொண்டிருந்தார். அடிக்கிற வெயில் அத்தனையும் மேலே படும் நேரம் சரியாக காலை 11 மணி வாக்கில் அடையார் மலர் மருத்துவமனை அருகில் காத்திருந்தேன். அவரது சிற்றுந்தில் வந்து அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். சென்னை செல்லும் பதிவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அருமையான இடம் தம்பியின் இல்லம். சாப்பாடு, போக்குவரத்து தம்பியே கவனித்துக் கொள்வார் :).



தம்பி அப்துல்லா முதன் முதலாக இசை இயக்குனர் பரத்வாஜின் பின்னனி இசையில் பாடிய பாடலை நடனத்துடன் அமைந்த காட்சியை எனக்கு போட்டுக் காண்பித்தார். அதைப் பார்த்த முதல் பதிவர் என்கிற பெருமை எனக்கே. துள்ளிசைப் பாடல், நல்ல ஏற்ற இறக்கத்துடன் அருமையாக பாடி இருந்தார். தம்பி இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நாள்கள் வெகு தொலைவில் இல்லை. நல்ல குரல் வளம். ஓரளவு இசை அறிவு பெற்றதன் பின்னனி குறித்தும் என்னிடம் தகவல் பகிர்ந்து கொண்டார். எனக்கு பெரு மகிழ்ச்சியாக இருந்தது. கட்டியணைத்து பாராட்டுத் தெரிவித்தேன். தலைப்பு வந்துச்சா ? :)





தம்பியின் வீட்டில் சிறிது நேர ஓய்விக்கிற்கு பிறகு மதிய உணவருந்த டிடிகே சாலை சரவணபவனுக்கு அழைத்துச் சென்று செமத்தியாக கவனித்தார். போகும் வழியிலேயே மாலை மருத்துவர்கள் ஷாலினி மற்றும் ருத்ரன் ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சியும் அதில் பதிவர்கள் கலந்து கொள்ளும் தகவலையும் சொன்னார். அன்று மாலை இருந்த வேலைகளை தள்ளி வைத்துவிட்டு வருவதாகச் சொன்னேன். பிறகு என் விருப்பத்தின்படி தி.நகரில் மதியம் 3 மணிக்கு இறக்கிவிட்டுவிட்டு விடைபெற்றார்.



மாலை சரியாக 4:45க்கு பதிவர் பத்ரி அண்ணனின் கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடிக்குச் சென்றேன். பெரும் கூட்டம். நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்றார்கள். லக்கி, அதிஷா, அக்னி லுக், கேபிள், பயணங்கள் மருத்துவர், பழைய தாமிரா, கார்க்கி, பைத்தியக்காரன், பத்ரி, டோண்டு இராகவன், நர்சிம் மற்றும் பலர் மற்றும் நம்ம செல்லப் பதிவர் குழந்தை பாரதி ஆகியோருடன் சிறு அளவளாவ வாய்ப்புக் கிட்டியது.


எதிர்பாராமல் மருத்துவர் ஷாலினி மற்றும் மருத்துவர் ருத்ரன் ஆகியோரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பயனாகவும், பதிவர்களை சந்தித்தது மகிழ்ச்சியாகவும் அமைந்தது.


எனக்கு மருத்துவர் ருத்ரனை நல்லா தெரியும்...ஆனால் அவருக்குத்தான் என்னை தெரியாது :)

வாய்ப்பு வழங்கிய தம்பி அப்துல்லாவிற்கும், பார்த்து உரையாடிய, கைக்குலுக்கிய அனைத்து பதிவர்களுக்கும் நன்றி





டோண்டு இராகவன் குறிப்பு எடுக்கிறார்


சொன்னா கேப்போம்ல...அதுக்காக கையையா ஓங்குறது ?


யாராவது பாலியல் ஜோக் அடித்திருப்பார்களா ?


நர்சிம் வெக்கப்பட்டா ...? அழகாகத்தான் இருக்கிறார் ! வெக்கப்படாதிங்க பாஸ் !


அக்னி பார்வை: கத்திரி வெயில்....ஸ்ஸ்....நிஜமாவே கண்ணைக் கட்டுதே !




எப்பதான் முடியும் ? இருங்கய்யா....இன்னும் 5 நிமிடத்தில் கூட்டம் முடிந்துடும் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்