பின்பற்றுபவர்கள்

திருநங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 மே, 2012

மேம்பட்டுவரும் திருநங்கைகள் சமூகம் !


ஆனந்த விகடன் வலைபாயுதே பகுதியில் எனது வலைப்பதிவு பற்றி குறிப்பிட்டு இருந்த போது திருநங்கைகள் குறித்து நான் எழுதி இருந்ததன் வரிகள் இடம் பெற்றிருந்தன.  

"உலக முன்மாதிரியாக தமிழக கிறிஸ்தவர்கள் திருநங்கை ஒருவரை ஆயராக ஆக்கியுள்ளனர், திருநங்கைகளை அர்சகராக ஆக்குவதால் ஏற்கனவே கூந்தல் உள்ளவர்கள் என்ற முறையில் அப்பணிக்கு கொண்டை போட்டுக் கொள்வது எளிது மேலும் ஆண் அர்சகரைப் போன்று மேலாடை இல்லாத அரைமனிதனாக வலம் வந்து அருவெறுப்பை ஏற்படுத்தாமல் இருப்பார்கள், மூன்று நாள் வீட்டு விலக்கு மாதவிலக்கெல்லஅம் அவர்களுக்கு கிடையாது என்பதால் இந்துமதம் சொல்லும் தூய்மைக் கேடும் ஏற்படாது, பார்பன அர்சகர்கள் இதனை எதிர்த்தாலும் பிற கோவில்களில் பூசாரிகளாக அவர்களை பணிக்கலாம், எந்த ஒரு ஆகமவிதிகளிலும் திருநங்கை அர்சகராகும் / பூசாரி ஆவதை தடுக்கும் கட்டுப்பாடுகள் கிடையாது என்றே நினைக்கிறேன். நாயகிபாவம் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் இந்து மத வழக்கங்களில் ஆண் கடவுளை கணவனாக நினைத்து உருகும் முக்தி தேடும் வழிகள் இருக்கிறதாம், அவற்றைச் செய்ய சரியானவர்கள் திருநங்கைகள் தான்"

கூத்தாண்டவர் திருவிழாவில் கூடும் திருநங்கைகளை கேலிப் பொருளாக பார்த்துவரவும், அவர்களிடம் சில்மிசம் செய்யவும் செல்வோர்கள் அதிகம். இத்தகைய அவமான அங்கீகாரம் தவிர இந்து மதம் சார்பில் திருநங்கைகளுக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

திருநங்கைகள் குறித்த பல்வேறு தரப்பினர்கள் கூறும் கருத்துகள் கவனமாக படிக்கப்படுகிறது என்பதைத்தான் ஆனந்தவிகடனில் அந்த தகவல் இடம் பெற்றிருந்த போது தெரியவந்தது. பாதிரியார் ஆன திருநங்கை யார் அவர் பெயர் என்ன, எந்த சூழலில் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது  போன்ற தகவல்கள் அந்தப் பதிவை  எழுதும் போது எனக்கு கிடைக்கவில்லை, நேற்று விஜய் தொலைகாட்சியில் 'குற்றமும் பின்னனியும்' என்ற நிகழ்சியின் இரண்டாம் பாகமாக பாதிரியார் ஆன திருநங்கையைப் பற்றீய தகவல்களை, அவரது பேட்டியுடன் கொடுத்தனர், இவற்றைக் காட்டவேண்டிய நிகழ்ச்சியின் பெயர் சற்று உறுத்தல் என்பது தவிர்த்து, அது பலரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி என்பதால் அதில் அந்தத் தகவல் வந்திருந்தது பலரை அடைந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 'பாரதி ராஜா' என்ற பெயரில் ஆண் குழந்தையாகப் பிறந்து வழக்கம் போல் திருநங்கைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளால் தன்னை ஒரு பெண்ணாக நினைக்கத் துவங்கி பல்வேறு சிக்கல்கள், குடும்பத்தினரின் வெறுப்பு, கோபம் ஆகியவற்றை எதிர்நோக்கத் திறன் இல்லாமல் சென்னைக்கு வந்து பிற திருநங்கைகளுடன் சேர்ந்து கடை கேட்கும் (கை தட்டி பிச்சை எடுத்தல்) செய்து வந்தாராம், அதில் ஏற்பட்ட அவமானங்கள் 'எவ்வளவு பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்த எனக்கு இவ்வளவு அவமானமா ?' கூனிக் குறுகி தத்தளிக்கும் போது, சமூக ஆர்வலர் மூலமாக ஒரு கன்னியாஸ்திரி அறிமுகமாக அவர் வழியாக கிறிஸ்துவ சமய்ப் படிப்பைப் மதுரையில் தங்கிப் படித்துவிட்டு. அவரின் பரிந்துரையின் மூலமாக செங்கல்பட்டு கிறிஸ்துவ சமய ஆயர் என்னும் பதவியைப் பெற்று இறைப் பணி செய்துவருகிறார்.

நேற்று அவர் பேட்டியைப் பார்க்கும் போது அவருடைய கண்ணில் அதன் பெருமிதம் தெரிந்தது, மறைவாக பாலியல் தொழில் அதில் அடி உதை, பொய் வழக்கு, பாலியல் நோய், கடன், கொலைகள் என்பதாகத்தான் அவரைப் போன்ற மற்ற திருநங்கைகளின் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது என்பதைப் நினைக்க அவரது பெருமிதத்தின் மீதான பொருள் ஆழமாக விளங்கியது.

பாரதி பாதிரியாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் பாரதியை ஒரு பெண்ணாகவும், மதபோதகராகவும் பார்த்து மிகவும் மரியாதையாகவே நடத்துகின்றனர் என்பதையும் நிகழ்ச்சியில் காட்டினார்கள், 'என் தம்பி தனது திருமணத்திற்கு வரக்கூடாது என்று கூறினான், ஆனால் இன்றோ என் தலைமையில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன, இது எனக்கும் திருநங்கைகள் சமுகத்திற்கும் பெருமையானது' என்று கூறினார் பாரதி.

ஆண் உடல் வலிவும் பெண் மனமும் இருப்பதால் அவர்களால் பண்பாட்டு கலைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும். ஆனால் சமூகம் தான் அவர்களை பாலியல் தொழிலில் தள்ளிவிட்டு தொடர்ந்து அவமானமும் படுத்துகிறது. ஆண் பெண் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் இவர்களால் செய்ய முடியும், தலைமை ஏற்கவும் முடியும். அவர்களை செயல்படவிடாமல் முடக்கி வைத்திருப்பது அவர்களுடைய பெற்றோர்களும், பின்னர் சமூகமும் தான். பாரதி மூலமாக திருநங்கைகளுக்கு தன்னம்பிக்கையும், பொதுமக்களுக்கு மாற்றுப் பார்வையும், அவர்களை சமூகத்தின் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையும் வாய்க்கும் என்றே தெரிகிறது, இது ஒரு நல்ல முன்னோட்டம். ஆனால் இதையும் மதப் பிரச்சாரத்திற்கு திருநங்கையை வளைத்த கிறிஸ்துவம் என்று தூற்றி அவர்களை இழிவுப்படுத்தத் தான் முயல்வர். ஏனென்றால் மதவெறி மனிதாபிமானங்களை என்றுமே மதித்தது இல்லை, இதைவீடக் கொடுமையானது இஸ்லாமிய சமூகம் திருநங்கைகள் முற்றிலுமாகவே நிராகரிக்கிறார்கள், வெறும் நம்பிக்கை தான் என்றாலும் ஆதாம் ஏவாள் இல்லாமல் தனித்து உருவாக்கப்பட்டது அவனுள் சரிபாதி பெண்மை இருந்தது, திருநங்கையாக இருந்தான் என்றாவது ஒப்புக் கொண்டால் திருநங்கைகள் பற்றிய தெளிவாவது கிடைக்கும். சிந்திப்பவர்களுக்கு இதில் நல் அத்தாட்சி இருக்கிறது என்று கூறி இதை நான் மத அரசியலாகத் தொடரவிரும்பவில்லை, 

தகவலின் சாரம் திருநங்கைகளை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை மனிதனாக மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதே, அவர்கள் முன்னேற்றம் தொடர்வது சமூகம் தன்னை மாற்றிக் கொண்டு இருப்பதன் அடையாளமாகத் தெரிகிறது. ஆஷா பாரதி, நர்தகி நட்ராஜ், லிவிங்க் ஸ்மைல் வித்யா, சிஙகப்பூரில் ஒரு குமார், இப்படிக்கு ரோஸ் என்று திருநங்கைகள் பிரபலங்களாக வளர்ந்துவருகிறார்கள், அவர்களுக்கு மகுடம் வைத்தது போல் பாதிரியாராக பாரதி. தமிழ் சமூகம் நாட்டிலேயே முன்னோடியாக திருநங்கைகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திருப்பதால் பண்பாட்டு வளர்ச்சியில் நாம் முன்னோடி என்பது நமக்கு பெருமையானது. நல்வாழ்த்துகள்


6 பிப்ரவரி, 2012

திருநங்கைகள் அர்சகர் ஆக்கப்பட வேண்டும் !

பிறப்பு வழி குறைபாடுகளுக்கு மருத்துவம் முழுமையான தொரு தீர்வை எட்டாத நிலையில் அக்குறைபாடு உடையவர்களை சமூகம் கிண்டல் கேலி செய்யாது ஏற்றுக் கொளல் வேண்டும் என்பதே பொதுவான புரிதல். 'திருநங்கைகள் என்று யாரும் கிடையாது அவர்கள் பெண்களாக தன்னைத் தானே நினைத்துக் கொள்ளும் திமிர்பிடித்த ஆண்கள்' என்று கூறும் ம(ந்)த அறைகுறைகளின் கருத்துகளை நான் நிராகரிக்கிறேன், இந்த ம(ந்)தவாதிகள் உடலியல் குறைபாடுகள் அனைத்திற்கும் மருத்துவ தீர்வு எட்டப்படதா நிலையில் வெறும் பழைமை ம(ந்)தவாத அடிப்படையில் மருத்துவம் தீர்வு சொல்லியதாக நினைத்துக் கொண்டு அவ்விதக் கருத்துகளை பரப்புகின்றனர். உதாரணத்திற்கு ஆண் பெண் என முழு உடல் தகுதி பெற்ற தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காமல் இருக்க பிறப்பிலேயே கர்ப்பை அல்லது முட்டை உற்பத்தியின்மை அல்லது ஆணுக்கு விந்தனு குறைபாடு ஆகிய ஒன்று தான். இவற்றிற்கான தீர்வுகளை மருத்துவ உலகம் இன்னும் கண்டுபிடிக்காத சூழலில் குழந்தை வேண்டிய அந்தம்பதியினருக்கு மாற்றுத் தீர்வு தத்தெடுத்துக் கொள்ளுதல் தான், இதற்கு விருப்பமில்லாதவர்களை தூற்றுவது அறிவின்மை மட்டுமின்றி அவர்களின் குறை அவர்களுடையது அல்ல அது தீர்க்கப்படாத அல்லது தீர்க்க முடியாத பிறப்பு வழி குறைப்பாடு. திருநங்கைகளின் உடலியல் / மனநிலை / உளவியல் அடிப்படையகளை புரிந்து கொள்ளாதவர்கள் ம(ந்)த வாதிகள் மட்டுமே, இது போன்ற மனித சமூக நல எதிர்ப்பு ம(ந்)த வாத கருத்துகளால் சமூகம் என்றைக்குமே பயன்பெற்றதில்லை என்பதால் அவற்றை புறந்தள்ளிவிட்டு இருக்கின்ற குறைகளை ஏற்றுக் கொள்வதற்கு அல்லது சரி செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

**********

உலக முன்மாதிரியாக தமிழக கிறிஸ்தவர்கள் திருநங்கை ஒருவரை ஆயராக ஆக்கியுள்ளனர் (நியமனம்), இது உண்மையில் பாராட்டக் கூடியதும் தமிழ் நாடு இதற்கு முன்னோடியாக இருப்பதற்கு தமிழர்கள் என்ற வகையில் பெருமைப் படக் கூடிய ஒன்றாகும். இதை வெறும் மதமாற்றச் செயலுக்கான மாற்று உத்தி என்று பார்க்காமல் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு என்ற வகையில் பார்க்கிறேன், கிறிஸ்துவர்கள் கனிசமான அளவில் இருக்கும் திருநங்கைகளை மதம் மாற்றுவதன் மூலம் அவர்களின் மக்கள் தொகையை உயர்த்திக் கொண்டு கனிசமான அளவு வெளிநாட்டு நிதிகளையும் பெற்றுக் கொள்வர் என்கிற மாற்றுக் கருத்து உள்ளவர்கள், அதையே ஏன் இந்து மதத்தினருக்கும் பரிந்துரைக்கக் கூடாது, அவ்வாறு சொல்லுவதற்கான தெளிந்த மனநிலையையில் இருந்தால் திருநங்கையின் ஆயர் நியமனம் கிறித்துவ மிசனரி நடவடிக்கை என்று கூறலாம்.

திருநங்கைகளை அர்சகர் ஆக்கினால் கிடைக்கும் நன்மைகளில் முக்கியமானது

1. பெண்களுக்கு அவர்களால் எந்த வித பாலியல் ரீதியான வன்முறைகள் நடக்காது ( உதாரணம் தேவ நாதன்)
2. பெருமைப் படக் கூடிய வேலை என்பதால் கண்டிப்பாக அவர்களைப் போன்றவர்கள் பாலியல் தொழில் இருந்து திரும்புவர் அல்லது அவ்வாறு செய்வது ஒடுமொத்த திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் செயல் என்று மாற்று வேலைக்கு அவர்கள் செல்லவும் அவர்களுக்கு வேலை வழங்கும் சூழலும் ஏற்படும்
3. இயல்பாக நளினமானவர்கள் என்பதால் கோவில்களின் பரத கலை மற்றும் பிற ஆடல்கலைகளை அவர்கள் நன்கு பயின்று அவற்றையும் வாழவைப்பார்கள்
4. பெண்களின் குணம் அவர்களுக்கு இருப்பதால் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வர்

கூத்தாண்டவர் விழாவில் ஒருநாள் தாலி கொடுத்து அதைப் பின் அறுத்து எறிய அன்று கேட்கும் அவர்களின் கூக்குரலின், ஓலங்களில் ஒப்பாறியில் அவர்களின் ஒட்டு மொத்தமாக அவர்களின் கடந்த கால வேதனைகளை தீர்த்துக் கொண்டதாக இந்து மதத்தினர் நினைக்கின்றனர். அவை கொஞ்சம் உண்மை தான் என்றாலும் அவர்களின் இழி நிலை மாறி சமூகத்தில் தன்னையும் ஒருவராக இன்றி அமையாதவராக ஆக்குவதன் மூலம் தான் அச்சமூகம் நல்ல நிலையை எட்ட முடியும், இன்றைய தேதியில் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்பரவல்களில் திருநங்கைகளின் கைங்கர்யம் கனிசமாக உண்டு என்றாலும அவர்கள் வேறு வழியின்றி அல்லது வாழுதல் கட்டாயத்தின் பேரில் அங்கு துறத்தப்படுகின்றனர். அல்லது சமூக எதிரிகளால் அங்கு தள்ளிவிடப்படுகின்றனர்.

திருநங்கைகளை அர்சகராக ஆக்குவதால் ஏற்கனவே கூந்தல் உள்ளவர்கள் என்ற முறையில் அப்பணிக்கு கொண்டை போட்டுக் கொள்வது எளிது மேலும் ஆண் அர்சகரைப் போன்று மேலாடை இல்லாத அரைமனிதனாக வலம் வந்து அருவெறுப்பை ஏற்படுத்தாமல் இருப்பார்கள், மூன்று நாள் வீட்டு விலக்கு மாதவிலக்கெல்லஅம் அவர்களுக்கு கிடையாது என்பதால் இந்துமதம் சொல்லும் தூய்மைக் கேடும் ஏற்படாது, பார்பன அர்சகர்கள் இதனை எதிர்த்தாலும் பிற கோவில்களில் பூசாரிகளாக அவர்களை பணிக்கலாம், எந்த ஒரு ஆகமவிதிகளிலும் திருநங்கை அர்சகராகும் / பூசாரி ஆவதை தடுக்கும் கட்டுப்பாடுகள் கிடையாது என்றே நினைக்கிறேன். நாயகிபாவம் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் இந்து மத வழக்கங்களில் ஆண் கடவுளை கணவனாக நினைத்து உருகும் முக்தி தேடும் வழிகள் இருக்கிறதாம், அவற்றைச் செய்ய சரியானவர்கள் திருநங்கைகள் தான்.

திருநங்கைகளை இறைப்பணிக்கு திருப்புவதன் மூலம் சமூகம் அவர்களுக்கு மாறு செய்து முன்பு செய்து வந்த கொடுமைகளின் சாப விமோசனம் பெறும் மற்றும் பாவப்பட்ட பாலியல் தொழில் இருந்து அவர்களும் விடுதலையாவார்கள் என்பது எனது நம்பிக்கை.

14 பிப்ரவரி, 2011

முஸ்லிம்களும் மூன்றாம் பாலினமும் !

ஒரு சில மீன் வகைகள், தவிர இனங்கள் தவிர்த்து ஆண் / பெண் இருத்தன்மை ஒன்றாக அமையப்பட்ட உயிரினம் மிகக் குறைவு. ஒரு செல் உயிரிகளுக்கு பால் அமைப்புகள் கிடையாது அவை தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும். உயிரின இனப் பெருக்கத்திற்கு உயிர்களிடையே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் உயிர்களை எப்போதும் உற்பத்தி செய்து கொண்டிருக்க முடியும் என்கிற விதியில் ஏற்பட்ட பிரிவுகளே ஆண் / பெண் அமைபு. ஈர்ப்பு என்பது இன்பமாகவும் அதன் விளைவுகள் இனப் பெருக்கம், அவ்வாறு பெருகும் இனத்திற்கு பாதுகாப்பான தாயன்பு என்கிற இணைப்பு அவற்றின் பருவ வயது வரையிலான வளர்ச்சிக்கு இயற்கை ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு அமைப்பே ஒரே உயிரினத்தின் பால் வேறுபாடுகள். உடலமைப்பும், இனப்பெருக்க உறுப்புகளும் ஒரு உயிரனத்தை ஆண் பெண் என்று காட்டுகின்றன என்றாலும், இந்த இரண்டு பிரிவும் ஒன்றை ஒன்று உற்பத்தி செய்யும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. பால் உறுப்புகள் தவிர்த்து ஒரு ஆண் தன் வடிவத்தைப் போன்ற பெண்ணிற்கு தந்தையாவதும், ஒரு தாய் தன் உருவத்தை ஒத்த ஆணைப் பெற்றெடுப்பதற்கும் இயற்கை வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. இவ்வாறு உருவம் பெற்றிருக்கும் உயிரினங்கள் தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் அறிந்து கொள்ள முதல் காரணம் அவற்றின் உடலமைப்பு தான். மனித இனத்தில் மனிதன் சமூகமாக மாறவில்லை என்றால் இந்த ஆண் / பெண் பிரிவுகளில் உடலும் மனமும் சரியாகவே பொருந்தி இருக்கும் என்று கருதுகிறேன். ஒரு ஆண் தன்னை பெண்ணாக உணர்வதற்கும், ஒரு பெண் தன்னை ஆணாக உணர்வதற்கும் உடல் குறித்த காரணங்களை விட சமூகம் குறித்தக் காரணங்களே முதன்மையாகிறது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற சமூக அமைப்பில் தான், இவற்றை மீறிய மூன்றாம் பாலினமாக மனிதர்கள் தோன்றுகிறார்கள்.

ஆண் பெண் பாகுபாடின்றிய காட்டுவாசிகளிடமோ, நரிக்குறவ்ர்களிடையோ மூன்றாம் பாலினர் உற்பத்தி ஆகுவதில்லை என்றே நினைக்கிறேன், அங்கே இனப் பெருக்கம் மட்டும் அதைச் சார்ந்த ஈர்ப்பு என்பதைத் தவிர்த்து ஆண் / பெண் மனங்கள் எதுவும் கிடையாது, வேட்டையாடுதல், தொழில்கள் ஆகியவற்றை இருவரும் சேர்ந்தே செய்கிறார்கள். நாகரீக வளர்ச்சி பெற்ற சமூகத்தில் தான் பெண்ணுக்கான இலக்கணமும், ஆணுக்கான இலக்கணமும் புழக்கத்தில் இருந்து வாழ்க்கைத் தரமாக ஆகிவிட்ட படியால், உடலும் மனமும் ஒன்றிணைந்து மூன்று வயதின் பிறகு ஒரு குழந்தை தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைக்கத் துவங்குகிறது. பருவ வயதினில் ஏற்படும் உடலியல் மாற்றங்களில் அதை உறுதி செய்து கொள்கிறது. எதிர்பாராவிதமாக ஒரு சிலரின் பருவமாற்றங்களில் ஏற்படும் கோளாறுகள் வேறுமாதிரியான (சுரப்பிகளைத் தூண்ட அல்லது கட்டுப்பட்டு) விருப்பங்களை ஏற்படுத்த தன்னுடைய பாலினம் உறுதி செய்ய முடியாத சிக்கலுக்குச் செல்லவே அவர்கள் குழப்பத்தில் சென்று புதிய முடிவுகளை எடுக்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். இவர்கள் தான் மூன்றாம் பாலினர். இவ்வாறு ஒரு ஆண் தன்னை ஒரு பெண்ணாக நினைத்து மூன்றாம் பாலினர் நிலை அடைவது என்பது அவராக விரும்பி ஏற்றுக் கொண்ட நிலை இல்லை, உடல் மற்றும் மனச் சூழலலால் அமையப் பெற்றதே. பிறக்கும் போது ஒருவர் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்தாலும் அதன் முழுமை என்பது பருவ மாற்றங்களினால் பெறப்படுவதே. ஆகையால் ஒருவர் ஆணா பெண்ணா என்பதை பிறப்பு முடிவு செய்வதில்லை அதை பருவ வயதே முடிவு செய்கிறது. இவற்றை மதம் மற்றும் குரான் வசனங்களைக் காட்டி இஸ்லாமிய சமூகம் ஒப்புக் கொள்வதில்லை. காரணம் அல்லாவின் படைப்பு ஆணையும் பெண்ணையும் தான் படைக்கிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் ஒருவரை அல்லா படைக்கவே இல்லை என்கிறார்கள்.

ஒரு சில கட்டுபாடுகளை மூன்றாம் பாலினத்தினர் மீது இஸ்லாமிய நாடுகள் விதித்திருக்கிறது. அதாவது மூன்றாம் பாலினம் என்கிற சொல்லே இஸ்லாத்திற்கு எதிரானது ஆகவே மூன்றாம் பாலினத்தில் ஆணுறுப்பு உடையவர்கள் தன்னை ஆண் என்றோ பெண் என்றோ அழைத்துக் கொள்ள மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஈரான் போன்ற தீவிர இஸ்லாமிய நாடுகளில் மூன்றாம் பாலினர் தன்னை பெண்ணாக அறிவித்துக் கொள்ள ஆண் உறுப்பை நீக்கிக் கொண்டவராக இருக்க வேண்டும், இதற்கு சட்டத்திலும் அனுமதி உண்டு. ஆனால் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்களுக்கு பெண்களைப் போன்று நடந்து கொள்ள அனுமதி கிடையாது. . மலேசிய உள்ளிட்ட வேறு சில நாடுகளில் ஆண் உறுப்பை நீக்கிக் கொண்டாலும் அரசு ஆவணங்களில் அவர்களின் பாலினம் ஆண் என்றே இருக்கும். மதம் சாராத அரசுகள் ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ அறிவித்துக் கொள்ள உரிமை வழங்குகிறது. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் மேற்கண்ட கட்டுப்பாடுகள் நாட்டின் ம்த உணர்வின் ஆழங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் திருநங்கை அல்லது மூன்றாம் பாலினத்தினர் பற்றிய புரிந்துணர்வு இருந்தாலும் அவர்களை சக மனிதனாக மதிக்கும் நிலை இன்னும் வரவில்லை. அண்மையில் தமிழகத்தில் மூன்றாம் பாலினமாக ஆன ஒருவரை 'இஸ்லாத்துக்கு எதிராக நடந்து கொள்கிறார்' என்று அவரது உறவினரான முஸ்லிம் இளைஞரால் ஓட ஓடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய சமூகத்தில் மூன்றாம் பாலினர் பற்றிய ஒரு தெளிவோ, வழிகாட்டுதலோ சரியாக அமையவில்லை காரணம் இஸ்லாம் உடல் உறுப்புகளை வைத்து தான் ஆண் பெண் என்று முடிவு சொல்கிறது, அதற்கு மாற்றாக அறிவித்துக் கொள்ள குரானிலோ, ஹதீசீலோ வழிகாட்டுதல் கிடையாது, தடையே நிலவுகிறது.

மூன்றாம் பாலினர் மட்டுமின்றி மனவளர்ச்சி இன்றி பிறந்தக் குழந்தைகள் குறித்து இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு இத்தகைய படைப்பு அல்லாவின் குறைதானே என்று கேட்டால் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், பெற்றோர் கர்பம் அடைந்த போது தவறான மருந்துகளை உட்கொண்டிருப்பார்கள் அதனால் இத்தகைய குழந்தை பிறந்திருக்கலாம் மற்றபடி 'அலக்' என்ற நிலையில் கருவுறச் செய்வதுடன் அல்லாவின் வேலை முடிந்துவிட்டது என்கிறார்கள். அல்லா நன்கு அறிந்தவன் என்றால் நாளைக்கு இந்தக் குழந்தை பிறந்தால் இப்படி ஆகிவிடும் என்று அந்த கருவுறுதலையே தடுத்து இருக்கலாமே ? என்ற என்போன்றவரின் அப்பாவித் தனமான கேள்விகள் அல்லாவின் படைப்புத் திறனை என்றுமே குறைத்து மதிப்பிடாது என்றே நினைக்கிறேன். மூன்றாம் பாலினரை மூன்றாம் பாலினர் என்று அழைக்காவிட்டாலும் ஒரு பெண்ணாக ஏற்றுக் கொள்கிறார்களே என்பது மகிழ்ச்சியான ஒன்று தான். என்னைப் பொருத்த அளவில் மூன்றாம் பாலினப் பெருக்கத்தை ஆண் / பெண் சமூக இலக்கணங்களை சரி செய்தால் குறைக்க முடியும் என்றே கருதுகிறேன், ஆணாக பிறந்த ஒருவர் விரும்பி பெண் உடைய அணிந்து கொள்ள முதல் காரணம் பெண்ணிற்கான உடை இவைகள் என்பதை சமூகம் முடிவு செய்திருப்பதும், பெண் என்பவள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென்ற இலக்கணங்கள் போன்றவையாகும், உடல் ரீதியான பருவ மாற்றங்கள் ஒரு ஆணை பெண்ணாக உணரவைத்தாலும், சமூகம் பால் வேறுபாடின்றி இருக்க தனக்குத் தானே ( ஆண் பெண்ணாக மாறும் ஆசை) தூண்டல் உடல் மற்றும் மன ரீதியில் பயணப்பட ஒன்றும் இருக்காது. மற்றபடி மத ரிதியான கட்டுப்பாடுகளோ, மருந்துகளோ இந்த உணர்வுகளை குறைத்து மூன்றாம் பாலின உற்பத்தியை குறைத்துவிடாது. ஆண் பெண் மன ரீதியான பாகுபாடு இல்லாத இனங்களில், உயிரினங்களில் இத்தகைய இரட்டை தன்மை உடைய மூன்றாம் பாலினம் அரிது அல்லது இல்லை என்றே கூறிவிடலாம்.

மூன்றாம் பாலினத்தினரையும் ஓரின சேர்கையாளர்களையும் ஒன்றாகவே பார்த்து நிராகரிக்கிறது இஸ்லாம்.

பின்குறிப்பு : கட்டுரையில் ஏதும் தவறானவை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், மாற்றிக் கொள்கிறேன்.

26 ஜனவரி, 2010

நான் வித்யா - 'நான்' !

வலைப் பதிவில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் தொடங்கிய பிறகு சமூகம் குறித்த பொதுப் புத்தி சிந்தனைகள் எனக்கு வெகுவாக மாறி இருக்கின்றன என்பதைச் சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. அதற்கும் முன்பு இதே போன்ற புரிதலில் இல்லை என்பது என் ஒப்புதல் வாக்குமூலம் தான், அரசியல், மதம், சமூகம் ஆகிய மக்கள் அமைப்புகளில் தனிமனித மனம் முடிந்த அளவுக்கு சார்பு நிலையில் இயங்குவது தவறு என்கிற புரிதல் வலைப்பதிவு வாசிப்புகளால் ஏற்பட்டது, அதன் தாக்கமே எனது எழுத்துகளில் பல்வேறு வாசிப்பு துய்ப்பு தாக்கங்களினால் ஏற்பட்டு இருக்கிறது.

என்னுடைய அடையாளமான பால், தாய் மொழி, சமயம், சாதி, இவற்றில் பால் அடையாளம் நம்மைக் கேட்டு அமைவது இல்லை, தாய் மொழியும் தன்னால் அமைவது தான், ஆனால் சமயம், சாதி ஆகியவை தேவை என்றால் மாற்றிக் கொள்ள, துறக்க முடியும் என்பதால் சமயம் சாதி ஆகியவற்றில் எனக்கு பெரிதாக பற்றுதல் இல்லை. பால், தாய் மொழி ஆகியவை எனக்கு கிடைத்தது என்பதாக நான் நினைக்க முடியும் என்பதால் அதன் மேல் பற்றுதல் என்பதைத் தவிர்த்து இரண்டையும் தன்மை(சுயம்) சார்ந்த ஒரு இயற்கை அடையாளமாக கொள்கிறேன்.

திருநங்கைகள் எனப்படும் இருபால் தன்மை கொண்டோர்கள் பற்றி முன்பே அவர்கள் நடவெடிக்கைகளை அறிந்திருந்தாலும் அவர்களைப் பற்றிய புரிதல் குறைவாகவே இருந்தது. லிவிங் ஸ்மைல் வித்யா வலைப்பக்கம் துவங்கி தன்னைப் பற்றியும், திருநங்கைகள் குறித்தும் எழுதியவற்றைப் பற்றி படித்த பிறகே திருநங்கைகள் குறித்த பரவலான புரிதல் எனக்கும் பல்வேறு வாசிப்பாளர்களுக்கும் ஏற்பட்டு இருக்கும் என்றே நினைக்கிறேன்.

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்பது உயிர்மெய் குறித்த தொல்காப்பியமோ நன்னூலோ எதோ ஒன்றில் இருக்கும் இலக்கணக் குறிப்பு. சொல்லின் இறுதியின் மெய் எழுத்தும் அடுத்த சொல்லின் உயிரெழுத்து துவக்கமும் ஒன்றிணைந்துவிடும், ( தமிழ் + ஆதவன் > தமிழாதவன் என்பது போல்). இந்த இயல்பான இலக்கணக் குறிப்பும் கூட பிழையாகிப் போன பிறவிகளாக அமைந்திருப்பவர்கள் தாம் திருநங்கைகள். ஆண் உடலில் பெண் உயிர்(மனது) அமைந்துவிடுவதால் அவர்களின் உடலும் உயிரும் ஒன்று படமால் போய்விடுகிறது. தாம் ஆண் உடலில் இருக்கும் பெண் என்கிற எண்ணம் ஏற்பட்டு அவர்கள் தங்கள் நடவெடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் போது அவர்களுடைய பெற்றோர்களுக்கு ஏற்கனவே இருக்கும் திருநங்கைகள் குறித்த பொதுப் புத்திப் புரிதலால் இல்லதினரால் பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டு, வீட்டை விட்டு ஓடினால் தான் தொடந்து வாழமுடியும் என்கிற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இவர்கள் மீதான இயற்கைச் சிக்கலை புரிந்து கொள்ளாத சமூகமும் அதை அவர்களின் தனிமனித செயலாக நினைத்து அவர்களை முரண்பட்டவர்களாக சித்தரித்து புறக்கணிப்பதும், அவர்களை இழிவு படுத்துவதுமாகவும் அவர்களை ஒரு தனிக் குழுவாக சேர்ந்துவிடச் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளிவிட்டது. இல்லை என்றால் இந்தியாவிலும் திருநங்கைகள் பிற ஐரோப்பிய நாடுகளைப் போல் அனைத்து சமூகத்திலும் ஒன்றிணைந்தவர்களாகவே தொடர்ந்திருப்பர். மதரீதியில் இந்து மதத்தில் அரவாணிகள் சமூகத்தில் ஒன்றாக இருந்தவர்களாக இதிகாசங்களில் காட்டப்பட்டுள்ளது, பிற மதங்களில் அவர்களை மத ரீதியாக எந்த விதத்திலும் அங்கீகரிக்கவில்லை. அவர்களுக்கான பிற நாடுகளின் அங்கீகாரம் என்பது சமூக ரீதியானது. மதரீதியானது அல்ல. மத ரீதியான அங்கீகாரம் கொடுக்கும் இந்திய சமயங்களோ அவர்களை சமூக ரீதியாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத ரீதியான அங்கீகரங்களை விட சமூக ரீதியான அங்கீகாரங்களே அவர்களுக்கு வாழ்வியலில் பயன்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. மதத்தையும் சமூக வாழ்வியலையும் பிரித்து பார்க்கும் பக்குவம் இன்னும் இந்தியர்களுக்கு வரவில்லை என்பதையே இது காட்டுகிறது.

சகோதரி லிவிங் ஸ்மைல் வித்யாவை சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பின் போது நேரடியாக பார்த்து பேசி இருக்கிறேன். நமக்கு தெரிந்து தன்வரலாறு எனப்படும் ஆட்டோபயகரபிகளை படித்து இருக்கிறோம். நமக்கு தெரிந்தவர் தம்மைப் பற்றிய வரலாறுகளை எழுதும் போது அதை நாம் படிக்கும் துய்ப்புகள் பிறர் எழுதும் தன்வரலாறுகளைப் படிக்கும் போது ஏற்படுவதில்லை என்பது லிவிங் ஸ்மைல் வித்யாவின் நூலின் உள்ளடக்கம் தாண்டி ஏற்பட்ட உணர்வு. அதில் இடம் பெறும் ஒவ்வொரு வரியும் அவர் எதிரே அமர்ந்து நமக்கு சொல்லிக் கொண்டு வருவது போன்ற உணர்வு படிக்கும் போது ஏற்பட்டது.

வித்யா 30 வயதிற்கும் குறைந்தவர் என்றே நினைக்கிறேன். இந்த வயதிற்குள் தன்வரலாறு எழுதுபவர்கள் பெரும்பாலும் வேதனையைத்தான் எழுத முடியும் என்பதாக விளங்கிக் கொண்டேன். ஏனெனில் சாதனையாளர்கள் அல்லது அவர்களைப் பற்றி இறுதியில் தான் வரலாறு எழுதுவார்கள். வாழ்வின் தொடங்கள் வேதனையாகவே தொடங்குவதும் கூட வரலாறுகளாக, இலக்கியமாக மாறிப் போகிறது என்பது வித்யாவின் நூலில் இருந்து நமக்கு தெரியும் மற்றொரு பாடம்.

நூலைப்பற்றி, நூலில் அவர் சொல்லி இருக்கும் பல்வேறு அவமானங்கள் திருநங்கைகள் அனைவருக்கும் பொது என்றாலும், நன்கு படித்த ஒருவர் (மொழியியல் முதுநிலை) கற்றறிந்த மனநிலையில் அத்தகைய அவமானங்களை சந்திப்பது மனரீதியில் பன்மடங்காகவே இருக்கும், இத்தகைய அவமானங்கள் அம்பேத்கார் போன்ற மேதைகளுக்கு சாதி ரீதியில் ஏற்பட்டது என்பதை நினைவு கூரலாம். அவர் எல்லா அவமானங்களையும் எதற்காக தாங்கிக் கொண்டார் என்றால் தன்னை முழுப் பெண்ணாக வடிவமைத்துக் கொள்வதற்கு தாம் சென்ற வழி அத்தகையதாக இருந்ததை அவர் உணர்ந்திருந்தார் என்பதால் தாங்கிக் கொள்ள நேரிட்டதாம். திருநங்கைகள் குறித்த சமூக புரிதல்களை நன்கு விளங்கியவர் என்பதால் அவருடைய கோபங்கள் தனிமனிதர்கள் மீது எதிரொலிக்காமல் பார்த்துக் கொள்கிறார். நிர்வாணம் எனப்படும் ஆணுறுப்பு அறுப்பு சடங்கு தன்னை மறுபிறவி எடுக்க வைத்து தன்னை உணரவைத்தாக சொல்கிறார். மற்றபடி அவருக்கு உதவிய பல்வேறு தரப்பினரையில் காட்சி மாந்தர்களாக நூல் முழுவதும் வருகிறார்கள்.

எனக்கு நூலைப் படித்ததும் ஒரே ஒரு கேள்வி இன்னும் ஓடிக் கொண்டு இருக்கிறது, தன்னை நன்கு அறிந்த படித்தவர்கள் பலர் நண்பர்களாக பெற்ற அவர் அவர்களிடம் எநத உதவியும் கேட்காமல் புனே சென்று பிச்சை எடுத்து 'நிர்வாணத்திற்காக' அனைத்து அவமானங்களையும் சந்தித்து, அவர் மிகவும் அவசரப்பட்டுவிட்டாரோ என்று நினைக்கவே வைக்கிறது. ஏனெனில் நிர்வானத்துக்கு அவருக்கு பிச்சை வழி கிடைத்து தாம் அறுவை சிகிச்சை உட்பட செய்த செலவுகளாக சுமார் 20,000 ரூபாய். இதை ஈட்டுவதற்கு பொருமையோ, நண்பர்கள் உதவியோ நாடாமல் மிகவும் அவசரப்பட்டது ஏன் என்றும் புரியவில்லை. எப்போதாவது விளக்குவார் என்று நினைக்கிறேன்.

*****

நான் யார் ? எந்த கேள்வியிலேயே அட்டைப் படத்தில் துவங்கும் வித்யாவின் நூல் அவரின் மூன்றாண்டுக்கு முந்தையவரை நடப்புகள் அனைத்தையும் சுறுக்கமாக முடித்திருக்கிறார்.

'இந்த நான் யார் ?' கேள்வியைத்தான் ஆன்மிகவாதிகளும் கேட்டுவருகிறார்கள். 'நான்' உடலல்ல..........'நான்' உடலல்ல............'நான்' உயிர்....உடலை இயக்கும்....'நான்' ஆன்மா...இந்த உடல் கருவியே அன்றி இதில் பெருமை பட சிறுமை பட ஒன்றும் இல்லை....இந்த புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும் போது ஆண் / பெண் உடல் பேதங்களும், அதன் மீதான உளவியல்/உணர்வு ரீதியில் ஏற்படும் வெறுப்புகளும், ஈர்ப்புகளும், உறுப்பு அறுப்புகளும் கூட தேவையற்றதாகிவிடும் என்பது எனது தாழ்மையான கருத்து. பால் சார்ந்த பிறப்பு உறுப்புகளைத் தவிர்த்து உடல் சார்ந்த மன உணர்வுகள், வேறுபாடுகள் சமூக கட்டமைப்பின், சமூகக் கூறுகளின் தாக்கம் என்பது என் எண்னம்.

உடல் ரீதியான சமூக கட்டுமானங்களும் எண்ணங்களுமே ஒரு திருநங்கையை தனக்கு பெண் உடல் இருப்பதே சிறப்பு, இயற்கையானது என்பதாக நினைக்க வைத்து பிறப்பு உறுப்புகளை நீக்கிக் கொள்ள வேண்டும் என்று தூண்டுதலுக்கு இட்டுச் சென்று தற்கொலைக்கு ஒப்பான 'நிர்வாண' அறுவை சிகிச்சை வரை இட்டுச் சென்றுவிடுகிறது.

நாயகி பாவம் என்று பக்தி இலக்கியத்தில் ஒரு ஆண் தன்னை பெண்ணாக நினைத்துக் கொண்டு கடவுளின் மனைவி என்பதாக உருவகித்துப் பாடுவதை பெருமை பொங்க பக்தி கூட்டங்களில் மெய்சிலிர்த்து பேசுகிறோம். திருநங்கைகளை என்றும் நாயகி பாவம் கொண்டவர்களாக அங்கீகரித்துவிட்டால் இவர்கள் ஏன் கொடுமையான அறுவை சிகிச்சைகளை செய்துக் கொள்ளப் போகிறார்கள் ? திருநங்கைகள் பிறப்பு உறுப்புகளை நீக்கிக் கொள்வது தற்காலிக தீர்வு தான், திருநங்கைகள் ஒவ்வொருவருக்கும் அதைச் செய்வது நிரந்தர தீர்வு ஆகாது. நிரந்தரத் தீர்வு என்பது மன ரீதியிலான சமூக மாற்றம் அதை அவர்களும், அனைத்து சமூகங்களும் ஏற்படுத்திக் கொண்டால் அறுவை சிகிச்சைகள் தேவையற்றது ஆகிவிடும். 'நான்' என்பது உடலல்ல......மனம். அதற்கு பால் பேதம் இல்லை, உடல் கூறுகள் பொருட்டு அல்ல.

நான் இங்கு கடைசியாக எழுதியவை அபத்தமாக தெரிந்தாலும் ஆண்/பெண் 'உடல்' குறித்த குழப்பங்களுக்கு ஆன்மிக ரீதியான நல்லதொரு சமுக புரிதல் தீர்வுகள் கிடைக்கவேண்டும் என்ற நப்பாசை தான்.

25 நவம்பர், 2008

எஸ்.பாலபாரதியின் அவன்-அது=அவள்

திருநங்கைகள் பற்றி பல செய்தி கட்டுரைகள், கதைகள் படித்து இருந்தாலும் பதிவர் நண்பரின் பார்வையில் எழுதப்பட்ட அவன் - அது = அவள் எப்படி இருக்கும் ஆவல் பொங்கும் நீண்ட நாள் விருப்பாக இருந்தது, அன்மையில் தம்பி ஜெகதீசன் சென்னை சென்று திரும்பியதால் நிறைவேறியது, மற்றொரு தம்பி பால்ராஜின் ஏற்பாட்டில் ஜெகதீசன் நண்பர் எஸ்.பாலபாரதியிடம் இருந்து 20 நூல்களை சிங்கைப் பதிவர்களுக்காக பெற்று வந்தார்.

புதினமாக எழுதப்பட்ட திருநங்கைகள் பற்றிய தொகுப்பே அந்த நாவல். 3 மணி நேர தொடர் வண்டி பயணத்தின் போதே படித்து முடித்துவிட்டேன். திருநங்கைகளின் தோற்றமும் வாழ்க்கை முறைகளை பற்றியும், கோபி என்ற கோமதி(ஆகிய) என்கிற திருநங்கையை மையமாக வைத்து கதையை எழுதி இருக்கிறார். திருநங்கைகள் பற்றி, இந்தியா தழுவிய ஒரு நாவல் எழுதவேண்டுமென்றால் தமிழ் தவிர்த்து பிற மொழியும் அறிந்திருப்பதன் தேவை கதையின் ஓட்டத்தில் உணரப்படுகிறது. திருநங்கைகள் அனைவருமே ஹிந்தி கலந்து பேசுவதால், அவர்கள் பேசுவது இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே ஹிந்தி வசனங்கள் வந்திருப்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆண் குழந்தையாக வளர்க்கப்படும் ஒரு குழந்தை பருவ வயதில் எப்படி திருநங்கையாக மாறுகிறது என்பதையும், அதனால் அவர்கள் அந்த வயதில் இல்லத்தினரின் கொடுமைகளுக்கு ஆளாகுவதும், அதிலிருந்து தப்பித்து ஒரு பெண்ணாக வாழவிரும்பி வீட்டில் இருந்து வெளியேறி...அவர்கள் தங்களைப் போன்ற திருநங்கைகளை சேர்க்கிறார்கள், அதன் பிறகு ஆண் உறுப்பை அகற்றிக் கொண்டு முழுப்பெண்ணாக தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள் என்பதை கதையின் ஓட்டத்துடன் சொல்லி இருக்கிறார். திருநங்கைகளுக்கு இடையே புழங்கும் சொற்கள், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கதை ஓட்டத்துடன் அழகாக சேர்த்து இருக்கிறார்.


திருநங்கை ஆண்குறி அறுத்துக் கொள்ளும் தாயம்மா சடங்கை ஏற்கனவே சு.சமுத்திரம் எழுதிய வாடமல்லியில் படித்து இருக்கிறேன். அந்த பகுதியை எஸ்.பா எழுதியதைப் படிக்கும் போது அதற்கும் சற்றும் குறைவில்லாத திகிலாகவே காட்சி அமைப்பு விவரிக்கப்பட்டு இருந்தது. தனக்கு இருக்கும் 'ஆண் குறி' ஆணவத்துடன் (Penis Pride) நடந்து கொள்ளும் ஆண்களின் எண்ணங்களை தூக்கியெறியும்படி பெண்ணாக மாறும் ஒரு திருநங்கை அதை வினாடிக்குள் அறுத்து எரிவதைப் படித்தால் எந்த ஆணுக்கும் ஆண் குறி என்பது பெருமையான ஒன்றல்ல என்றே உணர்வார்கள்.

கூவாகத்தில் ஆரம்பிக்கும் கதை என்றாலும் கூவாக நிகழ்வுகளை பலரும் எழுதிவிட்டதால் அதை கவனத்துடன் தவிர்த்து இருக்கிறார். மற்றபடி எல்லா திருநங்கைகளுக்கும் நடக்கும் ரவுடிகள் மற்றும் போலிஸ் கொடுமைகளை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது பொய்யா மெய்யா என்பது தெரியாது, திக்கற்ற திருநங்கையாக வீட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு அவர்களைப் போல் உள்ளவர்களே ஆறுதலாகவும், உறவாகவும் இருக்கிறார்கள் என்பதை நன்றாக பதிய வைத்திருக்கிறார். கதையில் வரும் அனைத்து திருநங்கைகளும் ஒருவரை ஒருவர் பெண் பால் உறவு முறையில் அழைத்துக் கொள்வதும், பெண்ணாகவே உணர்ந்து அவர்களுக்குள் 'டி' போட்டு பேசுவதை பிசிறில்லாமல் எழுதி இருக்கிறார். ராமேஷ்வரத்தில் நடந்தவைகளைச் சொல்லும் போது அங்கு பேசும் வட்டாரவழக்குகள் வசனங்களிலும், கூவாகம் பகுதியில் கதை செல்லும் போது அங்கு பேசுபவர்கள் பன்ருட்டி வட்டார வழக்குகளில் பேசுவது இயல்பாக இருக்கிறது.பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து வேளைகளில் முதலில் உதவுபவர்களாக திருநங்கைகளைச் சொல்லி இருப்பது அவர்களை பெருமை படுத்தும் எழுத்து. அதற்காக (மும்பையில்) தொடர் வெடிகுண்டு விபத்துகளை செல்லி அதனை பதிய வைத்திருக்கிறார்.

திருநங்கையாக மாறி வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் வாழ்க்கை எத்தகையது என்பது கதையின் முடிவில் உணரப்படுகிறது.



*****

இந்த கதையில் சில சொதப்பல்களும் இருக்கிறது, பத்திரிக்கை செய்தியாளராக வரும் அன்பு என்பவர் கதையின் நாயகியான கோமதியை விரும்பும் முன் ஒரு முற்போக்காளராகச் அவரை கதைக்குள் கொண்டு வரும் போது சொல்லி இருப்பார், அன்பு தனது உதவியாளரிடம் திருநங்கை பற்றிய உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவார், அதே அன்பு கோமதியின் அழகில் மயங்கி அவளை காதலிக்கவும் தொடங்குவார், தனக்கு ஓரினசேர்க்கை பழக்கம்
இருப்பதையெல்லாம் கோமதியிடம் சொல்லிவிட்டு தான் அவளை காதலிப்பார், ஆனால் முதல் உறவுக்காக இருவரும் கூடும் போது, கோமதி நிர்வாணம் செய்யாமல் (ஆண்குறி அகற்றிக் கொள்ளாமல்) இருப்பதை அறிந்து அதையே, காரணமாகச் சொல்லி, விலகி அவளுடன் அப்போது கூடவில்லை என்பதாக சொல்லி இருவரும் தற்காலிகமாக பிரிவது பொருத்தமாக இல்லை, அந்த ஒரே காரணத்துக்காக கோமதி நிர்வாணத்துக்கு தயாராகுவது போல் சொல்லப்படுகிறது. ஓரின புணர்சியாளரான அன்பு ஏன் கோமதியை நிர்வாணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார் என்பது புரியவில்லை. ஓரின புணர்ச்சியாளார்களுக்கு ஆண்குறி தடையே அல்ல என்றே நினைக்கிறேன்.

ஆரம்பம் முதலே கோமதி வளர்ந்த குடும்ப சூழலை வைத்து அவள் கடை கேட்கவே (பிச்சை எடுக்க) தயங்குவதாகச் சொல்லிவிட்டு, கடைசியில் படிப்பறிவு இல்லாத ஒரு சாராசரி திருநங்கை, தன்னை விரும்பும் ஒரு ஆணை சேர்த்துக் கொண்டு திருப்தி அடைவது போலவே கோமதியும் செய்துவிடுகிறாள். ஆரம்பத்தில் அழகில் மயங்கி, பெண்ணாகவே ஏற்றுக் கொண்ட முற்போக்கு சிந்தனையுடைய அன்பு என்பவன், அவளை சேர்ந்த ஆறுமாதத்தில், அவளை மீண்டும் கடை கேட்க அனுப்புவதாக சொல்வது பொருத்தமாக இல்லை. அவன் திருநங்கையுடன் வெறும் உடல் இன்பத்தைத்தான் நாடுகிறான், குடிகாரனாக முடிவில் புரியவைக்கப் போவதாக இருந்தால் அவனை ஏன் திருநங்கைகள் பற்றிய அக்கரை உள்ளவனாக அறிமுக காட்சிகளில் சொல்ல வேண்டும் என்ற காரணமும் தெரியவில்லை. படிப்பு ஆர்வமும், நல்ல வேலைக்குச் செல்லவேண்டும் என்று அவ்வப்போது பேசும் கோமதி கடைசில் பிற திருநங்கைகள் போலவே ஒருவனுக்கு மனைவியாக அடி உதைகளை வாங்கிக் கொண்டு வாழ்வதாகவும், கொடுமை மிகுதியாகும் போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொள்வேன் என்று சொல்லி கதையை முடித்து இருப்பது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. படிப்பை பாதியில் விட்டுவிட்டு பின்பு அதனை லட்சியமாகக் கொண்டு முன்னேறிய பல திருநங்கைகள் இருக்கிறார்கள். அப்படி சொல்லிவிட்டால் 'வாடமல்லி' கதை சாயல் வந்துவிடும் என்று நினைத்திருப்பாரோ ?

கதையைப் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக திருநங்கைகளைப் பற்றிய நல்ல எண்ணம் வரும். ஆனால் ஒரு திருநங்கை அந்த கதையைப் படித்தால் நம் தலையெழுத்து இப்படித்தானோ என்று நினைக்க வைத்துவிடும், அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க லிவிங் ஸ்மைல், ரோஸ் மற்றும் நர்தகி நடராஜ் போன்ற பாத்திரம் ஒன்றை கதையின் இடையில் எங்காவது கொண்டுவந்திருக்கலாம். இவைகளே எனக்கு கதையின் குறையாக தெரிகிறது.


இவைகளைத் தவிர்த்து கதையின் ஓட்டத்திலும், காட்சிகளை கண் முன் விரிப்பதற்கான விவரிப்புகளும் படிக்கும் போது ஒரு கதையாசிரியரின் முதல் நாவல் போன்று சிறிதும் தெரியவில்லை. அந்தவகையில் எஸ்.பா சிறந்த எழுத்தாளராக வியப்பூட்டுகிறார். இந்த கட்டுரை இந்த நூலின் மீதான என்னுடைய தனிப்பட்ட மதிப்பீடு மட்டுமே, இதனை பொதுக்கருத்தாக கொள்ளவேண்டாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்