மற்ற மேடைப் பேச்சுகளில் மக்களின் வாழ்வியல் நெறிபற்றி யாதொரு கவலையுமின்றி எடுத்துக் கொண்ட பொருளை சிறப்பாக பேசுவதாக அமையும், ஆனால் சொற்பொழிவுகள் மக்களின் உணர்வு, வாழ்வியல் நெறிகள் இதுபற்றி கருத்தில் கொண்டு அதற்கு மெருகூட்டும் வண்ணம், எடுத்துகாட்டுகளுடன் அமைத்துக் கொண்டும், நகைச்சுவயுடனும் அப்படி பேசுவது செயற்கையின்றி இயற்கையாகவும் அமைய வேண்டும், அப்படிப் பட்ட இலக்கிய சொற்பொழிவுகள் நிறைய பார்த்திருக்கிறேன். சாலமன் பாப்பையா, தென்கச்சி ஸ்வாமிநாதன் மற்றும் சுகிசிவம் ஆகியோர் தற்காலத்தில் சொற்பொழிவாற்றுவதில் சிறந்தவர்கள். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இலங்கையில் இருக்கும் ஒருவர் இதுபோன்று பேசுவார் என்பதை கம்பவாருதி இ.ஜெயராஜ் அவர்களின் பேச்சை கேட்கும் வரை சிந்தித்ததே இல்லை. ஏனெனில் இலங்கையின் கடந்த 20 ஆண்டுகால அரசியல் நிலையில் இலங்கையைப் பற்றி நினைக்கும் போது அங்கு தமிழ் இலக்கியம் பற்றியும், அதைப் பற்றிப் பேசும் சொற்பொழிவார்கள் இருப்பார்கள் என்று நினைப்பு சிந்தையில் கூட வந்திருக்கவில்லை.
நண்பரும் பதிவருமான முகவை மைந்தன் (இராம்) சிலோன் சாலை, சென்பக விநாயகர் கோவிலில் கம்பராமயணம் ஐந்து நாள் சொற்பொழிவு நடக்கிறது வருகிறீர்களா ? என்று கேட்டார். கம்பர்மீது இருக்கும் ஆர்வம் எனக்கு இராமன் மீது இல்லையாகையால் நான் உடனடியாக வருகிறேன் என்று சொல்லவில்லை. சென்ற ஞாயிறு பதிவர் சந்திப்பு முடிந்ததும் எல்லோரும் சென்ற பிறகு உடனடியாக வீட்டுக்கு கிளம்பும் எண்ணம் ஏற்படவில்லை, அதனால் கம்பராமயண சொற்பொழிவுக்கு நானும் வருகிறேன் என்று கூறி ஜெகதீசன் மற்றும் விஜய் ஆனந்துடன் இணைந்து இராமுடன் சென்பக விநாயகர் கோவிலுக்குச் சென்றேன். சென்றதும் தான் தெரியும் அந்த கோவில் இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படுகிறது என்கிற தகவல். 'இலங்கை தமிழ் சங்கம்' என்ற அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். நாமெல்லாம் ஈழம் ஈழம் என்று எழுதிவர இவர்கள் ஏன் இலங்கை தமிழர்கள் என்கிறார்கள், 'தமிழ் ஈழம்' என்று சொல்வது உறுதிப்படுத்தப்படாத ஒன்று என்றாலும் ஈழம் என்ற சொல் இலங்கையை குறிக்கும் தமிழ் சொல்தான்,
'ஈழத்தமிழர் சங்கம்' என்று அழகாக எழுதி இருக்கலாமே ஏன் 'இலங்கை தமிழர்கள் சங்கம்' என்று எழுதி இருக்கிறார்கள் என்கிற ஆதங்கம் வேறு இருந்தது. கோவிலுக்குச் சென்றபிறகு 'தற்போதைய போர் சூழலில் இந்த மக்களுக்கு கம்ப இராமயணம் கேட்பதற்கெல்லாம் மனது வருகிறதா, இதைக் காது கொடுத்து கேட்கும் இந்த நேரம் வன்னியில் எத்தனை உயிர் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை, இந்த சொற்பொழிவுக்கு செல்ல மனம் ஒப்பவில்லை இராம்' என்று கூறித் தயங்கினேன். பிறகு சென்றேன். சொற்பொழிவு தமிழ்சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் முன்மொழிய தொடங்கிவிட்டது.
கம்பவாருதி இ.ஜெயராஜ் - இப்படி ஒரு சொற்பொழிவாளரா என்று விழிகளும் மனமும் விரிய விரிய வியக்க வைத்தார். தமிழக சொற்பொழிவாளருக்கும் இவருக்கும் இருக்கும் முதன்மையான வேறுபாடு, இவர் உரையாற்றும் போது கொஞ்சி விளையாடும் ஈழத்தமிழ். அந்த ஈழ மண்ணுக்கே உரிய மண்வாசனை பேச்சு. கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியில் கேட்ட ஈழத்தமிழ் சுவையை கம்பவாருதி அவர்களின் பேச்சில் கேட்டது மயக்கியது என்று சொன்னால் அதில் மிகை ஒன்றும் இல்லை.
இதுபோன்ற சொற்பொழிவாளர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது நாம் வாழும் காலமும், தமிழ்ச் சூழலும் இன்னும் முழுமையாக கெட்டுப் போக இல்லை என்கிற மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொடுக்கிறது. நீங்கள் வாழும் நாடு, ஊர் எதுவாக இருந்தாலும் எங்காவது கமபவாருதி இ ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவு என்று எழுதி இருந்தால் உடனேயே தகவல்களை கேட்டு அவரது சொற்பொழிவை கேட்டுவாருங்கள். நான் பெற்ற இலக்கிய இன்பம் பெருவீர்கள்.
மேற்கண்ட பதிவை முதல் 27 பின்னூட்டங்களுடன் நகல் அச்சை கம்பவாருதி ஐயாவிடம் கொடுத்து உரையாடிய போது எடுத்தப் படம்.
ஜெகதீசன், விஜய் ஆனந்த் மற்றும் முகவை இராம் கம்பவாருதி ஐயாவிடம் உரையாடிய போது எடுத்தப் படம்.